ஒரு மெலோடியான ராகபாட்டையில் தாலாட்டுப் பாடல் ஒன்றை முயற்சித்தேன். மெல்லப் பாடியதைக் கேட்டுத் தூங்கித் தன் ஆதரவைத் தெரிவித்தாள்.
ராகம் கீழே.
***
ஆகாயப் பொன்னே...
ஆனந்த ஊற்றே...
பூங்காற்று தீண்ட
நீ தூங்கு...
ஏகாந்த வேளை...
எல்லோரும் தூங்க...
பேசாது கண்ணே
நீ தூங்கு....
பூ...மடல்
நீ
கேட்கும் கர்ணமாய்...
தேன்....சுழல்
நீ
பேசும் சொற்களாய்..
முகில்கள் நீந்தும் வானம்
மாலை நேரம்
கொண்டு வந்து...
சுடரென ஒளிரும் மீன்கள்
ராவின் ராகம்
பாடும் போது... (ஆகாயப் பொன்னே)
பாலூறும்
நெஞ்சோடு
அணைத்திடும் போதும்
தோளோடு
மேல் சாய்த்து
தடவிடும் போதும்
விழிகளில்
மொழிகளில்
நீ ஒரு தோட்டமே...
அழுவதில்
சிரிப்பதில்
உன்னுடன் நானும்
சேர்ந்தேனே...
அழகே...அழகே...அழகே.... (ஆகாயப் பொன்னே)
எண்ணாத
முத்தங்கள்
உன் கன்னம் தாங்கும்
எழுதாத
பாடல்கள்
உன் முகம் காட்டும்
நாளிலும்
பொழுதிலும்
உன்னுடன் நானுமாய்
மண்ணிலே
விண்ணிலே
ஊர்வலம் போகும்
கதையெல்லாம்
சொல்வேன்
நாளை
இன்று...(ஆகாயப் பொன்னே)
***