அப்போது நாங்கள் ஆயா வீட்டில் குடியிருந்தோம். சதுரமான ஓட்டுப் பாளங்கள் ஒன்றன் மீது ஒன்று தாங்கி சரிந்திருந்த கூரைகள். நடுவில் ஆங்காங்கே கண்ணாடித் தடுப்புகள். பகல் பொழுதுகளில் வெயில் ஒரு திரைச்சீலை போல அசைந்து அசைந்து வீட்டுக்குள் நிறையும். சமையற்கட்டிற்கும் பட்டாசாலைக்கும் நடுவிலே ஒரு பாதை இருந்தது. இருபுறங்களிலும் திண்ணை போல திட்டுகள் வைத்து, நிலைகளில் கரைக் கோலங்கள் போடுவோம். சின்னக் கிண்ணத்தில் சிவப்பாய்க் கரை கரைத்து கிழித்த பழைய இட்லித் துணியை நனைத்து, நிலைப்படிகளில் தேய்த்து விட்டால் மற்றுமொரு மழை வரும் வரை காய்ந்து வாசலுக்கு அடையாளமாய் இருக்கும்.
பின்பக்கம் மூன்று தறிகள் போட்டு நெய்வார்கள். தென்மேறு மூலைத் தறிக்கு அருகில் இரண்டு பப்பாளி மரங்கள் இருந்தன. கால் வைத்து ஏறுவடஹ்ற்கு வசதியாகக் கரணைகள் இருக்கும். ஏறி, தறிக் கொட்டாய் ஓடுகள் மீது மெதுவாக நடந்து, பப்பாளிப் பழங்களைப் பறித்து கீழே குதிப்போம். ஓடுகளின் மேலேயே இன்னும் கொஞ்சம் நடந்தால், பின்பக்க வீட்டுத் தோட்டத்தில் வேர் விட்ட தென்னை மரங்களின் குரும்பைகள் விழுந்து கிடக்கும். பொறுக்கிக் கொண்டு வந்து, உடைத்து அஞ்சாங்கல்லோ, ஜல்லி விளையாட்டுக்கோ பயன்படுத்திக் கொள்வோம்.
மழைக் காலங்களில் மேற்கிலிருந்து கரு மேகங்கள் திரண்டு வரும். அடிக்கடி மின்சாரம் காணாமல் போகும். மருந்து பாட்டில் மூடியை மயிர்கோதியால் துளையிட்டு, பாவு நூலைத் திரியாக்கி, கெரஸின் நிரப்பி, ஒளியேற்ற, என் நிழல் என்னை விட பிரம்மாண்டமாய் வளர்ந்து, ஓதம் இறங்கிய சுவரெங்கும் நடனமாடும். வாடைக்காற்று எல்லாத் திசைகளிலிருந்தும் ஈரமாய் அள்ளிக் கொண்டு வரும் குளிர், வைகறையில் தோட்டத்தின் அத்தனைப் புற்களிலும் நுரை நுரையாய்ச் சேர்ந்திருக்கும். மழை கரைத்த பழுப்பு ஓடைகள் ஓரமாய் வழிந்து, ஒரு குட்டிச் சேகரம் போன்ற சாக்கடையில் கலந்து, வெளியே கறுப்பாய்க் கலந்து விடும்.
ஞாயிறு மதியங்களில் பாடங்களை ஒப்புவித்து விட்டு, மாலை நான்கு மணி சுமாருக்கு, புதிதாய் வாங்கி வைத்திருந்த பிபிஎல்- சான்யோவில் ட்யூன் செய்தால், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் மதுரை ஹாஜி மூஸா, திருச்சி சாரதாஸ், கோவை ஷோபா – ஷோபா கார்னர் விளம்பரங்களின் இடையே ராஜேஸ்வரி ஷண்முகம் குரலில் மாலை மயங்கி மெல்லிய ரீங்காரத்தோடு இரவு கவிழும் செவ்வானம். அந்திப் பறவைகள் கூட்டங்களாய் நீல ஆகாயத் திரையில் புள்ளிகளாய்க் காணாமல் போகும். காமாட்சி அம்மன் கோயிலின் கோபுர ஸ்பீக்கரில் சீர்காழியோ, ஜெயராமனோ குரலிறக்குவார்கள். தோட்டத்துப் பூச்சிகள் இரைந்து கொண்டு, வடமேற்குச் சுவருக்கு அருகில் இருந்த கிணற்றின் வாசத்தைச் சுமந்து வரும்.
இன்று ஆயாவும் இல்லை; வீடும் இல்லை; தறிகளும், பப்பாளி மரங்களும், கிணறும் இல்லை; ராஜேஸ்வரி ஷண்முகமும் இல்லை. கண்ணீர் மட்டும் கனவுகளிலும் தேங்குகின்றது.