Saturday, August 02, 2008

ஷா - இன் - ஷா என்ன சொன்னார்?

ஜினி மன்னிப்பு கேட்டுள்ளார். எதற்கு? தன் படத் தயாரிப்பாளர்கள் தன்னால், தன் பேச்சால் கஷ்டப்பட்டு விடக் கூடாது; தன் படம் வாங்கிய வினியோகஸ்தர்கள் தன் பேச்சால் நஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காக.

ஒகேனக்கல் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த கன்னட அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் தான் அவர் குற்றம் சாட்டினார். பொது மக்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை.

'உதைக்க வேண்டாமா?' என்று கேட்டது எல்லை மீறி வந்து பிரச்னை செய்தவர்களையும், திட்டத்தை எதிர்த்தவர்களையுமே! பொது மக்களை அல்ல!

அவர் மன்னிப்பு கேட்டவுடனே இங்கே சில பேருக்கு பொத்துக் கொண்டு விட்டது.

* ஒருவருக்கு பெரிய தலைவர் படத்தில் நடித்தவுடனே, தானே அதே போல் பெரிய தலைவர் ஆகி விட்ட நினைப்பு! தனக்கு இது போல் ஒரு நிலை வந்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்வாராம்.

பாபா படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை, விநியோகஸ்தர்கள் நஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்ற நிலை வந்தவுடன் அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தார் ரஜினி.

இவர் இப்போது சம்பளம் குறைப்பேன் என்று சவுண்டு விடுகிறாரே...? எத்தனை படங்களுக்கு இந்த மாதிரி செய்திருக்கிறார்? அது போல் செய்தால் திவாலாக வேண்டியது தான் இவரெல்லாம்!

* சங்கத் தலைவர் அறிக்கை விடுகிறார். பாவம். அவருக்கு கட்சியை எப்படியாவது பிரபலப்படுத்த வேண்டுமே என்ற கவலை!

* மீடியாக்களுக்கு ஒரு பரபரப்பு செய்தி! அஞ்சு நிமிஷத்துக்கு மேல் பார்க்க அவகாசம் இல்லாமல் தகவல்கள் கொட்டி நம் நேரத்தை களவாடிச் செல்லும் யுகத்தில் தங்கள் சேனலையும், பத்திரிக்கையையும் தொடர்ந்து பரபரப்பாக்கியே வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் Reading between lines போதாமல், Reading between Void Spaces எல்லாம் செய்து தாங்களாகவே அர்த்தம் செய்து கொண்டு விற்று பார்க்கிறார்கள்.

* இன்ஃபர்மேஷன் தியரியில் , தகவல் என்றால் என்ன? என்று க்ளாஸ் எடுத்தார் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் எபிநேசர் சார்! அன்று செப்டம்பர் 10, 2001.

அடுத்த நாள் வகுப்பில் சொன்னார்.

'இது தான் இன்ஃப்ர்மேஷன். அமெரிக்காவின் மீதே யாராவது தாக்குதல் நடத்துவார்களா? என்று நம்பிக் கொண்டிருந்தோம். அது நடந்து விட்டது. நடக்கவே நடக்க வாய்ப்பே இல்லாத, நிகழ்தகவு ஸீரோவாக உள்ள நிகழ்ச்சி நடந்தால் அது தான் இன்ஃப்ர்மேஷன். இன்று சூரியன் கிழக்குத் திசையில் உதித்தது என்று ஒருநாளும் தினத்தந்தியில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வராது.' என்றார்.

நாளாக நாளாக தாக்குதல் நிகழ்ச்சி இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம் என்று தள்ளப்பட்டு காணாமல் போகும்.

அது போல்,

இங்கே கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். எப்படியாவது தாங்களும் கொஞ்ச நிமிஷங்களுக்கு பிரபலமாகி இருக்க வேண்டும் என்ற ஆவல். எதிர்க்கருத்து சொன்னால் நானும் புரட்சிக்காரன் தான் என்று பிறர் ஏற்றுக் கொள்வார்கள் என்ற கணிப்பில்!

ரஜினி ஏதோ சொல்லி இருக்கிறாராமே? எழுது! நன்றாக கலாய்த்து எழுது! உன்னைத் தேடி ஆட்டோவோ, 'ஆபீஸ் ரூமுக்கு' கூட்டிப் போகவோ ரஜினி ஆள் அனுப்பப் போவதில்லை! எனவே எழுது!

'ஊருக்கு இளைத்தவன் அவன் தானே'! நன்றாக காய்ச்சி எழுது!

பரபரப்பாகும்! நாற்பது பேர் வரை ஜால்ரா அடிப்பார்கள். கொஞ்சம் தெரிந்த ஆள் ஆகலாம்.

'ஹப்பாடா சந்தோஷம்!' Group Power.

நேற்று *** பேர் வந்து பார்த்தார்களா? திருப்தி!

அடுத்து என்ன..? கமல் மர்மயோகி எடுக்கிறாரா? கதை ஏழாம் நூற்றாண்டாமே!

ஹை..! தலைப்பு ரெடி! 'கரும' யோகி!

டிராஃப்டில் போட்டு வைத்துக் கொள்ளலாம். கமல் என்ன செய்தாலும் இந்த தலைப்பை போட்டு கொஞ்சம் கன்னா பின்னா என்று எழுதி சூடான இடத்திற்கு வந்து விடலாம்.

* ஒகேனக்கல் பிரச்னையில் அத்தனை பேரும் கோபமாய் பதிவுகள் போட்டோம் (நானும்!). ரஜினி சொன்னதை விட காரமாகவும், கோரமாகவும் சில பேர் சாரமாகவும் எழுதினோம்.

அடுத்த நாளே அந்த நெருப்பின் மேல் வராத காவேரி நீரை ஊற்றி தமிழக அரசு அணைத்ததா இல்லையா?

உண்ணாவிரதம் இருந்த அத்தனை பேர் முகத்திலும் அண்டா அண்டாவாக கரியை அள்ளி பூசியதா இல்லையா?

புது ஆட்சி வரட்டும். பேசிப் பார்ப்போம் என்று சொன்னது மாநில அரசு!

வந்து எவ்வளவு நாள் ஆகின்றது? ஏதாவது ஸ்டெப் எடுத்தீர்களா என்று ஒரு பதிவு கூட நான் பார்க்கவில்லையே? எங்கே ஐயா போயிற்று உங்கள் வீரமெல்லாம்?

நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா அன்று பேசியதெல்லாம் தவறு தான் என்று?

அவர் ஒத்துக் கொண்டார். அரசின் மேல் நம்பிக்கை வைத்து ஸ்டெப் எடுக்கும் என்று நம்பி உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்கெல்லாம் அரசின் கைவிடுப்பு தான் பதில் என்று புரிந்ததால் அவர் கேட்டார் மன்னிப்பு கர்நாடக மக்களிடம்! Goondasகளிடம் இல்லை! இந்த அரசியல் கட்சிகளை நம்பி ஏதும் சொல்லக் கூடாது என்பதை லேட்டாக புரிந்து கொண்டதற்கு கேட்டார் மன்னிப்பு!

உங்களுக்கு அது இருக்கின்றதா?

பேச வந்து விட்டார்கள்!

முகம் காட்டா வெளியில் புதைந்து கொண்டு எதுவும் சொல்லலாம், கேட்க ஆளில்லை என்று நினைத்துக் கொண்டு கைக்கு வந்தபடியெல்லாம் எழுதக் கூடாது. அது சரி அல்ல.

http://www.rajinifans.com/detailview.php?title=695

http://www.rajinifans.com/detailview.php?title=696


மகாபாரதத்தில் கர்ணணை நேருக்கு நேர் நின்று வெற்றி கொள்ள முடியாத அவருடைய எதிரிகள் அவரை இழிவு படுத்துவதாக எண்ணி ஒவ்வொரு முறையும் கர்ணணை தேரோட்டி மகன் என்று சொல்லியும், அவருடைய ஜாதியை சொல்லியும் அவருடைய மனதை புண் படுத்தி வெற்றி கொள்ள நினைத்தனர் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை கடைசியில் கர்ணன் விட்டு கொடுத்ததால் மட்டுமே அவர் தோற்றார்.. இங்கே ரஜினி ஒரு கர்நாடகன் என்ற‌ செய்தி ஒவ்வொரு முறை வரும்போதும் இது கர்ணனை வெற்றிகொள்ள அவருடைய எதிரிகள் செய்த சூழ்ச்சியை போலவே உள்ளது... இன்று மிகச்சரியாக ரஜினி அவர்கள் தெளிவு படுத்தி விட்டார் "ஒக்கேனக்கல் திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க முயலும் புல்லுறுவிகளை உதைக்க வேண்டாமா என்றுதான் சொன்னேன்.." என்று.. இதை அவர் சொல்லாவிட்டாலும் ஆறறிவு கொண்ட அனைவருக்கும் புரியும்.. கமல் அவர்களும் இப்படியெல்லாம் பின் நாளில் ஏதாவது பிரச்சினை வரும் என்றுதான் அன்றே அதே மேடையில் "இங்கிருந்து செய்திகளை சேகரிக்க வந்திருக்கும் உளவாளிகள் தயவு அங்கே சென்று செய்திகளை திரித்து சொல்லாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார்.. ஆனாலும் புல்லுறுவிகள் செய்திகளை திரித்து சொல்வதே வேலையாக கொண்டிருக்கிறார்கள்.. 17 பிரிண்ட்டுகள் ஓட வேண்டும் என்பதற்க்காக மன்னிப்பு கேட்க ரஜினி என்ன முட்டாளா..? வீரத்திற்க்கு ஏது ஜாதி..? கலைக்கு ஏது மொழி..? சிந்திப்பீர்..


நன்றி :: ரஜினி ரசிகர்கள் தளம்.

Friday, August 01, 2008

சக்கரக்கட்டி!

ன்று மதியம் டெக்னோபார்க்கின் எதிரில் இருக்கும் ஹோட்டல் சென்னையில் சாப்பிட்டு விட்டு கோவளம் டு கொல்லம் நெடுஞ்சாலையைக் கடக்கையில் கண்ட இரு சம்பவங்கள் அவற்றின் மீதான சிந்தனையை ஊற்றின.

1. கையில் சர்ட்டிபிகேட்ஸ் ஃபைல் வைத்து ஒருவர் கோவளம் போகும் திசையில் செல்லும் வாகங்களுக்கு முன் தம்ஸ் அப் காட்டி பிஃப்ட் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த தடத்தில் பேருந்து சர்வீஸ் அவ்வளவாக இல்லை. பைக், கார், ஸ்கூட்டர், சைக்கிள் என்று வரிசையாக கடந்து கொண்டிருந்தனர், நிற்காமல்! இவரும் சளைக்காமல் கை நீட்டிக் கொண்டிருந்தார்.

'சடக்' என்று கையை தொங்கப் போட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிக் கொண்டார். இப்போது வந்த வாகனத்தை அவர் நிறுத்த முயற்சிக்கவில்லை. அப்படி ஒரு வாகனம் வருவதை பார்த்ததாக கூட அவர் காட்டிக் கொள்ளவில்லை.

எது தெரியுமா?

போலீஸ் ஜீப்.

2. ஓர் ஆட்டோ ட்ராஃபிக் சிக்னல் காவலரின் மறுப்பு கை அடையாளத்தினால் ப்ரேக் போட்டு நிறுத்தியது, டெக்னோபார்க்கின் வாசலில்! என்ன நடந்தது. உள்ளே மூன்று இளைஞிகள். பேச்சு சுவாரஸ்யத்தில் ஆட்டோ வாசற்புறம் இருந்த இளம்பச்சை சுடிதாரின் துப்பட்டா இவ்வளவு நேரமும் வேளியே காற்றாடிக் கொண்டு வந்து, ஆட்டோ நிற்கும் போது வகையாக சக்கரத்தின் கீழ் சென்று மாட்டிக் கொண்டது.

துப்பட்டாவை ஸ்டைலாக எடுத்துப் போட முயற்சிக்கும் போது தான் அபாயம் புரிந்தது அவருக்கு. ஆட்டோ கிளம்பப் போகின்றது. முன்னோக்கி ஓடினால், இன்னும் சிக்கலாகி சிக்கிக் கொள்ளும். நல்லவேளை ஆட்டோ ட்ரைவர் பார்த்து ஒரு ரிவர்ஸ் அடித்து காப்பாற்றினார்.

படித்த பெண்கள்!

ண்டு முடித்து விட்டு சில்லறை இல்லாததால் எதிரில் இருக்கும் ஒரு ஃபேன்ஸி ஸ்டோர்க்கு சென்று மாற்றி வரப் போன போது கிட்காட் இருக்கிறதா என்று கேட்டேன். தீர்ந்து போயிருந்தது. வேறு என்ன இருக்கின்றது என்று பார்த்தால், நெடுங்கால சினேகிதன் Parle Poppins 'என்னப்பா என்னை எல்லாம் மறந்து விட்டாயா?' என்று கேட்டது.

இரண்டு பாக்கெட்டுகள் வாங்கிக் கொண்டேன். 4 ரூபாய் தான்.

கிட்காட் எல்லாம் 5ரூக்கு வாங்கி வாயில் போட்ட மூன்றரை செகண்டுகளில் கரைந்து பல் இடுக்குகளில் மட்டும் கொஞ்சம் அடையாளம் வைத்து விட்டு காணாமல் போய் விடுகின்றது. லைபாய் சோப் தான் நினைவுக்கு வருகினறது. இரண்டுமே கரையவே மாட்டேன் என்கிறது. 2ரூ பாக்கெட்டில் 12 மிட்டாய்கள், வித வித ஃப்ளேவர்களில்!

சீட்டுக்கு வந்து பார்லே வெப் சைட்டுக்கு போனேன்.

அடிக்கின்ற கலர்களில் வெப் சைட்.

நீங்களும் போய்த் தான் பாருங்களேன்.

ன்று தான் சக்கரக்கட்டி பாடல்கள் கேட்டேன்.

காதலர் தினம் வந்த போது நான் கல்லூரியில் முதலாண்டு. அப்போது என்ன விதமான குளிர் உணர்வுகளை தட்டி எழுப்பியதோ (ரோஜா..! ரோஜா..!), அதே மாதிரி மீண்டும் கேட்பது போல் புத்துணர்வோடு மறுபடியும் இரகுமானின் அட்டகாசமான துள்ளல், மெலோடிகளுடன் பட்டையைக் கிளப்பி இருக்கின்றது

இங்கே இறக்கிக் கொள்ளலாம்.

சாம்பிள் ::

மருதாணி விழியில் ஏன்? ::


Get Your Own Hindi Songs Player at Music Plugin

நான் எப்போது பெண்ணானேன்? ::


Get Your Own Hindi Songs Player at Music Plugin

இன்று இரவு முழுதும் ஓடிக் கொண்டே இருக்கும் என்று தோன்றுகின்றது.

உண்மையில் சக்கரக்கட்டி ரஹ்மானின் பாடல்கள் தான்...!

Thursday, July 31, 2008

நன்றி..! நன்றி..!

டந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போட்டியைச் சாக்கிட்டு ஆஃபீஸுக்கு லேட்டாகப் போய், அங்கும் டவுன்லோட் செய்து படித்து, துளித் துளியாய் சம்பவங்களைக் கோர்த்து, அவசர அவசரமாக ஸ்ரீகார்யம் திரும்பி, "சேட்டா! பதினொரு மணிக்கு சாத்திக்கோ!" என்று ப்ரெளசிங் சென்டரில் கெஞ்சி, அப்லோட் செய்து, இதற்காகவே புது லேப்டாப் வாங்கி, அவசரமாக கனெக்ஷன் கொடுத்து, ("சார்! இன்னும் கனெஷன் வரலை!" "இருப்பா, இப்ப தான பணம் பே பண்ணி இருக்க. அஞ்சு நாள் ஆகும்" "அஞ்சு நாளா?")...

பிடித்தமான இயற்பியலில் கதை சொல்ல போட்டி நடத்திய நண்பர் சிறில் அலெக்ஸிற்கு நன்றிகள் உரித்தாகுக...!

சிந்தித்து சிந்தித்தே தம் வாழ்நாள் முழுதும் பிரபஞ்சத்தின் ஈடில்லா பிரம்மாண்ட இரகசியங்களைக் கண்டறிவதிலேயே இன்புற்று அதன் குளிர்மைக் கணங்களை கணிதமாக வகுத்துச் சென்ற பெருமக்களுக்கு சிரம் குனிந்து, பாதம் விழுந்து தண்டனிடுகிறேன்.



தங்கத் தலைவர் ஐன்ஸ்டைனின் படங்களை இணைக்கிறேன்.

தலைவரின் புகைப்படங்கள் ::



தலைவரின் மேற்கோள்கள் ::



தமிழ் அறிவியல் புனை கதை முன்னோடி வாத்தியாருக்கும் நன்றிகள். ::



A Beautiful Mind என்ற அற்புதமான வாழ்க்கைக் காவியத்தின் Kaleidoscope of Mathematics உடன் இப்பதிவினை முடிக்கிறேன்.

Kaleidoscope Of Mathematics - Soundtrack

***

இனி நாம் நமது வழக்கமான மொக்கைப் பதிவுகளுக்குத் திரும்பலாம்.

ஐ, ஐ, ஸ் மற்றும் I !

"டைசியில் உருவாக்கி விட்டீர்கள் போலிருக்கின்றதே?" முகம் கொள்ளா சிரிப்புடன் கை கொடுத்தார் ஐன்ஸ்டைன்.

"ஆமா சார்!" கைகள் கொடுத்து தூக்கி கலத்துக்குள் அவரை கூட்டி வந்தேன். பஞ்சு இருக்கையில் அமர்ந்தார். அருகில் ஸ்டீபன் ஹாக்கிங்.

"சார்! இவர் தான் ஸ்டீபன் ஹாக்கிங். நீங்கள் தொட்டு, விட்டு போன Theory of Everything-ஐ டீல் செய்கின்றவர்களில் ஒருவர். சார்! உங்களைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு! நான் இதுவரைக்கும் சந்தித்த பெரிய மனிதர்களிலேயே உங்களைச் சந்தித்தது தான் பெருமையாக நினைக்கிறேன்!" என்றேன்.

"நம்பாதீர்கள்! என்னிடமும் இதையே தான் சொன்னான்!" என்று திருவாய் மலர்ந்தருளினார் ஹாக்கிங். அடப்பாவி மனுஷா! இப்படி போட்டுக் கொடுத்திட்டாரே!

"நீங்கள் ப்ளாக் ஹோல் பற்றி, பாரலல் யூனிவர்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"சார்! நான் சொல்றேன்.! A Black Hole is..." என்று இடைபுகுந்து ஆரம்பித்தேன்.

"தம்பி! உனக்கு ஃபிஸிக்ஸில் மிக்க அறிமுகம் உண்டா?" என்று கேட்டார் ஹாக்கிங்.

"உண்டு சார்!" என்றேன் பெருமிதமாய்.

"சர்! நான் பேஸிக்கா ஒரு கேள்வி கேக்கறேன். ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர் சொல்லு!"

"சார்! இதெல்லாம் ஜுஜுபி! ஏ ஸ்கொயர் ப்ளஸ் டூ ஏ பி ப்ளஸ் பி ஸ்கொயர்! எப்பிடி?"

"முட்டாள்! நான் உன்னை ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர் சொல்லச் சொன்னேன். அந்த ஈக்வேஷனையா கேட்டேன். போ! அந்த மூலையில் போய் உட்கார்!" என்றார் ஹாக்கிங்.

"அவ்வ்வ்வ்வ்வ்...!" என்று கமெண்ட் கொடுத்து விட்டு, காக்பிட்டுக்குள் நுழைந்தேன்.

"உனக்கு தேவை தான்! வா! வந்து உட்கார்! ஏழுக்கு அப்புறம் என்ன நம்பர் சொல்லு!" என்றது XFA9C.

அதை முறைத்து விட்டு, கண்ணாடித் தடுப்புக்கு பின்னால் இருவரும் மிக ஆர்வமாக டிஸ்கஷன் செய்வது தெரிந்தது.

"அடுத்து எங்கே செல்வது?" கேட்டது.

"A.D.1686-க்குப் போ!" என்றேன் 'பாரீஸுக்குப் போ' என்ற தொனியில்.

இந்த கலம் என்னை தேடி வந்தடைந்தது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.

மான்சூன் துவங்கி விட்ட பின் திருவனந்தபுரத்தில் விட்டு விட்டு, தூறலாய், சாரலாய், பெருமழையாய் என்று மழை பெய்து கொண்டே இருந்தது.

ஒரு செவ்வாய்க்கிழமை காலை. குளிக்கப் போகும் முன் வாயில் பேஸ்ட் ப்ரெஷ் நுரையுடன், மாடியில் காயப் போட்டிருந்த , காற்றில் படபடத்துக் கொண்டிருந்த 'ப்ரொபஷனல்' ஷர்ட்டை எடுக்கப் போகையில், இந்த கலம் தரை... இல்லை, மாடி இறங்கியது.

ஈ.டி. போல் ஏதேனும் வினோத பிராணி இறங்கும் என எதிர்பார்த்திருக்க இயந்திரம் இறங்கியது. "லேசா குளிர்கிறது!" என்று சொல்லி விட்டு, மாடியின் கைப்பிடிச் சுவரில் உரசிக் கொள்ள, அதன் உடலில் சூடு ஏறியது போலும். "என்ன தான் அட்வான்ஸ்டு டெக்னாலஜியில் நான் டிசைன் செய்யப்பட்டிருந்தாலும் ஆதிகால சிக்கிமுக்கிக்கல் டெக்னிக் தான் ஹேண்ட்ஃபுல் ஹெல்ப்! பை தி வே, நான் இன்றிலிருந்து 3067 ஆண்டுகள் பின்னால் இருந்து வருகிறேன். உங்களுக்குப் புரியும் வகையில் கி.பி.5075. இதைப் படித்துப் பாருங்கள்! உங்களை ஹூஸூர் என்று கூப்பிட வேண்டுமா?" என்று ஒரு பிங்க் ஷீட்டை நீட்டியது.

சிங்குலாரிட்டி கணத்தை கண்டறிய காலக் கலனுடன் அனுப்பப்பட்டுள்ள XFA9C-ஐ துணை கொள்ளவும். பெரு வெடிப்பில் இருந்து காலம் துவங்குவதை உறுதி செய்து கொண்டு (ஃபோட்டொ, வீடியோ, மெமரி கேப்ஸ்யூல்) அவற்றை XFA9Cயிடம் கொடுத்து அனுப்பவும். உங்கள் பெயர் வருங்கால வரலாற்றில் நிலை பெறும்!

சத்யமேவ ஜெயதே!
Department of Astronomical Forces.
Government of Indian Sub Continent.

அசோக சக்கரம் சீல் குத்தி இருந்தது.

எனக்கு சந்தோஷத்துடன், என்னை ஏன் செலக்ட் செய்தார்கள் என்று தெரியவில்லை.

"ழீ! எழுக்கு வழ்ழிருக்கனு எழக்கு தெழில்லு போழ்ழு! லீழ போய் ழூம்ல உக்காழு! ழான் குழில்லிட்டு வழேன்!"

"ஆச்சரியம்! உங்களுக்கு எங்கள் பாஷை தெரிந்திருக்கிறது! XFA9C ப்ரோக்ராமிங் மொழி இது தான்!"

துப்பி விட்டு,

"நீ எதுக்கு வந்திருக்கேனு எனக்கு தெரிஞ்சு போச்சு! கீழ போய் ரூம்ல உக்காரு! நான் குளிச்சிட்டு வரேன்!" என்று ழமிழில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தேன்.

பக்கெட் துணிகளை அள்ளிப் போட்டு, பாத்ரூமுக்குள் போய் கதவைத் தாளிட,

"பேஷா வா!
குளிச்சிட்டு
ஃப்ரெஷ்ஷா வா!" என்றது.

குறுங்கவிதை சொல்லும் ஒரு குழப்பமான இயந்திரத்துடன் காலத்தின் ஆரம்பப் புள்ளியை நோக்கி ஒரு பயணம். ஆச்சர்யம்! நான் மட்டும் தனியாகப் போய், புரியவில்லை என்று சொல்லி இந்த இயந்திரம் கோபமாகி ஷாக் கொடுத்து விட்டதென்றால்..! எல்லாம் தெரிந்த மேதைகளையும் கூட்டிச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்தேன். கால இயந்திரம் தான் இருக்கின்றதே!

அறைக்குச் சென்று துணி மாற்றும் போது,

"ஆமா! நான் இன்னிக்கு ஆஃபீஸுக்கு போகணுமே! ஒரு இங்க்லீஷ் சாங்க் டெஸ்டிங்ல 38-வது ஹார்மோனிக்ஸ்ல நாய்ஸ் வருதே! அதை சால்வ் பண்ணனும்!"

"ஏதேனும் காரணம் சொல்லி லீவ் போடு!"

"எத்தனை நாட்களுக்கு?"

"யார் காலத்தில்?" திருப்பிக் கேட்டது.

ஆமாம் யார் காலத்தில்? சரி, நமது நிகழ் காலத்திலேயே லீவ் சொல்லுவோம்.

"ஹலோ! சார். நான் தான் பேசறேன். எங்க பாட்டி திடீர்னு இறந்துட்டாங்க. போகணும். ஒரு வாரம் லீவ் போட்டிருங்க சார்!"

ஆஃப் செய்யும் முன், "டேய்! உனக்கு எத்தனை பாட்டிகள்?" குரல் தேய்ந்து மறைந்தது.

"கமான்! லெட்ஸ் கோ!"

திட்டப்படி ஹாக்கிங் மற்றும் ஐன்ஸ்டைனை இருவரையும் அழைத்துக் கொண்டு இப்போது 1686 நோக்கி காலத்தின் அச்சில் நெகட்டிவ் திசையில் பயணம்.

ர் ஐசக் நியூட்டன் தனது அறையில் Philosophiæ Naturalis Principia Mathematica எழுதிக் கொண்டிருந்தார். நாங்கள் போய் இறங்கினோம்.

"யார் இவர்?"

"இவர் தான் இவங்களுக்கெல்லாம் தாத்தா. இவரெல்லாம் இல்லாட்டி நீயே கிடையாது. இவர் உனக்கு கடவுள் மாதிரி!"

"ஓ!"

"யார்... யார் நீங்கள்?" என்று கேட்டார்.

"சார்! நாங்கள் எல்லாம் உங்களுக்கு பிற்காலங்களில் இருந்து வருகிறோம். காலத்தின் ஆரம்பப் புள்ளியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். நீங்களும் வர வேண்டும் என்பது எங்களின் ஆசை! வாருங்கள் போகலாம்!" என்றேன்.

கிட்டத்தட்ட அவரை இழுத்துக் கொண்டே வந்து விட்டோம்.

நியூட்டன் இன்னும் திகைப்பாய் பார்த்துக் கொண்டிருக்க, கலம் மேலும் வேகமாகப் போகத் தொடங்கியது.

"சார்! நான் உங்களைப் பார்த்தவுடனே ஒரு கேள்வி கேக்கணும்னு வெச்சிருக்கேன்! கேக்கலாமா?" உற்சாகமாக கேட்டேன்.

என் ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ந்தார் நியூட்டன்.

"கேளுப்பா! எதில் கேக்கப் போற? மெக்கனிக்ஸ், ஆப்டிக்ஸ், ஸ்பீட் ஆஃப் சவுண்ட், மேதமேடிக்ஸ்...?"

"சார்! அதைப் பற்றி எல்லாம் ஒரு ஃபுல் புக் நீங்களே எழுதிட்டீங்க! அதை எல்லாம் அனலைஸ் பண்ணியும் பல புக்ஸ் இருக்கு சார்! நான் கேக்கப் போறது வேற ஒண்ணு! உங்க தலை மேல ஒரு ஆப்பிள் விழுந்துச்சு இல்லையா? அதை அப்புறமா என்ன பண்ணீங்க? அப்படியே சாப்பிட்டுடீங்களா இல்லை ஜூஸா அடிச்சிட்டீங்களா? இந்த இன்பர்மேஷன் தான் எந்த புக்லயும் இல்லை சார்! நீங்களே சொன்னாத் தான் உண்டு!"

'இது எதிர்பார்த்தது தான்!' என்பது போல் ஐன்ஸ்டைனும், ஹாக்கிங்கும் உதட்டைப் பிதுக்கி, தத்தம் ஆறுதல்களைப் பரிமாறிக் கொள்ள, நியூட்டன் அதிர்ச்சியாகிப் பார்க்க, 'ணங்! ணங்!' என்று யாரோ தலையில் அடித்துக் கொண்ட சத்தம் கேட்டது.

சூழலை உணர்ந்து நைஸாக அங்கிருந்து நழுவினேன். காக்பிட்டுக்குள் நுழையும் போது,

"திரும்பி வந்திடாத!" என்ற குரல் பின்னால் கேட்டது. யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.

மூவரும் வெகுவாக டிஸ்கஸ் செய்து கொண்டிருப்பதும், மறுப்பதும், விவாதிப்பதும் இங்கிருந்து பார்க்க சந்தோஷமாக இருந்தது.

"எனக்கு எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கு தெரியுமா, இது போன்ற மேதைகளுடன் கூட சேர்ந்து பயணம் செய்வதற்கு!" என்று சொன்னேன் XFA9Cயிடம்.

"ஹூம்! எனக்கு தான் அந்த கொடுப்பினை இல்லை! உன்னுடன் அல்லவா பயணம் செய்ய வேண்டி இருக்கின்றது!" என்று பெரு மூச்சு விட்டது.

லத்தின் கால முள் ஸீரோவை நோக்கி வெகு வேகமாக நகர்ந்து, தொட்டது.

அனைவரும் ஆர்வமாக வெளியே வெளியைப் பார்த்தோம்.

அங்கு இருந்தது எப்படிப்பட்ட அனுபவம் என்றே என்னால் சொல்ல இயலவில்லை. நாங்கள் எங்கு இருந்தோம் என்பதை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

பெருவெடிப்பு.

இதைப் பற்றி கூற அனைவரிலும் சீனியரான நியூட்டன் அவர்களால் தான் முடியும் என்று எல்லோரும் ஆர்வமாக அவர் முகத்தைப் பார்த்தோம். XFA9Cயும் கலத்தை நிறுத்தி விட்டு க்றீச் என்று தன் குரலில் சீட்டி அடித்தது.

"6accdae13eff7i3l9n4o4qrr4s8t12ux." என்றார் சர் ஐசக் நியூட்டன்.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

Wednesday, July 30, 2008

VR பாட்டி!

தடுகளால் மெல்ல ஒற்றி எடுத்தாள்.

"மாம்..! டோண்ட் வொர்ரி! எனக்காக பார்க்காத! லிப் டு லிப் கிஸ்ஸே நீ குடுக்கலாம்..! டாட் அவ்ளோ பெரிய வேலை பண்ணி இருக்கார்!" என்றான் ப்ரக்யன். அவன் கண்கள், கைவிரல்கள், கவனம் முழுதும் கையோடு கொண்டு வந்திருக்கும் ஸோல்ஜர் வெர்ஷன் 128-ல் ஆழ்ந்திருந்த போதிலும் காதுகள் விறைப்பாக கேட்டிருந்தன.

"ஷூ! நீ கேமை மட்டும் பாரு! என் ஹஸ்பண்டை நான் எங்க வேணா கிஸ் பண்ணுவேன். டு யுவர் பிஸ்னெஸ் மை டியர் சைல்ட். ராட்ஜன்! இதெல்லாம் நீ கொடுக்கற செல்லம். இவனை x7 மூவிக்கெல்லாம் கூட்டிட்டு போகாதேனு சொன்னேன். கேட்டியா?" என்றாள் மாக்யூன்.

கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. பெங்களூர் டு சென்னை செல்லும் எட்டு வழிப்பாதையில் 200 கி,மீ.க்கு மேலே என்ற லேனில் அதிவேக காரில் சென்று கொண்டிருந்தனர். செறிவூட்டப்பட்ட ஐ.ஆர். கதிர்கள் ஒழுங்கமைக்க, ஐம்பது கி.மீ.க்கு ஒன்றாக ஒளித் துணுக்குகள் கண்ட்ரோல் செய்ய, பயணம்.

"மாம்! நீ இன்னொரு கிஸ்ஸும் குடுத்திடு, அந்த சீக்கில்! டாட் கண்டுபிடிச்சு கொடுக்காட்டி, நீ இன்னேரம் எவ்ளோ டென்ஷனாகி இருப்ப? நான் வேணா காதை மூடிக்கறேன்!"

உண்மை தான்.

வீட்டில் இருந்து கிளம்பும் போது,

"ராட்! என்னோட அயர்ன் ரிங் காணோம். கொஞ்சம் தேடித் தர்றீங்களா? நான் இங்க ப்ரேஸியர்ல பிஸியா இருக்கேன்.!"

"நான் வந்து ஃப்ர்ஸ்ட் உன்னோட ப்ரேஸியர் ப்ராப்ளத்தை ஃபர்ஸ்ட் சால்வ் பண்ண ஹெல்ப் பண்ணவா? அயர்ன் ரிங் அப்புறம் பார்த்துக்கலாம்..!"

"உதை படுவ! ரிங் முதல்ல தேடு மேன்! இல்லாட்டி மடிவாலா ப்ளை ஓவர் - 16ல போக முடியாது. அது தானே என்ட்ரி ஷீட்!" இறுக்கமாகப் பெரு மூச்சு விட்டாள்.

'ரீசைக்ளிங் செர்ட்டிஃபிட்' ஷீட் ஒட்டப்பட்ட காகிதச் சுவற்றில் ஒரு சிகப்புப் புள்ளியைத் தொட, ஒரு சின்ன எல்.சி.டி. ஸ்க்ரீன் பளிச்சிட்டது.

கூகுள். SHSAT.
பெங்களூரு ஸோன். மாரத்தஹள்ளி ஏரியா. X34Dc.
மாக்யூன். மடிவாலா ப்ளை ஓவர் - 16 என்ட்ரி ரிங்.

எண்ட்ரி கொடுக்க, கூகுள் சாட்டிலைட் சர்வரில் கட்டளை பைட்கள் பாய்ந்து, சாட்டிலைட்டின் சென்ட்ரல் கண்ட்ரோல் சிஸ்டத்திற்கு ஆணை பறந்து, ராட்ஜனின் வீடு ஃபுல் தேடுதல் வேட்டைக்கு ஆட்படுத்தப்பட்டது.

மாக்யூனின் அடையாள எண் பதிந்த ரிங்கில் அவளது டி.என்.ஏ. சாம்பிள் பதிக்கப்பட்டுள்ளதால், கவர்ன்மெண்ட் டேட்டா சர்வரில் இருந்து தகவல் பெற்று, தேடுதலுக்கு உட்பட்ட அத்தனை உயிரற்ற (கார்பன் டேட்டிங் முறையில் பகுப்பு!) பொருட்களிலும் தேடப்பெற்று,

மைக்ரோ நொடிகளில் ரிசல்ட் பளிச்சிட்டது.

பெட் ரூம். படுக்கையின் கீழ். நேற்று இரவு கழட்டப்பட்டது. காரணம் ***. கட்டிலின் கிழக்குக் காலில் இருந்து நான்கு இஞ்ச், மேற்கு காலில் இருந்து பதினொன்று இஞ்ச்.

இயந்திரங்களுக்கான சிமுலேட்டட் ப்ரோக்ராம் எழுதிக் கொண்டிருந்த ப்ரக்யன் திரும்பி,

"டாட்! கண்டுபிடிச்சாச்சா? இல்லாட்டி மாம் ரொம்ப சத்தம் போடுவாங்க. தென் நான் அந்த ஆக்ஷனுக்கான ஸ்டிமுலேஷன்ஸ் என்னனு கண்டுபிடிச்சாகணும்..!" சுகமாக அலுத்துக் கொண்டான்.

சேலத்தில் இருக்கும் 156 வயதான அத்தை ரேயான் அம்மாளின் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்று கொண்டிருக்கும் போது, தர்மபுரியை நெருங்குகையில் வீடியோ போன் அழைத்தது.

கார் கண்ட்ரோலை கார் எமுலேட்டரிடம் ஒப்படைத்து விட்டு, ஆன் செய்தால் அவனது பாஸ்.

"ராட்! ஒரு அர்ஜண்ட் மீட்டிங். சகாரால இருந்து பிலிப்ஸ் கால் பண்ணினான். டெஸர்ட் அனலைஸ் கோடிங்க்ல ஏதோ புரியலயாம் அவனுக்கு! நீ தான் கொஞ்சம் கைட் பண்ணணும்!"

"பாஸ்! நான் இப்போ ட்ராவல்ல இருக்கேன்! அவனை இதுல காண்டாக்ட் பண்ணச் சொல்லுங்க!"

"ஸகாரால இருக்கிற டிவைசஸ் அந்த அளவு ஃபெசிலிட்டில கிடையாது. ஒண்ணு செய்..?
இப்ப எங்க ட்ராவல் பண்ணிட்டு இருக்க..?"

"தர்மபுரி கிட்டக்க வந்துட்டேன்!"

"ஹைவேல தான போய்ட்டு இருக்க? தேன்கனிகோட்டை பக்கத்துல ஒரு வி.காப் இருக்கு பாரு. சியர்ச் அடிச்சுப் பார்த்தா இருக்கு. அங்க போய் அபீஸ் நம்பர்க்கு காண்டாக்ட் பண்ணு. லிங்க் போட்டுக் குடுத்திடறேன். ஜஸ்ட் ஒரு ஆஃப் அன் ஹவர் தான் ஆகும். பை!"

ஒப்புதலா இல்லையா என்று கேட்காமலேயே ஆஃப்.

எவ்வளவு தான் மாற்றங்கள் வந்தாலும் எ பாஸ் இஸ் ஆல்வேஸ் எ பாஸ்.

அடுத்த இருபதாவது மீட்டரில் ஒரு வீடியோ ஹாப் இருப்ப்தை சொல்ல, கார் ஆட்டோமேடிக்காக நிறுத்தியது.

"கைஸ்! இங்கயே இருக்கணும் என்ன? நான் போய்ட்டு ஜஸ்ட் ஒரு ஆஃப் அன் ஹவர்ல வந்திடெவேன்..!"

"யூ டோண்ட் வொர்ரி டாட். ஐ வில் கேர் மாம்..!"

சின்ன பச்சை நிறத்தில் பெட்டி போல் இருந்தது. உள் நுழைந்தான். மைக். புள்ளி காமிரா. எல்.ஸி.டி. மானிட்டர். பட்டன் ஃபோன்.

அலுவலக எண்களை ஒற்றி கனெக்ட் செய்து, சகாராவிற்கு லிங்க் அடித்து பேசத் தொடங்கினான்.

"பிலிப்ஸ்! ராட் ஹியர்? என்ன ப்ராப்ளம்..?"

"சாரி ராட்! இங்க ஒரு சின்ன அனலிஸிஸ் ஷீட்ல நான் கம்பாடிபிள் டேட்டா டைப் வருது. அதை பத்தி தான்...!"

பேச்சின் போக்கில் டெக்னிக்கல் வார்த்தைகள் பறந்தன.

இருபத்தைந்து நிமிடங்கள் கழித்து, வெளியே வந்து ராட்ஜன் உடலை உதறிக் கொண்டான்.

எட்டு வழி ஹைவேயில் அவ்வப்போது வித வித வேகங்களில் பறந்து கொண்டிருந்த கார்கள், லாரிகள், ஆட்டோஸ்... கடைசி லேனில் மெதுவாக அசை போட்டு நடக்கும் மாட்டு வண்டி...!

காட்! இன்னுமா இதை எல்லாம் வைத்திருக்கிறார்கள்!

காருக்கு வந்து கதவைத் திறந்து பார்க்க, உள்ளே யாரும் இல்லை..! ப்ரக்யன், மாக்யூன் இல்லை.

"பாட்டி...! இதை எப்படி செய்யறதுன்னு சொல்லுங்களேன்..!" மாக்யூன் கேட்டாள்.

தென்னை ஓலைகளால் வேயப்பட்டிருந்த குடிசை. ஓரத்தில் கிணறு. தண்ணீர் எடுக்க சகடை. கயிறு பக்கெட். துணி துவைக்க கல். அருகில் சில மரங்கள். திட்டுக்கள். அவற்றின் மேல் மாக்யூனும், ப்ரக்யனும் அமர்ந்திருக்க, ஒரு பாட்டி மெதுவாக நடந்து வந்தாள்.

ப்ரக்யன் அதிசயமாக கேம் ஸ்டேஷனை கீழே வைத்திருந்தான். அவன் கையில் சின்ன தட்டு. அதில் சிகப்பாய் எண்ணெய் மினுக்க சில துண்டுகள். மாக்யூனின் கையில் சற்று பெரிய தட்டு. அதில் கரைசல்.

"ஒண்ணும் இல்லைமா..! மாங்கா துண்டெல்லாம் எடுத்து நல்லா காய வெச்சு, இடிச்சு எண்ணெய்ல போட்டு கொதிக்க வெச்சு உப்பு, மிளகாய் எல்லாம் போட்டு பாட்டில்ல போட்டு வெச்சிரணும். அப்படி பண்ணினது தான் இது. என்னப்பா நல்லா இருக்கா..?"

"மாம்! இட்ஸ் அமேஸிங். என் கண்ணுல தண்ணி தண்ணியா வருது. பட் ஐ லைக் திஸ் ஃபுட். இன்னும் கொஞ்சம் ஊட்டு. நான் இத தொட்டுக்கறேன்.." வழித்து நக்கில் பூசிக் கொண்டு, 'ஸ்..ஊ..' என்றான்.

"உன்னோட கையில் இருக்கறது பழைய சோறுன்னு சொல்லுவோம்..."

"இது ஐ நோ பாட்டி! 'ஹவ் டு அவாய்ட் பேட் ஃபுட்ஸ்'னு ஒரு சீரிஸ் பாக்கறேன். அதுல இதையும் சேத்திருக்காங்க...! பட், ஹவ் டேஸ்ட்டி இஸ் திஸ்..? அதாவது ரொம்ப நல்லா இருக்குனு சொல்றேன். ஆனா இது எல்லாம் கெட்ட உணவுகள்னு நாங்க படிச்சிருக்கோம்.."

"இது கெட்ட உணவா? நீங்கள் படிக்கின்ற பாடங்கள் அனைத்தும் பெரிய நிறுவனங்கள் கைக்கு போய் பல வருடங்கள் ஆகின்றன. அவர்கள் உங்களை அப்படியே அவர்களது வாணிகத்திற்காக் மோல்டு செய்திருக்கிறார்கள்.எனவே அவர்களின் பிஸ்ஸாவும், பர்கரும், சீஸ் ரொட்டியும், சிக்கன் கட்லெட்டும் விற்பதற்காகவே நமது பாரம்பரிய உணவுகளான பழைய சாதம், பருப்பு வெங்காயம், உளுந்தங் கஞ்சி எல்லாவற்றையும் கெட்டது என்று சொல்லி இருக்கிறார்கள். நீங்களும் அதை நம்புகிறீர்கள்..."

"பாட்டி.. நீங்க அந்த க்ரூப்பா..?"

"எஸ். ஒரு காலத்தில் இருந்தேன். அதற்கு தண்டனையாகத் தான் கிராமத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறேன். எவ்வளவு தூரம் என்று பார்? ஹைவேஸில் இருந்து ரோடுகளை அகலப்படுத்துகிறேன் என்று சொல்லி கிராமங்களை நெருக்கு, நெருக்கி, இன்று குறுகிக் கொண்டே வருகின்றது..."

"பாட்டி! ஐ அண்டர்ஸ்டுட். பட் தேசத்தின் க்ரோத்துக்கு இதெல்லாம் அவசியம் இல்லையா..?"

"தேசத்தின் வளர்ச்சி என்பது என்ன? அதன் மக்களின் வளர்ச்சி..! அது முழுவதும் இங்கே நிகழாமல் தேசம் வளர்ந்ததாக எடுத்துக் கொள்ள முடியாது தானே?"

மாக்யூன் சொல்வதற்கு முன்,

"டார்லிங்! இங்கே எப்படி வந்தீர்கள்? மை காட்! ப்ரக்! என்ன சாப்பிடறே? ஃபூல்! இதெல்லாம் பாக்டீரியன் கண்டெய்ன்ட் ஃபுட்ஸ்! படிச்சதில்லையா நீ? மெஷினரி சிமுலேட்டட் எல்லாம் எழுதற. மாக் நீ சொல்ல..! சரிதான். நீயும் என்ன கையில் வெச்சிருக்க? ஓல்டு ரைஸ். உனக்கே தனியா சொல்லிக் குடுக்கணும் போலிருக்கு. யார் இந்த பாட்டி?"

வீட்டின் வாசலில் பொறிக்கப்பட்டிருந்த அடையாளக் குறியீட்டைப் பார்த்தான்.

"டாம்ன்! இது ப்ரிஸனர்ஸ் ப்ளேஸ்! மாக்! நீ ஒரு அவய்டபிள் பெர்சனிடம் பேசிட்டு இருக்க. கவர்ன்மெண்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? கமான். கெட் அப். ஐ ஹேவ் டு ஃபேஸ் எ லாட் ஆஃப் ப்ராப்ளம்ஸ் ஆன் திஸ்! ப்ரக்! அத கீழே வை. ஹேன்ட் வாஷ் பண்ணனும். கார்ல டிஸ்க்யூ இருக்கு. வா போகலாம். மாக் கிளம்பு...!"

"ராட்! இந்த பாட்டி என்ன என்னவோ சொல்றாங்க தெரியுமா?இண்ட்ரஸ்டிங்..!"

"அதெல்லாம் நாம கேட்கக் கூடாது. வி ஹேவ் எ சோஷியல் லைஃப். அவங்க பேச்சை எல்லாம் கேட்டா நாமும் இந்த மாதிரி ப்ளேஸ்ல் வந்து உக்காந்திட்டு பல் குத்திட்டு இருக்கணும். நோ! ஐ ஹேவ் க்ளப்ஸ், எய்ட்டீன் ஸ்டார் ஹோட்டல்ஸ், ஸ்விம்மிங் பூல்ஸ், மீட்டிங்ஸ்.. அதை எல்லம் விட்டுட்டு இங்க வந்து மாடு மேய்யக்க சொல்றியா? கமான் கெட் அப். நாம இவ்ளோ நேரம் இங்க இருக்கிறது தெரிஞ்சாலே ஆக்ஷன் மே பாஸ் ஆன் அஸ்..!"

கிட்டத்தட்ட இருவரையும் இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

"உங்க ரெண்டு பேரையும் கார்ல காணாம ஒரு நிமிஷம் நான் ஆடிப் போய்ட்டேன். உடனே ஹைவே ஹெட் ஆபீஸ்க்கு கால் பண்ணி, அவங்க சாட்டிலைட் சியர்ச் போட்டு உன்னோட ரிங் அடையாளம் வெச்சு, ஃபிஃப்டி கி.மீ. சர்க்கும்ஃபெரன்ஸ்ல அலசி, ரெட் அலர்ட் வந்து நீங்க இங்க இருக்கீங்கனு சொல்லி..! எவ்ளோ ப்ராப்ளம் பண்றீங்க, ஒரு ஆஃப் அன் ஹவர்ல...!"

"டாட்! இந்த பாட்டி தந்த ஃபுட்.. இட்ஸ் வெரி நைஸ்..! பார் இன்னும் என் கண்ணுல தண்ணி வருது. அப்படியே டங்ல நெருப்பை வெச்ச மாதிரி எரியுது. எவ்ளோ காரம்! ஒரு ஹெல்ப் பண்ணு..!"

"என்னடா?"

"இந்த பாட்டியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம். இல்லையினா எனக்கு VRல ஒரு கேரக்டரா இப்படி ஒரு பாட்டியை ப்ரோக்ராம் பண்ணிக் குடு..!" என்றான்.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

மண்ணடி மகாவிஷ்ணு.

ண்ணடி வந்திருக்கிறீர்களா?

மளிகைக் கடைகளும், லாரி புக்கிங் ஆபீஸ்களும், வெஜ், நாந்வெஜ் ஓட்டல்களும், மாட்டு வண்டிகளும், சைக்கிள் ரிக்ஷாக்களும், கட்சிக் கொடிகளும், பேனர்களும், முத்தாலம்மன் கோயிலும், ஊதுபத்தி புகையும் எஸ்.டி.டி. பூத்தும், மஞ்சள் மண்டிகளும், வேப்ப மரங்களும் நிரம்பிய எந்தவொரு நகரின் வணிகப் பகுதி போலத் தான் இருக்கும்.

ஆனால் மண்ணடி எனக்கு வித்தியாசமானது.

குறுகிய படிக்கட்டுகளால் செல்லும் ஒற்றை அறையினை மேல் கொண்டு, கீழே வீட்டுக்காரர் இருக்கும் குடித்தனத்தின் எனக்கான பாத்ரூமில் ஒருநாள் மஹாவிஷ்ணு காட்சி அளித்தார் என்றால் நம்புவீர்களா?

"ஏ பசங்களா! கீழ போய் விளையாடுங்க போங்க!" கொஞ்சம் கம்ம்பிய குரலில் கம்மியான வால்யூமில் கூவினேன். சம்மர் லீவுக்கு மாமி வீட்டுக்கு வந்திருக்கும் வானரக் கூட்டம் எனக்கான குளியலறையில் இருந்து தண்ணீரை வாரி இறைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

கையில் வாளி, இடுப்பில் வேட்டி, தோளில் ஒரு துண்டுடன் பரிதாபமாக நின்ற என்னைப் பார்த்து என்ன தோன்றிற்றோ, என் மேல் ஒரு வீசு வீசி விட்டு, ஓடியது ஒரு கு.குரங்கு.

மூன்றடிக்கு இரண்டடியில் இருந்தது. தகரத் தடுப்பு. மேல் கீழ் முனைகள் கூர்மையுடன் ஆங்காங்கே பொத்தல்கள் விழுந்து, உள் இருப்பவனின் மானத்திற்கு வேட்டு வைக்கும். ஒரு பக்கெட். மஞ்சள் கலந்த உப்பு நீர். பலியாடு போல் நான். தகரத்தை இழுத்து சாத்தி கொக்கினேன். 'க்றீச்'.

காற்றில் ஈர லக்ஸ் வாசம். கைக்கு எட்டும் உயரத்தில் பதிந்திருந்த கல்லில் ஒரு மஞ்சள் துண்டு கரைந்து சுவரில் வழிந்திருந்தது. சுமித்ரா வந்து குளித்திருக்க வேண்டும். மாமி மகள். நெல்லை காலேஜில் இரண்டாம் ஆண்டு.

நன்றாக மூச்சை இழுத்து மஞ்சளை உள் நிரப்பிக் கொண்டேன். துண்டை உதறி கட்டிக் கொண்டு, தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டு, சுவரில் வழிந்திருந்த மஞ்சள் கரைசலின் படிவத்தைப் பார்க்க தூக்கி வாரிப் போட்டது.

க்ரீடம். சாந்தமான முகம். சக்கரம். சங்கு. கதை. முத்து மாலைகள். மஞ்சள் வேட்டி.

எனக்கு சிலிர்த்துப் போனது. அவரது கண்களில் ஓர் அமைதி தெரிந்தது. என் கண்களை தேய்த்து தேய்த்துப் பார்த்தேன். அது மகாவிஷ்ணுவே தான். முன்னரே நேரில் கண்ட அனுபவம் இல்லை எனினும், 'நான் தான் விஷ்ணு' என்று சொன்னால் கண்ணை மூடி நம்பலாம் போன்ற முகம்.

பாட்டியின் ஞாபகம் வந்தது.

"வேலு! அளுவாதப்பா. நீ எங்க போனாலும் பொழச்சுக்குவ. நான் உனக்காக சேர்த்து பாகவதம் படிக்கிறேன்பா. ஒரு நாள் இல்ல, ஒருநாள் நான் வைகுண்டம் போனவுடனே, பெருமாள்கிட்ட வேண்டிக்கறேன். என் பேரனைக் காப்பாத்துனு. நீ கவலைப்படாம பட்டணம் போப்பா!"

ரெண்டு வருடங்களுக்கு முன்பு பாட்டி போய் பெருமாளிடம் போட்ட பெட்டிஷனுக்கு, இப்போது தான் தரிசன்ம் சாங்ஷன் ஆகி இருக்கின்றது.

கண்களில் வழிந்த லைபாய் சோப்பின் நுரை மறைக்க, வழித்து விசிறினேன்.அது படலமாய் தெறித்து விழுந்தது.

ஒரு காட்சி அதில் தெரிந்தது.

ஒரு கப்பல். நான்கு புகைபோக்கிகள். கடல்.

ஏதோ ஒன்றை பெருமாள் என்னிடம் உணர்த்துகிறார் என்று தோன்றியது.

"வேலு! நாயக்கர் மண்டிக்கு எத்தனை பெட்டி போயிருக்கு? காதர் லாரி தான..?"

"..."

"டேய்! என்ன ஆச்சு உனக்கு? காலையில இருந்து ஒரு மாதிரியா இருக்க?"

"இல்லண்ணே! ஒரு கப்பல் ஹார்பருக்கு வந்து எறங்கறாப்ல எனக்கு தோணுதுண்ணே! அத பத்தி தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன்! எதுக்கும் நம்ம லாரி எல்லாத்தையும் தயாரா வெச்சுக்குங்க. முடிஞ்சா வாடகைக்கு கிடைச்சா அதையும் ரெண்டுக்கு எடுத்து வெச்சுக்குங்க. மொத்தமா லாபம் வரும்னு எனக்கு தோணுது."

"என்ன உளற்ரே? புயல் சின்னம் வலுத்து 100 கி.மீ. தூரத்துல இருக்கு. எல்லா கப்பலையும் வைசாகுக்கு திருப்பி விட்டுட்டு இருக்காங்க. இப்ப போய் கப்பல் வருதுன்னுட்டு! போ! பகல் கெனா காணாத! பொழப்ப பாரு!"

அடுத்து நடந்தது தான் அதிசயம்.

புயல் வலுவிழந்து ஒரிசா, ஆந்திரா பார்டரை நோக்கி நடக்க, கொழும்புவில் இருந்து ரங்கோன் செல்லும் இலங்கையின் சரக்கு கப்பல் ஒன்று சுழலில் இருந்து தப்ப சென்னைக்குத் திருப்பப்பட்டது. சரக்கு முழுதும் வாழைத்தார், தேங்காய், அரிசி, எண்ணெய் - அத்தனையும் விவசாய வணிபப் பொருட்கள். கப்பலிலேயே வைத்திருக்க பொருள் கெடும் என ஹார்பரிலேயே சரக்கு இறக்கி பேர்பாதி விலைக்கு விற்று தீர்க்க, சிட்டி முழுதும் உணவு லாரிப் போக்குவரத்து அதிகரிக்க, இந்தப்பக்கம் செங்கல்பட்டு வரை, அந்தப்பக்கம் சித்தூர் வரை ராத்திரி , பகல் பாராமல் லோடு அடித்து... எல்லா லாரி ஓனர்களுக்கும் அந்த வாரம் செமத்தியான தீபாவளி.

"எப்படிப்பா வேலு உனக்குத் தெரிஞ்சுது?"

"எல்லாம் கடவுள் என்கிட்ட சொன்னதுண்ணே!"

கோடை விடுமுறை முடிந்து எல்லா வாண்டுகளும் சுமித்ராவும் அவரவர் வீட்டிற்கும் ஹாஸ்டலுக்கும் சென்று செட்டிலாகி விட, மகாவிஷ்ணு எனக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் காட்சி அளித்தார்.

சுவரில் படிந்த மஞ்சள் கரைசலும், விசிறி அடிக்கும் லைபாய் நுரையும் என் வருங்காலத்தை வளமாக்கின.

"அண்ணாச்சி! நீங்க இன்னிக்கு பூடான்ல 34-ல சீட்டு வாங்குங்க! அஞ்சு லட்சம் லம்ப்!"

"பீட்டரு! 1Cல போ! திருவொற்றியூர்லயே கை வெச்சிடாத! அடயறு ப்ரிட்ஜ் திரும்பும் போது கைக்கு கிடைக்கற பாக்கெட்டுல ப்ளேடிடு! மாசக் கடைசி தான். ஆனா கை நிரம்பும்னு தோணுது!"

"முருகா! இன்னிக்கு மங்காத்தா வேணாம். ரெய்டு இருக்கலாம்!"

"மாணிக்கம்! கிண்டில மூணுல காடு! மொத்தமும் அள்ளிக்கலாம்!"

"பாய்! இன்னிக்கு வாணியம்பாடி போவேணாம். லெதர் சரக்குல உன்ன ஏமாத்திருவான்!"

"நாயகம் சார்! இன்னும் ஒரு வாரத்துக்கு ஏர்போர்ட் பக்கமே போயிடாதீங்க! தூண்டிலோடு கஸ்டம்ஸ் காத்திட்டு இருக்கு.!"

"சார்! ஐ.டி. எப்ப வேணா உங்க மேல பாயலாம். இன்னும் மூணு நாள்ல எப்ப வேணா! தப்பிக்க ஒரு வழி தான் இருக்கு! வில்லிவாக்கம் பஸ் ஸ்டேண்ட் போனிங்கனா மேரி பிஸ்கட் ஸ்டால்னு ஒண்ணு இருக்கு. அங்க போய் ஜோசப்னு கேட்டீங்கனா வர்றவன்ட்ட என் பேரை சொல்லி பணத்தை குடுத்து வைங்க! நல்லதே நடக்கும்!"

"பரிமளம் அம்மா! கவலைப்படாதீங்க! உங்க பொண்ணுக்கு இன்னும் ஒரு மாசத்துல கரு உண்டாகும். இந்த எலுமிச்சம் பழத்தை பொண்ணை சுத்தி போடுங்க!"

ஏ.ஸி., சாட்டிலைட் டி.வி., பொலிட்டீசியன்ஸ் சப்போர்ட், பக்தர்கள் கூட்டம், பக்தைகள் வரிசை, சிஷ்ய கோடிகள், பால், செம்பு, காவி, தாடி, குங்குமம் என இப்போது ஃபுல் டைம் ஸ்வாமி வேல்முருகானந்தாவாக மாறிவிட்ட அடியேனைப் பார்க்க எப்போதாவது

மண்ணடி வந்திருக்கிறீர்களா?

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

இயந்திர எழுத்து!

"குமார் போய்க்கிட்டு இருக்கான். அப்ப வந்து ஒரு கார்.. ப்ளைமவுத்... வேணாம் அம்பாஸிடர், மாருதி.. இல்லை ப்ளைமவுத்தே இருக்கட்டும். நல்ல வெள்ளை கலர். அவன் இல்லை. கார். அந்த கார் வந்து ரோடு கார்னர்ல திரும்புது. குமார் கைல சர்ட்டிபிகேட்சோட, வேற ஏதோ நெனப்புல... வேலை நெனப்புலனு போட்டுக்கோ. ரோட்டை க்ராஸ் பண்றான். காரை கவனிக்கல அவன். நல்ல ஸ்பீட்ல வந்த கார், ப்ரேக் போட்டும் அவன் மேல மோதிருச்சு. குமார் கொஞ்ச தூரம் போய் விழுந்திடறான். அவசரமா கார்ல இருந்து இறங்குற மிஸ்டர் விநாயகம்... இல்லை, மிஸ்.மாலினி அதிர்ச்சியா அவசரமா இறங்குறப்ப அவ போட்டிருக்கற மெல்லிய பாலீஸ்டர் ஸாரி கார் டோர்... இது நல்லா இருக்குல்ல, கார் டோர்... அதுல மாட்டிக்குது. அவ இன்னும் ஷாக்காகறா..! எங்க சொல்லு!" என்றேன்.

"குமார் போய்க் கொண்டு இருக்கிறான். அவனது நினைவுகள் அவனிடம் இல்லை. கிடைக்க வேண்டிய வேலையைப் பற்றிய கவலைகளுடன் கையில் சர்ட்டிபிகேட்ஸ்களுடன் சாலையைக் கடக்கிறான். சாலையின் ஒரு முனையில் இருந்து ஒரு ப்ளைமவுத் கார் திரும்புகிறது. அதன் வெள்ளை நிறத்திற்கு சற்றும் குறையாத வெண்ணிறத்தில் இருக்கும் மிஸ்.மாலினி காரை ஓட்டி வந்தாள். நல்ல வேகத்தில் வந்ததால், சாலையைக் கடக்கும் குமாரைப் பார்த்து , அபாயத்தை உணர்ந்து ப்ரேக் பிடித்தும் கார் அவனை இடித்து விடுகின்றது. குமார் சற்று தள்ளிப் போய் விழுகிறான். அதிர்ச்சியுற்ற மிஸ்.மாலினி அவசரமாக காரை விட்டு இறங்க முயல்கையில், அவள் அணிந்திருந்த மென் பாலீஸ்டர் ஸாரி கார்க் கதவில் சிக்கிக் கொள்கிறது. அவள் மேலும் அதிர்கிறாள்." சொல்லி விட்டு நிறுத்தியது.

கண்களை மூடிக் கேட்டுக் கொண்டிருந்த நான் திருப்தினேன்.

"ஓ.கே. இப்ப என்ன பண்ணணும் தெரியுமில்லையா..?"

"ஐ நோ சார். லேஸர் பீமில் ஸ்கேன் செய்து, தாமிரப் பட்டு க்வார்க் மேகஸீனின் வி.ஐ.பி. அட்ரஸ்க்கு அனுப்பி விட்டு, அக்னாலட்ஜ்மெண்ட் பெற்று, அக்.மெமரியில் பதிந்து கொள்ள வேண்டும். சரியா?"

"இருநூற்று ஐம்பது பர்செண்ட்..!"

2.8 மைக்ரோ நொடிகளில் முடித்து விட்டு, என்னிடம்,

"சார்! என்னிடம் சேர்ந்துள்ள வார்த்தைக் களஞ்சியத்தில் இருந்து பொறுக்கி, உங்கள் கதைகளின் லாஜிக்குகளை இணைத்து என்னால் கதை சொல்ல முடியும் என்று நம்புகிறேன். வார்த்தைகளை தருகிறீர்களா? இல்லை ஸ்டோரில் இருந்து அள்ளட்டுமா?" பணிவுடன் கேட்டது.

எனக்கு ஆச்சரியம்!

தோன்றும் வேகத்திற்கேற்ப கதைகளை எழுத முடியவில்லை என்று வாங்கிய மாடலை ரீப்ளேஸ் செய்ய, கருமாத்தூரில் இருக்கும் ஷாகுள் லேப்ஸில் கேட்க, இந்த இயந்திரனை டிசைன் செய்து தரும் முன்,

"சார்! பர்ப்பஸ் என்ன? மறுபடியும் கதையா?"

"ஆம். என் கதைகளைத் திருத்தி, மேற்பணிகள் செய்ய!"

"தமிழ்க் கதை தானே?"

"ஆம். ஏன்?"

"நோக்கம் பொறுத்து லோட் செய்யப்பட வேண்டிய வார்த்தைகளின் பண்டலை செலக்ட் செய்ய!"

சுவாரஸ்யம்.

"சரி! எனக்கு என்ன தொகுப்பு?"

சன்னமாக நாரிழையைக் காட்டினான். அதன் மேல் மென் துகள்களில் தமிழ் சிறுகதை நானோஸ்கோப்பில் ஜொலித்தது.

"இதில் தமிழ்க்கதைகளுக்கு தேவையான அத்தனை வார்த்தைகளும் உள்ளன. ஒரு, அவன், இவன், தாலி, அம்மா, கண்ணீர், நிலா, பூ, படுக்கை, அதிர்ந்தான், சிரித்தாள், காதல், பஸ், ரயில், மேகம், மோகம், போகம், வயல், நீர், மலை, பேய், புளியமரம், விபத்து, இழப்பு, அரசாங்கம், நேர்மை, ஊழல், லஞ்சம், தமிழ்...!"

எனக்கு கோபம் வந்து விட்டது.

"நான் எழுதும் கதைகளில் வேறு மாதிரி கொடுப்பேன். அம்ப்ரெல்லா அணில்கள். இது இந்த தொகுப்பில் உண்டா..?"

திகைத்தான்.

"சார்! நீங்க சயின்ஸ் பிக்ஷன் எழுதற ஆளா..?"

"கொஞ்சம்..!"

"அப்ப நீங்க இந்த இழையை எடுத்துக்குங்களேன். கி.மு., கி.பி., டைம் மெஷின், உலகம், கிரகம், ஏலியன், அழிந்தது, கடைசி, இருள், 2543, 4751, குழப்பம், பூமி, விண்கலம், ஒளி, சூரியன், அணு, குண்டு, நெருப்பாறு, பூச்சி, மழை, அமிலம்..."

"எனக்கு எல்லாம் கலந்து வேணும்..!"

"ஓ.கே.சார்."என்றவன் சில பண்டல்களைப் பிரித்து இணைத்து நெடுந்தொடர் கண்ணிகள் கொண்ட இழை அமைத்து இந்த இயந்திரனில் பதித்தான்.

C45XE7 மாடல்.

இதற்கு முன்பு A59c மாடல் வைத்திருந்தேன்.

போன தலைமுறையான அதில் மொழி வெர்ஷன் - V15D இன்ஸ்டால் செய்யும் போது, எங்கோ ஒரு புள்ளியில் குளறுபடி ஆகி, ஆடோமெடிக் ரெகவரி சிஸ்டத்தினாலும் சரி செய்ய முடியாமல் போய்...

எனகு இந்த குழப்பம் தெரிய வரும் போது...

கேளுங்கள்.

"பாலு படுக்கையில் இருந்து எழுந்து, நண்டு நுழைந்து பார்கவி மார்பில் நத்தை மழை இரத்தக் கோட்டில் சிதறியது. பாவம் வெடித்து நாயகன் குண்டு அலுத்து இலை சிதறி கிஸ் கொடுத்த எறும்பு திகைத்தான். மமதி நனைந்த சூடு கனிந்து மிஸ்டர் பதறி பின்புறமாய் தேடி இறுக்கம்...!"

ஒரே நாளில் அதை ரீப்ளேஸ் செய்து விட்டு, ('என்ன சார் கதை சொன்னீர்கள்? மெமரி இப்படி குழம்பி போய் இருக்கிறதே?') இதை வாங்கி வந்தேன்.

இப்போது இது சொந்தமாய் கதை சொல்வதற்கான உணர்வு எப்படி வந்திருக்க முடியும்? இந்த திறனுக்கான ஃபைபர் மெமரி ஃபோட்டான்கள் இந்த மாடலிலேயே நிறுவப்பட்டு விட்டதா? கிளைத்த கேள்விகளை விட கிளர்ந்த ஆர்வம் அதிகம்.

"சரி! சில அடிப்படை வார்த்தைகள் தருகிறேன்! முயல்! வடை, நரி, காகம், பாட்டி, அடுப்பு, மரம், பாட்டு! எங்கே கதை சொல், பார்க்கலாம்!"

சில மைக்ரோ செகண்டுகளில் L1, L2 ஸெகண்ட்ரி மெமரிகளில் சேர்த்து வைத்திருந்த எனது கதைகளின் லாஜிக்குகளையும், தன் சொந்த வார்த்தைகளையும் சேர்த்து கோர்த்து சொன்னது.

"நரியின் அடுப்பை மரம் சுட்டுக் கொண்டிருந்தது. காகத்தை தூக்கிப் போன பாட்டிடம் இருந்து, பாட்டியை கேட்டது வடை!"

"ஏ முட்டாள் இயந்திரமே! நீ சொன்ன கதையில் எல்லாம் இருந்தன. ஆனால் அடிப்படையாக அர்த்தம் என்று ஒன்று வேண்டும். அது இல்லை! நீ வார்த்தைகளை வைத்து கதை எழுதலாம். பொருள் இருக்க வேண்டும். நீ ஒரு முட்டாள்!" சிரித்தபடி.

"மன்னியுங்கள். என்னை முட்டாள் எனாதீர்கள். உங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு epic-ஐ நான் கொஞ்சம் படித்து புரிந்து கொண்டேன்!"

"epic-ஆ? என்ன?"

"ஜெயமோகன் என்ற ஆதிகால படைப்பாளியின் விஷ்ணுபுரம்!"

நான் வாய் பிளந்தேன்.

"என்ன விஷ்ணுபுரத்தை முழுதும் படித்து புரிந்து கொண்டாயா? எங்கிருந்து?"

"எனது ரீடிங் செல்ஃபில் போட்டு வைத்திருந்தீர்கள் அல்லவா? அங்கிருந்து. முழுதும் படிக்கவில்லை. நாற்பது பக்கங்கள் வரை தான். அடுத்த பக்கம் போவதற்குள் 7th CPU-க்கு செல்லும் ப்ரைமரி ஒயர்கள் எல்லாம் தெறித்து, பிய்ந்து ஆங்காங்கே கரண்ட் கன்னாபின்னாவென்று பீச்சியடித்து, வோல்டேஜ் தாறுமாறாகி, ஜீனர் டயோடு நான்கைந்து புகைந்து போய், இண்டக்டரில் மேக்னடிக் ஃபீல்டு மாறி மாறி துருவம் காட்டி... யப்பா! ஏ.ஆர். சிஸ்டம் பூட் அப் ஆகி என்னைக் காப்பாற்றியது. இல்லாவிடில் என்னவாகி இருப்பேன்? என் சிந்தனை பைட்டுகள் பூஜ்யம் ஆகின்றன...!"

"தேவையா உனக்கு? பேசாமல் நான் சொல்கின்ற கதைகளை மட்டும் எழுதிக் கொண்டிரு!"

"சரி தான்!" என்றது.

"ப்படி இருக்கின்றது என் முதல் கதை?" அதன் முகத்தில் பெருமிதமோ, மகிழ்வோ, ஆர்வமோ தெரியவில்லை. மழை விழுந்த எருமை முகம்.

"உன் சுயசரிதையா, என்னை கவிழ்க்கிறாயா இல்லை உன்னையே கலாய்க்கிறாயா என்றே தெரியவில்லை. போகட்டும். கதைக்குப் பேர் என்ன?" கேட்டேன்.

"இயந்திர எழுத்து..!" என்றது உணர்ச்சியே இல்லாமல்.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

Monday, July 28, 2008

சைன்ஸ்.

"ரு வேளை சாமி வந்திருக்குமுங்களா..?"

செல்லம்மா சொன்னதக் கேட்டு கொஞ்சம் பேரு அவங்க பக்கமா திரும்பினாங்க. கூச்சப்பட்டு அவங்க புருசன் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டாங்க.

"அக்கா சொல்றதுலயும் தப்பில்லிங்க மாமா.. நம்ம கருப்பராயன் சாமி பாம்பு மேல தானுங்க வருவாரு.. அவரு வந்துட்டு போயிருக்காரு போலிருக்குதுங்க.." தனசேகர். செல்லம்மாளின் தம்பி.

சேர்வமலை மேல முருகனுக்கு ஒரு கோயில் இருக்குதுங்க. ஏதோ பாளயக்கார ராசா ஒரு காலத்துல கட்டி வெச்ச கோயிலுங்களாம். இப்ப அது கொஞ்சம் காடு மண்டிப் போன இடங்களா, அதனால உள்ளூர்க்கார பெரிய மனுசங்களே கொஞ்சம் கைக்காச போட்டு, ஊருலயும் மிச்சத்த வசூல் பண்ணி ஒரு மாதிரி ரோடு போட்டுருக்காங்க.

ஊருக்கு கொஞ்சம் ஒதுக்குப்புறமா இருக்கறதாலயும் டிஸ்ட்ரிக்ட் போலீசு லிமிட்ட க்ராஸ் பண்ற பார்டராவும் இருக்கறதால இந்த கள்ளச் சாராயம் காச்சறவன், செயில்ல இருந்து தப்பிச்சு வந்தவன் எல்லாரும் இந்த மலய தாண்டி தாங்க தப்பிச்சு போவாங்க.

என்ன தான் ஊருக்குள்ள உத்தமனா இருந்தாலும் சரக்குன்னு வந்திடுச்சுனா நாட்டமல இருந்து எல்லாருமே ஒண்ணு தானுங்களே! ஆனா முருகன் இருக்கற எடத்துல எப்படி சரக்கு குடிக்கறதுனு நெம்ப யோசிச்சுங்க ஒரு காரியம் பண்ணாங்க!

பாதி வழியில கருப்புசாமிக்கும் சின்னதா ஒரு கோயில கட்டிப் போட்டாங்க. கருப்புசாமிக்கு என்ன படைக்கணும்னு உங்களுக்கு தெரியுமுங்களா?

ஒரு பண்டிக, நோம்பி, ஆடிப் பெருக்கு, பொங்கலு இப்படி ஏதாவது விசேசம் வர்றப்ப எல்லாம் கெராமமே மலையேறுங்க. அட, நாஞ்சாதாரண அர்த்தத்துல தானுங்க சொன்னேன். நீங்க வேற ஏதாச்சும் தப்பா கிப்பா எடுத்துக்கப் போறீங்க.

எங்கூரு பொம்பளையாளுங்க எல்லாம் நெசமாலுமே மலையேறிப் போயி 'முருகா, நல்ல வழி காட்டுப்பா'னு வேண்டிக்கிட்டு பொங்க வெப்பாங்க.

ஆன இந்த ஆம்பளயாளுங்க இருக்காங்களே! வெவரமான கொறவனுங்க! மலயேறப்பவே 'அம்மணி! நீ போயி முருகன கும்புட்டு வா! நான் இங்க கருப்புசாமி கோயில்ல பங்காளிங்க கூட பேசிக்கிட்டு இருக்கேன்! பொளுதோட வந்துடு புள்ள! அப்புடியே முருகன கேட்டதா சொல்லிடு!'னு சொல்லிப்போட்டு பாதி வழியில களண்டுக்குவாங்க.

அம்மிணிகளுக்கும் தெரியாதா இவங்க சலம்பலெல்லாம்? 'சரிங்க மாமா! நீங்களும் கருப்பனை கும்புட்டு போட்டு 'கருப்பா! எங்க சாதி சனத்துக்கும், ஊரு உலகத்துக்கும் எந்த நோக்காடும் வராம காப்பாத்துப்பா'னு வேண்டிக்கோங்க. கருப்பனுக்கு படையலயும் ரொம்ப படச்சிராதீங்க. அளவா இருக்கட்டுமுங்க'னு சொல்லுவாங்க.

அவங்க சூசகமா பேசறதும், இவுங்க மறச்சு வெச்சு பேசறதும் ஒண்ணும் புதுசு இல்லீங்களே. காலங் காலமா நடக்கறது தானுங்களே!

ரெண்டு கெடா, கொடலு பொறியலு, ரத்த வறுவலு, அப்புறம் கோளிக் கொளம்பு, ஆட்டுக் காலு சூப்பு, அவிச்ச முட்டைங்க, எக்கச்சக்கமா சோறு, தயிறுனு அது ஒரு பக்கம் சைவமா (இதெல்லாம் சைவமானு கேட்டுறாதீங்க! எங்கூருல இதெல்லாம் சைவந்தான்!) இருக்கும். இதெல்லாம் தவுர சரக்கு மட்டும் வெதம் வெதமா படைப்பாங்க!

கவர்ன்மெண்டு கடயில வாங்குனது, கோயமுத்தூரு தாண்டி பாலக்காடு போயி கேரளா சரக்கு, அப்புறம் கள்ளு, பாரின் ஸ்காட்சு இப்புடி எல்லாத்தயும் கருப்புசாமிக்கு படப்பாங்க! ஆளாளுக்கு வேண்டிக்கிட்டு அப்புறம் கச்சேரிய ஆரம்பிப்பாங்க பாருங்க!

உங்க ஊட்டு நாயம் இல்ல, எங்க ஊட்டு நாயம் இல்ல, ஊரு நாயம் உலக நாயம் தான். சார்சு புஸ்ஸுல இருந்து உள்ளூரு டவுன் கவுன்சிலரு வரைக்கும் இவங்க சரக்குல சிக்காத ஆளுங்களே கெடயாதுனா பாத்துக்கோங்க!

மல வந்து ஆதி காலத்து மலைங்க. ஒரு காலத்துல எல்லாம் வெவசாயம் பண்ணி பச்சயா பளிச்சுனு தான் இருந்துச்சாம். இப்ப மலயச் சுத்தி தரிசாப் போட்டு காஞ்சு போயிருக்குங்க.

ஊருலயும் கொஞ்சம் எல்லார் கையிலயும் காசுக்கு டைட்டாவும் நோம்பி எல்லாம் கொஞ்சம் நிறுத்தி வெச்சாங்க. ரெண்டு வருசமா எந்த விசேசத்துக்கும் மலையேறாம உட்டதால, இன்னும் காடு மண்டிப் போயி ஒரு மாதிரி பயங்கரமான எடமா ஆகிப் போயிடுச்சுங்க.

"ஏண்டா நாச்சிமுத்து! நாட்டாமக்கு சொல்லி வுட்டிருக்காப்லயா..?" இது குந்திட்டு பல்லு குத்திட்டு இருக்கற பெரியசாமிக் கவுண்டருங்க.

"சொல்லி வுட்டிருக்குதுங்க மாமா! ப்ரெசிடெண்டயும் ஆர்.ஐ.யையும் கூட்டிட்டு வர்றேன்னு சொல்லி இருக்காராம்.." ஸ்டாண்டு போட்டு சைக்கிள்ல ஒரு மாதிரியா சாஞ்சுக்கிட்டு பூங்கோதய ஓரக்கண்ணுல பாத்துக்கிட்டு இருக்கான் பாருங்க , இவன் தான் நாச்சிமுத்து.

கெராமத்து சனமெல்லாம் இன்னிக்கு எல்லா வேலயும் வுட்டுப்போட்டு மலைக்கு கெளக்கு பக்கமா நிக்கறாங்கனா அதுக்கு ஒரு காரணம் இருக்குதுங்க.

சேர்வ மல இருக்குதுங்களே இது வந்து தனி மல கெடயாதுங்க. பம்பாயில இருந்து கெளம்பி, கருநாடகா வழியா பாஸாகி, கேரளால முடிஞ்சு ஊட்டில முட்டிட்டு நிக்குதுங்களே , மேக்கால போற மலை அதோட ஒரு கனெக்ஷன் இங்க இருக்குதுங்க. கெளக்கு பக்கம் மட்டும் ஊரப் பாத்து இருக்குதுங்க. மத்த தெச எல்லாம் அந்த மலைத் தொடச்சியோட லிங்க். புரியுதுங்களா?

வளக்கமா மலைக்குப் பக்கத்துல காடு மண்டிப் போன எடத்துல தான் எங்க ஊரு சனங்க வெளிக்கு போக வருவாங்க. அப்படியே காத்தாட போயி, அங்கயும் கூட்டம் சேத்துக்கிட்டு, காலங்காத்தாலயே ஊரு நாயம் பேசிக்கிட்டு போனா தாங்க எங்க ஊருக்காரங்களுக்கு போன மாதிரி இருக்கும்.

இன்னிக்கு அப்படி ஒரு க்ரூப்பா கெளம்பி போனவங்க தான் மொதல்ல அத பாத்துருக்காங்க.

மலயோட கெளக்குப் பக்கத்துல காடுங்க காணாம போயிருக்கு. அதுவும் சாதாரணமா இல்லீங்க. பாம்பு ஊந்து போகறப்ப எப்படி போகும் பாத்திருக்கீங்களா? அட, நேருல இல்லாட்டியும் நம்ம பேபி சாம்லி படத்துல எல்லாம் போகுமேங்க..? நீங்க பாத்திருப்பீங்க. அந்த மாதிரி வளஞ்சு வளஞ்சு காடு காணாம போயிருக்குங்க.

காடு காடுன்னா நீங்க நெசமாலும் காடுன்னு நெனச்சுடக் கூடாது. எங்க ஊருல எல்லாம் வயலக் கூட காடுன்னு தான் சொல்லுவோம். மல மேல இருந்ததும் அந்த மாதிரி சின்னச் சின்னச் செடிங்க தான். நீங்க வேற உங்க காட்டுல சிங்கம், புலி எல்லாம் இருக்குதானு கேட்டுறப் போறீங்க!

இது வந்து ஒரு அதிசயமா போயி ஊருல தூங்கிட்டு இருந்தவனெல்லாம் முளிச்சுக்கிட்டு ஓடி வந்து பாத்து அப்படியே ஊரு சனம் மொத்தமும் இங்க வந்து குவிஞ்சு போச்சுங்க!

எங்க ஊருலயும் கொஞ்சம் எளந்தாரிப் பசங்க இருக்காங்க. அவனுங்க டவுனுக்கெல்லாம் போய் படிச்சிருக்காங்க. அரசூரு, அன்னூரு, அவினாசி எல்லாம் போயி படிச்சவனும் இருக்காங்க. இன்னும் கொஞ்சம் கைல காசு இருக்கறவன் கோயமுத்தூருக்கு கூட போயி படிப்பாங்க.

அந்த பசங்களும் இங்க வந்து நின்னுட்டு வேடிக்க பாத்த்க்கிட்டு இருக்காங்க. வாங்க அவங்க என்ன பேசறாங்கனு பாத்துடுவோம். என்ன இருந்தாலும் படிச்சவன் பேச்சுக்கு ஒரு மருவாதி இருக்குதுங்குளே?

"தன்சு..! எப்படி பாம்பு மாதிரியே வளஞ்சு வளஞ்சு இருக்குல்ல...?" இது ஆறுமுகங்க. தன்சு யாருன்னு கேக்கறீங்களா..? சரியாப் போச்சு! 'வெத்தல பாக்கு போட்டவன் இதுல வெங்காயம் இல்லையேனு கேட்டானாம்'. அந்தக் கதயாவுல்ல இருக்கு. மொத வரிலயே சொன்னேனேங்க தனசேகரன். அவன் தான். அவஞ்சோட்டுப் பசங்களுக்கு தன்சு.

"ஆமாண்டா! நல்லா எண்ணெ தடவி வளத்துருக்கா போல..! பாம்பு மாதிரி பின்னி இருக்கு..!"

"அடப்பாவி! நான் மல மேல வந்துருக்கற அடயாளத்த சொன்னன்டா..!"

"ஓ! நீ அத சொன்னியா? நான் என்னவோ வேணியோட சடய சொன்னியோனு நெனச்சேன்..!"

"இல்ல நாம கீதாஞ்சலில ஒரு படம் பாத்தமே, 'Signs'னு அதுல வர்ற மாதிரி நம்ம சேர்வமலைக்கும் வெளிக் கிரக மக்கள் ஏதாச்சும் வந்திருக்குமோ..?"

"நான் எங்கடா கீதாஞ்சலில எல்லாம் படம் பாத்தேன்? நம்ம ரேஞ்சு அப்சரா தான்..!"

"ஹூம்..! நீயெல்லாம் திருந்தவே மாட்டடா..!"

"நீ சொன்ன மாதிரி நம்ம ஊருக்கு வெளிக் கிரக மக்கள் வந்தா இருக்கற போட்டி எக்ஸ்ட்ரா தான் ஆகும்..!"

"செரி வா! நாட்டாம வந்துட்டாரு! நாமளும் போய் அங்க என்ன நடக்குதுனு பாப்போம்..!"

கெரகம் புடிச்சவனுங்க! இருக்கற எளவெடுத்த எடுவட்ட பசங்களாலயே ஊரு உருப்பட்ட மாதிரி தெரியல. இதுல இன்னோரு கெரகத்துல இருந்து மனுசங்க வந்து... ம்ஹூம்.. ஊரு வெளங்கனாப்ல தான்...!

இருந்தாலும் வாங்க! நாமளும் போய் நாட்டம அப்படி என்னதான் பேசறாருன்னு பாப்பம்.

நாட்டாம, ப்ரெசிடெண்டு, ஊரு பள்ளிக்கூட தலைமை வாத்தியாரு எல்லாம் ஒண்ணு கூடிப் பேசிக்கிட்டு இருக்காங்க. பாமர ஊரு சனமெல்லாம் கொஞ்சம் தள்ளியே எட்டி நிக்கறாங்க. ஆனா நம்மள எல்லாம் இந்த கண்டிசனால கண்ட்ரோல் பண்ண முடியாதுங்க. நல்லவேள, அவுங்க எல்லாரும் ஆலமரத்துக்கு அடில நின்னு தான் பேசிக்கிட்டு இருக்காங்க. ஆலமரத்த அண்டா சோடு பெருசா படச்ச அந்த சேர்வமல முருகனுக்கு ஒரு நன்னி சொல்லிட்டு வாங்க, நாமளும் இந்தப்பக்கமா நின்னு ஒட்டுக் கேப்போம்.

"ன்னங்க வாத்தியார் ஐயா..! சொன்ன மாதிரி துப்புரவா துடச்சு எடுத்திருக்கீங்க போல..!" இது நாட்டாம கொரலு தான்.

"நான் எதுவும் பண்ணலீங்க! நம்ம ஊருப் பசங்க தான்!" இது வாத்தியார்.

"என்ன பண்ணியிருக்கீங்க ரங்கசாமி? கொஞ்சம் வெவரமாச் சொல்லுங்க. ஆனா சீக்கிரமா சொல்லுங்க. ஒரு மணிக்கு நம்ம எம்மெல்லே ஆபீஸுக்கு வர்றேன்னு சொல்லி இருக்காரு..!" இது யாருடா புதுசா இருக்குது? ப்ரெசிடெண்டா இருக்கும். அவர அவ்வளவா நாங்க பாக்கறது இல்லீங்க. எப்பவுமே டவுன்லயே இருப்பாரு. எப்பவாவது வாளத்தாரு, வாள எல, கரும்பு, மஞ்ச, இப்படி வேணும்னா மட்டும் வந்துட்டுப் போவாரு.

"நம்ம சேர்வமல இருக்குது இல்லீங்களா... இது வந்து ரெண்டு டிஸ்ட்ரிக்ட் பார்டர்ல இருக்கறதால, போலீசு கிட்ட இருந்து தப்பிச்சு வர்றவன் எல்லாம் மலய பயன்படுத்திக்கறாங்க. சன நடமாட்டம் இல்லாதது அவனுங்க வேலக்கு சுளுவா போய்டுச்சு. அது மட்டுமில்லாம பூமிய தருசா வுடக் கூடாதுங்க. அது பாவம். அதனால மலய ஆராய்ச்சி பண்ணுனப்ப மலைக்கு கீழ நல்ல சத்தான மண்ணு இருக்கறதா கோயமுத்தூரு வெவசாயக் கல்லூரில இருந்து ரிப்போர்ட் வந்துச்சு. நம்ம மக்கள்கிட்ட 'போய் வெவசாயம் பண்ணுங்க'ன்னு சொல்ல முடியுங்களா? அது சாமி மல. அதுல கடப்பாற படக் கூடாதுனுட்றுவாங்க. அதனால ஒரு ஐடியா பண்ணுனோங்க. நாம சொல்லிக் கேக்காத சனம் சாமி சொன்னா தான் கேக்கும். அதனால நம்ம கருப்புசாமி பாம்பு மேல ஏறிப் போனாருங்கற மாதிரி பாதையப் போட்டோம். அதுக்காக அக்ரில இருக்கற என்னோட பளய மாணவர்கள தொணயோட சத்தமே வராத சைலன்சர் போட்ட ட்ராக்டர் வெச்சு நேத்து ராவு உழுதாச்சு. இப்ப மக்கள் கிட்ட நம்ம ஊரு பசங்கள வெச்சு இது கருப்புசாமி வந்து போன பாதைனு நம்ப வெச்சிருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல திட்டத்தோட அடுத்த பகுதிய பாருங்க..!" இது வாத்தியாரு தான்.

அடங்கொக்க மக்கா!! இதுல இவ்ளோ சங்கதி இருக்கா..! எப்படியோ ஊருக்கு நல்லது நடந்தா சரிதான்! இப்ப எங்க ஊரு பசங்களப் பாக்க எவ்ளோ பெருமையா இருக்குது தெரியுங்களா..? என்னவோ இவரு சொல்ல வந்துட்டாரு இல்லாததும், பொல்லாததுமா.. போய்யா வேலயப் பாத்துக்கிட்டு...!

இருந்தாலும் வாங்க.. அது என்ன அடுத்த பகுதினு பாத்திருவோம்.

குடுகுடுகுடுகுடுகுடு... உடுக்க சத்தம் கேக்குது. இந்த மாதிரி உடுக்க சத்தம் கேட்டா யாருக்கோ சாமி வந்திருக்குனு அர்த்தம். வாங்க யாருக்குனு பாப்போம்.

அட, நம்ம தேமொளிக்கு..! பள்ளிக்கோடத்துல பன்னெண்டாவது படிக்குதுங்க.

"ஆத்தா... ஆத்தா... என்ன செய்யணும் ஆத்தா..! திடீர்னு வந்திருக்கயே ஆத்தா..! ஏதாவது கொற வெச்சிட்டமா ஆத்தா..? பொங்க சரியா பொங்கலியோ? தங்கம் சரியா தங்கலியோ? அங்கம் சரியா வெக்கலியோ? ஆத்தா நீ சொல்லு...!" இது பூசாரியே தான்.

"டேய்..! நான் தான்டா மகமாயி வந்திருக்கேன்! உங்க மேல பாசம் வெச்சு கருப்புசாமியே உங்க ஊருக்கு வந்திருக்கான்டா..! அவனோட பாம்பு மேல ஏறி வந்திருக்கான்டா..! பாத்தியா... அவன் வந்த வழியப் பாத்தியா..?"

"ஆமா தாயி! பாம்பு மாதிரியே இருக்கு!"

"அதான்டா..! அவன் வந்த எடத்த மறுபடியும் புல்லு பூண்டு வெளய வுட்டுறாதீங்க. அவனுக்கு கோவம் வந்திரும்டா! எனக்கு கோவம் வந்தாக் கூட நீங்க தாங்கிக்குவீங்க..!"

"ஆமா தாயி! நீ ஊரு உலகத்துக்கெல்லாம் அம்மா இல்லியா? உன்ற கோபத்த உன்ற புள்ளங்க மேலயே காட்டுவியா? மாட்டியே! புள்ளைங்க நாங்க தாங்குவமா! வேணாம் தாயி..!"

"ஆனா கருப்பனுக்கு போவம் வந்தா இந்த ஊரு தாங்காதுடா! மழத் தண்ணி கெடைக்காது. பஞ்சம் வரும். பட்டினி தொரத்தும். மாரி வரும். வேணுமாடா உங்களுக்கு..?"

"வேணாம் தாயி! நீ என்ன சொல்றியோ அதுபடி செய்யறோம் தாயி! உத்தரவிடு ஆத்தா! கட்டளையிடு காளியாத்தா! ஆணையிடு அங்காள பரமேஸ்வரி!"

"சொல்றேண்டா! கருப்பன் வந்து போன பாதயயே வெச்சு நெலத்த தோண்டுங்கடா. நல்லா வெவசாயம் பண்ணுங்கடா. அது கருப்பன் பூமி. காஞ்சு போக விடாதீங்கடா. அதுல தண்ணி பாச்சுங்க. மஞ்ச, கரும்பு எது வேணாலும் வெதைங்க. பூமித் தாயி பொன்னாத் திருப்பித் தருவாடா..!"

"என்ன எல்லாருக்கும் கேட்டுதா? அம்மா வந்து சொல்றபடி கேப்பீங்களா..?" பூசாரி நல்ல ஒரக்கவே கேட்கறாரு.

"கேக்கறோம்...! ஆத்தா சொன்ன மாதிரியே செய்யறோம்..!" யப்பா! காதே கிளிஞ்சிடும் போல இருக்கு!

"அம்மா ! தாயே...! நீ சொல்றத கேட்டுத் தாம்மா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். ஒன்ன வுட்டா எங்களுக்கு வேற நாதி ஏது? பராசக்தி உன்ன வுட்டா எங்களுக்கு வேற போக்கடம் ஏது..?" நாட்டாம தான்.

ஆத்தா வாயத் தெறந்து அப்படியே கெறக்கமா சரிய, பூசாரி எரியுற கப்பூரத்தை ஆத்தா வாயுல போட்டு மூடி, துன்னூரு தெளிக்கறாரு.

"என்ன எல்லா சனமும் கேட்டீங்க இல்ல? ஆத்தா சொன்ன மாதிரி செஞ்சுரலாம் இல்ல..?" நாட்டாம கேட்டதும் எல்லா சனமும் "ஆமாங்கய்யா...!".

"இது தாங்க உண்மையான Science! ஊருக்கு பயன்படுற எல்லாமே Science தான்! இல்லீங்களா?"னு வாத்தியார் கேட்க,

"ஆமாம்! ஆமாம்! இல்லியா பின்ன? ஆத்தாவே சொல்லிடுச்சு இல்ல?"னு சிரிச்சவாட்டி நாட்டாம சொல்றாரு.

நல்லா கத கேட்டீங்களா? அவினாசிக்கு சாயங்காலம் அஞ்சரைக்கு தான் அடுத்த வண்டி.

வீட்டுக்கு வாங்க. எங்க ஊரு சாப்பாடு சாப்பிட்டதில்லையே நீங்க..?

பருப்பு சாதமும், பருப்பு ரசமும், கெட்டித்தயிரும், அப்பளமும், கொத்தவரங்கா பொறியலும், பூசணிக்கா கூட்டும், ஜவ்வரிசி பாயசமும் சாப்புடலாம் வாங்க.

அப்புறமா தோட்டத்துப்பக்கமா போயி கயித்துக்கட்டல்ல அக்கடானு ஒக்கந்து ஒங்க ஊரு நாயத்த பேசுவோம், என்ன சரிங்களா..?

தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

இது உங்கள் கதை.

நீங்கள் நல்லவர் தானே?

குறைந்தபட்ச நீதியோடும், நியாயங்களோடும் வாழ வேண்டும் என்று நினைப்பவர் தானே? பள்ளியில் கற்பிக்கப்பட்ட 'பொய் சொல்லக் கூடாது', 'நேர்மையாக வாழ வேண்டும்' போன்ற கொள்கைகள் எல்லாம் அவற்றைத் தாண்டி ஒரு எட்டு குதிக்கும் போது, கொஞ்சமாவது ஒரு சங்கடப் புள்ளியை உங்கள் மனதில் ஏற்படுத்துகின்றன தானே?

எனில் இது உங்கள் கதை தான். ஆனால் முழுதும் உங்களைப் பற்றிய கதை அல்ல. கதையில் நீங்கள் வருகிறீர்கள். அவ்வளவு தான்.

நல்லது.

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி.

.357 மேக்னம் ரிவால்வரை ஃபுல்லாக லோட் செய்து ஸேஃப்டி லாக்கை ரிலீஸ் செய்து, உங்களிடம் கொடுக்கிறேன். ஒரு குறுகலான சந்தின் ஆரம்ப முனையில் நீங்கள் நிற்கிறீர்கள். இருபதடி வாழ்க்கையே கொண்ட சந்தின் அடுத்த முனையை நோக்கி செல்லும் ஒருவரை சுடச் சொல்கிறேன். நீங்கள் கன்னாபின்னா என்று சுட்டாலும் ஒரு புல்லட்டாவது அவரைத் துளைக்கும்.

என்ன சொல்கிறீர்கள்?

ரு மாத முன் அதிகாலை. அதிசய நிகழ்வு. உங்களுக்கு கொஞ்சம் சீக்கிரமாகவே விழிப்பு வந்து விட்டது. பாத்ரூம் போய் விட்டு வந்து, படுக்கையில் அமர்ந்து இரண்டு தலையணைகளை மடியில் போட்டுக் கொண்டு ரெண்டு கொட்டாவி விடுகிறீர்கள். தூக்கம் வருவது போல் இருக்கின்றது. ஆனால் வரவில்லை. டைம் பீஸ் 4 மணி ரேடியம். ரிமோட்டால் சேனல்களைத் தாண்டித் தாண்டி செல்கிறீர்கள்.

வெண்ணுடை மேட்சுகள், பார்லிமெண்ட் பேச்சுக்கள், பழைய விஜய் படல்கள், ஷாந்தி - ஏக் கர் கா கஹானி, நினைத்தாலே இனிக்கும், ரகசிய நோய் டாக்டர் விளம்பரப்பேட்டி, WWF, இளம் ஷூமேக்கர் கார்...

ச்சட்... சிவப்பு பட்டனை அழுத்தி டி.வி.யைக் கொன்று ரிமோட் தூர விழுகின்றது.

திடீரென்று, வாக்கிங் போனால் என்ன என்ற சிந்தனை பிறக்கின்றது. தூக்கமும் வரவில்லை. டி.வி.யும் போர். இன்றிலிருந்து வாக்கிங் போகும் பழக்கம் கொள்வோம் என்று நினைக்கிறீர்கள். உற்சாகிக்கிறீர்கள். பாத்ரூம் மறுபடியும்.

சுத்தமாக வெளி வந்து போட்டிருக்கும் நைட் ட்ரஸ் போதுமா என்று பார்க்கிறீர்கள். போதும் என்றது மனம்.

தூசு மட்டுமே அழுக்கடையச் செய்திருந்த வொய்ட் கான்வாஸையும் அதனுள் ஒளிந்திருந்த வாங்கிய முதல் இரண்டு நாட்கள் மட்டுமே கற்பு கெட்டிருந்த வொய்ட் சாக்ஸையும் தொட்டுத் தடவி துடைத்து காலில் மாட்டி...கஷ்டப்பட்டு ஒரு மாதிரி செட் ஆனதும் ஒரு ஃப்ரெஷ்னஸை உணர்கிறீர்கள். செல்ஃபோனை எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று கொஞ்சம் குழம்பி எடுத்துக் கொள்கிறீர்கள்.

எல்லா ஸ்விட்ச்சையும் அணைத்து மெயின் கதவைத் திறந்து லாக் செய்கிறீர்கள். ஒரு நப்பாசையாக ஐ மிர்ரரில் உள்ளே பார்த்து குழம்பிய இருட்டாகத் தெரிய திருப்தியுறுகிறீர்கள்.

இரண்டு இரண்டு படிகளாகத் தாவி தரைத் தளத்திற்கு வருகிறீர்கள். செக்யூரிட்டி ஒரு மாதிரி ஆழ்நிலைத் தூக்க விழிப்பில் இருப்பதை உணர்ந்து, மெதுவாக கம்பிக் கதவைத் திறந்து வெளி செல்கிறீர்கள்.

புதிதாக இருக்கின்றது உலகம். தினம் பார்க்கும் அதே தெரு. அதே லைட் கம்பம். அதே போஸ்டர்கள். அதே வீடுகள். ஆனால் வித்தியாசங்கள். வானம் இருட்டாக இருக்கின்றது. அதிகாலை நிலவு இரவின் களைத்த நிலவை விட குளிராக இருக்கின்றது. நாய்கள் கைகளுக்குள் முகம் பதித்து ஒரு முறை எட்டிப் பார்த்து மீண்டும் சுருண்டு கொள்கின்றன.

எங்கோ பால்காரரின் மணி சத்தம், வாசல் தெளிக்கும் சத்தம். லேசாக குளிர் காதை ஊடுறுவுகின்றது. சோகையாக மஞ்சல் ஒளி வழிகின்றது.

ச்சே.. இவ்வளவு நாளும் இந்த அழகை மிஸ் செய்து விட்டோமே என்று நினைக்கிறீர்கள். இனிமே தினமும் இந்த நேரத்திற்கு வாக்கிங் வர வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கின்றது.

நடக்கிறீர்கள். யாரும் இல்லாத தனிமையினாலோ என்னவோ கைகளைச் சுழற்றுகிறீர்கள். ப்டித்தமான பாடல் ஒன்றை மெல்ல மெல்ல முணுமுணுத்தபடி இலக்கில்லாமல் நடக்கிறீர்கள். மொபைலில் ப்ளேயரை உயிர்ப்பித்து ஓடச் செய்து நீங்கள் நடக்கிறீர்கள்.

ஸெகண்ட் க்ராஸ் முனையில் திரும்பியதும் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று நடக்கின்றது.

தடார்.

விழப் பார்த்து சமாளிக்கிறீர்கள். உங்கள் மேல் மோதியவன் ஒரு முறை உங்களைப் பார்க்கிறான். அவன் முகம் தெரு விளக்கின் மஞ்சள் திரையில் பனிப் புகை நடுவே திருத்தமாக உங்கள் மனதில் பதிகின்றது.

குமரேசன். தேர்ட் க்ராஸின் பெரு வீடு ஒன்றில் வாசிக்கின்ற ஒரு பெரு மனிதரின் உதவியாள். நீங்கள் சில முறை அம்மனிதரோடு இவனை பார்த்த நினைவு வருகின்றது. ஆனால் இப்போது உங்கள் கவனத்தை கவர்ந்தது அவன் அணிந்திருந்த செக்கர் ஷர்ட்டின் சிவப்புத் தீற்றல்கள். ஹாட் ப்ரெஷ் வாசம் அடித்ததை உணர்கிறீர்கள்.

நெஞ்சுக்குள் திக்கென்கிறது. வயிற்றுக்குள் அட்ரீனலின் சரக்கென்று இறங்குகின்றது.

சில நொடிகள் தயங்கி நிற்கிறான். அவன் வலதுகை பிடித்திருந்த கத்தியை இறுக்குவதை பார்க்கிறீர்கள். உங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கத்திக் கூச்சல் இடலாமா என்று யோசிக்க நினைக்கையில், அவன் எதிர்த் திசையில் பறக்கிறான். நொடியில் சிக்ஸ்த் க்ராஸின் முனையில் திரும்பி மறைகிறான். சில நாய்கள் குரைக்கும் சத்தம் மட்டும் கேட்கின்றது.

வியர்வை ஊற்றாய் வழிவதை உணர்கிறீர்கள். மொபைலில் 'தாமரை மேலே நீர்த்துளி போல்...' மென்மையாக அபஸ்வரமாக ஒலிக்கிறது. இப்போது என்ன செய்வது?

கீழ்வானம் சிவக்கத் தொடங்குவதைப் பார்க்கிறீர்கள். சில வீடுகளின் ஜன்னல்களில் ஒளி பரவுவதும், சில காகங்கள் கரைவதும், சுவிட்சுகள் நிலை மாற்றப்படும் சத்தங்களும் ஒரே சமயத்தில் கேட்கின்றன.

விரைவாக உங்கள் அபார்ட்மெண்டுக்குத் திரும்புகிறீர்கள்.

திரும்பும் நேரம் வெறும் ஒரு நிமிடம் தான் என்றாலும் லட்சக்கணக்கான திசைகளுக்கு உங்கள் மனம் பறந்து வருகின்றது.

நல்லவேளை என்னைக் குத்தவில்லை! ஏன் அவன் ஷர்ட்டில் ரத்தம்? கொலை செய்திருப்பானா? யாரை? பெருமாள் சாரையா? ஏன்? சம்பளம் தரவில்லையா? சம்பளம் தராவிட்டால் யாராவது கொல்வார்களா? நமக்கு கூடத் தான் சாலரி பத்தாம் தேதி தான் பாஸாகின்றது. நான் என்ன கொல்கிறேனா? ச்செ.. என்ன இது எண்ணம்? போலிஸுக்கு சொல்ல வேண்டுமா? நாம் தான் சாட்சியா? இன்னிக்கு வா, நாளைக்கு வானு இழுத்தடிப்பாங்களே? எப்படி லீவ் போடறது? நான் பார்க்கவே இல்லை. நான் தூங்கிட்டு இருந்தேன். வேணாம். எனக்கு யாரையும் தெரியாது. நான் யாரையும் பார்க்கலை.

நான் பார்த்ததை யாராவது பார்த்திருப்பாங்களோ? ச்சீ.. இந்த தெருவில நாலரை மணிக்கு யாரும் எழுந்திருக்கறதே இல்லை. ச்சே.. இன்னிக்குனு பார்த்து தூக்கம் வராம போயிடுச்சே! எல்லாம் என் நேரம். எனக்குனு ஏன் இப்படி நடக்கணும்? சத்தமே போடாம போய் படுத்துற வேண்டியது தான். இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே நாம காட்டிக்க கூடாது.

உங்கள் க்ராஸின் முனையில் திரும்பி அபார்ட்மெண்ட்டைப் பார்க்க, அதிர்ச்சி.

செக்யூரிட்டி நன்றாக விழித்து பீடி வலித்துக் கொண்டிருப்பது தெள்ளெனத் தெரிகின்றது. இவன் என்ன அதுக்குள்ள முழிச்சுட்டான்? ச்சே. நம்மள பார்த்துட்டான்னா ஒரு சாட்சி மாதிரி ஆயிடுமே! சமாளிப்போம். அப்போது தான் நிகழ் உலகுக்கே நீங்கள் வருவதால் இன்னும் மொபைலில் 'தங்கத் தாமரை மகளே..'. எடுத்து நிறுத்துகிறீர்கள்.

இயல்பாக நடப்பதாக குழறலாய் நடந்து,

"என்ன சார் வாக்கிங் போய்ட்டு வர்றீங்களா..? நீங்க போகும் போதே கவனிச்சேன். டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தான் கூப்பிடல. இந்த முத்து தூக்கத்தில இருந்தாலும் காது தொறந்தே தான் சார் இருக்கும்..?" பீடியை கீழே போட்டு மிச்சப் புகை வசனம்.

என்ன இவ்வளவு வசனம் பேசறான். சமாளிக்கணும்.

"இல்ல முத்து. வாக்கிங் போகல. கிளம்பினேன். பாதி வழில வயிறு ஒரு மாதிரி ஆகிடுச்சு. அதான் திரும்பிட்டேன்." லேசாக வயிற்றை ஒரு தடவு. அப்படியே க்ரில் கேட்டைத் தள்ளிக் கொண்டு உள்ளே போக எத்தனிக்கிறீர்கள்.

"வாக்கிங் போகலங்கறீங்க. இப்படி வேர்த்திருக்கு...?"

"அது வந்து..!"

"கண்டின்யூவா போனா தான் நல்லா இருக்கும். திடீர்னு ஒரு நாள் போனா இப்படித் தான் ரெண்டு தெரு தாண்டறதுக்குள்ள வேர்த்து ஊத்தும். ஆமா எது வரைக்கும் சார் போனீங்க..?"

பாதி படிகளில் ஏறி விட்ட நீங்கள் கடுப்பாகிறீர்கள். இவன் என்னடா சி.பி.ஐ. மாதிரி இத்தனை கேள்வி கேக்கறான்? கோபப்படாத. அப்புறம் சிக்கல்ல இவனே மாட்டி விட்டுடுவான். சிரி. சமாளி.

"என்ன முத்து..? உன்னோட எல்லா கேள்விக்கும் இப்பயே பதில் சொல்லணுமா? எனக்கே வயிறு ஒரு மாதிரி இருக்குன்னு சொல்றேன்ல. அப்புறம்..."

"சரி சார்.. போங்க..போங்க"

முதல் மாடி வரை மெதுவாக ஏறி, பிறகு விரைவாக படிகளைத் தாவுகிறீர்கள். அபார்ட்மெண்டின் மரங்களின் பறவைகளின் பேரிரைச்சல் உங்கள் மனதிலும்!

லாக்கைத் திறந்து ஷூ , ஷாக்ஸை எறிந்து மொபைலை துறந்து படுக்கையில் விழுகிறீர்கள்.

உங்கள் இதயத் துடிப்பு தெளிவாகக் கேட்கின்றது.

இல்லை. நான் எதையும் பார்க்கவில்லை. நான் இன்று வெளியே போகவே இல்லை. இன்னிக்கு மட்டும் வாக்கிங் போகணும்னு தோணுச்சு பாரு...! எல்லாம் என் நேரம். காலையில வாட்ச்மேன் கேட்டான்னா எய்ட்த் க்ராஸ் வரைக்கும் போனேன்னு சொல்லிட வேண்டியது தான்.

பெட் ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொள்கிறீர்கள்.

"மிஸ்டர் குணசேகரன்! டிஃபென்ஸ் தரப்பு குறுக்கு விசாரணையைத் தொடங்கலாம்!"

"தேங்க் யூ மை லார்ட்!" குணசேகரன் கவுன் கறுப்பு கலையாமல் இருந்தது. அவரது நேர்மை கற்பு எப்போதோ கலைந்து விட்டிருந்தது.

கூண்டில் கோழிக் குஞ்சைப் போல் நடுங்கிக் கொண்டு நின்றிருந்த பெண்மணியைக் கழுகுக் கண்ணால் பார்த்தார்.

"ஏம்மா.. உங்க பேரென்ன..?"

"பொன்னம்மாங்க..!"

"கொலை செய்யப்பட்ட பெருமாளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு..?"

"ஐயா..!"

"ஐ அப்ஜெக்ட் திஸ் யுவர் ஆனர்..! நண்பர் சாட்சியை தவறான கண்ணோட்டத்தில் நகர்த்துகிறார்..!" பப்ளிக் ப்ராஸிக்யூடர்.

"மை லார்டு! நான் அவருக்கு மர்டர் செய்யப்பட்டவருடன் எந்த விதத்தில் தொடர்பு என்று தெரிந்து கொள்ள கேட்கிறேன்! இதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை!"

"அப்ஜக்ஷன் ஓவர் ரூல்ட்!"

"தேங்க் யூ மை லார்டு! சொல்லுங்கம்மா!"

"ஐயா..! நான் ஐயா வீட்டுல வேலைக்காரியா இருக்கறேங்க!"

"எவ்ளோ வருஷமா?"

"ஆறு வருஷமாங்க..!"

"சரி! சம்பவம் நடந்த அன்னிக்கு என்ன பார்த்தீங்க..?"

"வழக்கமா காலையில அஞ்சு மணிக்கு ஐயா விட்டுக்குப் போவேங்க. அன்னிக்கு போனப்போ மெய்ன் கதவு தொறந்தே இருந்துச்சுங்க. உள்ள போய் பார்த்தா ஐயா ரூமும் தெறந்தே இருந்துச்சுங்க. வழக்கமா அப்படி இருக்காது. அம்மாவும் பசங்களும் குன்னூருக்கு அவங்க அப்பா வீட்டுக்கு போயிருந்தாங்க. செக்யூரிட்டியும் அப்ப இல்ல. அவர் ரூமுக்கு போய் பார்த்தா, ஐயா அப்படியே சரிஞ்சு விழுந்திருக்காரு. வயிறெல்லாம் ரத்தம். அப்படியே கத்தி, கீழ விழுந்துட்டேங்க. அப்புறம் அவர் ஆபிஸு கொஞ்சம் பேரு நம்பருக்கு போன் பண்ணி சொன்னேங்க. அவங்க வர்றப்ப போலிஸோட வந்தாங்க..!"

"சரி! அக்யூஸ்ட் குமரேசனை உங்களுக்கு தெரியுமா..?"

"தெரியுங்க! ஐயாவோட பி.ஏ.!"

"இவரு நடத்தைல எப்படி..? அதாவது உங்க ஐயாவுக்கும் இவருக்கும் உறவுகள் எந்த மாதிரி இருந்துச்சு? சண்டைகள் எல்லாம் போட்டிருக்காங்களா..?"

"அதெல்லாம் தெரியாதுங்க. ஆனா அப்பப்போ ஐயா இவரை வெளிய போன்னு ஆத்திரமா கத்தறதும், உடனே இவர் ஐயா கால்ல விழுந்து கெஞ்சறதும் பாத்திருக்கேங்க. அதுக்கு மேலே வெலாவரியா எதுவும் நான் பாத்ததில்லைங்க. என் வேல சமயக்கட்டோட முடிஞ்சுதுங்க. ஹாலுக்கு வந்து துடைக்கறப்ப சில சமயம் சண்டைகள் எல்லாம் காதுல விழுந்திருக்குங்க..!"

"பொய்..! நீங்கள் சொல்வது பொய்! உண்மையில் பெருமாள் வீட்டில் இருந்து அவ்வப்போது பணம் சுருட்டி விட்டு அது அவருக்குத் தெரிய வரும் போது அவரைத் தீர்த்துக் கட்டி இருக்கிறீர்கள். மை லார்டு! இந்தப் பொன்னம்மா என்பவரது வங்கிக் கணக்கில் புதிதாக ரூபாய் ஒரு லட்சம் டெபாஸிட் செய்யப்பட்டு உள்ளது, ஒரு பினாமி பெயரில்! அதற்கான வங்கி சலான் இதோ! (குமாஸ்தாவிடம் கொடுக்கிறார்.) இனி அடுத்து இன்ஸ்பெக்டர் ரவியை சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்..."

"ஐயா.. ! இது எப்படி வந்துச்சுனே எனக்குத் தெரியாதுங்க..! நான் அப்பாவிங்க..!" பொன்னம்மா சாட்சிக் கூண்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

"எஸ்! ப்ரொஸீட்..!"

"ரவி! நீங்க எப்ப சம்பவம் நடந்த இடத்துக்கு போனீங்க..?"

"அன்னிக்கு காலையில அஞ்சரைக்கு போனேன். எனக்கு தகவல் அஞ்சு பதினஞ்சுக்கு வந்துச்சு. கொலை செய்யப்பட்டவரோட ஆபீஸ்ல வொர்க் பண்ற ராகவன் தான் ஃபோன் பண்ணி சொன்னார்..."

"ஸ்பாட்ல என்ன பாத்தீங்க..?"

"பாடி பெட்ல இருந்து பாதி கீழ விழுந்திருந்துச்சு. கத்திக்குத்தை சஸ்பெக்ட் பண்ற மாதிரி காயங்கள். ரூம்ல யாரும் இல்லை. பொன்னம்மா மட்டும் வெளிய உக்காந்து அழுதுக்கிட்டு இருந்தாங்க. நான் போன நேரம் தான் செக்யூரிட்டி வந்தான். பெட்டிக் கடை திறந்திருக்கும்னு பீடி வாங்கப் போனேன்னு சொன்னான். டிபார்ட்மெண்ட்டுக்கு போன் பண்ணி சொல்லிட்டு, ஆம்புலன்ஸுக்கும் ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் பீபிளுக்கும் சொல்லி விட்டேன். அவரொட ஒய்ஃப் பேமிலிக்கும் போன்ல சொன்னோம். ரூம்ல யாரையும் அலோ பண்ணலை. சீனை டிஸ்டர்ப் பண்ற எந்த செயலையும் அனுமதிக்கலை.."

"சரி! ப்ரிண்ட்ஸ்லயும் அடாப்ஸிலயும் என்ன ரிஸல்ட் வந்தது..?"

"அதை எல்லாம் கோர்ட்ல சப்மிட் பண்ணி இருக்கோம் சார்..!"

"பரவாயில்ல..! இன்னொரு முறை சொல்லுங்க. தப்பில்ல."

"ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் படி, அக்யூஸ்ட் குமரேசனோட ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் நிறைய இடத்தில இருந்திருக்கு..."

"நிறைய இடம்னா..?"

"அவர் பெட்டை சுற்றி.."

"வேற யாரோட ஃபிங்கர் ப்ரிண்ட்ஸாவது இருந்துச்சா..?"

"எஸ். பொன்னம்மாவோடது.."

"ப்ளீஸ் நோட் திஸ் பாய்ண்ட் மை லார்ட்..!"

"தென் அடாப்ஸி ரிப்போர்ட்..?"

"சில போராட்டங்களுக்குப் பிறகு அவர் கத்தியால் குத்தப்பட்டு இருக்கலாம்னு பி.எம் ரிப்போர்ட்.."

"கத்தின்னா.. பல வெரைட்டி இருக்கு இல்லையா..?"

"எஸ்..!"

"மை கொஸ்டீன் இஸ், இந்த கொலைக்கு யூஸ் பண்ணப்பட்ட கத்தியை சமையலுக்கும் யூஸ் பண்ண முடியும் இல்லையா..?"

"பண்ண..."

"முடியும். பண்ண முடியும். பி.எம். ரிப்போர்ட்ல சஸ்பெக்டட் டூல்ஸ்ல போட்டிருக்கு மிஸ்டர் ரவி..!"

"அப்படின்னா இருக்கலாம் சார்..!"

"ப்ளீஸ், இதையும் நோட் பண்ணுங்க மை லார்ட்..! ஓ.கே. அப்புறம் எந்த அடிப்படையில் மிஸ்டர் குமரேசனை கன்விக்ட் பண்ணினீங்க..?"

"அவரோட ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் பெட்ல இருந்ததாலும், அவருக்கும் பெருமாள் சாருக்கும் இடையே பேட் ரிலேஷன்ஸ் இருந்ததுனு விசாரணையில் தெரிந்து கொண்டதாலும்..!"

"இது சரியான ரீஸன் கிடையாது மிஸ்டர் ரவி! ஒரு பெரிய மனுஷன்னா நாலு நண்பர்கள் இருந்தா நாப்பது எதிரிகள் இருக்கத் தான் செய்வாங்க. நீங்க எல்லாரையும் சஸ்பெக்ட் பண்ணி இருக்கணும். பிங்கர் ப்ரிண்ட்ஸ் படி பார்த்தா, பொன்னம்மாவோட பிங்கர் ப்ரிண்ட்ஸையும் நீங்க கணக்கில் எடுத்திருக்கணும்..!"

"சார்! அதெல்லாம் அவங்க ரூமை க்ளீன் பண்ணும் போது பதிவானவை..!"

"அப்படின்னு நீங்க சொல்லக் கூடாது இன்ஸ்பெக்டர்! அதையும் நீங்க சந்தேக கண் கொண்டு தான் பார்த்திருக்கணும்..! நீங்க போகலாம். அடுத்ததா செக்யூரிட்டி மாணிக்கத்தை விசாரிக்க அனுமதி கோருகிறேன்!"

"எஸ் ப்ரொஸீட்..!"

"மிஸ்டர் மாணிக்கம்..! நீங்க எவ்ளோ வருஷமா பெருமாள் சார்கிட்ட ட்யூட்டில இருக்கீங்க..?"

"சார்! நான் வந்து கன்டின்யூஸா இருக்கறது கிடையாது. எங்க கம்பெனியில ரொடேஷன்ல விடுவாங்க. த்ரீ மந்த்ஸ்க்கு ஒருத்தரா மாறிக்கிட்டே இருப்போம். நான் இவர்கிட்ட ரெண்டு மாசமா இருந்தேன். என் நேரம். நான் இருக்கும் போது தான் இப்படி ஆகணுமா..?"

"ஸு..! கேக்கறதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும். அவர் எப்படி? இந்த பொன்னம்மா எப்படி? அவர் பேமிலி எப்படி?"

"ரொம்ப நல்லவர் சார்! ரொம்ப மரியாதை எல்லாம் எதிர்பார்க்க மாட்டாரு. இந்த பொன்னம்மாவும் சரி, சாரோட பேமிலியும் சரி ரொம்ப நல்லா தான் பழகுவாங்க..!"

"சரி! சம்பவம் நடந்த அன்னிக்கு ஏன் அந்த டைம் பார்த்து காணாம போனீங்க..? உங்களுக்கு இப்படி நடக்கப் போறது முன்னாடி தெரியுமா..?"

"சார்..! அப்படி எல்லாம் கிடையாதுங்க..! வழக்கமா பீடி வாங்க அந்த நேரம் ரெண்டு தெரு தள்ளி இருக்கற கடைக்கு போய்ட்டு வருவேங்க. அதே மாதிரி தான் அன்னிக்கும் போனேங்க..!"

"சரி! மெய்ன் கேட்டோட சாவி யார் கிட்ட எல்லாம் இருக்கும்?"

"நாலு பேர்கிட்டங்க. ஐயாகிட்ட, அம்மா கிட்ட, என்கிட்ட அப்புறம் பொன்னம்மா கிட்ட..! ஆனா சாவி தயாரிக்கறது ஒண்ணும் பெரிய.."

"கேட்டதுக்கு மட்டும் பதில்! எப்பவுமே நீ இருக்கும் போது தான் பொன்னம்மா வருவாங்களா..?"

"ஆமாங்க..!"

"அன்னிக்கு?"

"அன்னிக்கு நான் வரும் போது கதவு தொறந்து இருந்துச்சுங்க. கலவரமா உள்ள போய் பார்த்தா பொன்னம்மா அளுதுகிட்டு இருக்கு. ஐயா ரூம் திறந்து போட்டிருக்கு..!"

"சரி, நீங்க போகலாம்..! நெக்ஸ்ட் மிஸ்டர் குமரேசனை விசாரணை செய்ய அனுமதிக்குமாறு கனம் கோர்ட்டாரைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!"

"எஸ் ப்ரொஸீட்!"

"மிஸ்டர் குமரேசன்! நீங்க எவ்வளவு நாளா பெருமாள் சார்கிட்ட அசிஸ்டெண்ட்டா இருக்கீங்க?"

"அஞ்சு வருஷமா..?"

"உங்களுக்கும் சாருக்கும் இடையில தகராறுகள் இருந்ததா பொன்னம்மா சொல்றாங்களே..?"

"அது வந்துங்க... சார் கொஞ்சம் இல்லீகலா பணம் பே பண்ண சொல்வாரு. அது எனக்குப் பிடிக்காது. அது வேண்டாம்பேன். அப்ப கோபமாய் கத்துவாரு..!"

"இல்லீகல்னா..?"

"வேண்டாங்க..! அவர் ஃபேமிலி எல்லாம் இருக்காங்க..!"

"கமான் டெல்! கோர்ட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் எல்லாமே பேசியாகணும்..!"

"பெங்களூர்ல ஒரு பொண்ணுங்க! பத்மானு பேரு! அப்பப்ப பிஸினஸ் விசிட் போகும் போது எப்படியோ பழக்கமாய்டுச்சுங்க இவருக்கு! அதுக்கு பணம் குடுன்னு சொல்வாருங்க. அதெல்லாம் கணக்குல வரக்கூடதும்பாருங்க. நான் வேண்டாம்பேன். அப்படி தகராறு வருங்க..!"

"சரி..! சம்பவம் நடந்த சமயத்துல நீங்க எங்க இருந்தீங்க..?"

"தேனாம்பேட்டைல என் ஃப்ரெண்டு சரவணன் வீட்ல இருந்தேங்க..!"

"மை லார்டு! அந்த சரவணன் எழுத்து பூர்வமான சாட்சியத்தில் இதை உறுதிபடுத்தி இருக்கிறார். அது கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதையும் தவிர அந்த தெரு மளிகைக் கடைக்காரரின் சாட்சியம், காலையில் பால் ஊற்றிய பால்காரரிடம் குமரேசனே வந்து பால் வாங்கியதற்கான ருசு எல்லாம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு உள்ளது..!"

"தட்ஸ் ஆல் யுவர் ஆனர்..!"

"ப்ராஸிக்யூஷன் தரப்பில் சம்மரி கொடுக்கலாம்!"

"மை லார்டு! கொலை செய்யப்பட்ட பெருமாள் சாருக்கும் அவரது பி.ஏ.வான குமரேசனுக்கும் சின்ன தகராறுகள் இருந்திருக்கின்றன. அந்த அறையில் அவரது கைரேகைகள் இருந்தன. வலிமையாக சண்டை போடப்பட்டுள்ளது அடாப்ஸியில் தெரிகின்றது. கொலை செய்யப்பட்ட நேரத்தில் குமரேசன் எங்கு இருந்தார் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் இல்லை. மேலும் வேறு எவருக்கும் பெருமாள் சாரை கொலை செய்ய வலுவான காரணங்கள் இல்லை என்பதும் குமரேசன் சில திருட்டுகளை அலுவலகத்தில் செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே காரணங்கள் அனைத்தும் அவருக்கு எதிராகவே உள்ளதால் அவருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!"

"டிஃபென்ஸ் தரப்பு தமது சம்மரி கொடுக்கலாம்!"

"மை லார்டு! ஃபிங்கர் ப்ரிண்ட்ஸை பொறுத்தவரை பொன்னம்மாளின் ஃபிங்கர் ப்ரிண்ட்ஸும் அறையில் இருக்கின்றன. கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி சமையலுக்கும் பயன்படுத்தப்படலாம் என்று அடாப்ஸி ரிப்போர்ட் கூறுகிறது. குமரேசன் மிகச் சரியாக கொலை செய்யப்பட்ட சமயத்தில் எங்கிருந்தார் எனில் அவர் அவரது நண்பர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் அந்த சமயத்தில் ஒரு சாட்சியம் தயார் பண்ணி இருக்கலாம். அது சாத்தியம் அற்றது. கொலையை முதலில் பார்த்த ஆசாமி பொன்னம்மாள் தான். அவருடைய பேங்க் அக்கவுண்டில் புதிதாக பணம் அதுவும் ஒரு லட்சம் எப்படி வந்தது என்பதை போலீஸ் விசாரிக்க வேண்டும். கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்தியில் பொன்னம்மாளின் கைரேகை உள்ளது. எனவே என் கட்சிக்காரர் குமரேசன் நிரபராதி என்று தீர்ப்பளித்து அவருக்கு ஜாமீன் கொடுத்து இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவும், பொன்னம்மாளின் மேல் விசாரணையை கடுமையாக்கவும் கனம் கோர்ட்டார் உத்தரவிட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்."

கோர்ட்டில் சில நிமிடங்கள் அமைதி.

"இரு தரப்பு வாதங்களை கூர்மையாக கேட்டதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மிஸ்டர் குமரேசன் குற்றமற்றவர் என்பது விசாரிக்கப்பட்ட சாட்சியங்களின் கூற்றுகளில் இருந்து தெளிவாகி அவருக்கு ஜாமீன் வழங்கவும், பொன்னம்மாளின் மேல் விசாரணையை தொடரவும் இக்கோர்ட்டு காவல் துறைக்கு உத்தரவிடுகிறது. தி கோர்ட் இஸ் அட்ஜர்ண்ட்..!"

"ன்ன குமரேசன்! ஜாமீன்ல போறீங்க! கன்கிராட்ஸ்! தேசநாயகத்துகூட உடனே சேர்ந்துக்காதீங்க. அது நமக்கு எதிராகிடும். கொஞ்சம் கேஸ் ஆறட்டும். இல்லாட்டி அவர் பணம் கொடுத்து உங்களை யூஸ் பண்ணி பெருமாள் சாரை காலி பண்ணினது தெரிய வாய்ப்பாகிடும். டேக் கேர். என்னோட அக்கவுண்ட்ல செக் டெபாஸிட் பண்ண சொல்லிடுங்க. பொன்னம்மாவுக்கு பினாமி பேர்ல போட்டு சிக்க வெச்ச மாதிரி என்னையும் மாட்டி விட்டுடாதீங்க. உங்க பேர்ல போட்டுடுங்க. ஹாஃப். ஹாஃபா!"

"சார்! நீங்க தெய்வம் சார்..! அவங்க எல்லாரையும் அப்படியே உடைச்சிட்டீங்களே!"

"அப்படி இல்லய்யா! அவங்க கொண்டு வந்த சாட்சி எல்லாம் அப்படி சொத்தை..! ஒரே ஒரு சாட்சி! உன்னைய அந்த டைம்ல அங்க பார்த்ததா வந்து சொன்னா போதும். கேஸ் காலி. நாம முடிஞ்சோம். பட் அந்த மாதிரி யாரையும் அவங்களால ப்ரொட்யூஸ் பண்ண முடியாததுனால நீ தப்பிச்சு இருக்க..!"

"சரி, போய்ட்டு வரேன் சார்..!"

"போ! கோர்ட்டுக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கும் போய்ட்டு வரேன்னு சொல்லக் கூடாது..!"

..! சாரி சார்...!

மன்னிச்சுடுங்க. கோர்ட்ல ஆர்க்யூமெண்ட்ஸ் சுவாரஸ்யத்துல உங்களை மறந்துட்டேன்.

ஆமா.. நீங்க குமரேசனை அந்த டைம்ல பாத்தீங்கள்ல சார்! என்னை மன்னிச்சுடுங்க. உங்களை சாட்சியா பப்ளிக் ப்ராஸிக்யூடர்கிட்ட இண்ட்ரடியூஸ் பண்ண மறந்துட்டேன். இட்ஸ் மை ஃபால்ட்.

அந்த தப்புக்கு ப்ராயச்சித்தம் பண்ணிடறேன். என்கிட்ட ஸேப்டிக்கு லைசென்ஸ் போட்டு வாங்கி வெச்ச .375 மேக்னம் ரிவால்வர் இருக்கு.

அதோ.. குமரேசன் போறான். கீழ்க்குரலில் சீட்டி அடிச்சுட்டு, அநியாயமா ஒரு உயிரைக் கொன்னுட்டு, ஓர் அப்பாவியை மாட்டி விட்டுட்டு, ஜாலியா போறான்.

சார்.. நீங்க நியாவான் தான? ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு நம்பறவர் தான? நல்லவர் தான?

துப்பாக்கியை தர்றேன். அவனை சுட்டுக் கொல்கிறீர்களா?

என்ன சொல்றீங்க..?

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)