தேங்கிய நீரோடையின் கரையில் ஒரு பாறை யுக யுகமாய்க் காத்திருக்கின்றது, ராத்திரியில் மட்டும் வரும் ஒரு பயணிக்காக.
தனிமையில் இருளில் நிழல் கூட அறியாது வருகின்ற அந்த ஒரு பயணிக்காக மட்டும், இறுகிய பாறையின் உள்ளிடுக்குகளுக்கு இடையிலே ஊறிக் கொண்டிருக்கும் வெந்நீர்த் துளிகளுக்காக, மேற்கே உலர்பாலைப் பெருநிலத்திலிருந்து கசங்கிய குடையை விரித்து, புழுதியில் அலைந்த சிக்கெடுத்த தாடியைச் சிதற விட்டுக் கொண்டு வருகின்ற அந்த ஒரு பயணிக்காக.
சூரியன் தினம் சிந்தும் துளி விந்துவைத் தேக்கிக் கொண்டு அழுகின்ற நிலவைத் தலையில் தாங்கிக் கொண்டு கால்களைத் தேய்த்துத் தேய்த்து இழுத்துக் கொண்டு வருகின்ற, உருளும் கண்களில் கரை கட்டியிருக்கும் நீர்த்தேக்கத்தில் பிம்பங்களைப் பதிக்கும் மணல் பாதையின் முடிவில் அமர்ந்து ஓய்வெடுக்கின்ற வயதான அந்த பயணிக்காக.
முட்புதர்களுக்குள் பதுங்கிய எலிகளுக்கும் ஏதேனும் கொண்டு வருகின்ற பயணியின் ராத்திரிக் கதைகளில் ஏதேனும் மிஞ்சியிருக்குமா முந்தைய ஊரின் நிழல்கள்?
(PIC: http://farm3.static.flickr.com/2017/2116909026_f90dba8d16.jpg)