Friday, September 28, 2007
மாமல்லையில் ஒரு நாள்...!
இதே இடத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் மகேந்திர சக்ரவர்த்தியும் அவருடைய குமாரரும் வந்து இதே விதமாக நின்றதுண்டு. ஆனால், அங்கு நின்ற குன்றுகளும் பாறைகளும் அப்போது மொட்டைக் குன்றுகளாகவும், மொட்டைப் பாறைகளாகவும் இருந்தன.
"அப்பா! அந்தப் பாறையின் நிழலைப் பாருங்கள்! அது யானையைப் போல் இல்லையா?" என்றான் பல்லவ குலந்தழைக்க வந்த நரசிம்மவர்மன்.
அவன் சுட்டிக் காட்டிய நிழலைச் சக்கரவர்த்தி பார்த்தார்.
"ஆஹா!" என்று அவர் வாயிலிருந்து புறப்பட்ட வியப்பொலியில் விவரிக்க முடியாமல் பல உணர்ச்சிகள் தொனித்தன.
சற்றுநேரம் மகேந்திரர் சிந்தனையில் ஆழ்ந்து வெளி உலகப் பிரக்ஞையே இல்லாதவராய் நின்றார். பிறகு நரசிம்மனைத் தழுவிக் கொண்டு, "குழந்தாய்! எப்பேர்ப்பட்ட அதிசயமான உண்மையை நீ கண்டுபிடித்துக் கூறினாய்! நீ கூறிய வார்த்தையின் மகிமை முழுவதும் உனக்கே தெரிந்திராது!" என்றார்.
பன்னிரண்டு பிராயத்துச் சிறுவனான நரசிம்மன் மேலும் உற்சாகத்துடன், "அப்பா! அதோ, அந்தக் குன்றின் நிழலைப் பாருங்கள்! கோயில் மாதிரி இல்லையா?" என்றான்.
"ஆமாம், நரசிம்மா! ஆமாம்! அந்தக் குன்றின் நிழல் கோயில் மாதிரிதான் இருக்கிறது. அதை கோயிலாகவே செய்து விடுவோம். இந்த ஐந்து குன்றுகளையும் ஐந்து கோயில்களாக்குவோம். இன்னும் இங்குள்ள சிறு பாறைகளை யானையாகவும் சிங்கமாகவும் நந்தியாகவும் ஆக்குவோம். இந்தத் துறைமுகத்தைச் சொப்பன லோகமாக்குவோம். ஆயிரம் ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் துறைமுகத்துக்கு வருகிறவர்கள் எல்லாரும் பார்த்துப் பிரமிக்கும்படியாகச் செய்வோம்!" என்றார்.
- பேராசிரியர் கல்கி, சிவகாமியின் சபதம், அதிகாரம் 26.
Subscribe to:
Posts (Atom)