இரண்டு நாட்களுக்கு முன்பு எனது அக்கா ஒருவருக்குத் திருமணம். விழாவில் பங்கு கொள்வதற்காக ஊருக்குச் சென்றிருந்தேன். அதைப் பற்றிய சிறு பதிவு இது.
'நண்பரின் பிரிவை விட, நட்பின் பிரிவு வலிமிக்கது'. இம்மொழியை நாம் கேள்விப்பட்டு இருப்போம். அது போல் உறவுகளின் பிரிவும் என்பதைக் கண்டேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில், நெருக்கமான மரணங்களை நெருங்கிப் பார்த்து விட்டதால், பிரிதல்கள் பழகிப் போய் விட்டிருந்தன என நினைத்திருந்தேன்.
ஈரம் குழைத்துச் செய்த பானை, நெருப்பில் போட்டுக் காய்ச்சியதும் உருவாகும் பானை மீண்டும் ஈரம் பட்டால் களிமண்ணாய் குழைவதில்லை என்று நினைத்திருந்தேன்.
மனம் காய்ந்து போகும் பானை இல்லை, பாறை மறைவில் பதுங்கியிருக்கும் விதை என்று புரிந்தது. கால, காலமாய் ஒளிந்திருந்தாலும், விழுந்த முதல் துளி மழைக்கே மொட்டு விடும் என்று புரிந்தது.
இனிமேல் அவர் 'அக்கா' மட்டும் இல்லை. மரியாதைக்குரிய ஒரு மனைவி. இல்லத்தை நிர்வகிக்கப் போகும் நிர்வாகி. ஒரு புதிய தலைமுறைக்கு மூலம். இனிமேல் 'ஏ.. புள்ள..இங்க வா.. போ..' என்றெல்லாம் மிரட்ட முடியாது, என்றெல்லாம் நினைக்கையில் கொஞ்சம் வருத்தமும் , கொஞ்சம் சந்தோஷமும் நிறைகிறது உள்ளே.
புது மனிதர்கள்! புது வாழ்முறை! புதுக் குடும்பம்!
புலம் பெயர்தலின் வலி நிறைந்த கண்கள் கண்ணீர் வழி, வழிந்து விடக் கூடாதென்றே, பெண் தலைகுனிந்து நிற்கிறாள் என்று புரிகிறது.இத்தனை வருட வாழ்வில் பல திருமணங்களைக் கண்டு விட்டது. ஆனால் இந்த் நெருக்கமான மணம் கொஞ்சம் பார்வையை மாற்றித்தான் போட்டது.
இரவில் இரயில் ஏறிப் பணிக்குத் திரும்பி விட்ட எனக்கே, அந்த புதுமுகங்களைக் கண்டு இயற்கையான பயம் முளைத்தது என்றால், இனி வாழ்வு முழுதும் அங்கேயே இருக்க வேண்டிய பெண் மனதில் தோன்றும் பயங்கள்.. என்னால் எழுத முடியாதது. பெண்களால் மட்டுமே எழுதக் கூடியது. மகளிருக்கு ஜே.
மற்றொரு விஷயம் கவனித்தது:
"குழந்தைகள் கண்முன்னால் எப்படி வளர்ந்து விடுகிறார்கள்" என்று காம்ப்ளானோ, பூஸ்டோ விளம்பரம் வரும், நினைவிருக்கிறதா? அப்படி சில குழந்தைகளைக் கண்டேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சிறு குழந்தையாய்ப் பார்த்த பையன் இன்று மேலுதட்டில் அரும்பு மீசையோடு, 'அண்ணா, நான் எட்டாவது படிக்கிறேன்' என்று நிற்கிறான். தோளில் தூக்கிக் கொண்டு திரிந்த குழந்தை, கல்லூரியில் அடியெடுத்து வைத்து விட்டது.
கொஞ்சம் பயமாய்த் தான் இருக்கிறது. ' நமக்கும் வயதாகிக் கொண்டு போகிறதோ...' என்ற நினைவு வருகிறது. ஹூம்....
அந்த முகங்களில் கண்ட கள்ளங்கபடமற்ற குழந்தைத்தனம், புன்னகை, பிரகாசம்.. இதெல்லம் எங்கே, எப்போது நாம் தொலைத்தோம் என்று ஆயாசம் வருகிறது. 'பிள்ளையாய் இருந்து விட்டால், இல்லை ஒரு தொல்லையடா' என்று பாடத் தோன்றியது.