Thursday, June 03, 2010
கவி வரி கள்.
1.தணப்பு போதலும் தாயிடம் நோதலும்
கணப்பு சேர்தலும் காரிருள் காய்தலும்
வனப்பு தீர்தலும் வாலிபக் காதலி
நினைப்பில் நேருதடி மேனியும் வாடுதடி!
அணைத்து ஆதுரம் ஆவலாய்ப் பேசிட
கனைத்துக் காலொலித்துக் காதுகள் கூசிடச்
சினைத்த வார்த்தைகள் சீண்டலாய் வாரிட
நனைத்த நாணத்தை நெஞ்சில்சேர் ஊறிட!
முத்தம் மோதகம்; மோதிய போதெலாம்
யுத்தம் தீராது. யாவுமே நீகொடு.
சித்தம் நீயுள சீர்மிகு சீதனம்
பித்தம் பீறிடும் பீடுடைத் தேவியால்.
2.குளிர்நிலா கருமுகில் குருவிக் கூக்குரல்
தளிரிலை விழுமழை தழுவும் வானெழில்
களிப்புடை கவிவரி கனிந்த வானவர்
பொழிலுறத் தமிழ்மொழி போதும் வாழ்விலே.
முன்னொரு நாளினில் முகத்தை நோக்கிட
பின்னொரு போதினில் படுக்கை ஆர்த்திட
தன்னையே தந்தனை; துயரில் மேலுமோர்
அன்னையாய் ஆகினை அன்பால் காதலி.
3.நின்றாய்; இருந்தாய்; கிடந்தாய்; இலங்கை
சென்றாய்; அரக்கர் செருக்கை, அகந்தை
வென்றாய். நுரையுள் கரையில் தமிழைக்
கொன்றார். இராமா, உறங்கு தியோநீ?
4.என்னை ஈர்த்தது இழுத்தது தமிழ்
எழுதும் போதெலாம் சேர்த்தது செழும்
தன்னைத் தேனடைத் தன்னுடைப் பாவைத்
தங்கம் மேலுறைச் சொற்களை; தோழி
உன்னை ஆர்வமாய்க் கொண்சிறு கதைகள்
உள்ளுள் வாழ்ந்தது உருபல கொடுத்து
சென்னை மாநகர் வெள்ளிநாள் பொழுதில்
செம்மை நூலென வெளிவரும், வாரீர்...!!!!
(நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்த பா.)
5.சிறுசிறு துளிகள். சில்லென காற்று.
சின்னதாய் ஒருகுளம். மங்கை.
குறுகுறுப் பூட்டும் குதூகலப் புற்கள்.
குடையடிக் கீழமர்ந் தேநான்,
துறுதுறு கைகள் தடவிட, நரம்புத்
துடித்திடும் கிடாருடை மேனி
"பொறுபொறு" என்றாய். பூக்களை உதறிப்
பொழிந்திட, நனைத்தது மழைநீர்.
தமிழ்::
6.தோழி எனக்கு வளைநகருந்
தோளி னிலெனைச் சாய்த்துக்கொள்.
ஆழி அளவில் மகிழ்வோதீ
அதுவுங் குளிரும் துயரோவுந்
தாழி நிறைத்த கவிகொஞ்சம்
தாவி எடுத்து அமைதியுற,
வாழி என்றும் வான்புகழ
வசந்தப் பெண்ணாய்த் தமிழ்நண்பி!
இயற்கையின் இனிமை::
7.தடவிடக் குளிரும் தென்றல்
தழுவிடச் சிலிர்க்கும் மங்கை
படர்ந்திட மணக்கும் பாகல்
பழுத்திடச் சிவக்கும் கொய்யா
தடங்களில் பதியும் தாரை
தணிந்திட புகையும் சாம்பல்
கடந்திடக் கனக்கும் காட்சி
கனிந்திடக் கழலும் ஞானம்
மலர்ந்திடச் சிரிக்கும் பூக்கள்
மறைந்திடச் சிவக்கும் மாலை
உலர்ந்திட இனிக்கும் இச்சை
உகுத்திட மயக்கும் ஓசை
தளர்த்திடத் தடுக்கும் கைகள்
தயங்கிட நடுங்கும் மேனி
வளர்ந்திட குறுகும் தூரம்
வழங்கிடக் குறையும் பாரம்
வெண்ணொலித்த மின்னல் கோடு
வேகவைத்த கன்னல் சாறு
மண்ணொளித்த கடலை வாசம்
மழையிறக்கும் வானின் அம்பு
தண்ணென்று தாவும் ஆறு
தமிழிலொரு குயிலாய்க் கூறு
விண்கீழ்மேல் தனிமை இல்லை
வியப்பேன்நான் இனிமை கொள்ளை.
இறை வழிபாடு::
8.நீலமேகம் நின்தேகம்; நில்லாத்தேன் நாதமொலி
நனைந்த மஞ்சு;
ஏலமணம் நின்சொல்லில்; ஏந்தியநல் மதுச்சரமுன்
ஏங்கும் கோபி;
மீளவழி இல்லைநீயென் மென்மனத்தைக் குழலிசைத்து
மீட்டி விட்டாய்;
மாலன்நீ மதுசூதன் மலர்ப்பாதம் பணிந்தேன்பார்
மங்கை ஏற்பாய்.
9.பார்த்துக்கொல். கண்ணில் கருவேல்கூர்த் தீட்டிப்
பறித்துக்கொள் பச்சை இதயம்.
வார்த்துச்சில் செவ்வி தழில்தேன்பூண். சாய்த்து
வளைத்தள்ளும் திண்மை இளமை.
ஈர்த்துத்தின். மென்மை விரலாலென் தோளை
இழுத்தால்பின் செல்லும் விழிகள்.
வேர்க்கும்முன் செம்மை எழிலூறும் மேனி
வெல்லாட்டம் நில்லா துவங்கு.
10.பறையடி! எதையும் பகுத்தறி! எவர்க்கும்
பயனிலாக் காரியம் சாய்த்து!
உறைகிழி! வாளை உருவிடு! தீதை
உகுத்துபின் செங்குளம் போர்த்து!
கறைதுடை! காலம் கவிழ்த்திடு! கணக்கைக்
கலைத்திடத் திறனுடல் வாய்த்து!
கரைஉடை! கழுவைத் தகர்த்திடு! திமிறும்
கரம்புஜம் இரும்பெனக் கோர்த்து!
பதறிடு! ஒருசொல் பழியென ஒருவன்
பகர்ந்திடக் கடலென வேர்த்து!
கதறிடு! கவிதைப் பிழையெனக் கவிஞர்
கருத்திடத் தமிழினைச் சேர்த்து!
உதறிடு! உள்ளம் பகையெனப் பரிசை
உலகினர் கொடுப்பினும் மறுத்து!
சிதறிடு! சிற்றில் நிரப்பிடும் மழலைச்
சிரிப்பினில் துயர்களை மறந்து!
அணிந்திடு! அவரைக் கிழிசலாய்த் தீயர்
அடங்கிடப் போரினில் வீழ்த்து!
துணிந்திடு! வெட்டித் துடைபிள! வீறித்
திசைநனைக் குருதியில் குளித்து!
தணிந்திடு! அசுரம் வெடித்திடும் அதன்பின்
தவறுயிர்ப் பறிப்பென உணர்ந்து!
கனிந்திடு! காணும் யாவுமே காட்சி
காண்பவர் நடிப்பவர், நிறைவு!
***
Image Courtesy :: http://www.travel-images.com/india77.jpg
Wednesday, June 02, 2010
பதிவுலகம்.
Subscribe to:
Posts (Atom)