Friday, September 19, 2008

இரவின் குளிர் ராகம்.



மென்மையான குளிர் ஒன்று தன் பட்டுச் சிறகுகளை விரித்து பறக்கிறது. சின்னச் சின்ன குரல்களை அடைகாத்து வைத்திருக்கும் நதிக்கரையோரம், வண்ண வண்ணப் பூக்களை வளர்த்து வைத்து, தலையசைத்துச் சிரிக்கும் மலர்த் தோப்பு, பொட்டுத் துளி ஒளி சிமிட்டும் கோயில் விளக்குத் தூண்... எல்லாப் பக்கமும் நகர்ந்து செல்கிறது.

மயில் இறகே, குயில் ஒலியே, மழைக் குளுமையே, நிழல் அருமையே என்று சதா சர்வகாலமும் ஜபித்துக் கொண்டிருக்கும் ஒரு காதலனின் மூடிய இமைகளின் வழியே ஊடுறுவுகிறது. துடித்துக் கொண்டிருக்கும் சிவந்த இதயத்தின் அருகில் சில நொடிகள் இருந்து கேட்கிறது. அவளது பெயரையே ஆயிரம் ஆயிரம் ஜென்மங்களாய் உச்சரிக்கும் ஓர் உயிரின் பெருங்காதல் அவஸ்தையை அள்ளிக் கொள்கிறது.

இவனது நிறைய நிறைய பிறவிகளின் அமுதம் வழியும் அன்பை கொள்ள வேண்டிய அவளைத் தேடிப் பறக்கின்றது.

கோடானு கோடி அண்டம் பேரண்டம் முழுதும் நிறைந்து வழிந்து ததும்புகின்ற விண்மீன்கள். விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டி ஒளிப் பிரவாகத்தைத் துளித் துளியாய்ச் செலுத்துகின்றன. கரிய இருளோடை வியாபித்திருக்கும் பிரபஞ்சத்தின் அகண்ட வானவெளியெங்கும் பூத்திருக்கின்றது குளிர்.

அவள் பனிப்பாறைகளின் படுக்கைகளில் புரள்கிறாள். ஆழ ஆழிக் கரைசலின் உச்சம் போன்ற கரும்பாம்புகள் திரளும் கூந்தலின் நுனிகளில் பனித்துகள்கள் சொட்டுகின்றன. மலர்கள் பூத்திருக்கும் தோல் துளைகள் வழியாக வாசனை நிறைந்த ஒரு பாடல் வெளியேறும் போது, மெளனத்தின் மிருதுவான போர்வையைப் போர்த்திக் கொள்கிறாள். யுகம் யுகமாய் நிரம்பி அழிந்து பின் துளிர்க்கும் இரகசியம், அவளது விழிகளின் வெம்மையால் மட்டுமே வாழ்கின்றன. அவளது விரல்கள் நட்சத்திரங்களைத் தடவும் போது, நகங்களில் இருந்து நழுவுகின்ற ஏதோ ஒன்று சந்தியில் அடிவானெங்கும் விரைகின்ற ஆகாயச் சிவப்பின் நிறப் பூச்சை முலாமிடுகின்றன.

ஊழிக்காற்று அவள் மீது உரசிப் போகின்ற போது, ஆடைகள் என்னும் அநாவசிய அலங்காரம் கலைந்து, காற்றோடு கரைந்து அபூர்வமான, நிஜமான பேரெழில் ப்ரசன்னமாகின்றது. பொன் தோல் ஒளியால் ஜொலிக்கட்டும். காது மடல்களில் பூத்திருக்கும் சின்னஞ்சிறு முடிகள் சிலிர்க்கட்டும். பூக்களின் வரைதலின் பொருட்டு மட்டும் நொடிக்கு நொடி புதிதாய் பிறப்பெடுக்கும் அவளது பாத கணுக்களின் மேல் அகங்காரத்தோடு, ஆணவத்தோடு, இறுக்கமாய், கொடிகள் பின்னிக் கிடக்கட்டும்.

திரட்சியான பளிங்கு உருகி ஊற்றி கனமாகி, கடிது வார்த்து உயிர் தொட்டு உருவாகி, இமை பிறந்து, இதழ் திறந்து, சிவந்த தன் ஈர அதரங்களால் அவன் பெயரைக் கூறும் போது, தென்றலே அவன் இதயத்தில் இருந்து உருவிக் கொண்டு வந்த மெய்க் காதலை மொழி!

இருட்டின் இடை மேல் ஏறி அமர்ந்து கொண்ட இசையா? நாள் பொழுதின் நகரா நேரங்களின் நாதமா? மாலை மங்கி வரும் போதும், இரவின் மிகைக் கிரணங்கள் தன் வழி தேடி கரங்கள் வீசும் போதும், நூலெடுத்து, வானம் வரை நின்று அளக்கும் அமைதியா?

ஓ...! ஜன்னல்களின் ஸ்பரிசங்கள் மழை பெய்யும் நேரங்களிலும், மின்னல்களின் மிரட்டல்கள் விழிகள் சந்திக்கும் போதும் நிகழக் கூடும் போது, பொன்னழகே, போதாக் குழைவே, இன்னிழலே, இணைகின்ற இருமலரே என தென்றல் கூவுகின்றது.

வெண் பட்டுத் தூரிகையின் வெள்ளி நார்கள் வர்ணச் சொட்டுகளைத் தொட்டு, பொட்டிட்டு, களைத்து, கவிழும் போது, ஓர் ஓவியம் தன் உயிர்ப்பைக் கண்டு கொள்கிறது. ஜரிகை வளைத்த ஆடைகளின் எல்லைகளில் இருந்து தேனோடும் இனிமையான பாதை நோக்கி, வரிசை கட்டிப் பாய்கிறது பாட்டொலி.

மிகைப் புன்னகை, மிளிர்கின்ற புருவச் சுழிப்புகள், இமைகளின் இடைவிடாத இதழ் முத்தங்கள், சிவந்த இரத்தம் பொங்கிப் பாயும் அதரங்கள் கசிகின்ற, ஜீவனைப் பிடித்து வைத்திருக்கும் வார்த்தைகள்.

மஞ்சள் வர்ணம் முதுகில் சுமந்த புகைக் காற்று, தன் ஊஞ்சலின் உள்ளிருந்து அவன் காதலை எடுத்துக் காட்டுகிறது. ஏதோ ஒரு பிரதேசத்தில் இருந்து எப்போதோ விசிறிய ஒரு மயிலிறகை, மறைத்து வைத்து, இன்றோடு உன் கைகளில் திணிக்க வருகின்றது. இடை கூட ஒரு பூக்கோலம் போட்ட குறு அழகாய் குவிந்திருக்க, ஆதிக் குளிரின் அத்தியாவசிய மிச்சங்கள் இடை வழி உறிஞ்சும் இரத்தப் புள்ளிகளை!

முத்தமிட்ட ஒரு நொடியில், உறைகின்ற இறகுகள் மீண்டும் இயக்கம் பெறும் மற்றொரு நொடிகளில், இயல்புகள் கலைந்து போய் பறத்தலுமாய், மிதத்தலுமாய், கால்கள் பதியாமல், கடக்கின்றான் வெகு தூரங்கள்.தொலைவில் ஓர் உயிர்த் துடிப்போடு சுடர் விடும் விளக்கிடம் கேட்க வேண்டி சில கேள்விகள் மிஞ்சி இருக்கின்றன் அவனுக்கு!

இதழ் துடிக்க, வியர்வைப் பருக்கள் கன்னத்தின் பிம்பங்களை பதிந்து காட்ட, முகத்தில் பதித்த ஒரு கணம், சூடான திரை ஒன்று மூடிக் கொண்டது நாடகத்தின் இறுதி போல்!

அவன் இன்னும் ஜெபிக்கிறான். அவள் தன் நீளப் பொற்கரங்களால் நீவிக் கொண்டே இருக்கிறாள் தன் கைகளுக்கெட்டும் பாதரசத் துளிகளை!

தென்றல் இன்னும் பயணம் செய்ய வேண்டி இருக்கின்றது!

***

படத்தை க்ளிக்கி இன்னும் சிறப்பாக பார்க்கலாம். ப்ளாகர் GIF ஃபைலை அதன் மாயாஜாலங்களோடு காட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றது.

இப்படத்தை இறக்கி வெகு நாட்களாகி விட்டதால், எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலை இட முடியவில்லை. யாராயினும் நன்றிகள் உரித்தாகுக..!

Thursday, September 18, 2008

பாடல் தொகுப்பு.

ன்று திடீரென்று பழைய பாடல்கள் கேட்க வேண்டும் என்றார்ப் போல் தோன்றியது. நீங்களும் கேளுங்களேன்.







என்னா ட்ரான்ஸ்லேஷன்..? ஐயா, மொழிபெயர்த்த புண்ணியவானே! எங்கே ஐயா இருக்கிறீர் நீர்..?



இப்படி எல்லாம் பாட வேண்டும் என்று நினைப்பு தான். ஆனால் நிலைமை..?

ஒன்று, இப்படி இருக்கின்றது.



இல்லையென்றால், இப்படி ::



என்ன தான் செய்வது..? குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புறப் படுத்து விட வேண்டியது தான்...!! இது போல் ::

Wednesday, September 17, 2008

அக்காவுக்கு...!

ன்பு அக்கா,

நான் தான். உன்னை அக்கா என்று கூப்பிடும் தகுதி பெற்ற ஒரே ஒரு நான்.

எனக்கு எதுக்கு கல்யாணம் நடந்துச்சு? காலேஜ் முடிச்சிட்டு, ஒரு வேலைக்குப் போய்ட்டு, டைப்பிஸ்ட்டோ, ஸ்டெனோவோ, செக்ரட்டரியோ, அப்பாக்கு இருக்கற சிரமத்தைக் கொஞ்சம் குறைக்கலாம்னு ரெண்டு மாசம் சம்பளம் வாங்கறதுக்குள்ள, கல்யாணம். நல்ல வரன். போனா வராது அப்டினு லாட்டரி சீட்டு மாதிரி வாங்கிப் போட்டாரு. ஊர்ல நாலு ஏக்கரா இருந்துச்சு, உனக்குத் தெரியுமா? ஆமா, இப்ப அது 'இருந்துச்சு'. வித்தாச்சு. எனக்கான செலவுகள்ல அடுத்த டெர்ம் இது.

இந்தக் குடும்பத்தைப் பத்தி கேக்கறியா? சொல்லட்டுமா?

ரொம்ப புதுசா இருக்கு. பயமாவும் இருக்கு. இந்த இறுக்கம்... நெருக்கம்... வேகம்... அணைப்பு... ஈர்ப்பு... பொங்கற வேர்வை... வலி... காது எரியற வெப்ப மூச்சு... களைப்பு... எல்லாமே! எனக்கும் ஒரு மாதிரியா.. சரியா சொல்லத் தெரியல.. இருந்தாலும், ஏதோ என் சுயத்தை இழக்கறது போல் உணர்றேன்.

பதினைஞ்சே நாளல வாழ்க்கையில நிறைய பார்த்துட்ட மாதிரி இருக்கேன். போதும்.. போதும்னு ஒரு பூரணம். என்னன்னு தெரியல.

நைட்டெல்லாம் முழிச்சுட்டு, பகல்ல எல்லாம் தூங்கித் தூங்கி விழறேன். கிச்சன் புதுசு. பெட்ரூம் புதுசு. பாத்ரூம், பூஜை ரூம், மொட்டை மாடி எல்லாம் புதுசு.

இவருக்கு ஒரு மாதிரி சமையல். அவர் அம்மாவுக்கு வேற மாதிரி. மாமனாருக்கு ஷுகர் கம்ப்ளையண்ட். பூசணிக்கா கூடாது. தம்பி ஒருத்தன் இருக்கான். அவனுக்கு எல்லாம் சூடா வேணும். ஐஸ் க்ரீம் கூட சூடா தான் சாப்பிடுவானாம். சிரிக்காத, ஜோக்கில்ல!

இங்க என்ன மாதிரி நடந்துக்கணும்னு இன்னும் புரியல. வீட்டுல இருக்கற மாதிரி சாதாரணமா இருக்கணுமா? காலேஜ் முடிச்சிட்டு வந்தவுடனே புக்ஸை தூக்கி எறிஞ்சிட்டு..(அப்பா :: ஏழு கழுத வயசாச்சு.. இன்னும் பொறுப்பு வந்துச்சா பாரு...? எப்படி புக்கைத் தூக்கி எறியறா..!)அம்மா மடியில கொஞ்ச நேரம் படுத்துக்குவேனே, அது மாதிரி இங்க இருக்கக் கூடாதா? சாயந்திரம் ஆனா ஃப்ரெஷ்ஷா மாறி, வீட்டை சுத்தம் பண்ணி, விளக்கேத்தி வெச்சு.. ஒரு நாடகம் போல தான் நடந்துக்கணுமா..? இன்னும் சரியா யாரும் பழகாததால கஷ்டமா இருக்கு.

இவர் அம்மா நல்லா தான் பேசறாங்க. ஆனா முன்கோபம் கொஞ்சம் ஜாஸ்தி! அவ்ளோ கோபம் வருது! எப்ப அந்த கோபம் நான் ட்ரை பண்ற சாம்பார் மேல பாயுமோ?

பக்கத்து வீட்டுல ஒரு மலையாளக் குடும்பம் இருக்கு. ஆஷான்னு ஒரு பொண்ணு. நல்லாப் பழகறா. இப்ப தான் காலேஜ் செகண்ட் இயர் படிக்கறா. நிறைய கதைகள் சொல்லுவா. அவளோட காலேஜ் ஸ்டோரீஸ், பஸ் ஸ்டாப் நிகழ்ச்சிகள்னு..! அவ சொல்லும் போதும் எனக்கும் பழைய ஞாபகங்கள் எல்லாம் வரும்.

பாஸ்கர்..! ஸாரி பாஸ்கர்.

இந்த லெட்டரை உனக்கு அனுப்பறதா, வேண்டாமான்னு இன்னும் யோசிக்கல.

சரஸ்வதி.

பி.கு: இல்லை.. இதை உனக்கு அனுப்பப் போறது இல்ல. ஸாரி.

***

அக்கா...

இன்னைக்கு சாந்தினி செளக் போனோம். எத்தனை கடைகள்? பட்டுத்துணி, கொலுசு, நெக்லஸ், மருந்து ஷாப், ஹோட்டல், ரெட் ஃபோர்ட் எல்லாம் போனோம். அத்தை வரலை. நானும் இவரும் மட்டும் தான்.

எவ்ளோ பெரிய சிட்டி இது! எத்தனை கார்கள்! எத்தனை ஹாஸ்பிட்டல்கள்! பார்லிமெண்ட்டுக்கு போகும் ரோடு ஒண்ணு போதுமே! ஆடி மாசப் பண்டிகைக்கு, தஞ்சாவூர் மாமா வீட்டு வயலோரமா பொங்கிப் பொங்கி ஓடுமே காவேரி... அது மாதிரி அவ்ளோ பெருசா, அகண்டு இருக்கு.

இவர் நல்லா அன்பாவே இருக்கார். அடிக்கடி வெளிய கூட்டிட்டுப் போறார். ஒரு இந்திப்படத்துக்கு கூட கூட்டிட்டுப் போனார். எனக்கு ஒண்ணும் புரியாதுன்னாலும் கேட்கலை. 'இந்தி தெரியாம தில்லியில எப்படி குடித்தனம் நடத்துவே'னு கேட்டார். அதுவும் சரிதான். அந்தப் படத்துல பொண்ணுங்க கூட கால்சராய் போட்டுட்டு தான் பாட்டெல்லாம் பாடறாங்க. எனக்கு ஆச்சரியமா போயிடுச்சு. படம் பேரு என்னவோ 'பாபி'யாம். நம்ம ஊருக்கு எப்ப வருமோ?

அப்பாக்கு லெட்டர் எழுதினேன். என்னைப் பிரிஞ்ச வருத்தத்தில இருக்காங்க. நான் மட்டும் இங்க ரொம்ப சந்தோஷமாவா இருக்கேன்? ஊர்ல எல்லாரையும் பிரிஞ்சு, இப்படி பாஷை தெரியாத ஊர்ல, புது மனுஷங்களோட ஒரு வாழ்க்கை! இப்ப கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டு இருக்கேன். எல்லாம் சரியாப் போய்டும்னு தோணுது.

அடுத்த வாரம் ஆக்ரா போகலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். ஆக்ரா! சரித்திரப் புத்தகத்துல படிச்சது. காதலோட ஒரே நிரந்தர தழும்பு! புதையலைப் பாத்துக்கற பூதம் போல, ஒரு செத்த காதலிக்கு ஒரு சக்ரவர்த்தி கட்டிய சாகாக் காதலின் கல்லறையை பாதுகாக்கற நான்கு தூண்கள்! நேரில பாக்கப் போறோம்னு நெனச்சாலே சந்தோஷமா இருக்கு!

போய்ட்டு வந்து உனக்கு நிறைய சொல்றேன். இவர் பஜாரில இருந்து புது காமிரா வாங்கிட்டு வந்திருக்கார்! போலராய்டு. அதில நிறைய போட்டோஸ் எடுத்திட்டு வர்றேன்.

சரஸ்வதி.

***

அக்கா...

போன லெட்டர்ல தாஜ்மஹால் போறதைப் பத்தி சொல்லி இருந்தேன் இல்லையா? அந்த ப்ரோக்ராம் கான்சல் ஆயிடுச்சு. நீ எதுவும் பயப்படாத. எதுவும் தப்பா நடந்திடல.

சொல்லவே கூச்சமா இருக்கு. ஆமா.. நான் உண்டாயிருக்கேன்.

இதை உடனே அப்பாக்கும், அம்மாக்கும் சொல்லணும்னு வாத்தியார் வீட்டு ட்ரங்கால் போட்டு சொல்ல சொல்லி இருக்கேன் அவரை! நான் கர்ப்பமா இருக்கேன்னு தெரிஞ்சவுடனே நீ பாக்கணுமே..! இவர் எவ்ளோ சந்தோஷப்பட்டார் தெரியுமா? இவர் மட்டுமா? அத்தை, மாமா, தம்பி எல்லாரும் தான்!

ஒவ்வொருத்தரும் என்னைத் தலைக்கு மேல வெச்சுத் தாங்கறாங்க. இவர் என்னன்னா, ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வந்திடறார். அத்தை சமையல் எல்லாம் நானே பண்றேன் அப்டின்னு இறங்கிட்டாங்க! மாமா, சாயந்திரம் இண்டியா கேட் வரைக்கும் வாக் போவார். அதை நிறுத்திட்டு, எனக்கு என்ன வேணும்னு கேட்டுக் கேட்டுப் பண்றார்.

ஆளாளுக்கு ஒரு ஆசை வெச்சிருக்காங்க.

மாமாக்கு வந்து அவர் தாத்தா ஜமீன் சண்முகநாதப் பிள்ளை மாதிரி பிள்ளை வேணுமாம. இப்பவே பேரனுக்காக சாமான்கள் எல்லாம் தேடித் தேடி வாங்கறார். அவர் பரம்பரையிலேயே, இந்த ஜமீன் தாத்தா தான் பேரு, புகழ் எல்லாம் நிறைஞ்சு வாழ்ந்தவராம். ப்ரிட்டிஷ்க்கு குமாஸ்தா அளவுக்கு உயர்ந்தவராம். இந்த தில்லியில நம்ம ஊர் விளையாட்டுச் சாமான எல்லாம் கிடைக்கறது கஷ்டமா இருக்கு. மரப்பாச்சி பொம்மை, குட்டிக் குட்டி சமையல் செட், குதிரை பொம்மை...! எதுவும் இங்க கிடைக்கல. இங்க கிடைக்கறதெல்லாம் அவருக்குப் பிடிக்கல. அடுத்த தடவை குத்தகை வசூலிக்க உறையூர் போகறப்ப வாங்கிட்டு வரன்னு ஒரு லிஸ்ட்டே போட்டு வெச்சிருக்கார்.

அத்தைக்கு அவங்க அப்பா மாதிரி பிள்ளை வேணுமாம். மிஸ்டர் வேதாசலப் பிள்ளை. குடந்தை பக்கத்துல ஒரு திவானா இருந்தவராம். ஐநூறு, அறுநூறு ஏக்காரா நஞ்சை பூமி வெச்சு, யானை வெச்சு போரடிச்சவராம். அவங்க வீட்டிலயே யானைத் தந்த தொட்டில் ஒண்ணு இருக்குன்னு சொல்றாங்க. பிள்ளை பிறந்தவுடனே முதல்ல அந்தத் தொட்டில்ல தான் தாலாட்டணும்னு அவங்க ஆசை!

இவருக்கு எப்படிப்பட்ட பிள்ளைனாலும் பரவாயில்லையாம். பெண்ணோ, பிள்ளையோ எப்படியோ நல்லபடியா பிறந்தா போதும்னு சொல்றார். தம்பி - லா காலேஜ் கேடலயே எப்பயும் நின்னு சைட் அடிச்சுக்கிட்டு இருக்கற பிள்ள - எனக்காக கோயிலுக்கெல்லாம் போக ஆரம்பிச்சிருக்கான்.

ஆனா, எனக்கு என்ன குழந்தை பிறக்கணும்னு ஆசை தெரியுமா?

மூணு மாசத்துலயே நம்ம அம்மா வயித்தில இருந்து கரைஞ்சு காணாம போன அக்கா, நீ தான் என் மகளா பிறக்க வேணும். உனக்கு இதுவரைக்கும் நான் எழுதி வெச்சிருக்கற லெட்டர் எல்லாத்தையும் படிச்சுக் காட்டணும்.

அக்கா, நீ வருவியா...?

சரஸ்வதி.

அமீரக பாவ்குட்டி ரசிகர்களுக்காக... முக்கியமாக தம்பிக்காக...!

ஜ்..பஜ்.. பாவ் குட்டியின் ஒரு செமி க்ளாஸிக்கல் மல்லு பாட்டு. என்னா ஃபேஸ்... என்னா அழகு... என்னா டான்ஸ்... என்னா சிரிப்பு...! டக்கர்.

கூட யாரோ ஒருத்தர் இருக்காரு, கைய காலை அசைச்சுக்கிட்டு. அவரு பேரு என்னவோ திலீப்பாம். இந்த இன்ஃபர்மேஷன் என்னாத்துக்கு...?

யேஸுதாஸ் அவர்களும், சித்ரா அவர்களும்னு நெனைக்கறேன்.



நல்ல பாட்டு இல்லையா...?

***

மற்றொரு பதிவு ::

பாவ் குட்டியோடு ஒரு வஜனம்.

Monday, September 15, 2008

வெண்பா முயற்சிகள் - 2.

'ச்சமடம் நாணம் பயிர்ப்பு' என்று ஈற்று அடி வருமாறு வெண்பாக்கள் எழுத முயன்றதில்,

காற்றோட்ட மேலாடை கவ்விய கீழாடை
நேற்றுகண்ட மங்கைநல்லா ளைக்கேட்டேன் - "நற்றமிழின்
எச்சமீதி ஏதேனும்?" "ஏனில்லை?" சிந்தித்து
"அச்சமடம் நாணம் பயிர்ப்பு".

இது பொருள் முற்றுப் பெறாமல் இருப்பதாகக் கருதிய அகரம்.அமுதா அவர்கள் சற்று மாற்றி எழுத,

காற்றோட்ட மேலாடை கவ்விய கீழாடை
நேற்றுகண்ட மங்கைநல்லா ளைக்கேட்டேன் - "நற்றமிழர்
எச்சமெதும் உண்டோதான்?" "உண்"டென்று சிந்திநின்றாள்
அச்சமடம் நாணம் பயிர்ப்பு!

மற்றொன்று ::

காதலியே காலையில்தான் கைப்பிடித்தோம் மேடைதனில்
ஆதலினால் ஆதுரமாய் அன்பிலணை - போதவிலை
இச்சமயம் இன்பத்தில் இச்இச்தா நீமற
அச்சமடம் நாணம் பயிர்ப்பு!

இதே போல் 'தீயிற் கொடியதோ தீ!' என்று ஈற்றடி வருமாறு வெண்பா எழுத முயன்றதில்,

மாலைகோர்க்க கூடையொடு சோலைதேடிச் சென்றநாட்சில்
மாலைவேளை, கண்ணன் மறைந்து நல் - வேலையென்று
வாயிற்முத் தங்கொடுத்தான். வாட்டுகின்ற என்விரகத்
தீயிற் கொடியதோ தீ!

யமுனைநதித் தீரத்தில் யெளவனப்போ தில்நான்
அமுதெனக்கு ழல்நாதம் கேட்டேன் - குமுதந்தான்
சாயுங்கா லக்குளிர்ச் சந்திர வெண்ணொளித்
தீயிற் கொடியதோ தீ!

தொலை தூர இரவுப் பயணம்.



குளிர் மினுக்கும் இரவில் நெடுந்தொலைவு பேருந்துப் பயணம் தரும் அனுபவங்கள் அலாதியானவை.

சிலுசிலுவென ஈரக்காற்று கிடைக்கும் சின்னச் சின்ன இடைவெளிகளில் புகுந்து சிலிர்ப்பூட்டும். நெடுஞ்சாலையில் கடக்கின்ற குற்றூர்களின் சில மஞ்சள் சோடியம் விளக்குகளின் அடியில் டீக்கடைகள் மட்டும் விழித்திருக்கும். கிராமத்தின் டூரிங் டாக்கீஸைக் கடக்கையில், புரட்சித் தலைவரின் 'நாடோடி மன்னன் - புத்தம் புதிய காப்பி' போஸ்டரின் மீது இருக்கும் கிடைமட்ட ட்யூப் லைட்டின் அடியில் உறைந்த கவர்ச்சி சிரிப்பு எம்.ஜி.ஆரை மறைத்திருக்கும் ஈசல்கள். பேருந்தில் எரிவிளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டவுடன், கூடவே பயணித்து வரும் மெலோடி பாடல்கள் அந்த இரவை இரு நாட்களுக்கு நினைவில் இருத்தி வைக்கும். நகரின் வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது கண்டிராத, வெண்ணிலா தன் முழுப் பிரம்மாண்டத்தையும் ஒரு வட்டமாக விசிறி அடித்து பாதையின் இருள் பயணத்தை பாலென நனைக்கும். சட்டென ஒரு புள்ளியில் நிலவு பின் நின்று விடும். மறைத்திருக்கும் கரு மேகங்கள் ஒட்டிக் கொண்டு வந்து ஒரு வளைவில், சிதறிக் காணாமல் போகும். பனி மூட்டப் புகைக் கிரீடங்கள் அணிந்த தூர மலை முகடுகள் கன்வின் மிச்சம் போல் தோற்றமளிக்கும். ரிலேட்டிவிடிப்படி மீவேகத்துடன் கடக்கும் எதிர் வண்டிகள் காற்றை வீசி விட்டுப் போகும். ஆட்டுக்குட்டியை முழுங்கி அமைதியாய்ப் படுத்திருக்கும் பாம்பாய், நீளக் கண்டெய்னர்கள் ரகசியங்களை விழுங்கி நெடுஞ்சாலையின் ஓரங்களில் நின்றிருக்க, மனிதர்கள் தாபாவில் அடைக்கலமாகி இருப்பர். கருஞ்சாக்கு போட்டுப் போர்த்திய லாரிகள், தலைகீழ் சிவப்புக் குடத்தின் உள்ளே ஒளி திகழும் பல்பு சுரக்கும் ஒளி சிவப்பாய் ஜொலிக்கும், செக் போஸ்ட் க்ளியரன்ஸுக்காக காத்திருக்கும். அவ்வப்போது எதிர்த்திசையில் கடக்கும் குடிசைகளின் ட்யூப்லைட்கள். வயலின் கிணற்றில் பம்ப் செட் மோட்டார் மேல் சரிந்து எரியும் குண்டு பல்ப். அந்தரத்தில் தொங்கும் டவர்களின் சிவப்புப் புள்ளிகள். கரங்கள் கோர்த்த பெரும் இராட்சதர்களாக எலெக்ட்ரிக் ட்ரான்ஸ்பார்மர்கள். மெல்லத் துவங்கி, உச்சியாக கேட்டு, மீண்டும் நம்மைத் தொலைத்து தேய்ந்து போகும், வழியில் சடாரென கடக்கும் ஒரு கிராமத்தின் அம்மன் கோயில் பண்டிகையின் சாட்சியான கோன் ஸ்ப்பீக்கரில் இருந்து கசிந்து கொண்டிருக்கும்,'ஆயி மகமாயி...'. புளிய மரங்களின் இலைகள் வழியாக குளிர் இறக்குமதியாகும். ரெயில்வே க்ராஸிங்குக்காக நிற்கையில், சில பீடிகள், சிகரெட்டுகள் யுயிர் பெறும். 'தடக்..தடக்..' என கடக்கும் இரயில் வண்டி வெளிச்சப் புள்ளிகளைச் சுமந்து அதி வேகத்தில் செல்லும். சில எல்லைச் சாமிகளின் உக்கிரப் பார்வைகள் குளிரில் காணாமல் போயிருக்கும். சில மாடுகள் சாவகாசமாக சாலை விளிம்புகளில் படுத்து அசை போட்டுக் கொண்டிருக்கும். ஒரு நாய், சரியாக பேருந்து வரும் போது தான் சாலையைக் கடக்க முயன்று, க்றீச்சீட்டு, வாலைச் சுருட்டிக் கொண்டு வந்த திசைக்கே பாயும். 'இவர் மட்டும் எப்படி இரவு முழுதும் தூங்காமல் வண்டி ஓட்டுகிறார்?' என்று ஒருவருக்காவது தூக்கக் கலக்கத்தில் ஒரு சந்தேகம் வரும். எப்போதாவது ஒரு குழந்தையின் தொடர் அழுகை கேட்கும். மெல்லிய குறட்டைச் சப்தம் யாராவது ஒருவரை 'ப்ச்' சொல்ல வைக்கும். ஏதோ ஒரு ஜன்னல் மட்டும் சரியாக மூட முடியாமல், அந்த குட்டி இடைவெளி, ஜன்னலை ஒட்டியவரின் முணுமுணுப்பாலும், அவஸ்தையாலும் நிரம்பப்பெறும். தூக்கத்தில் யார் தோள் மீதாவது சாய்வோம். இல்லை நம் தோளில் யாராவது! 'தட்'டென விழுந்து, யாராவது கண்களைத் தேய்த்துக் கொள்வர். இருளின் கறுப்பு படிந்த கண்ணாடி ஜன்னலில் பேருந்தின் நீல ஒளி படர்ந்த நம் முகம் கொஞ்சம் அழகாகவும், கொஞ்சம் கோரமாகவும் தெரியும். எதிர்ப்படும் வயற்காடுகள் காற்றுக்குத் தலையாட்டிக் கொண்டிருக்கும். வரப்பின் நடுவில் இருந்து யாராவது ஒருவர் சைக்கிளில் வருவார். எப்போதாவது தூறும். வைப்பர் கை வைப்பதற்குள் ஓயும். எதிர் சீட்டின் மல்லிகைச் சர வாசம் காற்றோடு கரைந்து நம்மைத் தாக்கலாம். அவ்வப்போது நிற்கின்ற ஸ்டாப்புகளில் சிலர் இறங்க, ஏறும் சிலர் தூங்கி வழியும் முகங்களுக்கிடையே ஏதேனும் சீட் இருக்கிறதா என்று தேடுவார். மினுக் மினுக்கென்று மேலும், கீழும் ஏறியும், இறங்கியும் கொண்டிருக்கும் திரி நெருப்பு வடிவ பேட்டரி விளக்கின் முன் பிள்ளையாரும், இயேசுவும், மெக்காவும் போட்டோவாய்!

இப்படி எதையும் ரசிக்க விடாமல் செய்து விடும், 'பஸ் ஒரு பத்து நிமிஷம் நிற்கும். டீ, காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம்' என்று மெட்டல் பாடியின் மீது தட்டி விட்டுச் செல்பவர் பிழைக்கும், வரிசை கட்டி பஸ்கள் நிற்கும், நடு இரவில் சம்பந்தமே இல்லாத கானா பாடல் கதறியடிக்கும் மோட்டல் எப்போது வரும் என்று பதற்றத்தின் உச்சியிலேயே உட்கார வைத்திருக்கும், அடி வயிற்றில் முட்டிக் கொண்டிருக்கும் சிறுநீர்!

நேற்று கோவையை நெருங்கும் போது பார்த்த ஒரு போர்டு கவனத்தைக் கவர்ந்தது. 'ஆர்த்தி கம்பரசர் (Aarthi Compressor) '. மெஷினரி இண்டஸ்ட்ரியில் கவிச்சக்ரவர்த்தி கம்பரை நினைவூட்டும் இதன் ஓனரை ஒரு பேட்டி காண எனக்கு ஆசை வந்தது!

இரயில் குதிரை!

ராயிரம் குதிரைகளின்
ஒற்றுமைப் பெட்டிகள் ரயில்!
ஒற்றை ரயிலின்
ஒற்றைப் பெட்டியாய்க் குதிரை!

இரத்தப் போர்க்களத்தின்
புரவிகள்
வீரம் தரும்!
தடக் தடக் தாலாட்டில்
தாய்மடியின் சாரம் தரும்
ரயில்கள்!

தடம் விட்டுத்
தடுமாறாதிருக்கத்
தண்டவாளம் போல்
கண்களுக்கருகில்
கட்டுகள்!

தடவியதும்
சிலிர்க்கும் ஒன்று!
மற்றொன்றோ
சிலிர்ப்பாக்கும்!

நீளப் பிளிறல்களில்
பயணம் துவக்கும்
இரண்டும்!

இன்று...

ஜட்கா வண்டிகளின்
சாட்டையில்
சரண் புகுந்தன
ஜாதிக் குதிரைகள்!

குட்காச் சாற்றின்
குவியல்களில்
குளித்தவாறு
குமுறிச் செல்லும்
ரயில்கள்!

இக்கவிதையை(?) எப்போது எழுதினேன் என்று தேதி எழுதி வைக்காததால் தெரியவில்லை. ஆனால் எழுதியுள்ள பேப்பரை வைத்துப் பார்க்கும் போது, '97 - '98 ஆண்டாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஒரு பதிவுக்காக இங்கே!