Wednesday, March 25, 2015

புத்தகம் - சில எண்ணங்கள்.

BookBozz என்ற இணைய வழி நூல் விற்பனையகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் புத்தகம் பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். அங்கே எழுதியதை இங்கே ஒரு பிரதி எடுத்து வைக்கின்றேன்.

***

புத்தகம்.

சமீபத்தில் மொழி தொடர்பான இரு செய்திகளை அறிய நேர்ந்தது.
தமிழ்த் திரையிசைப் பாடல் இயற்றுனரான மதன் கார்க்கி, தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் சில சீரமைப்பு முயற்சிகளைச் செய்து வருவதாகப் படித்தேன். தற்காலப் பயன்பாட்டில் இருக்கும் எழுத்துக்களில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், நவீன கால மற்றும் வருங்கால மாற்றங்களுக்கு ஏற்ப நம் மொழியைத் தகவமைக்க அவருடைய யோசனைகள் பயன்படலாம் என்பது அவருடைய நோக்கம்.
மற்றொன்று, படுக மொழிக்கான தனித்துவ எழுத்து வடிவங்களை மற்றும் இலக்கணத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை படுக சமூகத்தினரிடையே எழுந்து வருக்கின்ற செய்தி. நீலகிரி வனப் பகுதியைச் சேர்ந்த பல பழங்குடியினரில் ஒரு குடி இம்மக்கள். நாடு விடுதலைக்குப் பின், அரசு அளித்த பற்பல சலுகைகளைப் பயன்படுத்தியும் தம் ஆர்வம் மற்றும் முயற்சிகளாலும் முன்னேறி வருகின்றனர். தம் நடைமுறை வாழ்வுக்குப் பெரும்பாலும் கர்நாடக வனப்பகுதியில் வாழ்ந்து வருவதால், இயல்பாகவே படுக மொழி கன்னட எழுத்துக்களையும் இலக்கணத்தையுமே பயன்படுத்தி வந்துள்ளனர். இன்று எழுந்து வரும் புதிய தலைமுறையினர் தமக்கான தனித்த வடிவத்தைத் தம் மொழி கொண்டிருக்க வேண்டும் என்ற இயல்பான விருப்பத்தைச் செயலாக்க முயல்கின்றனர்.
ஒரு மொழி என்பது அடிப்படையில் எண்ணப் பரிமாற்றத்திற்கான ஒரு கருவி. மொழி உருவாகத் தொடங்கிய காலத்தில் இந்த வரையறை பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த எளிமையான தேவை மட்டும் ஒரு மொழியின் இருப்புக்கான நோக்கமாகக் கருதப்படுவதில்லை. ஒரு மொழி வளர வளர, அதன் பயன்பாட்டுத் தளங்கள் விரிய விரிய, அம்மொழியைப் பயன்படுத்தும் சமூகம் பெருகப் பெருக, பிற சமூகங்களுடன் அச்சமூகம் கொள்ளும் நெடுங்கால உறவுகள் அம்மொழியை வளப்படுத்திக் கொண்டு வருகின்றன. அந்நிலையில் ஒரு மொழி, அச்சமூகத்தின் இறந்தகாலத்தின் பண்பாடு திரண்ட சாற்றைச் சுமக்கின்ற பெருங்குவளையாகவும், நிகழ்காலத்தின் உயிர்த்துடிப்பான கலந்துரையாடலுக்கான ரசவாத பானமாகவும், எதிர்காலத்தின் கனவுகளைப் புனைகின்ற கருவியாகவும் உள்ளது.
”நம்பிப் பணம் கொடுத்தேன்... இப்ப கேட்டா இல்லவே இல்லைங்கிறான்... நல்லா காது குத்திட்டான்...”. இந்த வாக்கியத்தில் இருக்கும் ‘காது குத்தல்’ என்ற சொற்பிரயோகம், ஒரு பண்பாட்டுச் செயலைக் குறிக்கின்றது. முற்காலத்தில் யாரிடமும் பொன் இருக்கின்றதோ, அவர்களே காது குத்திக் கொண்டு தம்மை ஆபரணங்களால் அலங்காரம் செய்து கொள்வார்கள். எனவே திருட்டுத் தொழில் செய்தவர்கள், காது குத்துபவர்கள் போல் வேடமிட்டுக் கொண்டு, பகலில் ஊருக்குள் யாரெல்லாம் தம்மை அழைக்கிறார்கள் என்று கவனித்து அவர்களுடைய வீடுகளைக் குறித்துக் கொண்டு போய் விடுவார்கள். பின்பு, இரவில் அந்த வீடுகளில் கன்னமிட்டுக் கொள்ளை அடித்து மறைந்து விடுவர். இதனாலேயே ஏமாற்றுதல் என்பதற்கு நம் மொழியில் காது குத்தல் என்ற மறைபொருள் சொல் வந்து சேர்ந்தது. எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ என்ற புதினத்தில் இது தொடர்பான அதிகத் தகவல்களைப் படிக்கலாம்.
ஒரு மொழி நெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது என்பதை அறிவதற்கான ஒரு வழி, அதன் எளிமை. ஒரு வாகனத்தை ஓட்டப் பழகுகையில், விரைவே நம் இலக்காக இருக்கும். வாகனத்தின் இயக்கம் முழுக்க நமக்குப் புலப்பட்டு நம் கைகளுக்குப் பழகிய பின், விரைவு அல்ல, நிதானமான ஓட்டமே இயல்பான இயக்கமாக இருக்கும். அது போல, பழங்கால மொழி, பற்பல தலைமுறையினரால் செம்மைப் படுத்தப்பட்டு, செழுமை செய்யப்பட்டு, எளிமையாக இருக்கும். திருமணமான புதிதில் துணைவருக்கு நம் கருத்தைப் புரிய வைக்க, நம் மனநிலையைப் பகிர சில மணிநேரங்கள் எடுத்துக் கொள்ள நேரிடும். பல்லாண்டுகளுக்குப் பின் ஒரு சிறு செறுமலோ, புருவம் உயர்த்தலோ, உதடு பிரியாப் புன்னகையே போதுமானது, அல்லவா?
காற்றில் உலவும் ஓசையின் புற வடிவம் எழுத்து. எழுத்துக்களின் கூட்டிணைவு சொல். அவ்விணைவு, அச்சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு பொருளைத் தாங்கி நிற்கின்றது. சொற்களின்தொடர் சொற்றொடர் அல்லது வாக்கியம். வாக்கியங்களின் வரிசை பத்தி. பத்திகளின் தொகுப்பு புத்தகம். ஒரு புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் கூர்மையான நுனி கொண்ட ஒரு குறுவாள். ஒரு புத்தகத்தைப் படிப்பதன் மூலம், நம் மூளையின் மேல் அவ்வாட்களால் கீறிக் கொள்கிறோம் எனலாம். நவீன நரம்பியல், மனித மூளையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகக் கீறல்கள் இருக்கின்றனவோ, அவ்வளவு இயக்கமும் அறிவும் கொண்டதாக அம்மூளை விளங்கும் என்கின்றனர்.
நிறைய புத்தகங்களைப் படிப்பது நிறைய நிகர் வாழ்க்கைகளை வாழச் செய்கின்றது. காலத்தாலும் இடத்தாலும் ஒரு புள்ளியில் பொருத்தப்பட்டிருக்கும் நம் உடல் மற்றும் எண்ணங்கள் இவ்வாழ்வை மீறிச் செல்ல இயலாது. ஆனால் நன்கு சொல்லப்பட்ட ஒரு புனைகதை மாற்று வாழ்க்கை ஒன்றில் நம்மை நிறுத்தும்.

நூல்கள், என்றும் விலகா நண்பர்கள். அவர்களை நிறைய சேர்த்துக் கொள்வோம்; வாழ்வை வண்ணமாக்குவோம்.





***





https://www.facebook.com/bookbozz/posts/812687202134759?pnref=story