எந்த சிற்பி கண்ட கனவு நீ?
நறுமுகை கெழு மணம். அருவி எழு சாரல். மலைமுகட்டுத்தூறல். வானவில் வர்ணக்குழைவு. பூவனக்குன்று புறம். மாமலர்த்திறம். சாறு வழியும் செங்கனி. வெயில் திரை கழுவும் பசிய இலைக்கொத்து. கருமுகில் குளிர்மை. பனி சறுக்கும் மென்மை. பேரெழில் குவித்திடும் பொற்பேழை. நீலவெளி நிறையும் வெண்ணொளி.
போர்க்கென எழுகையில் வேல்விழி; பால்மொழி; கார்க்கற்றை பாய்ப்புனல். நேரங்கழியும் நேர்க்கோடு. அலைநில்லா அமுதக்கலம். வேரூறும் ஈரமண். கிளைதுழாவும் வளி. பீறிடும் ஊற்று. மலரென்று பிறந்த மதுக்குடம். தளிரென்று துளிர்த்த தங்கரசத்துளி. நிழல் மறைக்கும் நீலச்சுடர். பிணியென்றும் மருந்தென்றும் பிறிதெனப் பிரியவியலா சொல். மறுகரை தீண்டித்தீண்டி நிறையா குளிரலை.
தனிமைக்கிழி கூர்வாள். தமிழினிமை. தாளிரு தோள். தாழடையா தவிப்பு. தாமிரத் தண்ணொளி நிலா. முறுகலென சொல்லெடுத்து முந்திநின்று முத்தமிடும் முத்தமாரம். பேச்சொலி கேளா நொடி வாழா நொடி. பொன்முகம் காணா நாள் வீணாள். பேணுதலின்றிப் பொழுது விரையும் காலக்கடலில் கைப்பிடிக்கக் கிடைத்த வீணை. குழலோசை கேள் தவம்.
நச்சரவத் தொடுகை. நாதத்திலகம். சுழல் இழுப்பு. ஸ்வர பேத தூரம். வாழ்ப்பேரேட்டில் பாராட்டு ஒரு மணி. பெருந்தச்சன் செதுக்கிய கற்சிற்பம். பெருமொழியன் உருக்கிய சொற்களி. கனவுகள் உலாவரும் கடுமிரவில் சிறகடித்துப் பறக்கும் இளந்தேவதை. பாதை வழுக்கும் பசியவழு.
மகரந்தம் குவிந்த மொட்டு. தும்பி சுவைக்கும் தேன்கடல். கனிச்சுவை ஊறும் காணா மேல்.
அரசூரும் அமுதப்பாதை. ஆலமரும் அவனிடம். செங்கனல் சிந்தும் பிரபஞ்சம். சக்தி பிம்பம். பெருங்கருணைப் பேராறு. நாணிலா வில். கானுலா கவித்திறம். பூரண ஒளிக்கிடங்கு. மோதித்திரியும் வண்டென வந்தமர வந்தசுவை. கூதல் பொழுதின் குளிர்ப்போர்வை. கூறா சொல் குவிந்திடும் இருளாழம். வெண் தந்தம் முன் சுமந்து வரும் பெண்வேழம்.