Saturday, March 31, 2018

அணை தீண்டும் மதில்.


பேரறியா வனங்களின் மேல் எங்கெங்கெங்கிருந்தோ வந்து குழுமியிருந்த கருமுகில் கூட்டங்கள் நாளென்றும் இரவென்றும் பெய்து குளிர்ந்த மண்ணில் ஊறிய நீர்த்துளிகள் ஒன்றிணைந்தன. தாமே உருவாக்கிய பாதைகளில் ஒன்றோடொன்று இணைந்திணைந்து துளிகள் கோடுகளாயின; கோடுகள் ஓடைகளாயின; சிற்றோடைகள் சிற்றாறுகளாயின; சிற்றாறுகள் அருவிகளாயின; பேரருவிகள் நதிகளாயின; நதிகள் சேர்ந்து சேர்ந்து பேராறாகின; பேராற்றைத் தேக்கி வைத்த மதில்களாலான அணையை கணந்தோறும் முட்டி மோதித் தத்தளிக்கின்றது பெரு நீர் வெள்ளம்.

கரைகளை மீறத்துடிக்கும் பேரார்வம். ஈர மண்ணைக் குழைத்த ஓரங்களில் நாணல் செடிகள் பூத்து நிறைத்த வெண் படலம். அலைந்தும் குழிந்தும் தழைந்தும் குவிந்தும் தடுமாறும் மேல் தளத்திற்குக் கீழே நீலம் கரைந்த அடியாழம். பெரு முதலைகளும், ஐந்தடக்கல் போலும் ஆமைகளும், முள்ளென்றேயான மீன்களும் நீந்தும் ஆளறியா உலகு. தங்கமீன்களும் தவளைகளும் நஞ்சில்லா சிறு பாம்புகளும் விளையாடுதல் கண்டு நீந்த நனைதலுக்கு இறங்குவோர் கவ்வப்படுவர்.

அசட்டு தைரியத்தாலும் ஆர்வத்தாலும் தரை தொடாக் கால் கொண்டு உள் நுழைவோர் மேல் முதலில் சிறு பல் படும்; ஏதோ ஒரு செடி என்ற நினைவில் தள்ளி விடுவர். சற்றே கூரான நகங்கள் தோலெல்லாம் கீறிச் செல்லும். புதுக்குருதித் துளிகள் துளிர்த்து உடனே கரையும். எரிச்சலில் ஈரம் மேவும்.

மஞ்சு பொழியும் முன் மயில் நவிலும்; நதி நுரைக்கும் முன் கரை நாணல் நாணும்; வான் நிறையும் முன் புள் அறியும்; கண் காணும் முன் மனம் உணரும். தேன் தடவிய அம்பின் நுனி கூராய்க் கொல்லும் திசைகள் ஆயிரம்.

மேலே விரி ஆகாயநீலம்.. கீழே நீரீரம். இருள் நதி நிறைக்கும் ஒளிப்பூச்சிகள் மிதக்கும் வழியில் விழிகள்.

Pic :: https://fineartamerica.com/featured/black-and-white-erotic-stefan-kuhn.html

இன்றும் இனியும்.

திரி மல்லி இதழ்கள்.

ரை மேல் விரிந்த மலரொன்று வான் நிறைந்த கதிரை விரும்புகின்றது. மஞ்சள் இதழ்களால் சூழ்ந்த செம்மையத்தில் துகள்களாய்ச் சேர்த்திருந்த மகரந்தப் பொட்டுகளை மேல் காட்டி வெங்கதிருக்குக் காத்திருக்கின்றது. வண்டொன்று வந்து துளிர்த்திருக்கும் சிறு தேன் துளிகளைச் சுவைத்து கொண்டு செல்கின்றது.

கூந்தலில் வாடிய மலரள்ளி உதிர்த்த  பின்னும் உன் காலடிகள் என் இல்லத்தில் படாதது ஏன்? கோடை கால நீல வானம் போல் தெளிவாக என் படுக்கை துல்லியமாக அமைந்தது. இறைத்திறைத்துக் கேணி பால் வற்றிய பசு அகிடுகள் போல் இளைத்து வருகின்றது. இரவில் எழும் தீராக் கொலுசொலியை சுவர்ப்பல்லியும் கேட்டுக் கொண்டிருக்கின்றது. குளிரில் நனையும் தென்னங்கீற்று அசைவொழிந்து சரிந்து சிறிதாக ஒட்டியுள்ளது.

ண்டபின் எழுந்த மொழியில் சொல்லில்லை; தேடிக் கொண்டு வந்த சொல்லில் எழுத்தில்லை; மீட்டு எடுத்து மீட்டிப் பார்க்கையில் எழுத்தில் உயிரில்லை; உயிரென்று முன் அமர்ந்த முழுதுயிர்ப் பதுமையே, நிழல் சுரக்கும் மலர்க்கொடியே, வாழி நீ!

தீம்பாவைத் தேனூறப் பூத்த மலைச்சாரல் நதியென்று ஆனது போல், வயதுகளில் நீ வாரிக் கொணர்ந்த வனப்பையெல்லாம் மூடி மறைத்து எங்கு கொண்டு செல்கிறாய்?

காளை கட்டிக் கதிரறுத்துக் கலம் நிறைத்தல் போல் சிந்தும் புன்னகையை, ஆனை கட்டிப் போரடித்து அடுக்கும் தாழிகளில் நிரப்பி என் கைகளில் சேர்ப்பதென்று?

நீலச்செவ்வரி ஓடும் கூந்தல் சரிவுகளில் மின்னும் கதிரழகெல்லாம் நின் பார்வை என்றறியாது இக்கவி எழுதுவது தான் என்ன?

பூனையொன்று இரவில் மென் பாதங்கள் வைத்து நுழைந்து உருட்டிய குடுவைத்தயிர் போல் எத்தடம் எப்படி வைத்து மனதுள் நுழைந்து உறங்கும் இளமையை வைத்து விளையாடும் உன் குரூரம் தான் என்ன?

பெருமழை பெய்து கொண்டிருக்கும் பொழுதில் கரும்பாறைகள் நிறைந்து கால் சறுக்கி பாதாளம் நோக்கி விரைகையில், கைப்பிடித்த ஒற்றை வேர் உன் விழிமொழி என்றாவதறிவாயா நீ?

ஊசியிலைக் காட்டில் இலைகளில் தங்கும் பனி மென் சூட்டுக்குக் காட்டும் பல் வர்ணங்கள்,
இரவின் கதகதப்புக் கூட்டுத் தீ,
புகைபோக்கி வாய் திறந்து வெளியாகும் கரும்புகை காற்றுடன் கலத்தல்,
பழுப்புக் குதிரை வால்நுனி மேலமரும் சிறுவண்டு,
போரழித்த சுடலையில் எரியும் கனவுகளின் மணம்,
தோளணைத்த நாகம் தீண்டத் திளைக்கும் நஞ்சுச் சுவை,
கள்நுரைத்த கலத்து விளிம்பில் போதையில் மல்லாந்த பூச்சி,
சிறகடித்து வான் அளக்கும் சின்னஞ்சிறு குருவி கொத்தித்தின்னும் புழு,
நீயடி!

இளமயில் இருப்பு, இருகுயில் தவிப்பு, இணையமர் வனப்பு, இறுகுதல் உவப்பு!

தினைகதிர் தலை தாழ்த்தி மண் காணல் போல், உனைஎதிர் பார்த்து மயக்கம்.

னமெழக் கொள்ளும் காலத்தை விட, வனத்தில் தழலெழக் கொள்ளும் நொடிகள் மீக்குறைவு. அலையெழுகையில் பசிய இலையென்றோ, மரித்த சருகென்றோ, தேன் கலம் மலரென்றோ, செழுங்கனியென்றோ காண்பதில்லை. மூட்டிவிடும் சிறுபொறி எங்கிருந்து துளிர்க்கும் என்றறியாவகை எழுகின்றது ஒரு கரம்.

மலைமுகட்டில் ஒரு மலர் மலர்ந்தது. தனித்தது; தவிர்த்தது. மஞ்சள் இதழ்கள் சுற்றிக் குவிந்த மையத்தில் மகரந்தத் தூள் நிறை கடமையொன்றைச் சுமந்து, காலடிக்கீழ் உறைந்த நகரைப் பார்த்தவாறு, அச்சிறுமலர் தன் தேன் உண்ணும் அவ்வொற்றை வண்டிற்கென சிறு இலைகளைக் குவித்துத் தவம் செய்யலாயிற்று.

மாயவேளை ஒன்றில், மழை பெற்று முடித்த முன் மாலையில் தூரத்து வானவில்லின் விரைந்த பாதையில் விளைந்தது புதுவர்ணம் ஒன்று. கதிர்க்கரம் தொட்டு ஈரத்துடன் சூடிக்கொண்ட அப்புதுநிறம் மெல்லமெல்ல ஒரு துளியாகி கீழ் விடுத்து, கலந்தது.

லரென என் மனதில் பூத்தாய்
மணமென என்னுள் மணந்தாய்!
அழகே! அமுதே!
விலகி விலகிச் செல்லும் விந்தையே!
மதுபொழி எழிலே!
மதுமர மதுரமே! மதுகரமே!
சொற்கள் அறியாது திகைப்பின்
திசையில் அமிழ்த்தப்படுகிறேன்!

ண்டூறும் நதிக்கரை மணலில் யார் பெயரை எழுதிச் சென்றன கால்கள்? யார் பெயரைக் கலைத்துச் சென்றது காற்று? பொன்மாலை வெயிலில் இலைகள் மேல் தங்கப்பூச்சு பூசிய ஒளிக்கதிர்கள் எங்கிருந்து எங்கு செல்கின்றன? எவரிடமிருந்து எவற்றைக் கொண்டு செல்கின்றன? பசிய ஈரம் படர்ந்த மரம் மேல் வழுக்காமல் விழாமல் நெளிந்து செல்கின்ற புழுவொன்று, அடர் கானகத்தின் ஆயிரம் கோடி ஜீவன்களின் மிதிபடாமல் விழிபடாமல் இன்னும் உயிர்த்திருக்கின்ற பேரதிசயம்.

கருங்குயில் குரல் தீண்டும் செவிகள் இல்லா வெளியில் ஒற்றை நினைவோடு நடந்து செல்கிறேன். வானெங்கும் தூய நீலம். மேகங்களற்ற வெட்டவெளி. துல்லியமான பகல், தலைக்கு மேல் பூத்திருக்கின்றது. ஜ்வலிக்கும் கதிர்வட்டங்கள் பெருமர இடைவெளிகளுக்குள் புகுந்து புகுந்து மாயாஜால வர்ணங்கள் காட்டுகின்றன. பாதைகளில் சருகுகள் அல்லது சருகுகளை ஒதுக்க உருவாகும் பாதை. பாறை பிளக்கும் பெரும் பெரும் வேர்கள் கட்டியணைத்துப் பின்னிப் பிணைந்து நாகசல்லாபம் செய்யும் பிரம்மாண்ட காமவெளி.

Wednesday, March 28, 2018

ஏனழைத்தாய்..?



னழைத்தாய் என் காதலே சகி
ஏனழைத்தாய் என் காதலே சகி
என்றழைப்பாய் இந் நாளிலே... சகி.....

அனலில் நிலவும் எரிந்திடல் நீ காணாய்
அழகு எழி லுருகுது மெய் தீண்டாய்

விரல்பட நடமிட இடையினை ஏந்தும்
ஸ்பரிசத்தில் நான் எனை மறந்தேங்க... (ஏனழைத்தாய்)

கனவினில் இனிய ஒலியொன்று கேட்க
ஒலியல்ல கேள் அது குழலொன்றின் மொழியென்றே

குழலிசை போலல்ல அவன் குரல் போலே
குழைந்திடும் மேனி செவிகளில் விழும்போதே... (ஏனழைத்தாய்)

***

மொழிபெயர்ப்பு அல்ல. இசைச்சுழி மேல் பயணிக்க சொற்படகு சமைத்தேன். கொஞ்சம் தடுமாறிப் போனாலும் தள்ளி விடவில்லை.