Showing posts with label என் இனிய இயற்பியல்.. Show all posts
Showing posts with label என் இனிய இயற்பியல்.. Show all posts

Sunday, May 11, 2008

அழகிய முரண்.

கேட்க
காதுகளற்ற
வனத்தில்,
விழும் மரம்
ஏற்படுத்துமா
சப்தம்?

இது புதுக்கவிதை அல்ல. 1910-லேயே எழுப்பப்பட்ட ஒரு கேள்வி.

யாருமே இல்லாத காட்டில் ஒரு மரம் விழுந்தால், அது சப்தம் எழுப்பும் என்பதை எப்படி உறுதி கூறுவது? ஏனென்றால் அதை ருசுப்படுத்த யாரும் அங்கு இல்லையே? விழும் மரம் சப்தம் ஏற்படுத்தியதா, இல்லையா என்பதை உறுதியாக கூற முடியாது என்கிறார்கள்.

இது நமக்குள் சில கேள்விகளை ஏற்படுத்துகிறது.

* ஒரு கேம், ஒரு வேர்டு எடிட்டர் என்று இரண்டு அப்ளிகேஷன்களைத் திறந்து வைத்துள்ளீர். டேமேஜர் வரும் வரை ஆர்வமாக கேம் விளையாடிக் கொண்டிருக்கிறீர். அவர் அருகில் வருவதற்கான சமிக்ஞைகள் வந்த்தும், கேமை பாஸ் செய்யாமல் வேர்டு எடிட்டருக்கு வந்து ஸ்பெக் பார்க்கிறீர்கள். அவர் தொலை சென்றதும், மீண்டும் கேமை தொடர்கிறீர்கள். அந்த இடைப்பட்ட காலகட்டத்தில் கேமில் என்ன நடந்திருக்கும் என்பதை எப்படி உறுதி செய்யலாம்?

*மரம் விழுவதில் சப்தம் எழுப்புவதைக் கேட்க ஆள் இல்லாததால், அது சப்தம் எழுப்பாது எனக் கூறலாமா? காமன் சென்ஸ் படி ஆள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்நிகழ்வு சப்தம் எழுப்பும் என்பதை அறிவோம். எனில், கடவுளைக் கண்டவர் என்று எவரும் இல்லாது போய்விட்டால், கடவுளைக் காணல் என்ற நிகழ்வு இல்லை என்றாகி விடுமா? என்ற கேள்வி வருகிறது.

இது போன்ற சுவாரஸ்யமான ரிட்டில்ஸ் உள்ளன. பாருங்களேன்.

நாம் அந்தக் குடும்பத்திலேயே வேறு உறுப்பினரான முரண்பாடுகளைக் காண்போமா? எனக்குப் பிடித்த(அல்லது புரிந்த) சில முரண்கள் இங்கு..!

*இது ஒரு தவறான வாக்கியம்.

மேற்சொன்ன வாக்கியம் ஓர் எளிய முரண். நீங்கள் 'ஆம்' என்று ஒத்துக் கொண்டால், வாக்கியம் சரி என்று ஆகிறது. அப்போது வாக்கியம் தவறு என்று ஆகிப்போகும். அப்போது வாக்கியத்தின் பொருள் சரி என்று ஆகும். இப்படியே ஒரு சுழலில் மாட்டிக் கொள்வோம்.

இதே போன்ற மற்றொன்று, 'இந்த கேள்விக்கான பதில் இல்லை தானே?'

* எல்லா குதிரைகளும் ஒரே நிறம்.

இல்லை தான். ஆனால் கணிதப் பூர்வமாக பார்க்கலாம். ஒரு ஐந்து குதிரைகளை எடுத்துக் கொள்வோம். முதலில் இந்த ஐந்து குதிரைகளும் ஒரே நிறம் என்று உறுதிப்படுத்தலாம். அதற்கு என்ன செய்யலாம்? இந்த செட்டில் இருந்து நான்கு குதிரைகள் அடங்கிய இரண்டு சப்ஸெட்டுக்ளை உருவாக்குவோம். அதாவது 1,2,3,4 என்ற ஒரு சப்செட், 2,3,4,5 அடங்கிய ஒரு சப்செட். இப்போது இந்த இரண்டு சப்செட்ட்களிலும் இருக்கும் 4 குதிரைகளும் ஒரே நிறம் என்று உறுதிப்படுத்தினால், ஒரிஜினல் செட்டில் இருக்கும் ஐந்து குதிரைகளும் ஒரே நிரம் என்று கூறி விடலாம் அல்லவா?

சரி எப்படி ஒரு சப்செட்டில் உள்ள நான்கு குதிரைகளும் ஒரே நிறம் என்று உறுதிப்படுத்துவது?

அதே லாஜிக்.

நான்கு குதிரைகள் அடங்கிய ஒரு சப்செட்டை இரண்டு மூன்று குதிரைகள் அடங்கிய சப்செட்டுகளாகப் பிரிக்கலாம் அல்லவா? 1,2,3. 2,3,4.

இப்படியே பிரித்துக் கொண்டே போனால், இறுதியாக, ஒரே ஒரு குதிரை மட்டுமே உள்ள சப்செட்டுகளாக கிடைக்கும். சந்தேகமே இல்லை. அந்த ஒரு குதிரை மட்டுமே இருக்கும் சப் செட்டில் இருக்கும் எல்லா குதிரைகளும் (அந்த ஒரு குதிரை மட்டும் தான்!) ஒரே நிறமாகத் தான் இருக்க வேண்டும் அல்லவா?

மீண்டும் இப்படியே மேல் நோக்கிப் போனால், உலகத்தில் உள்ள எல்லா குதிரைகளும் ஒரே நிறம் என்றாகி விடும்.

எந்த இடத்தில் நாம் தவறு செய்கிறோம்?

இரண்டு குதிரைகள் மட்டுமே உள்ள செட்டை இரண்டு சப்செட்டாக பிரிக்கையில், முதல் சப்செட்டில் இருக்கும் குதிரையின் நிறமும், இரண்டாம் சப்செட்டில் இருக்கும் குதிரையின் நிறமும் ஒன்றாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அந்த பாராமீட்டரில் கவிழ்ந்து விடுகின்றது லாஜிக்.

எல்லா பெண்களும் அழகு தான்.

இந்தக் கூற்றை அனேகமாக அனைவரும் ஒப்புக் கொள்வோம். எனினும் மேற்சொன்ன Horse Paradox -ஐ இதற்கு முயற்சித்துப் பாருங்களேன்.

*ஸ்டார் விஜய் டி.வி.யி.ல் விஜய் ஆதிராஜ் 'திறந்திடு ஸீஸேம்' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். அதில் கலந்து கொள்ள வருகின்றவர்களை அவர் உற்சாகப்படுத்தும் விதமும், அதில் பங்கேற்போரின் நொடி நேர முக உணர்வு மாறுதல்களும் நிகழ்ச்சியை இரசிக்கவைக்கின்றன.

மூன்று கதவுகளில், ஒன்று திறக்கப்படும். மற்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து, பீங்கான் பாத்திரங்களோ, காரோ, அழகான பெண்ணின் கைகளால் கிடைக்கப் பெறலாம். எப்படி இந்த கேமில் வெல்வது?

Monty Hall Paradox
இதைப் பற்றி தான் கூறுகிறது.

இந்தப் போட்டியில் போட்டியாளர் 'ஸ்விட்ச்' ஆப்ஷன் தேர்வு செய்வதே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் என்கிறார்கள். காண்க படம்.



கண்ணீரும், கம்பலையுமாக சீரியல்கள் சின்னத்திரைத் திரைகளை நிறைத்திருக்க, இது போன்ற சிந்திக்கத்தக்க நிகழ்ச்சிகள் கொஞ்சம் உருப்பட வைக்கின்றன எனலாம் , அமெரிக்கன் கேம் ஷோவான Lets Make a Deal என்ற நிகழ்ச்சியின் காப்பி தான் இது என்றாலும்..!

*ராசையா என்று நினைக்கிறேன். சுந்தர்ராஜனும், வடிவேலுவும் கோழிக்கடைக்குப் போய்,வாங்கி வந்து கணக்கு பார்க்கையில் ஒரு ரூபாய் இடிக்கும். எங்கே போனது அந்த ஒரு ரூபாய்?

Missing Dollar Paradox அதைப் பற்றித் தான் சொல்கிறது.

இது போன்ற முரண்களைப் பார்த்து, கொஞ்சமே கொஞ்சம் நமது மூளைக்கும் வேலை கொடுத்தால் என்ன?

Liast of Paradoxes.

நமது கவிஞர்கள் இது போன்ற வார்த்தை முரண்களை வைத்து விளையாடி இருக்கின்றார்கள். குறிப்பாக வைரமுத்து அவர்கள்.

காதல் பிசாசும், அழகிய அசுராவும், அழகான ராட்சசனும் நமது முரண்கள்.

Thursday, April 24, 2008

ஒளியிலே தெரிவது...

சென்ற அழகிய நிலாக் காலங்களில் ,வெள்ளிக் கிழமை இரவுக்காகக் காத்திருப்போம். ஏழரை ஆனவுடன் ஓடிப் போய் டி.வி.யில் மூழ்கிப் போவோம். 'ஒளியும் ஒலியும்'க்காக. அதில் காட்சி எங்கிருந்து வருகின்றது? டி.வி.யின் கேதோடு குழாயில் இருந்து. அந்த எலெக்ட்ரான் கதிர்கள் திரையில் மோதி, நமக்கு காட்சிகளாய்ப் புலர்ந்தன. இதில் ஒளி எங்கிருந்து வருகின்றது?

உண்மையில் ஒளி என்பது என்ன?

ஒரு பண்டிதர் மிக்க படித்த கர்வத்தோடு ஊர்வலம் வந்தார். அவரை அனைவரும் பணிந்து வணங்கினர். ஆனால் ஒரு சிறுவன் மட்டும் அவரை கவனியாது விளையாடிக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த பண்டிதர், அவனிடம் வந்து 'எனக்கு தெரிந்ததை விட உனக்கு தெரியுமா? என்னை மதிக்க மாட்டேன் என்கிறாயே?' என்று கேட்டார். அவன், 'ஐயா, நான் கேட்கிற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்' என்றான். ஒத்துக் கொண்டார் பண்டிதர். ஒரு தீக்குச்சியை எடுத்து, தீப்பெட்டியில் உரசிப் பற்ற வைத்தான். 'ஐயா, இந்த நெருப்பு எங்கிருந்து வந்தது?' என்று கேட்டான். பண்டிதர் திகைத்துப் போய் தோல்வியை ஒத்துக் கொண்டு, அவனையே பதில் கூறுமாறு கேட்டார். அவன் உடனே தீக்குச்சியை ஊதி அணைத்தான். 'ஐயா, இப்போது நெருப்பு எங்கே போனதோ, அங்கிருந்து தான் வந்தது..!' என்று கூறி விட்டுப் போனான். பண்டிதரும் கர்வம் விட்டொழிந்தார் என்பது கதை.

சிக்கி முக்கிக் கற்கள், தீப்பந்தம், இலாந்தர் விளக்கு, தீக்குச்சி - தீப்பெட்டி, கேண்டில், மேண்டில், பிளாஸ்டிக் சுவிட்சுகள் என்று வந்து விட்டாலும் அணைத்தவுடன் அந்த வெளிச்சம் எங்கு தான் போகின்றது என்பது நமக்குத் தெரிகின்றதா?

கொஞ்சம் நான் படித்த கதைகளை பார்க்கலாம், நான் புரிந்து கொண்டதைப் பொறுத்து...!

கிழக்கு நோக்கி 100 கி.மீ. வேகத்தில் பைக்கில் போகின்றோம். நம்மோடு இணையாக மற்றொருவன் 100 கி.மீ. வேகத்தில் கிழக்கு நோக்கியே வருகிறான். நமக்கு அவன் என்ன வேகத்தில் போவதாகத் தெரியும்? நம்மோடு இணையாக வருவதால், அவன் நிலையாக நிற்பதாகவே தெரியும். நன்று. அதே சமயம் நமக்கு இணையாக மேற்கு நோக்கி மற்றொருவன் 100 கி.மீ. வேகத்தில் வருவதாகக் கொள்வோம். அவனது வேகம் நம்மைப் பொறுத்த வரை 200 கி.மீ.

அதாவது எதிரெதிராகப் பயணிக்கையில் வேகங்கள் கூடும், ஒரே திசையில் பயணிக்கையில் வேகங்கள் கழிக்கப்படும் - ஒரு நகர்கின்ற ஊடகத்தில் இருக்கின்றவருக்கு!

ஐன்ஸ்டீன் ஐயாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. 'ஒளிக்கற்றை ஒன்று காற்றில் போகையில், நாமும் அதன் வேகத்தில் அதே திசையில் சென்றாலோ, அதற்கு எதிரான திசையில் சென்றாலோ, நாம் உணர்கின்ற ஒளியின் வேகம் என்னவாக இருக்கும்?'

இதை அவருக்கு முன்பே மைக்கல்சன் - மார்லே என்ற இரு விஞ்ஞானிகள் செய்து பார்த்திருக்கிறார்கள். எப்படி?

ஆனால் அவர்கள் இந்த சிந்தனையில் ஆய்வு செய்யவில்லை. நீர் அலைகள் செல்ல நீர் என்ற ஓர் ஊடகம் தேவை. அது போல ஒளி அலைகள் செல்லவும் ஓர் ஊடகம் தேவை என்று நினைத்தனர். ஆனால் ஒளியானது காற்றே இல்லாத வெற்றிடத்திலும் பாய்கின்றது என்பதால் (இல்லாவிடில் பூமியின் காற்றுமண்டலத்திற்கு அப்பால் உள்ள வெற்றிடத்தில் இருக்கும் சூரியனிடம் இருந்து ஒளி நம்மை வந்து அடைய முடியுமா?) வெற்றிடத்தில் ஒளி பாயக் கூடிய 'ஈதர்' என்ற ஊடகம் இருக்க வேண்டும் என்று நம்பினர்.

அவர்களது சோதனையின் மூலம் 'ஈதர்' என்ற ஊடகம் வெளியில் இல்லை என்றும், ஒளியின் வேகமானது எத்திசையில் இருந்து அளவிட்டாலும் சமமாகவே இருப்பது அறிந்து வியந்தனர்.

நாம் ஒளிக்கு எதிராகப் பயணம் செய்தாலோ, ஒளியோடு சேர்ந்து பயணம் செய்தாலோ, ஒளியின் வேகம் ஒரே அளவாகவே இருப்பது கண்டறியப்பட்டது.

Time Dilation



ஒளிப்படம் 1 : Time Dilation.

இரு விண் கப்பல்கள் ஏறக்குறைய ஒளியின் வேகத்தில் செல்வதாக வைத்துக் கொள்வோம். (ஏன் சரியாக ஒளியின் வேகத்திலேயே செல்ல முடியாது? பார்ப்போம்.) ஒன்று மேலும், ஒன்று கீழுமாக! மேலிருக்கும் கப்பல் ஒளித் துணுக்குகளை கீழ் நோக்கி அனுப்புகிறது. கீழ் இருக்கும் கப்பல் ஒளித்துணுக்குகளை திருப்பி அனுப்புகிறது. இப்படியாக இவர்களது பயணம் இருக்கிறது. மேல் கப்பலிலோ, கீழ் கப்பலிலோ இருப்பவர்கள் ஒளியின் பயணம் நேர்க்கோட்டில் இருப்பதாகவே பார்ப்பார்கள். இப்போது இக்கப்பல்களின் பயணத்தை நிலையாக நிற்கின்ற (கப்பலகளைப் பொறுத்து) கிரகத்தில் இருந்து ஒருவர் பார்க்கின்றார். அவருக்கு ஒளித்துணுக்கு செல்லும் பாதையானது நேர்க்கோட்டில் இல்லாமல், 'V' வடிவத்தில் இருக்கின்றது.

ஒளித்துணுக்கு உண்மையில் கடக்கும் தொலைவு தான் என்ன? இரு கப்பல்களுக்கு இடையே இருக்கும் தொலைவு தான் என்பர் கப்பலில் இருப்பவர்கள். 'V' வடிவத்தின் நீளம் என்பார் கிரகத்தில் இருப்பவர்.

எனில் எது உண்மை?

ஒளியின் வேகம் மாறாதது. ஒளி கடந்த தொலைவும் மாறாதது. எனவே எது தான் மாறி இருக்கின்றது? நேரம். அளவிட்ட நேரம். ஒருவரைப் பொறுத்து ஒருவர் நகர்ந்து கொண்டே இருக்கையில், அவர்கள் அடுத்தவரின் நேரம் குறைவாகவே போகும் என்று கணிக்கிறார்கள். இதுவே Time Dilation.

கணிப்பொறி எல்லாம் வருவதற்கு முன்பே சிந்தித்தே இதை எல்லாம் சொல்லி விட்டார் ஐன்ஸ்டீன் அவர்கள்.



படம் 1 : ஒளி சென்ற தூரம் கணக்கீடு.

இப்போது ஒரு சின்னக் கணக்கு. ஏன் ஒளியின் வேகத்திலோ, அதையும் தாண்டிய வேகத்திலோ எதுவும் / யாரும் செல்ல முடியாது என்று புரிகிறதா, பார்ப்போம்.

இரு கப்பல்களுக்கு இடையே ஒளி கடந்த தொலைவு = ct.

c = ஒளியின் வேகம்.

t = ஒளி இரு கப்பல்களுக்கு இடையே உள்ள தொலைவைக் கடக்க எடுத்துக் கொண்ட காலம்.

கிரகத்தில் இருந்து பார்ப்பவரைப் பொறுத்து, இரு கப்பல்களுக்கு இடையே ஒளி கடந்த தொலைவு = cT.

T = கிரகத்தில் இருந்து பார்ப்பவரைப் பொறுத்து, ஒளி இரு கப்பல்களுக்கு இடையே உள்ள தொலைவைக் கடக்க எடுத்துக் கொண்ட காலம்.

ஒளி கப்பல்களுக்கு இடையே போய் வருகையில் கப்பல் கடந்த தூரம் = vT.

v = ஏறக்குறைய ஒளியின் வேகம். கப்பலின் வேகம்.


பிதாகறஸைக் கூப்பிடுங்க. கணக்கு போட்டுப் பார்த்தால், இரண்டு பேரும் கணிக்கின்ற நேரங்களுக்கு இடையே இருக்கின்ற வித்தியாசம் தெரிகின்றது.





இந்த மதிப்பில் நாம சில விளையாட்டு விளையாடிப் பார்க்கலாமா?

1.முதலில் v=0. என்ன அர்த்தம்? கப்பல்கள் நகரவே இல்லை. அப்படியே நிற்கின்றன. அப்ப இதோட மதிப்பு என்ன. சுழி. அப்ப ரெண்டு பேரும் கணக்கிடுகின்ற நேரம் சமமாகவே இருக்கும். சரி தான். எப்படின்னா, இரு கப்பல் பைலட்டுகளைப் பொறுத்தவரை, இரு கப்பல்களும் நகரவே இல்லை. அப்போது, அவர்கள் கணிக்கின்ற நேரம் சமமாகவே இருந்தது அல்லவா?

2. இப்போது v = c. அதாவது மிகச் சரியாக ஒளியின் வேகத்திலேயே கப்பல்கள் போகின்றன. அப்போது, இதன் மதிப்பு 1/0. கணிக்கவே முடியாத மதிப்பு ஆகின்றது.

3. v = 3c. அதாவது ஒளியின் வேகத்தை விட, அதிக வேகத்தில் கப்பல்கள் போகின்றன. அப்போது இதன் மதிப்பு என்ன? ரூட்டுக்குள் நெகட்டிவ் வருகின்றது. நடைமுறையில் வரவே இயலாத முடிவு. எனவே எந்த ஊர் ராசாவாக இருந்தாலும், ஓடுவதில் ஒளியோடு போட்டி போட முடியாது என்பது தெளிவாகின்றது.

ஒளி தான் கிங்.



சுவிட்ச் ON பண்ணுங்க. ஒளி எப்படி ஓடுது?

சும்மா பிச்சுகினு ஓடுது இல்ல?

எப்டி?

சும்மா பிச்சுகினு...!

ஒளியார் யார்?

சென்ற நூற்றாண்டு வரைக்கும் ஒளியைப் பற்றி ஒரே தியரி தான் இருந்ததாகத் தெரிகின்றது. ஒளி அலை வடிவம் தான் என்றார்கள். அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் குழப்பம் வர ஆரம்பித்தது. ஐன்ஸ்டீன் வந்தார்.

ஒளியைக் கேட்டார்."நீ யாரு? அலையா, துகளா?"

எஸ்.ஜே.சூர்யா மாதிரி, "அலை தான். ஆனா இல்லை. துகள் தான். ஆனா இல்லை". குழப்பம் தான்.

சில ஆய்வுகள் ஒளி அலைதான் என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்தன. மற்ற சில ஆய்வுகள் ஒளி துகள் தான் என்று துண்டு போட்டுத் தாண்டின.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1."ஏன்னா, பூத் சாத்திடப் போறான். வராண்டால உக்காந்து பேப்பர் படிச்சது போதும். போய் பால் வாங்கிட்டு வாங்கோ.." சமையல் அறையில் இருந்து சகதர்மிணியின் குரல் கேட்கின்றது. ஆனால் அவரது உருவம் தெரிவதில்லை. என்ன காரணம்? குரல் ஒலி அலைகளால் ஆனது. சுவர்கள் தாண்டி பாய்ந்து வருகின்றது. அவரது உருவத்தின் மீது ஒளி விழுந்து சுவர்கள் தாண்டி வருவதில்லை. எனவே ஒளி துகள் தான். அலை கிடையாது.

2. கண்ணாடியில் பட்டு எதிரொலிக்கின்றது. ஊடுறுவுகின்றது. சிதறுகின்றது.எனவே அலை தான்.

3.நம்மை பூமி இழுக்கின்றது புவி ஈர்ப்பு. காரணம் நமது உடல் அணுத் துகள்களால் ஆனது. ஒலியை புவி ஈர்ப்பு விசை இழுப்பதில்லை. ஏனெனில் அது அலைகளால் ஆனது. துகள் பிஸ்னெஸே கிடையாது.

ஆனால் ஐன்ஸ்டீன் ஐயா செய்த சில ஆய்வுகளில் ஒளி துகள் தான் என்று உணர்ந்தார். எனவே தொலைதூர நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி சூரியனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டிருக்கும். அதனால் அது சற்று தள்ளியே நம்மை வந்தடையும் என்றார். 1919ல் நிகழ்ந்த ஒரு சூரிய கிரகணத்தில் அது மெய்ப்பிக்கப்பட்டு, as they told ஐன்ஸ்டீன் 'ஒரே இரவில் உலகப் புகழ் பெற்றார்'.

அதைப் பற்றிய பத்திரிக்கைச் செய்தி.:



உள் அழுத்தம் அதிகமாக, அதிகமாக ஈர்ப்பு விசை அதிகமாகி, நட்சத்திரங்கள் அழியும் காலத்தில் உச்ச ஈர்ப்பு விசை அடைந்து எல்லாவற்றையும் அசுரப் பசியோடு விழுங்கும். ஒளி கூட அதில் இருந்து தப்ப முடியாது. (இதைத் தான் 'அணையப் போற விளக்கு பிரகாசமா எரியும்'னு நம்ம ஊருல சொன்னாங்களோ? யோசிக்க வேண்டிய விஷயம் தான். இதை வெச்சிட்டு BlackHoles பற்றி நமக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்குனு சொல்வது சரியல்ல.)அவை கருந்துளைகள் (Black Holes) எனப்படும் என்று கண்டுபிடித்து பல முன்னேற்றங்கள் அடைந்திருக்கிறார்கள்.



ஸ்டீபன் ஹாக்கிங் இன்னும் மேலே சென்று எதிர் அணுக்கள் என்று ஒன்று மட்டும் தப்பிக்கும் என்கிறார். (Black Holes and Baby Universes and Other Essays).

ஒரே குழப்பம் தான்.

ஒளி, நீங்க அலையா, துகளா...?

தெரியலையேப்பா..!

ம்மாளுங்க என்ன சொல்லி இருக்காங்க?

இறைவனை ஒளி வடிவில் பார்க்கிறார்கள். சூரியனை தலைவனாகக் கொண்டு இந்து மதத்தில் ஒரு பிரிவே இருந்திருக்கின்றது. நெருப்பு போல் தூய்மை இருக்க வேண்டும் என்றார்கள். வீடுகளில் விளக்கேற்றுகிறோம். மகர ஜோதி பார்க்கிறோம். விஷேசங்களில் பந்தமோ, விளக்கோ ஏற்றுகிறோம். திருமுறைகளையோ, இலக்கியங்களிலோ பரிச்சயம் இருப்பவர்கள் இன்னும் சொல்லலாம்.



நாம் சின்னதாக ஒன்றை மட்டும் சொல்லி முடித்துக் கொள்வோம்.

அருட்பெருஞ்சோதி, அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்சோதி...!


http://en.wikipedia.org/wiki/Michelson-Morley_experiment

http://www.glenbrook.k12.il.us/gbssci/phys/Class/light/u12l1a.html

http://www.lightandmatter.com/

***

இப்பதிவில் ஏதாவது பிழை இருப்பின் தயவித்து தெரிவித்தால் மகிழ்வேன். திருத்திக் கொள்வேன்.

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

Thursday, March 20, 2008

பிஸிக்ஸ் - பிட்ஸ் ஸிக்ஸ் .


ன்ஸ்டீன் அண்ணாத்தைக்கு முதலில் சலாம்.

ன்றும் இல்லாததை என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது தான்.

ஆனால் அதை அழுத்தி இருக்கிறார்கள். Squeeze செய்திருக்கிறார்கள். பாருங்களேன்.

http://sciencenow.sciencemag.org/cgi/content/full/2008/229/1

வாழ்வின் மாயா தத்துவத்தையும், இயற்பியலையும், புத்தமதத் தத்துவத்தையும் இணைத்து ஒரு பெரிய ஆர்டிகிள் எழுதி இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட துறைகளில் ஏதாவது ஒன்றிலாவது குறைந்தபட்சம் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் படித்துப் பாருங்கள். இல்லாவிட்டால் அப்படியே ஏறக் கட்டி விடுங்கள்.

http://www.higgo.com/quantum/laymans.htm

காந்தப் புலத்தைத் தூண்ட என்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது, பார்த்தீர்களா..?



ரண்டாம் உலக மகா போரில் ஜப்பான் பேரரசை நிலை குலைய வைத்த 'சின்னப் பையன்'.



ரு சதுரத்தின் பரிமாணம் 2. ஒரு கோட்டின் பரிமாணம் 1. ஒரு புள்ளிக்கு பரிமாணமே கிடையாது. சரி. எல்லாம் நாம் அறிந்தது தான்.

முக்கோணத்தின் பரிமாணம் என்ன? ஒரு மரத்தின் பரிமாணம், காலையில் சாப்பிட்ட இட்லியின், பரிமாணம், வானில் நகர்கின்ற மேகத்தின் பரிமாணம் என்னவாய் இருக்கும்?

அறிய ஆசையா? அணுகவும்.

பிரதி வாரம் செவ்வாய் காலை 7 மணி முதல், மதியம் 1 மணி வரையும் Massachusetts சர்வரிலும், வியாழன் மதியம் மூன்று மணிக்கு மேல் ஒன்பது முப்பது மணி வரை பிட்ஸ்பெர்க் சர்வரிலும் மாறிக் கொள்ளாமல், எப்போதும் ஒரே சர்வரில் நின்று அருள் பாலிக்கும் இங்கே :

http://www.math.umass.edu/~mconnors/fractal/sierp/sierp.html

குழப்பவியலைப் (Chaos Theory) பற்றிய குழப்பமான தத்துவங்களையும், குழப்பமான ஈக்வேஷன்களையும் நம்மைக் குழப்பாமல் , குழப்பவும் செய்யாமல், குழம்பவும் விடாமல் ஒரேயடியாக குழப்பி அடிக்காமலும் குழப்பமே இல்லாமலும் இங்கே ஒரு சிறிய அறிமுகம். என்ன கொஞ்சம் குழப்பி விட்டேனா, இல்லை குழம்பி விட்டேனா..? ரொம்பக் குழம்பாமல் இங்கு சென்று பார்க்கவும். உங்கள் குழப்பம் கொஞ்சம் தெளியலாம்.

குழப்பாண்டவரே துணை.

http://www.imho.com/grae/chaos/main.html

Friday, January 18, 2008

எதிர்காலம் - அறிய முடியுமா?

ரு சிறு கேள்வி!

நீங்கள் அடுத்த நொடியில் உங்கள் இடது கண்ணை என்னவெல்லாம் செய்யக் கூடும்? எனக்குத் தெரிந்து கீழ்க் காணும் ஏதேனும்.

இடது புறம் கண்களின் பாப்பாவை நகர்த்திப் பார்க்கலாம்.

வலப்புறம். மேலே. கீழே.

இமையால் மூடலாம். இமையைத் திறக்கலாம். பிடுங்கி எறியலாம். கைகளால் தேய்க்கலாம். கைகளால் தேய்ப்பதை நிறுத்தலாம்.

போதும்.

இந்த உலகில் உங்கள் இடது கண் மட்டும் மற்றும் நீங்கள் தான் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கவனம். வேறு எதுவும் இல்லை.

எனவே அடுத்த நொடியில் உங்கள் இடது கண் அடையப் போகும் நிலை என்பது மேலே கூறப்பட்ட நிலைகளில் ஏதேனும் ஒன்று மட்டுமே.! நிகழ்தகவுத் தத்துவம் (Probablity Theory)உபயோகித்தால், இடது கண் அடையக் கூடிய நிலை தெரிந்து விடும் அல்லவா?

ஆனால் உலகம் இயங்கும் விதம் அவ்வளவு எளிதல்ல.

நமது இடது கண் அடையப் போகும் நிலை, பற்பல காரணிகளைப் பொறுத்து இருக்கிறது. அந்த நிகழ்வுகளின் நிகழ்தகவுகள் வேறு வேறாக இருக்கும். சார்பு நிகழ்தகவு. (Mutual Probability).

இது போல், உலகில் நிகழக் கூடிய அத்தனை நிகழ்வுகளும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வந்து விடும். உதாரணமாக கண்களால் பார்க்க மட்டுமே முடியும் அதனால் சாப்பிட முடியாது அல்லவா?

இப்படி உலகின் பொருட்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தமது செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தனை அத்தனை நிகழ்வுகளின் கூட்டு நிகழ்தகவுகள் தெரிந்திருப்பின் எதிர்காலம் நாம் கணித்து விட முடியும் அல்லவா? அத்தகைய வலிய கணிணி உருவாக்கப் பட்டால், காலக் கண்ணாடி நம் எதிரே...!

Theory of Everything மாலையில் படித்ததின் விளைவு.

Tuesday, January 08, 2008

We salute You, Sir...!



ன்று ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் 65-வது பிற்ந்த தினம்.

மிகப் பெரும் சிந்தனையாளர் என்பதுடன் அவரது வாழ்வில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய மற்றுமொரு செய்தி.. அவரது தன்னம்பிக்கை...!

எல்லாம் ஒழுங்காக இருந்தும் எதுவும் நல்லதாக / உருப்படியாகச் செய்யாமல், மகாகவியின் 'தேடிச் சோறு' தின்னும் பல்லாயிரம் ஈசல்களில் ஒருவராக மடிகின்ற மண்ணில்.. இவரது வாழ்வு தரும் செய்தி, அற்புதம்..!

உங்களை வணங்குகின்றோம். We salute You, Sir..! உங்களது இயற்பியல் கோட்பாடுகளோ, உங்களது தீர்மானமான முடிவுகளோ நாங்கள் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்.

ஆனால் உங்களது தின வாழ்வில் இருந்து நாங்கள் பெற வேண்டிய செய்தி பெற்றுள்ளோம்.

நன்றி ஐயா..!

http://www.hawking.org.uk/


Get Your Own Music Player at Music Plugin

Friday, June 15, 2007

இயற்பியல் - காதலிப்பது ஏன்?


பாடங்களில் எனக்கு மிகப் பிடித்தது எதுவென்று யாராவது கேட்டால், கண்ணை மூடிக் கொண்டு நான் சொல்லும் பதில் இயற்பியல் என்பதாகத் தான் இருக்கும்.

ஜல்லி அடிப்பதற்காக இல்லையென்றாலும், சில விஷயங்களைச் சொல்லி விடுவது, எனக்கும் ஒரு பதிவாக இருக்கும் என்பதால், இங்கே..!

தெளிவாக நினைவில் இல்லையென்றாலும், இயற்பியல் மீது எப்படி எனக்கு ஈர்ப்பு வந்தது என்று கூறி விடுவது சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எங்கள் ஊரிலிருந்து, பள்ளிக்கு 16 கி.மீ. இருக்கும். 7-வதில் இருந்து, +2 வரை அங்கே தான் படித்ததால், ஆறு வருட படிப்பு முழுதும், பேருந்து பயணத்தின் மீதாகவே நடந்து வந்தது.

'படி தாண்டா பத்தினி' போல், படி நிற்கா 'பத்திரனா'கவே நான் பயணம் செய்வேன். ஏறி உள்ளே பாதுகாப்பாக ஒரு இடம் கிடைத்தால் போதும்... உட்கார்ந்து விடுவேன் என்று தானே நினைத்தீர்கள். அது தான் இல்லை, மூன்றடியால் உலகளந்த பெருமான் போல், பேருந்தின் மேற்கூரையையும், அடித்தளத்தையும் இணைத்து நிற்கின்ற கருப்பு பிடித்த கம்பியைப் பிடித்தவாறே, நின்று கொள்ளுவேன்.

'அண்ணன் இந்த பஸ்ஸில மட்டுமில்ல, தமிழ்நாட்டுல எந்த பஸ்ஸுல போனாலும் கம்பியைப் பிடிக்காம தான் நிப்பாரு'னு எந்த வெட்டி பந்தாவும் இல்லாம, கம்பி மீது சாய்ந்து கண் மூடி கனவு கண்டு வருவது, சுகமானது.

அதுக்காக பஸ்ஸில் கூட்டமே இருக்காது என்று நினைத்து விடாதீர்கள். கூட்டம் அள்ளும். பள்ளி மாணவர்கள் கூட்டம், சந்தைக்குப் போகும் கூட்டம், அரிசி மூட்டை, காய்கறிக் கூடை என்று அது ஒரு தினுசாகத் தான் போகும்.

அப்படி ஒருநாள் போகையில், ஒரு ஈ பஸ்ஸுக்குள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. நமக்குத் தான் எப்பவுமே வெட்டி மைண்ட் ஆச்சே.

'ஆமா.. இந்த ஈ எதையுமே பிடிக்காம , நம்ம கூடவே பஸ்ஸில் வருதே.. அது எப்படி..? நாம மட்டும் கம்பியைப் பிடித்தவாறே வர வேண்டியிருக்கிறதே.எப்படி? ஈயால் எதையும் பிடிக்காமல், பறந்து கொண்டே பஸ்ஸோடே வர முடிகின்றது?

காற்று உள்ளே வீசிக் கொண்டிருக்கின்றதே...? பேசாமல் அந்த ஈயிடமே கேட்டு விடலாமா ' என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டு வருகையில், நான் சிந்தித்துக் கொண்டே வருவதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப் படாமல், 'தடாரெ'ன்று வெளியே பறந்து, காணாமல் போனது, அந்த ஈ.

'என்னடா, இந்தப் பையன் ஏதோ நம்மைப் பற்றி நினைத்துக் கொண்டே வருகிறானே! நாம ஹெல்ப் பண்ணுவோம்'னு கொஞ்சமாவது நினைத்துப் பார்த்திருக்க வேண்டாம். 'அட, டிக்கெட்டே எடுக்காம ஓசியிலேயே 10 கி.மீ. பயணம் செய்து வந்திருக்கோம். இவன் நம்மளையே முறைச்சுப் பார்த்திட்டு வர்றான். அதுக்காகவாவது என்ன,ஏது என்று கேட்டுப் பார்க்கலாம் ' என்று ஒரு குற்ற உணர்வு கூட இல்லாமல் பறந்து போனது.

பல ஆண்டுகள் கழித்து, இதே போன்று பலரும் சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள் என்று படிக்கையில், கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. 'நாமும் அந்த ரேஞ்சில்' இருக்கிறோம் என்று.

10-வது படிக்கும் வரை, ஒன்றும் ஸ்பெஷலாக ஆசை எல்லாம் இல்லை. மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக, அனைத்துப் பாடங்களையும் படித்து வந்தேன்.

10-வதில், 'ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்' என்று ஒரு ஆங்கிலப் பாடம் வந்தது. அப்படியே அள்ளிக் கொண்டது. எப்படி இந்த மனுஷன் இப்படி எல்லாம் திங்க் பண்ணி இருக்கார் என்று நினைத்துப் பார்ப்பதே இன்பமாக இருந்தது.

தோதாக, 10-வதிற்காகச் சென்ற கோச்சிங் வகுப்பில், வந்த எங்கள் இயற்பியல் ஆசிரியரும், அவர் போலவே இருக்கவே, ஒரு ஆசை வந்தது இயற்பியல் மீது.

ருமுறை ஈரோடு வேலா புத்தக நிலையம் சென்று ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று சென்றதில், கண்ணில் பட்ட முதல் புத்தகம் 'ஓரியண்ட் லாங்மென்' பதிப்பகத்தால், வெளியிடப்பட்டு இருந்த 'ஐன்ஸ்டீன்' புத்தகம். நல்ல மொழிபெயர்ப்பு. அவரது வாழ்க்கை வரலாறு. அவரது கண்டுபிடிப்புகள். உலக அமைதிக்காக அவர் நடத்திய போராட்டங்கள் என்று அவர் பற்றிய ஒரு முழுப் பரிமாணத்தின் சிறு ஒரு மாடல் அகப்பட்டது.

ஆனால் அது போன்ற புத்தகங்களின் விலையே 45ரூ.க்கு மேல் இருந்ததால், நான் கண் பதித்திருந்த ' கலிலியோ', 'பெஞ்சமின் பிராங்க்ளின்', ' நியூட்டன்', 'கெப்ளர்', போன்ற அந்த சீரியஸ் புத்தகங்களை வாங்க முடியாமல், ஏக்கத்துடன் அவற்றைப் பார்த்துக் கொண்டே, 'ஐன்ஸ்டீனை' மட்டும் எடுத்துக் கொண்டு வந்தேன்.

எனக்கும் அந்தப் புத்தகங்களும் ஒரு சோகத்துடனே என்னை 'போய் வா' என்று சொன்னது போல் நினைப்பு.


பிறகு ஒரு முழு வேகத்துடன் படிக்கத் தொடங்கிய 11, 12-ம் வகுப்புகளில், இயற்பியல் மட்டும் என்னை அப்படியே உறிந்து கொண்டது.

அதுவரை படித்திராத வலையில் இயற்பியல்.

காந்தம், கரண்டு என்று வழிவழியாகப் படித்து வந்தது போல் இன்றி, எடுத்த எடுப்பிலேயே, காந்தமும், கரண்டும் பாம்புகள் போல், பிணைந்து, பின்னிப் பெடலெடுக்கும், அந்த மாக்ஸ்வெல் பரிசோதனையின் படம் மற்றும் முதல் பக்கம் இன்னும் என் கண்களிலேயே நிற்கிறது.

அந்த முதல் பாடம் மட்டும் எத்தனை தடவை படித்திருப்பேன் என்று கணக்கேயில்லை. பரிட்சைக்காக இல்லை. ஃப்ரீ அவர் என்று வரும் போதெல்லாம், 'எல்லாரும் ஏதாவது எடுத்துப் படியுங்கள்' என்று அறிவுறுத்தப் படும் போதெல்லாம், நான் எடுப்பது இயற்பியலின் முதற்பாடமே!

படிப்பதின் இன்பம் அப்போது தான் புரிந்தது. அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், அந்தப் பாடம் படிப்பது மட்டுமே இன்பம் அளித்தது.

போதாக் குறைக்கு, 'சும்மா கிடந்த சிரங்கை சுரண்டி விட்டது' போல் வந்து சேர்ந்தது, கரிம வேதியியல் (Organic Chemistry). என்னய்யா பாடம் அது. ஒரே வட்ட, வட்டமா சுத்திக்கிட்டு.

கனவில் எல்லாம், அந்த இணைப்புகள் எல்லாம் தலையைச் சுற்றுவது போல் தோன்றும்.

பென்சீன் அமைப்பு பற்றி ரொம்ப யோசித்தும், ஒன்றும் ஒத்து வராமல், தூங்கப் போய் விட்டாராம் அறிவியல் அறிஞர். கனவில் ஒரு பாம்பு, அதன் வாலைப் பிடித்து விழுங்குவது போல் கனவு வந்ததாம். 'தடார்' என விழித்துக் கொண்ட நம்ம ஆள், பென்சீன் அமைப்பு வட்டம் போன்றது என்று சொல்லி பேர் தட்டிச் சென்றாராம்.

இப்படி ஒரு கதை சொல்லுவார்கள். நல்லாத் தான்யா கண்டுபிடிச்சார். பாம்பே தான். 'காலைச் சுத்தின பாம்பு கடிக்காம விடாது'ங்கற மாதிரி, இந்த கரிம வேதியியல், ஒவ்வொரு பரிட்சையின் போது தகராறு செய்யும்.

அதில் இருந்து நான் தப்பித்துக் கொள்ள 'உனைச் சிக்கெனப் பிடித்தேன் பராபரமே'ங்கற மாதிரி இயற்பியலை இறுக்கிப் பிடித்துக் கொள்ள, அது இன்னும் இறுக்கமாகிப் போனது; நெருக்கமாகிப் போனது.

முன்னாடி நடந்த கதை ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அதையும் சொல்லி விடுகிறேன்.

ங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு 'காமாட்சி அம்மன்' கோயில் உள்ளது. அங்கு ஒரு 'புத்தக பீரோ' இருந்தது. வழக்கமாக அங்கு என்ன இருக்கும் என்று நினைப்பீர்கள்?

திருமுறைகள், வாழ்த்துப் பா புத்தகங்கள், நன்கொடை இரசீதுப் புத்தகங்கள், கோயிலுக்கு வந்த பொன்னாடைகள், திடீர் வருகையாளர்களுக்குப் போர்த்த மஞ்சள் நிற பட்டாடைகள் என்று தானே?

அவையும் இருந்தன. அத்துடன் நல்ல புத்தகங்கள் பலவும் இருந்தன.

ஒருமுறை அங்கே சென்று குடைந்து கொண்டிருக்கையில் கையில் அகப்பட்டது, ஒரு புத்தகம்.

'அணுக்கள், மனிதன், விண்மீன்கள்'.

தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்று அதை கேட்டு எடுத்து வீட்டுக்கு வந்து படிக்கத் தொடங்குகையில், 'எப்படி இருக்கிறாய் தம்பி' என்று உள்ளிருந்து எட்டிப் பார்த்துக் குதித்தது, இயற்பியல்.

(பணிக்குச் செல்ல வேண்டி இருந்ததால், இடைவேளை விட வேண்டியதாகப் போயிற்று.)

அந்த புத்தகத்தில் படித்த ஒரு கான்செப்ட், நன்றாக இன்னும் நினைவில் இருக்கிறது.

நாம் 3டி உலகத்தில் வாழ்கிறோம். நம்மால் அடுத்த பரிமாணத்தில் நினைக்கக் கூட முடியாது என்பதை அருமையாகச் சொல்லியிருக்கும் கான்செப்ட் அது.

நமக்கு 3டி உலகம் தெரியும். அதனால் நாம் நீளம், அகலம், உயரம் என்று வைத்துக் கொள்கிறோம். இப்போது 2டி மட்டுமே தெரிந்த மற்றுமொரு உலகம் (Parallel Universe..?) இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

அங்கே ஒருவன் ஒரு தவறு செய்து விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். அவனை சிறையில் அடைக்கிறார்கள். சிறை எப்படிப் பட்டது? வெறும் நீளம் மற்றும் அகலம் மட்டுமே உள்ள சிறை. உயரம் என்பதே கிடையாது. அதாவது சுவரே கிடையாது. கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நாம் அங்கு செல்கிறோம். நாம் தான் 3டி ஊர்க்காரர் ஆயிற்றே!

அங்கு சிறையில் அடைபட்டவனைப் பார்த்து சிரிக்கிறோம்.

'ஏண்டாப்பா..? இப்படி உட்கார்ந்துகிட்டு இருக்க? அப்படியே ஒரு ஜம்ப் அடிக்க வேண்டியது தானே' என்று நமது அறிவைக் காட்டுகிறோம். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

'இன்ன சொல்ற நீ..? ஜம்ப்னா இன்னா? என்னத் தான் ஜெயில்ல புடிச்சுப் போட்டாங்கல்ல..? அப்பாலிகா எப்படி ஜம்ப் அடிக்கறது? சும்மா உதார் வுடாத நைனா..?' என்கிறான்.

நாம் தலையில் அடித்துக் கொண்டு, அவனைப் பிடித்து நமது உலகத்தில் தூக்கிப் போடுகிறோம்.

'இன்னாபா..? மெய்யாலுமே நான் வெளிய வந்துட்டனா? இன்னா ஊரு இது? செம ஷோக்கா இருக்குபா..?' என்றவாறு நடையைக் கட்டுகிறான்.

அவனைப் பிடித்து அப்படியே அந்த 2டி உலகத்திலேயே வெளிக் கொண்டு வர முடியாது. ஏனெனில் அங்கே 3டி கிடையாது. எனவே நமது 3டி உலகத்திற்குத் தான் மாற்ற முடியும்.



இப்போது கதையைத் திருப்பிப் போடுவோம்.

4டி உலகத்தில் இருந்து ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். நம் ஊரில் ஒருவன் சிறையில் இருப்பதைப் பார்த்து என்ன செய்வார்? அவரும் சிரிப்பார்.

நமது 3டி அறிவை வைத்து, நாம் நீளம், அகலம், உயரம் உள்ள ஒரு சிறையில் வாடிக் கொண்டு இருக்கிறோம். அவர் என்ன செய்வார்? நம்மைப் பிடித்து அவரது உலகத்தில் தூக்கிப் போட்டுக் கொள்வார்.

நம்ம ஊர்க்காவலர்கள், திகைத்துத் தான் போயாக வேண்டும். வேறு வழி?

ப்படிப் போகின்ற கருத்துக்கள் நன்றாக இருக்கும்.

என்ன சொல்லியிருப்பார்கள் எனில், அணுக்களும் சுழன்று கொண்டிருக்கின்றன. விண்மீன்களும் சுழன்று கொண்டு இருக்கின்றன். இந்த இரண்டுக்கும் நடுவில் மனிதன் உள்ளான்.

நல்ல கதை இல்லை..?

ப்படி எனக்குப் பிடித்த இயற்பியல் பற்றி இது போல் நானும் கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன்.

இயற்பியலில் சுவாரஸ்யமான நிகழ்வுகள்!

வித்தியாசமான கண்டுபிடிப்புகள்!

தியரடிகல் இயற்பியலில் சிந்தனைக்கு பணி கொடுக்கும் கருத்துக்கள்!

என்றெல்லாம் ஒரு பயணம் போகலாம் என்று நினைக்கிறேன். எப்போதாவது நன்றாக இல்லை என்று யாராவது சொல்லுமிடத்தில் நிறுத்தி விடுகிறேன்.

நான் ஒன்றும் இயற்பியலில் வஸ்தாது இல்லை. உங்களுக்குச் சொல்லும் சாக்கில் நானும் கொஞ்சம் அவற்றைப் படிக்கலாமே என்ற நப்பாசை தான்.



என்று தலைவர் சொன்னது போல், பேசலாம்.

'மிழ்து', 'அமிழ்து' என்று தொடர்ந்து சொல்லிப் பாருங்கள். 'தமிழ்', 'தமிழ்' என்று மாறும். அப்படி அமிழ்தைப் போல் இனியது தமிழ் என்று சொல்லுவார்கள். அமிழ்தை யாரும் கண்டதில்லை, உண்டதில்லை என்பதால், தமிழையே நாம் உண்கிறோம். அதன் வழி அமரநிலை பெறுவோம்.

அது போல்,

'இயல் - பு - இயல் = இயற்பியல்' என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். திருப்பிப் படித்தாலும் அதுவே தானே வருகின்றது? அது தான் இயற்பியலின் மகத்துவம். வேறு எதற்கும் அந்தப் பெருமையைத் தரவில்லை தமிழ்.

வாருங்கள்.

நம் இயல்பின் இயலை அவ்வப்போது உணர்ந்து மகிழ்வோம்.