மெளனமாய் மழை பெய்து கொண்டிருந்தது. சென்னை வானம் இன்னும் கருமை பூத்திருந்தது. நேரம் மதியத்தைத் தொட ஓடிக் கொண்டிருந்தது.
இரு தலையணைகளைஅடுக்கிச் சுவரில் சாய்த்து, போர்வையை கழுத்து வரை போர்த்திக் கொண்டிருக்கிறேன். எழுந்து என்ன செய்வது? ஓய்வறியா பண்பலை ஒன்று பழைய பாடல்களை ஓட்டிக் கோன்டிருக்கிறது.
கலைந்து போன அறைகள். அழுக்குத் துணிகளும், அயர்ன் ஆடைகளும் , பழைய செய்தித் தாள்களும், புதிய புத்தகங்களும், கழுவிய பாத்திரங்களும், கழுவாத பாத்ரூமும் இரைந்த வீட்டில் நான், தனிமையில்..!
நகர்த்த முடியாத மெளனம் மட்டும் நிறைந்து இருக்கின்ற தனியர்கள் அறையில், நான் மட்டும் தனியாக..!
வானம் மேலும் கருக்கிக் கொண்டு வரும் போல் இருக்கிறது.
இன்னும் எத்தனை காலம் தான் தேடுவது? இரையும் கடலில் உப்பாய்க் கரைந்து போய்க் கொண்டிருக்கின்றன என் காலங்கள்.
மடித்த லுங்கியும், மடியாத தலையுமாய் வெளியே எட்டிப் பார்க்கிறேன். சாலையோர நதிகள், சகதியாய் நிறைந்து, சாக்கடையோடு கலந்து....
கதவை இறுக்கச் சாத்திய பின், உள் நுழைகின்ற இருளில் என்னை மறைத்துக் கொள்கிறேன். பண்பலையின் பகல் நேரப் பாடல்கள், நகராப் பகல் பொழுதின் கனத்தை என் மேல் அழுத்துகின்றன.
மூச்சுத் திணறி, முனகி, தத்தளித்து, தான் தவித்து இயல்பிற்குத் திரும்புகையில், வெல்ல முடியாத அரக்கனின் நிழலாய் என்னைச் சூழ்கின்றன, காலியான வயிறும், காற்றில் படபடக்கும் வெற்றுப் பாக்கெட்டும்..!
காலையின் நீர்த்துளிகள், நிறைத்த வயிற்றின், காலிப் பகுதிகளை மதியத்தின் அகோரப்பசி கொல்கின்றது.
மிஞ்சிப்போன ஊறுகாய்ப் பாக்கெடுகள், ஆடைப் பூண்ட காலைச் சூட்டுப் பால், நண்பர்களின் சிதறிய சிதறல்களிலான சில்லறைகள்... எடுத்துக் கொண்டேன், போதும். இன்று மதியத்திற்கான, மிக்சர் பாக்கெட்டுடன் முடிக்க நினைக்கின்றேன், நான் தீர்க்க முடியாத என் அகோரப் பசியின் வெறுப்பு.
வியர்வை வழிய, முட்டி, முனகிப் போராடி, கை வழுக்கி, எழுந்து, விடாமுயற்சியுடன் நகர்த்தியதில், காலத்தின் முள்கள் நான்கைத் தொட்டன.
விரைந்து செல்கிறேன், அருகு நூலகத்திற்கு. என் பசியைக் கொல்லும் மாத்திரைகள், புத்தக வடிவிலாய்..! அரக்கப் பரக்கப் படிக்கிறேன். மறக நினைத்தும் முடியாமல் ஒளிந்து நின்று பார்க்கிறது, காய்ந்த வயிற்றைக் கிள்ளும் பெரும்பசி.
நிழல் கண்டு பயந்து ஓடும் சிறுவனாய், பசியிலிருந்து தப்பிக்க ஓடுகின்றேன், புத்தகங்களின் பக்கங்களில் என் முகத்தைப் புதைத்துக் கொள்ள..!
தாண்டி விட்ட நேரத்தைச் சொல்லி, நூலகம் பூட்டப்படுகையில், ஏளனச் சிரிப்புடன் எட்டிப் பார்க்கின்றது, நான் ஏமாற்றி விட்டதாய் ஏமாந்து கொண்ட பசி.
நண்பர்களின் ஏளனப் பார்வையோடு, என்னை வரவேற்கின்றது, அறை. வயிறு முட்ட நீர் அருந்தி விட்டு, இறுக்கிப் போர்த்திக் கொண்டு எண்ணுகிறேன்...
' மிகவும் நீளமானது எது தெரியுமா..? நைல் நதியோ, கங்கை நதியோ அல்ல.. வேலை இல்லாதவனின் பகல் பொழுது...'
எங்கேயோ படித்த வரிகள், என் வாழ்க்கையின் மேல் வர்ணம் பூசிக் கொண்டிருக்கின்றன.
உணர்ந்து கொண்டேன்.. வெறுமை என்பது வேறு ஏதுமல்ல.
கொம்பு முளைத்த வறுமை - 'வெறுமை'.
இந்த வரிகள், நான் வறுமையின் பிடியில், வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கையில் எழுதியன.
என் காலம் வருகையில், ஆணவம் என்னைப் பற்றக் கூடாதென்று சேர்த்து வைத்திருந்தேன். வானம் அளவு நான் விஸ்வரூபம் எடுக்கும் போது, என் கால்கள் பூமியோடு புதையச் செய்ய நான் நினைவு வைத்திருக்கும் வரிகள்.