Friday, April 06, 2018

ப்ரஸன்ன வதனாம்...!



வானம் கழுவியது போல் விரிந்திருந்தது. கீழ்த் திசையின் முடுக்குகளில் இருந்து வெண்ணொளிக் கீற்றுகள் விசிறியடிக்கத் தொடங்கின. நீரலைகள் நிரம்பித் தள்ளாடும் பெரும் ஒரு நீளப் புடவையாய் மினுக்கியது யமுனா நதி.அதன் மேனியெங்கும் விடியல் இன்னும் பூக்கத் தொடங்கியிராத விண்ணின் நீலக் கரைசல் பிம்பங்கள் மிதந்தன. நிலவொன்று தனியே தன் பாட்டுக்கு ஊஞ்சலாய்த் தொங்கியது. பின்னும், நிரம்பிய நட்சத்திரங்கள் மினுக்கிக் கொண்டே இருந்த காற்றில் குளிர் கலந்திருந்தது.

மரங்களின், கிளைகளின், இலைகளின், நரம்புகளின் மேல் இரவு தடவிக் கொண்டிருந்த தாலாட்டின் மயக்கத்தில் உறங்கிக் கிடந்த பனிப் படலங்கள் சோம்பல் முறித்தன. விளிம்புகளில் நிறைந்திருந்த ஈரங்கள் சுருண்டு, உருண்டு ஒன்று சேர்ந்து, ஒற்றைத் துளியாகி, சூரியனின் பெரும் உறிஞ்சலுக்கு ஏங்கத் தொடங்கின.

சின்னச் சின்னக் குருவிகளும், பறவைகளும், புள்ளினங்களும் பெரும் உற்சாகத்தோடு வாரித் தெறித்த அரிசிமணிகளாய் வானில் ஏகிச் சீழ்க்கையடித்துப் பறந்தன. பனித்துளி சுமக்கும் பூக்களின் அடியில் ஒட்டியிருந்த பூச்சிகள் 'கீச்சு..கீச்சென' கூறிக் கொண்டே சுற்றத் தொடங்கின. எறும்புகள் தமக்குள் ஏதோ சொல்லிக் கொண்டே வரிசை தவறாமல் எங்கோ விரைந்தன. புறாக்கள் தத்தம் சிம்மாசன இறக்கைகளை விரித்து, அலகால் விட்டு விட்டுக் கோதின. 'ட்ரூச்சு...ட்ரூச்சு..' என எழுப்பிக் கொண்டு மைனாக்கள் நதி மேல் பறந்தன. காக்கைகள் மெல்ல குதித்து, நடந்து, கரையோர அலைகளில் தலை முழுக்கிச் சிலிர்த்தன.

துளிக் கண்கள் திறந்து பார்த்த கூட்டிலிருந்த குஞ்சுகள், இன்னும் தாயின் மென் சூட்டுக்குள் பதுங்கிக் கொண்டன. தனித்த குயில் மட்டும் தன் கண்ணாடிக் குரலில் மெதுவாகக் கூவத் துவங்கியதும், கூடவே மற்றொரு மதுரக் குழல் இசையும் சேர்ந்திசைக்கத் தொடங்கியது.

அந்த சுகந்த குழல் நாதம் எழும்பிய புல்லாங்குழல் பொன்னால் செய்யப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொரு துளையின் கீழும் ஒரு முத்துப் பரல் ஆடியது. அதன் முனையில் ஒரு வைரமாலை பூட்டப்பட்டிருந்தது. அதனைத் தடவித் தடவி மென்மையான பூவிசை கொடுத்த விரல்கள் யாருடையவை..? அந்த விரல்கள் விளைந்திருந்த கைகளில் தங்கச் சாந்தைப் பூசியது யார்..? அந்த விரல்களின் ஒவ்வொரு கோடுகளும் பதிந்த பின் குழல் பொன்னானதா இல்லை குழலின் குரலைத் தடவி அவன் உள்ளங்கைகள் மின்னுகின்றனவா..? யாரவன்..?

முதலில் ஒரு மயில் இறகுக் கொத்து தெரிகின்றது. அதன் நீலக் கண் ஏன் இத்தனை உல்லாசமாய்க் காற்றில் ஆடுகின்றது..? அதன் ஒவ்வொரு பிசிறுகளும் அத்தனை தன்மையாய் தன் சின்னஞ்சிறு இழைகளும் குற்குறுக்க, எத்தனை கம்பீரமாய் அமர்ந்திருக்கின்றது. பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்தது போல் அல்லவா இருக்கின்றது..? அது தன் ஒற்றைக் காலால் நிற்கின்ற மகுடம் மட்டும் என்னவாம்..?

மரகதமும், மஞ்சள் பொன் வண்ணமும், செம்பவளமும், ரூபமும், இடையில் பாயும் வெள்ளி நரம்புகளும், தொட்டுத் தொட்டுக் கோர்த்த மணிமாலைகளும் கொண்ட இந்த க்ரீடம், இரவிலும் ஜ்வலிக்கும் சந்திரகாந்தக் கல்லால் செய்யப்பட்டதா..?

இந்த சிகை அலங்காரம் தான் எத்தகையது..? பிரபஞ்சத்தின் ஒளி புக முடியாத ஆழ்ந்த கரு மடிப்புகள் போல் அல்லவா சுருண்டிருக்கின்றன..?

இந்த இரு செவி அழகைத் தான் என்னவென்று சொல்வேன்..? மழை வந்து முடிந்த பின் மலை மடிப்புகளின் எல்லாம் ஏதோ புத்துணர்ச்சித் துகள்கள் படர்ந்திருக்குமே...! அது போல் அல்லவா குளிர்ந்திருக்கின்றன. அந்த தோடுகள்...!! அவை செய்த பாக்கியம் தான் என்ன..! இந்த காந்த இசையைக் கேட்பதற்கேற்ப ஆடி ஆடி மயக்கம் கொண்டு கிளர்கின்றன அல்லவா..?

இது என்ன...!! இரு பெரும் களிறுகள் மதர்த்துப் போய் ஒன்றையொன்று எதிர்த்துக் கிளர்ந்து நிற்கின்றனவே..! ஓ..!! அவை இவன் புருவங்களா..!!

காலையில் கதிரவன் வரும் முன் வெள்ளிக் கரங்கள் திசையெங்கும் பாயும். அது போல் இவன் இமைகளில் துளித் துளி முடிக் குட்டிகள் முளைத்திருக்கின்றனவே..!! மேலும், கீழும் இமைகள் ஒன்றையொன்று கவ்வும் போது, அந்த கண்களை அல்லவா மறைத்து விடுகின்றன.!

கண்கள்..!! அவன் கண்கள்...!!!

கட்டித் தேனை கெட்டி செய்து ஒட்டி வைத்து செய்தவையோ..? இல்லை, மொட்டு வைத்த மொத்தப் பூக்களையும் கொட்டி வைத்து நெய்தவையோ..? இல்லை, எட்டி நிற்கும் பட்டுப் பூச்சிகளை நட்டு வைத்து நார் எடுத்துப் பெய்தவையோ..? கன்னல் கரும்பு கொய்து, மின்னல் வெப்பம் பாய்ச்சி, முன்னம் செய்த மதுரசமோ..? இல்லை, பன்னீர்த் துளி கரைத்து, தாழம்பூ நறுக்கி, சுகந்தம் பரவிய பரவசமோ..?

வெண்ணெய் பூசிய கன்னங்களோ அவை இல்லை, கோபியர் கொடுத்த முத்தங்களால் கனிந்த அன்னம் கள்ளோ..?

அந்த நாசியை ஏது சொல்குவேன்..?

செவ்விதழ்களை என்ன சொல்வேன்..? அந்தி மாலை நிறம் என்றா..? ஆதவன் தெறிக்கும் சுவை என்றா..? அழகு தளும்பித் தளும்பி உருக்கும் அதரங்களை என்ன சொல்வேன்..?




prasanna vadanaaM saubhaagyadaaM bhaagyadaaM
hastaabhyaaM abhayapradaaM maNigaNair-
naanaavidhair-bhuushhitaaM

(who is of smiling face, bestower of all fortunes,
whose hands are ready to rescue anyone from fear,
who is adorned by various ornaments with precious stones)

Puer natus est nobis,
et filius datus est nobis:
cujus emperium super humerum...

For to us a child is born,
to us a son is given:
and the government will be upon his shoulder..
Some day you came
And I knew you were the one
You were the rain, you were the sun

But I needed both, cause I needed you
You were the one
I was dreaming of all my life
When it is dark you are my light
But don't forget
Who's always our guide
It is the child in us

*

ப்ரசன்ன வதனாம் செளபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யாம் அபயப்ரதாம் மணிகநைர்
நானாவிதைர் பூஷிதாம்

(புன்னகைக்கின்ற முகம் யாருடையதோ,
யார் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குபவரோ,
யாருடைய கரங்கள் எந்த பயத்திலிருந்தும்
நம்மைக் காக்கத் தயாராக இருப்பதுவோ,
யார் உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவரோ...)

நமக்கு ஒரு குழந்தை பிறந்தான்;
மகனாக கொடுக்கப்பட்டான்.
சாம்ராஜ்யம் அவன் தோள்களில் கொடுக்கப்படும்.

ஒரு நாள் நீ வந்தாய்.
நீதான் அவன் என்று அறிந்தேன்.
மழையும் நீயே! மாகதிரும் நீயே!
எனக்கு இரண்டும் வேண்டும்,
ஏனெனில் எனக்கு நீ வேண்டும்.

நீதான் அவன்.

என் வாழ்நாள் முழுதும்
கனா கண்டு கொண்டிருந்தேன்.
இருளாக இருக்கும் போது,
நீயே என் வெளிச்சமாக வருவாய்.

ஆனால், மறந்து விடாதே!
நம் வழிகாட்டி எப்போதும் யாரெனில்
நமக்குள்ளிருக்கும் குழந்தையே..!!

***

ஆல்பம் :: எனிக்மா.

பாடல் :: The Child in Us(நமக்குள்ளிருக்கும் குழந்தை.)

இசை :: Michael Cretu

அப்புறம் என்ன ஆச்சு?



ளிங்கு வனத்தின் மேல் பாய்ந்த ஒளி வெள்ளம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது ஆயர்பாடி.

இன்னும் உக்கிரம் கொள்ளாத சூரியனின் பார்வைகள் தீண்டும் பகுதிகளில் எல்லாம் வெம்மையில் பூத்துக் கொண்டிருந்தது வெயில். கொத்தாய்ச் சிரித்துக் கொண்டிருந்த பச்சை இலைகளைப் பிரித்துக் கொண்டு பாய்ந்து கொண்டிருந்தது பகல் ஒளி. வெள்ளிக் காசுகள் தூவிய போர்வையாய் அசைந்து, அசைந்து ஓடிக் கொண்டிருந்தது யமுனை நதி.

ஆவினங்களை ஓட்டியபடி அருகின் வனம் புகுந்திருந்த நாயகர்களின் வீரக் கதைகளைப் பேசிக் கொண்டு யமுனையின் குளிர்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது கோகுலத்தின் கன்னிப் பெண்களின் குழாம்.

கவனம். இது கன்னியர்களின் அந்தரங்கங்கள் அலசப்படும் இடம். நமக்கு, இங்கே என்ன வேலை? வாருங்கள். நாம் ஊருக்குள் செல்வோம்.

அடடே, அங்கே ஒரே கூட்டமாய் இருக்கின்றதே? என்னவாய் இருக்கும்? வாருங்கள். சென்று பார்ப்போம்.

நானா, உங்களை அழைக்கிறேன்? நம்மையெல்லாம் அழைப்பது ஒரு நாதம். கள்ளினும் பெரும் போதையில் நம்மை ஆழ்த்தும் இந்த குழலோசையின் நாயகன், வேறு யாராய் இருக்க முடியும்? அந்த மாயவனே தான்.

தேன் சொரியும் மலரைச் சுற்றிலும் மது மயக்கத்தில் மனம் கிறங்கிய வண்டுகள் இருப்பது அதிசயமா என்ன? பச்சைப் பசிய மரங்கள் நிரம்பிய காடுகளில் மேகங்கள் தங்கி இளைப்பாறுவதும், களைப்பாறுவதும் இயல்பானதே அல்லவா? இந்த மதுசூதனின் மாயக் கரங்கள் மூடித் திறந்து விளையாடும் புல்லாங்குழலின் இனிய இசையில் மன அமைதியுறாத மானிடர் தாம் உண்டோ?

நாமும் அந்தக் குழுவில் இணைகிறோம்.

யாரென்ன , எவரென்ன , குலமென்ன, கோத்திரமென்ன, இனமென்ன, இவனென்ன என்றெல்லாம் பார்த்தா கதிர் ஒளி தருகின்றது? நதி நீர் தருகின்றது? அது போல், யாரெல்லாம் இங்கே உள்ளார்கள்?

வாழ்வின் கடைசிப் படிகளில் படுத்திருக்கும் கிழவர் முதல், முதல் படிக்கட்டில் முழந்தாள் பதித்திருக்கும் பச்சை மண் வரை இவனது குழல் நாதத்தில் மயங்கி இருக்கிறார்களே!

அல்லி மலர்கள் இதழ் கூம்பியிருந்தாலும், நிலவின் ஒளி அதனைத் தட்டித் தட்டி எழுப்புவதில்லையா? தாமரை வெட்கத்தால் தலை கவிழ்ந்திருந்தாலும், கதிரொளி அந்த சிவந்த முகத்தைக் கரங்களால் அள்ளி முத்தமிட இட செந்தாமரை முகம் இன்னும் சிவந்து பரவசம் கொள்ளுவதில்லையா?

இந்த மாயவனின் மனம் கவரும் குழலின் ஓசையில் நாமும் கலந்து நிற்கிறோம்.

ஆ..! இது என்ன எல்லோரும் கலைந்து ஓடுகிறார்களே!~ யாரத்கு, வருவது?

கையில் கழியோடு யசோதை வருகிறாள்.

"கண்ணா..! இது என்ன , எப்போது நீ இங்கே வந்தாய்? உன்னை சமையலறையில் அல்லவா கட்டிப் போட்டேன்! அடே, மாயப் பயலே? என்னையா ஏமாற்றி விட்டு வந்தாய்! இந்த வெயிலைப் பார்த்தாயா? நெல் மணிகளை வெளியே கொட்டி வைத்தால், நிமிடக் கணக்கிலே அரிசியாய்ப் பொறிந்து போகுமே! இந்த சூட்டில் நீ நிற்கலாமா? நாளை உன்னை மணக்கப் போகும் மகராசி வந்து உன்னை கருப்பாக வளர்த்து விட்டேன் என்று குறை கூறுவாளே! அதற்காகவா நீ திட்டம் போட்டு பகலெல்லாம் வெயிலின் சூட்டையேல்லாம் உன் மேனியோடு தாங்கிக் கொண்டு வருகிறாய்? வா. வீட்டுக்கு! உனக்குப் பிடித்த வெண்ணெய்ப் பலகாரங்கள் செய்து வைத்திருக்கிறேன். இன்னும் நமது தொழுவத்தில் பிறந்த கன்றுக்கும் தராமல் சீம்பாலில் இனிப்புகள் செய்து வைத்திருக்கிறேன். வா, மனைக்கு..! அடே பயல்களா! நீங்கள் விளையாட என் மாணிக்கம் தான் கிடைத்தானா? இரவெல்லாம் இந்தப் பெண்கள் அள்ளிக் கொண்டு போய் கொஞ்சித் தீர்க்கிறார்கள். அவர்களது முத்தங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு சிவந்த சிறுவனாக வருகிறான். பகலில் நீங்கள் வந்து கூட்டிக் கொண்டு போய் வெயிலில் விளையாடி அவனைக் கருநிறத்துக் கண்மணியாக மாற்றி அனுப்புகிறீர்கள். என் செல்வத்தின் உடல் தான் என்னாவது? இனிமேல் மனைப் பக்கம் வாருங்கள். உங்களையும் இவனுடன் சேர்த்து உரலோடு கட்டிப் போடுகிறேன். பிறகு எங்கும் நகரவியலாது. உங்கள் தாயார்கள் வந்து தயை கூறக் கேட்டாலும் அனுப்ப மாட்டேன். ஆமாம். கண்ணா! இனிமேல் வெளியே வந்து விளையாட மட்டேன் என்று உறுதி கூறு? எங்கே சொல்லு..! அது என்ன வாயில் அடைத்துக் கொண்டு இருக்கிறாய்? எங்கே காட்டு? ஆ.. காட்டு..! ஆ..!"

ஆஹா! இந்த அம்மையின் அன்பையும், ஆதுரமான பேச்சையும் வேறெங்கே காண முடியும்? நாமும் கண்ணனின் லீலையைப் பர்ப்போம்.

புல்லாங்குழலிற்கு உயிர் கொடுத்து உற்சாக உணர்வூட்டும் அந்த செவ்விதழ்களைத் திறந்து காட்டுகிறான். ஆஹா! ஆங்கே காண்பது தான் என்ன!

பிரபஞ்சத்தை அல்லவா காட்டுகிறான். அவன் இங்கே காட்டியதால், பிரபஞ்சத்திலேயே ஒன்றும் இல்லாமல் பஞ்சம் ஆனது போல் உள்ளதே! அவை தான் இங்கேயே உள்ளதே.!

ஏ.. மனமோகனா! அழகிய மணவாளா! மகா பிரபு! உன் கருணையின் வெள்ளத்தையும், மஹாமாயாவின் லீலைகளையும் உன் அன்னை யசோதையே தாங்கிக் கொள்ளவியலாமல் மயங்கி விழுகிறாளே! நாங்கள் என் செய்வோம்?

Thursday, April 05, 2018

கண்ணன் - எம் தலைவியின் காதலன்.



நுரையொதுங்கும் வழியோரம் நாணல்கள் நனையும்;
நதிக்குளிரில் மணற்பொடிகள் நறுமுகிலாய்ப் புனையும்;
கரைபதுங்கும் சிறுநண்டு கால்பதித்து நடக்கும்;
கதிரழகின் கரமள்ளி யமுனாநீர் மினுக்கும்;
தரைகிழித்து மணலெழும்பும் தானியக்கூர் போலே
தண்ணீர்மே லாடைமேல் தாவும்மென் மீன்கள்;
குறையொழிக்கும் மழைசினைக்கும் மண்வாசம் அன்ன
மாசறுபொன் மங்கையராய் கோகுலத்தில் நாங்கள். (1)

ஆடல்வல் லாளொருத்தி; அணிந்த ஆடை
அவனிதொடாச் சுழன்றாட ஆகா என்போம்;
பாடல்நல் லாளொருத்தி; பாகாய் ஓட
பளிங்குத்தேன் எனக்கேட்டுச் செவியால் உண்போம்;
தேடல்தள் ளாளொருத்தி; தெளிந்து கற்றுத்
தீந்தமிழில் சொற்கண்டு தேங்கற் கண்டு;
மூடல்கொள் ளாளொருத்தி; திருவாய் ஓயா
முடியாத பேச்சுப்பெண் யானும் உண்டு. (2)

ஊடல்கொள் வோஞ்சில்நாள்; உம்மென் றூகூம்
என்றிருந்துப் பின்சேர்ந்து 'எல்லே' யென்று
கூடல்கொள் வோம்பல்நாள்; குதித்து நீந்திக்
குளமெனில் சேறுழப்ப, நதியோ நாணும்;
வாடல்தாங் கோமெம்முள் வருத்தம் மேவும்
வஞ்சியைத்தேற் றித்தளும்பும் கண்ணீர் மாதைச்
சாடல்செய் யோம்;கோபம் கொள்ளும் போது
சரண்புகுவோம் சரிசெய்வாள் தலைவி ராதை. (3)


(ராதைப் புகழ்)



பொற்கட்டித் தன்வண்ணம் பெறக்கேட்கும் அவளை;
பொழிலந்தி மஞ்சள்வான் புறங்காட்டும் எழிலை;
புற்கட்டில் பனிசேர்ந்த புத்துணர்வில் இளமை;
புதிதான விடிகாலைப் பார்வைகள் குளுமை;
விற்கட்டில் ஈரம்பை விடுத்தாற்போல் விழிகள்;
விளையாடும் குழலாடும் விழுமருவிக் கூந்தல்;
சொற்கட்டிச் சொலுந்திறனைச் சொந்தமென் போரிவள்
சொர்ணெழிலைச் சொலப்புகுமின் செந்தமிழும் சேந்தல். (4)

பூச்சொரிவாள்; புல்நடப்பாள்; புத்தாடை கட்டிடப்
புல்லரிப்பாள்; புலர்பொழுதில் பிள்ளைக்குப் பின்பால்
பீய்ச்சிடுவாள்; தோழியரெம் மோடிணைந்தா டிநதிப்
பாய்ந்திடுவாள்; நீந்திடுவாள்; நில்லாவிண் தேரொளிப்
பூச்சிடுவாள்; புன்னகையால் பண்ணிசைப்பாள்; புதுமலர்
பார்த்திட்டால் போதுமடி! பிள்ளையொன்றின் நினைவதை
மூச்சிடுவாள்; பேச்சிடுவாள்; பேதமையில் பித்தாக
மூழ்கிடுவாள்; மூர்ச்சிடுவாள்; மூளும் நினைவதை. (5)


(கண்ணன் புகழ்)



பைந்தார் அணிமார் பவழத் திருவணி
நைந்தார் துயர்த்தீர் யதுகுல - மைந்தா
ரிடையொரு மைநிறப் பெய்தார் மழைநீ
ருடைமின் னலுமவன் மேனி.

மயிலிற கின்கால் மகுடம தின்மேல்
எயில்வலு காண்மின் நுதலில் - பயில்சீர்
எழிலொளி தீண்டி எழுமது தண்கூர்
விழிகளை மீட்டும் முகம்.

முன்னொரு ராவில் மதியொளி மாந்திட
மண்ணுறு பாடியில் மங்கையர் - முன்னிரு
கைகொப்பி மாயவன் கண்ணிறை கண்ணனை
மெய்யொப்பிப் பாடினோம் கும்மி.

(கும்மிப்பாட்டு)
(தன்னன நாதினம் தன்னானே - தன்ன தன்னன நாதினம் தன்னானே...)
(எ.டு.: செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே..)


மங்கைய ரெல்லோரும் வாருங்கடி - அன்புத்
தங்கைய ரெல்லோரும் வாருங்கடி - வந்து
எங்கையில் உங்கையைச் சேருங்கடி - கும்மி
அடித்து அடித்துப் பாடுங்கடி (மங்கை..)

நந்த குமாரனின் ஒய்யாரத்தை - அந்த
நாகத்தைக் கொன்ற நாயகனை - அவன்
சிந்தை குளிர வாழ்த்துங்கடி - நல்ல
சீனி வார்த்தையில் வாழ்த்துங்கடி..! (மங்கை..)

முத்துக்களை அள்ளி சேர்த்தபின்னே - வெள்ளை
முல்லைப்பூ மாலையில் கோர்த்தபின்னே - அந்த
ரத்தின ராசனின் தோள்களிலே - ராச
லீலையின் போது சூட்டுங்கடி..! (மங்கை..)

மேகத்தைப் போலக் கருத்தவனே - வெள்ளி
மீன்களை அள்ளிப் பதித்தவனே - எங்கள்
மோகத்தைத் தொட்டுப் படித்தவனே - கொங்கை
மேலெல்லாம் முத்தங் கொடுத்தவனே..! (மங்கை...)




***

பொருள்::

சேந்தல் - சுருக்கம்
பைந்தார் - இனிய பூமாலை
எயில் - கோட்டை
நுதல் - நெற்றி
தண்மை - குளிர்மை
மாந்திட - குடித்திட


***

Picture Courtesy :: http://www.salagram.net/Newsletter-Shastra227.html,

http://www.lordkrishna.com/Lord_Krishna_1.jpg, http://www.salemhistory.net/images/art_river_scene.jpg

நீலாம்பல் நெடுமலர்.34.

பொற்சுடரொளிர் சிறகு.

ரும்பட்டு போர்த்திய நள்ளிரவில் குத்தி வைத்த கூர்நுனிகள் வெண்ணொளி சிமிட்டிக் கொண்டு பனித்துளிகளை இறக்கிக் கொண்டிருக்கின்றன. காற்றில் குளிர் பரவுகின்றது. சாம்பல் மேகங்கள் எங்கோ விரைகின்றன. தார்ச்சாலைகள் செம்மஞ்சள் நீரால் கழுவப்படுகின்றன. வால்களுக்குள் நாசி புதைத்து தெருநாய்கள் உறங்குகின்றன. நாற்சுவர்களுக்குள் சிறுபூச்சிகள் சுற்றியலைய துணைக்கு சில நினைவுகளுடன் என் விழிகள் சேரா ஈரிமைகளுக்கிடையே விழித்துள்ளன.

முன்னொரு நாள் பின்மாலையில் ஒரு சாலையோரம் மழை நின்று தேங்கியிருந்த சிறு நீர்த்தேக்கத்தில் கண்ட முகம் ஒன்று. செங்குங்குமம் சிறு தீற்றலோடு நீறு பூத்த நுதல். கொஞ்சமே கொஞ்சமே கூர் மழுங்கிய மூக்கினடியில் நடந்து வந்த வேர்வைப்படலம். அடிவான் சிவப்பில் ஈரிதழ்த்தாமரை. வரைந்து முடித்த பின் களைத்துச் சரிந்த தூரிகைப் பிசிறாய் இரு சுருள்முடிகள் செவிகளொட்டி.

சிறுகுளத்தின் எதிரெதிர்ப் புறங்களில் இருவரும். யார் இடம் விட்டு யார் விலகுதல் என்ற நொடிக்காலம் யுகமாய் விரிந்தது. தலைக்கு மேல் பச்சைக்குருவிகள் மிச்சத்துளிகளை நம் மேல் சிந்தின. தரைச்சேற்றில் சிறு புழுவொன்று தலை வளைத்து உடல் நெளித்துப் பழுப்புப் பாதையொன்றை உண்டாக்கியது. மேல்வானின் விளிம்பில் கூடுதிரும்பும் பறவைகள் இனிய ராகமெழுப்பி வானை நிறைத்தன.  பொன் முகில்கள் பூத்திருந்தன. பின்னின்ற வாகன ஒலி கனவைக் கலைக்க திசைகளில் விலகினோம்.

மற்றுமிரு நாளின் மதியப்பொழுது.

நகரின் மையப்பூங்காவில் கூட்டம் குறைவு. குளிர் ஊற்றிய வெயிலின் போதைக்கு பூக்களெல்லாம் சுருண்டு உறங்கின. இலைச்சுருள்களுக்கிடையில் மென் நூல் போல் ஒளிக்கற்றை உள் நுழைந்து தரை தீண்டியது. கற்சுவர்களுக்கு வெளியே எரிநீர் ஊட்டும் உயிரில் கரும்புகை உமிழும் பொன்னகரம். பேராலமரத்தினடி ஒரு களைப்புத்தாங்கிக் காலியில் அமர்ந்திருந்தேன். வானை எண்ணி, புவியை எண்ணி, நாளை எண்ணி. வெண் பருத்திக் கொத்து பூத்தாற்போல் ஒரு நாய்க்குட்டியைக் கையள்ளி நடந்து வந்தாய், ஒற்றைப் பாதையில். மென் ஆரஞ்சு மேலாடை. பூமார் மறையிடைவெளி மிகச் சிறிது காட்டிக் காய்ச்சல் தருவிக்கும் மையத்தில் மஞ்சள் பூவலங்காரம். சந்தனக்காற்று போன்ற மறையாடை. வெண் பால் போன்ற கால்நுனி வரை மறைக்கும் கீழாடை. நகம் மட்டும் காட்டும் காலணிகள். இளஞ்சிவப்புக் கன்னங்கள்.

பேடைச் சிறகுக்குவியும் வெண்மணிச் சொற்களைத் தேக்கி வைத்து களைப்புக்காலியிடத்து அம்முனையில் அமர்ந்தாய். கையில் புரண்ட நாய்க்குட்டி என்னைப் பார்த்து செல்லமாய்ச் சீறியது. சீறல் சிணுங்கலாக மெல்ல முகம் தடவினாய். தடவி நாய் மகிழ்வுகொள்ள கைநழுவி பச்சைகளில் விழுந்து எழுந்து உடல் நெளித்து, கண்டுகொண்ட சிறு பூச்சியொன்றைக் கவ்வும் முயற்சியில் களிக்கத் தொடங்கியது. தனித்தமர்ந்த உன்னைத் தாவியணைக்கும் கண்கள் கொண்டருந்தினேன்.

பகல் வந்த தேவதை. பருவம் குமிழ்க்கும் பூந்தளிர். மின்னல் பதித்த மீன்விழி. மிதந்து வந்த மோனலிஸ ஓவியம். மிருதுவாய்த் தலை கோதும் மிளிர்விரல்கள். பின்மதியச் சோம்பலுக்கு மருந்து புகட்ட வந்த மலர் மருத்துவச்சி. கூடணையும் குயில்நிழல். சீரணிந்த செந்தழல். செழுங்கனி சுமந்திளைத்த வழுவிடை கிளர்ந்த கிளிக்குஞ்சு. பொற்தேர் பவனி வரும் ரதித்துளி.

”என்ன சொன்னீர்கள்..?” என்று கேட்டாய்.

“என்ன..?” என்றேன் திடுக்கிட்டு. மனச் சொற்கள் மண் நிகழ்ந்து விட்டனவா என்ன?

“எனைப் பார்த்து ரதி என்றீர்..” என்றாய்.

“பொய் சொல்ல விரும்பவில்லை. அழகிய முகில் ஒளித்த நிலவென வந்த உங்களை ரதி என்று குறைத்தே சொன்னேன்..” என்றேன். தைரியத்தின் சாறு சோறாக அன்றி சிறு தூறலாக மேல் விழுந்ததன்று.

செய்தாயா இல்லையா என்றறியக்கூடாத வகையில் ஒரு புன்னகை செய்தாயா? இதழ்க்கோட்டி எனைக்கோட்டி ஆக்கினாய். செங்கழுத்து புல்புல் போல் ஒரு கூர்க்குரல் கொடுத்தாய். செடி மலர்த்தி தனைத் தளர்த்திய அப்பூங்குட்டி சிற்றலை எழுந்தெழுந்து அணைவது போல் தாவித்தாவி வந்தடைந்தது உன்னை. கையேந்தும் தாமரை போல் அள்ளிக்கொண்டாய் அதை. எழுந்து நடந்தாய்; எனைக் கடந்தாய். சற்று தூரம் சென்றதும் திரும்பிப்பார்ப்பாய் என்று எதிர்பார்த்த என்னை ஏமாற்றவில்லை நீ.

ரதிகள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றைச் செய்தாய். இரு செவ்விதழ்கள் குவித்து சிறு இடைவெளி கொண்டு கண்களை மூடி காற்றில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டாய்; அவ்வீர முத்தத்தைச் சுமந்து வந்த பூங்காவின் அத்தென்றல் காற்று என்னை அடைவதற்குள் யுக யுகங்கள் கழிந்திருந்தன.

அம்மாலை அத்தனை இனிப்பானது; அவ்விரவு அத்தனை கனவுகளாலானது.