Saturday, May 30, 2015

அப்பாவாதல்.

தே முடி
அதே மூக்கு
அதே முகம்
அதே சொல்
அதே சர்க்கரை

யாரோ ஒருவனாகப்
பிறந்து
மெல்ல மெல்ல
அப்பாவாதல் தான்
வாழ்வாகின்றது.

தமிழ்த் திரையின் நவீன பேய்ப் படங்கள் - ஒரு பார்வை.

டந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரை பல பேய்ப் படங்களை உற்பத்தி செய்து தள்ளுகின்றது. எப்போதும் மாறி மாறி வருகின்ற வரிசையில் இப்போது பேய்ப்படங்களின் முறை.

சுஜாதாவின் ‘சசி காத்திருக்கிறாள்’ என்பது குமுதத்தில் பிரசுரமாகிய அவருடைய முதல் கதை. அதில் கணவன் வருகைக்காக மனைவி வீட்டில் காத்திருப்பாள். கணவன் சாலையில் விபத்தில் அடிபட்ட ஒருவனுக்கு உதவி செய்து கொண்டிருப்பான். கதைப் போக்கு, விபத்தில் கணவன் அடிபட்டிருப்பது போன்ரும் மனைவி அது தெரியாமல் வீட்டில் பதற்றத்துடன் காத்திருப்பது போலும் எழுதப்பட்டிருக்கும். கடைசியில் கணவன் பத்திரமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் தான் படிக்கும் நமக்கும் இந்த உண்மை தெரிய வரும். சில வருடங்களுக்கு முன் நடந்த ஒன்று விட்ட அக்கா ஒருவருடைய திருமணத்தில் சந்தித்த போது, சுஜாதாவுடைய தீவிர வாசகரான மாமா ஒருவர் சொன்னார், “இந்த கதையை இப்ப எழுத முடியாது..” “ஏன் மாமா..?” “இப்ப ஒரே ஒரு போன் கால் பண்ணி ‘இங்க, இப்படி இருக்கேன். வர லேட்டாகும்...’னு அவன் சொல்லிட்டா, பிரச்னை முடிஞ்சது..” என்றார். இப்போது வாட்ஸ் அப்பில் ஒரு வரி போதும்.

நவீன கருவிகளின் வருகை நம் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் மாறுதல்கள் பல தளங்களில் ஆய்விற்குட்படுத்தப்படக் கூடியவை. ஆயிரமாண்டுகளாக இருந்து வந்த விவசாய யுகத்தின் மேல் நிகழ்ந்த தொழில் (இரும்பு!) யுகத்தின் தாக்கம் மற்றும் பாதிப்புகள் சென்ற நூற்றாண்டில் நிறைந்திருந்தன. சோவியத் புரட்சியே மண் மீது கனரகத் தொழில் வந்து மோதிய நிகழ்வு எனலாம். தற்போதைய மின்னணு மற்றும் கணினிக் கருவிகளின் நுழைவு, இரும்பு யுகத்தினை விடப் பரவலாகவும் வீச்சுடனும் நிகழும் ஒன்று. காரணம், இரும்பு யுகக் கருவிகளை விடவும் மின் கருவிகளின் பயன்பாடு பெருத்த எண்ணிக்கையில் நிகழ்கின்றது. மற்றும், இரும்பு எந்திரங்களை அமைக்க, பயன்படுத்த, தொழிலில் இயக்க பெரும் மூலதனமும் அதைவிடப் பெரும் எண்ணிக்கையிலான மனித வளமும் தேவை. ஆனால் மின் கருவிகளுக்கு அப்படி அல்ல.

நிகழ் உலகில் நவீன கருவிகளின் தொடர் மற்றும் பெரும் அளவிலான பயன்பாடு, படைப்புலகிலும் பெரும் மாறுதல்களைக் கோருகின்றது. மெய் நிகர் உலகை நிர்மாணிக்கும் இலக்கியம் மற்றும் திரையுலகில் அவற்றைப் பற்றிய பிரக்ஞை இன்றி உருவாக்கப்படும் படைப்புகள் நிகழ் உலகைச் சரியாகப் பிரதிபலிக்காது. இது ஒருபுறம்.

பாறை மடிப்புகளிலும் மரங்களின் இடுக்குகளிலும் வாழ்ந்த காலம் முதல் இருள் என்பது பயம். இருட்டில் அல்லது இருட்டுக்குப் பின் என்ன என்ற கற்பனை ஆதி நிலையிலிருந்து இன்று வரை நம்மைத் தொடரும் மனச் சரடு. தனிமையில் இருக்கையில் அந்த பயம் பிரம்மாண்ட உருவம் கொள்கின்றது. மின் விளக்குகள் வந்த காலத்தில் இருள் பற்றிய அச்சம் விலகியிருக்கும், கொஞ்ச காலத்திற்கு. ஆனால் மனித மனம் அப்படி எளிதில் ஒத்துக் கொள்வதில்லை. ஒளிரும் மின் விளக்கின் பின்னே செறிந்திருக்கும் கரும் இருள் இன்னும் பயம் தருகின்றது. அந்த இருளிலிருந்து விளைந்த கனி தான் பேய். மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்விக்கு ஒரு திட்டவட்டமான பரிசோதித்துப் பார்க்கக் கூடிய அறிவு கிட்டும் வரும் இந்த பேய்கள் நம் மனப் பிராந்தியத்தில் உலவிக் கொண்டு தான் இருக்கும். எனவே வாழ்வைப் பிரதிபலிக்கும் படைப்புகளிலும் அவை இருந்து கொண்டேயிருக்கும். இது மறுபுறம்.

நவீனத் தொடர்புக் கருவிகள் நம்மை மேலும் மேலும் இறுக்கமாகிக் கொண்டிருக்கின்றன. எவரும் எப்போதும் எவருடனும் தொடர்பில் இருக்க முடியும். தனித்த நிலை கிட்டத்தட்ட பழமையாகிக் கொண்டிருக்கின்றது. அப்படியெனில் இன்றைய காலகட்டத்தில் பேய்கள் எங்கு இருக்கும், அவற்றைப் பற்றிய பயம் எப்படியான மாற்றங்களைப் பெற்றிருக்கும். நகரின் வங்கி வாசல் படிக்கட்டுகளில் பசுமாடு ஒன்று வெறும் வாயை அசை போட்டுக் கொண்டு படுத்திருந்தது. ஒரு காலத்தில் பசிய வயல்கள் பொலிந்த பிரதேசம் அது. மேய்ந்த நினைவில் அம்மாடு இப்போது சிமெண்ட் திண்ணையில் கழுத்தைச் சரித்துக் கண் மூடியிருந்தது. அது போல பேய்கள் பற்றிய அச்சங்கள், ஆர்வங்கள், பதற்றங்கள், பயங்கள் இன்றைய ’என்றும் தொடர்பு’ தினங்களில் எப்படி இருக்கும் என்பது படைப்பாளியின் சவால். அதைத் திறம்பட எதிர் கொள்பவன் வெற்றியாளனாகின்றான்.