Friday, February 02, 2018

நீலாம்பல் நெடுமலர்.28.



முற்றமிழ் முறுவல். முறுக்கவிழ் துள்ளல். செறுக்கழிச் செம்மை. செம்மலர்த் தணுமை.

தேவி, நீலவானிடை நீந்தும் வெண்கலம் போல் கருந்துயரிடை ஏந்திக் கொள்ள ஒரு கைப்பிடி அளித்தது நின் பார்வை. திசையறியாச் சுழலில் ஆழிக் குளிரில் வடமுனை மீனென சிமிட்டிச் சிமிட்டி ஒளி காட்டியது நின் புன்னகை. பூவெம்மை பரவிய நெடும்பாலையில் மாயநீரைத் தேடித் தேடி பொடிமணல் மடிப்புகளில் ஏறி இறங்கி விழுந்து தவழ்ந்து உருண்டு அமைகையில் சுனை நீரென உயிர் காட்டியது நின் தொடுகை. குளிர்ப் பாளங்கள் பூசிய பெரும்பனிமலைகளில் உடைந்த கழியூன்றி முடி நோக்கிச் செல்கையில் ஓரடி தவற பாதாளம் வாய் பிளந்து காத்திருக்கும் ஒற்றைப் பாதையில் தளிரெனப் பசுமை பூத்த சிறுசெடி, நின் சொற்களன்றிப் பிறிதென்ன?

எழில் நிறைந்த பூநிழலே, மேல் திசை வெயில் மெல்ல மெல்ல அடங்கும் பொன்மாலைப் பொழுதில் உன் இல்லத்துச் சாளரத்தின் அருகமர்ந்து கூடணையும் சிறு பறவைகளை நோக்கிக் கொண்டிருக்கையில் மெளனமாய் ஒரு சிறு குருவி கீச்சிடும் ஒலி கேளாயோ? அச்சிற்றுயிர் என் மனதில் நில்லாதொலிக்கும் நின் பெயரென அறிந்திலையோ?

மென்மயிர்ப் பரவல் நிரவும் பின் கழுத்தின் மென்சூட்டில் முகம் புதைத்து கொடுக்கும் ஈரமுத்தம் நரம்புகளில் பொங்கிக் கிளைக்கும் சிலிர்ப்பை, பெரும்பொழிவென பாயும் வெள்ளருவிக் கீழ் நின்று குளிரீரத்தில் திளைக்கையில் நீ கொண்டதில்லையா? அது பின்னிரவில் என் நீலக்கனவுகளில் தேரேறி நீ சென்றடையும் மலர்ப்பிரதேசமல்லவா?