Monday, November 22, 2010

குஜிலி!



பெருநிலக்கிழார்களையும், குறுநில மன்னர்களையும், பிரபுக்களையும் பாடிக் கொண்டிருந்த தமிழ்ப்புலவர்களின் வரிசையில் கடைசிக் கண்ணியாய் வந்தமைந்த பாரதியார், 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்க் கவிதைகளை பொது மக்களின் புறம் திருப்பினார். மரபார்ந்த வடிவங்களில் கவிதைகள் தத்தம் பாடுபொருட்களை அரசவைகளில் இருந்து அரச மரத்தடிக்கு மாற்றிக் கொண்டன. சுதந்திரம் கிடைத்த பின் பெருகிய கல்விப் பரப்பின் அடியில் துளிர்த்த சமூகத்தின் பசியைத் தணிக்க 'தினத்தந்தி' முனைந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்புச் சங்கிலி போல் அமைந்தவை தாம், படிக்கவும், எழுதவும் கற்றிராத ஆனால் மெல்ல மெல்லத் தம்மைப் பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொள்ளத் துவங்கிய தமிழ்ச் சமுதாயத்தின் சந்து முனைகளில் வழங்கப்பட்ட முச்சந்தி இலக்கியம், பெரிய எழுத்துப் புத்தகம், காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள், தெருப் பாடல்கள் என்றெல்லாம் வழங்கப்பட்ட 'குஜிலி இலக்கியம்'.

பேராசிரியர் டாக்டர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் வெகுசிரமம் மேற்கொண்டு பற்பல பழைய நூல்களையும், பத்திரிக்கைகளையும் தெருப் புத்தகங்களையும் படித்து அநேக மேற்கோள்கள் இட்டு இந்நூலை எழுதியிருக்கிறார் என்பது ஸ்பஷ்டம்.

பொதுவாக சிந்து என்ற வகையிலேயே எளிதாகப் பாடும் வகையில் தெரு முனையில் நின்று இச்சிறு நூல்களை விற்போர் பாடுவதால், பாரதியாரும் 'காவடிச் சிந்து' வகையில் பாடல்கள் பாடியிருக்கிறார். அதனாலேயே 'சந்திலே சிந்து' என்ற இன்றைக்கும் ஜனப்பிரயோக வார்த்தை வந்திருக்கும் என்பது ஊகம்.

குஜிலி என்ற பெயர் தோன்றிய முறையிலிருந்து இவ்வகைப் பாடல்கள் வளர்ந்த விதம், பாடுபொருட்கள், பாடியோர், விற்பனை முறைகள், வாசகர்கள், தேய்வும் வீழ்ச்சியும் என்று அனைத்தையும் குறைவின்றி ஆய்ந்து சுவாரஸ்யமாகவும் விளக்கமாகவும் சொல்லியிருக்கின்றார்.

அக்காலத்தில் நடந்த ஜனங்களுக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடிய அத்தனை விஷயங்களையும் இந்த தெருமுனைக் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். அம்ஸவல்லிகேஸு, மடராஸ் ரெயில் கலகம், கள்ளப்புருஷன் ஆசையால் பிள்ளையைக் கொன்ற கனகம்மாள் துயரம், கிண்டிரேஸ் பாட்டு, சிலோன் கலகச் சிந்து, விளக்கெண்ணைக்கும் கிருஸ்னாயிலென்ற மண்ணெண்ணைக்கும் சண்டையின் கும்மி நல்லெண்ணெய் சமாதானப்படுத்துதல் போன்று பல விஷயங்களிலும் பாட்டுக்கள் எழுதியிருக்கிறார்கள். கோர்ட்டில் ஏதேனும் பிரபலமான கேஸ் நடந்து கொண்டிருக்கும் போது அன்றைன்றைக்குச் சாயந்திரமே தெருக் கவிஞர்கள் அன்றைய விபரத்தைப் பாடலாக்கி விற்றிருக்கிறார்கள்.

வழக்கம் போல் மேல்தட்டு ஜீவிகளால் 'துர்பாட்டுகள்' என்று ஒதுக்கப்பட்ட இவ்விலக்கிய வகைப் பாடல்கள் தேசியம் நோக்கித் திரும்பியதும் தேசநலன் விரும்பிகளால் வியந்தோதப்பட்டன. காந்திச் சிந்து, பகத்சிங் சிந்து, மாப்ளாக் கலவரச் சிந்து என்று பாடுகிறார்கள். வந்தது வினை. ஆங்கில அரசின் கவனம் இவற்றின் மேல் திரும்ப, பல்லாயிரம் குஜிலி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்பட்டதில் கணிசமானவை அழிந்தன.

மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வந்து இப்போது மிக மிக அரிதாக மாறி விட்ட குஜிலி இலக்கியத்தைப் பற்றி ஒரு வரலாற்றுப் பார்வைக்கு இந்நூல் மிக உபயோகமான பதிவு.

உதாரணத்திற்கு ஒரு பாடல்.

ஸ்ரீ வேணுகோபாலன் திருவடிகளே சரணம்

30 - 7 - 22க்கு ஆடி மீ 15உ பாளையங்கோட்டை பெரிய ஜெயிலிலிருந்து செம்புலிங்க நாடார் ஓடிப்போன பாட்டு

இஃது பாளையங்கோட்டை மில்டெரி லயன் புஸ்தக வியாபாரம் S.A.அளகிரிசாமி பாகவதர் பாடியது
பாளையங்கோட்டை செளராஷ்ட சபையார் பொருளுதவி செய்தது
திருநெல்வேலிப்பாலம் ஸ்ரீ காந்திமதி விலாஸம் பிரஸில், அச்சிடப்பட்டது
காப்பி முதற்பதிப்பு 2000
இதன்விலை 1922 அணா1
விருத்தம்

செம்புலிங்க நாடார்மேல் ஜெகமதில் பாட்டுரைக்க அம்புவியோர் இதைக் கேட்டு ஆனந்தமாய் மகிழ நம்பி எனும் வேலனுக்குத் தமையனாம் கணபதியை தும்பிக்கயுடையோனைத் துரிதமுடன் நமஸ்கரித்தேன்.
ஆல்ரெடி சொவுசுக்காரி - என்ற மெட்டு

செம்புலிங்கம் ஓடினசங்கதி சொல்லவேண்டாமா
அதைப்பாட வேண்டாமா
ஊரில்கேள்க வேண்டாமா
மனங்கொள்ள வேண்டாமா

அணாக்கொடுத்து புஸ்தகம்வாங்கிப் பார்க்க வேண்டாமா
பார்த்துநல்ல குற்றங்குரை தெரிய வேண்டாமா

புஸ்தகத்தை வாங்கிப்பார்த்தால் புலன்வெளியாகும்
கவலைகள் தோணும்
யோஜனை உண்டாகும்
புத்தி தடுமாடும்

செம்புலிங்கம் செய்த விஷயம் செவ்வையாய்த் தோணும்
வம்புவந்த வகையதுவும் தென்புடன் காணும்

பாளையங்கோட்டை பட்டாளம் லயன் அளகிரிசாமி
பாடினேன் இதை
தேடியும் நீங்கள்
நாடியுங் கேட்டு

பாடிப்பாடி நாடுகளில் கூடிப்பேசிடுவீர்
ஆடி ஓடிய செம்புலிங்கத்தைத் தேடிக்கண்டிடுவீர்
நொண்டிச் சிந்து

கொள்ளை செய்த குற்றத்துக்காக- மெத்த சள்ளையில்லாமலிருக்க செம்புலிங்கத்தை- சரியான தென்டனை செய்து- சர்க்கார் அடிதண்டாவைக் காலில்மாட்டி- பக்குவமாய்ப் பாளையங்கோட்டை- புது ஜெயில் தன்னிலல்லோ அடைத்து வைத்து- பந்தோபஸ்துகள் செய்து- அவரைப் பகலும் இரவுமல்லோ பாறாவில் வைத்து- சிலகாலம் பார்த்து வந்து அண்ணே- இந்த விதம் நாள்களித்து வரும்போது- எவ்வித காரணத்தாலோ- அங்கு ஜூலை மீ முப்பதாந்தெய்தி யன்று- ஞாயிற்றுக் கிழமை இரவில்- இந்த செம்புலிங்க நாடாரும் காசிநாடாரும்- தேவமார் ரெண்டு பேரும்- அந்த ஜெயிலுக்குள்ளேயிருந்து வெளியேரி- தந்திரமாய் ஓட்டிவிட்டார்- இந்த நல்ல விவரத்தை முன்பக்கத்தில்-அனைவோர்களும் தெரிய யான் செப்பியிருக்கிறேன் அளகர்சாமி தந்திதை தந்தினனா.

***

புத்தகம் : முச்சந்தி இலக்கியம்

புத்தக வகை : கட்டுரைத் தொகுப்பு.

ஆசிரியர் : ஆ.இரா.வேங்கடாசலபதி

கிடைக்குமிடம் : நூற்கடைகள்.

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்.

விலை : 140 ரூ.

***

Pic Courtesy :: http://upload.wikimedia.org/wikipedia/commons/3/36/Indra_deva.jpg