Friday, September 05, 2008
உயிர் இறங்கும் கண்கள்!
மிகு ஸ்வரங்கள் ரிதம், ரிதமாய் இசையை இறக்கும் கணங்கள் நிதம் நிதம் பெருக்கும் இதம் இதம், பரவசங்கள்! போர் எனும் ஓர் நிகழ்வின் மூலம் யார் என எட்டிப் பார்க்கின்ற சிறு இரு விழிகள்!
பல கணங்கள் சேர்ந்து கட்டமைக்கும் காலத் துளிகளில் காணாமல் போகின்ற மெளன சரத்தில் விழித்துக் கொண்டிருக்கும், நினை நினைத்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு மூலையில் என் மனம்!
முற்றிலும் இருள் படிந்திருக்கும் பின்னிரவு நேரத்தின் வீடுகள் மீதெல்லாம் எனது மெளன ஓசை மெல்ல மெல்ல குளிரோடு ஊடுறுவிப் பாய்கின்றது.
சலசலக்கும் தென்றலின் மூச்சுப் பிடிவாதத்தால், அசைகின்ற அழகுப் பச்சை மரங்களின் இடைவெளிகளில் எல்லாம் நிறைகின்ற பால்வெள்ளை அமுத நிலவொளி, பாதி அர்த்தங்களைச் சொல்லும் எனது பேசா ஒரு நிலையை!
ஒற்றைத் தனிமைக் குளத்தின் ஈரக் கரைகளில் தடம் பதித்த நம் காதலின் அச்சுக்கள், அலையாடும் பச்சை நீரால் தினம் நனைக்கப்பட்டிருக்கட்டும்! தளும்பும் முத்துத் துளிகளென தாமரை இதழகளில் நிறைந்தாடும் பின்பனித்துளிகள் நடுங்கும் இந்தக் குளிர் வேளையில், சொல்லட்டும் அலைபாய்கின்ற தனி இரு மனங்களை!
சலசலப்பாய்ப் பெருஞ்சத்தமாய் சிறுகற்களையும், பெரும்பாறைகளையும் உருட்டி, திரட்டி, வேறுவேறு பாதைகளில் விளையாடி, உறவாடி, தாவித் தாவித் ததும்பி, கரைகளில் நிறைந்து கலந்து பின் பெருவேகமாய்ப் பாய்கின்ற பேரருவியின் அடிவாரக் கரைகளில் அடங்கி நிற்கட்டும் நமது நிலை பெயராக் காதல்! சாரலென்ன, சிறுதூறலென்ன, நுரைக் காற்றோடு நீங்கா குளிரென்ன, ஓர் இதழ்ச்சூடு குலைத்துப் போட்டு விடும் இந்த நடுங்கும் மூச்சுக் காற்றை!
உச்சி முகடுகளில் முத்தமிட்டுச் செல்லும் வெண் மேகங்களைக் கிள்ளிப் பார்க்கையில் சிவந்த குருதிப் புள்ளியாய், மொட்டுப் பூவாய் மழைத்துளிகள்! பச்சை மரங்கள் அடர்ந்த நெடுங் காட்டில் பூத்திருக்கும் நமது இச்சை நிறைந்த காலங்கள் என்றென்றைக்கும், அதன் தனிமை போல்!
உடைந்த சருகுகளின் மேல் மெல்ல மெல்ல எட்டு வைத்து நடக்கையில் பனிக் காற்றின் ஊடுறுவலுக்கு தோலின் துளைகள் இடங் கொடுத்து சிலிர்க்கையில் எட்டிப் பார்க்கும், விரல்களைக் கோர்த்து, அதன் வழி உயிர்ப்போடு ப்ரவாகிக்கும் தீராக் காதல்!
ஒற்றைக் குடிசையின் கால்களோடு நடனமாடும் புயல் காற்றைச் சொல்லிக் குறையென்ன? கற்றைக் கூந்தலில் மலர்கள் முகிழ்த்திருக்கும், மாலை நிறம் தெறித்திருக்கும் முகம் செய்யும் தடுமாற்றத்தினை விடவும் பெரிதா செய்து விடும் சுழற்புயல்?
பச்சை வயல் நடுவே தன்னந் தனிமையில் நீண்டிருக்கும் பாதையில் நாம் நடந்து சென்ற போது, தலையாட்டிச் சிரித்துக் கொண்டன மஞ்சள் காய்ந்திருந்த பயிர்கள்! 'அங்கே பாருங்கள்' என விரல் நீட்டிச் சொன்ன காக்கை பொம்மையை அல்லவா சொல்ல வேண்டும்?
உச்சிக் கோயிலுக்குச் செல்லும் அச்சில் வார்த்த பாறைப் படிக்கட்டுகள் என்றும் பதிவு செய்து வைத்திருக்கும் ஆயிரமாயிரம் பாத நினைவுகளில், ரெட்டை கொலுசொலிகள், கடந்து சென்றதையும், ஒரு தேவதையின் பொன் மென் விரல்களைப் பிடித்த பேரின்பப் பெருவெளியில் மிதந்து சென்ற ஓர் ஆடவனின் மிதத்தலுக்குரிய எடையற்ற படர்தலையும்!
நீங்கா போதை தரும் மதுரசம் வழிந்தோடும் ஒரு பார்வையில் உறைகின்ற யாவும், யாதும் அறிந்திராத பற்பல ஜென்மங்களின் தொடர்கின்ற கயிறன்றோ?
Thursday, September 04, 2008
மருமாள் தேட்டை.
ஸ்ரீமான் ஸுந்தரம் பிள்ளையவர்களுக்கு தற்காலத்தில் ஒரு தீராத கவலை மனதிற் புகுந்து ஆட்டி வைக்கின்றது.
பிள்ளையவர்கள் சாமான்யப்பட்டவர் அல்லர். தமது முப்பாட்டர், அவரது முப்பாட்டர் காலங்களில் இருந்து சமஸ்தானத்தின் திவானாகவும், ராசாக்களுக்கு சேவகஞ்செய்து மானியம் பெற்றுக் கொண்டு நாடாள்வதிலும், பின்னர் வந்த வெள்ளைப் பரங்கியர்க்கு சலாம் அடித்து கும்பினியில் நல்லதோர் அந்தஸ்துடனும், செல்வாக்குடனும், பெரும் பணத்தோடும் வாழ்ந்து வந்த பரம்பரையில் வந்துதித்த மகானுபவர்.
வெள்ளைக்காரன் ஸ்வந்திரம் கொடுத்து விட்டு தேசத்தை விட்டு கப்பலேறிப் போகையில், வேண்டாம் என்று தலைமுழுகிச் சென்ற சாமான்களில் திருவாளர் சுந்தரம் பிள்ளையவர்களுக்கு கொடுத்த சர் பட்டமும் ஒன்று! பட்டு அங்கவஸ்திரத்தோடும், பளபள வேஷ்டியோடும், மின்னும் தலைப்பாகையோடும், நரைத்தாலும் விடைத்திருக்கும் கூர்நுனிகள் கொண்ட மீசையோடும் 'சர். ஸுந்தரம் பிள்ளை' என்ற மிடுக்கையும் சுமந்து கொண்டு தான் பிள்ளையவர்கள் நீச்சு நிலம் பார்க்கப் போவார்.
வடக்கே எல்லையம்மன் கோயிலின் வாசலில் இருந்து, பெரும் பலங்கொண்ட வஸ்தாது ஒருவன் ஒரு இடையெடைக் கல்லை ஓடி வந்து விட்டெறிந்தான் எனில், அது பிள்ளையவர்களின் நிலத்தில் பத்து சதமான இடத்தை அடைவதற்குள் ப்ராணனை விட்டு விழுந்து விடும். அதைக் கண்ட பின் அந்த வஸ்தாது மனம் வெதும்பி தனது பலத்தின் மீதே நம்பிக்கை இழந்து, பலியாடு போல் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நகர முயல்வான். அவனை விடலாமா? கிழக்குத் திசைக்கு அவனை நகர்த்தி வந்து மீண்டும் கல் வீசச் செய்வோம். இப்போது ஐந்து சதமானம் கூட செல்லாத தன் பலத்தைக் கண்டு நொந்து போகட்டும், அவன்.
இப்படியானதொரு வளமும், செல்வமும் நிறைந்த முன்னாள் திவான் ஸுந்தரம் பிள்ளை அவர்களின் மனதுக்கு கிலேசம் அளிக்கும் அளவிற்கு நடந்தது என்ன?
வேறொன்றுமில்லை. அவரது வம்சம் தழைக்க வந்த சீமந்த புத்திரனும், இளந்திவானுமாகிய மிஸ்டர் கோபால் அவர்களுக்கு தகுந்தாற்போல் பெண் கிடைக்கவில்லை என்பது தான்.
செளந்தரராஜ ஸ்வாமிநாதப்பிள்ளை என்ற தனது எள்ளுப் பாட்டனாரின் பெயர் வைப்பதாகத் தான் இருந்தார் பிள்ளை. ஆனால் அதனை முற்றாகத் தடுத்து, தன் பிள்ளை மாடர்ன் பேர் வைத்துக் கொண்டு இஸ்கூலுக்கும், மாகாணக் கல்லூரிகளுக்கும் சென்று தன்னை ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கச் செய்ய வேண்டும் என்று விரும்பிய பிள்ளையவர்களின் தர்மபத்தினி தர்மாம்பாள் அம்மையார் தன் மகனுக்கு 'கோபால்' என்று நவீனமாகப் பெயரிட்டார்.
மகனும் அன்னையின் ஆணையைச் சிரமேற் கொண்டு, மூன்றாம் பாரம் வரை முட்டி மோதி, முக்கி பாஸ் செய்து நிமிர்ந்து பார்ப்பதற்குள் அன்னை நோய் வாய்ப்பட்டு தீராப் படுக்கையாளி ஆனாள். மிஸ்டர் கோபால் மூன்றாம் பாரம் வரை முயன்று வந்ததற்கு பிள்ளையவர்களின் பணம் பாய்ந்தது என்பது, அவன் தனது பதினைந்தாம் வயது வரை தன் திறமையின்பாற் கொண்டிருந்த மகா ஆச்சரியத்தைக் காணாமல் போக்கியது.
மிஸ்டர் கோபாலின் திறமைகள் படிப்பைத் தவிர்த்து மற்றும் பல திசைகளில் ஊழிக் கால வெள்ளம் போல் பாய்ந்தன. ஊர்ப் பொதுக் கோயிலின் மண்டபங்கள், குளத்தங்கரை, கிராமச் சந்தைகள், குதிரைப் பந்தயங்கள் போன்ற இடங்களில் முறையே சீட்டாட்டம், மங்கையர் குளியல் அழகை கண்களால் மொண்டு அருந்துதல், அடாவடித்தனம், பணத்தை வைத்து காத்திருந்து பெரும்பாலும் தோற்று சிறுபாலும் வென்றல் போன்ற செயல்களை முறையின்றி செய்து கற்று வளர்ந்தான்.
பெற்ற மகனின் பெருமைகளை பிள்ளையவர்கள் மூலம் அறிந்த தாய் மிக்க மனவருத்தம் உற்றாள். அவள் பிள்ளையவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்துக் கொண்டாள். பிள்ளை தான் படிக்காமற் போயிற்று. வருகின்ற மருமாளாவது படித்தவளாக வர வேண்டும்.
பிள்ளையவர்களுக்கும் தனது மகன் பதினாறு வயதை எட்டி விட்டபடியால், சீக்கிரமே நல்ல பெண் பார்த்து கட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணமும் உதித்திருந்தது. ஆனால் தன் மனைவி இப்படி ஒரு நிபந்தனை இட்டது அவருக்கு கவலை அளித்தது. எனினும் ஊரிலே புகழ் பெற்றவரும், பட்டணத்திற்கெல்லாம் சென்று ராஜாங்க அதிகாரிகளுக்கும், சர்க்காரின் முக்கியஸ்தர்களுக்கும் ஜாதகம், ஜோஸியம், கைரேகை பார்த்தல், மை வைத்தல், பில்லி, சூனியம், ஏவல் வைத்தல், எடுத்தல், வசிய மருந்து கொடுத்தல், ஒற்றை மயிர், கற்றை காலடி மணல் கொண்டு ஆளை அடிமையாக்கிப் போடுதல் போன்ற சகல பணிகளுக்கும் மேலோட்டமாக பெண்ணிருக்கும் இடத்திற்கு பிள்ளை பார்த்துக் கொடுத்தல், பிள்ளை இருக்கும் வீடுகளுக்கு மருமாள் கண்டு சொல்லுதல் போன்ற சில தர்ம காரியங்களையும் செய்வதில் பிரஸித்தி பெற்றவருமான மகசூர் மதனராஜ கோகுலதாசக் கரும்பாணிப் பண்டிதரைக் கலந்தாலோசிக்கலாம் என்று பிள்ளையவர்கள் முடிவு செய்தார்.
வக்கீல் வரதராஜன் என்றால் மதராஸ் மாகாணத்தில் ஏகப் பிரபல்யம். தெருவில் சென்று இரண்டு பங்காளிகளிடம் கேட்டால் அவரது பெருமையைச் சொல்வார்கள்; பாகப் பிரிவினைக்காக அவரிடம் சென்றதால், கோர்ட்டில் வழக்கு போட்டு சொத்தில் பாதியை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டதைச் சொல்வார்கள். குட்டிச் சுவர்களில் அமர்ந்து கொண்டு போகும், வரும் பெண் பிள்ளைகளைப் பார்த்து சீட்டியடித்து களிக்கும் வாலிபர்களைக் கேட்டால், வக்கீலின் ஒரே மகள் மிஸ்.மாலினியைப் பற்றி ஏகமாகச் சொல்லக் கூடும்.
வக்கீல் அவர்கள் ப்ரிட்டிஷ் அரசாட்சியின் போதே, பம்பாய் வழியாக கப்பலேறி சீமைக்குச் சென்று லண்டன் மாநகரில் தங்கி வக்கீல் பட்டம் பெற்றவர். அங்கு இருந்த போது லோகத்தையே அடிமைப்படுத்தி வைத்திருக்கும் தேசத்தின் கனவான்களும், சீமாட்டிகளும் வாழ்கின்ற ஸ்வதந்திர வாழ்வு அவரைக் கவர்ந்தது. எவ்வளவு நாஸூக்காக வாழ்கிறார்கள்! நம் நாட்டவர் அவர்களிடம் பிச்சையெடுக்க வேண்டும்! பார்ட்டிகளிலும், பொதுவாகப் பழகுமிடங்களிலும் எத்தனை பவிசு! 'எக்ஸ்க்யூஸ் மீ' என்று வெள்ளை மாதுக்கள் சொல்லும் போதே, காதுகளில் தேன் வந்து பாய்கிறதே! இந்த இங்கிதம் நம்மவர்களிடம் சுட்டுப் போட்டாலும் வராது!
அவரை முற்றிலும் ஈர்த்துக் கொண்டது, இங்கிலீஷு தேசத்து பெண்கள்! எத்தனை உலகறிவு! எத்தனை கல்வியறிவு! தமக்கு மகள் பிறக்கும் பட்சத்தில் அவளையும் இது போல சர்வகலாசாலைகளில் படிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானமே செய்து வைத்திருந்தார்.
அது போல நாடு திரும்பியதும், தனது சீனியரான ரங்கபாஷ்யம் அவர்களின் மகளையே மணந்து, மிஸ்.மாலினியை படிக்க வைத்து இப்போது அவள் பி.ஏ. இரண்டாம் ஆண்டு சென்று வருகிறாள்.
கரும்பாணிப் பண்டிதர் வக்கீல் அவர்களின் அலுவலகத்திற்கு வந்தார்.
"வர வேணும் பண்டிதரே! ஜீவனம் எல்லாம் சுகம் தானே?" என்று கேட்டார் வக்கீல்.
"ஏதோ உங்களைப் போன்ற பெரிய மனிதர்களின் தயவாலும், அம்பாளின் கருணையாலும் ஏதோ வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது..!" என்றார் பண்டிதர்.
"ஓய் பண்டிதரே! உமது வாய் ஜாலத்தாலும், பேச்சுப் பிரவாகத்தாலும் நீர் இப்போது சர்க்காரின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து புறப்படுகிறீராமே! பிரதம மந்திரி கூட மினிஸ்டர் சபையை மாற்றுவதற்கு முன் உம்மிடம் தான் நேரம் காலம் எல்லாம் பார்ப்பதாக மாகாணம் முழுதும் பேச்சு ஏற்பட்டிருக்கிறதே! போகட்டும். என்ன விஷயமாய் இங்கே வந்திருக்கிறீர்..?"
"பெரியவர்களுக்கு அடியேனைப் பற்றிய உயர்வான அபிப்ராயம் வரும் அளவிற்கு செய்திகள் வந்திருப்பது மகிழ்ச்சி! நம்ம பெண்ணிற்கு கலியாணம் செய்து அனுப்ப நல்ல இடம் பார்க்கச் சொல்லி சொல்லியிருந்தீங்க!"
"ஆமாமா! மாலினிக்கு 'மாரியேஜ்' செய்ய காலம் வந்து விட்டது தான். நல்ல இடம் ஏதாவது வந்திருக்கா..?"
"அருமையான இடம் ஒண்ணு பார்த்திருக்கேன். நம்ம கிராமம் தான். நல்ல குடும்பம். சொத்து எக்கச்சக்கம். திவான் பரம்பரை. சூரியனே அவங்க நிலத்தை அளக்கணும்னா ஒரு நாள் முழுக்க கிழக்குல இருந்து மேற்கு வரைக்கும் நடக்கணும்னு அவங்க வம்சத்தை பத்தி பாட்டு எழுதி வெச்சிருக்காங்க. ஒரே மகன். மிஸ்டர் கோபால். நம்ம குடும்பத்த பத்தி எடுத்து சொன்னன். பொண்ணு ஓவியம் இல்ல போட்டோ இருந்தா வாங்கிட்டு வர சொன்னாங்க..!"
"எல்லாம் சரி! பையன் படிச்சிருக்கானா..?"
"நம்ம பொண்ணு அளவுக்கு படிக்கலைன்னாலும் கொஞ்சமா படிச்சிருக்கார். மூணாம் பாரம். அட, படிப்பு என்னத்துக்குங்க? உக்காந்து என்ன, படுத்துக்கிட்டே சாப்பிட்டாலும் ஏழெட்டு தலைமுறை அளவுக்கு சொத்து இருக்கே..!"
"சரி தான்! மூணாம் பாரம் படிச்ச பையனுக்கு, மதராஸ் ராஜதானியிலேயே ப்ரஸித்தி பெற்ற வக்கீல் வரதராஜனோட பி.ஏ. படிக்கிற ஒரே பொண்ணு மனைவியா அமையுணுமாமா..? போய் வேற இடம் பாருமையா..!" என்றார் வக்கீல் கொஞ்சம் கோபமாகவே!
"பெரியவங்க மன்னிக்கணும்! நல்ல இடம். அதான் கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கணும். பையனோட போட்டோவைக் கொண்டு வந்திருக்கேன். பாருங்க. பொண்ணு கிட்டயும் காட்டுங்க. பிடிச்சிருக்கானு பாருங்க.." என்றபடி ஒரு போட்டோவைக் கொடுத்தார்.
கொஞ்சமாக யோசித்து விட்டு டேபிள் ட்ராயரைத் திறந்து ஒரு கறுப்பு வெள்ளை போட்டோவை எடுத்தார்.
"இந்த க்ரூப் போட்டோவை எடுத்திட்டு போய்க் காட்டுங்க..!"
(தொடரும்)

Wednesday, September 03, 2008
நீள மூக்கினைத் தரையில் தேய்த்து...
கிளம்பும் போதே மணி ஆறரை ஆகி இருந்தது. பஸ் ஸ்டாப்புக்குச் சென்றால், வழக்கம் போல் ஈஸ்ட் ஃபோர்ட் செல்லும் பஸ்கள் மட்டும் வராமல் தம்பானூர், மெடிக்கல் கோலேஜ் செல்லும் பேருந்துகளாக வந்து கொண்டிருந்தன. ஒரு வழியாக பத்து நிமிடக் காத்திருத்தலுக்குப் பின் அரிதான வகையைச் சேர்ந்த ஒரு ப்ரைவேட் பஸ் வந்தது. அதில் ஒரு சீட்டை அடைந்து, "ஈஸ்ட் ஃபோர்ட் ஒந்நு..!"
இன்று விநாயகர் சதுர்த்தி. எங்கள் நிறுவனத்தில் லீவு இல்லை. எனவே மாலை கொஞ்சம் சீக்கிரமே கிளம்பி, கிழக்குக் கோட்டையில் இருக்கும் புகழ் பெற்ற ஒரு பிள்ளையார் கோயிலுக்குச் செல்வோம் என்று திட்டம். அதன்படி சுபமாக நடந்தது.
திருவனந்தபுரம் வந்த புதிதில், அங்கு தான் லாட்ஜில் சில நாட்கள் வாசம் செய்திருந்தேன். அப்போது அந்தக் கோயிலும், பிள்ளையாரும் நெருக்கமானார்கள்.
பஸ் மெதுவாக ஊர்ந்தது. கிழக்குக் கோட்டையை அடையும் முன், ஒரு செங்கொடி குறு ஊர்வலம், ஒரு அரை செகண்டில் தவிர்க்கப்பட்ட விபத்து, மெடிக்கல் கோலேஜ் ஸ்டாப்பில் ஏழு நிமிடங்கள் ஹால்ட், சைரன் வாகனங்களின் முன்பீறிடலுடன் ஒரு செவ்விளக்குக் கொண்டை கார் ஆகியவற்றைக் கடக்க வேண்டி இருந்தது.
ஓவர் பிர்ட்ஜில் இறங்கி நடக்கத் தொடங்கினேன்.
பொதுவாக நகரெங்கும் திருவோணக் கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. விதவிதமான வடிவங்களில் மகாபலிச் சக்ரவர்த்தி குடை பிடிக்கிறார். குள்ளமாக, கொஞ்சம் உயரமாக, அழகான பெரு வயிறோடு, பெருஞ்சிரிப்போடு, முறுக்கு மீசையோடு பெட்ரோல் பங்குகள், ஷாப்பிங் மால்கள், பழக் கடைகள், வங்கிகள், எல்.ஐ.சி எங்கும் வண்ண வண்ன சீரியல் பல்புகள் மினுக்கின்றன. ஸ்பீக்கர் அசெம்பிள்களில் 'தைதைதகதகதத்தை' என மலையாள இசை சிதறுகின்றது. கோயில்களில் விளக்குகளின் ஒளியில் காவிக் கொடிகள் சீரான இடைவெளிகளில் நடப்பட்டிருப்பது தெரிகின்றது.
எம்.ஜி. ரோட்டின் வழக்கமான கூட்டத்தை விட பல மடங்கு கூட்டம். எல்லார் கைகளிலும் ப்ளாஸ்டிக் பைகளில் இளைத்த பர்ஸின் கனம். பஜ்ஜிக் கடைகள், துணிக்கடல்கள், பூஜை, பூக் கூடைகள் எல்லாவற்றின் முன்னும் ஜன வெள்ளம்.
பிள்ளையார் கோயிலில் எக்கச்சக்க கூட்டம். உள்ளே இருக்கும் தலைகளை விட இரு மடங்கு செருப்புகள் என்பதால், கோயிலின் சுவர்க் கரையெங்கும் தேங்கி இருந்தன வகை, வகையான காலணிகள். தொலைந்தாலும் கிடைக்கும் மற்றொரு ஜோடி என்ற நம்பிக்கையில், லைட் கம்பத்தில் செருகப்படிருந்த ஒரு போஸ்டரை அடையாளம் வைத்து அதன் கீழ் என் செருப்புகளை விட்டேன்.
சூறைத் தேங்காய் பொறி பறந்தது. கருவறையின் முன் ஏக மக்கள். நானும் ஒவ்வொருவராக நகர்த்தி, ஒரு மாதிரி எட்டி, எம்பி, நுனி விரல்களில் நின்று குட்டியாகத் தெரிந்த கணபதியை வணங்கி வேண்டிக் கொண்டேன்.
பின் ஸர்ப்பராஜாவையும் வணங்கி விட்டு, வட்டாரத்தில் பிரபலமான சந்தனக் கிண்ணத்தில் விரலிட்டு கொஞ்சம் அள்ளி நெற்றியில் பூசிக் கொண்டு, இன்னும் கொஞ்சம் அள்ளி கையில் வைத்திருந்த புத்தகத்தின் பக்கங்களில் நிரப்பிக் கொண்டேன்.
வெளியே வந்தால், மூன்று ஆனைகள்.
சரியான கொம்பன்கள் போல இருந்தன. நீளமான அவற்றின் மூக்கினைத் தரையில் தேய்த்தபடியும், சில சமயம் உயர்த்தி மூச்சு விட்டும் இருந்தன. செருப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து அணிந்து சில போட்டோக்கள் எடுத்தேன். ஆனைகளையும்!
சிறிது நேரத்தில் ஆனைகளுக்கு முகம்படுகடாம் கட்டினார்கள். இரவின் வெளிச்சத்தில் பளீரிட்டன அவை. பிறகு யதேச்சையாக பார்க்க சாலையின் அந்தப்பக்கம் ஒரு நடன நிகழ்ச்சி. தாவி சாலையைக் கடந்து அங்கே செல்ல அற்புதங்கள்.
கவிதா நடன அகாதெமி, கொச்சிரவிலாவின் சிறுமிகள் அட்டகாசமாக நடன நிகழ்ச்சிகள் நடத்தினர். முழுதும் கர்நாடக இசை வடிவங்களில் பிரளயமாகப் பாயும் கொன்னக்கோலுக்கு துள்ளித் துள்ளி, விழிகளில் வர்ணங்கள் காட்டி, நவரசங்களுக்கும் சிவனின் லீலைகளையே எடுத்துக்காட்டி, கேரள நடனம், நாடோடி நடனம், மீனவ நடனம் என்று தூள் பரத்தினர்.
'மாயா தொல்லை பண்ணாதேடா..' என்று ஏழெட்டு முறை பாடினார்கள். சரி வழக்கம் போல் கண்ணனாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தால், ஆச்சரியம். முருகனாம். 'வள்ளி தேவயானையோடு நானுமா?' என்று கேள்விகள் எழுப்பினார்கள்.
சில பாட்டுகளை வீடியோ எடுத்துக் கொண்டு அப்படியே நகர்ந்தேன். ஜெமினி சர்க்கஸ் தண்டு இறங்கி இருந்தது. விழாக் கோல இயல்புகளான டெல்லி குண்டு காரக் குறை பச்சைமிளகாய் பஜ்ஜி, ஐஸ்க்ரீம் ஸ்டால், பெட்ஷீட், டவல் ஷாப், எலெக்ட்ரானிக் அடுப்பு (லேசாக விசாரிக்கப் போக வாங்கியே ஆக வேண்டும் என்று விற்பனையாளர் ஒரே அடம்!), தொடர் பபிள்கள் ஊதும் சோப்பு நுரைக்காரர், குழல், பலூன் விற்பவர் மற்றும் கேரள ஸ்பெஷலான குண்டு கோழி வளர்க்க, இயற்கைக் கூந்தல் தைலம், கைவினைப் பொருட்கள், கிச்சன் ஐட்டம்ஸ், பான் ஷாப்ஸ், உரம், அரிசி மூட்டைகள் நிறைந்த ஷாப்புகள்...!
'மலபார் அவல் மில்க்' என்று போர்டிட்டிருந்த ஒரு தள்ளு வண்டியில் சென்று ஒரு கப் வாங்கினேன். செம கிக்...! பால், அவல் (கெலாக்ஸ் மாதிரி தெரிந்தது!), வழக்கமான கேரளப் பழங்கள், பால். ஸ்பூனால் நாலு கலக்கு கலக்கி சுவைக்க... ம்ம்ம்ம்ம்! ஐ லவ் யூ அவல் மில்க்...!
மீண்டும் ஒரு ரவுண்டு அடித்து விட்டு நடன நிகழ்ச்சிக்கே வந்தேன். இப்போது வெறும் சாஸ்த்ரிய சங்கீதம் இல்லாமல் நாட்டுப்புறப் பாட்டுகள் ஓடின. 'கற்பூர நாயகியே கனகவல்லி' ட்யூனில் ஒரு மலையாளப் பாடல். அதற்கும் நல்ல நடனம்.
ஒரு குட்டிப் பெண். ஒரு நாடோடிப் பாடலுக்கு என்னமாய் ஆடினார்! அட்டகாசம். தடாரென விழுதல் என்ன, அழுவது போல் கண்கள் சுருங்குதல் என்ன, ஆச்சரியம் போல் விழிகள் விரிதல் என்ன அருமை..அருமை..! அவரின் நடனத்தின் கரு இது தான் ::
'நான் ஒரு நாடோடி! கயிறு மேல் நடப்பேன்! சாட்டையால் அடித்துக் கொள்வேன்! பார்ப்பவர்கள் இடும் காசால் உயிர் வாழ்வேன்! உணவிற்காகத் தான் இதெல்லாம்! சத்தியமாக குடிக்க மாட்டேன்! குடித்தால் என் அம்மா என்னை அடிப்பாள்! ஏனெனில் அப்பா பயங்கரமான குடிகாரர்! ஒரு நாள் விஷச் சாராயம் அருந்தி உயிர் விட்டார்!
நாங்கள் தெருவுக்கு வந்தோம்!
மழைக்காலம் வந்தது! என் விளையாட்டுகளுக்கு கூட்டமும் குறைந்தது! பசி எங்களை கொன்றது! நாய்களோடும் நாங்கள் போட்டி இட்டோம்! பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டோம்!
ஒருநாள் அம்மா கிடந்த ஒரு டிபன் பாக்ஸை எடுத்தாள். உணவிருக்கும் என்று திறந்தாள்! ஐயோ! அம்மா! என்ன பயங்கரம்! வெடித்தது டிபன் பாக்ஸில் இருந்த பாம்!
ராஷ்ட்ரிய தீவிரவாதிகளே! நாங்கள் ஏழைகள் இருப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்! நாங்கள் ஏழைகள் இறப்பதால் யாருக்கு என்ன லாபம்!
முடிவில் எல்லோர்க்கும் ஆறடி நிலம் தானே!
முடிவில் எல்லோர்க்கும் ஆறடி நிலம் தானே!'
ஒவ்வொரு வரிக்கும் அச்சிறு பெண் காட்டிய உணர்ச்சி வெள்ளம்...! ஒப்பற்றது! அவள் கண்கள் தனியாகப் பேசின. உதடுகள் தனியாக அழுதன. கைகளும், கால்களும் வேண்டுமெனில் விழுந்தன; துடித்தன; அரண்டன.
நிகழ்ச்சி முடிந்ததும் முசுடாக கவனித்துக் கொண்டிருந்த அனைவரும் கைதட்டினர். கலைஞன் எதிர்பார்ப்பது அதைத் தானே?
நேரமாகி இருந்தது. கடைசி நிகழ்ச்சியாக ஒரு குழு நடனம். அதிலும் சிறுமிகள் பிரித்தெடுத்து விட்டார்கள். தேசத்தைப் பற்றிய பாடல் வரிகள் என்று லேசாகப் புரிந்தது. கண்ணகி பற்றியெல்லாம் வந்தது!
நேரமாகி விட்டதென கிளம்பி மீண்டும் ஒருமுறை கோயிலுக்கு வர கூட்டம் மிகக் குறைந்திருந்தது. கோயிலின் முன் புதிதாக பொங்கல் பெரிய குண்டாவிலும், பூஜை சாமான்களும் வைக்கப்படிருந்தன. மறுபடியும் ஒரு முறை கும்பிட்டு விட்டு, பஸ் பிடித்து ஸ்ரீகார்யம் வந்தேன்.
வீட்டுக்கு பத்தடி இருக்கையில் அதுவரை சத்தமே இல்லாமல் இருந்த வானம் பொத்துக் கொண்டு பெய்ய ஆரம்பித்தது.
அது தான் கேரளா...!!!
***
தொடர்புடைய மற்றொரு பதிவு ::
ஓணம் கொண்டாட்டங்கள் ஆரம்பம்
Sunday, August 31, 2008
D.S.P. - சொந்த துறையை எழுத ஆசை!
தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் Digital Signal Processing என்ற தொழில்நுட்பத்தைப் பேசலாம் என்று இந்த தொடர். The History of Time நூலில் ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லியுள்ளது போல், எவ்வளவுக்கு எவ்வளவு கணிதச் சமன்பாடுகளைக் குறைத்து, வாக்கியங்களாய்த் தர முடிகின்றதோ, அப்படி முயல்கிறேன்.
படிப்பவர்களுக்கு சில அடிப்படைத் தகுதிகள் மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் இதைப் பற்றிப் பேச இயல்கிறேன். தகுதிகள் = தமிழ் படிக்கத் தெரிதல்,சில எளிய ஆங்கில வார்த்தைகளை அறிந்திருத்தல் மற்றும் புதிதாக எதையாவது தெரிந்து கொள்ளும் ஆர்வம்.
இனிய தமிழில், தொழில்நுட்பங்களைப் பற்றி அலசும் பற்பல பதிவுகள் உள்ளன.
http://tamilmarketing.blogspot.com/
http://stock.tamilsasi.com/
http://tamilnithi.blogspot.com/
http://porulsey.blogspot.com/
http://masivakumar.googlepages.com/588leather-collection.html
http://masivakumar.googlepages.com/annotated-economics.html
http://fuelcellintamil.blogspot.com/
http://tedujobs.blogspot.com/
இத் தொடர் எப்போது வரும், எப்படி வரும் என்பது யாருக்கும், என்னையும் சேர்த்து தான், தெரியாது. எப்போது வேண்டுமானாலும் வரலாம். ரொம்ப காலத்திற்கு வராமலும் இருக்கலாம். திடீரென நான்கைந்து பதிவுகள் ஒரேயடியாக வரலாம். சுருங்கச் சொன்னால், சிறு பத்திரிக்கைகள் போல!
இப்படி ஒரு தொடரைத் துவங்க என்ன காரணம்?
1. கல்லூரி முடிந்ததும் விட்டதோடு சரி. அதற்குப் பிறகு தியரிட்டிகலாக இத்துறையைப் பார்க்கவில்லை. பணி சார்ந்த சிந்தித்தலோடு மூளை வேலை செய்வதை நிறுத்தி விடுவதால், அதற்குப் படிப்பு பக்கமும் கவனம் கொடுக்க இப்பதிவு.
2. இப்பதிவிடும் நோக்கிலாவது, புதிய செய்திகளைப் படிக்கலாம் என்ற எண்ணம்.
3. மீண்டும் அடிப்படைக் கொள்கைகளை அலசிப் பார்ப்பதால், ‘பில்டிங் மட்டும் ஸ்ட்ராங்காக வைத்துக் கொள்ளாமல், பேஸ்மெண்ட்டை வீக்காக மாறி விடாமல்’ இருக்கவும் இப்பதிவு.
4. வேறு யாரெல்லாம் இத்துறையில் இருக்கும் பதிவர்கள் என்று தெரிந்து கொள்ளவும், குழுமம் அமைக்கவும் எண்ணம்.
யாரேனும் பழைய கதைகளைத் தேடிப் புரட்டிப் பார்த்து, கையை உயர்த்தி, என் மேல் கல்லெறிவதற்கு முன் இப்போதே சொல்லி விடுகிறேன். இப்பாடத்தில் எனது மதிப்பெண்கள் குறைவு தான். ஆனால் வாழ்வின் விசித்திரம் பாருங்கள், அதி உயர் மதிப்பெண்கள் பெற்ற நண்பர்கள் அனைவரும் மென்பொருள் பணிக்குச் சென்று விட, குறை மதிப்பெண் பெற்ற என்னைப் போன்ற சிலர் Core துறையிலே பணி செய்கிறோம்.
ஆனால் படிக்கும் காலத்தில் DSP மேல் ஒரு தனிப்பட்ட ஆர்வம் இருந்தது உண்மை. இப்போது அதிலேயே பணி பார்ப்பதால், கொஞ்சம் மகிழ்ச்சி. அப்போது புரியாமல் விட்ட, தாண்டி வந்த அடிப்படைகளை பார்ப்பதற்காகவும் இதை எழுத உள்ளார்ந்த நிறைவு.
அவ்வப்போது பார்க்கலாம்.

Subscribe to:
Posts (Atom)