Friday, November 28, 2008

சிறு கற்கள்.

10.JAN.2006.

இலைநுனி
மேல்
பனித்துளி
என்று தோன்றவில்லை,
உன்
இமைநுனிகளில்
கண்ணீர்த் துகள்..!

***

தவிர்க்க விட்டு
நீ செல்லும்
நேரம் வருகையில்,
தவிக்கத் தவிக்க,
வருகிறது
இருள்..!

***

மெளனமாய்
நீ
நகர்ந்து
சென்று விட்டபின்
சாலை
விளக்குகளைக்
கவ்விக்
கொள்கிறது
அமைதி!

***

கூடவே வருகிறதா,
காவலாக
அனுப்பி வைத்த
என் நிழல்..!

***

நீ
கலைத்து
விட்டுச் சென்றாயா?
போதையில்
என்னைப் போல்
தலையாட்டுகிறது
தென்னை மரம்..!

***

வேறென்னவென்று
சொல்வது?
உன்னைப்
பார்ப்பதற்கு
இரவெல்லாம்
விழித்திருக்கும்
என் மனதை,
உன் அடிமை
என்பதை விட..?

***

பேயென்று
சொல்கிறார்கள்,
முத்தங்களால்
அடித்தது
நீயென்று,
எப்படிச் சொல்வது
கலங்கி நிற்கும்
தாயிடம்..?

(இதுவரை நடந்த எதையும் அம்மாவிடம் மறைத்திராத மனம் (பையனோ, பெண்ணோ) சட்டென்று மனதில் பூக்கும் இந்த உணர்வை மொழிமாற்றம் செய்ய முடியாமல் மறைக்கிறான். அது அவனது மனதை உறுத்தி, குற்ற உணர்ச்சியில் தள்ளுகின்றது.

இந்த நிலை அத்தனை கவிஞர்களுக்கும் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

'தூண்டிற் புழுவினைப் போல் - வெளியே சுடர் விளக்கினைப் போல் நீண்ட பொழுதாக - எனது நெஞ்சந் துடித்த தடீ' எனத் துவங்கும் மகாகவி பாரதியின் 'கண்ணன் என் காதலன்' பாடலின் இடையில் வரும், 'தாயினைக் கண்டாலும் - சகியே சலிப்பு வந்ததடீ'யும், 'ரன்'னில் 'என் தாயோடும் பேசாத மெளனத்தை நீயே தந்தாய்' என்ற வரிகளும் இதனை ஒத்தவையே..!
)

***

முன்கூட்டியே சென்று,
கைகட்டி நின்று,
காத்திருக்கும்
இந்த மனதிற்கு
எப்படித் தெரிகிறது
நீ
போகப் போகும்
பாதைகள்..?

***

மற்றுமொரு முறை
சொல்!
என் இரவுகளின்
மேலெல்லாம்
விழுகின்றன,
விண்மீன்கள்!

***

பச்சைத் தண்ணீரில்
குளித்து,
மஞ்சள் பூசிக்
கரைத்து,
சிகப்புப் பொட்டு
வைத்து
நீ நடந்த
சாலைச் சந்திப்பு
விளக்குகளில்,
எல்லாம்
நிறங்கள்
இல்லை..!

***

போயொரு முறை
பார்க்கலாம்,
கேட்கின்றன
வறண்டு நிற்கும் கண்கள்!

போயொரு முறை
பேசலாம்,
அழைக்கின்றன
காய்ந்து போன உதடுகள்!

ஏதேனும் பேசி
சிரிக்கலாம்,
இழுக்கின்றன,
கருத்துப் போன இமைகள்!

உன் எல்லையில்
தடுக்கின்றன
அமிலம் பூசிய
உன் வார்த்தைகளும்,
ஆகாயம் நோக்கிய
உன் பார்வைகளும்..!

உனக்கான ஒரு பெயர்.

24.Nov.2005.

னக்கான ஒரு பெயர் என்று எதைக் கூறுவாய்?

'என் கண்ணின் மணி' என்று கொஞ்சிய தாயின் அன்பையா?

'என் ரோஜாக் குட்டி' என அள்ளிய தந்தையின் கனிவையா?

'பப்ளிமாஸ்' எனக் கேலிய அண்ணனின் வார்த்தையா?

'என் செல்லக் குட்டி' எனக் கிள்ளிய தாத்தா, பாட்டியின் பாசமா?

'ஏய் குட்ட வாத்து' எனக் கூறிய பள்ளித் தோழியின் நேசமா?

'முதல் மாணவி' எனப் பெருமைப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் பெருமிதமா?

'நல்ல தோழி' எனப் புகழ்ந்த கல்லூரி நண்பனின் நட்பா?

இவை எதுவும் இல்லை..!

வால் போல் ஒட்டிக் கொண்டு வரும் கணவன் பெயரோடு இணைந்தே வரும், உன் பெயர் தான் என்று சொல்லி விடாதே..!

தாங்கிக் கொள்ளத் தடுமாறும், இந்தப் பாழ் மனது..!

பாலை.

11.DEC.2005

காதலின் விஷம் பாரித்த நீல மனம் போல், விரிந்துக் கிடக்கின்ற பெருவானமெங்கும், பாரத்தில் சிந்திய கண்ணீர்த் துளிகளாய்ப் பொறித்த விண்மீன்கள், நிறைந்த மென் இரவுப் பொழுது.!

ஈரம் கரைத்த போர்வையாய்ப் பனிக்காற்று வீசிக் கொண்டிருக்கும் காலம்.!

பகலில் பொழிந்த வெம்மையை உறிஞ்சிய பெரும் மணற்பரப்பு, குளிரில் நனைந்து கொண்டிருக்கிறது.

முட்கள் முளைத்த கள்ளிச் செடிகளும், செதில் செதிலாகச் செதுக்கிய ஈச்ச மரங்களும் நிரம்பிய, பாலைவனப் புழுதிக் காற்று, மணல் தூறலை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றது.

நூல்களின் நரம்புகளின் மேலெல்லாம் மருதாணிச் சிகப்பு பூசிய ஒற்றை லாந்தர் விளக்கை, மூடிய கூடாரக் கூட்டுக்குள், நானும், நீயும்..!

நம்மைச் சுமந்து வந்த ஒட்டகத்தின் திமிலெல்லாம் திமிறுகின்ற நீர் போல, நம்முள் நிறைந்த நினைவுகள், நம்மை உறங்கச் செய்யாமல், கண்களின் மேல், சூழ்ந்த உறக்கத்தைக் கழுவித் தளும்பிக் கொண்டிருக்கின்றன.

நிலவின் ஒளியைச் சல்லடைத் துளிகளால் வடிகட்டித் தருவது போல், இந்த நட்சத்திரங்கள் ஒளிச் சாரல் பொழிகின்றன.

பெரும்பயணத்தின் இறுதியில் பெறுகின்ற, நிலைத்துயராய் ஒரு கனம் வந்து, குடியேறுகின்றது, என் மனதில்..!

எந்த நொடியில் உடைந்தது இந்த உறவு? எந்தப் புள்ளியில் பிறழ்ந்தது நமது ஒத்திசைவு?

கொடுஞ் சூட்டைப் பொழிகின்ற பெரு வெயிலில் உருகிய கறுப்பு வைரங்களெல்லாம் திரண்ட பெட்ரோல் மறைத்த மணற்பரப்பின் மேல், லாந்தர் விளக்கின் இருளும், ஒளியும் போல் பிரிந்தே இருக்கிறோம் நானும், நீயும்..!

மணற்காற்றில் படபடக்கின்ற கூடாரத்தின் ஜன்னல் துளைகள் வழியே தூரத்தில் தெரிகின்ற நகரத்தின் ஒளிப்புள்ளிகளை வெறிக்கின்றேன்.

இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுகின்ற, உன் பயணக்கப்பலுக்காகக் காத்திருக்கிறாய்..!

பட்டுக் கம்பளிகள் பதித்த, உன் வீட்டின் ஜன்னல் கம்பிகளின் வழியே இனி எப்படி என் காதல் நுழைந்து வரும்? சந்தையின் வழியே நீ நடந்து வருகையில், ஈரானிய வளையல்களும், ஷார்ஜா கொலுசுகளும் சிமிட்டி நீ அனுப்பும் செய்திகளை, இனி யாருக்குத் தெரிவிப்பாய்? சிரிக்கையில் கண்கள் மட்டும் தெரிகின்ற அந்தக் கறுப்பு உடைக்குள் இனிப் புகுந்து கொள்ளும் வகையில் வலி நிறைந்த கவிதைகளை இனி யார் உனக்கு எழுதித் தருவது?

உன்னை அழைத்துச் செல்ல வந்து விட்ட ஒட்டகத்தின் மேல் அமர்ந்து நகர்கின்றாய். என் பெருமூச்சுகளைச் சுமந்து செல்கின்ற பயணத்தின் முடிவில் நீ அடையப் போவது நீர் ஊற மறந்து போன சுனை கொண்ட பளிங்கு வீடு..!

பாலைவன மணல் நிரம்பிய குளிர்க்காற்று இந்த ஒற்றை விளக்கை மட்டுமல்ல, அணைத்துச் செல்கின்றது, நீயற்ற இனி எந்தன் வாழ்வின் மேல் நான் கொண்டிருந்த பற்றையும்...!

***

குறிஞ்சி!

நெய்தல்!

மருதம்!

Where is the Party....Tonight...?

ன்று வீரசுந்தருக்கு பிறந்த நாள். எத்தனாவது என்று கேட்கவில்லை. அவரிடம் இந்தப் பாட்டைப் பாடிக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு மசால் தோசையும், மெது வடையும், வெள்ளைக் க்ரீம் கேக் ஒன்றையும் கொடுத்து என் வாயை அடைத்து விட்டார்.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

டந்த ஒரு பதிவில், ஒரு புகைப்படத்தைக் காட்டி என்ன என்று கேட்டிருந்தேன். எனக்கு அது, தலை கலைந்த, தாடி முட்கள் நீட்டிய முகமற்ற ஒருவனுடைய முகமாகக் காட்சியளிக்கிறது.

அது உண்மையில், என்ன என்றால்,



சமையல் ஒரு கலை என்பதை என் தமக்கை கேரட் இரு கை மூலம் பீட்ரூட் அரிந்த பலகை மூலம் காட்டி விட்டாள்.

Thursday, November 27, 2008

ஒரு க. ஒரு ஹை.

வள்
புருவங்கள்
நெருக்கமாக,
அடர்த்தியாக
இருந்தன.

அவற்றின்
நுனிகள்
அவள்
கண்களில் இருந்து
கூர்மையைக்,
கடன்
வாங்கியிருக்கலாம்!

ஓர் இரவில்
அதி நெருக்கத்தில்
பார்த்தேன்.

பதற்றப்
பரவசத்தில்
வியர்வைத் துகள்கள்
துளிர்த்திருந்தன.

இன்னும் நெருக்கம்.

ஓரங்களில் இருந்து
மெல்ல எழும்பி,
மத்தியில்
உச்சத்திற்கு
உயர்ந்து,
மறு எல்லையில்
சரிகின்றன.

அவற்றுக்கிடையே
மீக் குறைந்த
இடைவெளியே
இருந்தது.

அவளின்
Cleavage
போலவே!

இது
அவள்
புருவங்களைப்
பற்றிய
கவிதையாகவும்
இருக்கலாம்...!

***

ண்கள் குளிப்பிடம்.
ஷவர் கைப்பிடி மேல்
ஒரு பொட்டு!

எஸ்.ரா. பரிந்துரைத்த படங்கள்.

ரும் டிசம்பர் மாதம் தொடரும் மான்சூன் மழையின் ஈரச் சிலுசிலுப்புகளின் இடையில், 13-வது கேரள சர்வதேசத் திரைப்பட விழா திருவனந்தபுரத்தில் நடைபெறுகின்றது. உலக சினிமா, மலையாளப் படங்கள், இந்திய உருவாக்கங்கள், 15 , 18 நிமிடங்கள் மட்டுமே ஓடும் குறும்படங்கள், டாக்குமெண்ட்ரி வகைகள் இவற்றுக்கிடையே ஒரே ஒரு தமிழில் ப்ரியதர்ஷனின் 'காஞ்சிவரம்' கண்டிப்பாகப் பார்த்து விட உறுதி செய்திருக்கிறேன்.

கூடவே உலகத் திரைப்படங்களில் பொறுக்கியெடுத்துப் பார்க்க சிபாரிசு செய்தால் நல்லது என்று எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களைக் கேட்டதில், ஒரு லிஸ்ட் அனுப்பி இருக்கிறார்.

சரியாக நேரங்கள் ஒதுக்கி குறைந்தது, இவற்றையாவது ஒரு தடவை பார்த்து விட வேண்டும்.

நன்றி சார்.

***

அன்பு எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு..

வணக்கம்.

அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் ' கேரள சர்வதேசத் திரைப்பட விழா '
நடைபெற இருப்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

http://www.iffk.keralafilm.com/list.htm

இவற்றில் இருந்து எந்தெந்தப் படங்களைப் பார்க்கலாம் என்று
பரிந்துரைத்தால், நெரிசலான அலுவலகப் பணியில் இருந்து நேரம் ஒதுக்கிப்
பார்க்க முயல்வோம்.

நன்றிகள்.

இரா.வசந்த குமார்.
http://kaalapayani.blogspot.com/

வீரசுந்தர்.
http://veerasundar.com/tamil/

**

dear Vasanth

you must see these films


1) Farewell Gulsary Dir:Ardak Amirkulov (102min/Kazhakstan/2008) - Super film based on a russian novel.

2) My Marlon and Brando Dir:Huseyin Karabey (92min/Turkey/2008 - based on a girl of iraq war.

3) The Yellow House Dir:Amor Hakkar (84min/Algeria,France/2008)

4)The Photograph Dir: Nan Achnas (94min/Indonesia/2007)

5) Music Box Dir: Farzad Moteman (113min/Iran /2008)

6) God Man Dog Dir: Singing Chen(119min/Taiwan/2008)

7) Akasha Kusum Dir: Prassanna Vithanage

8) Wonderful Town Dir: Aditya Assarat (92min/Thailand/2008)

9) Breath Dir: Kim Ki Duk (84min/South Korea/2007)

10) Bad Habits Dir: Simon Bross (98min/Mexico/2007)

11) Salt of this Sea Dir: Annamarie Jacir ( 109 /Palestine/2008)

12) Tokyo Sonata Dir: Kiyoshi Kurosawa (119min/ Japan,The Netherlands,China/2008)


13) Postcards from Leningrad

14) Shine A Light : Dir: Martin Scorcese USA

15) Half Moon Dir:Barhman Ghorbadi (114min/Iran, Austria, France, Iraq /2006

i dont have any idea about other films.

i read about few reviews and watch few of these films. so i recommend you.

with love

SRamakrishnan

Wednesday, November 26, 2008

தீராப் பகை!



20.OCT.2005
ரவில்
பெய்யும் மழை போல,
என் காதல்
கவனிப்பாரற்றுப்
பொழிந்து
கொண்டிருக்கிறது!
சற்று
நனைய
வருவாயா..?

***

12.DEC.2005
கர்ந்து நடக்கும்
நத்தைக்
கூட்டுக்குள்
நிறைந்து இருக்கும்,
பயணத்தின்
வழியெங்கும்
வழியச் செய்ய
ஒரு காதல்!

உலர்ந்து கிடக்கும்
என்
மெத்தைச்
சூட்டுக்குள்
உறைந்து இருக்கும்,
வாழ்வின்
நிழலெங்கும்
வருகின்ற
ஒரு பாடல்!

***

பிடிக்கவில்லை
உன்னை,
பிடிக்கின்றது
உன் கவிதைகளை,
என்கையில்
நீ
ஏற்படுத்துகிறாய்,
என் வரிகளின்
மேல் எனக்கே
தீராப் பகை!

***

பிடிக்காத
உன் மனதின்
கரையில்
ஊறாதோ
என் மீது காதல்,
கடற்கரையிலேயே
ஊறிடும்
நன்னீர் போல!

***
22.dec.2005
ந்தையின்
திட்டுகளுக்காக,
தாயின்
அறிவுரைகளுக்காக
அல்ல,
நான்
நல்லவனாகிறேன்,
நீ
தினம் எழுதும்
ராமஜெயங்களுக்காக!

***
படம் நன்றி :: http://www.deatonstreet.com/i/portfolios/depth/9_Rain_at_Night.jpg

Monday, November 24, 2008

சிந்தனை செய் மனமே...!

டைமுறையில் சிக்கலான இடைஞ்சல்களின் காரணமாகச் செய்ய இயலாத ஆய்வுகளைச் சிந்தித்துச் சிந்தித்தே (இப்படி இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்..? இப்படி இருக்குமோ..?) ஒரு கொள்கையையோ, காரண காரியங்களையோ அலசி ஆராய்வதை Thought Experiment என்கிறார்கள்.

நாம் அதனைச் சுலபமாக 'சிந்தனை செய் மனமே' என்று சொல்லலாம்.

பேடண்ட் அலுவலகத்தில் வேலையை சுளுவாக முடித்து விட்டு, சும்மா இருக்கும் போதெல்லாம் ஐன்ஸ்டீன் இத்தகைய யோசனைகளில் ஆழ்ந்து தான் 1905-ஐ 'ஐன்ஸ்டீன் ஆண்டு' என்று பெயர் பெற வைத்தார்.

கண்களைத் திறந்து கொண்டு பகல் கனவு காண்பது இந்த கேட்டகிரியில் வருமா.. என்றால் வராது. அது கேள்விகளைத் துவக்குவதோ, பதில்களைச் சொல்லி முடிப்பதோ கிடையாது. நமது ஆசைகளைத் தான் காட்சிகளாக ஓட்டிப் பார்த்து திருப்தியுறுகிறோம் (அ) பெருமூச்சு விடுகிறோம்.

இயற்பியல், தத்துவம், கணிணியியல், கணிதம், உயிரியல் மற்றும் சில துறைகளில் இந்த சிந்தனை செய் மனமே பயன்படுவதாக விக்கி கூறுகிறான்.

நாம் நம் பங்கிற்கு ஒரு ஆய்வைச் செய்வோமா?

ஒரு நீளமான ரயில் இருக்கின்றது. அது எஸ்1 முதல் எஸ்10 வரை கம்பார்ட்மெண்ட்கள் கொண்டது. அனைத்து பெட்டிகளும் நேரான பாதையால் இணைக்கப்பட்டு உள்ளன. எஸ்1 பெட்டி எஞ்சினுக்கு அடுத்து உள்ளது. மிஸ்டர்.பீன் எஸ்10ல் இருந்து எஸ்1 வரை சென்று மீண்டும் எஸ்10க்கே வந்து ஆரம்பித்த புள்ளியில் நிற்கிறார்.

சரி. இப்போது அவர் மொத்தம் கடந்த/நடந்த தூரம் எவ்வளவு என்பதை,

அ. ரயில் ஸ்டேஷனில் நிற்கும் போதும்,
ஆ. நேரான ட்ராக்கில் நிலையான வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போதும்,

எத்தனை வகைகளில் கணக்கிடலாம்?

உதா. :: கணக்கிடுபவர் மிஸ்டர்.பீனுடன் ரயிலில் அமர்ந்திருப்பவராகவோ, ஸ்டேஷனில் நின்றிருப்பவராகவோ, அல்லது செவ்வாயில்/ நிலாவில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவராகவோ இருந்தால் விடையில் என்னென்ன மாறுபாடுகள் ஏற்படும்?

இந்த சிந்தனையை ஏற்கனவே ஒரு கதையில் சொல்லி இருக்கிறேன்.

ரயில் பயணங்களில் விதவிதமான மனிதர்களைச் சந்திக்கலாம். இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்டில் பெயர்க்கேற்றவாறு பெரும்பாலும் ரிசர்வ்டாகவே வருவார்கள். பேருக்கு கொஞ்சம் போல் பேசி விட்டு, டிபன் பாக்ஸையோ, புளியோதரைக் கட்டையோ பிரித்து, சத்தம் காட்டாமல் சாப்பிட்டு முடித்து விட்டு, சட்புட்டென்று படுக்கையை விரித்தோமா, லைட் எல்லாம் ஆஃப் பண்ணினோமா என்று நாளை முடித்து விடுவார்கள். கூட வருவது யார் என்பதையே அவ்வளவாகத் தெரிந்து கொள்ள விரும்பாதத்து, இந்தப் பெட்டியின் பொதுச் சுபாவம், திருவையாறு செல்லும் அம்பிகளைத் தவிர!

பொதுப் பெட்டி அப்படியே வேறொரு ரகம். லைட் அணைப்பது பொதுவாக முடியாது. ஒவ்வொரு ஸ்டேஷனில் நிற்கும் போதும் எங்கோ ஓர் இடத்தில் இருந்து ரகளைச் சத்தம் வரும். கொஞ்ச நேரத்தில் அடங்கி விடும். 'டாய்லட்ல தண்ணி வர்ல' போன்ற பொதுக் கஷ்டங்கள் கொஞ்சம் நெருங்கப் பண்ணும். லக்கேஜ் கம்பிகள் மேல் படுத்திருப்பவரை எழுப்பலாமா வேண்டாமா என்ற சந்தேகம் சற்று நேரம் இருக்கும். அவரும் 'எங்கே எழுப்பி விடுவான்களோ?' என்ற பயத்திலேயே படுத்திருப்பார். கால்களுக்கு இடையிலும், நடக்கும் பாதையிலும் யாராரோ உருண்டிருப்பார்கள். முதல் சீனில் அறிமுகமாகும் ஹீரோ போல், பறந்து பறந்து தான் நடக்க வேண்டி வரும். அதிலும் மழை பெய்கின்றது என்றால் இன்னும் கச்சடா..!

ஆனால் பொதுப் பெட்டிகளில் தான் இதுவரை சந்தித்திராத கேரக்டர்களைக் காணலாம்.

மகாத்மா காந்தியின் மூன்றாம் வகுப்பு பயண அனுபவத்தைப் படியுங்களேன்.

சென்ற வாரம் ஊருக்குச் செல்லும் போது, ஒருவரைச் சந்தித்தேன்.

கொல்லம் கிறித்துவக் கல்லூரியில் பாஸ்டருக்கான படிப்பில் சேர்ந்து, முதலாண்டு படித்துக் கொண்டிருக்கும் காஞ்சிக் கோயிலைச் (கோபி அருகே!) சேர்ந்த... முத்துக் குமார்!

'ஆண்டவராகிய ஏசுகிறிஸ்து' என்று தான் குறிப்பிடுகிறார். மிகக் கொடும் வறுமையில் இருந்த குடும்பம் தந்தையின் எதிர்பாரா மரணத்திற்குப் பின், தடுமாறி, பின் கிறித்துவத்திற்கு மாறிய பின் தான் வறுமை ஒழிந்தது; வளம் பிறந்தது என்றார்.

ஏன், நீங்கள் இந்துக் கடவுள்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் வேறு மதம் தேடிய போது, இஸ்லாம், புத்தம், ஜைனம், சீக்கியம் என்றெல்லாம் போகாமல், கிறித்துவத்திற்குப் போனீர்கள் என்று கேட்டால், அவை எல்லாம் சரியல்ல என்றார். எப்படி உங்களுக்குத் தெரிந்தது என்று கேட்டால் மெளனம்.

பரலோகத்தில் இருந்து தேவன் வரும் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கின்றது; இப்போது நடப்பதெல்லாம் பைபிளில் ஏற்கனவே சொன்ன மாதிரி தான் நடந்து கொண்டிருக்கின்றது; CERN LHC முடிவுகள் மட்டும் தெரிய வரட்டும்; அப்புறம் பாருங்கள், எல்லோரும் பைபிளை ஒத்துக் கொள்வார்கள் என்றார்.

பிறகு எல்லோரும் கேட்கும் கேள்வியான, 'ஏன் உங்கள் இந்து மதத்தில் இத்தனை கடவுள்கள்; முப்பத்து முக்கோடி தேவர்கள் என்னத்திற்காக?' என்று கேட்டார். தெரிந்ததைச் சொன்னேன்.

மற்ற மதங்களைப் பற்றிப் படிப்பீர்களா என்று கேட்டதற்குச் சொன்னார் பாருங்கள்; கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அதில் தான் தெரிந்து கொண்டேன், ஜைன மத, புத்த மதக் கருத்துக்கள் எல்லாம் பைபிளில் இருந்து உருவப்பட்டவை; உதாரணம், 'அயலானிடத்தில் அன்பு வை' என்று ஆண்டவராகிய ஏசுபிரான் சொன்னார். அதையே தான் புத்தரும் 'அன்போடு இருங்கள்' என்றார். எப்படி திருடி இருக்கிறார்கள் பார்த்தீர்களா என்றார். என்ன சொல்ல..?

கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்கள் இருவரும் பேசிப் பேசிக் களைத்துப் போய் இறுதியாக ஒன்று சொன்னேன்.

'நீங்கள் மதம் மாறியதோ, அதன் காரணமாக பிற மதங்களைப் பழித்துப் பேசுவதோ எனக்குப் பிடித்தமாக இல்லை; ஆனால் நீங்கள் நண்பராகி இருக்கிறீர்கள். எனவே உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவது என் கடமை;

நீங்கள் சாதாரண கிறித்துவனாக இருந்தால் கவலை இல்லை; குதிரை கண்ணைக் கட்டியது போலவும், கிணற்றுத் தவளை போலவும் ஒரே மதத்தில் ஊறிக் கொண்டிருக்கலாம். ஆனால் பாஸ்டராகப் போகிறீர்கள் என்றால், நீங்கள் எல்லா மதக் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஏன் கடவுள் இல்லை என்ற பெரியாரின் கருத்துக்களையும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

அப்போது தான் நாளை உங்கள் பாஸ்டர் பணியில் உங்கள் டார்கெட்டை அடைய முடியும். எங்கே உங்கள் சுவிசேஷத்தைப் பரப்பப் போகிறீர்கள்..?'

'மூன்றாண்டு காலங்கள் முடித்து விட்டு, ஒரிஸ்ஸா போய் விடுவேன். அங்கே தான் சுவிசேஷம் பரப்ப வேண்டும். ஏனெனில் அங்கே தான் தேவை இருக்கின்றது!' என்றார் என்னைப் பார்க்காமல்!

சரி தான்.

ந்தப் புகைப்படத்தில் எதையாவது நீங்கள் காண்கிறீர்களா..?



சென்ற வாரக் குமுதத்தில், சுஜாதா பற்றிய தொடரில், கடைசியாக ரஞ்சன் இப்படி முடித்திருக்கிறார்.

நினைவுகளைச் சேர்த்து வைப்பது பற்றி தெரிந்திருந்தால், சுஜாதா ஒரு அறிவியல் கதை எழுதி இருந்தாலும் எழுதி இருப்பார்.

(வார்த்தைகள் சரியாக நினைவில்லை!)

அவருக்கு யாரேனும், 'பேசும் பொம்மைகள்' என்ற நாவலை வாத்தியார், டவுன்லோடிங் (மூளையில் இருந்து ஞாபகங்களைச் சேகரித்து வைத்தல்) வைத்து எழுதி விட்டார் என்று சொன்னால் நல்லது.

றிவுரை சொல்லுமாறும், புரட்சி ஓங்குமாறும் வெண்பா நான் எழுதுவதில்லை என்று நண்பர்கள் சொன்னதால், ஒரு கடின முயற்சியில் விளைந்த ஒன்று ::

தீதுமெதிர் நன்றுந் திரும்புமாடி முன்பினென
ஏது வரினும் எளிதெதிர்க்கொண்(டு) - யாதும்
மறவா திருக்குமாறு மண்ணில்நீ வாழ்ந்து
இறவாப் புகழினைச் சேர்!

Sunday, November 23, 2008

தும்..தும்..தன..தும்..தும்..தன..னன..னன...

03.Mar.2006

ந்தப் புன்னகையால் மனதைத் திறந்து மெல்ல நுழைந்தாய்?

எந்த ஸ்பரிசத்தால் தொடர்ந்து வருகிறாய் நிழலென?

எந்த கணத்தில் நிறைந்தாய் இதயந்தின் பள்ளங்களில் அமைதியான குளமாய்?

எந்த தனிமையின் நேரங்களில், என் இமைகளைப் பிளந்து கண்களின் பாப்பாவானாய்?

எந்த இரவின் தனிப் பயணங்களில் நகர்ந்து சென்றாய், ஓர் உயிரின் மேல் உடைந்த கண்ணாடித் துண்டுகளை வீசி விட்டு?

எந்த மழைநாளின் சாரல்களாய்த் தூறி விட்டுச் சென்றாய், நிறையாத பெரும் இரவில் நனையாமல் நகர்கின்ற வெண்ணிலவாய்?

எந்த நினைவுகளோடு நான் போராடிக் களைப்பது, தினம் உயிர் தின்னும், வெயில் வீசுகின்ற பகலில் காயும், முன் தினமழையில் முளைத்தாய் காளானாய்?

எந்த வார்த்தைகளை நான் அறைந்து கொள்வது, சிலுவையின் ஆணி நுனிகளில் உறைந்து வழிகின்ற சிவப்புத் துளிகளாய்?