இன்னிசைச் சிந்தியல் வெண்பா::
மாதொரு பாகனும் மால்திரு மார்பனும்
தூதொரு கண்ணனைக் கேட்டது “எப்படி?”
“வேய்ங்குழல் வித்தை!” சிரிப்பு.
நேற்று முகில்கொண்டோம் இன்று மழைகொண்டோம்
ஊற்றுடல் தின்றோம் உதிரருசி ஓநாயைக்
கொண்ட விரல்கள் நமது.
மொட்டாய் மலராகி மெட்டாய் இசையாகி
தொட்டாய் விழைவாகிச் சிட்டாய் விரைதலில்
நட்டாய், அடைந்தேன் நலன்.
வாசமலர் வீசிடு வர்ணமஞ்சள் பூசிடு
நேசமொழி பேசிடு நெஞ்சில் முகிழ்த்த
நினைவெலாம் நின்றெழெட் டும்.
எடுக்கையில் கொண்டது எண்ணிய ஒன்றே
தொடுக்கையில் சென்றது ஒன்றே பலவாய்
விடுக்கையில் பல்லா யிரம்.
நேரிசைச் சிந்தியல் வெண்பா::
வாட்டுதல் உன்னிருப்பு வன்கனலோ உன்னின்மை
மூட்டுதல் உன்விழிகள் முட்சரம் பூட்டுவதோ
வேட்டுவனை வெல்லும் விலங்கு.
ஆழ்ந்த ஒருபார்வை வீசினாய் ஆண்டுபல
வாழ்ந்தது போன்ற நினைவினில் - போழ்ந்தாய்
மனதை உனதாக் கியே.
உலாவும் இடமெலாம் உன்முகம் எண்ணம்
துழாவும் பொழுதெலாம் உன்சொல் - விழாதே,
விழுந்தாய் மனமே விழி.
தொட்டணை தூறும் உடற்கேணி மேனியைப்
பட்டணை பெண்ணினை அஞ்சுதல் - விட்டணை
வில்லவன் தேரில் விரைந்து.
தந்தது புன்னகை கொண்டது காதலை
உந்தியது சொல்லென உன்னிடம் - முந்தியது
”பஸ்பாஸ் புதுப்பிச்சாச் சா?”