Showing posts with label இரவிவர்மா கதைகள்.. Show all posts
Showing posts with label இரவிவர்மா கதைகள்.. Show all posts

Thursday, May 17, 2007

இரு நுனி எரி மெழுகு.



மழை சடசடவென அடித்துக் கொண்டிருக்கின்றது. கரு மேகங்கள் விரைந்து வந்து கொண்டிருக்கின்றன. படபடவென முற்றத்தில் விழுந்த பெருந்துளிகள், மாளிகையெங்கும் அதிரச் செய்கின்றன. வெயில் தாழ்ந்து, மெல்ல மறைந்து கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், இருள் போல், கருக்கல் சூழ்கின்றது.

ஒவ்வொரு தூணிலும் ஏற்றப்பட்டிருந்த மணி விளக்குகள், ஒளியைச் சிந்தத் தொடங்கின.நெல் குவித்திருக்கும் குவலயறை, குதிரைகள் கட்டியிருக்கும் கொட்டகை, பசுமாடுகள் பாதுகாக்கப்படும் தொழுவம், பின்வாசல் அருகில் இருக்கும் கண்ணன் கோயில், தோட்டத்தின் துளசி மாடம்.... எங்கும் நனைகின்ற மதியப் பொழுதின் மழையில், ஜன்னலைத் திறந்து பார்க்கின்றேன்.

இது போன்ற மழையின் இரவில் நனைந்த என் மனதின் கதை சொல்லவா..?

இருளும் பனியும் பெய்து கொண்டிருந்த ஒரு மார்கழி நன்னாள். எங்கோ பெய்கின்ற பெருமழையின் சாரல் தூவிக் கொண்டு தென்றல் வீசிக் கொண்டிருந்தது. நிலவின் ஒளியோடு களித்துக் கொண்டிருந்தன தென்னங் கீற்றுகள். பனித்துளிகள் பூத்த ஈரப் புல்வெளியின் ஊடாக நடந்து செல்கிறேன்.

நிலவின் பிம்பத்தைத் தலையணையாக்கி, பிரபஞ்சத்தின் மீன்கள் பதித்த கரும்போர்வையை போர்த்திக் கொண்டு, செந்தாமரையும், வெண் தாமரையும் துயின்று கொண்டிருந்த குளிர்க் குளத்தின் படிக்கட்டுகளில் சென்று அமர்ந்தேன்.

சிறுசிறு கிண்கிணி மணிகள் பதித்த தூண்கள், வீசுகின்ற மென் காற்றிற்கு ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. கரையெங்கும் வைத்திருந்த விளக்குகளின் தீபங்கள் சிமிட்டிக் கொண்டிருந்தன. பின்மாலையில் பெய்திருந்த சிறுமழையின் ஈரம் இலைகளில் இருந்து தெறித்துக் கொண்டிருந்தது. சிறுசிறு கூழாங்கற்களை எடுத்து, குளத்தில் போட்டுக் கொண்டிருந்தேன். என் மனதைப் போல, அலைவுற்றுக் கொண்டிருந்தது, குளம்.

எங்கிருந்தோ மென் குழலோசை என் செவிகளில் நுழைந்து, இதயத்தில் இறங்கியது. ஆஹா..! என் மாயக் கண்ணனின் மதுரகீதத்தில், நிறைகின்ற இம் மனம், வேறு எதனிடம் மயங்கும்? கண்ணன் அருகில் வந்து அமர்கின்றான்.

"ப்ரிய ராதே..! இந்த இரவில் குளக்கரையில் தனிமையில் ஏன் அமர்ந்திருக்கின்றாய்..?"

" என்னைப் போல், தனிமையில் வாடுகின்ற அந்த வெண்ணிலவைக் கண்டு ஆறுதலும், தேறுதலும் கூறிட வந்தேன் ப்ரபோ..!"

"நீ எனடி இனித் தனிமையில் இருக்க வேண்டும்? நான் வந்து விட்டேன் அல்லவா..?"

"கண்ணா! நீ இன்று இருக்கிறாய். நாளை கிள்ம்பி விடுவாய். துவாரகை உன்னை அழைக்கின்றது!"

"ராதே!.."

"முன்பொரு காலம், நாம் குழந்தைகளாய் இருந்தோம். மரங்களின் இடையிலே புகுந்து வருகின்ற காற்றைப் போல் இந்த வனமெங்கும் நாம் சுற்றித் திரிந்தோம். பாயும் நதியலைகள், கோகுலத்தின் வெயில் தீண்டும் தெருக்கள், ஒவ்வொரு இல்லத்தின் உறியடிப் பானைகளின் வெண்ணெய்ப் பாத்திரங்கள், ஆடு, மாடு மேய்க்கும் இடையர்களின் தொழுவங்கள், அடர்ந்த புழுதி பூண்ட நிலமெங்கும் நம் காலடித் தடங்கள் பதித்திருந்தோம். வெட்கமும், பயமும் அறியாத அந்த இளம் பருவத்தில் என் மனமெங்கும் நிறைந்த அன்பில் உன்னைக் குளிப்பட்டினேன், என் மனமோகனா!

பின்பு, சிறுவர்களானோம். வெண் கதிரின் ஒளியில் ஈர்க்கப்பட்டு, காணாமல் போய் விடுகின்ற ஈரப் பனித்துளி போல், நம் அறியாமைகள் வயதின் கரங்களால் உறிஞ்சப்பட்டு, நம்மைப் பிரித்து விட்டன. இதோ, இந்த குளக்கரையில், நாம் பேசாத கதைகளில்லை. பின் உன்னைக் காணும் போதெல்லாம், என் கண்களில் திரையிட்ட கண்ணீரில் நீ எப்போதும் நனைகிறாய். உன் பால்பொழியும் முகம் காண்கையில், என் மனமெங்கும் ஏதோ ஒரு வேதனை கவ்வியது. எப்போதும் உன்னைச் சேர்ந்து இருப்பது, நினைவில் மட்டுமே, நிஜத்தில் அல்ல என்பதை நினைக்கையில், என் உயிரின் துளிகள் எல்லாம் கண்கள் வழி கசிந்தோடின.

நீ ராதே என்று மதுரமாய் அழைக்கும் போதெல்லாம், மலரைச் சூழ்ந்த தேனியின் ரீங்காரம் போல் என் செவிகளில் எல்லாம் உன் குரலே நிரம்பியது. ஆதுரமாய் நீ என் கைவிரலகளைப் பற்றுகையில், கொதிநீரில் இட்ட மஞ்சள் தூளாய்ப் பரவுகின்றது உன் காதல்.

சென்றதொரு பிறவியில் ஈரேழு ஆண்டுகள் என்னைப் பிரிந்து வந்தாய். பின் கானகம் செல்லத் துடித்தேன். இப் பிறவியில் ஆதி முதல் அந்தம் வரை இணைந்தே வாழ்வோம் என்றனையே? இனி எப்போது உனைக் காணப் போகிறேன்...?"

"கலங்காதே ராதே! உனைப் பிரிகிறேன் என்று யார் சொன்னது? கதிர் வானை விட்டுப் பிரிந்தாலும், நிலவாய் மீண்டும் இரவில் ஒன்று சேர்வதில்லையா? மரத்தில் இருந்து பழம் கீழே விழுந்தாலும், வேரோடு, கலப்பதில்லையா..? அலை கடலை விட்டுப் பிரிவது போல் தான் வேகமாய்ச் செல்கிறது. ஆனால் பிரிகின்றதா? இல்லையே. கடலின் பேரன்பிற்கு உட்பட்டு மீண்டும் கடலோடு ஒன்றுவதில்லையா? மலையை விட்டு நீங்குவதாக அருவி சென்றாலும், மீண்டும் மழையாய்ப் பொழிந்து மலையோடு நனைவதில்லையா..? ராதா..! நான் எங்கு சென்றாலும், என் மனமெங்கும் நீயே நிறைந்திருப்பாய்..! இந்த இரவு வீணே கழிய வேண்டுமா? உன் தேன் குரலில் ஒரு கீதம் பட மாட்டாயா?"

"கண்ணா! நான் பாடுகிறேன். நீ உன் பூங்குழலின் நாதத்தில் துவக்கு..!"

ஒரு மதுர ஆலாபனை ஆரம்பமானது, மழைத் தூறலுடன்.

அன்றோடு எனைப் பிரிந்த கண்ணன், என்னைக் காண வருவான் என்று தினம் மாளிகையின் வாசலிலும் வந்து காத்து நிற்கின்றேன்.

Sunday, May 13, 2007

கிருஷ்ணா - இராதை.


மோகன இரவின் பின்னிலாக் காலம். கருவானத்தின் மேகத் துகள்கள் எல்லாம், பரவியிருக்கின்ற வெண் ஒளித்துகள்கள் நிலவின் இருப்பைச் சொல்கின்றன. கருங்குயில்களும், வெண் அன்னமும், நாரைக் கூட்டங்களும், தங்க மீன்களும், பச்சைத் தவளைகளும், கல்லிடுக்கின் தேரைகளும் தத்தம் கூட்டுக்குள் ஒடுங்கி விட்டன.

நள்ளிரவின் கூதற்காற்று என் மனம் போலவே சோக கீதம் பாடிக்கொண்டு வீசுகின்றது. அலையடித்துக் கொண்டிருக்கும் குளிர்க் குளத்தின் இயக்கங்களும் நின்று போய் விட்டன. நான் யாரிடம் என் வேதனையைக் கூறுவேன்?

கோரைப் புற்கள் கூடு கட்டிக் கொண்டுள்ள நீலக் குளமே, உன்னிடம் தான் கூற வேண்டும். என் இதயக் கூட்டுக்குள் சிக்கிக் கொண்ட மதன மோகனைப் போல் உன்னால் என்னைப் பிரிந்து சென்று விட முடியாதல்லவா..?

இல்லை..! இல்லை..! நீயும் என்னை விட்டுச் சென்று விடுவாய். என்னை விட்டு மட்டுமா..? யாருமற்ற தனிமையின் இரவுக் காலங்களில் மட்டும், பால் ஒளியைப் பொழியும் நிலவைச் சுமந்து களித்திருப்பாய். பகல் நேரம் வர வேண்டியது தான். இரவில் கொஞ்சிக் குலாவிய நிலவை மறந்து கதிரோடு சென்று ஒட்டிக் கொள்வாய். பாவம் நிலவு! என்னைப் போல் அதுவும் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வர வேண்டும்.

முன்னொரு பிறவி என்று சொல்லத்தக்க காலம் உனக்கு நினைவிருக்கின்றதா?

அது ஒரு மழைக் காலம். மேற்கின் மலைத் தொடர்களில் பொழிந்த செம்மண் நீர் எல்லாம் பாய்ந்து நிறைந்த நீர் நிலைகள். நீல ஆம்பல்கள், செந்தாமரைகள், பச்சை நிறத்தில் எங்கும் படர்ந்த ஆகாயத் தாமரைகள் என்று நாங்கள் அணிகின்ற ஆடைகளுக்கு கொஞ்சமும் குறையாமல் நீயும் அணிந்திருந்தாய். நம் தெருவெங்கும் ஈரம் பூத்திருந்தது. மாலை நேரங்களில் ஒளியால் நிரப்பும் சிறிசிறு விளக்குகள் கொண்ட எங்கள் வீடுகளை விட்டு, வெண்ணிலவின் ஒளியில் குளிக்கின்ற உன்னைத் தேடி வந்து கதை பேசுவோம்.

ஆஹா! என்னவென்று சொல்லுவேன்? அந்த மாயக் கண்ணன் அப்போது நம்மோடு இருந்தான். குளக்கரையில் அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில், இடை புகுவான். இடையைக் கிள்ளுவான். பொல்லாப் பிள்ளையாய் குளத்தில் இறங்கி, நீரை வாரி, வாரி எங்கள் மேல் இறைப்பான். நீயும் அலைகளால் ஆடி அதைக் கண்டு சிரிப்பாய். நாங்கள் கரைமண்ணை எடுத்து அவன் மேல் வீச, அதை அப்படியே விழுங்குவான். எங்கள் கூந்தல் பூக்களை அள்ளி, முகமெங்கும் தூவுவான்.

மரத்தின் மேல் ஏறி அமர்ந்து உலுக்குகையில், மாலையில் பெய்த ஈரத் துளிகள் எங்கள் மேல் தெறிக்கக் கண்டு விழுந்து,விழுந்து சிரிப்பான்.

'இரு..! இரு..! உன் அன்னையிடம் போய்ச் சொல்கிறோம்' என்று சொல்லிப் புறப்படுகையில், மண்ணை அள்ளிப் பூசிக் கொண்டு, 'இரு..! இரு..! உன் அன்னையிடம் போய்ச் சொல்கிறேன்' என்று விஷமச் சிரிப்புச் சிரிப்பான். மீறி யசோதாவிடம் சொல்லச் செல்கையில், ஓடிவந்து கன்னத்தில் முத்தமிட்டுச் செல்வான்.

கள்ளை உண்டவர் பிறகு நடக்க முடியுமோ? தேனை உண்ட வண்டு பிறகு பறக்க விரும்புமோ? அந்த மாதவனின் இதழ் பட்ட பின் அந்த நினைவில், முன்னர் நடந்தது, பின்னர் நடப்பதும் நினைவில் இருக்குமோ?

பின்பொரு நாள், நாங்கள் அந்தக் கோபாலனின் குறும்புகளைப் பேசியவாறு குளிக்க வந்தோம். அந்த மதுசூதனன் எங்கிருந்து கண்டானோ? எப்படி அறிந்தானோ? யார் சொன்னாரோ?, இந்த மரத்தின் மேல் அமர்ந்து கொண்டான். நாங்கள் அதைக் கவனியாமல், குளிக்கப் புகுந்தோம்.

கண்ட மாத்திரத்திலேயே, காண்போர் உள்ளத்தைக் கவர்ந்து கொள்ளும் கண்ணனுக்கு எங்கள் ஆடைகளையும் கவர்வதா கடினம்?. நாங்களும் பலவாறு துதித்தோம்.

'அட கண்ணா! மணிவண்ணா! கோவர்த்தனகிரி நாதா! காளிங்க ஸம்ஹாரி! குழலூதும் கோவிந்தா! ஆடைகளை கொடுத்து விடப்பா! கோபியர் கொஞ்சும் ரமணா! நீ என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். வெண்ணெய் வேண்டுமா? இனி நீ உறியடித்து பானைகளை உருட்டி, உடைத்து உண்ண வேண்டாம். நாங்களே உனக்கு ஊட்டி விடுகிறோம். ஹே! கோபாலா! உன் இனிமையான குழல் ஓசையில், பசுக்களும், ஆடுகளும், இடையர்களும், வன மரங்களும், பறவைகளும், விலங்குகளும், மலையும், காற்றும் மட்டும் மயங்கி நின்று விடுவதில்லை. நாங்களும் எங்கள் வேலையை விட்டு மெய் மறந்து விடுகிறோம். உன் வாசிப்பைக் கேட்டுக் கொண்டு தயிர் கடைகையில், வெண்ணெய் பொங்கிப் பெருகுகிறது. கிருஷ்ணா! உன் நாத ஓசையில் மயங்காத பேரும் உண்டோ? இதோ, இந்தக் குளத்தை கேட்டுப் பார்! சளசளவெனத் துள்ளிக் குதிக்கும் மீன்களும் அமைதியாகின்றன. அதோ அந்த மலையைக் கேட்டுப் பார்! மேலே வந்து மோதுகின்ற கருமேகங்களும், அமைதியாய் நின்று விடுகின்றன.யுகயுகமாய் ஓடிக் கொண்டிருக்கின்ற கிரகங்களும், சூரியனும், பிரபஞ்ச வெளியும் நின்று விடுகின்றன. அத்தகைய கருணை மகாப் பிரபு! நீ விளையாட கோபியர்கள் நாங்களா கிடைத்தோம்? எங்கள் மனத்தைக் கவர்ந்து விட்ட நாதா, இப்போது எங்கள் மானத்தையும் கவர வந்துள்ளாயோ? ஹே, கருமேக வர்ணா! ஆடைகளைக் கொடுத்து விடப்பா' என்று வேண்டினோம்.

இன்னும் பலவாறெல்லாம் வேண்டிக் கொண்ட பின் தான், அந்த அருமைப் பிள்ளை, ஆடைகளைக் கொடுத்தான். நீயும் கண்டு கொண்டுதானே இருந்தாய்?

அ
ந்த நாட்களெல்லாம் ஒரு கனவாய்ச் சென்று விட்டன. இப்போது நமது மனம் கவர்ந்த மோகனன், ஒரு இராஜ்ஜியத்தின் தலைவன். அந்த நந்த கோபன் குமரன், பல பெரும் சேனைகளுக்கெல்லம் தளபதி. இனி அவன் நம் கோகுலத்திற்கு வருவானா? அவனை எண்ணி,எண்ணி கோபியர்களும், நானும் அந்த நிலவைப் போல் தேய்ந்து கொண்டே வருவதை அறிவானா? அந்த மன்னனைக் காணாமல் மற்றுமொரு இரவு கரைந்து கொண்டிருக்கின்றது என்பதை நிலவே, அவன் மாட மாளிகையின் உப்பரிகைகளில் நிற்கும் போது, சொல்வாயா? கூச்சம் சிறிதும் இல்லாமல், ஆடையைத் தள்ளி விட்டுச் செல்லும் தென்றல் காற்றே, அவனைத் தீண்டும் போதெல்லாம், கோபிகைவனத்தில், இராதா அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று சொல்வாயா?

யாரது..? யாரது? என்னைத் தொடுவது?

ஆ..! ஆ..! யார் நீலமேக வண்ணனா? என் உள்ளம் கவர்ந்த மன்னனா? ஆம்! அவனே தான். இல்லை..!அவனாய் இருக்க முடியாது. எங்கள் கண்ணன் இப்படிச் சிவந்தவனாய் இருக்க முடியாது. அவன் கருநிறத்தான். துவாரகையில், அரண்மனைப் பெண்கள் அனைவரும் முத்தமிட்டு, முத்தமிட்டு என் கண்ணனைச் சிவப்பாக்கி விட்டார்களோ? இல்லை..! என்னைப் பிரிந்துச் சென்று இவ்வளவு நாட்களாகி விட்டதை எண்ணி, வெட்கப்பட்டு இப்படி சிவந்திருக்க வேண்டும்.ஹே பிரபு! இன்னும் ஏன் முதுகுப் புறம் மறைந்து நிற்கிறீர்?

மதனராஜ! உனது மந்தகாசம் பெய்யும் புன்னகையில் அமுதம் உண்ணும் பாக்கியத்தை அருள மாட்டீரா? மஹராஜ! இரவின் கூரையில் வந்து கூடு கட்டி விட்டு, விடிகையில் பறந்து செல்கின்ற கனவு அல்லவே, நீர் இப்போது வந்தது? இனி என்னைப் பிரிய மாட்டீர் அல்லவா?

மோகன குமாரா! பாலாய்ப் பொழியும் நள்ளிரவு நேரத்தில் உன் அருகாமையில் பூங்குழல் எடுத்து எனக்காகக் கொஞ்சம் இசையும். தயவித்து என் வேண்டுகோளுக்கு இசையும். உலகத்து உயிர்கள் எல்லாம் உறங்கி விட்டபின், உனக்காக உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் எனக்காகவும், இந்தக் குளத்துக்காகவும், இசைக்க மாட்டீரா?

மீரா பாடல்கள்.