தமிழ் மொழியின் மிகச் சில பேரெழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன், இன்று மறைந்து விட்டார்.
பதினொன்றாம் வகுப்பில் அரையாண்டில் நடந்த ஒரு பேச்சுப்போட்டியில் வென்றதற்காக புத்தகப் பரிசு கொடுத்தார்கள். அதை நானே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதால் ஒரு சனிக்கிழமையில் ஈரோடு வேலா புத்தக நிலையத்திற்குச் சென்றோம். அந்நாட்களில் நூல்கள் என்றால் ஈரோட்டில் வேலா மட்டும் தான். அவ்வளவு பிரபலம்.
அதிகம் விற்கின்ற பேனா, பென்சில், நோட்டுப் புத்தகம், சார்ட் பேப்பர், பாட புத்தகங்கள் என்று அடுக்கப்பட்டிருந்த தரைத்தளத்தின் மேலேறி முதல் தளத்திற்கு வந்தால் பொது நூல்கள். அலமாரிகளிலும் சுழல் அடுக்குகளிலும் நிரப்பப்பட்டிருந்தன. அங்கே இங்கே சுற்றிச் சுற்றி அலைந்து எதை எடுக்க எதை விடுக்க என்று ஆனந்தத்தில் திணறி, இறுதியாகத் தேர்ந்தெடுத்தது, ஒரு சிறுகதைத் தொகுப்பு.
70களில் வெளிவந்த சிறுகதைகளில் தமக்கு நன்றென பட்ட சிறுகதைகளைத் தொகுத்து ‘நவீனத் தமிழ் சிறுகதைகள்’என்று வெளியிட்டிருந்தார், அசோகமித்திரன். இன்றும் அப்புத்தகம் வீட்டில் இருக்கின்றது. நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு என்று நினைக்கிறேன். சாம்பல் நிற அட்டையில், ஒயிலாய் ஒரு பூச்செடி நின்றிருக்கும். அதைத் தேர்வு செய்து, கூட வந்திருந்த ஆசிரியரிடம் கொடுத்து விட்டேன்.
அரை நாள் பள்ளி முடிந்து, நடந்த கலை விழா நிகழ்வில் அப்புத்தகம் பரிசாக எனக்குக் கொடுக்கப்பட்டது. பள்ளியிலிருந்து வீட்டுக்குப் பதினாறு கி.மீ. பேருந்தில் அமர்ந்து படிக்கத் தொடங்கினேன்.
உண்மையில் சொல்லப் போனால், வயதுக்கு வருதலைப் போன்ற நிகழ்வு அது. அந்நாள் வரை துப்பறியும் கொலைக் கதைகளில் மட்டுமே ஊறியிருந்த ( நன்றிகள் : ஜி.அசோகன், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர்...) மனம் புது பரவசத்தைக் கண்டு கொண்டது.
’மருமகள் வாக்கு’ என்ற கிருஷ்ணன் நம்பி கதை தான் முதல் கதை. அங்கிருந்து துவங்கி, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்’, ‘எஸ்தர் - வண்ணதாசன்’, ‘தனுமை - வண்ணநிலவன்’, ‘நகரம் - சுஜாதா’, ‘நாயனம் - ஆ.மாதவன்’, ’தவம் - அய்க்கண்’, இந்திரா பார்த்தசாரதியின் ஒரு டெல்லிக் கதை, இறுதியாக அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’. மேலும் பல கதைகள். நினைவிலிருந்து மீட்டு எழுதுவதால், சில கதைகள் விடுபட்டிருக்கும். ஒவ்வொரு கதையும் மன உலகின் வாசல்களை ஒவ்வொன்றாகத் திறந்து விட்டன.
இப்படியெல்லாம் கதைகள் இருக்கின்றன, தமிழில் எழுதுகிறார்கள் என்று தெரிய வந்த ஆச்சரிய அனுபவம் அது. வீட்டிற்கு வருவதற்குள்ளும் வந்தும் மொத்தக் கதைகளையும் படித்து முடித்து விட்டுத் தான் மறு வேலை பார்த்தேன். இவ்வகையில் தலைப்பே போல், நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பரந்த அறிமுகத்தைக் கொடுத்த வகையில் அசோகமித்திரன், எனக்கு ஓர் காணா ஆசிரியர்.
‘18-வது அட்சக் கோடு’ என்ற நாவலை எதோ ஓராண்டு ஈரோடு நூல் அழகத்தில் வாங்கினேன். நீரொழுக்கு போன்ற கதை. அதிர்ச்சி சம்பவங்களோ, தடாலடி திருப்பங்களோ, உணர்ச்சிப் பிழம்பாறுகளோ எதுவுமே இல்லை. கதை, அது பாட்டுக்குப் போகின்றது. சந்திரசேகரனின் கதை. கடைசி நிகழ்வு வரை மெதுவாக, மிக மெதுவாக டெம்போ ஏறிக் கொண்டு சென்று, சந்திரசேகரன் தன்னைச் சூழ்ந்தெரியும் அரசியல் அனலை அறிந்து கொள்ளும் முடிவில், மனம் கனம் கொள்கின்றது. ஜெயமோகன் தன் தளத்தில் இந்நாவல் பற்றிய ஆர்.வி.யின் கேள்விக்கு அளித்த விளக்கமும், பதிலும் அட்சக்கோட்டை புதுப் பார்வையில் காண வைத்தது.
ஒற்றன் நாவலையும் ஒருமுறை சென்னை நூல் அழகத்தில் தான் வாங்கியிருந்தேன். அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்கள் மாநாடு. தனித்தனிக் கதைகள் போல் தோன்றும் இக்குறுநாவல் அவ்வாறல்ல் என்றே தெரிந்தது.
ஜெயமோகனை அவரது இல்லத்தில் சந்திக்கச் சென்ற போதும், அவர் நினைவு கூர்ந்து சொன்ன கதையும் அசோகமித்திரனின் கதை தான். திருப்பம் என்று தலைப்பு என்று நினைக்கிறேன். கியர் மாற்றக் கற்றுக் கொள்ள முடியாமல் திணறும் க்ளீனர் பையன், சட்டென ஒரு கணத்தில் கிளட்ச் போடும் லாவகத்தைக் கற்றுக் கொள்கிறான். ஓர் அறிதல். இனி அவன் பழைய ஆள் அல்ல. ஒரு புது அறிதல் அவனுக்கு கிடைத்து விடுகின்றது.
இப்படி, ஓர் கண நேர அறிதலை அளித்த ஆசிரியர் அசோகமித்திரன் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.
தமிழுக்குத் தொண்டு செய்வோன் மறைவதில்லை;
வாழிய நீர் என்றும், எம் மொழியில், எம் சொல்லில், எம் நினைவில்!