Saturday, October 07, 2006

வாங்கிய விடுதலை.


பெற்ற தாயினும்
பெரிது
எனினும்,
தெருவில் துப்புகின்ற
வாய்
வாய்த்தது!

இந்தியத் தொலைக்காட்சியில்
முதன்முறை
என்ன படம் என்பதை,
நினைவூட்டாததால்,
வேகமாகப் பாடப்படுகிறது,
ஜனகணமண!

வாங்குகின்ற
ஆரஞ்சு மிட்டாயிலும்
தெரியவில்லை,
கொடியின் ஒரு வண்ணம்!

வெள்ளிப் பனிமலையின்
மீதுலாவும்
வீரர்தம்
கல்லறைப் பெட்டியில்
கறையாய்
இரத்தம் அல்ல,
ஊழல்!

பிறந்த நாள் என்று
மூடிய கதவுகளைத்
தட்டித் தட்டி
ஓய்கிறது,
வீரம் விளைந்த மண்ணின்
மைந்தர் கை!

குடி கெடுக்கும் குடியை
ஊற்றிக் கொடுக்கும்,
அரசாங்கத்தின்
அதிகாரக் கை!

கள்ளக் காதல்,
விபத்து ஒழித்த
பத்திரிக்கைப் பக்கங்களை
நிரப்பும்,
முன்னாள்,
இன்னாள்
ஆட்சியாளர்களின் அறிக்கை!

வாங்கிய விடுதலை
வீரியம்
இழந்து போனது,
சகோதரனுக்கு
தண்ணீர் தராத போது.

ஓடிப்போ
உன் மாநிலத்துக்கு
என்ற போது.

இனி
பொஞ்சாதி என்றபோதும்,
உஞ்சாதி இல்லை
எனப் பிரித்த போது.

கொள்கையென்றொன்றின்றி
குரங்குகளாய்க்
கூட்டணி தாவிய போது.

எத்தனையோ இல்லாத போதும்,
தென் சுனாமிக்கு
சூரத்திலிருந்து
நீண்ட கைகளின்
வழி கசிந்தது,
வாங்கிய விடுதலையின்
மூச்சு ஓயவில்லை
என்ற நம்பிக்கை.

இசுலாமிய முதல் குடிமகனின்
வழிகாட்டலில்,
கிருத்துவப் பெண்
விரலசைவில்,
சீக்கிய மூளையின்
சீரிய தலைமையில்,
இயங்குகின்றது
இந்துப் பெரும்பான்மை நாடு
என்று நினைக்கையில்,

வாங்கிய விடுதலை
வீண்
போகவில்லை...!

வந்தே மாதரம்.

(தேன்கூடு - அக்டோபர் 06 - போட்டிக்கான பதிவு.)

தேக விடுதலை. - பாகம் - 1

"டேய் கண்ணையா..! எங்கடா இன்னிக்கு ரொம்ப நேரமா வர்றாப்ல இருக்கு..?" ஜமீந்தார் வீட்டுக் கணக்குப் பிள்ளை கேட்டார்.

"சாமி, மன்னிச்சுக்கணும். ஆத்தாக்கு பெரியம்ம போட்டிருக்குங்க. அதான் காலங்காத்தாலயே குருவம்மாகிட்ட காட்டிட்டு, மூலிகை பறிச்சுட்டு வர, கொஞ்சம் பொளுதாயிடுச்சுங்க. சாமி மன்னிச்சுக்கணும்.." கண்ணையன் கூனிக்குறுகி சொன்னான்.

"சரி.. போ.. பெரியாடு ஒண்ணு செனையா இருக்கு. அதக் கொஞ்சம் என்னனு பாத்துட்டுப் போ."

"அதாங்க.. இன்னிக்கு நான் கருப்பாட்ட பாத்துக்கறேங்க. சின்னசாமிய இன்னிக்கு மேச்சலுக்கு அனுப்பலாம்னு இருக்கனுங்க.."

"ஏண்டா, அவன் ஒளுங்கா மேச்சுக்கிட்டு வருவானா.? ஆடெல்லாம் பத்திரமா வரணும். ஒண்ணு கொறஞ்சாலும், உன் தோலு பிரிஞ்சுரும். தெரியும்ல..?"

"இல்லிங்கய்யா.. ஏதும் பிரச்ன வராம பாத்துக்கறேங்க. அப்ப உத்தரவு வாங்கிக்கறேங்க"

"ம்...ம்.."என்றபடி கணக்குப் பிள்ளை மாளிகைக்கு உள்ளே சென்றார்.

கண்ணையன் மாளிகைக்கு தெற்கே போகத் தொடங்கினான். நேத்தே, இந்தக் கருப்பாடு ரொம்ப வலியாத் துடிச்சிட்டு இருந்துச்சு. அனேகமா இன்னிக்கு பிரசவம் ஆகிடும் போல.தென் மூலையில் இருந்த ஆட்டுக் கொட்டாயை நெருங்கினான்.

"டேய் சின்னச்சாமி.." குரல் கொடுத்தான்.

"தா.. இங்க இருக்கண்ணா.." என்றபடி ஒரு சிறுவன் கொட்டாயில் இருந்து வெளியே வந்தான். தலையில் ஒரு நைந்த துண்டு. இடுப்பில், ஒரு வெள்ளைக் கோவணம் தொங்கிக் கொண்டிருந்தது.

"என்னடா பண்ணிட்டு இருக்க?"

"யண்ணே.. இந்த கருப்பாடு வயிறு இந்த பெருசா இருக்கல்ல.. அத என்னனு பாத்துக்கிட்டு இருக்கேன்..."

"போடா பொளப்பத்தவனே.. அடுத்த வேளை கஞ்சிக்கு அரிசி இல்ல. அரண்மனைக்கு பொண்ணு பாக்க போனானாம்.. போய் பொளப்ப பாருடா.. இந்தா எல்லா ஆடுகளையும் களத்தி வுடு.. கருப்பாடு இங்கனயே இருக்கட்டும்.. நான் பாத்துக்கறேன். இன்னக்கு நீ போயி மேச்சுக்கிட்டு வா.."

"சரிங்கண்ணே.. கருப்பாடை நல்லா பாத்துக்கங்கண்ணே.. பாவம் வவுறு ரொம்ப நோகும் போல. நான் வேணா குருவம்மாவ கூட்டிக்கிட்டு வரட்டுமா.."

பாருடா, இந்தப் பயலுக்குப் பாசத்த.. நானும் இப்புடித் தான் இருந்தன்.. அப்புறம் ஆச, ஆசயா வளக்குற ஆடுங்க எல்லாம், உள்ள, கறி சோறா போகுதுனு தெரிஞ்சப்புறம், மனசே வுட்டுப் போச்சு. இவுனுக்கும் கொஞ்ச நாள்ள உலகம் புரிஞ்சப்புறம், பளகிப் பூடும்.

"எல்லாம் நான் பாத்துக்கறேன். நீ பத்திரமா அல்லாத்தையும் பாத்துக்கடா.."

சரிங்கண்ணே.." என்றபடி, எல்லா ஆடுகளையும், கயிறு பிரித்து விட்டு,
சின்னச்சாமி ஓட்டிக் கொண்டு செல்ல ஆரம்பித்தான்.அவன் கையில், அவன் ஆத்தா கொடுத்து விட்ட போசியில் பழைய சாதமும், காய்ந்த ஊறுகாயும் இருந்தன.

ருமாத்துப்பட்டி, தென்மேற்குத் தொடர்மலைகளின் அடிவாரத்தில் இருந்த குக்கிராமம். இன்றைக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஜமீந்தார்கள் ஆண்டு கொண்டிருந்த காலகட்டமது. வெள்ளைக்காரன் கொடுத்த அயல் மதுவுக்கும், வெள்லைத் தோல் மாதுகளுக்கும் மயங்கி, ஜமீந்தார்கள சொக்கிக் கிடந்த காலகட்டம். கறுமாத்துப்பட்டியில், நெல்லை சரகத்துக்கு உட்பட்ட ஒரு குட்டி ஜமீந்தாரின் பழைய பங்களா இருந்தது. ஜமீந்தார், எப்போதாவது ஒருமுறை தான் அங்கே வருவதால், அவரது கணக்குப் பிள்ளை, அதை தனக்கு உரிமைப்படுத்தி, உபயோகப்படுத்தினார்.

Wednesday, October 04, 2006

குடிமகன்.

"மாமி.. இந்த தீபாவளிக்கு எங்க ஸாரி எடுக்கப் போறீங்க..? போத்தீஸா.. சென்னை சில்க்ஸா இல்ல ஆர்.எம்.கே.வி.யா..? சொல்லுங்க மாமி..?""

கோடம்பாக்கத்தில் ஏறியதில் இருந்து, இதே கேள்வி தான். கெளசியைப் பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பியது, சரி தான். ஆனால் இந்த அனு கண்ணில் படாமல் கிளம்பியிருக்க வேண்டும். காலாண்டு லீவ் விட்டு விட்டார்கள், நானும் கெளசி அக்காவைப் பார்த்து விட்டு வருவேன் என்று என்னுடன் கிளம்பி விட்டாள். கெளசியை இங்கே தான் கோடம்பாக்கத்தில் குடுத்திருக்கிறோம். திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. இப்போது முழுகாமல் இருக்கிறாள். மாப்பிள்ளை ஆறு மாதம் US போகிறாராம். வந்து ஒத்தாசை பண்ணம்மா என்று கூப்பிட்டு இருந்தாள்.

பஸ் தி. நகர் பஸ் ஸ்டேண்டில் வந்து நின்றது.

திடீரென்று பின்னால் ஒரே சத்தம்.

"டேய்.. எறங்குடா.."

"டிக்கெட் எடுக்க காசு வெச்சிருக்கியாடா..?"

"பாரு.. செருப்பை வேற கையில வெச்சுண்டு... ஏண்டி செத்த ஜன்னலோரம் நகந்து ஒக்காந்துக்கோ.. சனியன், மேல விழ மாதிரியே வர்றான்..."

"பகல்லயே குடிச்சிட்டு வர்றான்.. இவனையெல்லாம் போலீஸ்ல புடிச்சுக் குடுக்கணும் சார்.."

"டேய்... கீழ எறங்கறயா.. இல்லயா..?"

"என்ன சார்.. குடிகாரன்கிட்ட பேச்சு.. தூக்கி வெளிய போடுங்க சார்.."

" நீங்க சொல்லீட்டு அடுத்த ஸ்டாப்ல எறங்கிப் போயிடுவீங்க.. நான் தூக்கிப் போட்டுட்டு, அவன் கீழ எங்கயாவது விழுந்து, செத்து, கித்து தொலைச்சான்னா.. எனக்கு எதுக்கு சார் பொல்லாப்பு..?"

என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக நானும், அனுவும் திரும்பினோம். அப்பா..! ஒடம்பு என்னமாய் பெருத்திருச்சு. கொஞ்சம் திரும்பிப் பார்க்கறதுக்குள்ள கழுத்தில 'சுரீர்'னு ஒரு வலி, மின்னல் மாதிரி வந்திட்டுது. கஷ்டப்பட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

40 - 45 வயதான ஒரு ஆள். தலையெல்லாம் கலைந்து போய், சட்டை பட்டன்கள் இரண்டு தெறித்து போய், வேட்டி அவிழ்ந்தும், அவிழாமலும், தடுமாறிக் கொண்டிருந்தான். நன்றாக குடித்திருப்பான் போல. அவனை எப்படி வெளியேற்றுவது என்பது தான் அங்கே நடந்து கொண்டிருந்த டிஸ்கஸன் என்று தெளிவானது.

பஸ் மெல்ல நகரத் தொடங்கியது.

கண்டக்டர் நீளமாக ஒரு விசில் அடித்தார்.

"மாணிக்கண்ணே.. கொஞ்சம் இங்க வாங்க.." கண்டக்டர் தான்.

பஸ் சடன் ப்ரேக் போட்டு நின்றது. ஓட்டுனர் 'தடார்..புடார்' என்று எழுந்து பின்பக்கம் போனார். அவனை வெறுப்பான ஒரு பார்வை பார்த்தார். 'திடீர்' என்று குனிந்து, அவன் கால்களைப் பிடித்தார். 'தர..தர..'வென இழுத்து, வெளியே கொண்டு வந்து போட்டார்.கேவலமான ஒரு வார்த்தை சொல்லி விட்டு, இருக்கைகு வந்து, கீர் போட்டார்.

சலசலப்பான ஓர் ஆரவாரம் எழும்பியது. நானும், அனுவும் மெல்லத் திரும்பினோம்.

"சொல்லுங்க மாமி. தீபாவளிக்கு எங்க துணி எடுக்கப் போறீங்க..?"

எனக்கு 'சீ' என்றாகி விட்டது. என்ன பெண் இவள்? ஒரு மனிதனைத் தூக்கி எறிந்து விட்டு, இவர்கள் அடுத்த வேலை பார்க்கிறார்கள். இந்தப் பெண், அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்பட்டதாகவோ, அட்லீஸ்ட் நினைத்ததாகவோ தெரியவில்லை. நிஜமாகவே சின்னப் பெண்ணா.. இல்லை என்னைக் கேட்டு சங்கடப்படுத்தக் கூடாது என்று வேறு பேச்சு பேசுகிறாளா..? இல்லை, இது போன்ற மனிதர்களை நினைத்துப் பார்க்கவே கூடாது என்று இவள் பெற்றோர், சொல்லித் தந்திருப்பார்களோ..?

எனக்குக் கொஞ்சம் தலை வலித்தது.

ஏனோ, மதியம் பாத்திரம் விளக்கும் போது, குடிகாரக் கணவன் பற்றி, புலம்பிக் கொண்டே அழுகின்ற சரசுவின் ஞாபகம் வந்தது.

பஸ் சீராக ஓடத் தொடங்கியது.

விடுதலைத் திரு நாளில்...

"இந்த சுதந்திர நன்னாளில்..."

பிரதமர் பேசிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வருஷமும் இதையே தான் சொல்றாங்க. நானும் மூணு வருஷமா பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். வருஷா வருஷம் எங்க இருந்தாலும் புடிச்சிட்டு கொண்டு வந்திடுவாங்க. நானும் எங்க போகப் போறேன்? இதே டெல்லியிலேயே தான் சுத்திக்கிட்டு இருப்பேன். ஜும்மா மசூதி, கன்னாட் ப்ளேஸ்னு இங்க தான் இருப்பேன்.

வருஷா வருஷம் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாகிட்டே வருது. விடுதலை வாங்கிட்டமானே புரியல. பிரதமர் கண்ணாடிக் கூண்டுக்குள்ள நின்னு பேசறார். பத்தடிக்குப் பத்தடியில போலீஸ்காரர் துப்பாக்கியோட போற, வர்றவனையெல்லாம் சந்தேகத்தோட தான் பார்க்கறாங்க.

என்னமோ போங்க. இப்படித்தான் போன வருஷம், ஜூம்மா மசூதி பக்கமா போய்க்கிட்டு இருந்தேன். கப்புனு வந்து புடிச்சிட்டாங்க. அதுக்கு முந்தின வருஷம் பார்லிமெண்ட் கிட்டக்க. இப்ப எல்லாம் எனக்கு இது பழகிப் போச்சுங்க. அவங்களும் தான் பாவம், என்ன செய்வாங்க..? ஒவ்வொரு விடுதலை நாளுக்கும், கொஞ்சம் பேரை விடுதலை பண்ணனுமாம். ஜெயில்ல புடிச்சு வெச்சிருக்கவென் எல்லாம், விடுதலை பண்றவன் மாதிரியா இருக்கான்? வுட்டா, பார்லிமெண்ட்டுக்கே குண்டு வெச்சிருவானுங்கள்ள, அவனுங்களை எல்லாம் எவ்ளோ கஷ்டப்பட்டு புடிச்சிருப்பாங்க. அவனுங்களை எல்லாம் வெளிய வுட்டா, நெலமை என்னாகிறது? அதனால நம்மள மாதிரி அப்பாவிகளை ஒவ்வொரு வருஷமும், நான் எங்க இருந்தாலும் புடிச்சிட்டு வந்து, கொஞ்ச நாள் உள்ள வெச்சிருந்து, விடுதலை நாளுக்கு வெளிய விட்டிடுவாங்க.

"பாகிஸ்தானை எச்சரிக்கிறோம். தாக்குதல்கள் தொடர்ந்தால், பேச்சுவார்த்தை.."

இதையே தான் ரொம்ப வருஷமா பேசிக்கிட்டு இருக்காங்க. என்னத்த பேச்சுவார்த்தை நடத்தி..? போன வருஷம் சாணக்யபுரியில இருந்து ஒருத்தன் வந்திருந்தான். அவனை இந்த வருஷம் காணோம். இருக்கானா இல்லை துப்பாக்கியில சுட்டுக் கொன்னுட்டாங்களா, என்கவுண்டர்னு? சரி விடுங்க.. ரொம்ப நேரமாச்சு போல. இதோ கூப்பிடறாங்க.

"பிரதமர் இப்போது அமைதிப் புறாக்களைப் பறக்க விடுவார்.."

நேரு காலத்திலிருந்து இதே வேலையாப் போச்சு. ஓ.கே. அடுத்த வருஷம் பார்க்கலாம். அதுவரைக்கும் எவனும் என்னைச் சுட்டு சாப்பிடாம இருந்தா!


(தேன்கூடு - அக்டோபர் 06 - போட்டிக்கான பதிவு.)

Tuesday, October 03, 2006

தேன்கூடு போட்டிக்கான விதிகள் - ஒரு பதிவு.

இரண்டு பதிவுகளை அக்டோபர் - 06 போட்டிக்காக அனுப்பி வைத்து விட்டு, பிறகு தான் விதிமுறைகளில் மாற்றங்கள் இருப்பதைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி எனக்குத் தோன்றியதைக் கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

போட்டிக்கான ஆக்கங்கள் அந்தந்த மாதத்தின் 18ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

திடீரென்று கடைசித் தேதி 18 என்று ஆனது ஏன் என்று தெரியவில்லை. இந்த மற்றத்தால் இன்னும் அதிக படைப்புகள் வருமா, குறையுமா என்று இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

ஒருவர் எத்தனை ஆக்கங்களை வேண்டுமானாலும் போட்டிக்காகப் பதிவு செய்யலாம். ஒரே படைப்பிலக்கியத்தின் கூறினைக் கொண்ட (உதா: கவிதை) மூன்றிற்க்கு மேற்பட்ட ஆக்கங்களையும், தொடர் ஆக்கங்களையும் தவிர்த்தல் சிறப்பு.

இந்த நிபந்தனை கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. ஒருவர் சிறுகதையில் வல்லவராய் இருக்கலாம். ஒருவர் கவிதை கலக்கலாய் எழுதலாம். சிறுகதை சிறப்பாய் எழுதுபவர், எடுத்துக் கொண்ட கருவை சம்பவங்களால் நிரப்புவார். கவிதயைக் கவினுற அமைப்பவர், வார்த்தைகளால் வர்ணஜாலம் காட்டுவார். ஒரே படைப்பிலக்கிய கூறில் மூன்று படைப்புகளுக்கு மேல், ஒருவருக்குத் தோன்றி, இந்த நிபந்தனையின் காரணமாக, அவற்றை போட்டிக்கு அனுப்பாமல் போனால், இழப்பு யாருக்கு? பதிவு நுகர்வோனுக்குத் தானே? 'தவிர்த்தல் சிறப்பு' என்று சொல்லப்பட்டிருப்பது நிபந்தனை ஆகாது எனினும், அது ஒரு நிரடலாய் இருப்பதை விதி அமைப்போர் கவனம் கொளல் நலம்.

போட்டிக்கான ஆக்கங்களும், தலைப்பும் தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இது ஏற்கனவே இருந்த நிபந்தனை தான் எனினும், இதைப் பற்றியும் இங்கே கொஞ்சம் சொல்லிவிடுவது நன்று எனக் கொள்கிறேன். தமிழ் வலைப் பதிவு இடுபவர்கள் அனைவருக்கும் தமிழ் மேல் கொண்ட காதலில் தான் தமிழில் எழுதுகிறார்கள். அனைவரும் முடிந்த அளவு, பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து தான் எழுத முயல்கிறார்கள். இருப்பினும், கதை நடை, கதையின் போக்கு, கதை சொல்லி போன்ற பல காரணிகளைப் பொறுத்து, வார்த்தைப் பிரயோகங்கள் மாறுபடுகின்ற சூழல் ஏற்பட்டு விடுகின்றது.

அப்படித் தூய தமிழில் மாற்றி எழுதினால், ஆசிரியர் உணர்த்த வரும் உணர்வை நுகர்வோர் அடைதல் சற்று சிரமமாகின்றது. 'அப்படி பிற மொழி வார்த்தைகளில் எழுதி தான் தமிழர்கள் உணர்வுப் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டுமெனில், அப்படியொரு, உணர்வே எம் தமிழருக்குத் தேவையில்லை' என்று கூறாதீர்கள். கிணற்றுத் தவளையாய் இருக்க வேண்டாமே..! மேலும், இது போன்ற மிகக் குறைந்த பிற மொழி வார்த்தைப் பிரயோகங்களால் நம் தமிழ் அன்னைக்குப் பங்கம் வராது. தான் ஊட்டிய 'பப்பு மம்மம்' உண்டு வளர்ந்த குழந்தை இன்று 'சப்பாத்தியும், சென்னா மசாலாவும்' சுவைத்து மகிழ்ந்தால், எந்தத் தாயும் கவலையுறாள். வேறு என்ன உண்டாலும், அவன் தமிழ்மகன் என்பது மறவாது, மறையாது. அது போலத் தான், இதுவும்.

எதற்கு இந்த விளக்கம் என்றால், செப் - 06 போட்டிக்கு வந்த தலைப்பை ('கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?') சிலர் விமர்சித்திருந்தது தான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஆசிரியர் சொல்ல வந்த கருத்தை, வேறு எந்த வார்த்தைகளில் சொல முடியும்?

'கொஞ்சம் உய்ர்த்தி விடுகிறீர்களா?'

'கொஞ்சம் தூக்கி விடுகிறீர்களா?'

'கொஞ்சம் முன்னேற்றி விடுகிறீர்களா?'

....
பல்பொருள் வார்த்தையாய் 'லிப்ட்' அமைந்ததால், பல பரிமாணப் படைப்புகள் சாத்தியமாயிற்று. எனவே தலைப்பில் தமிழ் இருக்கிறதா, படைப்பில் தமிழ் மட்டுமே இருக்கிறதா என்று ஆராயாமல், படைத்த தமிழ்மகன், தமிழாய் சொல்லியிருக்கிறானா என்று பார்ப்பது, பரவலான தளப் படைப்புகளுக்கு வழிவகுக்கும் என்பது, என் எண்ணம்.

வாசம்.

வாங்க சார்..! இப்ப எங்க வீட்டுல நடந்த நிகழ்ச்சி ஒண்ணு சொல்வேன். நீங்க நம்பணும், என்ன..?

வாசனை நிந்திக்காது வாணாளெலாம் சிந்தி
யோசனை ஏதுமின்றி மும்முறை மொழிய - ராசனை
அடைந்த செல்வமெலாம் அழிந்து போம்
உடைந்த மண்பானை போல் உருப்படாமல்.

"டாடி..மம்மி. இதை வந்து பாருங்க.."

பழைய மஞ்சள் பை ஒன்றைக் குடைந்து கொண்டிருந்த நானும், என்னவளும் திரும்பினோம். அருணும், அனுவும் தாத்தாவின் பழைய ட்ரங்க் பெட்டியின் அருகில் அமர்ந்து, எங்களைக் கூப்பிட்டனர். நாங்கள் இருவரும் அவர்கள் அருகில் சென்று, அமர்ந்தோம்.

"என்னடா கையில வெச்சிருக்க..?" அனுவைத் தூக்கி மடியில் உட்கார வைத்தபடி கேட்டேன்.

"டாடி.. பெரிய தாத்தாவோட பெட்டியை எடுத்து சுத்தம் பண்ணச் சொன்னீங்கல்ல.. இந்த பெட்டியில இந்த ஓலைச்சுவடியெல்லம் இருக்கு..இதில என்னமோ எழுதியிருக்கு... நீங்களே பாருங்க.." என்றபடி அந்த உடைந்து நொறுங்கி விழும் நிலையில் இருந்த ஓலைச் சுவடியை என்னிடம் கொடுத்தான்.

ன் தாத்தா ஒரு பெரிய பக்திமான். யோகம், தியானம், உபாசகம் இப்படி நிறைய செய்வார். ஜோதிடம், ஜாதகம், கைரேகை இதிலெல்லாம் கூட அவருக்கு பெரிய ஆர்வமுண்டு. பழைய பஞ்சாங்கம், நாட்காட்டி இதையெல்லாம் வைத்துக் கொண்டு எப்போதும் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார் என்று, என் பாட்டி சொல்லியிருக்கிறார். பழைய ஓலைச் சுவடிகள், தமிழ் செய்யுள்கள், பழைய இலக்கியங்கள் என்று தேடித் தேடிப் படிப்பார்.

இப்படிப்பட்ட மகா பக்தருக்கு வந்து ஒரே பிள்ளையாக பிறந்தவர் தான் என் அப்பா. ஆரம்பத்தில் அவரும் தாத்தாவைப் போல் தான் இருந்திருக்கிறார். பின் வளரும் பருவத்தில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கங்களின் பால் அப்பா, பெரும் ஆர்வம் காட்ட, தாத்தாவின் கோபத்திற்கு ஆளானார்.

அப்புறம் பாட்டி இருந்தவரை, பாட்டியின் சமாளிப்புத் திறமையால், பெரிய அளவில் இருவருக்கும் மோதல்கள் இல்லாமல் நாட்கள் ஓடின. பாட்டி இறந்த பின்பு, தாத்தா அவரது மொட்டை மாடி அறையிலேயே, ஒடுங்கிக் கொண்டார். என் அம்மா தான் அவருடன் பேசுவது, பழகுவது எல்லாம். நானும் போவேன். ஆனால் அப்பாக்குத் தெரியாமல் தான். தெரிந்தால் சண்டை தான் வரும். தாத்தா என்ன படிக்கிறார் என்று அடிக்கடி போய்க் கேட்பேன். எதுவும் சொல்ல மாட்டார். பிறகு நானும் வளர்ந்து, மணமாகி ரெண்டு பிள்ளைகளையும் பெற்றாயிற்று.

போன வாரம் தாத்தா, காலமாகி விட்டார். இப்போது அப்பாவும் அம்மாவும் எங்கோ வெளியே சென்றிருப்பதால், நாங்கள் தாத்தாவின் அறையைச் சுத்தம் செய்யும் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு குடைந்து கொண்டிருக்கிறோம். அப்பத் தான் இந்த ஓலைச் சுவடி கிடைத்தது.

ஏதோ செய்யுள் மாதிரி தெரிந்தது. ஒன்றும் புரியவில்லை. அவளிடம் கொடுத்தேன்.

"உனக்கு ஏதாவது புரியுதானு பாரு.."

என்னை விட அவளுக்கு கொஞ்சம் அறிவு அதிகம் என்பதை, இவ்வளவாண்டு அனுபவத்தில் கண்டிருந்தேன். கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். நாங்கள் மூன்று பேரும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

"கண்டுபிடிச்சிட்டேன். 'வாசனை'..வாசன்....சீனிவாசன்....பெருமாள். பெருமாளை திட்டாமல், எப்பவும் சிந்திக்கணும். அப்படி இல்லாம, அவரைப் பத்தி தப்பா பேசினா, மூணு தடவை மன்னிப்பார். அதுக்கு மேலயும் போச்சுன்னா, அவருக்கு கோபம் வந்து, அவர் கொடுத்த பணமெல்லாத்தையும் பறிச்சுக்குவார். இது தான் இந்தப் பாட்டுனு நெனைக்கிறேன்.ஏங்க.. உங்க அப்பா நாத்திகர் தான..? அவருக்கு புத்தி சொல்றதுக்காக உங்க தாத்தா எழுதி வெச்சிருப்பார்னு தோணுதுங்க" என்றாள்.

என் தங்கக் கட்டி..! எவ்ளோ அறிவாளி பாருங்க.

குழந்தைகள் இருவரும் ஆச்சரியமடைந்து, அவளைக் கட்டிக் கொண்டு, ஆளுக்கொரு கன்னத்தில் முத்தம் கொடுத்தனர். 'என் கோட்டாவை இரவு தருகிறேன்' என்று கண்களாலேயே சொல்லி விட்டு பெட்டியைப் பார்த்தேன்.

பெட்டியில் இன்னும் கொஞ்சம் ஓலைச் சுவடிகளும், பட்டுக் கயிறுகளும் இருந்தன. ஒரு மூலையில், பழைய காமாட்சி விளக்கு ஒன்று இருந்தது. அருண் அதை எடுத்துப் பார்த்தான். ரொம்ப காலத்து அழுக்கு. பழைய துணியெடுத்து, அதைத் துடைத்தான்.

பளீர்.....

மின்னல் வெட்டியது போல, விளக்கு பிரகாசித்தது. எல்லோரும் கண்களை மூடிக் கொண்டோம். கொஞ்ச நேரம் கழித்துக் கண்களைத் திறந்து பார்த்தோம். விளக்கின் திரி முனையில் இருந்து, குபுகுபுவென வெண்புகை வந்து கொண்டிருந்தது. எனக்கு 'பட்டணத்தில் பூதம்', 'அலாவுதீனும் அற்புதவிளக்கும்' ஞாபகங்கள் வர ஆரம்பித்தது. அருணும், அனுவும் என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டனர்.

திரி முனையில் இருந்து, மண்புழு போல் ஓர் உருவம் குதித்தது. மெல்ல, மெல்ல வளர்ந்து ஓர் ஆள் வடிவத்திற்கு வந்தது. என்னைப் பார்த்து வணங்கிக் கொண்டே பேச ஆரம்பித்தது.

"என் எஜமானரே..! வணக்கம். தாங்கள் எனக்கு விடுதலை கொடுத்துள்ளீர்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே நான் கிடைப்பேன். பல்லாயிரம் ஆண்டுகளாக நான் இந்த விளக்கிலேயே சிறையிலிருந்தேன். நீங்கள் எது கேட்டாலும் நான் கொண்டு வந்து தருவேன். தாங்கள் அந்த ஓலைச் சுவடியில் இருந்ததைப் படித்துப் புரிந்து கொண்டீர்கள் அல்லவா..?"

ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த நான், சுய நினைவுக்குத் திரும்பினேன்.

"புரிந்தது.." என் செம்மொழி எனக்கே வியப்பளித்தது.

"நன்று ! ஓலைச்சுவடியில் இருப்பதை மீறாதது வரை, நான் உங்களுடன் இருப்பேன். மீறினால் நானும் மறைவேன். நான் உங்களுக்குக் கொடுத்தனவும் மறைந்து போகும்..! தங்களுக்கு என்ன வேண்டும்?" பணிவோடு கேட்டது.

இதற்குள் பயம் தெளிந்து போயிருந்த என் குழந்தைகள் என்னைக் கெஞ்ச ஆரம்பித்தார்கள்.

"அப்பா..! அப்பா..! வினோத்துக்கு அவங்கப்பா டர்போ சைக்கிள் வாங்கிக் குடுத்திருக்காருப்பா.. அதையே கேளுஙப்பா.." இது அருண்.

"போடா..! அதையெல்லாம் நீ சீக்கிரம் உடைச்சிடுவே.! அப்பா..! வர்ஷினி பிங்க் கலர்ல ஒரு பாவாடை, சட்டை எடுத்திருக்காப்பா..! அதே மாதிரி எனக்கும் கேளுங்கப்பா..!" இது அனு.

"ஏங்க..! தீபாவளிக்கு ஆலுக்காஸ்ல எடுக்கலாம்னு, ரெண்டு டிசைன் பார்த்து வெச்சிருந்தேங்க..! அதைக் கேளுங்க.." இது என் சகதர்மிணி.

ஆகா..! எல்லாரும் இவ்ளோ ப்ளான் போட்டு வெச்சிருக்காங்களா..?

அப்புறம் ஆளாளுக்கு அவர்கள் விரும்பிக் கேட்டது எல்லாம் அந்தப் பூதம் (பூதம்னே சொல்லலாம்) கொடுத்தது.

அருண் : ஐய்ய..! என்ன இந்தப் பூதம் ரொம்ப நாளா குளிக்கவே இல்ல பொல. இந்த நாற்றம் அடிக்குது.

அனு : இந்த பிங்க் பாவாடை, உங்க ராஜா, ராணி காலத்துல யூஸ் பண்ணினதா? இந்த நாற்றம் அடிக்குது.

இவள் : இந்த நெக்லஸ் கூட, ரொம்ப பழசு போல..

நான் : ஏன், அதுவும் நாற்றம் அடிக்குதா..?

பளீர்..

மற்படியும் வெண்புகை. பூதம் மறைந்தது. அது கொடுத்த எல்லா பொருட்களும் மறைந்தன. நாங்கள் திக்பிரமை அடைந்து போனோம்.

பிறகு, உட்கார்ந்து யோசித்து, ஓலையை மீண்டும் படித்துப் பார்க்கையில், தான் புரிந்தது. செம்மொழியில் ' நாற்றம்' என்றால் வாசனை என்று பொருள். வாசனை என்று தான் மும்முறை சொல்லக் கூடாது. சொன்னால், பூதத்திற்கு, அது வாசம் செய்யும் இடம் ஞாபகம் வந்து, மீண்டும் விளக்கிற்குள்ளேயே போய் விட்டது.


இப்ப சொல்லுங்க..? இந்த நிகழ்ச்சியை நம்பறீங்களா..? என்ன கதை விடறேனா..? தேன்கூடு போட்டிக்கு எழுதிப் போட்டா, பரிசாவது கிடைக்குமா..? அட, போங்க சார், நீங்க வேற..!

(தேன்கூடு - அக்டோபர் 06 - போட்டிக்கான பதிவு.)

விடுதலை எதற்கு?

மெல்லியதாகத் தூறல் தூறிக் கொண்டிருந்தது.

அய்யனார் கோயிலின் தெற்கே இருந்த ஆலமரத்தின் அடிவாரத்தில் ஊரே கூடியிருந்தது. லாந்தர் விளக்குகள் மினுக்கிக் கொண்டிருந்தன. ஆன்கள் எல்லாம் தலைக்கு முண்டாசு கட்டியிருக்க, பெண்கள் கூடைகளைக் கவிழ்த்து உட்கர்ந்திருந்தனர்.

பெருந்தனக்காரர் எழுந்து நின்று பேசத் தொடங்கினார்.

"இப்ப, இங்க கூடியிருக்கர நெல்லிக்காரன்பட்டி சனங்களுக்கு வணக்கம். கொஞ்ச நாளா நமக்கும், பக்கத்தில இருக்கற தோப்பனூர்பாளையத்துக்கும் வாய்க்கா தகரறு இருக்குனு எல்லார்க்கும் தெரியும். டேம்ல இருந்து வர்ற தண்ணிய அவங்க வயலுக்குப் பயன்படுத்திக்கிட்டு, நமக்குத் தராம, வீரபாண்டி ஏரிக்குத் திருப்பி விட்டர்றாங்க. இதப் பத்தி அவங்க பஞ்சாயத்துக்குத் தெரிவிச்சும், அவங்க எதுவும் பண்னல. கலெக்டர் வரைக்கும் போய் சொல்லியும் ஒண்ணும் வேலையாகல. இதுக்கு மேல என்ன பண்ணணுங்கறத பத்திப் பேசத் தான் நாம கூடியிருக்கோம்..!"

"இன்னும் என்னத்த போயி பேசறது? நாலு பேர வெட்டிட்டு வந்தா கம்முனு இருப்பாங்க.." சேகர் சீறினான். பொழுது போகாமல் சுடுகாட்டுக்கு அருகில் உட்கார்ந்து, பகலெல்லாம் சீட்டாடி வெட்டியாய்ப் பொழுது ஓட்டுகின்ற கும்பலில் ஒருவன். 'சும்மா இருந்த குரங்குக்கு சொறி பிடித்தது போல' இவனுக்கு இந்த பிரச்னை கிடைத்து விட்டது. இதை வைத்து ஊரில் நல்ல பேர் எடுக்க முடியுமா என்று திட்டமிட்டிருந்தான். பின்ன, நாளப்பின்ன ஊருக்குள்ள பொண்ணு கிடைக்க வேண்டாமா?

"எலே.. சும்மா உட்காருடா.. வெட்டப் போறானாம். வெட்டிட்டு வந்தா வெவெகாரம் தீந்துடுமா? இப்ப நாம ஊருக்குள்ள பேசிக்கிட்டு இருக்கோம். நீங்க இது மாதிரி எசகுபிசகா ஏதாவது பண்ணினீங்கன்னா அப்புறம் போலீசு கேசாகிடும். அப்புறம் காலாகாலத்துக்கும் ரெண்டு ஊருக்கும் பிரச்னையாத் தான் இருக்கும்.." ஜேசுப் பிள்ளை பேசினார்.

ஜேசுப் பிள்ளை ஊரில் மரியாதையோடு பார்க்கப்படும் பெரிய மனிதர்களில் ஒருவர். சுபாஷின் ஐ.என்.ஏ-வில் பணியாற்றியவர்.

ஜேசுப் பிள்ளை தொடர்ந்தார்.

"ஏண்டா.. இப்படி ஊருக்கு ஊரு அடிச்சிக்கறதுக்காடா நாங்க வெள்ளைக்காரன்கிட்ட அடிபட்டு, மிதிபட்டு விடுதலை வாங்கிக் குடுத்தோம்? பேச வந்துட்டான். நீ போயி நாலு பேர வெட்டிட்டு வா. அவன் வந்து நாலு பேரை வெட்டுவான். இப்படியே, எல்லரும் வெட்டிக்கிட்டு போனப்புறம், ரெண்டு ஊரிலயும் யாருமே இருக்க மாட்டீங்க. அப்புறம் யாருக்குடா தண்ணி வேணும்..?

இந்த வேலையைத் தான்டா வெள்ளைக்காரன் பண்ணிட்டு போனான். அன்னிக்கு அடிச்சுக்க ஆரம்பிச்ச இந்துக்களும், இசுலாமியர்களும் இன்னும் நல்லா ஒட்ட முடியாம, தள்ளி தள்ளி தான்டா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். அவன் பண்ணிட்டு போன அதே வேலையை நீங்க தொடரப் போறீங்களா..?"

"அப்ப, இதுக்கு என்ன தான் முடிவு..?" கேட்டான் சுருளி. அவனும் சுடுகாடு கும்பலில் ஒருவன்.

"நம்ம அய்யனார் கோயில் பண்டிகைக்கு அவங்களும் பாத்தியப்பட்ட ஊரு தான். அதனால, பண்டிகையில அவ்ங்க ஊரு கடைங்களுக்கு எல்லாம், கொஞ்சம் தள்ளுபடி காண்டிராக்ட் விலை நிர்ணயம் செய்வோம்.." ஜேசுப் பிள்ளை கூறினார்.

சேகர் வெகுண்டான்.

"என்னங்க இது..? சுத்த கிறுக்குத் தனமா இருக்கு. நமக்குத் தண்ணி குடுக்க மாட்டேங்கறாங்க. அவனுங்களுக்கு, கொறைஞ்ச விலைக்கு காண்டிராக்டா..? உங்களுக்கு என்ன பைத்தியம் ஏதாவது பிடிச்சிருச்சா..?"

"டேய்..! நாக்கை அளந்து பேசுடா..! யாருட்ட பேசிக்கிட்டு இருக்கனு தெரியுதில்ல..?" பெரிய தனக்காரர் கத்தினார்.

"இதப் பாருங்க! அவங்களுக்கு அவங்க பண்ற தப்ப உணர்த்தணும். அவ்வளவு தான் வேல. அதை விட்டுட்டு, அவங்களை பழிஎடுக்கிறேன்னு கிளம்பறது, தப்பு. அவங்களுக்கு தப்பை புரிய வெச்சா, அவங்களா வந்து, தப்பை புரிஞ்சுக்கிட்டு, நமக்குத் தண்ணி குடுப்பாங்க. அதுதான் ரெண்டு ஊருக்கும் நல்லது. இதப் பத்தி பேச நாளைக்கு, நம்ம ஊருல இருந்து கொஞ்சம் பேரு, அங்க போயி பேசுவோம். அதை விட்டுட்டு எவனாவது வெட்டறேன், குத்தறேன்னு கிளம்பனீங்கனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. நாட்டுக்காக ஊரையே எதிர்த்திட்டு, ஆர்மியில போய் சேர்ந்தவன் நான். வெள்ளைக்காரன் கிட்டயே, ஜெயில்ல அடி வாங்கினவன். இப்ப ஊர் நன்மைக்காக, நாலு பேரைச் சுட்டுட்டு ஜெயிலுக்குப் போக தயங்க மாட்டேன்..." மிரட்டி விட்டார் ஜேசுப் பிள்ளை.

"ஆமா.. அதுதான். நாளைக்கு பஞ்சாயத்துல இருந்து, நாலு பேரு போவோம். ஐயா சொன்னது ஞாபகம் இருக்கட்டும். இப்ப எல்லாரும் கலைஞ்சு போங்க. மழை பெருசா வர்ற மாதிரி இருக்கு.." பெரிய தனக்காரர் முடித்தார்.
ஊர் கலைந்து போனது.

கிழக்குத் திசையில் இருந்து பளீரென்று, மின்னல் பாய்ந்தது.

(தேன்கூடு - அக்டோபர் 06 - போட்டிக்கான பதிவு.)