Thursday, January 25, 2007

நான் சென்ற நூல் அழகம்.


சென்னையில் இந்த ஆண்டு 30-வது நூல் அழகம் நல்ல முறையில் நடந்து நிறைவுற்றது. ஒரு நாளாவது போய் நூல்கள் அள்ளி வர வேண்டும் என்று நினைத்து, நினைத்து நாட்கள் ஓடிப்போயின. கடைசி நாள்(21.ஜன.2007) தான் போக முடிந்தது. அதைப் பற்றிய ஒரு சிறு பதிவு.

இம்முறை திடல் மிக நன்றாக பரந்து விரிந்து இருந்தது. மேலும் நிறைய ஸ்டால்கள் இருந்தன. எனவே நடந்து முடிக்கையில் கால்கள் போதும், போதும் எனக் கதறியன. விடுவோமா..? வாங்குகிறோமோ, இல்லையோ எல்லா ஸ்டால்களிலும் நுழைந்து விடுவது என்று முடிவு செய்து, அதன் படியே நடந்து கொண்டேன்.

சென்றாண்டு போலவே எல்லாக் கடைகளிலும் இருந்த சில நூல்கள். பொன்னியின் செல்வன், கல்கியின் வரலாற்றுப் புதினங்கள் தொகுப்பு, அக்னிச் சிறகுகள், பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, சேவாஸ் புத்தகங்கள், கவிதை நூல்கள் போன்றன.

இவ்வாண்டு நூல் அழகத்தில் நிறைய பொதுவுடைமை நூல்கள் கண்ணில் பட்டன. சென்றாண்டு நூல் அழகத்திற்கும் சென்றிருந்தேன். அப்போதெல்லாம் அவை கவனம் பெறாமல் இருந்திருக்கலாம். காரணம் சென்றாண்டு இறுதியில் தான் வலையுலகத்திற்கு வந்ததாய் இருக்கலாம்.

எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா (இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்), திலகவதி, தாமரை, 'நக்கீரன்' கோபால் ஆகியோரை வெவ்வேறு ஸ்டால்களில் காண முடிந்தது.

நான் வழக்கம் போல் சில தன் வரலாற்றுப் புத்தகங்களும், சுய முன்னேற்ற நூல்களும் வாங்கினேன். படிப்போமா இல்லையா என்பது வேறு. வாங்கி வைத்துக் கொள்வோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று.

வழக்கத்திற்கு மாறாக பார்க்க முடிந்தவை சில. கலைஞர் கூடம். நன்றாக இருந்தது. அறிவியல் கூடம். பெரம்பூரில் உள்ள 'மாண்ட்போர்டு' பள்ளிக் குழந்தைகள் ஒவ்வொருவரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு விளக்கம் கொடுத்தது நன்றாக இருந்தது. ஆனாலும் கொஞ்சம் நன்றாக கவனித்திருக்கலாம் குழந்தைகளை! மிகவும் களைத்துப் போயிருந்தார்கள். அங்கு எடுத்த சில நிழற்படங்கள் இங்கே: