Saturday, May 12, 2007
இவனை இவளால்..!
கொலுசொலிகளின் ஒலி கேட்டது. நீ சிரித்திருக்க வேண்டும்.
அந்தச் சிவப்புத் தாவணியும், நீயணியும் போதெல்லாம் வெட்கப் பெருமிதமடையும் போலும்! இன்னும் சிவக்கின்றதே! உன் பூபோட்ட எல்லை வகுத்த ஆடை தரையில் உரசிச் சென்ற பாதைகளில் எல்லாம் சிறுசிறுதாய் பூவாசம் வாசம் செய்கிறது.
நடக்கையில் ஜதியோடு அசைந்து செல்லும், கருங்கூந்தல் வரப்போகும் இருட்டின் திரட்சியாகத் தோன்றியது.
ஒளியைச் சுரக்கும் விளக்குகள் அடர்ந்த மாடங்கள் கொண்ட வீடுகள் நிரம்பிய வீதிகள். மஞ்சள் பிள்ளையைச் சுமக்கும் மாக்கோலம் போட்ட வாசல்களில் தேங்கியிருக்கின்றது, முன்மாலையில் பெய்த மழை ஈரம். சிலுசிலுவென வீசுகின்ற குளிர்த்தென்றல் அசைக்கின்ற மரங்கள் சிலிர்க்கின்ற வேளையில், ஈரமான காற்றுக்குள் புகுகின்றன, முன்னம் அடித்த மழையின் மிச்சத் துளிகள்.
கருப்பா, நீலமா, கரு நீலமா என்று ஐயந்திரிபற அர்த்தம் கொள்ளவியலா உன் கண்கள் போல், முகில் நிறைந்த வானம் நிறம் கொள்கிறது. எட்டிப் பார்க்கின்ற குட்டி நிலாவின் மென் பிம்பங்கள் விழுந்த ஈரத் தெருவின் நடுவில் இருக்கின்றது, அழகரும், அம்மையும் வீற்றிருக்கின்ற திருக்கோயில்.
வெண்ணெயும், திருச்சாந்தும்,செந்தூரமும், துளசிமாலையும், குங்குமமும் நிரம்பிய குழலழகர் மேனி முழுதும் தழுவிய தேவியின் உடையெங்கும் வர்ணக் கோலங்கள். நெற்றிச்சுட்டியும், கொண்டையணிகளும், பொன் தோடுகளும், முத்துமாலைகளும், தங்க வளையல்களும், வைரமூக்குத்தியும், லோலாக்கும், ஒட்டியாணமும், புஜநகையும், வெள்ளிக் கொலுசுகளும், ஒட்டிய மோதிரமும், மரகதமெட்டியும் அணிந்த அன்னையின் இடையை வளைக்கின்ற அழகரின் விரல்களில் எல்லாம் ஒட்டியிருக்கின்றது காதல்..!
நெய்ப்பொங்கலும், காரப் புளியோதரையும், அக்காரவடிசிலும், கட்டித்தயிரன்னமும், சித்ரன்னமும் நிறைந்த பிரசாதத் தட்டுகளில் எல்லாம் நிரம்பியுள்ளது அவனது பேரன்பு.
கற்பாறை விளக்குகளின் நுனியில் கரும் எண்ணெய்த் துளிகள் படிந்த திரிகளின் தலையெங்கும் திகுதிகுவென ஜொலிக்கும் தீபங்களின் ஒளியில் அன்னையின் முகம் பார்க்கிறான் ஆசையுடன் அழகன்! அப்பனின் கண்கள் பார்க்கிறாள் அன்புடன் அம்மை!
முட்டி, முட்டிப் பாலருந்தும் கன்றினைக் காணும் தாய்ப்பசுவின் மடி முழுதும் நிரம்புகின்றது தாயன்பு! துளசித் தோட்டத்தின் இலைகளில் எல்லம் தேன் தேடும் பூச்சிகளைத் தேடித் தேடி விளையாடுகின்றது தென்றற்காற்று!
கம்பிவலையால் மூடப்பட்ட கேணியின் மேல் குதித்த ஈரச் சருகொன்று வழுக்கிய இடைவெளியில், சுழன்று, சுழன்று ஓடிய இருள் பாதையெங்கும் மழை படிந்த ஈரப் பிசுபிசுப்பில் நிறைந்த பச்சை பாசிகளாலான, வழுக்குப் பாறைகள்.
இடறி விடக் கூடாதென்று நீ இலேசாகத் தூக்கிப் பிடித்த, ஆடையால் தெரிந்த சிவந்த பாத நுனிகளால், பச்சைப் பாசிகள் சூழ்ந்த கோயில் படிக்கட்டுகளில் நீ ஏறுகையில், பச்சைக் குளத்தில் பூத்த செந்தாமரை என் நினைவுக்கு வந்தது.
கோபுரத்தின் கூம்புகள், ஒவ்வொரு வாசல்கள், கருந்தூண்கள், ஈரத் திட்டுகள், சன்னதிகள், கோலநடுக்கள், கூரைகளிலிருந்து தொங்கிய தூங்காமணி விளக்குகள்...எங்கும் நிறைந்திருக்கின்றது மினுமினுத்துக் கொண்டிருக்கும் ஒளிச் சிதறல்கள், ஈரமான வெளிக் காற்றை மென் சூட்டால் ஓட்டிவிடுகின்றன.
ஒவ்வொரு சன்னிதியாய்ச் சென்று நீ முணுமுணுக்கையில், உன் முன் நின்று முகம் விழுங்கும் என்னை, உன் பின் நின்று ஒளிந்து, வெருண்ட விழிகளால், எட்டிப் பார்க்கின்ற சிறுமியின் வேண்டுதல் என்னவாயிருக்கும்?
நீ தொட்டு வைக்கின்ற பூக்களை, மன்னிப்பு கேட்டுக் கொண்டு நான் எடுத்துக் கொள்வதை, கள்ளம் கொண்ட கண்களால் நீ இரசிப்பதை, உணரா சிறுமி, குறை சொல்லிக் கொண்டே வருகிறாள் உன்னிடம்.
கொட்டி நிரப்பிய உதிரி மல்லிகைகளாய் மீன்கள் நீச்சலிடுகின்ற இருள் வானம் வந்து விட்டது.
புஷ்கரணியில் தெரியும், நம் முகங்களைக் கண்டு புன்னகைக்கின்ற நாம், அளவளாவும் நீரின் அலைகள் நம் கரங்களிலிருந்து விலகி, ஒன்றோடொன்று மோதி, உடைந்து, மீண்டும் நம் திசைக்கே திரும்புகின்றன, நம் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டு.
மேலும் இரவு உருக் கொள்வதற்குமுன், நாம் திரும்பிச் செல்கிறோம்.
மற்றுமொரு நாளும், மாலையும் கழிந்தது, நாம் பேசாமல்.
'இவனை என்னவென்று அழைப்பாள்? பாதங்களை நனைத்து வழிந்து சென்று விடுகின்ற நீர்த்துளிகள் என்றா? பயணம் தோறும் தொட்டுப் போகும் மென்காற்று என்றா? வழியை அடைத்து நிற்கின்ற கரும் இருள் என்றா? வாழ்வை நிறைக்க வருகின்ற வசந்தம் என்றா?' கேட்கிறார் அழகர்.
'உள்ளம் பறித்துப் போகும் கள்ளன் என்றும், மெள்ள அணைத்துப் போகும் வாசம் என்றும், அள்ளிக் கொண்டு போகின்ற அன்பு என்றும், உயிரைக் கரைத்துப் போகும் காலம் என்றும் சொல்லலாம்' பதில்கிறாள் அன்னை.
உன் பாத ரசத் துளிகள்.
ஆழ் உறக்கத்தை விழிகளால் உறிஞ்சி விட்டு, கனவுகளை மட்டும் கண்களுக்குள் விட்டு வைத்தாய். ஒரு பேரரசி இடும் கட்டளைகளுக்கு, தாள் பணிந்து முத்தமிடும் அடிமை போல், காத்திருகின்ற நேரத்தில், கடந்து செல்கையில் தீண்டிச் செல்லும் ஆடை நுனிக்காகவே என் பாதச்சுவடுகள், உன் பாதைகளில் பதித்திருக்கிறேன். உன் கருங்கூந்தல் விரவின முன்னிரவுப் பொழுதில், வெள்ளைப் பந்தாய் நிலவு உருண்டோடும் வழியில், அமர்ந்திருக்கிறேன், ஒரு தேவதை போல் வருவாய் என!
கைகளில் சுமந்த பாதரசத் துளிகள் போல், உன்னைக் கைகளில் சுமக்கத் தடுமாறுகிறேன். என் விரலிடுக்குகள் வழி வழிந்து போகின்ற துளிகளாய், என் விழித்துளிகள் வழி வழிகின்ற உன் உருவத்தைச் சேகரித்து வைக்கிறேன்.
உன் உதறிப் போன வார்த்தைகளை நிரப்பி வைத்த என் இரைப்பை, வற்றிப் போய் குறைப்பையானது.
ஐந்து எருதுகளிடம் சிக்கிக் கொண்ட சிங்கமாய் உன் ஐம்புலன்களில் சிகிக் கொள்கிறேன்.
வனதேவதையாக ஒவ்வொரு முறையும் வருவாய் எனில், என் கோடரிகளை குளத்தில் எறிந்து விட்டு, கரையிலேயே அமர்ந்திருக்கும் மரவெட்டியாகிறேன்.
மரங்கொத்திப் பறவையாய் இன்றி, என் மனங்கொத்திக் குயிலாய் இருப்பதால், என் இதயத்தில் நான்கு அறைத்துளைகள்.
வளையல்களிலும், கொலுசுகளிலும் நிரப்பி வைத்த உன் வார்த்தைகளுடன் தான், உன் மெளன விரத நாட்களில், நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.
Thursday, May 10, 2007
இரு பாடல்கள்.
Wednesday, May 09, 2007
சொல்!
சொல்லைச்
சொல்லச்
சொல்!
சொல்லச்
சொல்லச்
சொல்லப் பிடிக்கிறது
உன்
சொல்!
உன்
சொல்லைச்,
சொல்கையில்
சொல்வேனோ
மறு சொல்?
சொல்கின்ற
ஒரு சொல்
சொல்லாத
ஒரு சொல்லைச்
சொல்லாமலேயே,
சொல்கிறது!
சொல்லாத
ஒரு சொல்,
சொல்கின்ற
ஒரு சொல்லைச்
சொல்வதால்,
சொல்லப் படுகின்ற
விந்தையைச்
சொல்!
சொல்கின்ற
ஒரு சொல்
சொல்லிய
ஒரு சொல்லைச்
சொல்லாததாக்கச்
சொல்கிறதா,
சொல்!
என்ன
சொல்கிறேன்,
சொன்னால்,
சொல்வேன்,
என் பெயர்ச்சொல்!
Tuesday, May 08, 2007
பூ - காதல் - பேரருவி. (A)
இரவின் இடுக்குகளிலிருந்து ஆர்ப்பரிக்கின்ற சில்வண்டுகளின் சிரிசிரிப்பைப் போல் தெறிக்கும் சாரற்துளிகள்.
நுரை சுழித்து ஓடும் வெண் ஆற்றின் போக்கிற்கே போக்குக் காட்டி விட்டுப் பாய்கின்ற நீர்ப் பாம்பின் வளைவுகளைப் போல், நெளிந்து ஓடுகின்ற மலைச் சாலைகளின் வழியே பயணித்து, நாம் வந்திருக்கும் பேரருவி, தனிமையின் அடுக்குகளில் நம் மனதில் புகுந்த கள்ளம் போல் பொழிகின்றது.
இளமாலை வெயிலில் பூப்படைந்து, பொன்னிறத்தோடு களித்து, பின் களைத்து, மென் இதழ்களை அவிழ்த்து உதிர்கின்ற பூக்களாய், தம்மோடு தாமாய்ப் பின்னிப் பிணைந்து இருக்கும் நூலாடைகள் நழுவி, நம்மைப் பிரிகின்றன.
குளிர்க் காற்று குளிப்பாட்டி, நிலா நனைந்த ஓர் முன்னிரவின் பொழுதில், அலையாடிய குளத்தில் இறங்கத் தயங்கிய நாம், வானம் விலகி, ஊற்றுகின்ற பால் அருவியில், இரு குழந்தைகளாய்க் குதிக்கிறோம்.
குழலின் நவதுவாரங்களில் புகுந்து இராகம் எழுப்பும் பூங்காற்றைப் போல், நம் மேனியெங்கும் மோதிப் பரவசமூட்டும் நுரை நீர், வெற்றுத்தாளில் பல வண்ணக் கலவைகளால் ஓவியம் வரைவது போல், நம்முள் வெவ்வேறு உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது.
கருமேகங்கள் நடக்கையில் மறைக்கின்ற வெண்மதியைப் போல், உன் நிலவுகளை அவ்வப்போது காண்பித்தும், கண்ணுக்கு மறைத்தும் விளையாடுகின்றது, வெண் நீர்.
கருங்காட்டில் பெய்கின்ற கருக்கல் மழையின் துளிகள் அடிவாரம் வந்து சேர்வது போல், உன் கூந்தலை நனைக்கும் நீர்த்துளிகள் நிறைந்த ஈரப்பிரதேசத்தின் வழியெங்கும் என் விரல்கள் தடம் பதித்துச் செல்கின்றன.
கற்பக் காலமாய் நீர் விழுந்து நிரம்பிய இப்பள்ளம், விழுங்கியிருக்கும் வழுவழுப்பான, கற்களின் மேல் நிற்க முடியாமல், தடுமாறி ஒருவர் மேல் ஒருவர் விழும் சமயங்களில் எல்லாம், ஏதோவொன்று எழுகின்றது நமக்குள்..!
பேய் இரைச்சலாய் வெளியே இரையும் பேரருவியையும் மீறி நமக்குள் இரைகின்ற ஒலி நம் விரல்களைப் பின்னச் செய்கின்றது.
உயிர்ப் பரிமாற்றம் செய்யும் இறுதி நொடியை நோக்கி நடக்கச் செய்கின்ற பயணத்தின் முதற்படியாக, முத்தத்தில் நாம் துவக்குகின்ற காலம், துளித் துளியாய் நகர்கின்றதெனினும், சில்லென்று உறையச் செய்யும், குளிர்ப் பேரருவியின் அணைப்பில், யுகம் யுகமாய் இனிக்கின்றது, இந்த நிலை...!
மெளன அருவி...!
ஏதோவொன்று அழுத்திக் கொண்டிருக்கும் கனமான, மனதில், வரிகள் வாசகங்களாய் வடிவாகிக் கொள்கின்றன. நீல எழுத்தாணி வழியே வரும் எழுத்துக்கள் சொல்ல முடியாத என் துயரையெல்லாம் சுமந்து கிடக்கின்றன. இலேசாக வியர்வை பூக்கின்ற என் நெற்றியின் மேலெல்லாம் உன் முகவரிக் கோடுகள்.
கண்களைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை என்பதால், என் கண்களை மூடும் போதெல்லாம், உன் கண்கள் திறக்கக் காண்கிறேன்.
Monday, May 07, 2007
வீரர்.
CHE GUEVARA
- David Sandilson
Sunday, May 06, 2007
கேள்விகளால்...!
படம் :
படைப்பு :
மேக நுனிகளை
நனைத்துப் பெய்யும்
வெயிலின்
சூடு பரவுகின்ற நீரின் மேல்
கிடந்திருக்கும்
நின் மென்னுடலின்
விரல் தீண்டும் வெண் புறாவைப்
போல்
என் மனம் உனை நாடி வந்தது
என்று நான் கூறுகையில்,
மறுத்து,
நுரைத்து நுரைத்து
பாய்ந்து வந்து,
அரித்து, அரித்துக்
கரையைத் தன்னுள்
கரைத்துக் கரைத்துச்
செல்லும் அலை போலவும்,
மலையைச் சூழ்ந்த
நீர்க்கடலா,
கடலில் முளைத்த
நீள்மலையா
என்றுணரா நிலை போலவும்,
உள்ளதென்று நீ சொன்னதை
திருத்தி,
நாணத்தால் சரிந்த
வனமா,
நாரைகள் பறக்கும்
வானமா
என்று நான் கேட்ட,
கேள்விகளால்
நிரம்பி வழிகின்றது
நம் காதல்.
நன்றி பாலமுரளி ஸார்..!
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்.
இந்தப் பாட்டில் வரும் குழந்தைகளை விட என்ன விதத்தில் குறைந்து விட்டோம் நாம்? எங்கேயோ படித்த ஒரு வரி.
' எதற்காக கவலைப்படுகிறீர்கள்? உங்களால் முடிக்க முடிகின்ற சிறு காரியமெனில் எதற்காகக் கவலைப்படுகிறீர்கள்? உங்களால் முடிக்க முடியாத மிகப் பெரும் காரியம் எனில் அதற்காகக் கவலைப்பட்டு ஆகப் போவதென்ன? நீங்கள் செய்யப் போகும் வேலை மனித சமுதாயத்தில் எத்தனை பெரிய பங்காற்றப் போகின்றது என்று யோசித்துக் கவலைப்படுங்கள் '.
நாம் செய்கின்ற வேலைகள் அத்தகைய category-ல் வருகிறதா என்று அவரவரே யோசித்துக் கொள்ள வேண்டியது தான்.
சில விஷயங்களை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடிவதேயில்லை. அவற்றுள் மிக, மிக முக்கியமானது, உணவையோ, உணவுப் பொருட்களையோ வீணாக்குவது.
இயற்கை நமக்காகப் பொத்திப் பொத்தி வளர்த்துத் தந்த அரிசியை உபயோகப் படுத்தாமல் இருப்பதும், பெற்றெடுத்த தாய் ஆசையோடு பால் கொடுக்க வருகையில், அவள் நெஞ்சில் மிதிப்பதும் ஒன்றுதான் என்பது என் எண்ணம்.
விருந்துக்குப் போகும் போதோ, மதியம் உண்ணும் போதோ, என் தட்டு உண்ணும் முன்பும், உண்ட பின்பும் வித்தியாசம் காண முடியாது என்று பலர் கூறிச் சிரிக்கையில் நான் நினைத்து வருந்துவதுண்டு. ' இது கூட இல்லாமல் காலம் கழிந்ததுண்டு. நான் அறிவேன் இந்த ஒவ்வொரு பருக்கையின் மதிப்பு. இவர்கள் அறியவில்லை. அறியும் கட்டாயம் வரவும் வேண்டாம். இப்போதிருக்கும் நல்ல நிலைமையிலேயே இவர்கள் உணர வேண்டுமே, கடவுளே..! ' என்று.
தயவு செய்து நீங்களும் ஒவ்வொரு பருக்கைக்கும் மரியாதை தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
எப்படியோ இருந்த வாழ்வை இப்போது ஒரு நிலைக்கு கொண்டு வந்த இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்.
Get Your Own Music Player at Music Plugin