Wednesday, February 04, 2009

ஆகாயப் பந்தல் - கடக்கும் நூற்றாண்டின் காலடிகள்.

சென்ற முறை திருச்சியில் இருந்து 'திரிச்சி' வரும் போது, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில், ஒரு குப்பைத் தொட்டியின் அருகே அமர்ந்தவாறு பேசிக் கொண்டிருந்த போது, நண்பர் தமிழ்ப்பறவை சில புத்தகங்கள் கொடுத்தார். அவற்றுள் ஒன்று இந்நூல் - ஆகாயப்பந்தல்.

முப்பது எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பாகத் தந்துள்ளார் எஸ்.ஷங்கரநாராயணன்.

டாக்டர் சு.வேங்கடராமன் ஐந்தாம் பக்கத்தில் ஆரம்பித்து சிறுகதையைப் பற்றியும், அதன் இலக்கிய இலக்கணங்களைப் பற்றியும் எடுத்துக் கூறி விட்டு, எல்லோரையும் போல் புதுமைப்பித்தன், கு.ப.ரா.வில் துவங்கி மெளனி. சிட்டி, மணிக்கொடி காலங்கள், லா.ச.ரா, கல்கி, தி.ஜா., கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன், சு.ரா., வரை சொல்லி விட்டு, யாரையாவது சொல்லாமல் விட்டு விட்டோமோ என்று கவலைப்பட்டு விட்டு, 'மேலே நான் காட்டியவர்கள் மட்டுமே சாதனைக்காரர்கள் என்று முடிவுகட்டி விடக் கூடாது.' என்று தப்பித்து விடுகிறார். பின், ஓவ்வொருவர் எழுதிய கதைகளையும் முழுதாகச் சொல்லி (இப்படி செய்யவே கூடாது என்பது என் தாழ் எண்ணம்..!) விளக்கி, இருபத்தெட்டாம் பக்கத்தில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் சொல்லி முடிக்கிறார்.

பொழுது விடியட்டும் (கண்ணன் மகேஷ்), ஒளியற்ற பிரதேசத்தில் (மோகனன்), தம்பி (கெளதம சித்தார்த்தன்), மத்தேயு 11:28 (அ.எக்பர்ட் சச்சிதானந்தன்), நனையத் தோன்றுகிறவர்கள் (கார்த்திகா ராஜ்குமார்), ரசிகர் (கர்ணன்), ஒட்டடைத் தாத்தா (ஞானசூரியன்), கை குலுக்க நிறைய சந்தர்ப்பங்கள் (சுப்ர பாரதிமணியன்), பேசுதல் (பாவண்ணன்) ஆகிய கதைகள் எனக்கு இரண்டு வேலை நாட்களுக்குப் பிறகும் நினைத்திருந்தன.

முதல் பரிசைக் கொடுப்பாயா என்று கேட்டால், 'இரண்டாய்த் தருவீர்களா?' என்று கேட்டு விட்டு, எக்பர்ட்டுக்கும் கார்த்திகாவுக்கும் கொடுப்பேன்.

வடிவத்தில் கொஞ்சம் வித்தியாசம் கதையாக, ஜோசப் லூயிஸின் 'அம்மா சொல்லியிருக்கக் கூடிய கதை' (ஒவ்வொரு பக்கத்திற்கும் சில பத்திகளில் ஒரு வார்த்தைக்கு எண் குறிப்பு இட்டு, கீழே parallel story தனியாக ஓடுகின்றது. )மற்றும் allegoriel story ஆக வரும் ஜெயடேவியின் 'எறும்புகள்' கதையும் இருந்தன.

புத்தகம் : ஆகாயப் பந்தல் - கடக்கும் நூற்றாண்டின் காலடிகள்.

புத்தக வகை : சிறுகதைத் தொகுப்பு.

ஆசிரியர் : எஸ்.ஷங்கரநாராயணன் (தொகுப்பு).

கிடைக்குமிடம் : உதயகண்ணன்,
புதிய எண் : 10, கல்யாணசுந்தரம் வீதி,
பெரம்பூர், சென்னை - 21.

பதிப்பகம் : உதயகண்ணன்,
புதிய எண் : 10, கல்யாணசுந்தரம் வீதி,
பெரம்பூர், சென்னை - 21.

விலை : 125 ரூ.