மலைக் கரும் குயிலின் கானத்தில் மனம் லயித்திருந்தேன். என் ஜன்னல் கம்பிகளில் நகர்ந்து கொண்டிருக்கும் மாலை பெய்த மழைத்துளிகளின் சர வரிசையில் பிரதிபலிக்கின்றது குயிலின் ஒற்றைக் குரல். இரவின் மென் குளிரில் ஊடுருவி நெஞ்சை அறுக்கும் துயரத்தின் இனிமையை ஸ்ருதி மாறாது படைத்தவனின் பேராணவத்தை யார் வைவது? தூணோரம் நின்றாடும் விளக்கின் திரி கருகிக் கொண்டு செல்கிறது. ஒளிக்குஞ்சுகள் திரியும் அதன் பிறவி இன்னும் சொற்ப கணங்களில் கழிந்து கொண்டிருப்பதை மனமே அறியாயோ?
என் மேலாடையில் நடுங்கிக் கொண்டிருக்கும் நூலாடையே, என் பெருத்த மார்புகளின் கனத்தை எவ்வாறு தாங்குகின்றாய்? பெருமூச்சின் அனல் பட்டுப் பட்டு பட்டுத் தேகம் கரைய எதற்காக நீ என்னை இன்னும் விடாது தழுவுகின்றாய்?
தூரத்து வானத்தில் ஒற்றைப் பெரும் பூவாய் தணிந்து தவிக்கின்ற வெண் பாவாய், என்னுடன் என் இல் ஏக மாட்டாயோ? தெருவெங்கும் தோரணங்கள், தோட்டமெங்கும் மணம் நிறை மலர்கள், மாடத்து ஒவ்வோர் இடுக்கிலும் ஒளிரும் மண் விளக்குகள்... என் பெருந்தனிமையின் ஒரேயொரு சொட்டையாவது காணாமல் ஆக்கி விடாது அலைபாய்வதைக் காண வாராயோ?
உறிகளில் தொங்கும் பானை அடுக்குகளில் ஊற வைத்த மோரும் வெண்ணெய்க் கட்டிகளும் யார் கைகளும் படாமல் அவன் வந்து குழப்பி, உதிர நிறம் ஊறும் அதரங்களில் பூசிக் கொண்டும் தரையெல்லாம் சிந்தி, மேனியெங்கும் பூசிக் கொண்டு உழப்பி இன்புற்று விளையாடுவதைக் கொள்ளாது, மேக ஊர்திகளில் ஏறிப் பயணம் செய்து ஏகாந்தம் நோக்கிச் சென்று தான் என்ன பயன்?
எட்டிப் பார்த்தவள் விட்டுச் சென்ற நீர்த் தாரைகள் கூரை விளிம்புகள் எங்கும் வழிகின்றன. ஆருயிரே...உன்னை எண்ணி எண்ணி ஏங்கி உருகிக் கரைகின்ற என் கண்களைக் கண்டு அவை அழுக்காறு அடைந்துச் மண்ணெங்கும் சேறாக்கி நகர்கின்றனவே...பிரபு, மனமெங்கும் தகிக்கின்ற அக்னித்தாரையை நின் விரல் நுனிகள் குளிரச் செய்து விடும் என்று நீ அறிந்திருந்தும் அருகில் வாராது இருப்பதேனோ?
கறக்காது இருந்தால், கட்டிக் கொள்ளும் பால் என்பதை அறியாதவனா நீ, கோபாலா? என் நெஞ்செங்கும் கட்டிக் கொள்கின்ற உன் ப்ரேமையை நீ அடையாது போனால், பின்னல் அணிந்து நடமிடும் இந்த சிரத்தைச் சுமந்து கொண்டு தான் என்ன செய்வது?
சலசலக்கும் நதிக்கரையில் மடி மீது சாய்ந்து கொண்டு உன் இதழ் பெய்யும் இனிப்பிசையைச் சுவைத்த என் செவிகள் சுமக்கும் தோடுகளில் தேங்கி நிற்பதெல்லாம் அன்று வாங்கி வந்த உன் உறுதிமொழிகள் அன்றோ?
கார்காலமும் வந்தது; மேற்கிலிருந்து குப்பல் குப்பலாய்க் கிளம்பி வந்த கரும்பூதங்கள் நின் நிறத்தைக் கடத்திச் செல்ல விடுவேனா? நீராய்ப் பொழிந்துத் தம்மைக் கரைத்துப் போயின. நாரை நிழல்கள் மிதக்கும் குளக்கரைகளில் ஆம்பல் மலர்களும் ஒற்றைக் காலில் நின்று முன்னிரவில் தூறும் சிறு துளிகளை உண்டு உதிர்ந்தன. பசிய சுவர்களின் முகப்புகளில் விளக்குகளை ஏற்றி வைத்தேன். விழுதுகளை மெல்ல அசைத்துக் கொண்ட ஆலமரத்தில் ஊஞ்சல்களைக் கட்டிக் கொண்டு, முன்னும் பின்னும் போய் வந்தேன், உன் நினைவுகளோடும் நிகழ் காலத்தோடும் தினம் சென்று வருவது போல. ஊதா வானத்தில் அந்தி நிறம் திக்குகளெங்கும் பரவிப் பரவி நாணத்தின் கிளைகளைப் பரப்பியது. தொலைவின் மலைச் சிகரங்களில் சுடர்ந்த செவ்வானம் ஆகாரம் அடங்கா அட்சயப் பாத்திரம் போல் தினம் தினம் ஆனந்தம் அள்ளித்தந்தது. மேலிருந்து ஆழி திறந்து நாளெல்லாம் நனைந்து கிடந்த பாதைகளெங்கும் பசுக்களும் கன்றுகளும் நடந்து சென்ற தடங்களில் பொங்கிய பால் நுரைத்து ஓடியது. முற்றமெங்கும் தேங்கிய மழைத்தேக்கங்களில் முகங்கள் அசைவதைப் பார்த்துப் பார்த்து விரல் களைத்தேன். காலையில் சொட்டும் கூரை மேனிகள், ராவெல்லாம் வானும் மண்ணும் பேசிக் கொண்ட ரகசிய மொழிகளின் மிச்சங்களை உதிர்த்தன. தளும்பிய ஏரிகள் உடையா நின்றன. பீலிகளைத் தாங்கும் மயில்கன்றுகள் மாலை முழுதும் முகில் அரசர்களைக் கண்டுக் கண்டு ஸ்நேகத்தின் ஒலியெழுப்பிக் கூத்தாடின.
குளிர்காலத்தில் காற்றிலே பனி மிதந்தது. இருள் விலகா முன்காலையில் புல் நுனிகளில் முத்தாய்த் துளிகள் சரிந்தன. புகை கிளம்பிய வீடுகளின் முக்காட்டில் ஈரம் இன்னும் மிச்சம் இருந்தது. பால் தெய்வங்கள் தொழுவத்தின் முடுக்குகளில் தூங்கிக் கழித்தன. திண்ணைகளில் போர்வை மூடிய தோழிகளும், வெந்நீர் அழைக்கும் குளியல்களுமாய்க் கழிந்தது.
காற்றில் பனி விலகி, வெயில் வந்தது. குளங்களில் நாங்கள் குதித்தாடினோம். மெல்லிய படர்பரப்பில் தாமரை மலர்கள் விரிந்து எங்களை மறைத்தன. மலர்ந்து வந்த எங்களைக் காற்றின் பொன் கரங்கள் அன்றி, வேறாரும் தீண்டா வெளியில் நீரில் வெளுத்திருந்தோம். வயல்களில் பச்சைகள் அசைந்தாடின. அரும்புகள் கூம்பி, வானத்துப் பேரரசனின் பொன் வரவைத் தேகம் முழுதும் தாழ்த்தி வரவேற்றன. அவனது நகங்கள் பட்டு விரிந்த மொட்டுகள், நிலத்தின் ஆழத்தில் எங்கிருந்தோ அள்ளிக் கொண்டு வந்த நறுமணத்தைத் திசைகளெங்கும் பரப்பின. சொர்ணமாய் நதி ஓடியது. வனத்தில் புது உயிர்கள் உலவின. மனமெங்கும் நிறைந்த காதலைப் போல், பகல் நிரம்பி வழிந்தது. இரவில் வந்த சந்திரனும் பெரு மரங்களின் இலைகளில் வெள்ளம் சிந்திப் போனான்.
காலங்கள் கடந்தன; முகில் நீரானதும், நீர் முகிலானதும் நிற்கவேயில்லை. ஸ்வரூபம் யாவும் காதல் மதுரம் சொறிந்த என் நீலப் பிள்ளையே, எனைக் காண நீ வரவேயில்லை.
இன்னும் உயிர் சுமந்திருக்கும் தேகம் நீ தொடாது தீ விடாத போதாவது வாராயா?