Saturday, April 05, 2008

ஸ்ரீரங்கம்.ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் மங்களம் செய்யடி!

ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்நதம் சொல்லடி!

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் மங்களம் செய்யடி!

ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்நதம் சொல்லடி!

இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி

இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி
தென்றல் போல் ஆடடி!

மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி! (ஸ்ரீரங்க)

கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்!
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்!

செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்!

அந்நாளில் சோழ மன்னர்கள்
ஆக்கி வைத்தனர் ஆலயம்!

அம்மாடி என்ன சொல்லுவேன்
கோயில் கோபுரம் ஆயிரம்!

தேனாக நெஞ்சை அள்ளுமே
தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்! (ஸ்ரீரங்க)

கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறு வீடு தென்னகம் ஆகும்!

கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கள நீராட முன்வினை தீர்க்கும்!

நீர்வண்ணம் எங்கும் மேவிட
நஞ்சை புஞ்சைகள் பாரடி!

ஊர்வண்ணம் என்ன கூறுவேன்
தெய்வ லோகமே தானடி!

வேறெங்கு சென்ற போதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி! (ஸ்ரீரங்க)ப்போதும் யாராவது புதிதாக நண்பர்கள் அறிமுகமாகும் போது, பெயர் கேட்ட பிறகு, நீங்கள் எந்த ஊர் என்று தான் கேட்பேன். எல்லோர்க்கும் சொந்த ஊர் பேரைச் சொல்லுவதற்குள், ஒரு மேப்பே போட்டு விடுவார்கள். கல்லூரியில் ஒரு நண்பர் சொல்லும் போது, முதலில் சேலம் என்றார். சேலம் தெரியும் என்றேன். அப்போது நாமக்கல் என்றார். 'தெரியும்'. 'அப்படியா, பரமத்தி வேலூர்..?'. 'தெரியும்..!' . 'அப்ப கிட்டக்க, கபிலர் மலை தெரியுமா?' . 'தெரியாது..!' 'அப்ப அது தான் என் ஊர்!'

இப்படி பொதுவாக தெரியும் என்று சொல்லுவதற்கு காரணம் பல ஊர் சுற்றி இருந்த முன் அனுபவங்கள் இருந்தமையால்!

ஒன்பதாம் வகுப்பு நுழைவதற்கு முன் வருடா வருடம் ஏதேனும் உறவினர் வீட்டுக்கு சென்று கொளுத்தும் வெயிலில் பொழுது ஓட்டுவது என்று ஆனது.

அதிலும் முக்கியமாக நான் திருச்சி சென்ற பொழுதுகளைப் பற்றி பேசலாம், இப்போது!

திருச்சியில் அத்தை வீடு இருக்கின்றது. வருடா வருடம் அங்கு வெயில் காலங்களில் சென்று வருவது நடந்து வந்திருக்கின்றது.

சத்திரம் பேருந்து நிலையம் அல்லது அண்ணா சிலை நிறுத்தத்தில் இறங்கி, குறுகலும், நெடுகலுமான சந்து, பொந்துகளில் நுழைந்து வெளிப்பட்டு தான் அத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும். ஒரு சிறு ஊரில் இருந்து மாநகரிற்கு செல்லும் பையனின் மலைப்பும், திகைப்பும், வியப்பும் எனக்கும் கிடைத்தன.

கட்டம் கட்டமாக செதுக்கப்பட்ட தரைகளில் விரவி இருந்த தெருக்கள், எங்கெங்கு காணினும் படுத்தும், உட்கார்ந்தும், நடந்தும், சுவரை உரசிக் கொண்டும், போஸ்டர்களைத் தின்று கொண்டும், சாணி இட்டும் இருக்கும் கோமாதாக்கள், அகன்ற திரையின் குளிர்த் திரையரங்குகள், தோலே கொப்பளித்து, தார்ச் சாலைகளின் கருப்புக் குழம்புகள் தெறிக்கச் செய்யும் கடும் வெயிலின் கோர தாண்டவத்தால் கொதிக்கும் கந்தக பூமியின் வெயில்....

காலையில் ஒருமுறை மலைக்கோட்டை சென்று விடுவேன்.

வீட்டிலிருந்து கிளம்பி சீதாலக்ஷ்மி - இராமசாமி வளைவில் நுழைந்து தெப்பக்குளம் வந்து, இடது புறம் கட் செய்து, சாரதாஸை கடந்தால் மலைக்கோட்டையின் பிரதான வாசல் வரும். காலணிகளை அங்கேயே கழட்டி விட்டு வரலாம். இல்லாவிடில், நடுவில் ஒரு பிள்ளையார் கோயிலைக் கடக்கும் போது மாட்டிக் கொள்வோம். மேலே சென்றால், கார் செல்லும் அளவிற்கு ஒரு ரோடு போகின்றது. அதற்கு வேறு வழியில் செல்ல வேண்டும்.

படிக்கட்டுகளை எண்ணிக் கொண்டே கடக்க, சித்தர் கோயில் வருகின்றது. அதன் எதிரில் சிறிய ஜன்னல் வைத்திருக்கின்றது. அதில் எட்டிப் பார்க்க தங்கக் கோபுரமும், தெப்பக்குளத்தின் அந்தப்பக்கம் உள்ள தேவாலயத்தின் கோபுரமும் தெரியும். இன்னும் மேலே ஏறிப் போய், இடது கட் அடித்து, மேலே சென்று வலப்புறம் திரும்பும் முன், அஷ்டலக்ஷ்மி சிலைகள் உள்ளன.

பின் கொஞ்சம் செங்குத்தான படிக்கட்டுகள் வழிச் செல்ல இரண்டு வழிகள் வருகின்றன. வலது புறம் சென்றால் உச்சிப் பிள்ளையார் இருக்கிறார். இடது புறம் சென்றால் பெரிய தாயுமானவர் கோயில் வரும். முதலில் பிள்ளையாரைப் பார்ப்போம். அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு வலது புறம் திரும்புகிறோம்.

இது வரை மலையைக் குடைந்து அமைத்த படிக்கட்டுகள் வழி சென்றதால், அடைத்து வைத்தாற் போல் இருந்திருக்கும். இப்போது வெட்டவெளி. காற்று சும்மா பிய்த்துக் கொண்டு போகின்றது. அதனால் ஆசுவாசமாக , மெதுவாக படிக்கட்டுகள் ஏறுகிறோம். வாட்டர் டேங்க் இருக்கிறது. குடித்துக் கொள்ளலாம்.அட, கூல்ட்ரிங்ஸ் கடை கூட இருக்கின்றது.ஹைஜீனிக் மக்கள் இங்கே கூல் வாட்டர் அடித்துக் கொள்ளலாம்.

உச்சிக் கோயிலுக்குச் செல்ல, சரியான படிக்கட்டுகள் என்ற வரையறைக்குள் வராத படிக்கட்டுகள் உள்ளன. அவை பாறைகளைச் செதுக்கி வடிவமைக்கப்பட்டு உள்ளன. இருபுறமும் அமைந்த கம்பிகளைப் பிடித்து மேலே ஏறுகிறோம். சிறுவர்கள் விடுவிடுவென ஓடுகிறார்கள். மேலே ஏறும் போதே வலது புறம் பார்க்க அகண்ட காவிரியில் நீர் ஓடிக் கொண்டிருக்கின்றது.

நாம் செல்கின்ற காலத்தைப் பொறுத்து, தமிழகத்தின் நல்ல நேரம், கெட்ட நேரத்தின் அளவுகளைப் பொறுத்து, ஆற்றில் பெருவெள்ளம் ஓடிக் கொண்டிருக்கலாம். அல்லது கேரள வெண் பட்டாடையில் ஓரத்தில் மட்டும் மஞ்சள் ஜரிகை ஓடுவது போல், அகண்ட நதியின் ஓரத்தில் மட்டும் சாக்கடை போல் ஓடிக் கொண்டிருக்கலாம். அட, தண்ணீரே இல்லாமல் வெண்மணலாய் மட்டுமே கூட இருக்கலாம்.

நதியின் மறுகரையில் இராஜகோபுரம் கம்பீரமாய் நின்றிருக்க, பின் பல கோபுரங்கள் பளிச்சென்று தெரிய, ரங்கநாதர் ஆலயம் தெரிகின்றது. மாலை அங்கு போக வேண்டும் என்ற நினைவு வருகின்றது. இடது புறம் திரும்பிப் பார்க்க All India Radio,Tiruchirappalli-யின் டவர் தெரிகின்றது. (இதெல்லாம் நான் போயிருந்த போது. இப்போது 1008 செல்டவர்கள் வந்திருக்கலாம்.)

பிள்ளையார் இருக்கிறார். வணங்கி விட்டு, பிரகாரம் சுற்றுகிறோம். காற்று பலமாகத் தான் வீசுகிறது. இடதுபுறம் ரேடியோ டவரைத் தாண்டி பார்த்தால் மசூதியும், பச்சை வயற்காடுகள் பனிப் புகையின் ஊடாக தெரிகின்றது. பிள்ளையாருக்கு பின்புறமாக மேற்குத் திசையில் பார்க்க, தெப்பக்குளம், தேவாலயம், சத்திரம் பேருந்து நிலையம், தங்க கோபுரம் தொலைவின் மலைகள் தெரிகின்றன. வலது புறம் பார்க்க காவிரியும், ரங்கமும், ஆற்றைக் கடந்து வரும் பாலமும் தெரிகின்றன.

மீண்டும் வந்த வழியே இறங்கும் போது தான் கவனிக்கிறோம். மலையின் முகடுகளிலும், விளிம்புகளிலும் கருப்பாடுகள், ஆட்டுக் குட்டிகள் நின்று கொண்டிருப்பதை! எப்படி இந்த ஆடுகள் இவ்வளவு உயரத்திற்கு ஏறி இருக்க முடியும்? பயமாக இருக்காதோ..?

தாயுமானவர் கோயிலுக்குச் செல்லும் வழியில் நுழைகிறோம். வழி பிரம்மாண்டமாய் தான் இருக்கின்றது. இடது புறம் பிள்ளையார். வலதுபுறம் சுப்ரமணியர் குடும்பத்துடன்! வழியில் நுழைந்து , இடது பக்கம் திரும்பி மேலேறி, செல்ல, தாயுமானவர் மேற்குத் திசை பார்த்து அமர்ந்து லிங்க ரூபத்தில் இருக்கிறார். தொழுது விட்டு பிரகாரம் சுற்றி வர, தங்க கோபுரம் கம்பிக்கூண்டுக்குள், வெயிலில் மின்ன பத்திரமாய் சிரிக்கிறது.

பெருமானுக்கு தாயுமானவர் என்ற பேர் வரக் காரணமான நிகழ்வு சித்திரங்களாகவும், பெருமானின் பல அவதாரங்கள் ஓவியங்களாகவும் தீட்டப் பட்டிருக்கின்றன.

பின் அம்மையையும் தரிசித்து விட்டு வந்த வழியே கீழிறங்க, அமைதியாய் இருந்த நமது சுற்றுப்புறம் பஜாரின் இரைச்சலுக்கு மாறுகிறது.

*சிங்காரத் தோப்பில் இருந்த (இருக்கும்?) ஒரு விடியோ ஷாப்பில் தான் முதன்முறையாக வீடியோ கேம்ஸ் பார்த்தேன். ஐந்து ரூபாய் கொடுத்தால் மூன்று நிமிடங்கள் விளையாடலாம்.

*மின்சாரம் செத்துப் போன ஒரு மொட்டை வெயிலின் நாளில் வீட்டில் அனலின் அடியில் இருக்க முடியாததால், மாவட்ட தலைமை நூலகத்திற்குச் சென்றோம். அங்கு தான் முதன் முறையாக , ஓவியங்கள் வரைதல் தொடர்பாக புத்தகங்களை அள்ளிப் போட்டு (ஓவியர் ஆழி அவர்களின் கோர்ஸ் புத்தகங்கள்), குறிப்புகள் எடுத்து, கொஞ்சம் கொஞ்சம் ஓவியக் கலையின் மீதும் ஆர்வம் வர ஆரம்பித்தது. அதுவரை எழுத்தை மட்டுமே ஓவியம் போல் கிறுக்கிக் கொண்டிருந்தவன், உண்மையிலேயே ஓவியம் கிறுக்க ஆரம்பித்தேன்.

*ராயல் தியேட்டரில் தான் முதன்முறையாக ஏ.ஸி. தியேட்டரில் படம் பார்த்தேன். படம் 'கேப்டன் பிரபாகரன்'. அகன்ற திரையில் அருவிகள் பாய்ந்து வர, தியேட்டரின் ஏ.ஸி.குளுகுளுப்பில் 'அட, நம்ம ஊரு கதை' என்ற நினைப்பும் மறக்க இயலாத வகையில் செய்து விட்டது.

*வயலூர், சமயபுரம் என்றெல்லாம் சுற்றி சுற்றி பல கோயில்கள் வலம் வந்தேன்.

*தெப்பக்குளம் அருகில் ஜம்புநாதர் கோயில், குளத்தின் கரைகளில் இருக்கும் சிறு சிறு கோயில்கள் என்று பயணித்தேன்.

*பஜாரில் இருக்கும் அகஸ்தியர் புக் ஸ்டோர் தான் இப்போது கொஞ்சமாவது இந்தி தெரிந்திருக்கும் தமிழ்மக்களுக்கு பரீக்க்ஷை சமயங்களில் பெரிதும் உதவி இருக்கிறது, எனக்கும்!

* சிவரஞ்சனி தியேட்டரில் 'மெளனம் பேசியதே' படத்திற்காக நிற்கையில் அதன் காம்பவுண்ட் சுவர் முழுக்க தலைவரின் 150 படங்களையும் பேர் எழுதி வைத்து, 'பாபா'விற்கு வாழ்த்து சொல்லி இருந்தார்கள். மதுரையிலும், திருச்சியிலும் தான் தலைவரின் வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதாக வந்த செய்திகளின் உண்மையை அன்று அறிந்தேன்.

*ஒரு நண்பரை சந்திக்க போனதால், மாலை 4.30 மணிக்கு பிடிக்க வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸை கண் முன்னே தவற விட வேண்டியதாகிப் போனது.கிண்டி, சைதை, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என்று ஒவ்வொரு நிலையமாக பார்த்துக் கொண்டே வர, சரியாக எழும்பூருக்கு முன்னே சேத்துப்பட்டில் ரயில் என்னைக் கடந்து செல்கின்றது. பின் 6.30 மணிக்கு ராக்போர்ட் பிடித்து, சரியாக 11:15க்கு திருச்சியை அடைந்து, மிகச் சரியாக அர்த்தராத்திரி 12 மணிக்கு அத்தை வீட்டை பேய் போல் தட்டினேன். பயந்து விட்டார்கள் முதலில். பின் கதையைக் கூற, உணவு கிடைத்தது. பின் காலை திருவரங்கம் சென்று போன் நம்பர் கண்டுபிடித்து, நண்பர் வீட்டைக் கண்டுபிடித்து... அந்த ஆண்டு வைகுண்ட ஏகாதஸி வைபவம் இப்படியொரு சிறப்பான முறையில் நிறைவேறியது.*திருவரங்கத்தின் மீதிருக்கும் பிரேமையும், ரங்கநாதனின் மேல் இருக்கும் காதலும் பற்றி தனியாகத் தான் சொல்ல வேண்டும். பேருந்து நிலையத்தில், 1-ம் நம்பர் பேருந்தில் ஏற, ஆற்றைக் கடந்து திருவரங்கத்தில் சென்று சேர்ப்பிப்பார்கள். மற்றுமொரு முறை சென்று பின் திருவரங்கம் பற்றி தனியாக எழுத முடிவெடுத்துள்ளதால், இப்போது நஹி.

*+2 படிக்கையில் டூருக்காகச் சென்னை சென்று, மகாபலிபுரம், வேளாங்கன்னி, நாகை என்று சென்று திருச்சி வழியாகச் செல்ல, பெருமழை பிடித்து ரங்கம் செல்ல முடியாமல் வருத்ததோடு தான் ஊர் திரும்பினோம்.

*சென்னையில் இருக்கையில் கோயமுத்தூர் எக்ஸ்பிரஸில் செல்கையில் திருச்சி வழியாக கோவை செல்லும். அப்போது 'இவ்வளவு தூரம் வந்து பிளையாரையும் , ரங்கனையும் பார்க்காமல் செல்கிறோமே' என்றெல்லாம் தோன்றும். இப்போது அந்த வழியாகச் செல்ல வேண்டியதே இல்லை. இனிமேல் ஏதாவது சுற்றுலா திட்டம் போட்டால் தான் உண்டு.

இத்தனை கோயில்கள் சுற்றி இருந்தாலும், ஒவ்வொரு முறையும் ஊரிலிருந்து செல்லும் போதும், திரும்பும் போதும் கடந்து செல்ல வேண்டி இருந்தாலும், ஒவ்வொரு முறை செல்லும் போதும், 'இம்முறை கண்டிப்பாக செல்ல வேண்டும்' என்று முடிவெடுத்தே சென்றாலும் தட்டிப் போய்க் கொண்டே இருக்கின்றது, திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயம் மட்டும்!

என்ன காரணம் என்றே தெரியவில்லை.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Friday, April 04, 2008

இப்ப என்ன செய்ய?ன்னட வெறியர்களின் அத்து மீறிய ஆட்டம் நம்மை மீண்டும் சிந்திக்கச் செய்கின்றது.

*வீரப்பன் என்று ஒருவன் இருந்த வரை, ஒகேனக்கல் பக்கமும், எல்லைப் புறமும் தலையே காட்டாத இவர்கள் இப்போது எல்லை மீறி வந்து ஆட்டம் போடுவதற்கு அனுமதிக்கலாமா? தாவூத் பம்பாயில் இருந்த வரை, அதற்காக மாற்று எதிர்ப்பாக சோட்டா ராஜனை இந்துத்துவ தாதாவாக வளர்த்து விட்ட அரசாங்கம், இன்று வீரப்பனைப் போல் பயம் தரக் கூடிய ஒருவனைக் கொண்டு வந்தால் என்ன?

*இராஜ்குமார் வெறும் வயதாகி இறந்து போனதற்கே இல்லாத ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்து, அநியாயமாக இரண்டு காவல் அதிகாரிகளைக் கொன்ற இந்தக் காட்டுக் கும்பலின் மீது இன்னமும் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா?

* மும்பையில் வட இந்தியர்களைத் தாக்கிய ராஜ் தாக்கரே போன்ற ஆசாமிகளை அப்போதே வாலை ஒட்ட நறுக்கி வைத்து, ஒரு காட்டு காட்டி இருந்தால், அவர்களுக்கு எல்லாம் அப்பனான இந்த வாட்டாள் நாகராஜ் போன்றவர்களுக்கு எல்லாம் அடங்கி இருக்குமே?

* தனி அரசாங்கம் நடக்கும் போதே தேர்தலை வைத்து வழவழ கொழ கொழக்கும் அரசாங்கம், கூட்டணி யுகத்தில் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்குமா என்ன? எவனுக்கு என்ன கொடுத்தால், எவ்வளவு சீட்டு கிடைக்கும் என்ற கணக்கு போட்டுக் கொண்டு குப்புறப் படுத்திருந்தால், கோவணமும் மிஞ்சாது என்பது புரியுமா?

*காவிரிப் பிரச்னை ஆரம்பித்த போதே தெளிவான முடிவு எடுத்திருந்தால், இப்போது 'ஓசூரும் எங்களுக்கே' என்று கொஞ்ச நாளுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தி இருப்பார்களா? 'ஒகேனக்கலும் எங்களுக்கே' என்று ஆட்டம் போடுவார்களா?*வந்தவரை எல்லாம் வாழ வைக்கின்ற தமிழகத்தின் உயர்பண்பு, அந்தக் காட்டான்களுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணமாய் இருக்க முடியும்? பத்திரிக்கைகள், கேபிள் , பேருந்துகள் நிறுத்தம் அடிதடி என்று நிற்க வரப் போகின்ற தேர்தல் மட்டும் தான் காரணமா? அடிமனதில் ஊறிப் போயிருக்கின்ற தமிழ்/தமிழன் எதிர்ப்பு தானே?

*இனியும் நாமும் காலாகாலத்திற்கும் இப்படியே உண்ணாவிரதம் என்று டயட்டில் இருந்து விட்டு, ஆறு மணிக்கு மேல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போக வேண்டியது தானா? எட்டியூரப்பா எல்லை தாண்டி வரும் போதே எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டாமா? முல்லைப் பெரியாறு அணையைச் ஆராய அதிகாரிகள் வரும் போதே பிரச்னை ஆனதே? இவர் எப்படி எல்லை தாண்டி வரலாம் என்று தடுத்திருக்கக் கூடாதா?

*உஷார்...! தென்னிந்தியாவில் மதவாதம் அவ்வளவு இறுக்கமாகப் பிடிக்கவில்லை என்பதால், இனவாத உணர்வைத் தூண்டி விட்டு அதில் தேர்தல் குளிர்காய மதவாதச் சக்திகள் கணக்கிடுகின்றன. உஷார்.

*நான்கு வருடங்கள் ஆளுநர் வேலையில் வெட்டி முறித்தாயிற்று. மீண்டும் மாநில அரசியலில் இறங்க வேண்டும். மாநிலத்தின் குழப்ப நிலையைப் பயன்படுத்தி மீண்டும் முதல்வராக அமர வேண்டும். என்ன செய்வது. கிடைத்தான்டா இளிச்சவாய்த் தமிழன்! போட்டு மிதி! எட்டியூரப்பா வேறு முந்திக் கொண்டார். விடக் கூடாது. போடுடா பேட்டியை..! 'தமிழக முதல்வர் தான் தூண்டி விடுகிறார்'. அப்பாடா! நல்ல ரீ என்ட்ரி. 'ஐ ஏம் பேக்' - கிருஷ்ணா.

*இது தான் சரியான டைம். போன தடவை நெய்வேலிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப் போனப்பவே, வராம தனியா உண்ணாவிரதம் இருக்கற மாதிரி இருந்திட்டு 'சிங்கம் சிங்கிளாத் தான் இருக்கும்' அப்படின்னு அன்னிக்கே செஞ்சு காட்டினான், இந்தாளு. நெய்வேலிக்குப் போனதுக்கு என்ன கோரிக்கைனு இன்னிக்கு எவனுக்கும் தெரியாது; அந்த கோரிக்கைக்கு என்ன பதில் கிடைச்சுது, அது என்ன கதி ஆச்சுன்னு யாரும் கேக்க மாட்டாங்க. இந்த தடவ நாமளே உண்ணாவிரதம் இருப்போம். இதுக்கு அந்தாளு வர்றானானு பாப்போம்.

வந்தான்.. மாட்டுனான்டா. இனிமேல அங்க போகாத மாதிரி பேச வெச்சு மாட்டி வுட்டிறணும். வரலைன்னா.. செமத்தியா இங்க மாட்டுனான். போட்டு தாளிச்சு எடுத்திடணும். முப்பது வருஷமா இங்க தான் இருக்கான். ரேஷன் கார்டு எல்லாம் இங்க தான் இருக்கு. வோட்டும் இங்க தான் போடறான். ஷூ.. கபர்தார். அதெல்லாம் பேசக் கூடாது. நீ ஏன் பேசற.. தப்பு. தப்பு. அவன் கன்னடன் தான். அட, அவன் ஜாதி மராட்டியமா இருந்தாலும், பெங்களூர்ல கண்டக்டரா இருந்திருக்கான். அவன் கன்னடன் தான்.

எத்தனை சம்பாதிச்சிருக்கான். நாம ஓட்டு வாங்கறதுக்கு எவ்வளவு கஷ்டப்படறோம். ஒவ்வொருத்தனையும் மொட்டையடிச்சு ஓட்டு வாங்கி பையனை எம்.பி. ஆக்கறதுக்குள்ள மூச்சு போய் மூச்சு வருது. இவன் என்னடான்னா அமெரிக்கா போனேன்; சலூன்ல தூங்கிட்டேன்; மொட்டை அடிச்சிட்டாங்கனு சொல்லி சிரிக்கிறான். சனம் பூரா வோட்டை குத்துது.

இந்த தடவை வசமா மாட்டுனான்.* ஏற்கனவே தனிநாடு எல்லாம் கேட்டாச்சு. ஒண்ணியும் வேலைக்காகலை. இவனுங்க வேற மேல, கீழனு மாநிலத்தை வேற ரெண்டா பிரி, பிரிங்கறாங்க. ரெண்டா பிரிச்சா மட்டும் கிழிச்சுற முடியுமா? செத்துப் போன பெருச்சாளியும், நாத்தம் புடிச்ச நாற்காலியும் தூங்கற வரை எந்த அரசாங்கம் வந்தாலும் இப்படித் தான் இருக்கும். எத்தன வருஷமா அரசியலுல இருக்கேன்? தெரியாது எனக்கு?

மொதல்ல போன் பண்ணி, பெங்களூரில இருக்கற சொந்தக்காரங்க ஊட்டுக்கெல்லாம் பாதுகாப்பு போட்டாச்சானு கேட்டுக்கணும். மத்தபடி சித்தாளு வேலைக்கு போனவன், ஓட்டல் வெச்சிருக்கவன், பஸ் ஓட்டறவன், ஐ.டி. கம்பெனில இருக்கற தமிழன் எல்லாரும் எக்கேடு கெட்டா நமக்கென்ன?

நடுவுல இந்த சினிமா பயலுக வேற உண்ணாவிரதம் இருக்காங்களாம். நல்லா இருங்க. என்ன இப்போ? நீ துங்காததால், பிரச்னை சரியாயிடுமா? உனக்கு ஒருநாள் ரெஸ்ட். எடுத்துக்கோ!

பேரனுக்கு பதவி குடுக்காட்டி பிரச்னை பண்ணுவேன். கேட்ட டிபார்ட்மெண்டை குடுக்காட்டி ரகளை பண்ணுவேன். அத வுட்டுட்டு, ஒகேனக்கல்ங்கறான், ஓசூர்ங்கறான், காவிரிங்கறான். இதுக்கெல்லாம் பிரச்னை பண்ண முடியுமா? பிரதமருக்கு லெட்டர் எழுதுவேன். அது ரெண்டு நாள் கழிச்சு போகும். அதுக்குள்ள கொஞ்சம் சூடு கொறஞ்சிடும்.

அப்பால நமீதாவை குட்டப் பாவாட போட வுட்டு, ஆட வுட்டா அம்புட்டு பயலுவளும் (வாய) தொறந்து வெச்சு குஜாலாயிடுவானுங்க. அப்புறம் காவிரியாவது, கருமாதியாவது?

* இறையாண்மைங்கறான். 'வேற்றுமையில் ஒற்றுமை'ங்கறான். அட, இவனுங்க 'ஒற்றுமையிலயே ஒற்றுமை'யா இல்ல. அப்புறம் எங்கிட்டு..? இன்னமும் ஒரே நாடா தான் இருக்கணுமா? குட்ட குட்ட குனிஞ்சு குனிஞ்சு தான, தமிழ்நாடு இன்னும் தாழ்வான பிரதேசத்துல இருக்கு? எங்க போனாலும் அடி வாங்கறான் தமிழன். இலங்கையில பார். இருபத்தஞ்சு வருஷமா கொல..! மலேஷியாவுல ஆரம்பிச்சிருக்கு! அட, உள்நாட்டுலயே நிம்மதியா வாழ முடியலயே!!

காவிரி தர மாட்டேங்கறான்...! முல்லைப் பெரியாறா.. மூச்!ங்கறான். பாலாறுக்கு பெப்பேங்கறான். மழை பெஞ்சு தாங்க முடியலனா மட்டும் 'அடக்க முடியல! பெஞ்சுக்கறேன்'ங்கற மாதிரி தொறந்து விடறான். சாக்கடையா தமிழ்நாடு...?

*மறுபடியும் சமஸ்தானமா பிரிஞ்சு ஒருத்தனுக்கொருத்தன் அடிச்சிக்கிட்டு, மாறி மாறி ஆட்சி செஞ்சுக்கிட்டு அப்புறம் ஒரு வெளி ஆளு வந்து மேல ஏறி குத்த வெச்சு ஒக்காந்தப்புறம் முழிச்சிக்கிட்டு, ஒரு தலைவன் கீழ ஒண்ணா சேர்ற மாதிரி ஒண்ணு சேர்ந்துக்கிட்டு, வெளியாளு ஓடிப் போனதுக்கப்புறம் அந்த தலைவனை மொத வேலயா மேல அனுப்பிட்டு, மறுபடியும் அடிச்சிக்கிட்டு....

இப்படித் தான் ஆகப் போகுதா?

*மொதல்ல மத்த மொழி சாயல் இருக்கற பேரையெல்லாம் தமிழ்ல மாத்துங்கப்பா. ஓசூர், பங்கனபள்ளி, ஒகேனக்கல்னு எல்லாம் எல்லை மாநில மொழிகள் பேர்ல இருக்கறதால தான் அவனுங்களதுனு நெனச்சிக்கிட்டு இருக்கானுங்க. தமிழ்ப் பேர்ல மாத்துங்க மொதல்ல..!

* 'சனமெல்லாம் சண்ட போட்டுக்கிட்டா, பண்ணின தப்பை எல்லாம் மறந்துடும்'னு புரட்சித் தமிழன் சொன்னாரு. சரியாத் தாம்ல இருக்கு!

*ஏண்டா, எங்க எல்லையில இருக்கற ஊரில ஒரு திட்டம் நிறைவேத்த உன்னோட அனுமதி வேணும்னா என்னடா அர்த்தம்? நாளைக்கு எங்க ஊரில ஒரு கக்கூஸ் கட்டுவோம். 'அது கூடாது. அதுக்கும் எங்க அனுமதி வேணும், ஏன்னா கழுவுற தண்ணி எங்க ஊரிலிருந்து வருது'னு அதுக்கும் ரகளை பண்ணுவீங்களாடா? வாய் மேலயே போடணும்டா உங்களை எல்லாம்...!

*இந்த ரகளை எல்லாம் கேட்டுட்டு, ஜப்பான் காரன் வாயால சிரிக்க மாட்டேங்கறான். 'ஏண்டாப்பா! உங்களுக்கு உதவி பண்ணலாம்னு காசு குடுக்க வந்தா, உங்க நாட்டுக்காரனே தடுக்கறான்னா, அப்புறம் என்ன ஒரே நாடு, ஒரே மக்கள், வெங்காயம், வெளக்கெண்ணை...' அப்படினு கேக்கறான்.

முடியலங்க...! அந்த காட்டானுங்களையும், நம்ம சுயநல பெருக்கான்களையும் நெனச்சா இன்னும் நெறய எழுதத் தோணுது. 'சபை அடக்கம்'னு சொல்லிட்டுப் போய்ட்டாங்களே நம்ம ஆளுங்க. அதுக்காகப் பாக்க வேண்டி இருக்கு!

இது ஒரு காவிரிப் பையனின் கோபம்.

Thursday, April 03, 2008

பல்லாக்கைத் தூக்காதே... பல்லாக்கில் நீ ஏறு!ம்போ.. சிவ சம்போ.. சிவ சம்போ..சிவ சம்போ..!

ஜகமே தந்திரம்... சுகமே மந்திரம்... மனிதன் எந்திரம்... சிவ சம்போ..!

நெஞ்சம் ஆலயம்... நினைவே தேவதை.. தினமும் நாடகம்... சிவ சம்போ..!


மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்!

மறுநாளை எண்ணாதே.. இன்னாளே பொன்னாளாம்.!

பல்லாக்கைத் தூக்காதே... பல்லாக்கில் நீ ஏறு!

உன் ஆயுள் தொண்ணூறு... எந்நாளும் பதினாறு! (ஜகமே தந்திரம்)


அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்...

தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு...

அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே...

எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே...


கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாள் இன்று...

காலங்கள் போனாலோ திரும்பாது என்பார்கள்...


மது உண்டு...

பெண் உண்டு...

சோறு உண்டு...

சுகம் உண்டு...

மனம் உண்டு...

என்றாலே...

சொர்க்கத்தில்...

இடமுண்டு... (ஜகமே தந்திரம்)
தனிமை - போட்டிக்காக.ம்மாத தனிமைப் போட்டிக்காக நெய்யார் அணைக்குச் சென்றிருந்த போது எடுத்த படம்.

போட்டிக்குக் காண்க.

India - True T20 Champs , in the Extremes.

பாரத தேசம் பலதரப்பட்ட வகைகளில் வேறுபட்ட அம்சங்களைக் கொண்டது. உணவு, கலை, கலாச்சாரம், மொழி, உடை, பேசு, பழகுதல் என்று ஆயிரமாயிரம் வகைகளில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

விளையாட்டிலும் அப்படியே நடந்துள்ளது.

சென்ற வாரம் சென்னையில் வீறு(ரு) நடை போட்டு நடந்த கிரிக்கெட் அணியா, இப்போது அகமதாபாத்தில் செமத்தியான அடி வாங்கி உள்ளது என்று வியப்பாய் உள்ளது.

இவன் எப்போது ஆடுவான், எப்போது அடி வாங்குவான் என்பது யாராலும் கூற முடியாத அளவிற்கு உள்ளான்.

வெறும் 20-ஏ ஓவர்களில் சோலியை முடித்து அனுப்பி வைத்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

ஒத்துக் கொள்கிறோம்.. இந்திய அணி T20 சாம்பியன்கள் தாம்... இரு துருவங்களிலும்...!

Again and Again the team proves without the presence of Thalaivar, The Team is Baseless.காண்க : Cricinfo

Wednesday, April 02, 2008

எங்கெழுந்தருளுவது இனியே?னிதான குளிர்க்காற்று வீசிக் கொண்டிருக்கின்றது.

வெண் மேகங்களின் வரிசைகள் வரிசையாக வேகமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. ஆழமான வெள்ளைப் புதையல்கள் பறப்பது போல் நாரைக் கூட்டங்களும், கொக்குக் கூட்டங்களும் அந்த மேகக் கூட்டத்தை உரசிப் பறக்கின்றன. அந்த உரசலின் சாரம் பாய்ந்ததால் பொழிகின்றது மாமழை.

அமுதப் பால் போல் பெருகி வருகின்றது பனி சாரல்கள். இரவின் மெல்லிய மேலாடை விலக விலக மூர்ச்சையடையச் செய்யும் மாயை போல், போர்த்துகின்றது இமயத்தின் அருள் மழை.

மான்சரோவர் ஏரியின் சின்னச் சின்ன அன்னங்கள் 'உமா உமா' என்று கீச்சிடுகின்றன. அன்னையே உன்னையே உண்மையே நம்பி வந்தேன் என்னையே ஏற்றுக் கொள்.

அம்மையே அப்பா ! ஒப்பிலா மணியே!சடைவிரி நாதா! பொங்கு மங்கை அந்த கங்கை நனைத்து பெருக்கெடுத்து ஓடிச் செழிக்கின்ற கருங்கூந்தல் நாயகனே! ஒரு சிறு இமயமென உனது சடாமுடியை இறுக்கிக் கட்டி, உச்சியில் இணைத்து, குன்றென ஜொலிக்கச் செய்து, இராஜநாகத்தைச் சுற்றி ஆபரணமாய் அணைந்திருக்கிறாயே!

கதிரவன் உன் பின்னிருந்து ஜொலிக்கிறானா? இல்லை பிரபஞ்சத்தின் ஒளிப் பிரம்மாண்டங்கள் உன் சிரத்தின் பின்னிருந்து ஒளிர்கின்றனவா? ஒளி வெள்ளம் பாய்கின்றதே இறைவா?

பக்தி, கர்ம, ஞான யோகங்களைப் பிசைந்து, விரல்களில் குழைத்து, திருநீறென பூசி இருக்கின்ற நெற்றியின் மையத்தில் இராஜ யோகம் ஒரு விழியென திறக்கின்றதே நாயகா? யோகப் பழம்பொருளே! இராஜ நாதனே!

தவம் செய்து, தியானத்தில் இறுத்தி, காலங்கள் எனும் கணக்கெல்லாம் களைந்து யூகிக்கவும், யோசிக்கவும் இயலாத கற்ப கற்பமாகப் பூத்து, காய்த்து, கனிந்து நெகிழ்ந்து, இயைந்து மின்னுகின்ற யோகப் பழச் சாறு பிழிந்து ருசிக்கின்ற விழி அமுதா!

நாகங்களைக் காதணியாய்க் கொண்டவா! எனது உள்ளன்பை உன்னிடம் சொன்னதுவா? சீறும் பணபு நீங்கி சிரித்து உன் மந்திரத்தை உன்னிடமே சொல்லிச் சொல்லி இன்ப ரசம் பெறும் அந்தப் பாம்புகள் போல் உன் செவிகளில் என் குரல் விழுந்திடுமா?

மெளனப் பெரும்பொருளே! யுகங்கள் ஆயிரமாயிரம் தோன்றினும், மறையினும் நாடகம் பார்ப்பது போல் அருள் பொழியும் கண்கள் வழி மட்டுமே மொழிகிறாயே! உதிரம் சொட்டுவது போல் சிவந்திருக்கும் இதழ்கள் திறந்து சொல்வதற்கு ஏதேனும் இருக்கிறதா உனக்கு?

நீலம் பூத்த கழுத்தை நீங்காமல் விளையாடும் அந்த நாகத்தைப் பார்த்து வியக்கிறேன்! தான் கக்கிய கடும் விஷத்தை நீ உண்ட பின்னும், அதன் மேல் கோபம் கொள்ளாமல், உன் கண்டத்திற்கே கழலினைப் போல் அணிந்து கொண்டனையே! அந்தக் கருணை மாமலையே! நிரம்பப் பொய்களால் புழுத்தலையும் என்னையும் மன்னித்து உன்னருகில் ஏற்றுக் கொள்ள அக்கருணை இன்னும் மிச்சம் வைத்துள்ளாயா?

மருதமென நிலைத்த இனிமையில் நனைந்துச் செழித்த திருப்பாதங்களைத் தொடுவதற்கும் அஞ்சுகிறேன். நான் செய்த ஆயிரமாயிரம், கோடானு கோடி தவறுகள், தப்புக்கள், தீங்குகள் தீக் கங்குகள் போல் என்னைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன; உறக்கத்தின் போர்வையை உதறிப் போட்டு எரிக்கின்றன; கனவிலும் கால பதித்து துரத்தித் துரத்தி, சிதறி ஓடும் என்னைக் கண்டு சிரிக்கின்றன. உன் அன்பெனும் இமயக் குளிரின் காற்றைக் கொஞ்சம் என் மேல் வீசச் செய்யக் கூடாதா?

ஈதென்ன, உனது திருக்கரங்களிலும் ரேகைகள் பாய்கின்றன. அன்பர்க்கு எளியனே! ஆதி முதற் பெரும் அமுதே! உனக்கு யார் காலம் குறிப்பது? காலமெனும் பெருநதியைக் கட்டமைப்பவனே! உனக்கெதற்கு ரேகைகள் வழிப் படகுப் பயணம்?

அவை உனது கைரேகைகள் அன்று! எனது கால்பாதைகள் அல்லவா?

உனது திருவிரல்கள் கொண்டு தடவ மாட்டாயா? உனது ஒரு கணம் தவறு செய்யத் துரத்தி விட்டாயே உலகுக்கு? மீண்டும் திரும்புகையில் மன்னிக்க மாட்டாயா? ஆதுரமாய் உன் கைகளால் என் சிரம் தடவி உன்னோடு சேர்த்துக் கொள்ள மாட்டாயா?

சூலமும், உடுக்கையும் சூழ நீ அமர்ந்திருக்கும் திருக்கோலம் யாதெங்கிலும் இனிமை உடையதன்றோ?

மாயையின் கணங்களைக் கண்ணிற்குக் காட்டும் மயானம் ஆகட்டும், சூழ்பனி பெய்து உனது அருளென குளிர் வீசும் இமயமாகட்டும், கருவறையென இருளறையின் முழு இருட்டில் பூத்த விளக்கின் ஒளியில் தியானப் பெரும் நாயகனாய் லிங்கமாகட்டும், ஆனந்தப் பெருவெளியில் தான்டவமிடும் ஆடற்கலை தந்த தேவனாய் நடராஜராகட்டும், வில்வ மரத்தடியில் வீற்றிருக்கும் சிவனாய் இருக்கட்டும்.. லோகமே நீயென, யோகமே நீயென, போகமும் நீயென யாதும் நீ, எங்கிலும் நீ, நீயே நிறைந்திருக்க வேறொன்றைக் கண்டு வெந்து, புதைந்து, கெட்டு, கேள்வி முறைகள் அற்று தீங்கிழைத்து, உனது திருப்பாதங்களைப் பிடிக்க ஓடோடி வருகின்ற உன் பிள்ளையை மாரோடு சேர்த்து அணைத்துக் கொள்ள மாட்டாயா...?

ஈசன் அடி போற்றி!
எந்தை அடி போற்றி!

தேசன் அடி போற்றி!
சிவன் சேவடி போற்றி!

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி!

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி!

நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

திருவாசகம்.

Tuesday, April 01, 2008

நான் கடவுள்.

சிகப்பு சிகப்பாய் தீப்பொறிகள் பறந்தன. பச்சை நிறத் துளிகளில் நனைத்தார். பொறிகள் மீன்குஞ்சுகள் போல் துள்ளின. மெல்ல மெல்ல வெண்ணிறமாக மாறின. கவனமாக சிறிது மெர்க்குரியை எடுத்து இரு சொட்டுக்கள் விட்டார். பொறிகள் இன்னும் வெண்மையாகின. துளிகள் சுழலத் தொடங்கின. மையத்தில் இருந்து வட்ட வட்டமாகத் தொடங்கிய மஞ்சள் அலைகள் விலகி, வெளிப்புறத்தை நோக்கி நகர்ந்தன. விளிம்புகளில் இருந்து கிளம்பிய நீல அலைகள் மையத்தை நோக்கி நகர்ந்தன. இரண்டும் சந்தித்துக் கொண்ட புள்ளிகள் நுரைக்கத் தொடங்கின. அந்நுரைகளை பிப்பெட்டுகளில் துளித் துளியாகச் சேகரித்தார்.

டி.என்.ஏ நிரம்பிய காப்ஸ்யூல் மத்திரையை எடுத்தார். மாத்திரையைப் பிரித்து, பிப்பெட்டுச் செட்டுக்கள் இரண்டை டி.என்.ஏ.வுடன் கலந்தார். மாத்திரையை இறுக்க மூடினார்.

அவனைப் பார்த்தார்.

"ஸ்வின்..! கடவுள் கான்செப்ட் பத்தி என்ன நெனைக்கிற...?" குழாயிலிருந்து வழிந்த புகையை இரசித்துக் கொண்டே கேட்டார் ப்ரொஃபஸர் நாதன்.

அஸ்வின் சற்று சங்கடமாய் நெளிந்தான். கையில் வைத்துக் கொண்டிருந்த காலியான டீக் கோப்பையை டீப்பாயில் வைத்தான்.

மாலை வெயில் அவ்வளவு உக்கிரமாக அந்த தோட்டத்தை தாக்கவில்லை. சுற்றி இருந்த மரங்களும், பூக்களும் அவர்களை மறைத்திருந்தன.

"எனக்கு எதுவும் ஒபினியன் இல்லை சார். கடவுள்னு ஒருத்தர் இருந்தார்னா எதுக்கு இவ்வளவு பிரச்னைகள் இருக்கணும்? காஷ்மீர்ல தினமும் குண்டு, இங்க இருக்கற இலங்கையில தாக்குதல், ஆப்ரிக்காவில வறுமை, அமெரிக்காவில மிதமிஞ்சிய பயத்துடன் வாழ்க்கை.. எதுக்கு இப்படி எல்லாம் இருக்கணும்? இதெல்லாம் சரி செஞ்சு நல்ல வாழ்க்கையைத் தர முடியாத அவர் என்ன கடவுள்? இன்னும் க்ளியரா சொல்லப் போனா, எனக்கு கடவுள் நம்பிக்கைனு எதுவும் இல்லை சார்..!"

"குட்! இந்த வயசில இருக்கற வேகத்தோட தான் பேசற! கம்யூனிஸ்டா நீ? மார்க்ஸிஸ்ட்..?"

"இல்லை சார்! எந்தத் தத்துவம் மேலயும் எனக்கு நம்பிக்கை இல்ல சார். மார்க்ஸிஸ்ட், லெனினிஸ்ட், பாஸிஸ்ட், கேபிடலிஸ்ட், ஷோஸியலிஸ்ட்.. எல்லாம் வேஸ்ட். இத்தனை இருந்தும் வறுமை ஒழியலையே சார். நொடிக்கு இவ்ளோ பேர் சாகறான்னு W.H.O. ரிப்போர்ட் சொல்லுது. இதெல்லாம் பார்க்க பார்க்க எனக்கு கடவுள் மறுப்பு தான் அதிகமாகுது. என்னை விடுங்க. உங்களுக்கு ...?"

"இதே போல தான்.. இப்படியே தான்! நானும் இருந்தேன். ஃபோர்ட்டி ஃபைவ் இயர்ஸ் பேக். அப்போ தான் ஐ.ஐ.டி. கான்பூர்ல எலெக்ட்ரானிக்ஸ் முடிச்சிட்டு, எம்.ஐ.டில.. குரோம்பேட்ல ரெயில்வே ட்ராக் ஓரமா இருக்கே.. அங்க இல்ல.. ஒரிஜினல் எம்.ஐ.டில எம்.எஸ் பண்ண போனேன். இங்க இருக்கற லைசென்ஸ் மெதட்ஸ், ரெட் டேப் மெக்கானிஸம் எல்லாம் வெறுத்துப் போய் யு.எஸ்லயே கம்பெனிஸ்ல ஜாய்ன் பண்ணி, தென் ஓன் கம்பெனி ஸ்டார்ட் பண்ணி...! அதெல்லாம் ஒன்ஸ் அபான் எ டைம். பணத்தை வெறி பிடிச்ச மாதிரி துரத்தி, கல்யாணம் பண்ணி, ரெண்டு பொண்ணுங்க வந்து... அவங்களுக்காக இன்னும் ஒரு ஓடியாடி.. உலகமெல்லாம் பறந்தேன். ஒரு டைம்ல டக்குனு ஒரு தாட். எதுக்காக இப்படி அலையறோம்? எதுக்காக இந்த வேலை? என்ன நாடகம் இதெல்லாம்.? தஞ்சாவூர் கிட்டக்க ஒரு கிராமம். சோழவந்தான். அங்க இருந்து கிளம்பி, கான்பூர், எம்.ஐ.டி., லண்டன், தைவான், பாரீஸ்னு சுத்திட்டு இருக்கற என்ன லைஃப் இது? இட்ஸ் எ நைஸ் கேம், ரைட்? கொஞ்சம் குழப்பம் வந்திடுச்சு. அப்போ நியூயார்க்ல ஏர்போர்ட்ல இருக்கேன். மயக்கம் வர்ற மாதிரி ஆகிடுச்சு. கண்ணெல்லாம் இருட்டிட்டே வர்றது. செருகற மாதிரி ஆகிடுச்சு. மயங்கி விழறாப்ல போய்ட்டேன்..." குழல் வத்தியைக் கொட்டி விட்டு டீப்பாயிலே வைத்தார். காலியான டீக் கப்பில் ஒட்டியிருந்த துளிகளை சொட்டு சொட்டாய் உறிஞ்சும் ஈக்களை வெறித்துப் பார்த்தார்.

அஸ்வின் அசுவாரஸ்யமாய கவனித்தான்.

"திடீர்னு ஒரு கை என்னைப் பிடிச்சது. ஜில்லுனு இருந்தது. வாயில ஜில்லுனு.. ரொம்ப ஜில்லுனு ஏதோ குடுத்த மாதிரி இருந்திச்சு. எதையும் கவனிக்க முடியல. குடிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா எனர்ஜி வர மாதிரி..! நிமிர்ந்து உட்கார்ந்தேன். யார்னு பாக்கறேன்.

இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. ஐ நோ ஹிஸ் ஐஸ். த பவர்ஃபுல் ஐஸ் ஐ எவெர் மெட். அப்படியே ஜொலிக்குது அந்தக் கண்கள். முகத்தை ஃபுல்லை மறைக்கிற மாதிரி தாடி. அது ஃபுல்லா வெள்ளை முடி. தலையில கொண்டை போட்டாப்ல ஜடாமுடி. எஸ்! ஜடாமுடி. ஐ ரிமெம்பர் த வேர்ட். அந்த வேர்ட் டக்குனு எனக்கு ஞாபகம் வர்றது. இதை யாரோ சொல்லி நான் கேட்டிருக்கேன்.

கான்பூர்ல படிக்கும் போது, காசிக்கு போயிருந்தேன். அப்போ அன்னபூரணி படித்துறைக்கு பக்கத்தில உட்கார்ந்திருக்கும் போது, திடீர்னு நெஞ்சை அடைச்ச மாதிரி ஆகுது. அப்போ ஒரு சாமியார் தான் நெஞ்சை தடவிக் குடுத்தார். தடவிட்டு போய்ட்டார். நான் தெளிவா எழுந்திருச்சு உட்கார்ந்து பார்த்தா நீளமா ஒரு ஜடாமுடி மட்டும் தான் தெரியுது. பின்னாடியே ஓடறேன். யாரு நீங்கனு கேக்கறேன். மெல்ல சிரிச்சிட்டு, 'நான் கடவுள்'னு சொல்றார். அதை சட்டையே பண்ணாம கேக்கறேன், 'உங்க பேர் என்னனு?'. 'ஜடாமுடி'. அவ்ளோ தான் சொல்றார். அப்படியே ஓடி கங்கையில போய் விழுந்துட்டார்.

அங்க பார்த்த அதே ஜடாமுடி இங்க நியூயார்க் ஏர்போர்ட்ல.

என்னைத் தெரியுதா உனக்குனு கேக்கறார். அப்படியே வேர்த்து விறுவிறுத்துப் போகுது எனக்கு. யு கேன் சீ நவ் ஆல்ஸோ. பார், என் கைகளை. எப்படி வேர்க்கறதுனு. இங்க கோட், சூட் எல்லாம் போட்டுக்கிட்டு... ஆனா அந்த முகம், தலை முடி, தாடி எதுவும் மாறலை. அப்படியே இருக்கார். எழுந்து நடக்க ஆரம்பிச்சிட்டார். பின்னாடியே ஓடறேன்.

'நாதா! இன்னும் நீ தெளியல! உனக்குள்ள இருக்கற கடவுளை நீ உணரலை. நீ இன்னும் கடவுளை நம்பாத நிலையிலேயே இருக்க. ஆனாலும் உனக்கு எப்பவும் நான் உதவி செஞ்சுக்கிட்டு தான் இருக்கேன். காரணம், உனக்கு கடவுள் காணக் கிடைப்பார். அது வரைக்கும் நீ உயிரோட இருக்கணும். போ! எங்கயாவது போ! தேடிப் பார்!...' சொல்லிட்டு அப்படியே கூட்டத்தில மறைஞ்சிட்டார்.

அப்படியே திக்குனு நிக்கறேன். அப்புறம் தான் நம்மை மீறின சக்தி இருக்குனு புரியறது எனக்கு. அந்த கடவுளைப் பார்த்தே ஆகணும்னு ஓடினேன்.

கம்பெனி ஷேர்ஸை எல்லாம் ஒய்ஃப்கிட்டயும், மாப்பிள்ளைகள்ட்டயும் பிரிச்சுக் குடுத்திட்டு தேடினேன். ஓஷோ, ரமணர், காசி, கங்கை, ரிஷிகேஷ், ஹிமாலயாஸ், ராமகிருஷ்ண மடம், யோகதா எல்லாம் தேடினேன். எனக்கு தெளிவே கிடைக்கல. எனக்குப் புரியல. குரான், பைபிள், கீதை, வேதங்கள், பார்ஸி, ஜீஸ், சீக், கன்ஃபூஷியஸம், ஏன் ஏதிஸ்ட் புக்ஸ் எல்லம கூட படிச்சேன். கடவுள் ஏன் இல்லாம இருக்கார்னு அதில சொல்றதெல்லாம் பொய்யா இல்லையானு தேடினேன். குழப்பம் தான் மிஞ்சுச்சு.

அப்புறமா விஞ்ஞானமா தேட ஆரம்பிச்சேன்..."

மெல்ல இருட்டிக் கொண்டு வந்தது. புறநகரின் இருட்டில் அங்காங்கே மஞ்சள் ஒளிப் புள்ளிகள். பிற அமைதியாகவே இருந்தது.

"ஹாக்கிங் சொன்னாப்ல, இது ஒரு சின்ன உலகம். பொட்டுத் துளி மாதிரி இருக்கற லோகம். எல்லையே இல்லாத பிரபஞ்சத்தில எங்கயோ ஒரு மூலையில சுத்திண்டு இருக்கற துளி. இதை கவர்ன் பண்ற ஈக்வேஷன் ஒண்ணே ஒண்ணு தான் இருக்கணும். அதைப் புரிஞ்சிக்க ட்ரை பண்ணேன்.

மறந்து போன சர்க்யூட்ஸை கையில எடுத்தேன். கடவுள் எல்லா இடத்திலயும் இருக்கார்னா, ப்ரகலாதனுக்காக தூண்ல இருந்து பிளந்திட்டு வர்றலையா, அது போல ஏன் கெப்பாஸிட்டர்லயும் ரெஸிஸ்டர்லயும் இருந்து வரக்கூடாதுனு நெனச்சேன்.

கடவுளோட பிரதி தான்னு எல்லாம் சொல்லுது. அப்போ ஏன் கடவுளை சிமுலேட் பண்ண முடியற மெஷின் இல்லைனு தேடினேன். கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் எல்லாம் கலந்து ஆராய்ச்சி பண்ணேன்.

யூ டோண்ட் பிலீவ். என் சொத்து ஃபுல்லா இதுக்காக செலவு பண்ணினேன். பொண்டாட்டி செத்துப் போனா. முதல் பொண்ணுக்கு ரெண்டு பசங்க பொறந்து, ஒண்ணு பத்து வயசில ஹவாய் தீவுக்கு டூர் போனபோ, புயலில செத்திடுச்சு. ரெண்டாவது பொண்ணுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் சிக்ஸ்த் ஃபார்ம். பொண்ணு அடுத்த க்ளாஸ்.

எல்லாம் வெறும் இன்பர்மேஷன் எனக்கு. எதிலயும் கலந்துக்கல நான். நான் உண்டு, என் ஆராய்ச்சி உண்டுனு இருந்தேன்.

தேர்ட்டி இயர்ஸ். ஸ்பெண்ட் பண்ணினேன். இன்வெஸ்ட்மெண்ட். இப்போ அந்த ஆராய்ச்சி முடியிற நிலைமைக்கு கிட்டக்க வந்திடிச்சு. நான் ப்ரிப்பேர் பண்ணி இருக்கிற டி.என்.ஏ.எலெக்ட்ரானிக் காப்ஸ்யூல் கூட சில சீக்ரெட் கெமிக்கல்ஸ் மிக்ஸ் பண்ணி, மெர்க்குரியில கலந்து குடிச்சா, யாரும் கடவுள் ஆகலாம். யெஸ். ஐ சிமுலேட்டட் காட்.

புல்லாகி, பூடாகி, புழுவாகி, மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் பாம்பாகி, கல்லாய் மனிதராய், பேயாய் கணங்களாய், வல் அசுரராகி, முனிவராய் தேவராய்னு எல்லாம் மாணிக்கவாசகர் பாடினாரே அப்படி ஆயிரம் ஆயிரம் பிறவிகள் எல்லாம் எடுத்தும் யாரும் காண முடியாத கடவுளை, நான் சிமுலேட் செஞ்சிருக்கேன்.

எனக்கும் வயசாகிட்டே போகறது. என் ஆயுசு முடியறதுக்குள்ளே இந்த கான்செப்ட்டை யாருக்காவது சொல்லணும்னு பார்த்தேன். நீ வந்திருக்க.

அஸ்வின் மை யங் மேன்...ஆர் யூ ரெடி, டு பிகம் ஏஸ் தி காட்...?" நேராக அவன் கண்களைப் பார்த்துக் கேட்டார்.

அஸ்வின் திக்குமுக்காடிப் போனான். அவனுக்கு ஆயிரம் கவலைகள் இருந்தன. சாந்தினி செளக்கிற்கு நாளை மாலை வரச் சொன்ன இஷிதாவைப் பார்க்க வேண்டும். அவள் பாடும் ஆயிரம் அர்ச்சனைகளை கேட்டுக் கொண்டே, மூத்திரச் சந்துகளில் கிஸ்ஸடிக்க வேண்டும். சங்கம் தியேட்டரில் இருளான மூலைகளில் கைகளுக்கு பல வேலை கொடுக்க வேண்டும். யூனிவர்ஸிட்டியில் மூன்று வருடங்களுக்கு முன் வைத்து விட்டு வந்த சர்டிபிகேட்ஸுக்கு ரெஜிஸ்ட்ரர் முன் பல்லிளிக்க வேண்டும். அதற்கு உதவி செய்வார் என்று இந்த கெமிஸ்ட்ரி ப்ரொபஸரிடம் வந்தால், இவர் என்னவோ உளறிக் கொண்டிருக்கிறார்.

ஜடாமுடியாம்... நியூயார்க்கில் காசியின் பிச்சைக்காரச் சாமியாராம். கடவுளை சிமிலேட் செய்திருக்கிறாராம். திஸ் ஓல்ட் மேன் இஸ் க்ரேஸி.

பட், ஒய் நாட் டு டேக் திஸ் சான்ஸ்? ட்ரை பண்ணித் தான் பார்ப்போமே? ஏதாவது கடவுள் மாதிரி பேசினால் இவர் நம்பிடப் போறார். சான்ஸ்க்ரிட்? 'சம்பவாமி யுகே யுகே' சொல்லலாமா? 'பரித்ராய சாதுணாம்'னு தானே ஆரம்பிக்கும்? இல்லை, காயத்ரி மந்திரம்? எது தோணுதோ அதை அப்படியே மெய்ண்டைன் பண்ணுவோம். நமக்கு ஹெல்ப் பண்ணவும் சான்ஸ் இருக்கு? யொய் ஷுட் வேஸ்ட் திஸ் சான்ஸ்..?

"நான் தயார் சார்..!" என்றான்.

"தட்ஸ் தி ஸ்ப்ரிட்...!" எழுந்து கொண்டார்கள்.

ரு கண்ணாடிக் குழாயில் கொஞ்சம் மெர்க்குரியை ஊற்றி, அதில் அந்த சர்க்யூட்களால் மூடப் பட்டு இருந்த டி.என்.ஏ காப்ஸ்யூலை 'ப்ளுக்' என்று உள் விட்டார். நீட்டினார்.

அஸ்வின் வேர்த்திருந்த நெற்றியை துடைத்துக் கொண்டான். நொடியில் வாங்கி அதை அப்படியே விழுங்கினான்.

மெல்ல மயக்கம் வர அப்படியே சுழல் நாற்காலியில் சாய்ந்தான்.

கடிகாரத்தின் முட்கள் ஓடிக் கொண்டே இருந்தன.

ரை மணி நேரம் கழித்து அஸ்வின் மெல்ல மெல்ல எழுந்தான். ப்ரொபஸரை பார்த்தான். அவன் கண்களில் அமைதி தவழ்ந்தது.

'சுரீர்'...

அடிவயிற்றில் இருந்து மின்னல் கிளைகள் போல் வலி பரவியது. இதயக் கூட்டின் எலும்புகள் அதிர்ந்தன. நாதன் அப்படியே விழுந்தார். கண்களில் நீல நிறம் பாரவியது. புரிந்தது. செகண்ட் அட்டாக். கைகள் காற்றில் அலைபாய்ந்தன. விசிறினார். மெடிக்கல் புட்டிகள் அறையின் தூர மூலையில் இருக்கும் அலமாரியில் தெரிந்தன.

வியர்வையால் நசநசத்துப் போன கைகளால் காற்றைத் துழாவினார். ஈனக் குரலில் கத்தினார்.

"அஸ்வின்! அந்த ரெண்டாவது பாட்டிலை எடுத்திட்டு வா..! ஹார்ட் அட்டாக்..!"

துளியும் அசையாமல் கூறினான்." என்னைத் தெரியவில்லையா உனக்கு?"

நெற்றியில் ஆயிரம் சுத்திகள் தாக்கியது போல் உணர்ந்தார் ப்ரொபஸர்.

அதே குரல். காசியில் கங்கைக் கரையில் அன்னபூரணி படித்துறையில் தடவிப் போன அதே குரல். நியூயார்க் ஏர்போர்ட்டில் வாயில் பால் ஊற்றிய அதே குரல்.

"ஜடாமுடி...!" முனகினார்.

"ஆம்..! என்னைத் தேடி அலைந்தாய். தூணிலும் இருப்பேன்! துருவிலும் இருப்பேன்! சக்கரத்தாழ்வானாகவும் வருவேன்! சர்க்யூட்டிலும் ஜொலிப்பேன்! எங்கெங்கும் எதிலும் இருப்பவன், உன்னிலும் இருப்பேன் என்பதை மறந்தாயே, மகனே! என்னை உருவாக்கினாய்! எதற்கு இந்த அலகிலா விளையாட்டு? என்னைக் காண உன்னைத் தேடு! வருவேன். உனக்கான நேரம் முடிந்தது. சென்று வா. உனக்கான துன்பங்களின் போதெல்லாம் உன்னோடு இருந்தேன். என் பிறவி முடிந்ததும், இந்த பிறவியில் இவ்வுடலில் ஜனித்தேன். எதற்கு? உன் பிறவி முடியும் வரையிலும் உனக்கு உதவிட. இன்று கடவுளைக் கண்டனை என்ற மகிழ்வோடு சென்று வா. என்னைக் கண்டு பிடித்துக் கொடுத்தாய். சென்று வா...!" அஸ்வின் நகர்ந்தான்.இல்லை.. இல்லை.. ஜடாமுடி நகர்ந்தார்.

"நீங்கள் யார்...?" கண்கள் செருகிக் கொண்டிருந்த வேளையிலும் தீராத கேள்வியைக் கேட்டார் ப்ரொபஸர்.

"நான் கடவுள்...!" பிரபஞ்சத்தின் ஒளிப் பந்தாய் பெருஞ்சிரிப்பைப் பொழிந்தார் ஜடாமுடிச் சாமியார்.

Monday, March 31, 2008

QSQT.

மீபத்தில் கேட்கத் தொடங்கி, ஒட்டிக் கொண்ட பாடல். இதன் நடுவில் அவ்வப்போது வருகின்ற ஒரு நிரடல் இசை பாடலுக்கு ஒரு புதிய அர்த்தத்தை தருகின்றது.Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, March 30, 2008

குருவாயூரப்பா... குருவாயூரப்பா...


(நன்றி :: விக்கிபீடியா.)

"Your kind attention please. Train number six two one seven from Chennai Egmore to Guruvayur via Alappey is expected to arrive on platform number two at zero hours thirty minutes...."

இருளான தூண்களின் உச்சியில் இருந்த ஸ்பீக்கர்களில் இருந்து காற்றின் அலைகளில் சிதறிய இயந்திரக் குரல், காத்திருக்கலுக்கான களைப்பை விசிறி விட்டுப் போனது. இந்த இரயில் 23 அல்லது 23:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வர வேண்டியது. வழக்கம் போல் கால தாமதம்.

வாங்கிய பத்திரிக்கைகளை மீண்டும் ஒரு முறை மேய்ந்து விட்டு, செல்லில் மீண்டும் பாட்டு கேட்க ஆரம்பித்தேன். இரவு கவிழ்ந்து தம் மீது முகாம் இட்டிருந்ததை எவ்வளவு சொல்லியும் கேளாமல், இமைகள் தள்ளாடித் தள்ளாடி கண்களை மூடத் தடுமாறியதில் தெரிந்தது.

'மறந்து விடாதே. மறந்தும் இருந்து விடாதே. எப்படியாவது இன்று இரவு இந்த வண்டியைப் பிடித்தாக வேண்டும். எனவே தூங்காதே தம்பி தூங்காதே' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

நாளை காலை எப்படியாவது குருவாயூர் அடைந்தாக வேண்டும்.

வ்வாரம் சுற்றுலா எங்கே போவது என்று சிந்தித்துக் கொண்டே பல் குத்திக் கொண்டிருக்கையில், கால் வந்தது. பல் குத்துகையில் எப்படி கால் வரும் என்று குழப்பம் வேண்டாம். இது Call. உறவினர் குடும்பம் இவ்வாரம் குருவாயூர் செல்வதாக அறிந்தேன். ஆஹா ! ரொம்ப நல்லதாகப் போயிற்று. கண்ணனே நம்மைக் கூப்பிடுகிறான் போலும் என்று மனதுக்குள் விசிலடித்துக் கொண்டே, 'நானும்.. நானும்' என்று ஒட்டிக் கொண்டேன்.

என்ன பிரச்னை என்றால் அவர்கள் ஏற்கனவே பயணச்சீட்டு பதிவு செய்து விட்டார்கள். 'சரி! நான் வேறு ஏதாவது முறையில் சனிக்கிழமை காலை குருவாயூர் வந்து சேர்ந்து விடுகிறேன் என்று உறுதி அளித்தேன்.

பேருந்தா, இரயிலா?

சில முறை பேருந்து வழியாகவே பயணம் செய்து விட்டதால், இம்முறை இரயில் என்று டிக் அடித்தேன். இரயிலில் மீண்டும் அன்ரிசர்வ்டு ப்ளாக்கில் செல்ல வேண்டும் என்ற எண்ணமே கொஞ்சம் திகிலையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

சரியாக 00:30 மணியளவில் இரண்டாம் பிளாட்பார்ம் வந்தடைந்தது. முன்பே விசாரித்திருந்தேன். கடைக் காரர்கள் 'கூட்டம் எதுவும் அவ்வளவாக இருக்காது. எனவே அமர (அட.. உட்கார..)இடம் கிடைக்க பெரிய அளவில் சிரமம் இருக்காது' என்று கூறி இருந்தார்கள்.

ஆனால், என்ன பரிதாபம்! திருவனந்தபுரத்தில் நிறைய இறங்குவார்கள். இடம் கிடைத்து விடும் என்ற நினைப்பு பணால் ஆனது. எதிர்பார்த்த அளவில் கூட்டம் இறங்கவில்லை...இரங்கவில்லை.

சில ஆண்டுகளாக ஒரு பழக்கம்! இரயிலில் முன் பதிவற்ற பெட்டியில் பயணிக்கையில் சிட்டு பெற பெரிய அடிதடியே நடக்கும். அதில் எதிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன். ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பேன். அந்த சமயங்களில் மனித மனமும், மொழியும் எந்த அளவிற்கு தரை மட்டத்தையும் தாண்டி பாதாளம் அளவிற்கு பாயும் என்று தெரிந்து கொள்ளலாம். அழகுத் தமிழ் மொழியில் சண்டை போடுவதற்கு எத்தனை எத்தனை அற்புதமான வார்த்தைகள் இருக்கின்றன என்பது அவ்வளவு எளிதில் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அன்றே? அதிலும் முக்கியமாக மதியம் 14:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை கிளம்பும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸிலும், பின்னிரவு 22:30 மணிக்கு ஈரோடு கிளம்பும் ஏற்காடு எக்ஸ்பிரஸிலும் முன்பதிவற்ற ப்ளாக்குகளில் ஏறி சீட்டு கிடைத்து அமர்ந்து விடுவது என்பது குதிரைக் களைப்பே!

ஆனால் எப்போதும் நான் கவலைப்பட்டதில்லை. கடவுள் எனக்கு இன்று எங்கு சீட்டு கிடக்க வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறாரோ அங்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் திடமான நம்பிக்கை உடையவன் ஆதலால், இடம் கிடைப்பது பற்றிய எந்த சிந்தனையும் இன்றி நின்று கொண்டிருப்பேன். நம்ப மாட்டீர்கள், எப்படியும் திருவள்ளூர் செல்வதற்குள் உட்கார இடம் கிடைத்து விடும். இது என் நம்பிக்கையை மேலும் மேலும் இறுக்கப் படுத்தி விடும்.

இன்றும் அப்படித்தான்! ஆனால் அவ்வளவாக அடிதடி எதுவும் நடக்கவில்லை. நானும் நின்று கொண்டிருந்து, பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பின் அங்குமிங்கும் பார்வையை அலை பாய விட்டதில், ஓர் நீள் இருக்கையில் நான்கு பேர் மட்டும் அமர்ந்து உறக்கத்தின் பிடியில் உருண்டு கொண்டிருப்பது தெரிந்தது. மெல்ல அங்கு முனை அமர் நபரை எழுப்பி, மெல்லிய சிரிப்போடு 'கொஞ்சம் நகருங்கள்' என்று மெல்ல கேட்க, இடம் கிடைத்தது. இதில் சிரிப்பு எதற்கு என்றால், இரண்டு காரணங்கள். 1. புன்னகையோடு எதையும் கேட்பதில் மிகப் பெரும்பாலும் கேட்கும் பொருள் கிடைத்து விடும் என்று எங்கோ படித்த ஞாபகம். அப்போதிருந்து கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் போது கூட 'கொஞ்சம் சிரிச்ச மாதிரி' முகத்தை வைத்துக் கொள்வது என்று பழக்கப் படுத்திக் கொண்டாயிற்று. இது அலுவலக சூடான தருணங்களைக் கொஞ்சம் cool நிலைக்கு கொண்டு வரவும் உதவுகிறது. 2. அவரே தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரை எழுப்பி, 'ஒக்காரணும். நகருய்யா' என்றால் யாராக இருந்தாலும் கொஞ்சம் கடியாவார்கள். ஏதாவது முனகிக் கொண்டே தரலாம். அல்லது தரப்படாமலும் போக பெரிய வாய்ப்பு இருக்கின்றது. அதுவும் நேரம் இரவு 1 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. எனவே தான் புன்னகை.

மனித மனம் தான் பெரிய குரங்காயிற்றே! கொஞ்சம் உட்கார இடம் கிடைத்தவுடன், 'இன்னும் கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தால் தான் என்னவாம். நானும் கொஞ்சம் நல்லா உட்காருவேன் இல்லையா?' என்று நினைத்த கொஞ்ச நேரத்திற்குள் அதிலேயே படுத்துக் கொண்டிருந்த ஒருவர், எழுந்து அமரவே, இன்னும் கொஞ்சம் இடம் கிடைக்க, செளகரியமாக அமர்ந்தேன்.

இதற்கெல்லாம் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? இதெல்லாம் அவனது குழந்தைகள் மேல் அவன் காட்டுகின்ற அன்பின் அடையாளம் தானே! இருந்தாலும் 'போனாப் போகின்றது' என்று அவனுக்கு ஒரு நன்றி சொல்லி விட்டு, கொண்டு வந்திருந்த 'ஒரு யோகியின் சுயசரிதத்தை' மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன்.

வீச்செடுத்த நாற்றம் கொண்ட கழிவறைகளின் அருகிலேயே அழுக்குப் பையோடு அதை விட நாற்றமும், அழுக்கும் கொண்ட ஒரு பைத்தியக்காரர் / பிச்சைக்காரர். பெரும்பாலும் (அவரது) பயணம் முழுத்ம் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து வந்தார். எங்கே இறங்கினார் என்றே தெரியவில்லை. பாதியில் அவரைக் காணவில்லை.

பின் கண்களில் தூக்கம் சொக்கிக் அவ்வப்போது சாய்ந்து, தடாரென விழித்து, எழுந்து, நடந்து ஒருமாதிரி பயணித்துக் கொண்டே வந்தேன்.

வரிசையாகப் பல ஊர்கள். மஞ்சள் ஒளி விசிறியடித்துக் கதிர் எட்டிப் பார்க்க காற்றின் வாசம் எங்கும் 'ச்ச்சும்மா குளிருதுல்ல' என்ற வகையில் பனிப்புகை பரவி இருந்தது. எர்ணாகுளம், திருச்சூர், சாலக்குடி, இரிஞாலக் குடா, என்று கடந்து ஏழு மணி நேரத்தில் குருவாயூர் வந்தடைந்து பெருமூச்சிட்டது இரயில்.

பயணம் முழுதும் செல் பாடல்களைக் கேட்டுக் கொண்டே வந்ததில், அடுத்த நாள் நல்ல பலன் கிடைத்தது. செல் பேட்டரி முழுதும் காலி ஆகி விட, தங்கிய லாட்ஜின் பவர் சார்ஜர் ப்ளக் பாய்ண்ட் காலை வாரி விட்டு விட, நாள் முழுதும் செல் தொல்லை இன்றி நிம்மதியாகச் சுற்றினோம்.தே இரயிலில் உறவினர் குடும்பமும் வர, எல்லோரும் லாட்ஜ் சென்று புதுப்பித்துக் கொண்டோம்.

முதன் முறையாக வேட்டி கட்டப் புகுந்து, அதில் இருக்கின்ற சில Techniques புரியாமல், சரி நாம் fresher தானே என்று லுங்கி கட்டுவது போல் ஓர் இறுக்கி இறுக்கி, மடித்து விட்டு, சுருட்டிக் கொண்டதில் ஓரளவிற்குச் செட்டிலானது. ஆனால் உண்மையாலுமே நல்ல Comfortness இருந்தது. ஆனால் ஒரு கவனத்தை வேட்டி மேல் வைத்துக் கொள்வது அனைவர்க்கும் நலம் பயக்கும்.

நானும் அவ்வப்போது ஒரு நுனியைக் கையில் மடித்துப் பிடித்து, கீழிறக்கி, மடித்து ஒரு கட்டு கட்டி, பின் தாழ இறக்கி என்று நாள் முழுதும் ஒரே 'வேட்டியோடு விளையாடு' தான்...!

இப்போதே அப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்றால், வரிசையில் பல மணி நேரம் நிற்க வேண்டி வரும் என்று தெரிந்த நண்பர் ஒருவரால் கூறப் பட்டு இருந்ததால், ஓர் ஆட்டோவை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த வேறு சில கோயில்களுக்குச் சென்று விட்டு, மதியம் 12 மணி அளவில் வரிசையில் நின்று கொண்டால், மதியம் 2 மணிக்கு நடை சாத்தும் முன்பு அப்பனை தரிசித்து விடலாம் என்று Planning.

முதலில் இரயில் நிலையத்தை விட்டு வெளியே வரும் போதே பார்த்து வைத்திருந்த பார்த்தசாரதி கோயில்! அங்கு சென்றோம். மூலவர் பார்த்தசாரதி தான். மூலவருக்கு இடது மூலையில் கணபதி. வலது மூலையில் சாஸ்தா. மற்றும் நாகர், பகவதி என்று எல்லாக் கோயில்களிலும் இருப்பது போலவே அனைவரும் இருந்தனர். எல்லோரையும் தரிசித்து விட்டு வந்தோம்.

பின் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குச் சென்றோம். ஹையா..! இது தெலுங்கு கோயிலு! டீஸர்ட்டை கழட்டலு, வேண்டாம்லு என்று நினைத்துச் சென்றால், போர்டு 'ஹி..ஹி' என்றது. இது வேங்கடப்பன் கோயிலாம். இங்கே இவர் பேர் வேங்கடப்பன். அம்மன் பேர்.. கரெக்ட். வேங்கடம்மன் என்று தமிழில் எழுதி விட்டு, மலையாளத்திலும் இந்தியிலும் பகவதி என்று எழுதி வைத்திருந்தார்கள். பேரில் என்ன இருக்கின்றது?

நாங்கள் போன சமயம் வெடி வழிபாட்டிற்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. நாங்கள் இருக்கும் வரை வெடிக்கவேயில்லை. எல்லா தெய்வங்களையும் சென்று கும்பிட்டு விட்டு, அடுத்த கோயிலுக்குச் செல்ல ஆட்டோவில் ஏறி கொஞ்ச தூரம் சென்ற பின் 'பட...பட...' சத்தங்கள் கேட்டன.அடுத்து மம்மியூர் சிவன் கோயிலுக்குச் சென்றோம்.

Mummyயூர்..?

இதற்கும் ஒரு விளக்கப் போர்டு இருக்கிறது. 'மஹிமா'-ஊர் தான் மருவி, மம்மியூர் என்றானதாம். ஆனால் முன்னோர்கள் பெரிய தீர்க்கதரிசிகள் தான்!! இப்பெயர்க் காரணம் இன்னோர் இடத்தில் தெளிவானது.

இது கொஞ்சம் பெரிய கோயிலாகத் தான் இருந்தது. குளம், சிவன், விஷ்ணு, அம்மன், கண்பதி, முருகன் (தமிழில் 'முருகன்' என்றும், மலையாளத்திலும் , இந்தியிலும் 'சுப்ரமணியர்' என்று எழுதி இருந்தது. ஏதாவது Politics..?) என்று எல்லாக் கோயில்களிலும் தரிசனம் செய்து விட்டு, கொஞ்ச தொலைவில் 'ஆனக் கொட்டாரம் உண்டு' என்று அங்கு செல்ல முடிவெடுத்தோம்.

செல்லும் வழியில், கணபதி கோயில் ஒன்றும், பகவதி கோயில் ஒன்றுக்கும் சென்றோம். இந்த பகவதி அம்மன் கோயிலில் அம்மனிடம், சிரித்து தான் பேச வேண்டுமாம். அதாவது ' அத்தைக் குடு! இத்தைக் குடு!' என்று பஞ்சப் பாட்டுப் பாடாமல், 'என்னை இவ்ளோ சந்தோஷமா வெச்சிருக்கியே! ரொம்ப நன்றி! இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கற மாதிரி செய்!' என்று மகிழ்வாகச் சொல்லி விட்டு வர வேண்டுமாம்.

இந்தக் கோயிலுக்கு தான் உன்னிகிருஷ்ண பணிக்கரின் ஆலோசனைப்படி நம்ம ஊர் அம்மா, யானை காணிக்கை வழங்கினாராம். (இப்போது புரிகிறதா முன்னோர்களின் தீர்க்கதரிசனம், Mummyயூர்!) அது பெரிய அளவில் பிரபலமாகி, மனிஷங்கர் அய்யரை ஓட விட்டு அடித்தது வரை நடந்தது, தெரிந்த கதை!

ஆனக் கொட்டாரத்தில் 65 யானைகள் வரை இருந்தன. எல்லோரும் ஜாலியாக மண் வாரித் தூற்றிக் கொண்டும், நீரில் விளையாடியும், மூங்கில் புற்களை தின்று கொண்டும் இருந்தனர். அவ்வளவு யானைகளையும் அங்கே ஒன்றாகக் காண்பது நன்றாக இருந்தாலும், கொஞ்சம் திகிலாகவும் இருந்தது.

ஒற்றைக் கொம்பு யானை, கோபத்தைக் கண்களில் காட்டிய யானை, குட்டி யானை என்று பல வகைகளில் இருந்தன. நடுவில் இருந்த ஒரு வீடு பழைய மாடலில் இருந்தது. இங்கு தான் 'வடக்கன் வீரகதா' என்ற மம்முட்டி படம் எடுக்கப்பட்டது என்று முகத்தில் ஒரு பெருமிதமாகச் சொன்னார்கள். எல்லா ஊரிலும் இப்படி ஒரு பெருமிதப் படுவார்கள் போலும்! நாங்களும் 'அடடே! அப்படியா! இங்கே தான் நடந்தாரா? இப்படித் தான் உட்கார்ந்தாரா?' என்று பிரமிப்பு காட்டி விட்டு, வெளி வந்தோம். இதே ரஜினி சூட்டிங் நடந்தது என்றால், பல்லைக் காட்டி இருப்பேனோ என்னவோ..?

பின் அறைக்கு வந்து, சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, அப்பன் திருக்கோயிலுக்குச் சென்றோம். பெரிய மலைப்பாம்பு போல் வளைந்து நின்று கொண்டிருந்த ஒரு பெரிய வரிசையில் நாங்களும் இணைந்தோம்.

வெளிர் மஞ்சள் அல்லது சந்தன நிறத்தாலானதும் பட்டு ஜரிகைகள் போட்டதுமான பாவாடை,அதே நிறத்தாலான இறுக்கப் பிடித்த சிறுமிகள் சட்டை, தலைக்கு குளித்து விட்டு ஈரத்தோடோ, காய வைத்தோ, அடிக்கின்ற காற்றில் அலைபாய்கின்ற நீள் கூந்தலை விரித்த படி வைத்து, இரு செவி மடல்களின் மேல் இருந்து, இரு கற்றை முடியை எடுத்து, இணைத்து முடிச்சு போட்டு, ஒரு சன்னமான பாம்பைப் போல் பின்னலிட்டு, நெற்றியில் சின்னக் கீற்றாக சந்தன்ம் இட்டு உலா வந்து கொண்டிருந்த பூக்களின் கூட்டங்கள், இது 'கடவுளின் சொந்த Country' மட்டும் அல்ல, 'தேவதைகளின் தேசமும்' தான் என்று தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.அந்தக் கள்ளன், காதலன் மாயக்கண்ணன் இருக்கும் இடத்தில் கோபியர்கள் கூட்டம் இருப்பது இயல்பு தானே? வேறு எங்கே கோபியர்கள் இருக்க முடியும்? நாம் தான் கோயிலுக்கு வந்திருக்கிறோம். அலைபாயும் மனத்தை, கண்களை கொஞ்சமாவது அடக்க வேண்டியதாகின்றது. என்ன செய்ய? (இந்த வழிசலைப் பற்றியும், கண்களுக்கு அளவிறந்த வேலை கொடுத்ததைப் பற்றியும் இங்கு ரொம்ப பேச வேண்டாம் என்று நினைக்கிறேன் ;-). சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். மலை நாடு வளம் மிகுத்தது. அவ்வளவு தாங்க..! )

12:30க்கு நிற்க ஆரம்பித்து, மெது மெதுவாக நகர்ந்து உள்ளே செல்ல நேரம் 2 ஆகி விட்டிருந்தது. சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டே (சொன்னால் மனம் கேட்டால் தானே..?) வளைவான வரிசைகளில் நடந்து, நகர்ந்து, கோயிலின் உள்ளே சென்று விட்டோம். பின் அங்கு வரிசை கலைந்து முந்தி முந்திச் செல்ல, அங்கே காட்சி அளித்தான் குருவாயூரப்பன்.

சின்னக் கண்ணன் தான். சந்தனக் காப்பு அலங்காரம். அவனது கருவறைக்கு முன்பு பலப் பல விளக்குகள் ஒளியைச் சிந்திக் கொண்டே இருந்தன. இருட்டான கருவறையின் மத்தியில் அபயக் கரம் காட்டி, முகத்தில் மந்தகாசப் புன்னகை பொழிய அந்த அழகுக் கண்ணன் நிற்கிறான். கண்கள் நிரம்ப, மனதில் மகிழ்வு பெருக அவனது திவ்யதரிசனம் கிடைத்தது.

இங்கே 'ஜருகண்டி' எதுவும் அவ்வளவாக இல்லை.

சுற்று வளைவுகளில் சுற்றி வர பிரசாதம் தீர்ந்து விட்டது என்றார்கள்.

'என்ன கண்ணா இது?' என்று மனம் குமைந்த வேளையில், வெல்லப்பாயாசம் கிடைத்தது. பின்னே, அவன் பக்தர்களைச் சும்மா விட்டு விடுவானா என்ன? வெண்ணெய் பிரசாதம் கிடைத்தது. அவனுக்கே பிடித்த வெண்ணெய், நமக்குப் பிடிக்காமல் இருக்குமா? அள்ளி அள்ளி வாயெல்லாம் பூசிக் கொண்டு, விரல்களால் இலையை வழித்து நக்கிக் காலி செய்ததில் Fat கொஞ்சம் அதிகமாகுமே என்ற பயம் புறந்தள்ளப் பட்டது.

உறவினர்கள் மீண்டும் ஒருமுறை அவனை கண்ணார தரிசித்துக் விட்டு வருகிறோம் என்று மீண்டும் வரிசையில் நின்று கொள்ள (அடுத்த நடை திறப்பு 4 மணிக்கு!), நான் 'போதும் ஒருமுறை பார்த்ததே ஒரு ஜென்மத்திற்குத் தாங்கும்' என்று சுற்றக் கிளம்பினேன்.

கோயிலை வலம் வருகையில் கோயிலின் பின்புறம், பெரிய திருக்குளம் என்று பார்த்தேன். தேவசம் போர்டின் புத்தக சாலையில் நுழைந்து சில புத்தகங்கள் வாங்கினேன். கதகளி முக அலங்காரச் சிலை ஒன்று, திருவிழாவின் போது யானை முகத்தில் போர்த்தப் படும் அலங்காரம் ஒன்றின் மாடல், சில குருவாயூரப்பன் படங்கள் என்று கலந்து கட்டி வாங்கியதில் பர்ஸின் கனம் குறைந்தது; மகிழ்வில் மனம் நிறைந்தது.

அடுத்து கிடைத்தது தான் அற்புத தரிசனங்கள்.

திருக்கோயிலின் பக்கத்தில் இருந்த மேடைக்கு அருகில் இருந்து பாடல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சரி என்ன அங்கே என்று பார்க்கப் போக, நல்ல நடன நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது.

நான் செல்கையில் 'தோடுடைய செவியன்..' என்று பாடல் ஒலித்துக் கொண்டிருக்கக் கொஞ்சம் பெரிய சிறுமிகள் (10 - 13 வயதிருக்கலாம்) நல்ல நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அவ்வப்போது Sync தப்பினாலும், அதற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.அடுத்து வந்தது சின்னச் சின்னச் சிறுமிகள் (10 வயதிற்குள்) நடனமாடியஒரு மலையாளப் பாடல்! என்ன ஒரு நடனம்! எல்லோரும் குட்டிக் குட்டி கிருஷ்ணன்களாக வேடம் இட்டிருந்தார்கள். நடனம் போகப் போக ஒவ்வொரு குழந்தையும் அந்தக் குறும்பனைப் போலவே ஆளுக்கொரு புறம் ஆடத் தொடங்கினர். சிரத்தில் வைத்திருந்த மயிலிறகு கீழே விழுந்தது; கிரீடம் வழுக்கிக் கொண்டே வந்தது; நடன அசைவை நிறுத்தி அதைச் சரி பண்ண வேண்டியது; நழுவிச் சென்று விட்ட மீண்டும் அருகில் ஆடிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துச் சரி செய்து கொள்ள வேண்டியது. நடனத்தில் கையில் வைத்திருந்த குழல் பறந்து எங்கோ விழுந்தது;அந்த குருவாயூரப்பனைக் காண வந்ததில், அவன் 'நான் என்றும் சிறு குழந்தை தான்! என் குழந்தைதன விளையாட்டைப் பார்க்கிறாயா?' என்று நமக்கு கூறுவது போல், இந்தக் குட்டி பாலகிருஷ்ணன்கள் மேடையில் விளையாடி விட்டுச் சென்றார்கள்.

ஆனால் ஒன்று! அத்தனை பேர்க்கும் முன்னால், பாட்டை முடித்து விட்டுத் தான் குழந்தைகள் கிளம்பின. அதற்கே பாராட்ட வேண்டும்.

மற்றொருமுறை அவனைப் பார்க்க வரவில்லையென்று ஏதாவது நினைத்துக் கொள்வானோ என்ற ஒரு சின்ன கேள்வி இருந்தது. 'இல்லை! என்னை இந்தக் குழந்தைகளின் ஆட்டத்தின் வழி பார்!' என்று கூறியது போல் எடுத்துக் கொண்டேன்.பின் 'அலைபாயுதே' என்று ஒரு சிறுமி சோலோவாக வந்து அரங்கை கலக்கி எடுத்துச் சென்றாள்.

உறவினர்களும் வந்து விட, நேரமாகி விட்டதே என்று அருகில் இருந்த தேவசம் போர்டின் மியூஸியத்திற்கும், ஓர் அரச மரத்தின் அடியில் அமர்ந்து விளக்குகளின் ஒளியில் ஜெகஜ் ஜோதியாக பிரகாசித்துக் கொண்டிருந்த பிள்ளையாருக்கும் (என்ன தான் கணபதி, விநாயகர் என்று சொன்னாலும், இந்த பிள்ளையார் என்றால் தான் மனதிற்கு இன்னும் நெருக்கமாகிறார், எனக்கு.) ஒரு வணக்கம் சொல்லி, கிளம்பினோம்.

ரவு 9 மணிக்கு அதே குருவாயூர் - சென்னை எழும்பூர் செல்லும் இரயிலில் ஏறிக் கொள்ள, அதிகாலை 3:30 மணி சுமாருக்கு திருவனந்தபுரம் வந்தடைந்தேன். விடைபெற்று, கரியாவட்டம் செல்லும் பேருந்தில் ஏறி, 4:15 மணிக்கு வீட்டை அடைந்தேன்.

மீண்டும் ஒரு முறை குருவாயூர் அப்பனைச் சென்று பார்த்து நிதானமாக இரண்டு நாட்களாவது அங்கு இருந்து பல முறை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த மனத்தை, நித்திரை தேவி தன்வயப்படுத்திக் கொள்ள... உறங்கலானேன்.