Saturday, February 02, 2008

தேசத் துரோகி?



ப்பதிவில் மகாத்மா காந்தி பற்றி 'தேசத் துரோகி' என்று கூறியுள்ளார்கள்.

http://seithivimarshanam.blogspot.com/2008/01/blog-post_31.html

எப்போது இங்கு தேசம் என்று ஒன்று இருந்தது? எல்லோரும் குட்டி குட்டியாய் சமஸ்தானங்களை வைத்துக் கொண்டு ராஜாங்கம் பண்ணிக் கொண்டிருந்தவர்கள் தானே? ஒரு நாடாக என்று இருந்து வந்தது? ஆன்மீகமும், இந்து மதமும் மட்டுமே இமயம் முதல் இலங்கை வரை இணைத்து வைத்திருந்ததே ஒழிய, அரசாங்கமாக எக்காலத்தில் அத்தனை நாடுகளும் ஒன்றாய் இருந்தன?

குப்தர் காலத்திலும், மெளரியர் காலத்திலும், இராஜேந்திரன் காலத்திலும், மொகலாயர் காலத்திலும் பெரும்பாலான 'பகுதி'களை மட்டுமே பிடிக்க முடிந்தது. என்று ஒரே நாடு என்ற எண்ணம் வந்தது?

பிரிட்டிஷார் வந்து அத்தனையும் ஒன்றாக ஆட்சி செய்யத் தொடங்கிய பின் தானே ஒரே குறிக்கோளோடு எதிர்க்கத் தொடங்கிய பின் தானே இறுதியில் ஒரே தேசம் என்ற எண்ணத்தில் ஒரு நாடாக மாறின சமஸ்தானங்கள்?

இல்லாவிடில் நீங்கள் இன்று பெங்களூர் சென்று வேலை பார்க்க முடியுமா, பாஸ்போர்ட் இல்ல்லாமல்? வேறு மாநிலங்களுக்கு சென்று வர முடியுமா, இலகுவாக? ஐரோப்பா போல் குட்டி குட்டி நாடுகளாக உடைந்திருந்தால் என்னவாய் இருக்கும்? மீண்டும் போர். ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு, பழைய சரித்திரம் திரும்பும்.

அப்படியொரு தேசம் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தவர்களில் முதன்மையானவரான மகாத்மா காந்தியை 'தேசத் துரோகி' என்ற பட்டத்தில் கொண்டு வருவது சரியல்ல. வேண்டுமானால் அவர் இந்து மதத்திற்கு ஆதரவானவர் என்று கூறி விட்டுப் போங்கள்.

ஒருவர் இருக்கையில் இல்லாத ஒன்றுக்கு அவர் துரோகம் செய்தவர் என்பது நகைப்புக்குரியது.

பில் கேட்ஸ், மைக்ரோசாப்டை உருவாக்கி லினக்ஸுக்கு துரோகம் செய்து விட்டார் என்பது போல் இருக்கிறது, நீங்கள் காந்தியை 'தேசத்' துரோகி என்பது..!

பனிக்காற்றில் ஒரு காதலன்.



டபடக்கும் காற்றின் அலைகள் ஓய்ந்து , ஒரு வேட்டை நாயைப் போல் கவ்விக் கொள்ளும் வேகத்தோடு பாய்ந்து வந்து கொண்டிருக்கின்றது இரவின் மாயப் பிடி.

ஈரத்துளிகளால் நிரம்பியிருந்த ஜில்லிட்டுப் போயிருந்த பாதைகளில் நடந்து வருகிறேன். பனிக்காலம் துவங்கி விட்டதை உணர்த்தும் வாடைக்காற்று வீசத் தொடங்கி இருந்தது. இரவின் மெல்லிய அணைப்புக்குள் அடங்கிக் கொள்ளும் பூக்கள் நடுங்கிக் கொள்ளத் தொடங்கின.

உடலோடு இறுக்கிக் கொள்ளும் உடைகள் அணிந்து குளிரிலிருந்து என்னைக் காத்துக் கொள்கிறேன். விரைந்து வீட்டிற்குச் செல்ல வேண்டும். காத்துக் கொண்டிருப்பாள் அவள்.

ஏரிக்கரையின் நுனிகளில் கட்டப்பட்டிருக்கும் கம்பி வலைகளை ஒட்டிய பாதையில் நடக்கிறேன். வழியெங்கும் நட்டு வைத்த மரங்களின் தலையசைப்பிற்குத் தாளம் போட்டுக் கொண்டிருந்தன நீரின் அலைகள்.

மெளனத்தின் போர்வையைப் போர்த்திக் கொண்டு காணக் கூடாதென்ற நினைவோடு எண்ணிக் கொண்டே சென்றேன், கடந்து செல்லும் மரங்களை..! நிறுத்த முடியவில்லை, நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை..!

அதே மரம்..!

எனக்குள் விசிறி அடித்த எண்ணங்களை உதறப் பார்க்கிறேன். உத்றிய பின்னும் ஒட்டிக் கொள்ளும் மழைத்துளி போல் கட்டிக் கொள்கின்றது என்னையே..!

அவன் நினைவுகளை அள்ளிப் போடுகிறது எனக்குள்!

போரின் களங்களுக்குள் போய் வருகிறேன் என்று விட்டு, தொலை தூர பூமியில் தொலைந்து போனவன். குறி பார்த்து சுடுபவன் என்று என் கண்களில் பூத்திருந்த வெட்கத்தை வைத்து அறிந்து, அள்ளிச் சென்றனர் அவனை! எரியீட்டி போல் பாய்ந்து வந்த செய்திகளின் பின்னே எட்டிப் பார்த்த கொடூர செய்தியின் கனம் தாங்க முடியாமல் இருந்தது.

இந்த மரத்தின் நிழலில் தன்னை மறைத்துக் கொண்டு, என்னை அழைத்துக் கொண்டு ஆத்மாவின் ஈரத்தை இதழ் வழி உறிந்து சென்றான். முன்பொரு பனிக்காலத்தின் குளிரில் எரிக்க விறகு கொண்டு கதகதப்பாக்கி, இக்காலத்தில் புகையாகிப் போனான்.

இன்னும் எதிர்பார்ப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை இன்றி, குளிர்க்காற்றின் வருகைக்குப் பின்னான் வந்து நிற்பான் என்று எட்டிப் பார்ப்பதிலேயே கழிகிறது காலம்...!

கரு நிழலே..!



நிழல்களின் நிகரற்ற மெளனத்தின் பொருள் என்னவாயிருக்கும்? வெயில் எரிக்கையில் உதிரும் சக்கையின் கருநிறத்தில் குழைத்த நிழலே, நீ எங்ஙனம் என்னை விட்டு விலகாது நிற்கிறாய்?

ஒரு நாள் நீ விஸ்வரூபம் எடுக்கையில் என்னவெல்லாம் செய்வாய், என்றும் உன்னை காலடியில் பிடித்து தேய்த்து மிதித்து கொண்டேயிருக்கும் என்னை?

அலையாடிய ஆற்றின் ஈரக்கரைகளில் நீயும் என்னுடன் தனிமையில் ஒருக்களித்துப் படுத்து ஓய்ந்திருந்த காலங்களில் , நான் நினைத்த எண்ணங்களைத் தான் நீயும் எண்ணியிருந்தாயா?

இத்யம் தெறிக்க நான் ஓடிய போது, உனக்கும் மூச்சிரைத்ததா?

வெட்கத்துடன் முதன் முதலில் சிரித்து, என் கண் பார்க்க மறுத்து மண் பார்க்கையில், முன்னின்று சிரித்த நிழலே, என்னை விடவும் உற்றவனோ நீ அவளுக்கு?

மலரெடுக்க வைத்த கை மேல், தைத்த முட்கள் வலித்த போது எட்டிப் பார்த்ததா ரத்தம் உன்னிடமிருந்தும்?

தேய்ந்து வருகின்ற காலக் கணக்கில் என்னுடன் என்றும் இருக்கும் நிழலே, உனை அடைய என்ன தவம் செய்தனன்...?

தொடர்புடைய மற்றுமொன்று :

என் நிழல்...!

Thursday, January 31, 2008

கண்ணுகளால் அர்ச்சன, மெளனங்ஙளால் கீர்த்தனம்...



ந்த இரவின் கால்கள் ஏன் இத்தனை மெதுவாக நடக்கின்றன? உன்னையும், உன்னை இதயத்தில் சுமக்கின்ற என்னையும் இரு கைகளில் ஏந்திக் கொண்டு, அலைகின்ற எண்ணங்களை அடக்கி விட்ட இந்த இரவு இனி ஏன் செல்ல வேண்டும் இத்தனை மெதுவாய்?

புழுதிக் காற்றில் நிழலாடும் சருகின் மேல் அமர்ந்த எறும்பைப் போல் எங்கெங்கோ நினைவுகள் செல்லும்.

பனித்துளிகளை தொலைத்து விடாத சின்னஞ் சிறு இலைகளைப் புரட்டி எடுக்கிறது குளிர்க்காற்று.

மினுக் மினுக்கென்று மின்னிக் கொண்டேயிருக்கின்ற மீன்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற என் கண்களுக்கு திரையிடுகிறது ஜன்னலின் மென்னாடை. பொலிவான குளிரொளி மெல்லப் புகுந்து விடுகிறது, அப்படியும்!

பிரிவின் நிமித்தம் பூக்கும் சில பூக்கள், என் தோட்டத்திலும் இப்போது!

விடை பெற்றுக் கொள்ளாத விரல்களைத் தேடி வீணையின் நரம்புகள் அலைபாய்கின்றன. அந்த நாதத்தில் நனைகின்ற பொழுதுகளில் கண்கள் கரைகின்றன.

தொலைவுக் கோயிலின் மஞ்சள் விளக்கொளிகள் நினைவூட்டும், ஒரு தங்க நிறத்தின் தரிசனம் தந்த பரவசத்தை..!

கனத்த மெளனத்திற்குப் பின் மொழிகின்ற வார்த்தைகள் தரும் தாங்க முடியாத இனிமைக்குப் பயந்தே பிரிவின் பகல் பொழுதில் கண்கள் மூடிக் கொள்ள பிரியப்படுகிறேன்.

நேரத்தின் முட்கள் குத்திக் கிழிக்கத் தொடங்கும் நேரம், நீ ஒரு மயிற்பீலி போல் தடவிச் செல்லும் போது, வடுக்களின் வாழ்விலும் வசந்தம் வீசும்.

ஒரு புன்னகை போதும் என்று நினைப்பதற்குள், பூத்து விடுகின்றது 'இன்னும் கொஞ்ச நேரம்' என்ற எண்ணம்.

இரயிலின் கரும்புகை சொல்லிச் செல்கின்றது, சில காலம் பொழுது விடிவதேயில்லை உனக்கு என்று.

அலையாடிய கடற்கரையோரமாய் நடந்து செல்கையில், என் பாத விரல்களோடு படிந்து வரும் மற்றுமொரு இணை.

மஞ்சள் பூக்கள் பூத்திடும் மாலை நேரம் முழுதும் தனிமையின் விரல்களை இறுக்கமாய்ப் பிடித்துக் கொள்கிறேன். விரட்டுவதற்கு இத் தனிமையும் இல்லையென்றால், பின் எதனை விரட்டி விட்டு ஆதுரமாய் உன் மடியில் என்னை அமர்த்திக் கொள்வாய்?

பொழுது புலர்ந்திடும் இன்றொரு இரவைத் தாண்டிய பின். மற்றுமொரு நாட்கள் செல்லும் பயணத்தின் தோள்களைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறேன், முதுகில் மூட்டையாய் நம் நினைவுகளைச் சுமந்து கொண்டு....!

எண்ணங்கள்....

ந்த எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றதென யோசிக்கிறென்.

இன்று இதெல்லாம் தான் எழுத வேண்டும் என்று துண்டுச் சீட்டில் குறித்து வைத்து, டெக்னோபார்க்கை விட்டு வெளியே வந்து சாலையைக் கடக்கையில் நிமிர்ந்து பார்த்தால், இயேசு அழைக்கிறார் ரேஞ்சில் ஒரு போஸ்டர். அதில் அவர் இரு கைகளையும் விரித்து நம்மை அழைக்கிறார். அது அப்படியே ஓர் இயக்குநர் கைகளை விரித்து பார்ப்பது போல் தோன்றி, ஒரு கதை உருவாகி, எழுதி விட்டேன்.

அப்படியென்றால் அந்த கதை இவ்வளவு நாளாக ஏன் தோன்றவில்லை? ஏன் இன்று அந்த போஸ்டரைப் பார்த்தவுடன் தோன்ற வேண்டும்? உண்மையில் அது 'தோன்றியதா'? இல்லை என்னுடனே அது இவ்வளவு நாளாக இருந்து, நான் தான் அதை கவனியாமல் இருந்து விட்டேனா?

அந்த போஸ்டர் ஒரு விளக்கு போல் அந்த எண்ணத்தைக் காட்டியதா?

நிஜத்தில் எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன? ஏன் எனக்கு வருகின்றன? என்னால் மட்டும் எப்படி இப்படி கதைகள் எழுத முடிகின்றது? என்னால் ஏன் மோகன் தாஸ் சார் போல் அற்புதமாக எழுத முழிவதில்லை? டுபுக்கு சார் போல் நகைச்சுவை துளியும் வர மாட்டேன் என்கிறதே, ஏன்?

ஏன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் மட்டும் வருகிறது?

எண்ணங்கள்...எண்ணங்கள்...

வாழ்க்கையின் வரி வடிவங்கள்.

பெரும்பாலான மொழிகளுக்கு வரி வடிவங்கள் உள்ளன.

வாழ்வின் வரி வடிவம் எது என்று தெரியுமா..?

இந்த படங்கள் சொல்லலாம், அதை...!

நன்றி : http://www.thespiderawards.com/2007presentation/photoshow/winners/26_portfolio/thumbnails/01-1_hardy-julio_old%20portraits%20of%20old%20people%201.jpg



நன்றி : http://brianmpei.files.wordpress.com/2007/06/old-man.jpg



நன்றி : http://newsimg.bbc.co.uk/media/images/41934000/jpg/_41934092_ice_cream_416afp.jpg



நன்றி : http://www.worldproutassembly.org/images/old-woman-100.jpg



நன்றி : http://www1.istockphoto.com/file_thumbview_approve/2571363/2/istockphoto_2571363_poor_old_men.jpg

11 மணி வெயில்.



நிறங்கள் மனிதர்களுக்கும் அவர்களது மனங்களுக்கும் மட்டுமே சொந்தமல்ல. வெயிலுக்கும் பல நிறங்களும், மணங்களும் வயதும் உண்டு.

காலையில் தொடங்கும் வெயிலுக்கு இனிய மணம் உண்டு. இரவின் மெல்லிய பனிப் படலத்தை உறிஞ்சிக் கொண்டு, இளஞ்சூட்டைக் கொடுத்து விழிக்கச் செய்யும் வெயில், கொஞ்சிக் குலாவும் குழந்தையைப் போல்..!

மதியம் 12 மணிக்கு அடிக்கின்ற வெயில் காற்றின் ஈரத் துகள்களைத் தின்று விட்டு விஸ்வரூபம் எடுக்கும் இளைஞனின் வலிவுடன் தன் முழு ஆதிக்கம் செலுத்தும். இதன் மணம்
வறண்ட காற்றில் அலையும் தூசியைப் போல் புழுங்கச் செய்யும்.

மாலையில் எதிர்த் திசையில் இருந்து வீசுகின்ற ஒளித் தீற்றல்கள் நீண்ட நிழல்களை உற்பத்தித்து விட்டு, மெல்ல மட்கிப் போம். இதன் மணம் மீண்டும் தலையெடுக்கும் ஈரம்.

இந்த வயதின் மாறிகளுக்கு இடையே, மாறுகின்ற நிலைகளில் இருக்கின்ற வெயிலின் பரிமாணங்கள் வியப்பிற்குரியன.

இந்த வெயில்களின் என்னை மிகக் கவர்ந்தது 11 மணி வெயில்.

இது வளர்பதின் பருவ (Adolescent) வெயில் எனலாம். மெல்லிய சூட்டில் இருந்து, வலிமை பெற்றுக் கொண்டிருக்கின்ற தருணம் இது.

மந்தமான பல காலங்களில் இந்த 11 மணியும் ஒன்று.

நான் கண்ட சில பொழுதுகள்.

விரிசல்கள் வழியே மெல்லக் கசிந்து கொண்டிருக்கும் வெயிலின் கீற்றுகள் மேலே விழ சோம்பலாய் இயக்கம் கொள்ளும் வட்டாச்சியர் அலுவலகம் முன், ரேஷன் கார்டுக்காகக் காத்திருக்கையில், அரைக்கைச் சட்டையின் விளிம்புகள் வழி வியர்வையை வழியவிட்டது ஒரு நள்.

அரை நாள் வழியே செல்லும் பயணங்களில் நகரவே நகராத காலத்தின் முட்களில் உட்கார்ந்து கொண்டு பழிப்புக் காட்டும் ஒரு நாள்.

பகல் நேரப் பயணங்கள் கொல்கின்ற காலங்களில் நசநசக்கும் ஈரத்துடன் புஸ்புஸ் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு தூரே தெரிகின்ற மொட்டை மலைகளையும், ஆங்காங்கே தென்படும் தீய்ந்த பனை மரங்களையும் காட்டிச் செல்லும் ஒரு நாள்.

பஸ் பாஸ் எடுக்க டிப்போ சென்று கூட்டத்திற்குள் வரிசையில் நின்று, ஒவ்வொரு அடியாக நகர்கையில் டீசலின் நெடியோடு தாண்டிச் செல்லும் அழுக்குடைத்த பேருந்து வாரி இறைத்துச் செல்லும் அப்போதைய நொடிகள் வரை சேர்த்து வைத்திருந்த சூட்டை..!

காலத்தின் கரிய கரங்களில் சிக்கியிருந்த நாட்களில் காலை உணவையும், மதிய உணவையும் கலந்து உண்ண நேரம் கொடுத்தது அந்தப் பதினொன்று மணிப் பொழுதுகள்...!


Get Your Own Music Player at Music Plugin

வணக்கம் சொல்லித் துவங்க இது என்ன சொற்பொழிவா?



தாவது ஒன்றை எழுதத் தொடங்க வேண்டும். என்ன என்று தோன்றவில்லை.

விரைந்து பாயும் மேகங்கள் போன்று மறைந்து கொண்டே இருக்கின்றது காலம். அதற்குள் என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதற்குள் அந்த நேரமும் மறைகின்றது.

ஏதேதோ நினைவுகள் தோன்றிக் கொண்டே இருக்கின்ற மனதில், தோண்டத் தோண்ட ஊறிக் கொண்டே இருக்கின்றன பற்பல எண்ணங்கள். அவற்றைப் பந்தி வைக்க முடியுமா?

அவ்வப்போது உள்ளூறும் நினைவுகளை இங்கே களம் இறக்கி வைக்கின்றேன்.

இன்னும் எழுத இருக்கின்றன ஆயிரம் கதைகள்...!

,,,,,,,,,,,, இந்த காற்புள்ளிகள் வரிசையாகச் செல்லும் எறும்புகள் போல் இல்லை...?


அங்க கட் பண்ணினா...

ரியாவே களேபரமாய் இருந்தது.

அரையிருட்டில் ஆங்காங்கே மட்டும் வெளிச்சம் பாய்ந்து கொண்டிருந்தது. சுற்றிலும் துருப் பிடித்த அரிவாள்களும், கத்திகளும் சிதறிக் கிடந்தன. துரு என்றால் சாதாரண துரு இல்லை, சிவப்புத் துரு.

அவன் அவற்றைக் காதலுடன் பார்த்தான்.

"பார்த்தீங்களா.. இதெல்லாம் யூஸ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. இதெல்லாம் விட்டுட்டு நான் வேற வழியில நல்லவனா போகலாம்னு பாக்கறேன். நீங்க விட மாட்டேங்கறீங்க.."

குழைவாகச் சிரித்தார் அவர்.

"தம்பி அப்படியெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுத்திடக் கூடாது. உங்களை நம்பித் தான் இருக்கேன்..."

"விட மாட்டீங்க போல.." சிரித்தபடி தன் மோவாயைத் தடவிக் கொண்டான். மொர மொரவென நீட்டிக் கொண்டிருந்த சில நாள் தாடி உள்ளங்கையில் உரசிச் சென்றது.

"அப்ப அங்கயே கட் பண்ணலாம்.."

"அங்கயா தம்பி... அங்க கட் பண்ணினா ஆபாசமா இருக்காது..?"

"ஆபாசமா தான் இருக்கும். ஆனா அது தான் சரியான இடம். இது வரைக்கும் யாரும் கட் பண்ணாத எடம் அது. கூட்டமா பாக்கறவனுக்கெல்லாம் வலிக்கணும். அப்படி இருந்தா தான் உங்கள மாதிரி தேவை இருக்கறவங்க எல்லாம் நாளைக்கு என்னைத் தேடி வருவாங்க.."

"புரியுது தம்பி... இருந்தாலும் அந்த எடம் தான்..."

அவன் கண்களில் சிவப்பு ஏற ஆரம்பித்தது.

"இந்த மாதிரி கொலை எத்தனை பணியிருக்கேன். நீங்க சும்மா பேசாதீங்க. உங்களுக்கு வேலை ஆகணுமா வேண்டாமா..? இல்லைனா வேற ஆளு பாத்துக்குங்க. 'வண்ணாரப் பேட்டை வடிவேலு', 'தண்டையார்பேட்டை தனபாலு', 'பெசன்ட் நகர் பெருமாளு' இதுங்களுக்கெல்லாம் இப்படி எதிர்பாராத எடத்துல கட் பாண்ணினதுல தான் எல்லார்க்கும் என்னைப் பத்தி தெரிஞ்சது. உங்களைப் பொறுத்த வரை நான் சொன்ன எடத்துல தான் கட் பண்ணுவேன்... அப்புறம் உங்க இஷ்டம்.."

"தம்பி கோவிச்சுக்கப்படாது.. நீங்க சொன்ன எடத்துல கட் பண்ணினா, நாளைக்குப் பிரச்னை வரும் போது, நான் மாட்டிக்குவேன். இப்ப எல்லாம் அவ்வளவு சுலபமா கொலைகள் பண்ணிட முடியறதில்லை. நாம கஷ்டப்பட்டு வேலை முடிச்சுத் தர்றோம்.அதை வெட்டித் தள்ளறதுக்காக ரூம்ல கையில கத்தி, கத்திரிகோலோட இருக்காங்க. அதான் பாக்கறேன்.."

"அதெல்லாம் உங்க கவலை.. என்னோட வேலை கொடுக்கற காசுகு கதையை முடிக்கறது தான். அதுக்கப்புறம் உங்க பாடு. என் இஷ்டப்படி தான் நான் வெட்டுவேன். இல்லைனா என் ப்ளானை மாத்த வேண்டி வரும். பரவாயில்லையா..?"

"சரி தம்பி. நீங்க உங்க இஷ்டத்துக்கு எங்க வேணும்னாலும் கட் பண்ணுங்க.. படத்தை மட்டும் சீக்கிரம் முடிச்சுக் குடுத்கிடுங்க. அப்ப நான் வர்றேன்.."

தயாரிப்பாளர் விடை பெற்றவுடன், இளம் இயக்குனன் மகுடன் சிந்திக்கலானான்.

'அங்க கட் பண்ணினா ஜனங்க ஏத்துவாக்கங்களா..?'

ஒரு நல்ல மலையாளப் பாடல்.

தூவானத் தும்பிகள் என்ற பழைய படத்தில் (1988), இடம்பெற்ற பாடல். இன்று அலுவலகத்தில் இதையே தான் ரிப்பீட்டில் கேட்டுக் கொண்டிருந்தேன். அலுவலகத்தில் இப்பாடலைப் போட்டாலே, எல்லோரும் நம்மை ஒரு மரியாதையோடு பார்க்கிறார்கள். 'அட.. இவனுக்கு இந்தப் பாடலெல்லாம் தெரிந்திருக்கிறதே' என்று..!

என்ன செய்வது..! இப்படியெல்லாம் செய்து தான் நம்மைப் பற்றிக் காட்டிக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது..!

நம்ம திறமையெல்லாம் கட்டிப் போட்டுட்டாங்களே....!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Wednesday, January 30, 2008

Matrixல் மன்னாரு...!



ச்சை பச்சையாய் வார்த்தைகள் விழுந்து கொண்டிருந்தன.

மெதுவாய், மிக மெதுவாய்... ஊதுபர்த்தி பற்ற வைத்து விட்டு பூஜையறையை சாத்தி விட்டு, சிறிது நேரம் கழித்து கதவைத் திறந்து பார்த்தால்.. ஒரு புகைப் படலம் போல் , ஒரு மேக மண்டலம் போல் அறையைச் சுற்றிக் கொண்டிருக்குமே.. அத்தனை மெதுவாக அவன் மேல் விழுந்து கொண்டிருந்தன.

கண் விழித்துப் பார்த்தான்.

இருளின் கரும் இருட்டில் அவன் மட்டும் தனியாக..! துளியளவும் வெளிச்சம் இல்லாத, பிரபஞ்சத்தின் எந்த மூலை என்று தெரியாத அளவிற்கு கருப்பின் பிரம்மாண்டமான வாய்க்குள் அவன் இருந்தான்.

மின்மினிப் பூச்சிகள் இளம் பச்சை நிறத்தில் மினுமினுத்துக் கொண்டு பேர் தெரியாத பச்சைப் புதர்களின் இலைகளில் இளைப்பாறுமே, அது போல், அந்த இருட்டின் போர்வையில் குத்திய தூண்டில் முட்களாய் அந்த பச்சை எழுத்துக்கள் அவனைச் சூழ்ந்து விழுந்து கொண்டிருந்தன.

சில எழுத்துக்கள் அவனைத் தொட்டு அப்படியே வழுக்கிச் சென்றன. சில அவனது உடலுக்குள் மெல்ல ஊசியின் வலுவோடும், தீவிரத்தோடும் ஊடுறுவின. சில அவனது காது மடல்களின் எல்லைகளில் தடவி, அப்படியே உள் நுழைந்தன.

சில அவனைக் கேளாமலேயே அவன் உடலைக் குத்தத் தொடங்கின. அவற்றை உதறித் தள்ளி விட்டு ஓடத் துவங்கினான்.

துரத்தல் தொடங்கியது. துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாக்கள் போல் ஒரே சீராக அவனைத் துரத்தத் தொடங்கின.

ஓடிக் கொண்டேயிருந்தவன் கால் இடறிக் கீழே விழுந்தான்.

"லே மன்னாரு...! காலங்காத்தால என்னடா கெனவு! எந்திரிச்சு தொளிலுக்குப் போடா வெண்ண..! கெனா காணறான். சோத்துக்கே வளியக் காணோம். சொத்துக்கு சண்ட போட்டானாம். இந்தக் கதெயால்ல இருக்கு. நேத்து தான் புயல் சின்னம் போயிருக்கு. கருவாடெல்லாம் காஞ்சி போயிருக்கு. துன்றதுக்கு வூட்ல ஒண்ணும் இல்ல. சேட்டாண்ட அண்டா, குண்டா எல்லாம் அடகு வெச்சாச்சு. இன்னும் அடகு வெக்க வூட்ல பாத்தரம் பண்டம் இல்ல. உங்கப்பன் கடலோட போனவன், என்னயும் இஸ்துகினு போயிருக்கலாம். கசுமாலம், உன்ன குடுத்துட்டு போனான். எனக்கு கா வவுறு கஞ்சி ஊத்துவான்னு பாத்தா, உனக்கு நானில்ல வடிச்சுக் கொட்ட வேண்டியிருக்கு..! நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன். ஒறக்கத்த பாரு..! எலே..! வெக்கங் கெட்ட...."

பச்சை பச்சையாய் வார்த்தைகள் விழுந்து கொண்டேயிருந்தன.

Tuesday, January 29, 2008

பாசம்.

"ன்னண்ணே வர வர தண்ணிய வாயிலயே வெக்க முடியல..."

"என்ன பண்றது தம்பி.. தண்ணியில என்னென்னவோ கலக்கறாங்க.. அட.. குடிக்க தான் முடியலனு பார்த்தா, கருமம் குளிக்க கூட முடியல.. ஒடம்பெல்லாம் செதில் செதிலா வருது.. தண்ணி வரத்தும் அப்பப்போ கம்மியாயிடுது. நாமளும் பரம்பரை, பரம்பரையா இந்த வாய்க்கா தண்ணிய நம்பியே வாழ்ந்துட்டோம். இந்த வயசான காலத்துல வேற எடம் போகறதுக்கும் முடியல..."

"ஆமா.. உங்க பையன் எங்க.. கொஞ்ச நாளா கண்ணுலயே படல.. அசலூரு எங்கயாவது போயிருக்காப்லயா..?"

"அட.. நீ வேற.. எளந்தாரிப் பசங்க எல்லாம் ஒண்ணு சேந்து ஒரு முடிவுக்கு வந்திருக்காங்களாம். தலமுற, தலமுறயா நம்ம பாட்டன், பூட்டன் காலத்தில இருந்து நாம வாழ்ந்திட்டு இருக்கற இந்த ஊரும், மண்ணும், தண்ணியும் போறாதாம் அவிங்களுக்கு.. வேற ஊரு பாக்கப் போறோம்னு கெளம்பிட்டாங்க.. இந்தக் காலத்துல எது நம்ம பேச்சக் கேக்குது...?"

"அப்பிடி எந்த ஊருக்குப் போகறாகளாம்..?"

"ஏதோ பட்டணம் போய் பொழக்கிறாகளாம். மெட்ராஸுனு சொன்னாங்க..என்னையும் கூப்பிட்டாங்க. நான் முடியவே முடியாதுனு சொல்லிட்டேன். நீயே சொல்லு. இந்த ஊர விட்டு போக நமக்கு மனசு வருமா? அடடா.. எத்தன நடந்திருக்கு இங்க..? அந்தக் காலத்து ஜமீன் வூட்டு பொண்ணு.. அப்படியே லட்டு மத்திரி இல்ல இருக்கும். ஊரே நேர்ல கூட பாக்க முடியாது. எவனாவது நிமிந்து பாத்தான்னு தெரிஞ்சா கூட கண்ண நோண்டிருவானுங்க..அந்த ஜமீன் காரனுங்க.. அப்படியும், நாம தான தெகிரியமா, அவ ஆத்துல குளிக்கும் போது ஒளிஞ்சிருந்து பாத்தோம்.. நம்மள ஏதாவது பண்ண முடிஞ்சுதா... அப்புறம் ஒவ்வொரு ஊர்த் திருவிழாவுக்கும் சாமி சிலை கடைசியா நம்ம ஊட்டுக்குள்ள இல்ல வரும்.. இப்படி பெருமையா வாழ்ந்த மண்ண விட்டுட்டு எப்படி போறது...?"

"பழய கதையெல்லாம் வுடுங்கண்ணே..மெட்ராஸுல எங்க போய் இருக்கப் போறாங்களாம் அந்தப் பசங்க..?"

"உனக்கு கூட இப்பல்லாம் பழய கத கேக்கறது சலிச்சுப் போயிருச்சு இல்ல.. இருக்கட்டும். கூவம்னு ஒரு ஆறு ஓடுதாம். அங்க ஒரு ஓரமா பட்டறையப் போட்டு பொழச்சிக்கறோம்னு சொல்லிப் போயிருக்காங்க..."

"அம்புட்டு தூரம் எப்படி போவாகளாம்.."

"அந்தக் கொடுமையை ஏன் கேக்கற..? இந்த வாய்க்கா வழியா போய், ஆத்தோட போனா, கடலூர் போவாகளாம். அப்புறம் அப்படியே கடலோரம் போற மாதிரியே வழி இருக்காம். அந்த வழியா போவாகளாம்..."

"அட.. ஏண்ணே கண் கலங்கறீங்க..? புள்ளங்க எல்லாம் நல்லபடியா வாழுமுங்கண்ணே. நீங்க கவலப்படாதீங்க"

"இருந்தாலும் அவ்ளோ தூரம் தனியா போகறாங்களேனு நெனச்சா தான் கண்ணுல தண்ணி வருது. வழியில எங்கயும் ஏதும் ஆயிரக் கூடாதேனு... நமக்கு மேல இருந்து ஒருத்தன் தூண்டி போட்டுக்கிட்டே இருப்பான். அவன் கிட்டயிருந்து அதுங்க பத்திரமா போய்ச் சேரணுமேனு கவல தான்.. கண்ணுல தண்ணி தான். ஆனா, அவங்களுக்கு நாம அழுதா எப்படி தெரியும். 'தண்ணியில மீனு அழுதா கண்ணீரு கரையில தெரியுமா'னு பாட்டு மட்டும் பாடிட்டு போயிடறானுங்க.. சரி விடு, நாம நம்ம பொழப்ப பார்ப்போம். அங்க ஏதோ பச்சயாத் தெரியுது பாரு. பாசம்னு நெனக்கிறேன்.. வா போய் சாப்பிடலாம்..."

கறுப்புக் குதிரை.

ன்னும் ஒரு நகர்த்தல் தான்.

தனது ராஜா நாலா திசையிலும் சிறைபடப் போகும் நேரம், இன்னும் சில நொடிகள் தான். அதற்குப் பிறகு எல்லாம் முடிந்து விடும். இவ்வளவு காலம் மனதில் சேர்த்து வைத்திருந்த பெருமை உடைந்து போகப் போகிறது.

சந்தோஷ் முகத்தில் ஈயாடவில்லை. பள்ளி, கல்லூரி முதற்கொண்டு 'சென்ற விடமெல்லாம்' செஸ் மன்னனாக பட்டம் வென்ற பெருமிதம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. முகம் வெளிறத் தொடங்கியது.

மாமா நமச்சிவாயம், மாமி , கஸின் செளம்யா முகங்கள் உறைந்து போயிருந்தன.

நொடி முட்கள் மட்டும் நகரும் சத்தம் அவனது இதயத்தின் துடிப்பு போல் கேட்டது. தூரத்தில் போகும் இரயிலின் கூவல் ஓசை அவன் கண்களின் இடுக்கில் துளிர்த்துக் கொண்டிருந்த கண்ணீரை வெட்டித் தள்ளத் தொடங்கியது.

கார்த்திக் மெல்ல நிமிர்ந்து பார்த்தான். அவன் வலது கை விரல்கள் மேலே அனைவரது கவனமும் இருந்தது. கறுப்புக் குதிரையின் தலையை இறுக்கிப் பிடித்திருந்தான்.

நேரம் உறைந்தது போல் அனைவரும் அப்படியே இருந்தனர்.

மெல்ல விடுவித்தான் குதிரையை.

தள்ளடியபடி அதே இடத்தில் நின்றது.

"அங்கிள்.. உங்க போட்டி இப்ப முடிஞ்சிருச்சுனு நினைக்கிறேன். நான் Win பண்ணப் போறேன். இந்தக் குதிரை தாண்டினால் சந்தோஷ் ராஜா காலி. ஜெயிக்கப் போறேனு தெரிஞ்சதுக்கப்புறம் ஜெயிக்கறது வெற்றி இல்லை. இப்ப சொல்லுங்க. உங்க பொண்ணைத் திருமணம் செஞ்சுக்கலாம் இல்லையா? இந்தப் போட்டியில ஜெயிச்சு தான் உங்க பொண்ணைத் திருமணம் பண்ணிக்கணும்னு அவசியமில்லை எனக்கு. நான் நினைச்சிருந்தா இங்க வந்து சொல்லாமயே உங்க பொண்ணைக் கூட்டிட்டு போயிருக்க முடியும். ஆனா நீங்க போட்டியில ஜெயிக்கணும்னு சொல்லி, உங்க பொண்ணை பணயம் வைச்சீங்க. உங்க Male Chavnism போக்கை அழிக்கறதுக்கு தான் இந்தப் போட்டிக்கு ஒத்துக்கிட்டேன். இன்னும் நான் ஜெயிக்கல. இப்படி ஜெயித்து தான் இந்தக் கல்யாணம் நடக்கணும்னு இல்லை. இனிமேல் உங்க இஷ்டம். நான் வர்றேன்..Good Bye."

வெளியேறினான் கார்த்திக்.

பிறகு நெடு நேரம் அங்கு அமைதியே குடி கொண்டிருந்தது.

Monday, January 28, 2008

Enigma ஏன்?



ல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கையில் உடன் அறையில் இருந்த நண்பரால் கிடைத்த ஓர் அறிமுகம் 'ENIGMA'.

புத்தம் புதிய இசை. ஏதேதோ எண்ணங்களைத் தோற்றுவிக்கும் மாய இசை. கவர்ந்திழுத்துக் கொண்ட வீடியோ.

அவ்வப்போது ENIGMA உணர்வுகளை வார்த்தைகள் வழி இறக்கி வைப்போம்.

போரின் பாற்பட்டு அழிந்த...



விரைவாக காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன.

மண்ணில் புதைந்து போனது ஒரு பெரும் நகரம். எரியீட்டிகளும், வாள் பாறைகளும் உரசிக் கொண்ட பெரும் தீப்பந்தங்களின் எச்சிற்பட்டு அழிந்து போனது ஒரு நகரம். போரின் கோர முகத்தின் கடைவாயில் இருந்து கசிந்து கொண்டே இருக்கின்றது பசித்துப் பசித்துப் புசித்த மானிடர்களின் கருஞ்சிவப்புக் குருதி.

இருளின் நீள நகங்கள் கிழித்துப் போட்ட நிலத்தின் பெருங்கோடுகளின் ஆழங்களில் வீழ்ந்து கிடக்கின்றன உருட்டிப் போட்ட தலைகள்.

காற்றின் வீச்சில் கலந்து அடிக்கின்றது நகரத்தின் இல்லாமையின் கடும் நாற்றம்.

பற்றியெரிந்த பெரு நெருப்பின் கோரப் பற்களில் கிழிபட்டுத் தொங்குகிறது புராதனத்தின் பட்டாடையைப் போர்த்தியிருந்த பெண்களின் மென்னுடலின் கை, கால்கள்.

சாம்பலின் பொசுங்கிய பூக்கள் பூத்திருந்த தரையின் மேலெல்லாம் புரண்டு கிடக்கின்றன நாளெல்லாம் போர் போர் என்றே புறப்பட்டுச் சென்ற ஆறடிக் குவியல்கள்.

எரிகின்ற நெருப்பின் ஏப்பம் எல்லாம் புகையாய்ப் பெருகி வருகின்ற பூமியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றது, இறப்பின் கொடுங்கைகளில் இறங்கிய பெருங் குருதி.

வல்லூறுகளும், கழுகுகளும் வட்டமிட, கருங் கூந்தல் போல் சுருண்டிருந்த வானெங்கும் புள்ளிகளாய் இரத்தச் சிதறல்கள்.

மிச்சமில்லாதது ஒரு உயிரும் என்ற பேருண்மை நிலையில் கொம்பு உடைந்த சிலைகளின் நுனிகளில் தோய்ந்திருக்கின்றது காய்ந்து போன கரு நிற உயிரின் மிச்சம்....!

கடைசி மனிதனின் குரல்.



மெல்ல நிமிர்ந்து பார்த்தேன்.

தலைக்கு மேல் வெண்ணிலா. பிரம்மாண்டமாய்... மிகப் பிரம்மாண்டமாய்... ஜொலித்துக் கொண்டிருந்தது. அமைதியாக வீசிக் கொண்டிருந்தது காற்று. கால்களின் இடுக்குகளில் நுழைந்துப் பாயும் ஓடை போல் இன்றி, பாய்ந்து கொண்டிருந்தது மென் காற்று.

கரிய வானம் இன்னும் கைக்குள் அள்ள முடியாத இருளைப் பூசிக் கொண்டு பிரபஞ்சமெங்கும் வியாபித்திருந்தது. குத்தி வைத்த குண்டூசியின் தலை நுனிகள் போல் எங்கோ தொலைவில்.. மிகத் தொலைவில் தெரிந்தன இரு விண்மீன்கள்.

ஓங்கார நாதம் தெளிவாக... மிகத் தெளிவாகக் கேட்டுக் கொண்டேயிருந்தது.

காற்றின் தாள லயத்திற்குத் தகுந்த ஜதியோடு அசைந்து கொண்டேயிருந்தது நீரோடை. ஈரத்தில் நனைந்த அதன் படலங்கள் போர்த்திக் கொண்ட நீரின் கரை என்னைச் சூழ்ந்து கொண்டே வந்தது.

யாருமற்ற தனிமையின் அழுத்தமான போர்வை என்னை மூடிக் கொண்டே வந்தது. நீரின் சகதிகள் சூழ்ந்த மண் மேடுகளின் சேறு என்னை விழுங்கிக் கொள்ள பெரும் திறந்த வாயோடு விரைந்து வருகிறது.

கனத்த மெளனத்தின் வலுவான கரங்கள் ஐயோ.. என்னைப் பிடித்து நெருக்குகின்றன. முட்டுகின்றது என் மூச்சு... பேயாக வீசத் தொடங்குகிறது பெருங்காற்று... புரட்டிப் புரட்டிப் போடுகின்றது.

ஆளுயர அலைகள் உற்பத்தியாகி என் மேல் விழுகின்றன.

திறந்திருக்கும் நெடுங்கதவு என நினைத்து எதிர்த்திசையில் ஓட... அங்கே திறந்திருக்கிறது பிரபஞ்சம்.

தன் இரு கைகளால் என்னை அள்ளிக் கொள்ள, பெரும் கண்களில் இரத்த ஆறு பாயக் காத்திருக்கிறது.

அப்படியே புதைகிறேன்.. சிவந்த கொழ..கொழவென குழைந்து போயிருந்த நிலத்தின் கண்கள் திறந்து கொண்டு பீச்சி அடிக்கின்றது கருநீர்.

மனிதனின் பேராசையில் அழிந்து போன நிலத்தின் மேலிருந்த கடைசி.. மிகக் கடைசி, மனிதனின் உடல் பெரும் இரைச்சலோடு பிரபஞ்சத்தால் உறியப்பட்டு உண்ணப்படுகிறது.

என் கைகளின் விரலிடுக்குகளில் சிக்கியது விதைகளின் உடைகளைக் கிழித்துக் கொண்டு புத்தம் புதிய உயிராய் முளைக்கின்ற ஒரு செடி..!

பேரமைதியோடு கண்களை மூடிய கருஞ்சேறு நுழையுமுன், ஆழ்ந்து இழுக்கிறேன், அழிந்து போன பூமியின் கடைசி ஆக்ஸிஜன்...!

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........

Sunday, January 27, 2008

போகச் சொல் உன் இதயத்தை..!



பொழுதே போக மாட்டேன் என்கிறது என்றேன்.

காட்டினான் உன்னை. 'போகச் சொல் உன் இதயத்தை' என்றான். சொல்லும் முன்னே நகர்ந்து சென்று விட்டது. ஒரு நாளின் இரவில் விழத் துவங்கினேன், காதலின் பொன் வலையில்!

என்ன செய்வது என்று கேட்டேன். உன் அருகில் சென்று பேசு என்றான்.

ஏதோ பெயர் சொல்லி உன் அருகில் வந்தேன். சொன்ன பெயரை மறந்து போனேன். ஏதேதோ பேசச் சொன்னான். வார்த்தைகளின் வரி வடிவம், வாய்க்குள் வடிவம் கொள்ளும் முன் என் வசமிழந்து நகர்ந்து சென்றன.

பரிதாபமாக அவனைப் பார்த்தேன். சிரித்துக் கொண்டான் என்பதை அவன் கண்களின் வர்ணங்கள் காட்டின.

மொழிக உன் காதலை என்றான். எப்படி என்றேன். மொழிகள் வேறாயினும், விழிகள் வழி மொழிக அன்பை என்றான்.

சொல்லத் துவங்கு முன், நனையத் தொடங்கினேன், உன் கேள்விப் பார்வையில்!

ஏதேதோ பேசினேன். பேசியதும், கேட்டதும், சொன்னதும், மொழிந்ததும், பொழிந்ததும், அவ்வப்போது வழிந்ததும்.... எட்டி நின்று பார்த்துக் கொண்டிருந்தான், கள்ளன்.

தலையில் அடித்துக் கொண்டான்.

வேறு வழியின்றி உன் இதயத்துக்குள்ளும் பாய்ச்சினான், காதலெனும் பேருணர்வை...!

உன் மென் புன்னகைக்குள் நீ என்னை புதைத்துக் கொண்டாய் என்பதில் புரிந்து கொண்டேன், பொன் வலையில் சிக்கிக் கொண்ட ஒரு வெண் புறா என்று..!

சிரித்தபடி கையசைத்துப் பறந்து சென்றான், அந்த மாயன்...!

தொலையாது ஈரம்.



ற்றைத் துளிகளாய்ச் சேகரித்து நிரப்பி வைத்துள்ளேன் ஓர் இரத்தத் தொட்டியை, வா வந்து குளித்து விட்டுப் போ..!

கூந்தலில் செருகிக் கொள்ள, சிறகின்றித் தவிக்கிறாயாமே... சொட்டச் சொட்ட நனைகின்றதே இந்த நிலவின் பனியில் ஒரு குரல், நினைவில்லையா உனக்கு..?

நெடுந்தூரம் சென்று தொலைத்து விட்டு வர ஒரு விளக்கின்றி இருக்கிறாயாம், எடுத்துக் கொள் அணைகின்ற நிலையில் மினுக்கும் ஒளியை என் கண்களில் இருந்து..!

விடியலுக்கு முன் இணைந்திருந்த நகங்களின் கூர்மை கிழித்த தசைகளைக் கொண்டு வந்து தருகின்றேன், எனக்குத் திருப்பித் தர முடியுமா, உடைந்து போன இதயத் துணுக்குகளை...?

விரலசைத்து நீ தெளிக்கும் விடைபெறலுக்குச் சிதறிய கோலப் புள்ளிகளாய் கழிந்தன என் நாட்கள்..!

மாலையில் இருந்து முனகிச் செல்லும் மணமாய் உன்னிடமிருந்து என் காதல் விலகிச் சென்றிடினும், மலராய் இருப்பது உன் இயல்பு..!

தூவானம் நின்றிடினும் தொலையாது ஈரம்..!

இப்போது புரிகின்ற கணக்கு.

சிறு வயதில் கோயிலுக்குச் செல்லும் போது, படித்த ஞாபகம்.

'மந்திரங்களைச் சொல்லும் போது பிறர் காதில் விழுமாறு சொன்னால் குறைவான பலன். நம் காதில் மட்டும் விழுமாறு சொன்னால் கொஞ்சம் அதிகம். அதுவும் நமது வாயைக் கூட அசைக்காமல், நாக்கை கூட அசைக்காமல் மனதில் மட்டும் சொன்னால் மிக அதிகப் பலன்.'

அட.. இது ரொம்ப சுலபமாக இருக்கிறதே என்று தோன்றியது.

இப்போது தான் இதன் அர்த்தம் புரிகின்றது. இந்த வயதில் மனதை ஒருமுகப்படுத்தி, மந்திரமோ, பாடலோ பாடுவது எவ்வளவு கடினமாக இருக்கிறது? நொடி நேரத்திற்குள், ஆயிரமாயிரம் திசைகளில் பறந்து, இலட்சக்கணக்காண எண்ணங்களை நினைக்கின்ற மனதைக் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்துவது எவ்வளவு கடின செயலாக இருக்கிறது.

எனவே தான் அப்படி ஒரு கணக்கு வைத்தார்கள் என்று இப்போது புரிகிறது.

இது ஒரு காதல் கதை...? - 5

ன்னும் கதையை வளர்ப்பானேன்..?

அருணும், மலரும் இறுதிவரை சந்திக்கவேயில்லை. ஆர்.டி.ஓ. ஆபிஸில் இது போல் விலாசம் தருவதில்லை என்று கூறி விட்டதால், பிறகு அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை.

வாழ்க்கையென்னும் ஒரு புத்தகத்தில் நிரப்பப்படாத பக்கமாக நின்று போய் விட்டது, இந்தக் காதல்.

அருணும், மலரும் திருமணம் செய்து கொண்டனர், பிறகு தம் பெற்றோர் பார்த்து முடித்து வைத்த வரன்களை..!

எனவே... அவர்கள்...

தயவித்து முதல் பாகத்தின் முதல் இரண்டு வரிகளைப் பார்க்கவும்.

பி.கு.: 'ஏண்டா.. உனக்கு பாசிட்டிவா முடிக்கவே தெரியாதா..? நெகட்டிவா, சோகமா முடிச்சா தான் உனக்கு இலக்கியம் படைச்சதா நினைப்பா..' - இந்த மனசாட்சி தொல்லை தாங்க முடியலங்க..!

'அதான் இது ஒரு காதல் கதை...?னு கேள்விக்குறி போட்டுட்டமில்ல..'