Saturday, January 16, 2010

தமிழ் டைட்டானிக்..!!

தை நிறைய பேர் முன்பே பார்த்திருக்கலாம். மற்றும் ஒருமுறை பார்க்கும் போதும், சிரிப்பு பிச்சுக் கொண்டு வருகிறது.





Thalaivar ROX....!!!!!!!

யக்குநர் ஷங்கரின் தளத்தில் 'எந்திரன்' ஸ்டில்களைப் பார்த்தால், ரத்தம் எகிறுகின்றது. அத்தனை துல்லியமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றது ஒரு மெகா விருந்து. தலைவருக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு வயது குறைந்து கொண்டே போகின்றது.


















வாத்தியார் இருந்து பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் என்று நினைத்துப் பார்க்க ;(!!!

நகுமோ - தவற விட்ட பாடல்.

முத்து மற்றும் படையப்பாவின் பிரம்மாண்ட வெற்றிகளுக்கு இடையே சுமார் என்று சொல்லத்தக்க வகையில் வெளிவந்து ஓடிய படம், அருணாச்சலம் என்று நினைக்கிறேன். அதனால், பாடல்களும் அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லாமல் போய் விட்டன.

இன்று மிக யதேச்சையாக 'நகுமோ' பாடலைப் பார்த்த போது, இவ்வளவு அழகான மெலடியாக இருக்கின்றதை எப்படி மிஸ் செய்தேன் என்று ஆச்சரியப்பட்டேன்.

சரணங்கள் என்ன ஒரு துள்ளலான இசை..! வரிகளும் இசையின் குறுக்கும் நெடுக்குமான இடைவெளிகளுக்குள் எவ்வளவு இயல்பாகத் தெளிக்கப்பட்டிருக்கின்றன!!

ஹரிஹரன், சித்ராவின் தேன் குரல்களில் அவர்களே சொல்வது போல், கேட்பதற்குச் 'சுஹமாகத்' தான் இருக்கிறது.

Friday, January 15, 2010

'ஆயிரத்தில் ஒருவன்' கதையின் கொஞ்சம் ஒரிஜினல் எது?

பாண்டியர்களிடம் இருந்து தப்பித்த சோழ வம்சத்தினர் வியட்நாம் அருகே ஒரு தன்னந்தனித் தீவில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் நிகழும் ஆதாரத் தளம்.

இதற்கான மூலக்கருவை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒருவர் ஒரு குறுநாவலாக எழுதி இருக்கிறார். யார் தெரியுமா..? கல்கி.

'மோகினித் தீவு' என்ற அந்த அற்புதமான படைப்பைப் படித்தால் ஆதாரம் அகப்படும்.

46 பக்கங்கள் கொண்ட அந்தச் சிறு நூலைச் சுருக்கமாகச் சொல்கிறேன். விரும்பாதவர்கள், இந்தக் கண்ணியைக் க்ளிக்கித் தாங்களே படித்துப் பார்க்கலாம். அரை மணி நேரம் தான் ஆகும்.

சுருக்கம் :

இரண்டாம் உலகப் போரின் போது, பர்மாவிலிருந்து தப்பிக்கும் தமிழர்களை ஏற்றிக் கொண்டு வரும் கப்பல், ஜப்பானிய க்ரூஸர் எதிர்வருகின்றது என்ற செய்தியை நம்பி, சென்னையை நோக்கி வரும் வழக்கமான பாதையை விட்டு, இலங்கைக்குத் தென்கிழக்கே மூன்று நாள் பயணத் தூரத்தில் இருக்கும் 'மோகினித் தீவில்' ஒதுங்குகின்றது.

பயணிகளில் சிலர், அந்தத் தீவைப் பற்றிக் கேப்டனிடம் கேட்டு, ஆர்வமாகித் தீவிற்குள் சென்று பார்க்கிறார்கள். சிறிது நேரம் கழித்து எல்லோரும் திரும்பி விட, ஒருவர் மட்டும் அங்கேயே தங்குகிறார்.

அப்போது ஓர் அழகான யுவதியும், யுவனும் அவரிடத்தில் வந்து ஒரு கதையைச் சொல்கிறார்கள்.

சோழ தேசம் சிறு அரசாக மாறிய காலத்தில், மதுரையில் பாண்டிய ராஜ்ஜியம் கோலோச்சுகின்றது. இருவருக்கும் இடையே முட்டிக் கொள்ள, பாண்டியர் சோழ அரசரைச் சிறைப்பிடித்துச் சென்று விடுகிறார். அவரிடமிருந்து தந்தையை மீட்க, சோழனின் மூத்த மகனாகிய சுகுமாரச் சோழர், ஒரு சிற்ப மாணாக்கன் போல் மதுரையில் ஊடுறுவித் தந்தையைச் சிறை மீட்கிறார். அதற்குப் பாண்டிய இளவரசி 'புவனமோகினி'யை ஏமாற்றுகிறார். ஆனால் அதற்குள்ளாகவே இருவருக்கும் இடையே காதல் அரும்பி விடுகின்றது. சோழ அரசரைத் தப்பிக்கச் செய்த சிற்ப மாணாக்கன் சோழ இளவரசனே என்றும் புவனமோகினிக்குத் தெரிந்து விடுகிறது.

தப்பித்த சோழன் படையைத் தயாரித்து, மதுரை மேல் படையெடுக்க, அச்சமயம் பாண்டியர் நோய்வாய்ப்பட்டிருக்க, ஏமாற்றியவனைப் பழி வாங்க, இளவரசியே போர்க்களத்திற்கு வருகிறாள். ஆனால், சிறைப்படுகிறாள். சுகுமாரச் சோழன் தந்தையிடம் தன் காதலைச் சொல்ல, அவர் 'பாண்டிய பெண்ணைச் சோழ சிம்மாசனத்தில் அமர விட மாட்டேன்' என்று மறுத்து விடுகிறார்.

'எங்கள் காதலை விடச் சோழம் எனக்கு முக்கியமில்லை' என்று சொல்லி விட, அவர் மனம் கனிகிறார். தனியாய் ஒரு சாம்ராஜ்யம் அமைத்துக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டு, சுகுமாரச் சோழனும், புவனமோகினியும் கப்பலேறி இந்தத் தீவுக்கு வந்து, எழுநூறு ஆண்டுகளாக அன்னியோனிய தம்பதியாக அழியாது, சிற்பக்கலையால் மோகினித் தீவையே கலைலோகமாக்கி, என்றும் குறையாத காதலோடு வாழ்கிறார்கள்.

'ஆயிரத்தில் ஒருவனை' உருவாக்க இந்த அளவுக்குக் கரு போதாது...?

Wednesday, January 13, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா...



ச்சை ஃப்ராக்கில் கன்னல் விழி கஜோல் கனிந்து அழைத்த வெண்ணிலவு, விண்ணைத் தாண்டி வந்தே விட்டது...!


அ. ஓமணப் பெண்ணே...

புத்திஸக் கோயில் மணிகள் கொஞ்சமாய் ஒலிக்கத் துவங்கும் பாடல், 'ஜல்...ஜல்...' ஜரிகை ஓரத்தில் அசைய, 'பீட்' சாலையில் மெல்ல அடியெடுத்து வைத்து, பென்னி தியோலின் மென் குரலில் 'ஆஹா...அடடா...' என்று ஆரம்பித்துக் குளிரான மல்லிகைப் புகைகையாய் மணக்கிறது. 'ஓமணப் பெண்ணை' பல விதங்களாகப் பிரித்துக் கெஞ்சும் பென்னியின் வார்த்தைகளுக்கு இணையாக, நாற்பதாம் விநாடியிலிருந்து குட்டியாய் நாதஸ்வரத் துளிகள் சொட்டிக் கொண்டே வந்து, இறுதி நெருங்குகையில் 'தனி'யாக எழும்பிப் பின் கடைசி வரை தொடர்ந்து ஓர் இளம் காதலை வாசிக்கின்றன.

கல்யாணி மேனனின் ஸ்லாங்கில், கண்ணனைப் பாடும் வரிகள் மேக போதையில் இன்னும் மழை சேர்க்கின்றன.

மரகத தொட்டிலில்
மலயாளிகள் தாராட்டும் நின்னழகே!!!

மாதங்ங தோப்புகளில்
பூங்குயில்கள் இன்னு சேர்ந
புல்லாங்குழல் ஊதுகையான...
நின்னழகே... நின்னழகே...

லியோ காஃபிக் கால ரஹ்மானை இப்பாடலில் மீண்டும் உணர்கிறேன்.


ஆ. அன்பில் அவன்...

ஒரு பெப்பி பாடல். துள்ளிக் குதித்து நடனமிடச் செய்யும் அதிரடி இல்லை. எளிமையாக ரிப்பீட் அசைவுகளை ஆடிக் கொண்டே (கிட்டத்தட்ட சல்ஸா வகை) அவள் இடையை வலது கையால வளைத்து, இடது கைகளைக் கோர்த்துக் கொண்டு, நெருங்கி, முத்தமிட்டு, 'டெக்கி சுப்ரபாதத்தில்' துவங்கும் இப்பாடல் முழுவதையும் முடித்து விடலாம்.

உயிரே, உன்னை...உன்னை எந்தன் வாழ்க்கைத் துணையாக ஏற்கின்றேன்...ஏற்கின்றேன்.
இனிமேல் புயல் வெயில் மழை, பாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே..!


பால் குடத்தில் மிதக்கும் ஈக்களாய், ஆரம்ப வரிகள் கவித்துவமே இல்லாமல் மிகச் சாதாரணமாக இருக்கின்றன. இன்னும் கொஞ்சம் உழைப்பை வரிகளுக்குக் கொடுத்திருக்கலாம்.


இ. விண்ணைத் தாண்டி வருவாயா...

கார்த்திக் நடுக்கம் மிதக்கப் பாடும் இது, டைட்டில் பாடலாக இருக்கலாம். ரஹ்மானையும் கிடாருக்கு மாற்றி விட்டார் கெளதம். ஆரம்பமே அழுத்தமாக அதிர்கின்றன கம்பிகள். கஞ்சத்தன இசை, இப்பாடலில் பெளர்ணமி வெள்ளத்தின் கீழ் வெண்பட்டுத் துணியாய் மினுக்குகின்றது.


ஈ. ஹோஸன்னா...

இணையத்தில் முன்பே வெளியாகி ஷ்யூர் ஹிட் ஆகி விட்ட பாடல். ஃப்ளூட் போன்ற மயக்கத்தில் ஆரம்பிப்பதை 1/3 நிமிடத்தில் 'பீட்' தன்வயப்படுத்திக் கொள்கிறது. Suzanne-வின் ஜில்லான குரல், கனவில் பஞ்சு மேகத்திலிருந்து கை நீட்டும் ஏஞ்சல்களின் தடவலாய் ருசிக்கின்றது. வயலின்கள் கோரஸாக இசைத்து, விஜய்ப்ரகாஷ் முடிக்கும் போது, ப்ளேஸி உள் நுழைந்து விரல் சுழற்றிச் செல்கிறார். காதலிகளுக்கு ரிங் டோனாக விரைவில் ரெக்கார்ட் செட் செய்யும் என்று எதிர்பார்க்க வைக்கின்றன, இடையே இடையே வருகின்ற 'ஹலோ...ஹலோ..'க்கள். ரொமான்ஸுக்கென்றே அவதரித்த பாடல்.

ஆரம்பத்தில் அலைபாயும் ஃப்ளூட் இசையைக் கேட்டதும் எனக்கு என்னவோ, Indian Dreams Sacred Music-ன் இசை நினைவுக்கு வந்தது.


உ. கண்ணுக்குள் கண்ணை...

ஒரே ஒரு நடனப் பாடல். வேறென்ன சொல்ல...!!!


ஊ. மன்னிப்பாயா...

ஷ்ரேயா கோஷல் 'முன்பே வந்தது போல்' மீண்டும் கத்திக் குரலால் ரத்தத் துளிகளைப் பூக்க விடுகிறார். ரஹ்மான் களம் அமைத்துக் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டாற்போல் தெரிந்தாலும், 'சந்தோஷக் கண்ணீரே...' குரலில் கரைந்து உருகும் இடம் மஸ்லின் போர்வையாய் வருடுகின்றது. மன்னிப்பு கேட்கும் வரிகளுக்கிடையே சட்டென்று 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்று குறள் கசிகின்றது. காய்ந்து போன பொக்கேகளையும், கீ செயின்களையும், பழுப்பாகிய ஒற்றை மல்லிகைச் சருகையும் கண்ணீரில் நனைக்கும் போது, செவி வழி இறங்கிச் சமனப்படுத்தும் பாடலின் இறுதியில் கீபோர்ட் கறுப்பும் வெள்ளையுமாக ஒலித்து மெல்ல அடங்குகின்றது.


எ. ஆரோமலே...

கிடார் ஸ்ட்ரிங்குகளில் பாதரச நயாகரா தெறிப்பதில், ஏறக்குறைய அடிமையாகி விட்டேன். வெஸ்டர்ன் விளையாடும் போது, கிடார் நரம்புகள் ஊடுறுவித் துடிக்க சோகத்தின் முழு பிம்பமும் நடுங்குகின்றது. மலையாள வரிகளும், ரிதம் படர்ந்த தளத்தில் 'ஆரோமலே....' என்று அலறும் அல்போன்ஸின் அடிவயிற்றுக் குரலும், லேசாகத் தெளிக்கப்பட்ட கர்நாட்டிக்கும், எங்கோ தொலைவில் கதறும் ஷெனாய் பாஷையும்.... மிக மிகப் புத்தம் புதிய கண்ணீர் தேசத்தில் என்னை எறிகின்றன. ரகசிய நிலா நேரங்களில் கேட்க வேண்டியது இது.

அத்தனை பாடல்களும் ஜன்னல் மேல் நகரும் மழைத்துளிகள் போல் குளுமையாய் இறங்குகின்றன.

Monday, January 11, 2010

இந்திய அறிவியல் மாநாடு - 2010.

லைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாநாடு ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும். இந்த ஆண்டு (97-வது மாநாடு ) பிரதமர் சிங் துவங்கி வைக்க, ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 3லிருந்து 7 வரை திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்தில் ( கார்யவட்டம் கேம்பஸ் ) நடைபெற்றது.

'முத்துடைத் தாமம்' என்றெல்லாம் இல்லாமல், கார்பெட் ஷீட் போட்ட பிரம்மாண்ட பந்தற்கீழ் கண்காட்சி நடைபெற்றது. 'Stealing the Show' என்று ISRO அள்ளிக் கொண்டது. நடுவில் ஒரு பெரிய ஸ்டால் கட்டி, சந்திராயன் வீடியோக்கள், நவீன ஸேட்டிலைட் வடிவ மாதிரிகள் என்றெல்லாம் சுற்ற வைத்தார்கள். ஓரத்தில் ஒரு மாதிரி ராக்கெட் சீறிப் பாயும் போஸில் நிற்க, காதலர்கள் காதலிகளுடன் 'காதல் வானிலே... காதல் வானிலே...' என்று பாடிக் கொண்டே அதன் மேல் ஒய்யாரமாய்ச் சாய்ந்து, போஸ் கொடுக்க, நண்பர்கள் 'க்ளிக்'..!

கேரளப் பயிர்க் கல்லூரியின் வெவ்வேறு பிரிவுகளில் 'கொழுகொழு' ஹைப்ரிட் கோழி வளர்த்து, டெமோவுக்கு காட்ட, கூண்டுக்குள் அது ஒண்டி நின்று எங்களை வேடிக்கை பார்த்தது.

மண்ணே தேவையில்லாமல், தேங்காய் நாரிலேயே அக்ரியில் உருவாக்கிய சில கெமிக்கல்களைச் சேர்த்து,செடி வளர்ப்பதால், மண் மாசுபடுதலைத் தவிர்க்கலாம், அதே சமயம் மறுசுழற்சிக்கும் தயார் படுத்தலாம் என்று ஒரு பெண்மணி விளக்க, கூட அமர்ந்திருந்தவர் செல்போன் விளையட்டில் பிஸியாக இருந்தார்.

சதீஷ் தவான் அவர்களைப் பெருமைப்படுத்தித் தனியாக ஒரு ஸ்டால். அதில் அவர் பணிகளைப் பாராட்டும் இந்திரா, கலாம் புகைப்படங்கள்; அவர்களது பாராட்டுரைகள்; அவரது பொன்மொழிகளென்று பெய்ண்ட் பூசி வைத்திருந்தார்கள். சுற்றியும் எல்.ஈ.டி. விளக்குகள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.

வீடியோகான் தனி ஸ்டாலில் ஸேடிலைட் டிஜிட்டல் எல்.ஸி.டி., என்று ஆரவார விளம்பரம் இருக்க, ஆர்வமாய் விசாரித்தால், வெளியே இருக்கும் செட்டாப் பாக்ஸை டி.வி.மானிட்டருக்குள்ளேயே செட் செய்து வைத்திருக்கிறார்கள். ரூ.26699 லிருந்து பட்ஜெட் போகிறது. மானிட்டர் இஞ்ச் பொறுத்து விலை நிர்ணயம்.

பிரியத்ர்ஷினி அறிவியல் ம்யூஸியத்தின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த ஸ்டாலில் அவதாருக்குத் தாத்தா வகையறா 3-டி காட்சிகள் காட்டினார்கள்.

சந்தடி சாக்கில் பி.எஸ்.என்.எல். இரண்டு ஸ்டால்களைக் கைப்பற்றி கார்டுகளை விற்றுக் கொண்டார்கள்.

காதி பவன் ஸ்டாலில் கதர்த் துண்டுகளும், சட்டைகளும் இன்னபிற நார்ப் பைகளும் தொங்கிக் கொண்டிருக்க, சரசர மணிகள் நிரப்பப்பட்ட குழாய்களைக் குலுக்கி விற்க முனைந்தார்கள்.

அரசுக் கைவினைப் பொருட்கள் ஸ்டாலில் தென்னை மினியேச்சர், குடை சுமக்கும் மஞ்சள் பார்டர் மார்க்கச்சைப்பெண்கள், கதகளி முகம், கோரைப் பாய்கள் என்று மாறாமல் கேரளப் பண்பாட்டைக் கடை விரிக்க, அதற்கு எதிர்ப்புறத்தில் வங்காளத்தில் இருந்து வந்திருந்த ஸ்வாமி பிரபுபாத சைதன்ய மகாபிரபு மடத்தின் ஒரு ஸ்டாலில் சில புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார்கள்.

அறிவியல் கண்காட்சியில் ஆன்மீகத்திற்கு இடம் என்ன என்று பார்த்தால், அத்தனை புத்தகங்களிலும் இரண்டையும் லிங்க் செய்த முயற்சிகள். மாதிரிக்கு ஒன்று படிக்கலாம் என்று 50% தள்ளுபடியில் ஒரிஜினல் ரூ.95, வாங்கிய விலை ரூ45 என்று எடுத்துக் கொண்ட புத்தகம் 'Vedanta and Biotechnology'.

அத்தனை பள்ளிக் கூட்டங்கள்! தைரியமாய்ச் சைட் அடிக்கலாமா என்று ஆசை கொள்ள வைக்கும் சுடிதார் சுந்தரிகள்! பட்டாம்பூச்சிக் குழந்தைகள்! யூனிஃபார்ம் யூத்கள்! யூனிவர்சிட்டி இளம் சிட்டுக்கள்! கேண்டீன்கள்! இரண்டு மணிநேரமும் ஸ்டால்களோடு, கண்களுக்குக் கூல்களாகவும் பார்த்து ரசித்து வெளியேறினால், காக்கிக் காவலர்களோடு, 'Quick Operation' என்ற பெயரில் ஸ்பெஷல் செக்யூரிட்டி போர்ஸினர், ஓபன் ஜீப்பில் கனமான துப்பாக்கியோடு செல்போன்களுக்கு விறைப்பாய் போஸ் கொடுத்தனர்.