Thursday, August 14, 2008

மணி விழா +2.



பாரத தேசத்திற்கு இனிய சுதந்திர நன்னாள் வாழ்த்துக்கள்.

இந்நன்னாளில் என்ன செய்யலாம்?

சில உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளலாம்.

அ. முதலில் ப்ளாஸ்டிக் விவகாரம். குப்பைகளில் மிக அதிகமாக இடம் பிடிக்கின்ற வஸ்து ப்ளாஸ்டிக். இதன் உபயோகிப்பை எப்படி குறைக்கலாம்? ஒவ்வொரு முறை கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும் வாங்குகின்ற ப்ளாஸ்டிக் பைகள் வாங்குகிறோம். அதற்குப் பதிலாக ஒரு முறை வாங்கிய ப்ளாஸ்டிக் பையையே மறுபடியும், மறுபடியும் உபயோகப்படுத்தினால் என்ன? மறு உபயோகப்படுத்துவோம்.

அதிகமாக அதிகமாக வீட்டிலும் குப்பை. நாட்டிலும் குப்பை. சுற்றுப்புறத்திற்கும் சீர்கேடு.

ஆ. பீடி, சிகரெட் உபயோகம். கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயல்வோம். ஒரு நாளில் 20 முறை குடிக்கிறோம் எனில் அதை 10 முறை என்று குறைக்க முயற்சி செய்வோம். புகை பிடிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும் போது அதை நிறுத்தி, 'அடுத்த முறை புகைக்கும் உணர்வு தோன்றுகையில் பிடிக்கிறேன்' என்று தள்ளிப் போடுவோம்.

என்ன பயன்? உடல்நலம் கெட்டுப் போவது கொஞ்சம் தள்ளிப் போகும். பாக்கெட்டில் இருந்து பைசா குறைவது கொஞ்சம் தள்ளிப் போகும். காற்று மாசுபடுவது கொஞ்சம் குறையும்.

இ. சாராயம் குடித்தல். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இப்பழக்கத்தை விடுவதும் தொடர்வதும் அவரவர் முடிவு! ஆனால் நாம் கவலைப்படுவது குடித்த பின் பாட்டிலகளை என்ன செய்கிறோம் என்பதே! அப்படியே குடித்த இடத்திலேயே போட்டு விட்டு வருவது இடத்திற்கும் குப்பை; நம் பைசாவுக்கும் இழப்பு. பின்னே, நாம் பாட்டிலுக்கும் சேர்த்து தானே பைசா கொடுக்கிறோம். எனவே குடித்து முடித்த பின் பாட்டில்களை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வருவோம். பாட்டில் பொறுக்கும் பாரதச் சிறார்கள் வருகையில் அவர்களுக்கு கொடுத்தால் இரண்டு இட்லிக்கு ஆகும். எடைக்கு போட்டால் கஷ்ட காலங்களில் சிறு துரும்பாய் உதவும்.



ஈ. தெருவில் துப்புதல். மிக மிக அவசரத்தை தவிர நாம் தெருவில் பலர் பார்க்க சிறுநீரோ, மலமோ கழிப்போமா? மாட்டோல் அல்லவா? எச்சில் துப்புதலும் அத்தகைய ஒரு செயல் தானே? அதை மட்டும் ஏன் செய்கிறோம். அதையும் நிறுத்துவோமா? தாய்நாடு என்கிறோம். ஆனால் அதன் முகத்திலேயே துப்புதல் என்ன நியாயம்? மிகக் குழந்தையாய் இருக்கையில் தாயின் மீதே சிறுநீர் அடித்திருப்போம். அவர் நமது கழிவுகளை சுத்தம் செய்திருப்பார். ஆனால் தாயின் மேல் 'த்தூ..."என்று எச்சில் துப்பி இருப்போமா?

உ. சிக்கனம். வீட்டை விட்டு கிளம்பும் போது ஜன்னல்கள், பின் கதவு எல்லாம் சாத்தியாகி விட்டதா என்று செக் செய்யும் போது, அப்படியே எல்லா ஸ்விட்சுகளும் அணைக்கப்பட்டு விட்டதா, கேஸ் இறுக்க மூடப்பட்டு விட்டதா வாட்டர் டேப்புகள் மூடப்பட்டு விட்டதா என்று தவறாமல் உறுதிப்படுத்திக் கொள்வோம். குறிப்பாக மின்சாரம் இல்லாமல் போன பின்பும், பைப்பில் தண்ணீர் வராமல் இருக்கும் போதும் வெளியே கிளம்ப நேரிட்டால் மறக்காமல் இந்த சோதனைகளை செய்து விட்டே கிளம்புவோம்.

என்ன பலன்?

நாட்டிற்கு எரிபொருள் கொஞ்சூண்டு மிச்சம். நமக்கு கரண்டு பில், வாட்டர் பில் தக்குணூண்டு மிச்சம்.



ஊ. கணிணி முன் அமர்ந்து வேலை செய்பவராயின் சீட்டை விட்டு வெளியே போகும் போது, மானிட்டரை அணைத்து விட்டு செல்வோம். பலமுறை பட்டன் அழுத்தப்படுவதால் அது பயனற்றுப் போகும் வாய்ப்பு இருக்கின்றது என்பவர்களுக்கு, பட்டன் போனால் பட்டன் வரும்; பவர் போனால் பவர் அது திரும்பி வருமா?

எ. முடிந்த அளவிற்கு நம்மிடம் இருக்கும் பொருட்களை ரீ-யூஸ் செய்யும் வழிகளை சிந்திப்போம். பனியன் - > பழசாகி, கரித்துணி -> அழுக்காகி சைக்கிள் துடைப்பான் -> இன்னும் அழுக்காகி -> ஒட்டடைக் கம்பு நுனி. ஒரு பேப்பரின் எல்லா பக்கங்களையும் எழுதி தீர்க்கப் பார்ப்போம். வீட்டில் சும்மா இருக்கையில் எதையாவது கிறுக்க வேண்டும் போல் இருந்தால், சிலேட்டு, பல்ப்பம் பயன்படுத்தலாமே! (சிரிக்காதீர்கள்! முயலலாம், தவறில்லை.) நீங்கள் இன்னும் யோசித்தால் இது போல் உபயோகமான பல ஐடியாக்கள் கிடைக்கும்.

ஏ. சுதந்திரத் திருநாளில் மிக அவசியமாக ஒன்று செய்வோம். நம்மால் முடிந்த அளவிற்கு ஒரு சின்ன செடி நடலாம். மரமோ, செடியோ, கொடியோ, பயறோ எதாவது ஒன்று! அழுகிப் போன தக்காளியைப் பிழிந்து போட்டு, நான்கு நாட்கள் தண்ணீர் ஊற்றினால் தக்காளிச் செடி நமக்கு! கம்பு, அவரை விதை, கத்திரிக்காய் விதை, பூசணி விதை, பூச்செடிகள்... ஏதாவது வைப்போம். சுற்றுப்புறச் சீர்கேட்டிற்கு நம்மால் முடிந்த நல்லது இது தான். நமக்கும் கடைகளில் வாங்காமல் கையிலேயே கறிகாய்கள் இருப்பது போல் ஆச்சு.

ஐ. காலையில் கொஞ்ச நேரம், ஒரு ஐந்து நிமிஷம் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பெரியவர்களை (நீங்கள் யாரை நினைத்துக் கொண்டாலும் சரி! காந்தியோ, பகத் சிங்கோ, அம்பேத்கரோ!) நினைத்துப் பார்ப்போம். இவர்கள் அளவிற்கு நம்மால் செய்ய முடியா விட்டாலும், நம்மால் செய்ய முடிந்த சின்னச் சின்ன விஷயங்களில் அப்பெரியவர்கள் காட்டிய ஆழ்ந்த உழைப்பை கொண்டு வர முடிந்தால் போதும். பிறகு தொலைக்காட்சியில் தொலைந்து போகலாம்.

தெருவில் போடப்பட்டு இருக்கும் சாகக் கிடக்கும் பீடித்துண்டை செருப்புக் கால்களால் மிதித்துக் கொல்லலாம். பின்னால் வெறுங்கால்கள் வரலாம். அது உங்கள் மகனுடையதாகவும் இருக்கலாம். வருடத்திற்கு நான்கு முறைகள் முடியாவிட்டால் குறைந்தது இரு முறையாவது இரத்த தானம் செய்யலாம். அது உங்கள் நாட்டின் சகோதரனுக்காக இருக்கலாம்.

நீங்களும் இது போல் சிந்தித்தால் நிறைய தோன்றும். பத்தில் இரண்டாவது செய்தால், நாட்டிற்கு நான் இது செய்தேன் என்று சர்ச்சிலுக்கு தைரியமாக ஈ-மெயில் அனுப்பலாம்.



இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை (வந்தே)

வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்தாடும் இரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை! (வந்தே)

முப்பது கோடி வாய் (நின்னிசை) முழங்கவும்
அறுபதுகோடி தோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அறுந்திற லுடையாய்! அருளினைப் போற்றி!
பெருந்தலர் படைப்புறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே)

நீயே வித்தை நீயே தருமம்!
நீயே இதயம் நீயே மருமம்
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே (வந்தே)

தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவியிங் குனதே (வந்தே)

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ!
வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ! (வந்தே)

போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை!
இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
சாமள நிறத்தினை சரளமாத் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை
தரித் தெமைக் காப்பாய், தாயே; போற்றி (வந்தே)

(பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயரின் வந்தே மாதரத்தின் மொழிபெயர்ப்பு - மகாகவி பாரதி)

வாழிய செந்தமிழ்

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!

அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தேமாதரம்!

- மகாகவி பாரதி


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Tuesday, August 12, 2008

ஈரோடு நூல் அழகம்.

சேதன் பகத்தின் 5PS படித்து அசந்து, One night @ the call centre மற்றும் The 3 mistakes of my life வாங்கினேன். One Night... ஓரிரவில் கொஞ்சம் தான் படித்தேன். அதற்கு மேல் படிக்கவில்லை. ஆனால் 3 Mistakes ஒரே சிட்டிங்கில் படிக்கவில்லை என்றாலும், இரண்டு சிட்டிங்கில் முடித்தேன். அருமையாக இருந்தது. கதையோட்டம் தெளிவாக ஓடிக் கொண்டே இருந்தது. க்ளைமாக்ஸ் அபாரம். கொஞ்சம் Controversial இஷ்யூவாக எடுத்து பக்காவாக பேக் செய்து கொடுத்துள்ளார். அடுத்த நாவலை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். அதற்கு முன் முதல் இரு நாவல்களையும் இந்தி படமாக எடுக்கிறார்களாம். முறையே அமீர், சல்மான் என்ற கான்களை வைத்து..! பயமாய் இருக்கிறது.

சென்ற வெள்ளி சென்னை எக்ஸ்ப்ரஸில் ஊருக்குச் சென்றேன். செல்லும் வழியெங்கும் வித,விதமாக படுத்து புரண்டு 3 Mistakes படித்து முடித்தேன். அவ்வப்போது எலி கம்பார்ட்மெண்டுகளுக்கு இடையே ஓடிக் கொண்டிருந்தது அவ்வப்போது டிஸ்டர்ப் செய்த்தது. அது ஒரே எலி தானா? வெவ்வேறு எலிகளா? அவை என்ன நினைத்துக் கொண்டிருக்கும்? அவை பயணம் செய்யும் ரயில் ஓடிக் கொண்டிருப்பதை அறியுமா? ஜன்னல் வழி பார்த்து மரங்கள், எலெக்ட்ரிக் போஸ்டுகள், நதிப்பலங்கள் பின்புறமாக 80 கி.மீ. வேகத்தில் பின்புறமாய் நழுவுவதை பார்த்து என்ன எண்ணும்? இச்சூழலில் இரண்டு எலிகள் என்ன பேசிக் கொள்ளும்?

ஒரு
கற்பனை
.அது கடைசியில்.

னிக்கிழமை மாலை முழுதும் ஈரோடு நூல் அழகத்தில் கழிந்தது. வழக்கம் போல் 3Kக்கு பக்கத்தில் (உஷ்... எங்க அம்மாகிட்ட சொல்லிடாதீங்க..!) புத்தகங்கள் வாங்கினேன். என்ன என்ன வாங்கினேன் என்று லிஸ்ட் போடலாம். ஆனால் எதற்கு ஒரே பதிவிலேயே அவ்வளவு பந்தா பண்ணிக் கொள்ள வேண்டும்? ஒவ்வொன்றாக படித்துப் படித்து ஒவ்வொரு போஸ்டிலும் சொல்லுகிறேனே!

டீயை சிப், சிப்பாக அருந்து என்கிறது ஜென் ப்ரின்ஸிபிள்!

புத்தகங்களை எக்கச்சக்கமான பாலிதீன் கவர்களில் திணித்து, கை விரல்களில் சிக்கிக் கொண்டு, களைத்து வெளியே போவதற்கு முன், சென்டர் ஸ்டேஜைப் பார்த்தால் அவ்வளவு கூட்டம். சிவகுமார் அன்று பேசுகிறார். தூரத்தில் கொஞ்சம் பெரிய புள்ளிகளாகத் தெரிந்தனர், ஸ்டேஜ் மக்கள்.

பள்ளி மாணவர்கள், மாணவியர் கூட்டம் சென்னையை விட நிறைய! கொஞ்சம் பெருமிதத்தால் நெஞ்சம் விம்மியது என்று சொன்னால் க்ளிஷே என்பீர்கள்.

வழமை போல் சமையல் மற்றும் சாமி புத்தகங்கள் அமோக விற்பனை என்று பட்டது. இப்போது கொஞ்சம் நானும் எலக்கியவாதி என்ற நினைப்பில் உயிர்மை, காலச்சுவடு போன்ற கூட்டம் மீக்குறை அவ்வளவாக கூட இல்லாத ஸ்டால்களுக்கு சென்று சில புத்தகங்களை எடுத்து, கிடைக்கவே கிடைக்காத தி.ஜா.வின் மோகமுள் கிடைக்குமா, நீ.ப.வின் பள்ளி கொண்டபுரம்..? என்று கேட்டேன். ஒரு மாதிரி பார்த்தார்கள்.

'சார்...(தம்பி போயிடுச்சு. இப்பெல்லாம் சார் தான்.. ;-( )நீங்க எந்த ஊரு?',

'ஏன்.. ஈரோட்டுக்காரன்னா இந்த புக்கெல்லாம் வாங்க மாட்டானா..?'

'அதுக்கில்ல.. நீங்க மீனாட்சில ட்ரை பண்ணிப் பாருங்க..'

உயிர்மையில் கேட்டால் 'காலச்சுவடுல பாருங்களேன்...'

அங்கே கேட்டால், 'உயிர்மையில கேட்டீங்களா..?'

விகடன் ஸ்டாலில் ஒரு குட்டிப் பையன் (6 வயது?) 'சிவாஜிராவ் முதல் சிவாஜி வரை'யை கவர் பிரித்து அப்பாவை நோக்கிச் சென்றான். ப்ராடிகியிலும் குழந்தைகள் கூட்டம் அப்பியது. மற்ற ஸ்டால்களிலும் நிறைய மக்கள். சென்னை மாடலில் தான் இருந்தது. எனக்கே ஆச்சரியம். இம்முறை விகடன், குமுதம் ஸ்டால்களில் நான் எதுவும் வாங்கவில்லை. கொஞ்சம் அடுத்த ஸ்டெப்புக்கு போய் இருக்கிறோமோ என்று அகங்காரம் வந்திருக்கிறது.

கிழக்கு வருவதற்குள் சளைத்து, பர்ஸ் இளைத்து விட்டதால் போய் பார்க்கவில்லை. உண்மையை சொன்னால் கிழக்கு என் கண்ணிற்கே தெரியவில்லை. நலம், ப்ராடிகி தெரிந்தது. சரி.. சென்னையில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டேன்.

அம்மாவையும் அடுத்த வீட்டு காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் பெண்ணையும் கூட்டி வந்ததில் அவர்கள் கையிலும் கொஞ்சம் மூட்டையை கொடுத்ததில் மிகவும் டய்ர்டாகி போனார்கள். சிவகுமார் அவர்களின் பேச்சைக் கூட கேட்காமல் வெளியேறினோம்.

உளுந்தங்கஞ்சி குடிக்கலாம் என்று தள்ளுவண்டிகளில் ஒன்றுக்கு போனால், அங்கே கறுப்பு தேநீர் சட்டையில் ஒரு சிறு கூட்டம். பார்த்தால் பத்ரி அண்ட் கோ. கொஞ்சம் அவருடன் பேசினேன். மற்றவர்களை அறிமுகமித்தார். மருதன், கண்ணன் பேர் மட்டும் ஞாபகம் இருக்கின்றது. மற்றவர்கள்

ஸாரி.



வெல்லம் போட்ட உளுந்தங்கஞ்சி வாங்கி குடித்துக் கொண்டே இருந்தார் பத்ரி. பா.ரா.வும் வந்திருக்கிறார். அழகம் உள்ளே சென்றிருக்கிறார் என்றார். எனக்கு மீ களைப்பாக இருந்ததால், இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களிடம் விடை பெற்று, வேறொரு த.வண்டியில் கம்பங்கூழ் ஒரு சொம்பு, மோர் ஒரு சொம்பு (ஒன்ஸ் மோர் ப்ளீஸ்!) குடித்து விட்டு வ.உ.சி. பூங்காவில் அமர்ந்தோம்.

வாங்கி வந்த புத்தகங்களை எல்லாம் அம்மா பார்த்து விட்டு, 'இந்த புக்கெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்?' என்று கேட்டார்கள். உதா: ஆ.மாதவன் அவர்களின் கிருஷ்ணப் பருந்து. 'பலமுக மன்னன் ஜோ படித்த சிறுவன் நீ!' என்று பார்த்தார்கள்.

வீட்டிற்கு வந்து எல்லா நூல்களிலும் பெயர், தேதி, வாங்கிய இடம் எழுதும் போது, இன்றைய பர்ச்சேஸ் வாத்தியாருக்காக என்று தெரிந்தது.

வாத்தியாரின் என்னென்ன புக்ஸ்? ::

கணையாழி கடைசிப் பக்கங்கள்.

நானோ டெக்னாலஜி.

பதவிக்காக.

நிலா நிழல்.

பேசும் பொம்மைகள்.

ரத்தம் ஒரே நிறம்.

வண்ணத்துப்பூச்சி வேட்டை.

60 அமெரிக்க நாட்கள்.

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்.

விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு.

ன்பான பெரியோர்களே... பாசமான தாய்மார்களே... கண்ணுங்களே.. தமிழ் வாழ்க... கலை வாழ்க, வந்தாரை வாழ வைக்கின்ற பவானி நகரில் சொக்காரம்மன் நகர், செங்காட்டில் இருக்கின்ற ஜனங்களே... வார்டு மெம்ப திரு... இடம் கொடுத்து உதவிய திருமதி.... எல்லார்ர்க்கும் வணக்கம். தொடர்ச்சியாக சைக்கிள் ஓட்டும் அண்ணன் ... அவர்களின் கடும் உழைப்பையும், கஷ்டப்படற வயிற்றையும் பார்த்து இரக்கப்பட்டு காசு குடுங்கம்மா...

கண்ணுங்களா...

வரும் போது சும்மா வராதீங்க. அம்மாகிட்ட ஆயிரம், ரெண்டாயிரம் வாங்கிட்டு வாங்க. உங்களுக்கு புடிச்ச பாட்டு போடறேன். டான்ஸ் ஆடறேன். சுப்ரமணி பாட்டை போடுரா...

'அப்படி போடு.. போடு.. அழுத்திப் போடு கையால....'

ஜன்னல் வழியாக கசிந்து வருகின்ற பாட்டும், விசில் சத்தங்களும், கை தட்டல் ஓசைகளும் என்னை சூழ்ந்து செவி வழி இறங்குகையில், கண்கள் வழி ஜெயமோகனின் 'நவீன தமிழிலக்கிய அறிமுகம்' படித்தேன்.

சென்னைக்கு போய் எந்த நதி என்றே தெரியாமல், மெட்ரோ வாட்டரும், மினரல் பாக்கெட் வாட்டரும் குடித்திருக்கிறேன். பெங்களூரில் சுத்த ரேஷியோ கொஞ்சம் கூடுதலான காவிரி நீர் குடித்திருக்கிறேன். இப்போது மலை நாட்டில் கொஞ்சம் மணக்கின்ற நீர்! ஆனால் பவானிக்கு வந்து அது காவிரியோ, பவானியோ குடித்து போனால் தான் சுளுவாக எளிதாக போகிறது. என்ன காரணம்? சொந்த ஊரின் சூழ்நிலையா?

ரண்டு நாட்களாக பூச்சி காட்டிக் கொண்டிருந்த கருமேகங்களும், லேசாக வலுத்த காற்றும் ஞாயிறு இரவு புது பஸ் ஸ்டேண்டில் கிளம்பும் போது பெய்யத் தொடங்கி, ஈரோடு ஸ்டேஷனை அடைந்து பஸ்ஸில் இருந்து இறங்கும் வரை கொட்டித் தள்ளியது. காற்றில் சிலுசிலு...!

கவர்ன்மெண்ட் பஸ் அல்லவா.. ஓரங்களில் பட்டு ஜரிகை போல் மழை பெய்ய, இருவருக்குள்

'யோவ்! ஏன்யா ஓரமா தள்ற..? மழ வருது தெரியுதில்ல?'

'அதுக்காக இவ்வளவு நெருக்கமா ஒக்காந்தா நான் எப்படி வர்றது?'

'அப்ப எந்திரிச்சு போய்யா..?'

'நான் எதுக்கு போகணும். டிக்கெட் எடுத்திருக்கேன்.'

சேலம் பை பாஸில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட ஈரோடு பஸ் ஸ்டேண்ட் வரும் வரை இவர்களின் வாய்ச்சண்டை இருந்ததே... அருமையாக பொழுது போனது.

நமக்கு சும்மாவே இருக்க முடியாதே..! ஏதாவது ப்ரச்னையை கிளப்பி விட்டு பேசிக் கொண்டே வர வேண்டியது. ஆக்ஷன் எடுப்பதே கிடையாது. இந்த பழக்கம் தான் எந்த பிரச்னைக்கும் தொடர் பேச்சு வார்த்தையில் இறங்கி, ஜவ்வாக்குகிறோம்.

நூல் அழகத்தின் கடைசி நாளில் மழை பெய்ததை எப்படி சமாளித்திருப்பார்கள் என்று தோன்றியது.

21:45க்கு வர வேண்டிய ட்ரிவேண்ட்ரம் எக்ஸ்ப்ரஸ் ரொம்ப லேட்டாகி,

யாத்ரியோன் க்ருபா ஜான்ந்தீஜியே, காடி நம்பர் 2695 சென்னை சென்ட்ரல் ஷே பாலக்காட், எர்ணாகுளம், கோட்டயம் மார்க் ஸே ட்ரீவேண்ட்ரம் தக் ஜானேவாலி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் தோடி ஸி தேர் மே(ன்) ப்ளாட்ஃபார்ம் நம்பர் தோ பர் ஆயகி..!

என்று சொல்லும் போது மணி பத்தை நெருங்கி விட்டிருந்தது. அதற்குள்,

நனைந்த ஸ்டேஷன் சீட்டில்
அமர்ந்திருக்கும்
மழையும் குளிரும்!

என்ற ஹைக்கூ(?) தோன்ற குறித்துக் கொண்டேன்.

மிடில் பர்த்தில் படுத்துக் கொள்ளும் போது எதிர் வரிசையில்,

இளம் பையன்

மத்யமர்

பாட்டி

என்று இருந்தார்கள். இந்த இளன் எப்படிப்பட்ட கால மாற்றத்தில் இந்த மத்யமர் ஆவான் என்று எண்ணிப் பார்க்கும் போது, இருவருக்கும் இடையில் ஆறு வித்தியாசங்களுக்கும் மேல் கண்டு கொள்ள முடிந்தது.

பாட்டிக்கு பதில் ஒரு பாட்டர் இருந்தால் தலைமுறை இடைவெளி ஒரு பர்த்(Birth..?) தான் என்று கவிதை சொல்லி இருக்கலாம். அந்த பாட்டிக்கு வாய்த்த பாட்டர் எனது வரிசையில் லோயர் பர்த்தில் இருந்தார்.

***

எலி உரையாடல்.

எலி 1: கீச்.. கீச்... கீச்...

எலி 2: கீச்... கீச்...

எலி 1: கீச்.. கீச்... கீச்...

எலி 2: கீச்.. கீச்... கீச்...கீச்.. கீச்... கீச்...

எலி 1: கீச்.. கீச்... கீச்...

எலி 2: கீச்... கீச்...

எலி 1: கீச்.. கீச்... கீச்...

எலி 2: கீச்... கீச்...

எலி 1: கீச்.. கீச்... கீச்...

எலி 2: கீச்... கீச்...

எலி 1: கீச்.. கீச்... கீச்...கீச்...

எலி 2: கீச்... கீச்...

எலி 1: அக்காங்பா.. நீ சொன்னது சர்தாம்பா. நம்மலயே வாச் பண்ணிகினு வந்தான்.

எலி 2: இப்ப தூங்கிட்டானா?

எலி 1: தூங்கிட்டான் போல கீது. அதான் நான் நம்ம பாஷயில பேசரன்.

எலி 2: ச்ச..! இவனுங்களோட ஒரே பேஜாரா போச்சு! அவன் இட்டந்த பையில எதுனா துங்கறதுக்கு இருக்க பாக்கணும் வா. முறுக்கு, சிப்ஸு, இப்டி எதுனா!

எலி 1: ஜல்தியா வா! டி.டி.ஆர் வந்துட்டான்னா பய முய்ச்சிக்குவான்..! அப்பால நம்ம பாடு கஷ்டமாப் பூடும்.