Saturday, August 04, 2007

இருந்திருக்கலாம்.


தழ்கள் ஈரத்தோடு மினுமினுக்க, மென் சூட்டில் அலைகின்ற மூச்சு மெல்ல உரசிக் கொண்டிருக்க, நெருங்கி வந்து நீ கொடுத்தாய் ஒரு முத்தம். அவனுக்கு ! என் ஜீவனெல்லாம் உறைந்து போனது.

முகத்தை இழுத்துப் பிடித்து, கண்களைத் தடவுகிறாய். நாசியைப் பிடித்து இழுக்கிறாய். பவள வாயின் உதடுகளை ரசிக்கிறாய்.

கன்னங்களை நிரப்புகிறாய், உன் முடியாத முத்தங்களால்.

சிணுங்கி நகரும் அவனை இழுத்து, உன்னோடு அணைத்துக் கொள்கிறாய்.

கண்டபின் தோன்றுகிறது, உன் கணவனாய் இருப்பதை விட, மகனாய் இருந்திருக்கலாம் என்று...!

Monday, July 30, 2007

உன் பந்தம்.

மீபத்தில் கண்டு, கேட்ட அண்ணவரு இராஜ்குமாரின் அற்புதப் பாடல் :




அட்மிஷன்.


ன்று தான் நடராஜன் முதன்முதலாக கல்லூரியில் அட்மிஷனுக்கு வந்திருந்தான். அவனுக்குப் பெற்றோர் இப்போது இல்லாததால் அங்கே வேலை பார்க்கும் பொன்னையன் பேராசிரியர் தான் அவனை அங்கே சேர்ப்பிக்கக் கூட்டி வந்துள்ளார்.

"கொஞ்ச நேரம் இங்கேயே இரு! நான் வந்து விடுகிறேன். யூனிபார்ம் கொண்டு வந்து விட்டாயா?" என்று கேட்டு விட்டு, அவனை கரஸ்பாண்டெண்ட் அறை வாசலில் அமர்த்தி விட்டுச் சென்றார்.

ஸ்கூலில் தான் யூனிபார்ம் என்றால், இங்கேயுமா? கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தான் போல் என்று எண்ணியவாறு நின்றான்.

வருவதும், போவதுமாய் இருந்த சீனியர் மாண்வர்களைப் பார்த்ததும் இவன் எழுந்து நின்று வணக்கம் சொன்னான். அவர்கள் இவனை சற்றும் மதிக்காமல் சென்று கொண்டே இருந்தனர். 'இருக்கட்டும்! நானும் இங்கே சேர்ந்து ஒரு வருடம் ஆகி விட்டால், நானும் சீனியர் தான்!' என்று எண்ணினான்.

சிறிது நேரத்தில் பொன்னையன் வந்தார்.

"நான் கரஸ்பாண்டெண்டிடம் பேசி விட்டேன்! அவர் இன்று முதலே உன்னைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி விட்டார்! யூனிபார்மை அணிந்து கொள் !" என்றார்.

ஹூம்! பள்ளியில் இருக்கும் போது தான் யூனிபார்ம் என்று கடுப்படித்தார்கள்! கல்லூரியிலுமா? வெறுப்புடனே அவன் கொண்டு வந்திருந்த காக்கி உடுப்புகளை எடுத்துக் கொண்டான், பியூனாகச் சேர்ந்துள்ள நடராஜன்!

2003-ம் ஆண்டின் ஏதோ ஒரு நாளில் எழுதிய சிறுகதை இது! அதுவரை கவிதைகளில் மட்டுமே கால் பதித்திருந்தவன், கதைகள் பக்கமும் திரும்புவதற்கு ஆரம்பமான கதை இது..!

Sunday, July 29, 2007

என் நண்பனே..!


னக்கான எல்லைகளில் உனக்கான என் முகங்களை நட்டு வைத்துள்ளேன். எல்லை தாண்டி எட்டிப் பார்க்காதீர். எதிர்பாராத நிறங்களில் எல்லாம் என் முகங்கள் எதிர்படலாம். எனவே எல்லைக்கப்பால் எட்டியே நில்லுங்கள்!

என் உலகத்திற்குள் உலவப் பார்க்காதீர்! உள்ளும் புறமும் பூவும், முள்ளும் பூசியிருக்கின்ற உங்களில் ஒருவனாய் என்னை உணரப் பார்க்காதீர்.

என் உலகமே வேறு!

அங்கே தேவதைககள் பொன்னூஞ்சலில் ஆடிக் கொண்டிருக்க மாட்டார்கள்! ஒரு தேளின் கொடுக்கின் நுனியில் துள்ளிக் கொண்டிருக்கும் விஷத் துளிகள் வெடிக்கத் துடிப்பது போல், என் வார்த்தைகள் விசையுடன் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

உங்கள் உதடுகளில் தேன் தடவினாலும், உள்ளே உறுமிக் கொண்டிருக்கும் சொற்களின் கசப்பை எப்படி மறைப்பீர்? ஒரு நத்தையின் ஓட்டுக்குள் நசுங்கிக் கொண்டிருக்கும், அதன் உடல் போல், உங்கள் சொற்கள் உங்களுகுள்ளேயே உலாத்திக் கொண்டிருக்கின்றன.

ஒரு பேயிருட்டின் கரிய இருள் உங்கள் மீது கவிந்து வருகையில் என்ன செய்கிறீர்கள்? கண்களை இறுக்க மூடி அந்தகார இருளை உங்கள் உள்ளுக்குள்ளும் உள்வாங்கிக் கொள்கிறீர்கள்.

வெம்மையே உங்கள் மேலும், உள்ளும் பூசிக் கொள்கிறீர்கள்.

என் நண்பனே!

மெளனத்தோடு மட்டுமே, நீ உரையாடிக் கொண்டிருக்கையில் ஒரு நலம் விரும்பி உள்ளான் என்பதை மறந்து விடாதே!

உன் வெளிச்சப் பொழுதுகளில் உன்னிடமிருந்து நான் வேறாகிறேன்! உன் இருள் நேரங்களில், உன் வாழ்விற்காக நான் வேராகிறேன்.

உன் கண்ணீரை நீக்கும் விரல் ஒன்றை நீட்டாமல், உன் கவலையைத் தடவும் குரல் ஒன்றைக் காட்டாமல், உன் கண்களில் வாழ்கிறேன்.

எழுதியது : 25.மே.2004.