Sunday, November 16, 2008

நகர்கின்றது வாழ்க்கை!

Whatever Happens, Life must Go on...!
- வாரணம் ஆயிரம். அப்பா சூர்யா. :))

***

17.June.2006.

புகை போல் படர்கின்ற பனியால் நனைந்து கொண்டு இருக்கின்றது இரவு. வெள்ளைத் துளிகளால் ஈரப்படுத்தும் நிலவின் பயணத்தால், தலைதுவட்டிக் கொள்கின்றது, ஈரப்பூ!

மெளனத்தின் பேரதிர்வுகளை நிரப்பிய, பொன் பாத்திரமாய் மினுக்கும் கீழ்வானத்தின் ஜரிகையெங்கும் பறக்கின்றன, பறவைகளின் நிழல்கள். நடக்காத பயணத்தில், கிடைக்காத வலிகளால், சுருண்டு நகர்கின்றது ஒரு நதி.

அலைத்துளிகள் ஈரப்படுத்தும் மணல் ஓரங்கள், பிசிறடித்துப் பறக்கின்ற நாணல் பூக்கள், ஒற்றைக் கோடுகளின் பாதைகளில் ஒளிந்து கொள்கின்ற சில பயணங்கள், நுரை ததும்பி சிரிக்கின்ற கரையோரம்.

ஒரு நாளைப் போல் மறுநாள் இல்லை!
ஒரு பூவைப் போல் மறுபூ இல்லை!
ஒரு காதல் போல் மறுகாதல் இல்லை!

தோட்டத்தின் பூக்களைப் பறித்து, கூடைக்குள் நிரப்பி, தொட்டுக் கட்டுகையில் விரலின் இடுக்குகளில் எல்லாம் வியாபிக்கின்ற வாசனை போல் ஒரு காதல்.!

எண்ணி முடிக்க மாட்டாத மினுக்கும் நிகழ்வுகளின் முத்திரை பதித்த இரவுத் துணியின் விண்மீன்கள் போல், இரவில் மட்டும் விழிக்கின்ற நினைவுகளின் ஊடே, நகர்கின்றது, ஒரு காதல்..!

சொட், சொட்டென்று சொட்டுகின்ற மழைத்துளிகளை பேய்ப்பசியோடு விழுங்குகின்ற, வறண்ட நிலத்தின் விரிசல்கள் வழியே வழிந்து செல்கின்றது ஒரு காதல்...!

சொல்லிக் கிடைத்த சில தோல்விகளின் வலிகளும், சொல்லாமல் ஒளித்த சில புதைத்தல்களின் கனங்களும் கொண்ட வரைபடத்தின் மேலே வரைந்தபடி, நகர்கின்றது வாழ்க்கை!

All that She wants is!

வ்வப்போது ஆங்கிலத்திற்கும் சென்று check செய்து கொள்ளுவது ஒரு வழக்கம். அப்படி ஒரு முயற்சியில்...! All that she wants என்பது ஸ்வீடிஷ் பாப் குழு. அதன் தலைப்பின் பாதிப்பில் முயன்ற கவிதை!

09.Dec.2005.

All that She wants...

Al that she wants is
Some Blood with my Tears!
It may happen at any time
That's the one for almost she fears!

All along that snowy evening
What's happened between us.?
Even though, with pinching thorns
Still there are some Roses.!

With our hands got tied
We walked on the way.!
After the Tidel waves attacked,
Life is there in the Bay..!

You may not enter,
As a sweet in my life..!
Deeply your memories sheltered,
In my heart, as a sharp Knife...!

மருதம்.

குறிஞ்சி!

நெய்தல்!

***

12.Mar.2006.

காலயில காட்டுக்குப் போகயிலயும், காலு, மேலு களுவ ஆத்துக்குப் போகயிலயும், உங்க வயக்காடு வழியாப் போய்ட்டு வர்றது, ஒரு தனி சொகந்தான். அதென்னவோ, ஒவ்வொரு செடியும் என்னப் பாத்து கையாட்டற மாதிரியும், வீசற காத்து, ஒன்ற பேரச் சொல்லிட்டு வர்ற மாதிரியும் இருக்கு, புள்ள..!

போன மாசம், மாசி நோம்பி! கோயில்ல தேர் இழுக்கணும்னுட்டு, உன்ற அப்பாவும், இன்னும் கொஞ்சம் பெரிய மனுசங்களும் வீட்டுக்கு வந்தாங்க! கூட நீ வேற வந்திருந்த! அடப் பாவி புள்ளகளா, அம்மனே இங்க தான் வந்திருக்க, எதுக்குய்யா தேர் இளுக்கறீங்கனு தோணுச்சு!

அதெப்படி, உங்க தோட்டத்துக் கெணத்தில மட்டும் இறைக்க, இறைக்க தண்ணி ஊறிக்கிட்டே இருக்குனு ஊரெல்லாம் பேச்சு! பக்கத்துக் காட்டுலயெல்லாம் மோட்டார் போட்டனுக! வரலியே, தண்ணி கொஞ்சம் கூட! அட முட்டாப் பசங்களா, அவ கண்ணு வெச்ச கல்லுலயே தண்ணி வரும்டா, கெணத்துல வர்றதுக்கென்ன!

அப்படியே தான் புள்ள, என்ற மனசுக்குள்ளயும் உன் மேல, ஏதோ ஒரு நெனப்பு ஊறிக்கிட்டே இருந்தது!

போன வருசம் முளாண்டுப் பரிச்ச லீவுன்னு நீ ஊருக்குப் போயிட்டயாம்! பட்டணத்துல உங்க மாமா வீட்டுக்கு! தங்கச்சி கண்டுகிட்டு வந்து சொன்னா..! அதெல்லாம் கரெக்டா பண்ணிடுவா! என்ற தங்கச்சில!

'டேய், அமாவாச அன்னிக்குக் காக்காக்கு சோறு வெக்காம திங்கக் கூடாதுடா'னு மாசாமாசம் ஆயா துரத்தும். பகல்ல ஏதுடா அம்மாசனு எனக்கே தோணும். நெசமாலுமே அமாசைனா என்னன்னு நீ ஊருக்குப் போன மாசந்தான் தெரிஞ்சது. தெனமும் வயலுக்குப் போறதுக்கு முந்தி, பொறாவுக்குச் சாப்பாடு வெக்கணுமின்னு அலைஞ்சது எனக்குத்தான் தெரியும், ஆமா..!

முந்தின வருஷம் என்னாச்சு தெரியுமா? அப்ப நீ சின்னப் புள்ள, உனக்கு என்ன தெரியும், பாவம்! பண்ணை வூட்டுப் பையன் பட்டணத்துல படிக்கறானாம்! அவனும், கூட்டாளிகளும் போற வர்ற பெண்டுகளப் பாத்து, சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க! உன்னப் பத்தியும் ஏதோ சொன்னாங்கனு தோணுச்சு எனக்கு! சும்மா உடலாமா அவனுங்கள? ஆத்துக்குக் குளிக்க வந்தப்ப, அவனுக உடுப்புல எல்லாம், சுள்ளெறும்பா போட்டு வந்துட்டேன். ரெண்டு நாளா பசங்க வெளிய தலைகாட்டலையே! என்ன நெனச்சுக்கிட்டிருக்காங்க, நம்ம ஊருக்கே வந்து, உன்னையே கேலி பண்ணினா, சும்மா உட்ருவனா..!

என்ட்ட ஏதோ பேசணுமின்னு வெள்ளிக்கெழம, கோயில்ல தங்கச்சிகிட்ட சொன்னியாம்! வந்து சொன்னா! எப்படியிருந்திச்சு தெரியுமா எனக்கு! வாரக் கடசியில வாத்தியார் படத்துக்கு மொதலாட்டம் டிக்கெட்டு கெடச்ச மாதிரி இருந்துச்சு! சொசைட்டில பாலுக்கு வெலை ஏத்துன மாதிரி, அய்யாகிட்ட திட்டு வாங்காத மாதிரி, புளியமரத்துல அடிச்ச கல்லுக்கெல்லாம் புளியங்கா வுளுந்த மாதிரி, முதலப் பாற வரைக்கும் மூச்சு வுடாம நீந்திப் போன மாதிரி ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு புள்ள!

சனிக்கெழம சாயந்திரம் ரைஸ் மில் பக்கத்துல, இருக்கற அம்மன் கோயிலுக்கு வரச் சொன்ன! நீ படிச்ச புள்ள, தைரியமா சொல்லிப்புட்ட, இந்த முட்டாப் பயலுக்குத் தெகிரியமே கெடயாது. பயந்துகிட்டே தான் வந்தேன். பொங்கலுக்கு எடுத்த மஞ்சள் முளுக்க சட்ட, எத்தனை கஷ்டப்பட்டேன் தெரியுமா, இதை எடுக்க! பொங்கலுக்கு நீ மஞ்சக் கலர் தாவணி தான் எடுத்திருக்கியாம்! அதான்! அப்புறம், ஒரு வேட்டி, தோள்ல துண்டு போட்டு ஒரு தோரணையாத் தான் வந்தேன், போ...!

நல்ல ஊதக் காத்து! கவுண்டர் வூட்டு வாய்க்கால்ல தண்ணி சும்மா சலசலனு ஓடிக்கிட்டிருக்கு! ரைஸ் மில் சாத்தியிருந்தாங்க! மினுக் மினுக்கு அம்மன் கோயில் வெளக்கு மட்டும் எரிஞ்சுக்கிட்டிருந்தது. கோயில்னா பெரிய கோயிலெல்லாம் இல்ல! புளிய மரத்துக்கு கீழ, கன்னிமார் பூச நடக்கற எடம். அவ்வளவு தான். நீயும் ஒரு அம்மன் மாதிரி தான் அங்க நின்னுட்டிருந்த!

நீ என்னென்னவோ சொல்லிக்கிட்டே இருந்த! பட்டணம், திருவிழா, தியேட்டரு, பண்ணை வூட்டுப் பையன், காதல், கடுதாசி, குடுத்திடுங்கனு என்னென்னவோ சொல்லிக்கிட்டே இருந்த! இந்தப் பயலுக்கு ஒண்ணும் புரியல!

'சோ'னு மழை பெய்யும் போது, ஊத்தற தண்ணி எல்லாம் எங்க போகுது? தோலே பொசுங்கற மாதிரி அடிக்கற வெயில் எல்லாம் ராத்திரியானா எங்க போகுது? ஊரே தூக்கற மாதிரி அடிக்கற பூவாசமெல்லாம், பூ காஞ்ச பெறகு எங்க போகுது?

அது மாதிரி, நீ பேசுன வார்த்தயெல்லாம் எங்க போகுதுனே தெரியாம காத்தோட போய்க்கிட்டே இருந்துச்சு! நான் என்னத்த கவனிச்சேன் தெரியுமா?

நீ பேசற போதெல்லாம், ரெண்டு தோடும் எப்படி ஆடுச்சு தெரியுமா? வயக்காட்டுல காத்துக்கு கதிரெல்லாம் ஆடுற மாதிரி! புருவம் ரெண்டும் எப்படி ஏறி, எறங்குச்சு தெரியுமா? பகலுல, வளர்ந்து, குறுகி மறுபடியும் வளர்ந்து மறையுற மலையோட நெழலு போல! நீ வெக்கப்படறேனு நான் புரிஞ்சுக்கிட்டது எப்பனா, தரையப் பாத்து குனிஞ்சு நீ பேசறப்ப தான்!

அப்புறம் என்னென்னவோ நடந்து போச்சு! எதுக்கு கதய வளக்கணும்! நீ குடுத்த கடுதாசிய நான் எங்கயோ தொலச்சிட்டதயும், உன்ற மாமா பாத்து பண்ணையார் வூட்டுக்காரங்க எல்லாம் வந்து பேசுனதயும், உன்ற அப்பாவும், அம்மாவும் தல கவுந்து நின்னதயும் ஊரே பாத்துச்சே!

பொறவு ஒரு ராத்திரி ஊர விட்டே போய்ட்டீங்க! அடி பாவி புள்ள, நான் ஒண்ணுமே பண்ணலனு உனக்கு எப்படி புரிய வெப்பேன். இவ கூட என்ன கேவலமா பாக்கறாளே!

நாம வெதக்கற நெல்லு தான் நமக்கு அரிசியா வருதா என்ன? வெதக்கறவன் எவனோ, வெலைக்கு வாங்கறவன் எவனோ, வெனயாத் திங்கறவன் எவனோ! அது மாதிரி நடந்ததெல்லாம் பல கை மாதிரி, என்னென்னவாகவோ நடந்து போச்சு!

ன்னும் கூட, அந்த வயக்காடு வழியாத் தான் போறேன், வர்றேன்! ஆனா இப்ப அது உங்களுது இல்ல! காஞ்சு போன தோட்டத்துக் கெணறு போல, காஞ்சு போயிருக்கு என்ற மனசும்...!

வா..! ரணம் ஆயிரம்.

"He is a Fantastic Man...!"

படம் துவங்கி இரண்டாம் காட்சியில் தொண்டைப் புற்றுநோயின் உச்சத்தில் படுக்கையில் இறக்கப் போகும் அப்பா சூர்யாவைப் பார்க்கும் டாக்டர் சொல்கிறார். நிஜமாய் அதை ஒரிஜினல் சூர்யாவைப் பார்த்துச் சொல்ல வேண்டும்.

கதை சாதாரணம்.

சூர்யா பின்னி இருக்கிறார். படம் முழுகும் விதம் விதமாய் வருகிறார். அப்பா - இதிலேயே பல கெட்டப்புகள்.ஸ்கூல் பையன். காலேஜ் இளைஞன். தசாவதார மேக்கப் பயமுறுத்தல்கள் இல்லாமல் உடலைப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்.

சமீரா அழகோ அழகு..! கழுத்தோர மச்சமும், தெற்றுப் பல் சிரிப்பும், கவி பேசும் கண்களும், ஸ்டைலான கேசமும், இளமையான ஆடைகளும்...! அழகி!



சிம்ரன் நல்ல நடிப்பு! திவ்யாவும் உண்டு!

படம் முழுதும் இங்க்லீஷிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கமான கெளதம் கேரக்டர்கள் அச்சுத் தவறாமல் இருக்கிறார்கள். தங்கை சூர்யாவிடம்,'whats goin(g) on here..?' என்று தான் சாதாரணமாகப் பேசுகிறார்கள். தமிழ் அவர்களுக்கு வீட்டுக்கு வெளியே தான் தேவைப்படும் போல் இருந்தது.

அமெரிக்கக் காட்சிகள் நல்ல முறையில் காட்டப்பட்டிருக்கின்றன. பாயும் அதி வேகக் கார்கள். சுழலும் காமிராவில் மேக மூட்டத்தில் ப்ரூக்ளின் ப்ரிட்ஜ், மஞ்சள் ஈசல் பூச்சிகளாய் பறக்கும் தெருவோர மின் விளக்குகள்...! படத்தின் வேகம் காட்சிகள் நகரும் வேகத்தில் இல்லை என்பதை கெளதம் எப்போது உணர்வார் என்று தெரியவில்லை.

படம் எதைப் பற்றிச் சொல்ல வருகிறது என்றே தெரியவில்லை.

எந்த அப்பாவும் பையன் கெட்ட வழியில் செல்வதாகக் கண்டால், அவனைத் திருத்தத்தான் முயல்வார் என்பது நிதர்சனம். அதனைப் பையன் "டேட்..! யு ஆர் க்ரேட்.." என்று சொல்வது ஓ.கே. ஆனால் டாக்டரும் 'Fantastic Man' என்று சொல்லுமளவிற்கு என்ன செய்தார் என்று காட்டப்படவில்லை. அட, அப்பா என்ன வேலை செய்கிறார் என்றே தெரியவில்லை. எதனால் அவ்வளவு கடன்கள்..?

பாடல்கள் கேட்க இனிமை போல், படத்திலும் நன்று. சிம்ரன் பாடலில் '70 காலத்தைக் காட்ட முயன்று ஓரளவு செய்திருக்கிறார்கள். ஆனால் அப்போதே 'தமிழ்நாடு அரசுப் பேருந்து' என்றா சென்னை பஸ்கள் ஓடின..? பல்லவன் இல்லையா..?

கேரளா, கல்கத்தா, சென்னை, திருச்சி, ப்ரூக்ளின், காஷ்மீர், டெல்லி, நார்த் ஈஸ்ட் டெரிடரிஸ் என்று கதை சுற்றுகிறது.

நிறைய இடங்கள் கத்திரி போட்டிருக்கலாம். சில நாட்களில் தியேட்டர் ஆபரேட்டர்கள் அந்தப் பணியை மேற்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

சூர்யா அடிக்கடி சிக்ஸ் பேக்ஸைக் காட்டுகிறார். திகட்டுகிறது (காதில் புகை...!).

தாடிவாலா சூர்யா, கார்த்தி போல் இருக்கிறார்.

ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, காக்க காக்க, வே.வி., எல்லாம் கலந்து கட்டி ஒரு படம் பாருங்கள். அது இது போல் இருக்கும். கடைசி சீனில் சிம்ரன் 'வாரணம் ஆயிரம்' என்று ஆரம்பித்து ஒரு டயலாக் பேசுகிறார். அதற்காக இப்படி ஒரு பெயர். அழகான தமிழ்ப் பெயரை வைத்து விட்டு, ஓர் இங்கிலீஷ் ஃபிலிம் எப்படி எடுப்பது என்பது கெளதமுக்கு மட்டுமே சாத்தியம்.

அப்பா - பையன் பாசமா, காதலா, தேச பக்தியா, குடும்பமா...என்று எதைப் பற்றிச் சொல்கிறது என்று குழப்பம் இருந்தாலும், நிஜத்தில் வாழ்க்கை என்பது அப்படி எளிதில் வரையறுக்க முடியாததாகத் தான் இருக்கின்றது என்பதால், ஒரு முறை பார்க்கலாம், கெளதம் அவர் அப்பாவிற்காக எடுத்த இப்படத்தை!

படத்தின் சுவாரஸ்யத்தை விட, ஓவர் ப்ரிட்ஜ் அஞ்சலி தியேட்டருக்குப் போகும் முன் பஸ்ஸில் நிகழ்ந்த கண்டக்டர் - பயணி சண்டையும், எதிர்பாராமல் அதே பஸ்ஸில் வந்த சுந்தருடனான சந்திப்பும், டிபனில் சாப்பிட்ட நெய் தோசை - வடைகள் காம்பினேஷனும், லஞ்ச் ஆரியாஸில் எடுத்துக் கொண்ட டொமேட்டோ சாஸும் சுவையாக இருந்தன.