ஊர் நுழைவாயிலில் ஒரு பேருந்து நிறுத்தம் இருக்கின்றது. சுற்றிலும் திட்டுக்கள் வைத்து மேலே தகரக் கூரை போட்டிருக்கும். பக்கத்தில் எப்போது ஒரு செத்த நாய் படுத்திருக்கும். ஊருக்குச் செல்லும் பாதைக்கு அந்தப்பக்கம் ஒரு கறிக்கடை இருந்தது. ஆடு மற்றும் கோழிக்கறிகள் கிடைக்கும். ஞாயிறுகளில் ரத்தம் பாயும். இப்போது அந்தக்கடை இல்லை. ரெண்டு ஸ்டாப்பிங்கிற்கு முன்னால் இன்னும் கொஞ்சம் மக்கள் அதிகமாக உள்ள ஊருக்குப் போய் விட்டது. இந்த நாய் அந்தக் கடை இருந்த வரை அங்கே சிந்தியது சிதறியதைக் கொறித்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருந்தது. ஒரு ராத்திரியில் கடையைக் காலி செய்து போய் விட, இது இன்னும் வற்றி விட்டிருக்கின்றது. மதிய நேரங்களில் சாத்திய கதவுகளின் கருணையை எதிர்பார்த்துச் சுற்றி வரும். மற்றபடி நிறுத்தத்தின் ஓரத்தில் சுருண்டு கிடக்கும். சென்ற வாரம் பொங்கல் நாட்களில் அது கீச்..கீச்சென்று முனகிக் கொண்டே இடத்தை காலி செய்து கொடுக்க அந்தப் பகுதியே அமர்க்களப்பட்டது.
ஏரியாவைச் சுற்றி முதலில் கூட்டிக் குப்பைகள் அகற்றப்பட்டன. தண்ணீர் தெளித்து ஈரப்படுத்தினர். தகரக் கொட்டகை விளிம்புகளில் முக்கோண கலர்க் காகிதங்கள் வரிசையாக ஒட்டப்பட்டன. டேபிள்.சேர்கள். ஓரமாய் ஃப்ளக்ஸ் பேனர். கீழே ப்ளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டன. நிறுத்தத்தின் உள்ளே டேபிளி வெட்டிய கரும்புகள். ஜோடி ரூ.50 வகையிலானவை. ஒரு இரும்பு சேரை இழுத்துப் போட்டு ட்ரம் நிறைய தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டது. தென்னை மரங்கள் ஒரு கொத்திருந்த ஓரத்தில் கம்பங்கள் நட்டு ப்ளக்ஸ் பேனர் கட்டப்பட்டது. அதில் ராஜ அலங்காரத்தில் பழனிமுருகனின் உருவம் பதித்திருக்க, கீழே ஸ்பான்ஸரர்கள் கட்டம் கட்டப்பட்டிருந்தனர். கொமாரபாளையத்திலிருந்து கோன் ஸ்பீக்கர் செட் வாடகைக்கு எடுக்கப்பட்டு, ரோட்டின் இருபுறமு, இரண்டிரண்டு எலெக்ட்ரிக் கம்பங்களில் கட்டப்பட்டன. அங்கிருந்தே எடுத்த ஒயரில் கனெக்ஷன் கொடுக்கப்பட்டு, ஸ்பீக்கரில் பாடல் ஓடத் தொடங்கியது.
'ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து
நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை
எங்கள் தமிழ் திரு நாடு கண்ட சுவாமி மலை
எங்கள் தமிழ் திரு நாடு கண்ட சுவாமி மலை'
பொங்கலை ஒட்டி வருகின்ற தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நிறைய முருகபக்தர்கள் பழனிமலைக்குப் பாதயாத்திரை போவார்கள் என்பதை வெறும் தகவலாக மட்டுமே கேள்விப்பட்டிருந்தவன், இம்முறை நேரடியாகப் பார்க்க முடிந்தது. கும்பல் குமபலாக, இரண்டு மூன்று நண்பர்கள் மட்டுமாக, சிலசமயம் தன்னந்தனியாக என்று வெரைட்டியாக கண்டேன். சிறுவர்களும் மேல்சட்டையின்றி முருகன் டாலர்களுடன் நடக்கிறார்கள். தலை நரைத்த, குப்பல் குப்பலான தாடியுடன் ஒரு பெரியவர் தட்டில் முருகன் படங்கள், திருநீறு, மயிலிறகுகளைச் சுமந்து வழியெங்கும் காணிக்கை பெற்று நடக்கிறார். இளைஞர்கள் செருப்பில்லாத கால்களோடு தோளில் நீல அல்லது கறுப்புப் பையில் டேப் ரிக்கார்டரோடு நடக்கிறார்கள். உள்ளே செல்போனும் இருக்கும். முண்டாசு கட்டிக் கொள்கிறார்கள். காவடி எடுத்துப் போகிறார்கள். பெரும்பாலும் தண்டுக் காவடி. அப்படி போவோர்க்கு வழியெங்கும் களைப்பு காத்திருக்கும். அதை நீக்கத் தம்மாலான சிறு உதவியாக கிராமங்களில் பந்தல் கட்டி இது போல் நீரோ, கரும்போ, மோரோ கொடுக்கிறார்கள் 'பழ்னி பாதயாத்திரை விழாக் கமிட்டியினர்'.
வந்த எல்லோருக்கும் டீ, காபி, ட்ரம் தளும்பத் தளும்பத் தண்ணீர் அள்ளி அள்ளிக் கொடுத்து, கரும்பை உறிஞ்சிக் கொள்ளத் தந்துத் தந்துத் தீர்த்து விட, இரண்டு நாட்கள் கழித்துப் பார்த்தால், அலங்காரங்கள் கலையப்பட்ட பேருந்து நிறுத்தத்தைச் சுற்றிலும் கரும்புச் சக்கைகளும், பேப்பர் கப்புகளுமாகக் குவிந்து கிடந்தன. அந்த செத்த நாயைக் காணவில்லை.
புதன்கிழமை இரவு ஏதேனும் படம் பார்க்கலாம் என்று முடிவு செய்து டி.வி.டி. கலெக்ஷனைப் புரட்டிக் கொண்டிருந்த போது கிடைத்த ஒன்றை அவளிடம் காட்ட 'ஓ.கே.' என்றாள். The Color of Paradise.
ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் படம் இது. ஒரு பார்வையற்ற பையனைச் சுற்றி நடக்கின்ற கதை. ஏற்கனவே அவருடைய Children of Heaven பார்த்திருந்தேன். சமீபத்தின் சோனி பிக்ஸில் கடைசி கொஞ்சம் Taare Jameen Par பார்த்த போது மீன் தொட்டியில் கொப்புளக் கால்களை நனைத்து விளையாடும் டிலக்ஸியா பையன் அப்படியே ஹெவன் படத்து அண்ணனைப் போல் இருந்தது அமீர்கானையும் மற்றொரு கமல் என்று சொல்வது உண்மை தானோ என்ற கேள்வி எழுப்பியது.இது மற்றுமொரு மனதை உருக்கும் கதை. எனினும் அழுது கொண்டே இருக்கத் தேவையில்லாமல், மொஹமதின் இயற்கையை நாமும் சேர்ந்து ரசிக்கலாம். விக்கியில் பார்க்கச் சொல்லலாம் என்றால் இது தான் பிரச்னை. முழுக் கதையையும் சொல்லி விடுகிறார்கள். எனவே காணும் அனுபவம் கொஞ்சம் குறைபட்டுப் போகின்றது. உலகப் படம் பார்க்க விரும்புபவர்கள் எளிமையான இது போன்ற படங்களிலிருந்து துவங்கலாம் என்பது என் தாட். Dot.
ஒரு வெண்பா எழுத ஆசை.
முதல்வருக்கும் ஆளுனர்க்கும் முட்டினால் கட்சிப்
புதல்வரை விட்டுப்பே சாமல் - நிதம்நிதம்
நூறுநூறு மக்கள் நகர்ந்துபோம் பேருந்தை
ஊறுசெய்தல் ஊருக்குக் கேடு.