சிறுகுறிஞ்சிப்பூ பூக்கையில் காத்திருக்கும் வண்டு சென்றமர்ந்து தேன் கொள்ள ஆண்டுகள் ஆயினவாம் ஈராறு! காலம் திரண்டு ஒற்றைத் துளியென இனிமை செறிந்த அத்துளியைத் தொட்டுச் சுவைத்து அமரத்துவம் அடைந்தது அப்பூச்சி! மென்னிறக்கைகளில் படர்ந்த அக்குளிர்மை தேகமெங்கும் தித்திக்கப் பறந்தது வனமெங்கும்! ஆயிரமாண்டு நின்ற ஆலங்களும் அவற்றின் விழுதுகளுக்கும் இடை நின்ற காற்றின் பாதையில் நீந்தி நீந்திக் களைத்தமர்ந்தது பசுங்குளத்தில் மீ இளஞ்சிவப்பு வர்ணப் பல்லாயிரம் இதழ்களை விரித்து கூம்பல் தாண்டிய தாமரை மலரொன்றின் மேல்!
குளத்தூறிய நீர் காட்டும் வர்ணங்கள் நாளொன்றுக்கு ஏராளம்! புலரி எழும் முன் வான் கலந்த இருள் நிறத்தின் நிழல் பூசி குளிருக்கு அசைந்து கொண்டிருக்கும்! பொன்னொளி பூசி கிழக்கின் தேசத்தில் ஏழ்காலெடுத்து வைத்து அருணன் சொடுக்கும் சாட்டையின் மீச்சிறு ஒலி கேட்டு கூடு விட்டுக் கிளம்பும் பல கோடி புள்ளினங்களின் சிறகுகளையிம் கீச்சிடல்களையும் எதிரொலித்து மஞ்சள் நிறம் கொள்ளத்துவங்கும்! எழுந்து வந்து மேலேறித் தன் வெம்மைப் போர்வையை ஆகாயத்தின் அத்தனை திசைகளிலும் ஒரு சொடுக்கில் விரித்துப் பரப்பி பகலெனும் திரைக்கீழ் நிகழும் அத்தனை நாடகங்களையும் கண்டு களிக்கையில், தனிமையில் ததும்பும் குளம், தன் மேல் காற்றில் சுழன்று விழும் சருகுகளையும் விளைந்தாடும் நிழல்களையும் சுமந்து சுமந்து களைத்து வெண்ணிற அணிகொள்ளும்! செம்மாந்த அடுக்குகளில் மேல் திசையில் தொலைவின் மலைமுகடுகளில் கூரில் சிதற நீள் போர்வை விரித்து ஆதுரத்துடன் புவிமேல் ஊரும் உயிர்களை அமைதிப்படுத்தி வானரசன் மறைகையில், பெருமூச்சு விட்டு ஒரு நாள் பொழுதைக் கழித்த நினைவில் குளம் அள்ளி அணைக்கும் செம்மை வர்ணத்தை! எல்லாம் அணைந்து வான்மீன் பாட்டையில் ஒய்யார வெண்குயில் உல்லாச உலா துவங்கிச் செல்கையில், எங்கோ ஒரு மூலையின் நட்டு வைத்த சவுக்குக் கூட்டத்து மேனியெங்கும் இட்டு வைத்த பொட்டுப் பொட்டு வட்டத் துளைகள் வழி இளங்காற்று நுழைந்து வெளியேகும் ஒலி வனமெங்கும் கேட்கையில் குளம் அடங்கிக் கொள்ளும் இரவின் கனத்த மோகன மெளனத்தின் கூட்டுக்குள், கருமை கொண்டு! அவ்விரவின் ஒரு துளியில் குளத்தில் விரிந்து மணம் வீசிய ஒரு செந்தாமரை முகட்டில் சென்றமர்ந்த தேன் மயக்கத்து வண்டொன்று கண்டது மதுரக்கனவொன்றை!
எந்நேற்றென்று அறியா நாளொன்றில் எப்பொழுதென்று தெரியாதொரு நேரத்தில் பூக்களால் நெய்த ஓர் இளந்தேவதை முகில் படிக்கட்டுகளில் தவறி விழுந்த பஞ்சுப்பிசிறைப் போல் மிதந்து மிதந்து வனத்தின் குளத்தில் ஓராயிரம் இதழ்கள் விரித்த மையப்பெரும் தாமரை மேல் இறங்கினாள். கனி சுற்றிய தோலை அகற்றல் போல் கொண்டு வந்த ஆடைகளை அகற்றி, பொன்னென பூவண்ணமென கொணர்ந்த தேகத்தை நீரில் ஆழ்த்தினாள். நீராடி நனைதலைத் தவமெனச் செய்யும் தாமரைத்தண்டு போன்ற நீள் விரல்களால் ஆங்குப் பொசியும் துளிகள் தளும்பும் பசிய இலைகளைத் தீண்டினாள். முதுமை களைந்து கன்னியென ஆவது போல் இலைகள் சிறு பொன்வண்டுகளாயின. துளி உதடுகளால் அவள் பெயரைத் தாமும் சொல்லிச் சொல்லித் திசைகளுக்குப் பறந்தன.
அவள் நீராடிக் களித்த ஆயிரம் அலைகள் சிந்திச் சிதறிய கரைகள் ஈரத்தின் விலாசங்கள் ஆயின. அவள் கைவிரல்கள் தடவிய தாமரைத் தண்டுகள் சொர்க்கம் செல்லும் வழிப்பாதைகள் ஆயின. அவள் கச்சை மறைத்த செழும் மார்புகள் நனைந்த பனிமுகடுகள் ஆயின. கூந்தலில் சறுக்கி விழும் வினைநுட்பம் முடித்த குளிர்த்துளிகள் தோளைத் தழுவி தோலில் நழுவி இடைக்குறுக்கலில் இறங்கி காணாமலாயின. ஈரம் குளிரக் குளிர நீராடிய சிறுதேவதை, பொன்னுடல் நீங்கிய மெல்லாடைகளைக் கண்டெடுத்து அணிந்தாள். கண்டு சிவந்து போயிருந்த தாமரை இதழ்களை உந்தி காற்றில் எழும் மென் புகை போல், அவள் மிதந்து உயர்ந்து முகிலணைந்தாள்.
வண்டென வந்த இரு கண்கள் கண்ட கனவில் வந்து மறைந்த அத்தேவதையை மீண்டும் காண வேண்டி, அத்தனிமைக் குளத்துக் கமலங்களிலேயே குடி கொண்டது அது.
Pic: https://society6.com/product/lily-pond-lane_print