Friday, April 23, 2010

எழுதுவது எதற்காக?



நேற்று ஜிமெய்ல் உரையாடியில் ஒரு தோழியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவர் சொன்ன ஒரு வரி, இரவுத் தூக்கத்தைக் கொஞ்சம் இழக்கச் செய்து சிந்திக்க வைத்து, இந்தத் தலைப்பையும் கொண்டு வந்தது.

கொஞ்சம் சுயபுராணம்.

ஆப்பிளையும், பந்தையும், பூனையையும், பொம்மையையும் எழுதினாலும் எழுதும் பொருட்களில் வித்தியாசம் ஆரம்பத்திலேயே இருந்தது. எல்லோரும் ஸ்லேட்டில் எழுதிய போது, பேப்பரில் கேம்லின் பேனா கொண்டு எழுதினேன். காரணம், உணவுப்பழக்கம்.

மெட்ரிக் பள்ளியில் புதுக் கட்டிடத்திற்காக ஜல்லிகள், செங்கற்கள், ஈரமணல், கம்பிச் சல்லடைகள், ரப்பர் வாளிகள் வந்திருக்கும். மதிய இடைவேளையில் லஞ்ச் முடித்து விட்டு அங்கே கொட்டி வைக்கப்பட்டிருக்கும் களிமண் உருண்டைகளை வாயில் போட்டுக் கொள்வேன். இன்று வரை அவற்றைப் போன்ற மென் உணவுகள் மிகக் கொஞ்சமே கண்டிருக்கிறேன். அப்படியே கரைந்து போய்க் கடைசியில் சிறு கற்களைத் துப்பி விடுவேன். தின்ற களிமண் தலைக்குள் சென்று சேகரமானதா என்று இன்னும் தெரியவில்லை.

அப்படியே விரிந்து, ஸ்லேட்டுக் குச்சிகளையும் தின்று, தினம் வீட்டுக்கு காலி பாக்ஸோடு போன போது, உஷாராகி விட்டார்கள். இங்க் ஊற்றி பேனாவில் பேப்பரில் எழுத அனுமதி வாங்கி எழுதிக் கொண்டிருந்தேன். மாலையில் விரலெல்லாம் நீலம்.

மெட்ரிக் காலங்களில் படிப்பைத் தவிர ஸ்போர்ட்ஸ்களில் எதிலும் கலந்து கொண்டதில்லை. ஓட்டப்பந்தயம், ரிலே, கோ-கோ, கபடி, கால்பந்து.... ம்ஹூம், எதிலும் இல்லை. ஒரே முறை, ஸிண்ட்ரெல்லா நாடகத்தில் கடைசிக் காட்சியில், அவள் ஒற்றைச் செருப்பைத் தூக்கிப் போகும் ராணுவத் தளபதியின் படையில் வலது மூலையில் ஒரு சிப்பாயாக வந்து லெஃப்ட்-ரைட் போட்டது மட்டுமே, சாதனை.

கட்டுரைப் போட்டிகளில் சேர்ந்ததில்லை. காரணம், மிக மிக மோசமான கையெழுத்து. முட்டி முட்டியாக அடிப்பார்கள். திருந்தவேயில்லை. காசியில் துவங்கி நாக்பூரில் இறங்கி பூடானுக்குப் போகும். அழகோ, விஸ்கி அடித்த கோழியின் காலில் பென்சிலைக் கட்டி, விரட்டியது போல் தமிழை எழுதினால், கொரியன் போல் காட்சி தரும்.

ஒருமுறை கண்ணாடி ஸ்கேலை உடைத்தே கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்து அப்பாவிடம், "ஸ்கேல் உடையற அளவுக்கு அடிக்கறாங்கப்பா..!" என்று அழ, அப்பா, "கவலைப்படாதே..! இதை வெச்சுக்கோ! உடையவே உடையாது..!" என்று மர ஸ்கேல் கொடுத்தார்.

பிறகு கையெழுத்து கொஞ்சம் அழகானது (அதாவது புரியும்படியானது), வேறு தனிக் கதை.

பேச்சுப் போட்டியே என் களம். அங்கே இங்கே கொஞ்சம் பேசி, இருக்கவே இருக்கிறார்கள், பாரதியும், கம்பனும், இளங்கோவும், வள்ளுவரும். ஒவ்வொரு வருடமும் ஏதாவது பரிசு அதில் கிடைத்து விடும். எழுத்து..? இல்லவே இல்லை.

முதன் முதலில் கற்பனை கலந்து எழுதியவை, மூன்று நாவல்கள்.(என்று நானாக நினைத்துக் கொண்டேன்.)

அப்போது ராஜேஷ்குமார் பைத்தியம் பிடிக்க ஆரம்பித்துப் பித்து முத்திப் போய்க் கொண்டிருந்தது. வீட்டிலும் அனுமதி இருந்தது. செக்ஸ் இன்றி, வன்முறை இன்றி இருந்த ஒரே கிடைத்த புத்தகங்கள் அவருடையது. சுபா, பி.கே.பி., கொஞ்சம் அவற்றைத் தொட்டுத் தான் எழுதுவார்கள். வாத்தியார் என்று ஒருவர் இருந்ததை யாரும் சொல்லவேயில்லை.

ராஜேஷ்குமார் பாதிப்பில் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் ரத்தம் சிந்த எழுதினேன். மூன்றும் மூன்று வெரைட்டி. முதல் கதை சபையர் லாட்ஜில் நடக்கும் ஒரு கொலை என்றால், இரண்டாவது பக்க கிராமத்து ப்ளாட். அதில் முதல் சேப்டரில் வாய்க்காலில் ரத்தம் கலந்து ஓடும். மூன்றாவது நினைவில்லை. அந்த டைரி தொலைந்து விட்டது. வைத்திருப்பவர்களுக்கு யாருடைய பாதி ராஜ்யமாவது கிடைக்கட்டும். :)

ஏழாம் வகுப்பில் வெண்பா எழுதுகிறேன் பேர்வழி என்று சொல்லி, ஒன்றை எழுதிக் காட்ட, அவர் யாப்பை விளக்க, விட்டால் போதும் என்று விலகினேன். பேச்சுப் போட்டிகளில் போட்டி அதிகமாகிய போது கையெழுத்து கொஞ்சம் பார்க்கும்படி தோன்ற ஆரம்பிக்க, ட்ரான்ஸிஷன் போல் கட்டுரைப் போட்டிகளுக்கு நகர்ந்தேன்.

ஒன்பதாம் வகுப்பில், லீலாவதி டீச்சர் வரவில்லை. லஞ்ச் முடித்த மோனத் தவ நேரம். நானும் சதீஷும் சும்மா வெளியே வரக் கிளம்பினோம். பதினொன்றாம் வகுப்பறையில் ஏதோ ஒரு கட்டுரைப் போட்டி என்றார்கள். 'சரி..! சும்மா தானே இருக்கிறோம்' என்று இருவரும் போனோம். தலைப்பு, 'அறிவொளி இயக்கப் பணிகள்'. எனக்கு கிக் ஏறியது. காரணம் அந்த வாரக் கடைசியில் தான் பவானி கிளை நூலகத்தில் அறிவொளி இயக்கத் தளத்தில் ஒரு குறுங்கதை படித்திருந்தேன். ஒரு கிராமத்திற்கு ஆசிரியரும், சில மாணவர்களும் இயக்கம் சார்பாகப் போய், முதலில் கொஞ்சம் அடி வாங்கிப் பின் தியாகம் செய்து கிராம மக்களைத் திருத்திக் கல்வி புகட்டி....they live happily thereafter.

போர்க்களம் நுழைந்த வேழம் போல் புகுந்து் போட்டிக்குப் பெயர் கொடுத்து எழுத ஆரம்பிக்க, கற்பனை வெள்ளம் ஐஸ்லாந்து எரிமலைப் புகை போல் எட்டுத் திசைகளிலும் பாய்ந்து பரவும் வகையில் எழுதப் போய்..

"ஸார்..! எக்ஸ்ட்ரா ஷீட் சார்..!"

"திரும்பத் திரும்பக் கேக்கற நீ..!" என்றார். முதல் பரிசு கிடைத்தது.

சோகமித்திரக் கவிஞர்கள் சொல்வது போல், 'நிராசையின் வலியும், புறக்கணிப்பின் கசப்புகளும்' கிடைத்த போதெல்லாம் கவிதைகள் எங்கிருந்தோ பாய்ந்து வந்து என் நோட்டுப் புத்தகங்களில் விழுந்தன.

பிடித்த ஒரு சிறு கவிதை :

"என்னைத்
தவிர்க்கப் பார்ப்பதிலும்
தள்ளி
வைப்பதிலும்
நீ
சொல்லும்
பொய்களின்
சாயம்
வெளுக்கும் போதெல்லாம்
கூசிப் போவது
நீயில்லை..!"

கவிதைகளில் திளைத்துப் பின் மிக லேசான சலிப்பு அதில் ஏற்பட்ட போது, தபு சங்கரின் அரை உரை வடிவக் காதல்களின் வடிவில் பிரியம் ஏற்பட்டு அந்த பாட்டிலுக்குள், சரக்கை ஊற்றிக் கொண்டிருந்து விட்டு, 2006-ல் பதிவுகளுக்கு வந்தேன்.

எத்தனை பதிவுகள்..!! அவற்றுள் எத்தனை உருப்படியான எழுத்துக்கள்..!

தேன்கூடு போட்டிகளில் இறங்கும் போது தான், சிறுகதை வடிவத்தில் எழுத ஆரம்பித்தேன். அந்த வகையில் முதல் கதை :: "ங்கா...ங்கா..". அப்போது வெறும் உரையாடல் மட்டும் கொண்டு எழுதுவது சொகுசாய் இருந்தது. மற்றொன்று :: இன்னா சார்?

பிறகு பல சிறுகதைகள். வெவ்வேறு தளங்கள். அறிவியல் கதை, வரலாறு, சில குறுநாவல் முயற்சிகள், ஆங்கில நாவல் முயற்சி....! பல தோல்விகள்; சில வெற்றிகள்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வரும் கதைகள் எனக்கே பிடித்தவை, எழுதிய போதும், மீண்டும் வாசகனாகப் படித்த போதும்..! அதுவரை எனக்குத் திருப்தி.

அந்தத் தோழி சொன்னது :


*: EXactly... wonderfulll
me: is this a sarcastic tone..? :)
*: My god... not at all
8:43 PM see... i am so happy.... bcoz i dnt read tamil.... its after ur blog i read a few
me: aah...thanks ***...its a real big compliment to me...


இரவுக் காட்டுக்குள் தனி வேடன் எய்தக் கூர் அம்பினைப் போல் எழுதியது எதையும் மொழி வீணாக விட்டு விடுவதில்லை. வீணான எதையும் எழுதி விடக் கூடாது என்ற பயம் தான் அதிகம் ஆகியிருக்கின்றது.

Wednesday, April 21, 2010

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.



சென்னையில் தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் ஏப்ரல் 30 வெள்ளி மாலை 5:45 மணிக்குத் திரிசக்தி பதிப்பகத்தினரால் பனிரெண்டு நூல்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக என் சிறுகதைத் தொகுப்பான 'கிளி முற்றம்' வருகின்றது.

எனவே, சென்னையில் அந்நன்னாளில் இருக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் குறித்து வைத்துக் கொண்டு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமாய் வரவேற்கிறேன். சென்னையில் இருக்க வாய்ப்பில்லாதவர்கள், எப்படியாவது முயன்று நிகழ்ச்சிக்கு வரப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இடம் :: தேவநேயப் பாவாணர் அரங்கம், சென்னை - 2.

நாள் :: 30.ஏப்ரல்.2010.

நேரம் :: மாலை 5:45.