Monday, February 02, 2015

வாழ்த்து.


ளியவர்கள் அவர்கள் எளியவர்கள் என்பதாலேயே எப்போதும் பெருங்கூட்டத்துடன் இணைந்து செயல்படுவார்கள். அவ்வாறு இணைதலுக்குப் பின் தங்களது சுயநலங்களைப் போர்த்தி வைத்துக் கூச்சலிடுவார்கள். அவர்களுடைய இணைவு, சூதாட்டத்துக் காய்களின் இணைவு ஒவ்வொரு நகர்த்தலுக்கும் மாறிக் கொண்டே இருப்பது போல் தெளிவாகத் தெரியும். கண்கள் வழியில் விரைந்து கணிக்கத் தெரிந்தவன், கணிக்கக் கற்றவன் அடுத்த நான்கு வெவ்வேறு அமைப்புகள் எவ்வாறு இருக்கும் என்று உருவாக்கிக் கொண்டே இருப்பான்.

வலுத்தவர்கள் எப்போதும் தனித்தவர்கள். அவர்களுக்குள்ளும் கூட்டங்களில் அவ்வப்போது கூடிக் களித்திருந்தாலும், அவர்களுடைய இணைவு திருவிழாக் கூட்டத்தில் நெரிசலிடும் மக்களைப் போல, ஒவ்வொரு நகர்வுக்கும் வேறுபாடே தெரியாது. ஆனாலும் அங்கும் ஒரு கணத்தில் இருந்த தொடர்பு, மறு கணத்தில் வேறொன்றாகி இருக்கும். அந்த வேறுபாட்டை அளக்கத் தெரிந்தவன், அளக்கக் கற்றவன் ஒவ்வொரு உடலும் எந்த கணத்தில் எங்கு இருந்தது, அடுத்த நான்கு கணங்களில் எங்கு இருக்கும் என்று உருவகித்துக் கொண்டே இருப்பான்.

வலுத்தவர்கள் எளியவர்களைத் தம் விருப்பங்களுக்கேற்பவும் வலிமைக்கேற்பவும் அணைத்தும் அகற்றியும் விளையாடிக் கொள்ளுதலே விழைவு. எளியவர்கள் வலுத்தவர்களைத் தம் தேவைக்கேற்பவும் எண்ணிக்கைக்கேற்பவும் நெருங்கியும் நெருக்கியும் விளையாடிக் கொள்ளுதலே சூழ்.

எளியவர்கள் வலுத்தவர்களாக ஆகுந்தோறும் தாங்கள் தனித்தவர்கள் என்று எண்ணத் தொடங்குவர். அதுவரை தாம் ஆடிவந்த பகடை ஆட்டத்தில் இப்போது தாம் எதிர்ப் பக்கத்தில் அமர்ந்திருப்பதை அவர்கள் அறியும் முன்னம், அவர்களை ஆட்டத்திலிருந்து விலக்கி விடுபவனே தொடர்ந்து அந்த ஆட்டத்தின் கள நிர்ணயிப்பாளனாகவும் முடிவிலாது நடக்கும் விதி மாறுதல்களில் மாறாதிருப்பவனாகவும் முடிவை நெருங்குந்தோறும் திசைகளைத் திருப்பி விடுபவனாகவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறான்.

இந்த அலகிலா ஆடலின் நாயகன் முக்கண்ணனை வணங்குவோம்.”

“ஓம்..! ஓம்...! ஓம்...!”


”காற்றின் ருசி ஓசையில் இருக்கின்றது. ஓசையைக் கேட்கும் மனமில்லாதவர்க்கு அந்த ருசி கிடைப்பதில்லை. ஓரிடத்திலிருந்து அள்ளி வரும் ஓசையை ருசிப்பவர் நெஞ்சிலே இறக்கி வைத்து விட்டு காற்று விடுபடுகின்றது. பின் அந்த ஓசை அங்கே வித்தாகி முளைத்துக் கிளைத்துப் பேருரு கொண்டு விருட்சமாகின்றது.

ஓசையின் சுவை கேட்பவரின் சொல்லிலே இருக்கின்றது. விதைந்த ஓசை வெளி வரும் சொல்லில் சுவைத்தவரின் இச்சை வெளியாகின்றது. அவ்விச்சை தன்னைக் காட்டிக் கொள்வதன் அகங்காரம் வழியாக மேலும் ஓருரு கொண்டு காற்றில் மிதந்து மற்றொருவரை அடைகின்றது.

ஓசையற்ற பெரும்பாழில் அமைதியின் கூடு உள்ளது. அங்கே தன்னைச் சுருட்டித் தானும் துயில்கின்ற நீலநீர்வண்ணனை வாழ்த்துவோம்.”

“ஓம்..! ஓம்...! ஓம்...!”


“யாதுமற்ற சூன்யவெளி தன்னைத் தான் அறிதல் பொருட்டுத் தான் என்பதை உணர்ந்தது. உடனே தான் அல்லாத பிறன் என்பதைப் பிரித்தது. தானே தானும் தானே பிறனும் என்பதை உணர்தலுக்குள் இருந்த இடைவெளி காலம் என்று உண்டானது. காலம் தொடர்ந்து வளரத் தொடங்கியது. இரண்டு நிலைகளுக்குமான இடைவெளி அப்படியே விரிந்தது. அங்கே உருவான பிறனின் தான் தன் முதல் உதிர்ச் சொல்லாக ‘அம்மா’ என்று அழைத்தது. தான் தான் தன் தாய் என்பதை நினைவில் நிறுத்தியது. இரண்டுக்கும் இடையேயான விரிதல் மேலும் மேலும் நிகழ்ந்தது.

பிறன் மீண்டும் தன்னை அடைதல் பொருட்டு தான், தீரா மார்புகளாலும், குன்றா விழிகளாலும், திரும்பா விரல்களாலும், சுழிக்கா பாதங்களாலும் தன்னை ஆக்கிக் கொண்டது. காலத்தின் இடையே நின்ற ’காளி’ என்றானது. தாமரை ஒரு கரம் தாங்க, சூலம் மறு கரம் கொள்ள, அபயதரிசனம் ஒரு கரம் காட்ட, அருள் பொழிதலை ஒரு கரம் செய்ய அவள் மாவுரு கொண்டாள். அவள் நின்ற கோலம் விண்ணை நிறைத்தது. அவள அமர்ந்த கோலம் மண்ணை நிறைத்தது.

அவள் காமரூபிணி; செளந்தர்யசுந்தரி; அவள் காலவாஹினி; தூயஸ்வரமோஹினி; நிர்வாணபயங்கரி. அந்த அன்னையைத் துதிப்போம்.”

“ஓம்..! ஓம்...! ஓம்...!”


”மண்ணில் நெருப்பு ஒன்று தன்னை நிறுவிக் கொள்ள கரணியொன்று தேவைப்படுகின்றது. அது விழுந்த பிணமோ, வீழ்ந்த மனமோ, சரிந்த நாடோ, உளுத்த மரமோ. ஆனால் தன்னைத் தானே அறிந்து தானே சுழன்று தன்னில் மூழ்கி தன்னில் நிறைந்து பிறிதொன்றின் துணையொன்றும் கொள்ளாமல் எரிந்து கொண்டிருப்பவன் கதிரவன்.

மண்ணில் நீர் ஒன்று தன்னை நிறைத்துக் கொள்ள வழியொன்று தேவைப்படுகின்றது. அது படர்ந்த நதிப்பெருக்கோ, சுழித்த அருவிச்சாரலோ, திரண்ட குளமோ, உவர்ந்த பேராழியோ. ஆனால் தன்னைக் குறுக்கித் தன்னில் குளிர்ந்து தன்னைச் சுவைத்து பாதையொன்றின் தடமில்லாமல் நகர்ந்து கொண்டிருப்பவன் முகிலன்.

தன்மயக் குளிரும் தன் மையத் தகிப்பும் ஒன்றையொன்று சூழ்ந்து ஒன்றில் ஒன்றை நிரப்பி கொதிப்பும் தணப்பும் இணைந்து புணர்ந்த புகைமண்டலமே தனக்கென்று உருவற்ற உருவின் உயிர்களாய்த் தன்னைப் பங்கிட்டு தானும் தீராமல் மிதந்து கொண்டிருப்பவன் வாயு.

இம்மூன்றையும் சுமந்து அனைத்து களியாட்டங்களையும் அனுமதித்துத் தன்னில் நிகழ்த் தொடர்களைக் கண்ணுற்று நிகழ்பவன் பூமி.

பல்லாயிரம் கோடி கதிரவன்கள், பலநூறு கோடி முகிலன்களைப் புசித்துப் பிரித்துச் சேர்த்து வர்ணங்களால் இருளை நிரப்பி, ஆக்கியும் அழித்தும் அழித்தவற்றை ஆக்கியும் ஆக்கியவற்றை நிர்மூலமாக்கியும் நில்லா வெளியில் இல்லாதிருப்பவன் விண்.

பிசைந்து வைத்த கல் மேலே தெய்வங்கள் குடியேறுகின்றன. இவ்வைந்து பேராற்றல்களும் கலந்த தம் பல்கோடி வகைமுறைகளில் மீச்சில துளிகளான நம்மில் இவ்வைவரும் தத்தம் போக்கில் தம்மை நிகழ்த்திக் கொள்ளட்டும்.”

“ஓம்..! ஓம்...! ஓம்...!”