பிரின்சிபால் அறை அமைதியாக இருந்தது.
காலை 10 மணிக்கான வகுப்புகள் துவங்கி விட்டதற்கு அறிகுறியாக, இரண்டு மணி ஒலித்தது.மதியம் பிள்ளைகள் எடுத்து வரும் உணவிற்காக,மைதானத்தின் புங்கை மரங்களில் இப்போதிருந்தே காகங்கள் அம்ர்ந்துவிட்டன. விளையாட்டு பீரியட் உள்ள ஏழாம் வகுப்பு மாணவர்கள் வரிசையாக வரத் தொடங்கினர்.
"சொல்லுங்க, ஸ்டெல்லா டீச்சர்..!" என்றார் பிரின்சிபால்.
"என்ன சார் சொல்ல்ணும்..?" என்றார் டீச்சர்.
"அதான்..! உங்க மேல நிறைய பெற்றோர் மட்டுமில்ல, ஆசிரியர்களே புகார் குடுத்திருக்காங்க..!"
"என்னனு சார், புகார் சொல்லி இருக்காங்க..?"
" நீங்க மாணவர்களை அளவுக்கதிகமாகவே கண்டிக்கிறீங்க, தண்டிக்கிறீங்கனு புகார் வந்திருக்கு. போன திங்கள்கிழமை, நீங்க அன்பரசுங்கிற மாணவனை அறைஞ்சிருக்கீங்க. அதில அவன் காதிலிருந்து ரத்தம் வந்து, இப்ப சர்ஜரி வரைக்கும் போயிருக்கு. அவங்க பெற்றோர் வந்து நேத்து சண்டை போட்டுட்டுப் போயிருக்காங்க. உங்க பதில் என்ன..?"
"சார்..! மார்க் ரொம்ப குறைவான மாணவர்களை கண்டிக்கிறதும், தண்டிக்கிறதும் தவறுன்னு சொல்லறீங்களா..? நாளைக்கு ரிசல்ட் குறைந்துனா என்னைத் தான கேப்பீங்க?"
"இல்ல..! நீங்க செய்றது சரி..! அதனால தான் இந்த விசாரணைக்கு உங்களை மட்டும் கூப்பிட்டு இருக்கேன். பொதுவா இதுபோல புகார் வந்ததுனா எல்லா டீச்சர்ஸும் இருப்பாங்கன்னு உங்களுக்கே தெரியும். ஆனாலும் கொஞ்சம் அளவுக்கு மீறிப் போகறதால தான் பிரச்னைகள் வந்திடுது..!"
"ஓ.கே. சார். இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க. அந்தப் பையன் கால்ல போய் விழுந்து மன்னிப்பு கேட்கணுமா..?"
அமைதி நிலவியது. தூரத்து சாலையில் போகும் B19 பேருந்தின் சத்தம் மட்டும் கேட்டது.
" கொஞ்சம் அமைதியாக இருங்க. இது போல பெரிய அளவுல பிரச்னை வரும் போது, டீச்சர்ஸை சஸ்பெண்ட் பண்றது தான் வழக்கம். ஆனா நீங்க பசங்களை அளவுக்கு மீறி கண்டிக்கிறதும், தண்டிக்கிறதும் தான் பிரச்னை. மத்தபடி உங்க திறமையிலயோ, ரிசல்ட் காட்டிறதுலயோ யாரும் குறை சொல்ல முடியாது. ஏன், நேத்து வந்த அன்பரசுவோட பெற்றோரே, உங்க கற்பிக்கும் திறமையைப் பத்தி உயர்வாத் தான் பேசினாங்க. கொஞ்சம் உணர்ச்சிவசப்படறதை மட்டும் குறைச்சிக்கிட்டா நல்லதுனு சொன்னாங்க. பாருங்க, இப்பக் கூட எமோஷனாகறீங்க..."
விர்விர்ரென்று அனல் மிதக்கும் காற்று அடித்தது. மைதானத்தின் மாணவர்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்ட மாதிரி எல்லாம் தெரியவில்லை. கபடி, கால்பந்து என்று சூடு பறக்க விளையாடிக் கொண்டிருந்தனர். கோ-கோ என்று பெண்பிள்ளைகளும் தூள் பரப்பிக் கொண்டிருந்தனர்.
" நம்ம பள்ளிக் குழுமமே நடத்துற இன்னொரு பள்ளி மேலக்கவுண்டம்பாளையத்துல இருக்குனு உங்களுக்குத் தெரியும். ரெண்டு மாசம் நீங்க அங்க போய்ட்டு ஒர்க் பண்ணிட்டு வர்றணும்னு முடிவு பண்ணியிருக்கோம். நீங்க என்ன சொல்றீங்க..?"
"சார்..! இது தண்டனை கிடையாதே..?"
" நிச்சயமாய் இது தண்டனை கிடையாது. வேறொரு புது சூழ் நிலை, புது மாணவர்கள் அப்படினு நீங்க பழகலாம். மத்தபடி இது உங்க கேரியர்ல இறக்கம் கிடையாது. உண்மையைச் சொல்லணும்னா அது உங்களுக்கு ஏற்றம் தான் தரும்னு நம்பறேன். அப்புறம்.."
"சொல்ல வந்தைச் சொல்லுங்க சார்..."
"அந்தப் பள்ளி மாணவர்களைப் பத்திக் கேள்விப் பட்டிருப்பீங்கனு நினைக்கிறேன்.."
"தெரியும் சார். நானே அங்க கொஞ்ச நாள் வேலை பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.."
"அப்ப உங்களுக்கு அங்க போய் ஒர்க் பண்றதுல அந்த பிரச்னையும் இல்ல தானே..?"
"இல்ல சார். எப்ப சார் அங்க போய் ஜாயின் பண்ணனும்.."
"அடுத்த திங்கள் போனாப் போதும்."
" நன்றி சார். நான் வர்றேன்.."
சின்ன பொண்ணு. கொஞ்ச நாள் அங்க இருந்திட்டு வரட்டும். அப்ப தான் குழந்தைகளை நடத்தும் விதம் புரியும். பெருமூச்சு விட்டார் பிரின்சிபால்.
" மே இ கம் இன் சார்..?"
"எஸ்..! நீங்க தான ஸ்டெல்லா டீச்சர்..?"
பிரின்சிபால் அறை தூய்மையாக இருந்தது. அழகாக அடுக்கு வைக்கப்பட்டிருந்த கோப்புகள். வரிசையாக பேனாக்கள். தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்த பிரின்சிபால். 'பிரின்சிபால் பிரான்சிஸ்' என்று பெயர் வரைந்த போர்டு பளபளத்தது. ஓரத்தில் யேசு நாதர் சிலை இருந்தது. அருகில் மெழுகு கரைந்துக் கொண்டிருந்தது.
"ஆமா சார். பிரின்சிபால் தேவசகாயம் சார் தான் இங்க அனுப்பி வெச்சிருக்கார். கொஞ்ச நாள் ட்ரெய்னிங்.." பொய் தான். ஆனால் பிரின்சிபால் தான் இப்படியே சொல் என்றார்.
"எஸ்..! எஸ்..! தேவசகாயம் சார் சொன்னார்..! ரெண்டு மாசம் இங்க இருந்திட்டு அப்புறம் அங்க வரட்டும்னு சொன்னார்..! சோ.. வெல்கம் டு அவர் ஸ்கூல்.."
" நன்றி சார்..!"
கைகள் கொடுக்கப்பட்டன.
" உங்களுக்கு இந்தப் பள்ளி மாணவர்களைப் பத்தி தெரியும்னு நினைக்கிறேன்.."
"கொஞ்சம் தெரியும் சார். இருந்தாலும் நீங்களே சொல்லுங்க சார்..!"
"ஓ.கே. இங்க இருக்கிற மாணவர்களுக்கு வாய் பேச வராது. அதுக்காக அவங்களை ஊமைகள்னு சொல்லிடாதீங்க. அந்த வார்த்தையை யாரும் அந்தக் குழந்தைகள் முன்னாடி சொல்லக் கூடாதுனு உத்தரவிட்டுருக்கிறேன். அவங்களை இறைவனின் செல்லக் குழந்தைகள்னு தான் சொல்லணும்னு சொல்லியிருக்கிறேன். நீங்களும் அப்படியே நடக்கணும். அப்புறம், நீங்க வகுப்புல ரொம்ப கண்டிப்பானவங்கனு கேள்விப்பட்டு இருக்கேன். இங்க உங்க கண்டிப்பை கொஞ்சம் குறைச்சிக்கணும்னு உங்களைக் கேட்டுக்கிறேன். முக்கியமா..." பிரின்சிபால் குரல் தழுதழுத்தது.
"சொல்லுங்க சார்..!" கனமான மனத்துடன் கேட்டார் ஸ்டெல்லா டீச்சர்.
" உங்க ஸ்கூல்ல வகுப்புல குழந்தைகளை 'அமைதியாய் இருங்க, பேசக்கூடாது'னு மிரட்டுவீங்கனு கேள்விப்பட்டிருக்கேன். தயவு செஞ்சு, இங்க அது போல மிரட்டிடாதீங்க. இங்க இருக்கிற ஒவ்வொரு குழந்தையும் பேசணும், வாய் நிறைய வார்த்தைகளை வெச்சுப் பேசிக்கிட்டே இருக்கணும்னு நாங்க தினமும் ப்ரேயர் பண்றோம். தயவு செஞ்சு, வகுப்புல போய் 'யாரும் பேசக் கூடாதுனு' மிரட்டிடாதீங்க... ப்ளீஸ்..." பிரின்சிபால் கண்களில் கண்ணீரே வந்து விட்டது.
"சார்..!" பதறி விட்டார் ஸ்டெல்லா டீச்சர்.
"ஸாரி..! கொஞ்சம் எமோஷனாகிட்டேன். இந்தாங்க, இது தான் உங்க டைம் டேபிள். நீங்க உங்க வகுப்புக்குப் போங்க"
"ஓ.கே. சார்."
ரெண்டு மாதம் எப்படி கழிந்தது என்றே தெரியவில்லை.
பிரின்சிபால் தேவசகாயம் ஸ்டெல்லா டீச்சரைப் பார்க்க வந்திருந்தார். இரு பிரின்சிபால்களும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, ஸ்டெல்லா டீச்சரை வரச் சொல்லியிருந்தார்கள்.
"மே ஐ கம் இன் சார்..?" கேட்டுக் கொண்டே வந்தார் ஸ்டெல்லா டீச்சர்.
"வாங்க டீச்சர். உங்களைப் பார்க்க உங்க பிரின்சிபால் தேவசகாயம் சார் வந்திருக்கார்."
"குட்மார்னிங் சார். நல்லா இருக்கீங்களா சார்..?"
" நலம் டீச்சர். எப்படி போய்க்கிடு இருக்கு உங்க வேலை..? எப்போ நம்ம பள்ளிக்குத் திரும்பப் போறீங்க..?" தேவசகாயம் கேட்டார்.
"மன்னிக்கணும் சார். நான் இங்கயே இருக்கலாம்னுட்டு முடிவு எடுத்திருக்கேன் சார்..."
இருவரும் ஆச்சரியக் குறியிட்ட கண்களோடு பார்த்தார்கள்.
"உங்க இந்த முடிவுக்கு என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?"
"கண்டிப்பா சார். இங்க இருக்கிற குழந்தைகள் எல்லாம் தங்களுக்கு இருக்கிற குறைகளை நினைக்காம, ' நமக்கொரு வாழ்க்கை கிடைக்காதா.. நாமும் மத்தவங்களைப் போல நார்மலான வாழ்க்கை வாழ மாட்டோமா'னு தவிக்கிறாங்க. ரொம்பக் கடுமையாக உழைக்கிறாங்க. அவங்களுக்கு இருக்கிற பிரச்னையை நினைக்க நேரம் இல்லாத அளவுக்கு வேலைகளை இழுத்துப் போட்டுக்கிட்டு உழைக்கிறாங்க. மேல வரணும், வாழ்க்கையில முன்னேறணும் அப்படினு துடிக்கிறாங்க. ஆனா நாம எல்லா வசதிகளும் இருந்தும், எந்தக் குறை யில்லாம இருந்தும் சாதனை செய்ய யோசிக்கிறோம். முன்னேற எண்ணம் இல்லாம இருக்கோம். நம்ம பள்ளி மாணவர்களைச் சொல்லல, பொதுவாகச் சொல்றேன் சார். டீச்சர் அடிச்சிட்டாங்கனு புகார் சொல்லத்தெரியறதே தவிர, ஏன் அடிச்சாங்க, நாம என்ன தப்பு பண்ணினோம்னு யோசிக்கிறதேயில்ல. எனக்கு கூட 'என்னை வேற பள்ளிக்கு அனுப்பியிருக்கார்'னு உங்க மேல வெறுப்பு வந்ததே தவிர, என் பக்கத்து தவறை சிந்திக்கவே தோணல. ஆனா இங்க வந்ததுக்கு அப்புறம், இயல்பான வாழ்க்கை வாழவே போராடற இந்த குழந்தைகளைப் பார்க்கும் போது நாம எவ்வள்வு அதிர்ஷ்டசாலிங்கனு தோணுச்சு. அதனால நான் இங்கயே இருந்து இவங்க நல்ல வாழ்க்கை வாழ உதவுகின்ற டீச்சரா இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன் சார். பொதுவா நம்ம ஆசிரியர் வேலையை ஏணி மாதிரினு சொல்லுவாங்க. மாணவர்களை மேல ஏத்தி விட்டுட்டு, கீழேயே நிற்பாங்கனு சொல்லுவாங்க. ஆனா நான் இவங்களுக்கு லிப்ட் மாதிரி இருக்கணும்னு விரும்பறேன் சார். அவங்களையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திட்டு, நானும் மனதளவில் உயர்ந்த இடத்திற்குப் போகணும்னு விரும்பறேன் சார்...!"
"ரொம்ப சந்தோஷம் டீச்சர். உங்க குறிக்கோள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நம்ம பள்ளி மேலயோ, என் மேலயோ எந்தக் கோபமும் இல்லையே உங்களுக்கு..?"
"இல்லவே இல்ல சார். நானும் நம்ம பள்ளிக்கு அப்பப்போ வந்து, இங்க இருக்கிற குழந்தைகளைப் பற்றி சொல்லணும் சார். அப்போ தான் அவங்க அவ்வள்வு பாக்கியவான்கள்னு தெரியும். அவங்க குறைபாடுகளை நீக்கிட்டு, நல்ல நிலைமைக்கு வர பாடுபடுவாங்க. நீங்களும் அடிக்கடி இங்க வந்து போகணும் சார்.."
"கண்டிப்பா. சரி, அப்ப நான் கிளம்பறேன்.."
"போய்ட்டு வாங்க சார்.." ஸ்டெல்லா டீச்சர் கும்பிட்டார்.
(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)
Thursday, September 14, 2006
Monday, September 11, 2006
லாந்தர் விளக்கு.
May 16, 2006.
15:35.
சென்னையின் ஒரு மந்தமான மதியம். காற்றே துளியும் வீசாத, பிற்பகல். வெளியே வந்து மேற்கே பார்த்தேன். கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. உறுதியாய் இன்று மழை வரும் என்று தோன்றியது.
"பூரணி..இன்னிக்கு கண்டிப்பாய் கோவை போயாகணுமா..?" கேட்டேன்.
" நல்லாயிருக்கே கேள்வி. என் சித்தி பையனுக்குக் கல்யாணம். எனக்குத் தம்பி முறை. கல்யாணத்துக்குப் போகணுமானு கேக்கறீங்க. அபி, இவரை என்னன்னு கேளு.." பெட்ரூமிலுருந்து பதில் வந்தது.
"அப்பா.. அம்மா உன்னை என்னனு கேக்கச் சொன்னாங்க.." ஓடி வந்து தாவிக் கொண்டாள், என் சின்னப் பெண் அபிராமி. சரியான் வாலு. அம்மாவுக்குத் தப்பாம பிறந்த குரங்குக் குட்டி.
இந்த தொந்தரவு எல்லாம் எனக்குத் தெரியாது, என்பது போல் டிஸ்னியில் ஆழ்ந்திருந்தது மூத்த பையன், வினோத்.
உங்களுக்கே புரிஞ்சிருக்கும். இவ சித்தி பையனுக்கு 18-ஆம் தேதி, கோவையில் திருமணம். அப்படியே 19 லீவ் எடுத்து விட்டு, சனி, ஞாயிறு ஊட்டி சென்று வருவதாக ப்ளான். நாலு நாட்கள் லீவ் எடுத்ததில் குழந்தைகளுக்கு குஷி தான். எனக்கும் தான். எல்லாரும் ரெடியாகி விட்டது. வழக்கம் போல் அம்மன் அலங்காரம் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது, ரொம்ப நேரமாய்.
"இல்லம்மா.. நல்ல மழை வரும் போல் இருக்கு. அதுதான் கேட்டேன்."
" நீங்க ஏன் கவலைப் படறீங்க. நான் வேணா கார் ஓட்டறேன்.." என்றபடி வந்தாள். வினோத் திரும்பினான்.
"ஆமாப்பா.. இன்னிக்கு அம்மா ஓட்டட்டும். நீங்க ஏதாவது கதை சொல்லிட்டு வாங்க. நீங்க தான் நல்லா கதை சொல்லுவீங்க. அம்மா எப்பப் பார்த்தாலும் நாங்க என்னமோ சின்னப் பசங்க மாதிரி,அதே பாட்டி வடை கதை தான் சொல்லுவாங்க" என்றான்.
"அப்பா, பெரிய மனுஷா.. இனிமே உங்க அப்பாகிட்டயே கதை கேட்டுக்கோ. இனிமேல் என்கிட்ட கதை கேட்டு வந்த.." என்று விரலை உயர்த்திக் காட்டினாள்.
"சரி..சரி. சண்டை போடாதீங்க. இன்னைக்கு நான் கதை சொல்றேன். அம்மா வண்டி ஓட்டட்டும்." என்று தீர்ப்பு வழங்கினேன். நான் தான் நன்றாக கதை சொல்கிறேன் என்று, டிஸ்னி ரசிகரே சொல்லிவிட்டதில், அதைக் காப்பாற்றியாக வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு.
அப்படி, இப்படி என்று பொறுமையாக கிளம்பியதில், நாலு மணிக்கு, மாருதியைக் கிளப்பி விட்டோம். நானும், அவளும் முன்புறமும், அபியும், வினோத்தும் பின்புறமும் அமர்ந்து கொள்ள பயணம் தொடங்கியது. சைதையைத் தாண்டுவதற்குள் தூறல் விழத் தொடங்கியது. வாகன நெரிசலிலிருந்து மீண்டு, தாம்பரத்தைத் தாண்டிய பின், பூரணி சீராக ஓட்டத் தொடங்கினாள்.
"அப்பா..அப்பா.. இப்ப கதை சொல்லுங்கப்பா.." என்று சிப்ஸ் பாக்கெட்டைப் பிரித்தவாறே வினோத் கேட்டான்.
வானம் மேலும், மேலும் இருண்டு கொண்டே வந்தது. சரக்கு லாரிகளும், தொலைப் பேருந்துகளும் மட்டும் சென்று கொண்டிருந்தன. நெடுஞ்சாலையில் இருந்த வாகனப் போக்குவரத்தை, ஓரங்களில் ஒதுக்கித் தள்ளி, மழை சலசலவெனப் பெய்யத் தொடங்கியது.
"இப்ப நான் சொல்லப் போற கதை, நான் உங்க வயசுல இருந்த போது, எங்க பாட்டி சொன்னது. இது கதை கிடையாது. நிஜமாலுமே நடந்ததுனு எங்க பாட்டி சொன்னாங்க. நம்பறதும், நம்பாததும் உங்க இஷ்டம்." பெரிய பீடிகையுடன் தான் தொடங்கிவிட்டேன் போலும். பூரணிகூட கொஞ்சம் மெதுவாக ஓட்டத் தொடங்கினாள்.
நான் சொல்லத் தொடங்கினேன்.
May 02, 1980.
19:15.
"தம்பி எங்க கிளம்பிட்ட..?" நான் எங்க போனாலும், எங்க போற, எங்க போறனு கேட்டுத் தொளச்சு எடுத்திடுவாங்க என் பாட்டி.
"பாட்டி..! மத்தியானம் ஊர் சுத்திட்டு இருக்கும் போது, அய்யனார் கோயில் பக்கத்துல ஒரு மாந்தோப்பு பாத்தேன். மாங்கா அடிக்கலாம்னு பாத்தா, ஒரு காவல்காரன் அங்கயே சுத்திட்டு இருந்தான். அதான், இப்ப போய், கொஞ்சம் மாங்கா பறிச்சிட்டு வரலாம்னு நினைக்கிறேன்.."
பாட்டி பதறி விட்டாள். என் கைகளைப் பிடித்து சொன்னாள்.
"ராசா..! நீ இப்போ லீவுக்கு வந்திருக்க. உங்க அப்பா வந்து கேக்கும் போது, உன்னை பத்திரமாத் திருப்பி அனுப்பணும். அதனால, பாட்டி ஒண்ணு சொல்லுவேன் கேப்பியா..?"
"சொல்லு பாட்டி.." என்றேன்.
"பகல்ல பரவால்ல. பொழுது சாஞ்சி, ஆறு மணிக்கு மேல மாந்தோப்பு பக்கம் போகக் கூடாது. என்ன..?"
"ஏன் பாட்டி..?"
"அங்க தான் வேலம்மாவோட ஆவி முன்னூறு வருஷத்துக்கு மேல சுத்திட்டு இருக்கு...ம். அது ஒரு பெரிய கதை" பெருமூச்செறிந்தாள் பாட்டி.
"அந்த கதை சொல்லு பாட்டி.." மாங்கா திங்கும் ஆசை அதற்குள் போய் விட்டது.
"உனக்குச் சொல்றேன். அப்ப தான் போகாம இருப்ப.." என்று ஆரம்பித்தாள் பாட்டி.
"முன்னூறு வருஷத்துக்கு முன்னாடி, இந்த நெல்லிக்கவுண்டன்பாளையம் மாதிரி முப்பது பாளையங்களை ஒரு திவான் ஆண்டு வந்தாரு. அவரு பேரு கண்ணப்பவேல பாளையக்காரரு. அவருக்கு ஒரு தம்பி இருந்தாரு. அவரு பேரு மதனராஜ பாளையக்காரரு. இதுல அண்ணன் ரொம்ப நல்லவரா இருந்தாரு. ஆனா தம்பி இருக்காருல்ல, அவரு வந்து பேருக்கேத்த மாதிரி, தான் நடந்துக்குவாரு. ஊருல இருக்குற பொண்டு, புள்ளைங்களை இவரு வந்து ரொம்ப தொல்லை பண்ணுவாரு. தம்பி தகராறு பண்ண, அண்ணன் அதுக்கு மன்னிப்பு கேட்டு பைசல் பண்ண, இப்படியா நாளும், கெழமையும் போய்க்கிட்டு இருந்துச்சு.
இப்ப கேரளானு சொல்ற மா நிலம் அப்ப சேர தேசம்பாங்க. இந்தக் காலத்துல, அந்தப் பக்கமா ஒரு பெரிய பஞ்சம் வந்துச்சு. நெலமில்ல, நெலமிருந்தாலும் வெவசாயம் பண்ண சொட்டுத் தண்ணியில்ல. சனமெல்லாம் அப்படியே சுருங்கிப் போச்சு. இருக்கற கொஞ்ச, நஞ்சம் நெல்லுமணி, ஆடு, மாடெல்லாம் எடுத்துக்கிட்டு எல்லாரும், செதறின நெல்லிக்கா மூட்ட மாதிரி தெசைக்கொருத்தரா பிரிஞ்சாங்க. அப்படி, நம்ம ஊரு பக்கமா கொஞ்சம் பேரு வந்து சேந்தாங்க. அதுல ஒருத்தி தான் பூவாயியும், அவ பொண்ணு வேலம்மாவும். ரெண்டு தலமுறைக்கு முன்னாடி, எல்லாம் இங்கிருந்து போனவங்களாம். அதனால தமிழ்ப் பேரு தான்.
இதுல வேலம்மா இருக்கால்ல, அவ அப்படியே செப்பு செல மாதிரி இருப்பாளாம். மீனு மாதிரி கண்ணு, பவளங் கணக்கா உதடு, பாம்பு மாதிரி சடைனு அப்படியே விக்ரகம் மாதிரி இருப்பாளாம். அதுவும் சாதாரண விக்ரகம் இல்ல, பண்டிகைக்கு தேருல உலா வர்ற அலங்கரிச்ச அம்மன் மாதிரி இருப்பாளாம்.
ஆத்துல குளிக்கும் போதெல்லாம், கூட குளிக்கற பொண்டுகள்லாம், இவ பொண்ணு தானா, இல்ல சேர தேசத்து மாந்திரீகத்துல அனுப்பி வெச்ச மோகினியானு தொட்டுத் தொட்டுப் பாப்பாங்களாம். இவ அதப் பாத்துச் சிரிப்பாளாம். அப்போ அவங்க சந்தேகமெல்லாம் தீர்ந்து, இவ மோகினியே தான் முடிவே பண்ணிக்குவாங்களாம். அப்படி ஒரு வசீகரமான சிரிப்பாம், வேலம்மாவுக்கு.
பொம்பளைங்களே இப்படி மயங்கறாங்கனா, ஆம்பளங்களைக் கேக்கவா வேணும்? வேலம்மா கூட பேசணும், அவ கூட பழகணும்னு மீச நரைச்ச பெருசுகளிருந்து, மீசயே மொளைக்காத சிறுசுக வரைக்கும் ஆசப்பட்டாங்களாம்.
மொசக்குட்டி எங்க உலாத்துதுனு, வேட்ட நாய்க்கு தெரியாதா..? அதுவும் அது கோட்டைக்குள்ளயே இருக்கும் போது..? சின்ன பாளையக்காரருக்கு மூக்கு வேர்த்துருச்சு. உடனே வேலம்மாவைத் தன்னோட அரண்மனைக்கு இழுத்துக்கிட்டுப் போயிடணும்னு நெனச்சிக்கிட்டாறாம்.
வெசாரிச்சுப் பாத்ததுல, இவளோட மாமங்காரன் ஒருத்தன் நாகப்பட்டினம் வரைக்கும் போயிருக்கானாம். அவன் வந்து ஆத்தாவையும், மகளையும் சீக்கிரத்துல கூட்டிட்டுப் போயிருவான்னு தெரியவந்தது. சின்னவரு சீக்கிரம் வேலம்மவக் கடத்திடணும்னு முடிவு பண்ணினாரு. ஆத்தாளும், மகளும் அரசல், புரசலா சின்ன பாளையக்காரரு பத்திக் கேள்விப்பட்டாங்க. அதனால உஷாரா இருந்திருக்காங்க.
அப்ப தான் அய்யனாரு நோம்பி வந்துச்சு. ஊர்க் காரங்க எல்லாரும் அய்யனாரு கோயிலுக்குப் போயிருக்காங்க. இவங்க ரெண்டு பேரும் அசலூருங்கறதால, வீட்டோட இருந்திருக்காங்க. அப்பத் தான் சின்னவரு வந்து, ஆத்தாவை வீட்டோடப் பூட்டி வெச்சிட்டு, வேலம்மாவத் தொரத்திருக்காரு. வேலம்மாளும் வுழுந்தடிச்சு ஓடி, அய்யனாரு கோயிலுக்கே வந்திருக்கா. சின்னவரும் வந்திட்டாரு.
வேலம்மா கண்ணீர் பெருக, எல்லார்கிட்டயும் கெஞ்சியிருக்கா." உங்களை நம்பி வந்தேன். என்னைக் காப்பாத்துங்க. இல்லாட்டி என்னை எங்க ஊருக்கே அனுப்பி வெச்சிருங்க...என்னை எங்க ஊருக்கே அனுப்பி வெச்சிருங்க."னு கத்திக் கதறியிருக்கா. ஆனா சின்னவரைப் பகைச்சிக்க முடியாத சனம், கையாலாகாம இருந்திருக்கு.
ஆத்திரமான வேலம்மா, நம்பி வந்தவளைக் காப்பாத்தாத ஊர்ல இருக்கறத விட சாகலாம்னு கத்திட்டே பக்கத்துல இருந்த கிணத்துல குதிச்சுச் செத்திட்டா. அன்னையில இருந்து, அந்தக் கிணத்து தண்ணிய யாரும் குடிக்கப் பயன்படுத்தறதில்ல. அதே மாதிரி, ஆறு மணிக்கு மேல, யாரும் அந்த கிணத்துப் பக்கமா தனியா போனா, "என்னை உங்ககூட கூட்டிட்டுப் போங்க. என்னை எங்க ஊருக்கே அனுப்பி வெச்சிருங்க."னு சத்தம் கேக்குதாம். ,ஒரு லாந்தர் விளக்கைப் பிடிச்சிக்கிட்டு, "என்னை எங்க ஊருக்கே அனுப்பி வெச்சிருங்க"னு அங்க போறவர்றவங்ககிட்ட எல்லாம் கேக்குதாம், இன்னும் சாகாம, இப்ப கெழவியாகிட்ட அந்த வேலம்மா.
அதனால தான் சொல்றேன், தனியா, ராத்திரி, அந்தப் பக்கம் போகாதனு. புரிஞ்சதா..?" என்று முடித்தாள் பாட்டி.
May 16, 2006.
21:18.
நான் சொல்லி முடிக்கவும், பூரணி வண்டியைக் கிறீச்சிட்டு நிறுத்தினாள். வினோத்தும், அபியும் திகிலடித்துப் போன கண்களோடு, முன்புறம் பார்த்தார்கள். நான் மெல்ல முன்புறம் திரும்பினேன். 'நெல்லிக்கவுண்டன்பாளையம் பஞ்சாயத்து உங்களை வரவேற்கிறது' என்ற போர்டு எங்களை வரவேற்றது. அந்த போர்டின் கீழே....
ஒரு லாந்தர் விளக்கு...!
ஒரு லாந்தர் விளக்கைப் பிடித்துக் கொண்டு யாரது..?
பேய்க்காற்று அடித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் கும்மிருட்டு. வெளிச்சம் என்பதே துளி கூட இல்லை. புளியமரங்கள் எல்லாம் பெரிய மழையோடு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. எங்கள் காரில் மட்டுமே வெளிச்சம். வைப்பர் வேகமாய் இயங்கிக் கொண்டிருந்தது. Headலைட்டின் ஒளியை வெட்டிக் கொண்டு, வேகமாய் மழை பெய்து கொண்டிருந்தது. யாரது அங்கே யென்று பார்த்தோம்.
நீல நிற சேலை. ஒட்டிய உடம்பு. நோய் வந்த கோழி போல உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. எண்ணெயே காணாத பறட்டைக் கேசம் போல. மழையில் பறந்து அடித்துக் கொண்டிருந்தது.ஒரு கிழவி.
"பூரணி.. கொஞ்சம் முன்னாடி போய் நிறுத்து.."
"என்னங்க.. எனக்குப் பயமாயிருக்குங்க.." நடுங்கியவாறு சொன்னாள்.
"ஆமாப்பா.. பயமாயிருக்குப்பா. போயிடலாம்ப்பா. அது வேலம்மா ஆவி தாம்ப்பா" என்றாள் அபி.
"என்ன பூரணி... நீயே இப்படி பயந்தா.. குழந்தைகளும் பயப்பட மாட்டாங்களா.. இந்த இண்டர்னெட் காலத்துல போயி பேயி, பூதம்னு பயந்துட்டு இருக்க.. நான் இருக்கேன்ல.. போய் பக்கத்துல நிறுத்து. பாவம் பாட்டி, மழையில நனைஞ்சுக் கஷ்டப்படறாங்க.."
போர்டின் அருகில் போய் நிறுத்தினாள். பாட்டி அருகில் வந்தார்.
"என்ன பாட்டி.. தனியா நிக்கறீங்க..? என்ன வேணும் உங்களுக்கு..?" என்று கேட்டேன்.
பாட்டி அருகில் வந்தார்.
அருகில்...
வெகு அருகில்...
தீர்க்கமான பார்வை.
நெருக்கமாய் வந்து நின்று கேட்டார்.
"என்னை உங்ககூட கூட்டிட்டுப் போங்க. என்னை எங்க ஊருக்கே அனுப்பி வெச்சிருங்க. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?"
"ஆ..........ஆ.........."
நான்கு குரல்கள்.
May 16, 2006.
16:02.
"என்னலே இப்போ பஞ்சாயத்து..?"
"ஐயா.. இதோ இங்க நிக்கறாளே.. பொன்னம்மா கிழவி, இவ நம்ம ஊரு, குளத்துல இருந்து தண்ணிஎடுத்துக் குடிச்சிருக்கா. ஒரு தாழ்த்தப்பட்டவ, ஊர்க்குளத்துல இருந்து தண்ணிஎடுத்துக் குடிக்கக்கூடாதுனு தண்டோரா போட்டிருந்தும், இவ அத மீறியிருக்கா. அதுக்கு, சாட்சி, இதோ இங்க நிக்கறானே, பாண்டி. இவன் தான்.."
"என்னடா பாண்டி சொல்ற..?"
"ஆமாஞ்சாமி.. நான் ஆடு மேய்க்க, காட்டுப் பக்கம் போகயில, இந்தக் கிழவி கொளத்துல தண்ணி மொண்டுக் குடிச்சத ரெண்டு கண்ணால பாத்தேனுங்க. உடனே கணக்குப்புள்ள அய்யாகிட்ட வந்து சொன்னேனுங்க.."
"ஏ.. கெழவி..உம்மேல சொல்ற குத்தத்த ஒத்துக்கறயா..?"
"ஐயா.. தாகம் தீக்க கொஞ்சம் எடுத்தேங்க ஐயா.. லொக்..லொக்.."
"பொன்னம்மாக் கிழவி ஊர்க் கட்டுப்பாட்ட மீறிட்டதால, அவள ஊர விட்டே ஒதுக்கி வெக்கிறேன். ஆனா வயசான கெழவிங்கறதால அவள அவ மக வாக்கப்பட்டுப் போன ஊருக்கே அனுப்பி வெக்கணும்னு உத்தரவிடறேன்.
இனிமேல இந்த ஊரு இந்தக் கிழவிக்கு சொந்த ஊரு இல்ல. அவ மக ஊரு தான் சொந்த ஊரு. ஊர் எல்ல வரைக்கும் அவள பத்திரமா கொண்டு போய் பாண்டிப்பய விடணும். அதுக்கப்புறம் அவ விதிப்படி ஏதாவது வண்டி வந்து நின்னா ஏறி, மக ஊருக்கே போய்ச் சேர வேண்டியது. திருப்பி ஊருக்குள்ளாற வந்துறக் கூடாது. இது இந்த நெல்லிக்கவுண்டன்பாளையத்து பஞ்சாயத்தோட தீர்ப்பு...!"

Subscribe to:
Posts (Atom)