ஹைதராபாத்துக்கு வந்து இன்றோடு ஒன்பது மாதங்கள் நிறைகின்றன. தங்கியிருக்கும் ‘மாதாப்பூர்’ என்ற ப்ரதேசத்தைப் பற்றிக் கொஞ்சம்.
சோம்பி வழிந்து கொண்டிருக்கும் முகப்பை விக்ரம் ஹாஸ்பிடல்காரர்கள் மாற்றி அமைத்துள்ளார்கள். ரிசப்ஷனை உள்ளே தள்ளி வைத்து குளு குளு பண்ணி, அட்டோமேடிக் கண்ணாடி கதவு வைத்து, எதிர்ப்புறம் காலி மனையை பார்க்கிங் ஆக்கியுள்ளனர். பாலீஷ் அடித்து சுவர்களைப் பளிங்காக்கிப் புது டிசைனில் போர்ட் வைத்து விட்டார்கள். மென்மையாக விளக்கு ஒளீர்கிறது. நீலச் சீருடை செக்யூரிட்டி சுவரோரமாக அமர்ந்து டிபன் பாக்ஸை உண்கிறார். பக்கத்தில் மனைவி.
சாலை மீடியனில் கோலங்கள் தீட்டிய மட்பாண்டங்களில் சின்னச் சின்ன செடிகளும், செயற்கை புல் விரிப்புகளூம் இருந்தன; காலை ஆறு மணிக்கு லாரி வாலில் நீர்ச் சிதறல்கள் அவற்றைக் குளிப்பாட்டும். இப்போது மெட்ரோ வருவதாக, குழி தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். வளைவில் ஒரே ஒரு கேரளா ஹோட்டல் இருந்தது. கட்டுப்படியாகவில்லையோ என்னவோ அது காலி செய்யப்பட்டு ஒரு பஞ்சாபி தாபா வந்திருக்கின்றது. HITECH ஒயின்ஸில் கூட்டம் அம்முகின்றது. பின்புறச் சந்துக்குள் போனால் சிகப்பாய் ஒரு சின்ன அம்மன் கோயில்.
கீழ்த்தளத்தில் உடுப்பி உணவகத்தில் சிங்கிள் தோஸா 25ரூபாய். மேலே அகர்வால் ஸ்வீட்ஸ். அங்கே எலெக்ட்ரிக் ஈக்கொல்லியின் ’ச்சிர்க்...ச்சிர்க்...’ ஒலிகளுக்கு இடையே வறு முந்திரி கிலோ 360ரூக்கு விற்கிறார்கள். வாசலிலே பானி பூரி வகையறாக்கள். சாலையை ஒட்டிச் சின்னக் கூடாரத்திற்குள் ஃபலூடா 40ரூ. எதிரே bawarchi. நிஜமான ஹைதராபாத் பிரியாணி நாங்கள் தருகிறோம் என்று சத்தியம் செய்கிறார்கள்.
ஸேவிங்ஸ் அக்கவுண்ட் ஆசாமிகளுக்கு ஆண்டுக்கு 100 ரூபாய் ப்ரீமியத்தில் விபத்து பாலிசி 4 லட்சம் வரைக்கும் என்று அறிவிக்கும் எஸ்.பி.ஐ.யின் நீல போர்டுக்குக் கீழே படர்ந்த படிக்கட்டுகளில் ஆறு மணிக்கு மேல் பையன்களும் பிள்ளைகளும் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்..... ஜிம் ஒன்று மூடிய திரைகளுக்குள் வேர்வையர்கள் ஏ.ஸி. குளிரில் நடக்கிறார்கள். வெளியே மைசூர் போண்டாவும், மசாலா தோசையும் ஆவி கிளம்ப ருசிக்கிறார்கள். கிராமத்தார் போல தோன்றிய ஆள் வாசமான வேர்க்கடலை 100 கிராம் 10ரூக்குத் தருகிறார்.
ஒரு தரைக்கீழ்த் தளத்தில் CHINA BAZAAR. கல்லாவில் ஒரு முஸ்லீம் தாத்தா. 10, dalhousie என்ற வங்காள ஹோட்டல் தொடரின் ஒரு கிளை முதல் தளத்தில் இருக்கின்றது. ராத்திரியிலும் சூடான வெள்ளை அரிசி மேல் மிகச் சூடான மீன் குழம்பு ஊற்றுகிறார்கள்.
ஏ.டி.எம்.கள் எந்நேரமும் ஒளிர்கின்றன. ஷேர் ஆட்டோக்கள் முடிந்த வரை அமர முடிந்தவரையெல்லாம் ஏற்றிக் கொண்டு பறக்கின்றன. அந்த செருப்பு தைப்பவரின் சாக்கு மூலையில் ட்ராஃபிக் காவலரைக் கண்டால் மட்டும் முன் வரிசையில் அமர்ந்திருப்பவரை இறக்கி விட்டு, தாண்டியவுடன் ஏற்றிக் கொள்கிறார்கள். சர்வீஸ் ரோடு இல்லாத குறையை வலது புறமாகவே ஓட்டித் தீர்க்கிறார்கள். சில சமயம் திக்கென்கிறது. weigh bridge-ல் லாரிகள் அர்த்த ஜாமத்தில் வந்து எடை பார்த்துச் செல்கின்றன.
மே இறுதி வரை வெளுத்துக் கொளுத்திக் கொண்டிருந்த வெயில் ஜூன் பிறந்ததும் காணாமல் போய், தாமரை மொட்டுக்கள் போன்ற முகில்கள் தலைக்கு மேலே தவழ்கின்றன. மைண்ட்ஸ்பேசின் பின் கதவைத் திறந்து விட்டதில், இரண்டு பெட்டிக் கடைகள் உடனே முளைத்து சிகரெட் மற்றும் ஃப்ளாஸ்க்கில் டீ கொடுக்கிறார்கள். எல்லை தெரியாத பின்புறம் சாணி ஒட்டிய இரண்டு எருமைகள் செயற்கைப் புல்வெளிகளை சுவைத்து மகிழ்வதற்குள் எஃப்.எம்.களில் ஹிந்தியும் தெலுங்கும் பாடல்களும் பேச்சுகளும் கேட்டுக் கொண்டிருக்கும் தொப்பை செக்யூரிட்டிகளால் விரட்டப்பட்டன.
கிட்டத்தட்ட 1000 கிமீ தள்ளி இருந்தாலும் ‘இதுவும் நம் ஊர் தான்’ என்று ஆசுவாசப்படுத்துபவை இரண்டு. சைபர் டவர்ஸ் அருகில் இருக்கும் பெருமாள் கோயில் மற்றும் தெருவெல்லாம் திரியும் நாய்கள். இரவு பதினோரு மணிக்கு மேல் அவற்றின் ராஜாங்கத்தில் கால் வரை முகர்ந்து பார்ப்பதன் நோக்கத்தைச் சந்தேகிக்காமல் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.
தூக்கம் வராத நேரத்தில் ரிமோட்டை மாற்றுகையில் வர்ணக் கோலாகலமான Colors, Life Ok போன்ற சானல்களைப் பார்த்திருக்கிறீர்களா..? அவற்றில் வருகின்ற ராமாயணத்தில் ஏன் ராமன் அவ்வளவு இறுக்கமாக இருக்கிறார்? சிக்ஸ் பேக் சிவன்..? அதீத அலங்கார சீதா..?
All her life, Mrs Foster had had an almost pathological fear of missing a train, a plane, a boat, or even a theatre curtain. In other respects, she was not a particularly nervous woman, but the mere thought of being late on occasions like these would throw her into such a state of nerves that she would begin to twitch.
சமீபத்தில் நூலகத்திலிருந்து எடுத்து வந்த ‘the completed short stories collection of roald dahl' என்ற நூலிலிருந்த ஒரு சிறுகதையின் துவக்கம் இது.
நம் காதுகள் கேட்கும் ஒலியின் அதிர்வெண் அகலம் என்பது 20 ஹெர்ட்ஸிலிருந்து 20கிஹெர்ட்ஸ் வரை என்பதை எட்டாம் வகுப்பில் ஒரு மதிப்பெண் விடையாகப் படித்திருப்போம். நைகிஸ்ட் என்பவர் ஆராய்ந்து சொன்னது ஓர் ஒலி அலையை டிஜிட்டலாக மாற்றி மீண்டும் அதை (கிட்டத்தட்ட!) அதே ஒலியாகக் கேட்க வேண்டுமெனில், அந்த ஒலி அலையின் அதிகபட்சமான அதிர்வெண்ணுக்கு இரண்டு மடங்கான அளவில் ஒலி மாதிரிகள் எடுக்க வேண்டும் என்றார். அதாவது நம் பேச்சில் இருக்கும் அலைகளில் அதிகபட்ச அதிர்வெண் 4கிஹெர்ட்ஸ். எனவே அதை டிஜிட்டலாக மாற்ற வேண்டுமெனில் குறைந்தபட்சம் 8கிஹெர்ட்ஸ் (ஒரு நொடிக்கு 8000 மாதிரிகள்) அளவில் ஒலி மாதிரிகள் எடுக்க வேண்டும்.
இப்போது ஒரு கேள்வி.
நம்மால் கேட்க முடிவதே அதிகபட்சம் 20கிஹெர்ட்ஸ் தான் என்னும் போது, அதிக பட்சமாக 40கிஹெர்ட்ஸ் (ஒரு நொடிக்கு 40000 ஒலி மாதிரிகள்) எடுத்தாலே போதும் எனும் போது, ஏன் DTS போன்ற அல்காரிதம்களில் 192கிஹெர்ட்ஸ் வரைக்கும் செல்கிறார்கள்?
ஏனெனில் அதிகமாக மாதிரிகள் எடுக்க எடுக்க ஒலித் துல்லியம் அதிகரிக்கின்றது. ஆனால் அதிகமாக எடுத்தால் அதைச் சேமிக்க நினைவக அளவு அதிகம் தேவைப்படும். குறைவாக எடுத்தால் ஒலியின் துல்லியம் பாதிக்கப்படும். என்ன செய்வது? Trade Off. நினைவக அளவும் அதிகம் தேவைப்படாமல், கேட்கும் ஒலியின் துல்லியமும் ரொம்பவும் அடிபடாமல் ஒரு சமநிலையில் தான் வேலை செய்யப்படுகின்றது.
’சமரசம் உலாவும் இடம்’ என்பது சயின்ஸிலும் கூடத் தான்!