Tuesday, July 19, 2016

ப்ரியே...சாரு ஸீலே...

ப்ரியே...சாரு ஸீலே...

ப்ரியே...ப்ரியே.... மனதில் அமரும் சின்னக் குருவியே... கிளை நழுவும் நிழலே... இரவில் நகரும் மெளனமே....

முகம் தூக்கி நீ கொள்ளும் சினமென்ன..? விரல்களைக் கோர்த்துக் கொண்டு திரும்பி அமர்ந்திருக்கும் கோலமென்ன? புறங்கழுத்தில் அலையாடும் சிறுமென்மயிர்களைக் காட்டி நீ புறங்காட்டும் பொழுதென்ன? ப்ரியே...ப்ரியே...

குழலென எழும் என் தவிப்பை நீ அறியமாட்டாயா? என் விரல்கள் தடவும் நீள்குழலை நீ விரவிப் பரந்திருக்கும் நதிக்கரையில் ஊறும் சிற்றெறும்பு என என் மேல் கனிய மாட்டாயா..? குளத்தில் விரிந்திருக்கும் கமலம் மேல் சுற்றி வரும் வண்டென உன் நினைவு மேல் வட்டமிடும் என் உளம் நீ அறியாததா?

ப்ரியே...ப்ரியே... மோதி உடையும் செம்மலர் மணமென நீ வருகையில் என் பீலி திரும்பும் திசையே... மதுவே... மலரிடைத் துகளே... மழையென எழும் கருணையே... பட்டென தழுவும் முகிலே...முகில் கொழுத்த குளிரே...

எழிலே... தழலே... நறுந்தளிர் முகையே... கறந்த வெம்பால் நுரையே... நுரைகெழு சுவையே... பனியே... பனிநனை புடவியே... ப்ரியே...

படர்க்கொடி நுனியாய்த் தத்தளிக்கும் என்னை அறியாயா... கருமையே கனிந்த வெம்மையே... என் விழிக்கெனவெழும் விழிக்கெனவழும் விழிக்கனவெழும் விழிக்கனவழும் ராக்காலங்களில் உலா வரும் புகைத்திரளே... ப்ரியே...


Wednesday, June 29, 2016

மனசின் நடையில் விரியா நீயும்... (A)

டிக்கட்டுகளில் மெளனமாக இறங்குகின்றது இரவு. வழியும் தென்றலில் உலவுகின்றது காதல். முகில் திரளில் கோடுகளாய் மின்னல். தொலைவுக் காற்றில் ஈரம்.

தோட்டத்தில் உறங்கும் குறும்பாடு. மதில் மேல் மதுக்குடுவை. இலைகளில் நழுவும் வெண்ணொளி. பனிச்சரங்கள் விளிம்பில் அரவம். வேர்களில் ஊடுறுவும் இளநீர். உறக்கத்தில் ஊர். வழி தவறும் மொழி. புலர்பொழுது யுகம். தடுக்கும் கிளை. கூர் கரை உடைப்பு.

ராக்கனவு. ரத்தம் சுவைக்கும் நடுக்கம். முதலை உண்ணும் இளம் கன்று. சிறை புகும் சிறுகுழல். பறை முழக்கம். பதியன் போடும் குருத்து.

விண் நிறை உயிர். சுருள் சுருள் அவிழ் தென்னை. இறைக்க ஊறும் கேணி. மறைந்தே கரையும் குயில். தூவும் மழைப்பன்னீர். குழையும் மண். குளிரும் இமை. மலை கிளரும் நிழல். பிணை கேட்கும் இணை.

புதிதாய் பூக்கும் புழு.

அசை. இசை. அசைக்கும் இசை. இசைக்கும் அசை. இசைக்கும் அசைக்கும் விழைவு.

பழைய விளக்கு. புதிய தீ. எரி குரல்.

புதரில் ஒளியும் மான்.  சிறகடிக்கும் கிளி. நடுங்கும் தொழுவம்.  தலைகீழ் பேரருவி. கடும்பாறை நனையும் கருமழை.  முழுநிலா நிழல்.

பொன் ஊறும் பழங்கள். தேன் விரவும் ரசம். காணா பயம். விழி ஒதுக்கும் நாணம். நாண் அதிரும் ஒலி. வினை நுட்பம். விருந்தில் பொங்கு தணல். மேல்மாட அன்னம். நுனி படர்க் கொடி.

மிகை நடத்தையில் மிளிரும் கர்வம். புனல் வழியில் நகரும் ஓடம். மிருதுவான முகத்தில் பதியும் முத்தம். மென்சூட்டில் பூக்கும் நாணம். நெற்றிக் கோட்டில் சொட்டும் வியர்வை. செவிமடல் சூட்டில் புருபுருக்கும்மென்மயிர். அனல் தீட்டும் ஓவியம்.

திரி கருக்கும் அகல் சுடர். சுடர் உமிழ் செம்மலர். மலர் நிறை ததும்பும் நுரை. நுரைத்துப் பொங்கும் வெண்பனி. பனி கரந்த நீள்விரல். விரல் தடவும் நாசி. நாசி நகரும் இருள். இருள் கொள்ளும் ஈருடல்.

பெருமூச்சு.

Thursday, June 23, 2016

விடுதளை நாள் விழா.


வெம்பாலை வாழ்வு.

பாலையில்
தனித்திருக்க
நேர்கையில்
வாளெடுத்து
நீ
சிரமறுத்துக்
கொள்ள மாட்டாயா?

***

வான் தீ
தின்னும்
முகிலின்
நிழல்கள்
நெளிந்தாடுகின்றன
கானலாய்!

***

பசி பிளக்கும்
ஓநாய்
பிணந்தேடும்
கழுகு
ஈரம் காய்க்கும்
வெக்கை
அடுக்கடுக்காய்
மணல்
நிழல் பதுக்கும்
என்னுடன்!

***

வெம்மை நிறைந்த
நீல ஆகாயம்
யாதுமற்ற
பாழ்வெளி
நச்சரவம் ஊறும்
செம்மணல்
விஷம் ததும்பும்
உயிர்க் குகை
தூரப்பச்சை
எங்கோ எனும் கனவு
வெம்பாலையில் தனித்த
வாழ்வு.

Thursday, March 31, 2016

கண்ணாடிச் சிறுமணிகள்.

கொஞ்சம் கவிழ்க்கப்பட்ட சதுரங்களாய் வெட்டப்பட்டுக் கோர்த்த சிறு கண்ணாடிச் சரங்களின் கீழே நிர்வாணமாய்க் காத்திருக்கிறாள் அவள். சிறு நெருப்புத் துண்டங்களாய் ஜ்வலிக்கும் அவற்றைத் தடவிக் கொண்டு செல்கின்றன வானப் பேரரசனின் ஒளிநகங்கள். அவளுடைய திரண்ட வனப்புகளின் மேல் பற்றியெரிகின்றன பார்வைகள். அவளை அணுகுகையில் தம் வேட்கையை, வெப்பத்தை, வியர்வையை தாமே காணும் யாரும் வியந்து பயந்து உடன் விலகுகின்றனர்.

அவள் நகங்களின் மேல் அரைத்துப் பூசியிருந்த கண்ணாடித் துகள்களைத் தம் கழுத்தின் அடிப்பாகத்தில் செருகிக் கொண்டு செந்நீரை வடிக்கத் துணிபவன் ஒருவனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள் அவள். வளைந்திளகும் செழித்திடையைச் சுழற்றிக் கோர்த்திருந்த கூர்நுனி மாவிலைத் தோரணங்களில் தம் சிலிர்த்துச் சீறும் நாகத்தை சிவப்பித்துக் கொள்ளும் முடிவினனைக் காணக் காத்திருக்கிறாள் அவள். இமை நுனிகளில் செருகி வைத்த துளிக் கூர்மைகளை மூச்சுக் காற்றில் உருக்கி வீழ்த்தி வீழ்பவனை, அனலாடிய ஓர் இரவின் மையத்தில் கண்ட கனவின் நினைவில் காத்திருக்கிறாள் அவள். தன்னை இறுக்கிச் சுழன்றிருக்கும் கண்ணாடி மணிகளைக் கவ்விக் கவ்விக் களைந்து, தன் மின்மேனி மேல் நில்லா நெடும்பயணம் செல்லும் பெரும்பயணியைத் தொலை வானின் பின்புறம் இருந்து வரும் நிறைந்த கருமுகில் கொண்டு வந்து சேர்க்கும் என்று காத்திருக்கிறாள் அவள்.