பொத்திக் பொத்தி வெச்சுக்கிட்டேன் நெஞ்சுக்குள்ள!
முத்து முத்தாய்ச் சிரிச்சிருக்கு தென்னம்புள்ள - வந்து
முத்தம் எல்லாம் கொடுத்துவிட்ட சின்னப்புள்ள!
சிரிச்சு சிரிச்சு நீ மனசுக்குள்ள வந்தாச்சு - உன்
நம் நிழல்கள் மட்டும் பின்னிப் பிணைந்து இருக்கும் மழையிருள் பொழுதில், நீ தூரத்தில்.
நிலவு வெள்ளைப் பொழிவின் பின்புலத்தில் அசையும் தென்னங் கீற்றுகளெல்லாம், மெளன சாட்சிகளாய் நிற்கின்றன. இலேசான குளிர் கலந்த தென்றல் வந்து, ஆடையையும், தோலையும் ஊடுறுவி, எலும்பு வரை கொக்கிப் போடுகின்றது.
காதலோடு கால் வரை வந்து கழுவி விட்டு, நாணத்தோடு நழுவிச் செல்லும் காவிரியின் ஈரம், உடைந்த நீர்க்குழாயின் விரிசலில் தெறிக்கும் துளிகளாய், உன் கண்ணீர் என் கன்னத்தில் பட்டுத் தெறித்த, அந்த நாளை நினைவூட்டிச் செல்கின்றது. ஒளிச் சகதியாய் உயிர் தின்னும் தூரப் பிணத்தின் பிம்பம், நம் இறந்து போன நாட்களை ஞாபகப்படுத்துகின்றது.
தூரத்தில் எங்கோ பெய்யும் மழை கிளப்பும் வாசனை, உன் கரங்களை முகர்ந்த போது, சமீப மருதாணிச் சுவடுகளையும் மீறி அறிந்த, உன் வாசனையை உணர்த்துகிறது!
ஒரு பொழுது, பூங்காவில் அருகில் அரவம் கேட்டு, அரவம் கண்ட போது, உன் பின்னங்கழுத்தில் உதித்த வியர்வைத் துளிகள் இங்கே பூக்களின் மேல் பனித்துளிகளாய்ப் பூத்திருக்கின்றன.
நீரால் கனத்த கம்பளிப் போர்வையாய்ப் போர்த்தியிருக்கும் இந்த இருள் என்னை அழுத்திக் கொண்டு எழ முடியாமல் செய்கின்றது.
சோம்பலான மஞ்சள் வெளிச்சத்தில் குளிக்கும் பாலம், கரைகளின் கைகுலுக்கும் கரங்களாய் உள்ளது. பேரிரைச்சலோடு சுழித்துச் செல்லும் நீரோட்டம் ஈரத் தவளைகளின் கரகரப்பைத் தன்னுள் கரைத்துச் செல்லும்!
சுழி அறியுமா என் மனதின் இரைச்சலை?
பின்புற நகரின் வெளிச்சப் புள்ளிகளின் தெறிப்பில், விளிம்புகளை நனைத்து, இருள் பூதங்களாய்ப் பரவி நிற்கின்ற தொடர் மலைகள்! கிளியோபட்ராவின் கடைசிப் பாம்பாய், மலைகளின் மேனியில் தழுவிச் செல்லும் இரயிலின் தடதடக்கும் பெட்டிகள்!
பரவியிருக்கும் பனிப்புகையோடு, விரவிச் செல்லும் இரயிலின் கரும்புகை, ஊர்ந்து போகும் வெளிச்சப் பூரானின் பாதையைக் காட்டுகிறது.
கைகளையும், கால்களையும் இறுக்கக் கட்டிக் கொள்கிறேன். என் மூச்செல்லாம் புகையாய்ப் புனைகிறது, இரயிலின் புகையோடு போட்டியிட்டு!
நமக்கிடையே உறைந்து விட்ட மெளன ரசத்தை உருகச் செய்யும், உன் பார்வைத் தகிப்பின் சூடு தேடி சுருண்டு கிடக்கிறேன்! என் விண்ணப்பங்கள் எல்லாம் விழல் நீராய் விட்ட பின், என் விடியலைத் தான் தூது அனுப்புகிறேன்!
பதிலிடும் வரை,
படுக்கையாய் இருளைக் கொள்கிறேன்!
பார்வையாய் உன் குரலைச் சொல்கிறேன்!
20.FEB.2004