Wednesday, September 12, 2018

முழுப் பைத்தியமாவதற்கு முன்...2.

சென்றடங்கும் இச்சொல்வெளியில் நுழைந்து விடுவதற்குத்தான் எத்தனைப் பெரும்பாடு? கண்டதையும் படித்து காணாததைக் கற்பனை செய்து, சொல் பொருள் உணர்ந்து காலாதீதமாய் உள்ள இம்மொழியின் களத்திற்குள் சென்று விட எத்தனை தான் எழுத வேண்டியிருக்கின்றது.  ;(

தேடித்தேடி ஓடிக் கண்டடைய வேண்டிய பாதை மெல்ல மெல்ல அகன்று முழுத்தலையும் வெட்டவெளிப்பாழ் என ஆன பின்பு, பதுங்கிக் கொள்ளவோ, ஓய்வெடுத்து உறங்கவோ ஒற்றை முடிகூட இல்லாத வழுக்குப்பாறையிலிருந்து வழுக்கி வழுக்கி விழுந்து கொண்டேயிருக்கின்றது ஏதோ வெறி இரவில் எவளிடமிருந்தோ தொற்றிக் கொண்டு வந்த பேன் தலைமுறையின் கடைசிக்குட்டி ஒன்று.

மீன்கள் நீருக்குள் அழுவதை யார் அறிவார் என்கிறார்கள். அவை நீருக்குள் சிறுநீர் கழிப்பதைக் கூடத்தான் எவரும் அறிவதில்லை. வாய் திறந்து மூச்சு விட்டு, வாய் திறந்து உண்டு இட்டு, வாய் திறந்து பேசிக் கொண்டு, வாயாலேயே முத்தங்கள் கொடுத்து விட்டு, வாயாலேலே தூண்டிலைக் கவ்விச் செத்துப் போகின்றன.

கதவுகள் அடைந்து விட்ட பின்பு நள்ளிரவில், பகலில் புழங்கிய சாலைகள் அனைத்தும் தெருநாய்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகின்றன. அவை ஊளையிடுகின்றன; அவை கடித்துக் குதறுகின்றன; அவை சண்டையிடுகின்றன; வெறி கொண்டெழுந்து கூட்டமாய்ப் பிற நாய்களைத் தாக்குகின்றன; எச்சில் ஒழுகும் கூரிய பற்களை நீட்டிக் கொண்டு மென் சதையோ, காய்ந்த எலும்போ கிடைக்கும் எந்த உணவையும் துளைத்துக் குருதி சொட்ட உண்கின்றன. குளிர் இறங்கும் இரவின் காற்றுக்குள் அவை அதிகாரத்தோடு அரசாள்கின்றன. நட்சத்திரங்கள் மட்டும் மினுக்கும் பொழுதில் குரைத்துக் கொண்டேயிருக்கின்றன. புலரி விடிந்த பின், வாலைப் பின்னங்கால்களுக்கு இடையில் சுருட்டிக் கொண்டு,  முன்னங்கால்களை முன் நீட்டி அதன் மேல் வியர்வை ஈரத்துடன் மூக்கைப் பதித்து முகம் நினைவுகளில் ஊறுவது போல் கண்களை மூடிக் கிடக்கின்றன.

பூமரக்குன்று ஒன்று கனவுகளில் அவ்வப்போது வருவதுண்டு. உடல் முழுதும் விரிந்த மலர்கள். வர்ணக்குவியல்கள். வாசனைப்பொழிவு. வேர் பிடித்து, நீர் உறிஞ்சி, கிளை விரித்து, வானை அள்ளத்துடிக்கும் அத்தனை செடிகளும் நுனியில் ஒற்றை மலரைக் கொண்டிருந்தன. தேன் மலையைச் சுமந்து பாரம் தாளாமல் சரிந்த மென் மலர்கள் மண் நோக்கி, கவிழ்ந்து எதிர் நோக்கிக் காத்திருந்தன. எழிலையெல்லாம் சொற்களாக்கி எழுதுவதென்றால், ஒரே ஒரு மலருக்கு இம்மொழியின் அத்தனை சொற்களும் போதுமா? கனவுகள் மொழிபெயர்க்கப்படுகையில் இழக்கும் அழகு தான் எத்தனை? கனவுகளைக் கைமாற்றி விடுவது மட்டுமே காண்பவன் செய்ய வேண்டிய ஒன்று. வெவ்வேறு கண்கள் வழியாக அதே பூவனக்குன்று எழுந்து வந்தால், நாம் காணும் ஒரே கனவென அது விண்ணப்பிக்கப்படுமல்லவா? எங்கோ அமர்ந்து நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் அவனுக்கு அது கேட்குமல்லவா? 

முழுப் பைத்தியமாவதற்கு முன்...1.

ன்றெழுந்தது. இன்றுமிருப்பது. என்றும் சொற்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த வெண்ணிலவில் ஒரு பாதயாத்திரை போய் வந்தால் என்ன? காவியங்களில் காலடி வைத்து நடக்கும் பேற்றை விரும்பார் யார்? ஆம், அவளிடம் கருங்குழிகளும், மென் சேற்றுப்புதைவுகளும் இருக்கும். தடம் பதித்து மிதந்து, காலூன்றி, தடுமாறி, விழுந்து, உருண்டு, புரண்டு, கையூன்றி, எழுந்து, நின்று மீண்டும் அந்த ஒளியுடலில் பரவுதல் என்பது தான் இவ்வுடலின் நோக்கமாய் இருக்கலாம்.

தேர்ப்பூக்களும் சரம் கலைந்த மாலைகளாய் தேவி தோளிலேறி கல் மார்புகள் மேல் படிந்து பூத்து மணந்த வெண் மலர்களும் செம்பூக்களும் கோர்த்த கனமான அவை, இதோ தெரு மூலைகளில் எறியப்படும். அல்லது, நுரை சுழித்தோடும் ஆற்றின் நீர்ப்பரப்பின் மேல் தூக்கி வீசப்படும். எவரெவர் தோட்டத்திலோ முளைத்துப் பூத்த ஒவ்வொரு மலரும் இவ்வூரின் நதிச்சுழலில் மிதந்து எவ்வூரின் மண்ணிற்கோ சென்று சேர்ந்து உரமாகும். அதன் விதி வாழ்க.

சாலைகள் மறந்த நதிகள் பொங்கிப் பெருகி ஓடும் கடுமழைக்காலத்தில், கனமான தார் ஆடைகளுக்கு அடியில் இன்னும் உயிர்ப்பைத் தக்க வைத்துக் காத்திருக்கும் செம்மண் பூமி, விதைகளை வீசும் அந்த உறுதியான விரல்களுக்காக இனி காத்திருக்கும். ஊழிப் பிரளயம் நடந்து முடிந்து பூமிப்பந்து புரட்டிப் போடப்பட்ட பின்பு, மேற்பரப்புக்குக் கீழே கொதித்துக் கொண்டிருக்கும் தீக்குழம்பு பிரவாகித்து, எங்கும் கொப்பளித்து அடங்கிய பின், குளிர் மழை யுகயுகங்களாய்ப் பெய்து மண்ணின் அசுரம் தணிந்த பின், முதற்புல் முளைப்பது எப்புள்ளியில்? இன்று அங்கு எவர் நடந்து கொண்டிருப்பர்?

சன்னல் கம்பிகள் மேல் எப்போதும் வந்தமரும் அந்தச் சின்னக் குருவியை இன்னும் காணோம். கையளவு அரிசிக் குவியலை எடுத்து வைத்துக் காத்திருக்கிறேன். அதன்நெல்மணிக் கண்கள், சாம்பல் வண்ணக் குறுஞ்சிறகுகள், வேலிக்காத்தான் முள்ளென அலகு.. இன்று அதற்கு வேறு எவரேனும் உணவிட்டு விட்டார்களா, அல்லது வேறு எவருக்கேனும் அது உணவாகி விட்டதா என்று தெரியவில்லை. இரவுகளில் மட்டும் நடைபயிலும் அந்த உருண்ட பூனையை ஐயப்படுகிறேன். வெருண்டு உற்று நோக்கும் அதன் சொல்லற்ற கரும் கண்களின் கீழே விடிகாலைக் கதிர்க் கோடு போல் நீளும் கூர்மீசைமேல் குருதித்துளிகளைக் காணலாம் இன்று. குருவிகள் குருதி கொண்டிருக்குமா என்ன?

பாறைகள் கிடந்தன. இணைந்து மலைகளாயின. மலைகள் முளைத்துக் காடாகின. காடுகள் அழிந்து ஊராகின. ஊர்கள் இணைந்து நகராகின. நகர்கள் இணைந்து பெருநகரங்களாகின. நாடுகளாகின. நாடுகள் எல்லை கொண்டன. கோடுகளுக்குள் திசைகள் அறியாது திரிந்து கொண்டிருந்த விலங்குகளைப் பிடித்துக் கொண்டு வந்து கூண்டுக்கம்பிகளுக்கு உள்ளே அடைத்து வைத்து , ஆயிரம் அடையாளங்களோடு அலைகின்ற மனிதர்களுக்குக் காட்டின. விட்டு வந்த பாறைகளையும், நீர் கழித்து தம் எல்லை எனச்சுட்டிய பெருங்காடுகளையும் மறக்காத மிருகங்கள், மிருகக்காட்சி சாலைகளிலும் தமக்கென எல்லைகளைக் கட்டி வைத்து தூங்கிக் கொண்டே இருக்கின்றன. 

Tuesday, September 11, 2018

பூனைகள் நடக்கின்ற இரவுகளில்...

முன் மதியம் ஒன்றில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தேன். யாரோ கைப்பிடித்து வைத்த செம்மண் கொத்துகள் இறுகிக் கெட்டிப்பட்டு மலைகளாகச் சூழ்ந்த வெளுத்த  நிலப்பரப்பில் யாருமே இல்லை. வானுக்கும் மேலே பிசிறு மேகமும் இன்றி கூசச்செய்யும் ஒளி நீலம். முகடுகளில் கழுகுகளும் வல்லூறுகளும் அனல் நதியில் உருகி வழிந்து விழும் பிணங்களை, வியர்வை படர்ந்த அவர்களின் மேல் கோட்டுகளில், கலைந்த தாடியில்,புழுதி படிந்த தொப்பிகளில், மண் ஊறிய தோல் காலணிகளில் தளர்ந்து விழுகின்ற ஜீவனை, அங்கே உச்சிகளில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கும். இன்று அவைகளும் இல்லை. காற்றில் அடர்ந்து அசைந்து கொண்டிருக்கின்ற காய்ந்த புதர்களின் அடியே வளை தோண்டி பதுக்கி வைத்திருக்கும் கொட்டைகள், பூக்கள், களி மண் உருண்டைகள் உடைந்து, வெடித்து சிலந்திப் பூச்சிகள் தின்னக் கொடுத்து எங்கோ தப்பித்துப் போய் விட்டன மலை எலிகள். சபிக்கப்பட்ட இச்சாலையில் தலைக்கு மேலே பல லட்சம் கொடும் வாட்களுடன் தணல் அலைகளைப் பரப்பி வியாபித்துள்ளான் பாலை அரசன். கானல் பிழைகள் மினுங்கும் மேடு பள்ளங்களில் வெக்கை புழுங்கிக் கொண்டிருந்தது. எங்கோ தொடங்கி எங்கோ செல்லும் இக்கறுப்பாற்றில் தன்னந்தனியாக நடந்து கொண்டிருந்தேன்.

இவ்வழியே முன்பு பல காலங்களாய், பல தலைமுறைகளாய்ப் பலர் நடந்து சென்றிருக்கிறார்கள். பிறந்து சில நாட்களே ஆன பிஞ்சுகளை முதுகில் கட்டிக் கொண்ட அன்னையர், முதுமையடைந்து, உடலோடு குடலும் எலும்புகளும் ஒட்டிப் போன பெரிய கண்கள் தளர்ந்து போய், ஒவ்வொரு காலாய் எடுத்து வைப்பதற்குத் தடுமாறித் தடுமாறி நடை குலைந்து நடக்கும் வயதான குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்து நடக்கும் கிழவர்கள், அவர்களுடைய தோல் பாக்கெட்டுகளில் மனக் கட்டுப்பாட்டுடன் சேகரித்து வைத்த வேர்க்கடலைகள், வழியில் சந்திக்க நேரும் பாம்புகளை எதிர்க்கத் துப்பாக்கிகள், பழைய காலணிகள், சுருக்கங்கள் நிறைந்த கிழவிகள். மின்னும் கூர்நுனிகள் கொண்ட வேல்களை இறுக்கமாகப் பிடித்துப் பழுப்புக் குதிரைகள் மேல் அமர்ந்து படை படையாய் வரிசைகள்.

இப்பாதையைப் பற்றிய நாடோடிப் பாடல் ஒன்று உள்ளது.

இன்னும் நெடுங்காலத்துக்கு முன்பு ஓர் அக்காவும் ஒரு தம்பியும் இப்பாதை வழியே நடந்திருக்கிறார்கள். அவள் பெயர் மினா என்றும் அவன் பெயர் மிசி என்றும் நாடோடிப் பாடல் ஒன்று சொல்கின்றது. உயிர்களே அற்றுப் போன வெளியானாலும் காற்று இருக்கும் வரை எவனோ ஒருவன் பாடி வைத்த பாடல்கள் இங்கே உலவிக் கொண்டேயிருக்கின்றன. மினாவும் மிசியும் ஒரே ஒரு குடைக்குள்ளே ஒண்டிக் கொண்டே வெயில் தளும்பிய வேளையொன்றில் நடந்திருக்கின்றார்கள்.  மினா பனிரெண்டு வயதிலும் மிசி எட்டு வயதிலும் ஊரில் மவுண்ட் என்ற துறவி கொடுத்த வெண்ணிறக் குடை ஒன்றில் அடைந்து வந்தார்கள். வறண்ட பாறைகள் மட்டுமே விழுந்து கிடந்த மண்பாதையில் அவர்கள் ஒன்றும் பேசாமல் நடந்தார்கள். மிசிக்கு கேட்பதற்குக் கேள்விகள் நிறைந்திருந்தன. ஏன் இங்கே யாருமே இல்லை? ஏன் வானம் இவ்வளவு அமைதியாய் இருக்கின்றது? ஏன் காற்றில் இத்தனை புழுக்கம்? ஏன் நம் எதிரே யாருமே வரவில்லை? கேள்விகள் நிரம்பித் தளும்பும் சிறு மூளை கொண்டவனாய் நடந்தான். மினாவுக்குச் சொல்வதற்கு பதில்கள் ஒன்றும் இல்லை. அவளுடைய மனம் அங்கே நீலவெளியில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அங்கே எண்ணங்களே இல்லை. மதியத்தில் வீசிய காற்றில் இதழ்கள் உதிர்ந்து போய் காலியான ஒரு மலரைப் போல அவள் நடந்தாள்.

அவளுடைய சிறு விரல்களில் எப்போதோ பறித்த மஞ்சள் பூக்கள் கொத்தாக சரிந்திருந்தன.

வெகுதூரம் அவர்கள் நடந்து வந்த பின்பு ஒரு இறுகித் தாளிடப்பட்ட பழைய வீடு ஒன்றை முள்வேலி சூழப் பார்த்தார்கள். வேலி மேலெல்லாம் புழுதி அப்பியிருந்தது. வீட்டின் வாசலில் தூக்கில் ஏற்றப்பட்ட எலிக்குஞ்சைப் போன்ற ஒரு விளக்கு தொங்கியது. அதன் திரி கருகியிருந்தது. கூரையின் மேல் புகைக்கூண்டிலிருந்து கரும்புகை ஒரு துணி உதறலைப் போல வெளிவந்தது. உள்ளே யாரோ இருக்கிறார்கள். மினி வேலியின் கதவை மெல்லத் தள்ள, அவர்கள் நுழைந்தார்கள். வேலிக்கதவு சாத்திக் கொண்டது. மண் படர்ந்த மரப் படிக்கட்டுகளில் தாவி மேலே சென்று கதவைத் தட்டினார்கள்.