Showing posts with label ஏதோ நினைவுகள்.... Show all posts
Showing posts with label ஏதோ நினைவுகள்.... Show all posts

Thursday, July 12, 2018

நரகுசூழ் பாதை.

சிரிப்புகளாலும் மகிழ்ச்சிகளாலும்
நிரப்பப்பட்டிருக்கும்,
தன்னால் வெல்லப்பட
முடியாதவர்களின்,
தன்னை வென்றவர்களின்.

நுரைத்து நுரைத்தெழும்
ஆனந்தப் பேரலை
அடித்துக் கொண்டிருக்கும்,
தன்னை இகழ்ந்தவர்களின்,
வாயிலில் நிறுத்தித்
துரத்தியவர்களின்.

திருவிழாக்களும்
திசையெங்கும் வண்ணங்களும்
திரண்டிருக்கும்,
தினம் எண்ணிப் புகைப்போர்க்கும்,
கணம் கூட மறவாதோர்க்கும்.

கெடுநாற்றமும்,
வேகும் நெருப்புக் கொந்தளிப்பும்
மழைச்சாணிக் குழைசலும்
கூர் நுனிமுட்களும்
நிரம்பிய
புராணப் பாதைபோல்
இருக்கலாமெனில்,
அது மேலல்லவா,
வருந்திச் சிந்தக் கண்ணீரும்
தோள் வருடி ஆறுதலிக்க
இரு கரங்களும்
கூட கேள்!

சிலுவையிலிருந்து
பிய்த்தெடுத்து
வழிகுருதி துடைத்து,
நீட்டித் துயர் துடைப்பான்,
அவன்.

Thursday, March 23, 2017

அசோகமித்திரன் நினைவஞ்சலி.

மிழ் மொழியின் மிகச் சில பேரெழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன், இன்று மறைந்து விட்டார்.

தினொன்றாம் வகுப்பில் அரையாண்டில் நடந்த ஒரு பேச்சுப்போட்டியில் வென்றதற்காக புத்தகப் பரிசு கொடுத்தார்கள். அதை நானே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதால் ஒரு சனிக்கிழமையில் ஈரோடு வேலா புத்தக நிலையத்திற்குச் சென்றோம். அந்நாட்களில் நூல்கள் என்றால் ஈரோட்டில் வேலா மட்டும் தான். அவ்வளவு பிரபலம்.

அதிகம் விற்கின்ற பேனா, பென்சில், நோட்டுப் புத்தகம், சார்ட் பேப்பர், பாட புத்தகங்கள் என்று அடுக்கப்பட்டிருந்த தரைத்தளத்தின் மேலேறி முதல் தளத்திற்கு வந்தால் பொது நூல்கள். அலமாரிகளிலும் சுழல் அடுக்குகளிலும் நிரப்பப்பட்டிருந்தன. அங்கே இங்கே சுற்றிச் சுற்றி அலைந்து எதை எடுக்க எதை விடுக்க என்று ஆனந்தத்தில் திணறி, இறுதியாகத் தேர்ந்தெடுத்தது, ஒரு சிறுகதைத் தொகுப்பு.

70களில் வெளிவந்த சிறுகதைகளில் தமக்கு நன்றென பட்ட சிறுகதைகளைத் தொகுத்து ‘நவீனத் தமிழ் சிறுகதைகள்’என்று வெளியிட்டிருந்தார், அசோகமித்திரன். இன்றும் அப்புத்தகம் வீட்டில் இருக்கின்றது. நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு என்று நினைக்கிறேன். சாம்பல் நிற அட்டையில், ஒயிலாய் ஒரு பூச்செடி நின்றிருக்கும்.  அதைத் தேர்வு செய்து, கூட வந்திருந்த ஆசிரியரிடம் கொடுத்து விட்டேன்.

அரை நாள் பள்ளி முடிந்து, நடந்த கலை விழா நிகழ்வில் அப்புத்தகம் பரிசாக எனக்குக் கொடுக்கப்பட்டது. பள்ளியிலிருந்து வீட்டுக்குப் பதினாறு கி.மீ. பேருந்தில் அமர்ந்து படிக்கத் தொடங்கினேன்.

உண்மையில் சொல்லப் போனால், வயதுக்கு வருதலைப் போன்ற நிகழ்வு அது. அந்நாள் வரை துப்பறியும் கொலைக் கதைகளில் மட்டுமே ஊறியிருந்த ( நன்றிகள் : ஜி.அசோகன், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர்...) மனம் புது பரவசத்தைக் கண்டு கொண்டது.

’மருமகள் வாக்கு’ என்ற கிருஷ்ணன் நம்பி கதை தான் முதல் கதை. அங்கிருந்து துவங்கி, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்’, ‘எஸ்தர் - வண்ணதாசன்’, ‘தனுமை - வண்ணநிலவன்’, ‘நகரம் - சுஜாதா’, ‘நாயனம் - ஆ.மாதவன்’, ’தவம் - அய்க்கண்’, இந்திரா பார்த்தசாரதியின் ஒரு டெல்லிக் கதை, இறுதியாக அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’. மேலும் பல கதைகள். நினைவிலிருந்து மீட்டு எழுதுவதால், சில கதைகள் விடுபட்டிருக்கும். ஒவ்வொரு கதையும் மன உலகின் வாசல்களை ஒவ்வொன்றாகத் திறந்து விட்டன.

இப்படியெல்லாம் கதைகள் இருக்கின்றன, தமிழில் எழுதுகிறார்கள் என்று தெரிய வந்த ஆச்சரிய அனுபவம் அது. வீட்டிற்கு வருவதற்குள்ளும் வந்தும் மொத்தக் கதைகளையும் படித்து முடித்து விட்டுத் தான் மறு வேலை பார்த்தேன். இவ்வகையில் தலைப்பே போல், நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பரந்த அறிமுகத்தைக் கொடுத்த வகையில் அசோகமித்திரன், எனக்கு ஓர் காணா ஆசிரியர்.

18-வது அட்சக் கோடு’ என்ற நாவலை எதோ ஓராண்டு ஈரோடு நூல் அழகத்தில் வாங்கினேன். நீரொழுக்கு போன்ற கதை. அதிர்ச்சி சம்பவங்களோ, தடாலடி திருப்பங்களோ, உணர்ச்சிப் பிழம்பாறுகளோ எதுவுமே இல்லை. கதை, அது பாட்டுக்குப் போகின்றது. சந்திரசேகரனின் கதை. கடைசி நிகழ்வு வரை மெதுவாக, மிக மெதுவாக டெம்போ ஏறிக் கொண்டு சென்று, சந்திரசேகரன் தன்னைச் சூழ்ந்தெரியும் அரசியல் அனலை அறிந்து கொள்ளும் முடிவில், மனம் கனம் கொள்கின்றது. ஜெயமோகன் தன் தளத்தில் இந்நாவல் பற்றிய ஆர்.வி.யின் கேள்விக்கு அளித்த விளக்கமும், பதிலும் அட்சக்கோட்டை புதுப் பார்வையில் காண வைத்தது.

ற்றன் நாவலையும் ஒருமுறை சென்னை நூல் அழகத்தில் தான் வாங்கியிருந்தேன். அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்கள் மாநாடு. தனித்தனிக் கதைகள் போல் தோன்றும் இக்குறுநாவல் அவ்வாறல்ல் என்றே தெரிந்தது.

ஜெயமோகனை அவரது இல்லத்தில் சந்திக்கச் சென்ற போதும், அவர் நினைவு கூர்ந்து சொன்ன கதையும் அசோகமித்திரனின் கதை தான். திருப்பம் என்று தலைப்பு என்று நினைக்கிறேன். கியர் மாற்றக் கற்றுக் கொள்ள முடியாமல் திணறும் க்ளீனர் பையன், சட்டென ஒரு கணத்தில் கிளட்ச் போடும் லாவகத்தைக் கற்றுக் கொள்கிறான். ஓர் அறிதல். இனி அவன் பழைய ஆள் அல்ல. ஒரு புது அறிதல் அவனுக்கு கிடைத்து விடுகின்றது.

இப்படி, ஓர் கண நேர அறிதலை அளித்த ஆசிரியர் அசோகமித்திரன் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

தமிழுக்குத் தொண்டு செய்வோன் மறைவதில்லை;

வாழிய நீர் என்றும்,  எம் மொழியில், எம் சொல்லில், எம் நினைவில்!

Thursday, March 31, 2016

தற்கொலைக் குருவி.


ரு சிட்டுக்குருவி தன்னைத் தானே இழப்பதற்கு முன் என்ன சிந்திக்கும்? தன் துளி அலகால் நெடும் பனையைக் கொத்திக் கொத்தி அலகுடைந்து சுழன்று வீழும் போது, மண்ணில் அது தின்ற நெளியும் புழுக்களை நினையுமா? சிறு தலையை, எதில் கொண்டு போய் மோதிச் சிதறடிக்கும்? பனித்தூவல்களாலான செம்பழுப்புச் சிறகுகளை எந்த நெருப்பின் பசியில் எரித்தடக்கும்? தனித்திருக்கையில் திரும்பித் திரும்பி நீவிக்கொண்ட முதுகை எக்கூர்முனை கிழித்துப் பின் பிளக்கும் என்பதை என்றேனும் ஒரு கனவில் கண்டிருக்குமா? சிறு குருவியின் சுற்றம் மென்புழுதி வயலில் அதற்கென ஒரு குறுநிலம் கணடு வைத்திருப்பரா?

'எடுத்ததொரு கோலம்; கொண்டதொரு வாழ்வு; தின்றதொரு தீ' என்று பாடிக் கலைந்த பின் அந்த வெறும் வெளியில் விளையும் மாயக்கனிகளில் ஒன்றென அக்குருவி மீண்டும் உயிர்த்து, தன் பொய்க்கூட்டைக் களைந்த திசையிலிருந்து விடுபட்டுத் திரும்புமா தன் மெய்யிடம்?

தோழியரும் தோழர்களும் உதிரத்தின் வெம்மைத்துளி வழி உறவில் தொடர்ந்தவரும் தீண்டாத் திக்கில் நிழல் சிறகுகளை உதறிக் கொண்டு, மணிக்கண்களை மின்னிக் கொண்டு பறந்து சென்று மறையுமா இச்சிறுகுருவி?

Tuesday, March 15, 2016

சிவப்புக் கோடு.

ரு
மெல்லிய
அழுத்தமான
ஆழமான
சிவப்புக் கோடு போதும்,
அனைத்திலிருந்தும் விடுபட.
எழுதத்தான்
தைரியம்
இன்னும் கொஞ்சம்
தேவைப்படுகின்றது,
கொஞ்சமே
கொஞ்சம்..!

Thursday, January 31, 2008

எண்ணங்கள்....

ந்த எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றதென யோசிக்கிறென்.

இன்று இதெல்லாம் தான் எழுத வேண்டும் என்று துண்டுச் சீட்டில் குறித்து வைத்து, டெக்னோபார்க்கை விட்டு வெளியே வந்து சாலையைக் கடக்கையில் நிமிர்ந்து பார்த்தால், இயேசு அழைக்கிறார் ரேஞ்சில் ஒரு போஸ்டர். அதில் அவர் இரு கைகளையும் விரித்து நம்மை அழைக்கிறார். அது அப்படியே ஓர் இயக்குநர் கைகளை விரித்து பார்ப்பது போல் தோன்றி, ஒரு கதை உருவாகி, எழுதி விட்டேன்.

அப்படியென்றால் அந்த கதை இவ்வளவு நாளாக ஏன் தோன்றவில்லை? ஏன் இன்று அந்த போஸ்டரைப் பார்த்தவுடன் தோன்ற வேண்டும்? உண்மையில் அது 'தோன்றியதா'? இல்லை என்னுடனே அது இவ்வளவு நாளாக இருந்து, நான் தான் அதை கவனியாமல் இருந்து விட்டேனா?

அந்த போஸ்டர் ஒரு விளக்கு போல் அந்த எண்ணத்தைக் காட்டியதா?

நிஜத்தில் எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன? ஏன் எனக்கு வருகின்றன? என்னால் மட்டும் எப்படி இப்படி கதைகள் எழுத முடிகின்றது? என்னால் ஏன் மோகன் தாஸ் சார் போல் அற்புதமாக எழுத முழிவதில்லை? டுபுக்கு சார் போல் நகைச்சுவை துளியும் வர மாட்டேன் என்கிறதே, ஏன்?

ஏன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் மட்டும் வருகிறது?

எண்ணங்கள்...எண்ணங்கள்...

வாழ்க்கையின் வரி வடிவங்கள்.

பெரும்பாலான மொழிகளுக்கு வரி வடிவங்கள் உள்ளன.

வாழ்வின் வரி வடிவம் எது என்று தெரியுமா..?

இந்த படங்கள் சொல்லலாம், அதை...!

நன்றி : http://www.thespiderawards.com/2007presentation/photoshow/winners/26_portfolio/thumbnails/01-1_hardy-julio_old%20portraits%20of%20old%20people%201.jpg



நன்றி : http://brianmpei.files.wordpress.com/2007/06/old-man.jpg



நன்றி : http://newsimg.bbc.co.uk/media/images/41934000/jpg/_41934092_ice_cream_416afp.jpg



நன்றி : http://www.worldproutassembly.org/images/old-woman-100.jpg



நன்றி : http://www1.istockphoto.com/file_thumbview_approve/2571363/2/istockphoto_2571363_poor_old_men.jpg

11 மணி வெயில்.



நிறங்கள் மனிதர்களுக்கும் அவர்களது மனங்களுக்கும் மட்டுமே சொந்தமல்ல. வெயிலுக்கும் பல நிறங்களும், மணங்களும் வயதும் உண்டு.

காலையில் தொடங்கும் வெயிலுக்கு இனிய மணம் உண்டு. இரவின் மெல்லிய பனிப் படலத்தை உறிஞ்சிக் கொண்டு, இளஞ்சூட்டைக் கொடுத்து விழிக்கச் செய்யும் வெயில், கொஞ்சிக் குலாவும் குழந்தையைப் போல்..!

மதியம் 12 மணிக்கு அடிக்கின்ற வெயில் காற்றின் ஈரத் துகள்களைத் தின்று விட்டு விஸ்வரூபம் எடுக்கும் இளைஞனின் வலிவுடன் தன் முழு ஆதிக்கம் செலுத்தும். இதன் மணம்
வறண்ட காற்றில் அலையும் தூசியைப் போல் புழுங்கச் செய்யும்.

மாலையில் எதிர்த் திசையில் இருந்து வீசுகின்ற ஒளித் தீற்றல்கள் நீண்ட நிழல்களை உற்பத்தித்து விட்டு, மெல்ல மட்கிப் போம். இதன் மணம் மீண்டும் தலையெடுக்கும் ஈரம்.

இந்த வயதின் மாறிகளுக்கு இடையே, மாறுகின்ற நிலைகளில் இருக்கின்ற வெயிலின் பரிமாணங்கள் வியப்பிற்குரியன.

இந்த வெயில்களின் என்னை மிகக் கவர்ந்தது 11 மணி வெயில்.

இது வளர்பதின் பருவ (Adolescent) வெயில் எனலாம். மெல்லிய சூட்டில் இருந்து, வலிமை பெற்றுக் கொண்டிருக்கின்ற தருணம் இது.

மந்தமான பல காலங்களில் இந்த 11 மணியும் ஒன்று.

நான் கண்ட சில பொழுதுகள்.

விரிசல்கள் வழியே மெல்லக் கசிந்து கொண்டிருக்கும் வெயிலின் கீற்றுகள் மேலே விழ சோம்பலாய் இயக்கம் கொள்ளும் வட்டாச்சியர் அலுவலகம் முன், ரேஷன் கார்டுக்காகக் காத்திருக்கையில், அரைக்கைச் சட்டையின் விளிம்புகள் வழி வியர்வையை வழியவிட்டது ஒரு நள்.

அரை நாள் வழியே செல்லும் பயணங்களில் நகரவே நகராத காலத்தின் முட்களில் உட்கார்ந்து கொண்டு பழிப்புக் காட்டும் ஒரு நாள்.

பகல் நேரப் பயணங்கள் கொல்கின்ற காலங்களில் நசநசக்கும் ஈரத்துடன் புஸ்புஸ் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு தூரே தெரிகின்ற மொட்டை மலைகளையும், ஆங்காங்கே தென்படும் தீய்ந்த பனை மரங்களையும் காட்டிச் செல்லும் ஒரு நாள்.

பஸ் பாஸ் எடுக்க டிப்போ சென்று கூட்டத்திற்குள் வரிசையில் நின்று, ஒவ்வொரு அடியாக நகர்கையில் டீசலின் நெடியோடு தாண்டிச் செல்லும் அழுக்குடைத்த பேருந்து வாரி இறைத்துச் செல்லும் அப்போதைய நொடிகள் வரை சேர்த்து வைத்திருந்த சூட்டை..!

காலத்தின் கரிய கரங்களில் சிக்கியிருந்த நாட்களில் காலை உணவையும், மதிய உணவையும் கலந்து உண்ண நேரம் கொடுத்தது அந்தப் பதினொன்று மணிப் பொழுதுகள்...!


Get Your Own Music Player at Music Plugin

வணக்கம் சொல்லித் துவங்க இது என்ன சொற்பொழிவா?



தாவது ஒன்றை எழுதத் தொடங்க வேண்டும். என்ன என்று தோன்றவில்லை.

விரைந்து பாயும் மேகங்கள் போன்று மறைந்து கொண்டே இருக்கின்றது காலம். அதற்குள் என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதற்குள் அந்த நேரமும் மறைகின்றது.

ஏதேதோ நினைவுகள் தோன்றிக் கொண்டே இருக்கின்ற மனதில், தோண்டத் தோண்ட ஊறிக் கொண்டே இருக்கின்றன பற்பல எண்ணங்கள். அவற்றைப் பந்தி வைக்க முடியுமா?

அவ்வப்போது உள்ளூறும் நினைவுகளை இங்கே களம் இறக்கி வைக்கின்றேன்.

இன்னும் எழுத இருக்கின்றன ஆயிரம் கதைகள்...!

,,,,,,,,,,,, இந்த காற்புள்ளிகள் வரிசையாகச் செல்லும் எறும்புகள் போல் இல்லை...?