Saturday, July 24, 2010
My Name ISKCON.
மிதந்து கொண்டிருந்த குளிர் மேகங்களை ஊடுறுவி வெண் பட்டுப் போன்ற கதிர்க் கோடுகள் பெங்களூர் வானில் ஒளியை பரவ விட்டுக் கொண்டிருந்தன. நகரம் சனிக்கிழமையும் ஓய்வுறாத சாலைகளில் இயங்கிக் கொண்டிருந்தது. இன்ஸெப்ஷனுக்கும் தில்லாலங்கிடிக்கும் உதிரிக் கூட்டங்கள் தியேட்டர்களுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க, கெம்பகெளடா பேருந்து நிலையத்தில் நண்பகல் பனிரெண்டு காலுக்கு இறங்கிக் கொண்டேன்.
80 இலக்கமிட்ட பேருந்து ஒன்றில் ஏறிக் கொண்டு, "இஸ்கான்..!" என்று வாங்கிக் கொண்டேன்.
இண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் க்ருஷ்ணா கான்ஷியஸ் என்ற பெயரின் சுருக்கமே இஸ்கான். பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்களால் நிறுவப்பட்ட அமைப்பு இது. பகவான் கிருஷ்ணனையே முழுமுதற்கடவுளாக கொண்டு இயங்குகின்றது. வெளியே பிரபலமாக 'ஹரே கிருஷ்ணா' இயக்கம் என்று சொல்லப்படுகின்றது. உலகெங்கும் பரவியுள்ள இந்த அமைப்பின் பெங்களூர்க் கிளை ராஜாஜி நகர் அருகே இஸ்கான் ஹில் என்றே பெயரிடப்படுள்ள சிறு குன்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதை ராதாகிருஷ்ண மந்திர் என்றும் சொல்கிறார்கள்.
மிகத் தெளிவான வரையறுக்கப்பட்ட பாதை இருக்கின்றது. எண்ட்ரியிலிருந்து எக்ஸிட் வரை ஆங்காங்கே அம்புக் குறிகள் நடப்பட்டிருக்கும் பாதை எவர்சில்வர் தண்டுகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. தொலைந்து போகும் வாய்ப்பேயில்லை.
கொஞ்சம் மலை ஏறியதும் பாதக் காலணிகள் வைக்கும் இடம் உள்ளது. வரிசையாக அடுக்குகள் உள்ளன. அவற்றுக்குப் பெயர்கள் A, B, C என்று துவங்கி Z தாண்டிப் பின் AA, AB என்று நீள்கின்றது. நெற்றியில் நாமமும், சின்னக் குடுமியும் வெண்ணிற ஜிப்பாவும் அணிந்த இளம்பையன்கள் சிமெண்ட் சுமந்த பாலிதீன் மூட்டையை எடுத்துக் கொடுக்க நாம் நம் செருப்புகளை அதிலே போட்டுக் கொடுத்தால், அவர்கள் காலியாக இருக்கும் அடுக்கில் வைத்து விட்டு நமக்கு டோக்கன் கொடுக்கிறார்கள்.
கொஞ்சம் மேலே ஏறினால், கைகளை கழுவிக் கொள்வதற்குத் தண்ணீர் பைப்புகள். கால்களைக் கழுவிக் கொள்ள பாதையிலேயே ஒரு கிடைமட்ட பைப் வைத்து அதில் சில பொத்தல்கள் இருக்க, குளிர் நீர் கசிந்து படிக்கட்டை முழுக்க நனைத்துக் கொண்டிருக்க, நாம் அந்தச் சிறு நீர்ப்பரப்பில் நனைத்துக் கொள்ளலாம்.
இன்னும் கொஞ்சம் தூரம் வழியிலேயே சென்றால், கம்பித் தடுப்புகள் முடிந்து ஓர் அகன்ற வெளி வருகின்றது. அங்கே நின்று பார்த்தால், நமக்கு முன்னே கோயில் பெரிதாக நின்று கொண்டிருக்கின்றது. ஸ்பீக்கர்கள் 'ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே;' என்று திரும்பத் திரும்பச் சொல்கின்றன. பதிவு செய்யப்பட்டதா அல்லது ஒருவர் மைக் முன் அமர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை.
முதலில் வருவது நரசிம்மர் கோயில். இரணியனைக் கொல்லும் அதே கோபத்துடன் அமர்ந்திருக்கிறார். வரிசையாகச் சென்று பார்த்து வணங்கினேன். மஞ்சள் வெளிச்சத்தின் நடுவில் அத்தனை நகைகளுடன் தெரிந்தார்.
வெளியே வந்து கொஞ்சம் படியேறினால் வெங்கடாசலபதி நிற்கிறார். சொல்ல வேண்டுமா? தகதகதகவென ஜொலிக்கிறார். உண்டியலும் இருந்தது.
சங்கர் தயாள் சர்மா அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த போது திறந்து வைத்த கோயிலாம். கல்வெட்டு சொல்கின்றது.
இன்னும் கொஞ்சம் படிக்கட்டுகள் வழியேறினால் ராதாக்ருஷ்ணர் கோயில்.
மிகப் பெரியதாக இருக்கின்றது. கூம்பு வடிவ உச்சி நம்மைச் சட்டென மிகச் சிறியவனாக உணரச் செய்யும் உயரம். அதன் உடலெங்கும் கண்ணன் ஓவியங்கள். மையத்தில் பிரம்மாண்டமான ஷாண்ட்லியர் மின் விளக்கு ஒன்று தொங்குகின்றது. உயரமான மாடங்களில் எண்ணெய் விளக்குகள். அவை ஏற்றப்படவில்லை. திருவிழாக்களில் திரிபடலாம். டைல்ஸ் தரை. முன்னே பார்த்தால் தங்கக் கோபுரங்களின் கீழே மூன்று பகுதிகள். வலப்புறம் கண்ணன், பலராமன். இடப்புறம் நித்ய கெளரங்கா. கெளரங்கா என்ற பெயர் ஸ்ரீ சைதன்ய மகாப்ரபுவையும், நித்ய என்ற பெயர் அவரது பிரதான சீடரான நித்யானந்த பிரபுவையும் குறிக்கின்றது. மையத்தில் ராதையுடன் கண்ணன். சிலைகளைப் பார்த்தால் வட இந்தியப் பாணி தெரிகின்றது. பூரியில் இருக்கும் பாண்டுரங்கனைப் போன்ற அடையாள உற்சவர்கள்.
இவை பஞ்ச லோகச் சிலைகள் (தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் இரும்பு). இவை கும்பகோணம் அருகில் உள்ள ஸ்வாமி மலையில் தேவஸ்தான ஸ்தபதி மற்றும் அவரது மகனான இராதாகிருஷ்ண ஸ்தபதிகளால் உருவாக்கப்பட்டதாக வலை சொல்கிறது.
நன்றி:: http://api.ning.com/files/7juhZFLXQaSOma8VHkiLhYw06RkJ3QvzFtIrog0bciiaSdWaGz24R6gKDpLiw**MR812kBvA6VcBAEju4kL4N9HM4g8W*x4h/DSCN2682.jpg
தங்கக் கோயில்களை நாம் நெருங்க முடியாது. தர்மதரிசனத்தில் கொஞ்சம் தொலைவிலிருந்து பார்க்கலாம். சிறப்பு தரிசனமும் இருக்கின்றது. வணங்கி விட்டு இடப்புறத்தில் புத்தகக் கடைகள் துவங்குகின்றன. ஆங்கிலம், இந்தி, வங்காளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா ஏன் சைனீஸிலும் புத்தகங்கள் உள்ளன. இரண்டு குறும் நூல்கள் வாங்கினேன். தமிழில் தான்.
சுற்றி வந்தால் தீர்த்தம் தருகிறார்கள். இதற்கென்றே டிசைன் செய்யப்படுகின்ற தீக்குச்சிக் கரண்டிகள். திரும்பினால் பிரபுபாதா அவர்களின் சிலை இருக்கின்றது. அவருக்கு முன்னே அமர்ந்து தியானம் செய்யத் தளம் இருக்கின்றது. இசைக்கருவிகள் வாசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகில் அமர்ந்து கண்ணனைப் பார்த்தேன்.
நன்றி::http://www.iskconbangalore.org/panihati-chida-dahi-festival-2010
'உனக்கு எதற்கு இத்தனை பிரம்மாண்டம்? பசுக்கள் மேய்த்துக் கொண்டிருந்த கரும்பயலே உனக்கு எதற்குத் தங்கக் கோபுரங்கள்? இந்தப் பொன் வர்ணப் பாவாடையும் ஜொலிக்கின்ற புல்லாங்குழலும், மின்னுகின்ற மகுடங்களும் உன்னைக் களைப்படையச் செய்யவில்லையா? இப்படி மஞ்சள் தூண்களுக்குள் உன்னை வைத்துக் கொண்டு என்னிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ள நீ என் கண்ணன் தானா? இருக்கவே முடியாது. இங்கே உன்னை மஹா செல்வந்தனாக நினைத்துக் கொண்டு அதையும் இதையும் கொடு என்று வேண்டிச் செல்கிறார்களே, இவர்கள் அறிவார்களா நீ ஒவ்வொருவரிடத்திலும் இருப்பதை? நீ வேண்டி இறைஞ்சி நிற்பதெல்லாம் உன் மேலான காதலையும், ஒவ்வோர் உயிரிடத்தும் அன்பையும் கருணையும் அல்லவா? உன்னிடம் எதை வேண்டிக் கொள்வது? நீயே சிறை பிறந்த கள்ளன் அல்லவா? உன்னைத் தெய்வமாக்கி அபிஷேகம் செய்து, குளிப்பாட்டி, அலங்கரித்து மாலை சூட்டிப் பூஜை செய்து எங்கள் மனதிலிருக்கும் ஒரு மாயக் குழந்தையை மறக்கச் செய்ய முடியுமா?'
இராதாக்ருஷ்ணர் கோயிலின் கதவுகளில் மேலிருந்து கீழாகத் தசாவதாரச் சிலைகள். அவற்றின் இரு புறமும் நாரதர், அழகுப் பெண்கள், யானைகள், பறவைகள். யாரும் கவனிப்பதாக இல்லை.
அங்கிருந்து கிளம்பி ஒவ்வொரு தளமாக இறங்க இறங்க மனதிற்குள் கசப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. எங்கெங்கு காணினும் வணிகக் கடைகள். சிலைகளும், மாலைகளும், ப்ளாஸ்டிக் பூக்களும், போஸ்டர்களும், காலண்டர்களும், டைரிகளும், மின் அலங்காரங்களும். இல்லை இது என் கண்ணன் கோயில் இல்லை; ஒரு வணிக வளாகம் என்று சொல்லிக் கொண்டே வந்தேன்.
உணவும் விற்கிறார்கள். புளியோதரையும், சிறு மீல்ஸும், மசாலா இட்லி போலிருந்த மராட்டிய இட்லிகளையும் உண்டு விட்டுக் கீழே இறங்கினால் பருப்புச் சாதத்தை அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கேயும் இரண்டு குப்பிகள் தின்றேன்.
பச்சையாய்க் குளம் ஒன்று காற்றில் அசைந்தாடுகின்றது. வானில் நீர்ப் பொதிகள் உருண்டு கொண்டிருந்தன. எதிரே நகரின் அடுக்குமாடிக் கட்டிடங்களும், கண்ணாடி அலுவலகங்களும் தெரிகின்றன.
கீழே இறங்கி வந்து செருப்பு வாங்கிக் கொண்டு வெளியேறும் போது நான்கு மணி தரிசனத்திற்காகக் கூட்டம் காத்திருந்தது. வெளியேறும் போது தான் பார்த்தேன் எதிரே குருவாயூரப்பன் கோயில் ஒன்று சாத்தியிருந்தது. அங்கே தான் என் கண்ணன் நின்று கொண்டிருப்பான் என்று தோன்றியது. திரும்பிப் பார்த்தால், அலங்காரத் திருக்கோயிலின் கோபுர உச்சியில் நடுங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கொடி காற்றில் 'வாரல் என்பது போல் மறித்துக் கைகாட்டியது' என்று உணர்ந்தேன்.
Subscribe to:
Posts (Atom)