Thursday, September 14, 2006

லிப்டாக இருக்கிறேனே..!

பிரின்சிபால் அறை அமைதியாக இருந்தது.

காலை 10 மணிக்கான வகுப்புகள் துவங்கி விட்டதற்கு அறிகுறியாக, இரண்டு மணி ஒலித்தது.மதியம் பிள்ளைகள் எடுத்து வரும் உணவிற்காக,மைதானத்தின் புங்கை மரங்களில் இப்போதிருந்தே காகங்கள் அம்ர்ந்துவிட்டன. விளையாட்டு பீரியட் உள்ள ஏழாம் வகுப்பு மாணவர்கள் வரிசையாக வரத் தொடங்கினர்.

"சொல்லுங்க, ஸ்டெல்லா டீச்சர்..!" என்றார் பிரின்சிபால்.

"என்ன சார் சொல்ல்ணும்..?" என்றார் டீச்சர்.


"அதான்..! உங்க மேல நிறைய பெற்றோர் மட்டுமில்ல, ஆசிரியர்களே புகார் குடுத்திருக்காங்க..!"

"என்னனு சார், புகார் சொல்லி இருக்காங்க..?"

" நீங்க மாணவர்களை அளவுக்கதிகமாகவே கண்டிக்கிறீங்க, தண்டிக்கிறீங்கனு புகார் வந்திருக்கு. போன திங்கள்கிழமை, நீங்க அன்பரசுங்கிற மாணவனை அறைஞ்சிருக்கீங்க. அதில அவன் காதிலிருந்து ரத்தம் வந்து, இப்ப சர்ஜரி வரைக்கும் போயிருக்கு. அவங்க பெற்றோர் வந்து நேத்து சண்டை போட்டுட்டுப் போயிருக்காங்க. உங்க பதில் என்ன..?"

"சார்..! மார்க் ரொம்ப குறைவான மாணவர்களை கண்டிக்கிறதும், தண்டிக்கிறதும் தவறுன்னு சொல்லறீங்களா..? நாளைக்கு ரிசல்ட் குறைந்துனா என்னைத் தான கேப்பீங்க?"

"இல்ல..! நீங்க செய்றது சரி..! அதனால தான் இந்த விசாரணைக்கு உங்களை மட்டும் கூப்பிட்டு இருக்கேன். பொதுவா இதுபோல புகார் வந்ததுனா எல்லா டீச்சர்ஸும் இருப்பாங்கன்னு உங்களுக்கே தெரியும். ஆனாலும் கொஞ்சம் அளவுக்கு மீறிப் போகறதால தான் பிரச்னைகள் வந்திடுது..!"

"ஓ.கே. சார். இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க. அந்தப் பையன் கால்ல போய் விழுந்து மன்னிப்பு கேட்கணுமா..?"

அமைதி நிலவியது. தூரத்து சாலையில் போகும் B19 பேருந்தின் சத்தம் மட்டும் கேட்டது.

" கொஞ்சம் அமைதியாக இருங்க. இது போல பெரிய அளவுல பிரச்னை வரும் போது, டீச்சர்ஸை சஸ்பெண்ட் பண்றது தான் வழக்கம். ஆனா நீங்க பசங்களை அளவுக்கு மீறி கண்டிக்கிறதும், தண்டிக்கிறதும் தான் பிரச்னை. மத்தபடி உங்க திறமையிலயோ, ரிசல்ட் காட்டிறதுலயோ யாரும் குறை சொல்ல முடியாது. ஏன், நேத்து வந்த அன்பரசுவோட பெற்றோரே, உங்க கற்பிக்கும் திறமையைப் பத்தி உயர்வாத் தான் பேசினாங்க. கொஞ்சம் உணர்ச்சிவசப்படறதை மட்டும் குறைச்சிக்கிட்டா நல்லதுனு சொன்னாங்க. பாருங்க, இப்பக் கூட எமோஷனாகறீங்க..."

விர்விர்ரென்று அனல் மிதக்கும் காற்று அடித்தது. மைதானத்தின் மாணவர்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்ட மாதிரி எல்லாம் தெரியவில்லை. கபடி, கால்பந்து என்று சூடு பறக்க விளையாடிக் கொண்டிருந்தனர். கோ-கோ என்று பெண்பிள்ளைகளும் தூள் பரப்பிக் கொண்டிருந்தனர்.

" நம்ம பள்ளிக் குழுமமே நடத்துற இன்னொரு பள்ளி மேலக்கவுண்டம்பாளையத்துல இருக்குனு உங்களுக்குத் தெரியும். ரெண்டு மாசம் நீங்க அங்க போய்ட்டு ஒர்க் பண்ணிட்டு வர்றணும்னு முடிவு பண்ணியிருக்கோம். நீங்க என்ன சொல்றீங்க..?"

"சார்..! இது தண்டனை கிடையாதே..?"

" நிச்சயமாய் இது தண்டனை கிடையாது. வேறொரு புது சூழ் நிலை, புது மாணவர்கள் அப்படினு நீங்க பழகலாம். மத்தபடி இது உங்க கேரியர்ல இறக்கம் கிடையாது. உண்மையைச் சொல்லணும்னா அது உங்களுக்கு ஏற்றம் தான் தரும்னு நம்பறேன். அப்புறம்.."

"சொல்ல வந்தைச் சொல்லுங்க சார்..."

"அந்தப் பள்ளி மாணவர்களைப் பத்திக் கேள்விப் பட்டிருப்பீங்கனு நினைக்கிறேன்.."

"தெரியும் சார். நானே அங்க கொஞ்ச நாள் வேலை பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.."

"அப்ப உங்களுக்கு அங்க போய் ஒர்க் பண்றதுல அந்த பிரச்னையும் இல்ல தானே..?"

"இல்ல சார். எப்ப சார் அங்க போய் ஜாயின் பண்ணனும்.."

"அடுத்த திங்கள் போனாப் போதும்."

" நன்றி சார். நான் வர்றேன்.."

சின்ன பொண்ணு. கொஞ்ச நாள் அங்க இருந்திட்டு வரட்டும். அப்ப தான் குழந்தைகளை நடத்தும் விதம் புரியும். பெருமூச்சு விட்டார் பிரின்சிபால்.

" மே இ கம் இன் சார்..?"

"எஸ்..! நீங்க தான ஸ்டெல்லா டீச்சர்..?"

பிரின்சிபால் அறை தூய்மையாக இருந்தது. அழகாக அடுக்கு வைக்கப்பட்டிருந்த கோப்புகள். வரிசையாக பேனாக்கள். தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்த பிரின்சிபால். 'பிரின்சிபால் பிரான்சிஸ்' என்று பெயர் வரைந்த போர்டு பளபளத்தது. ஓரத்தில் யேசு நாதர் சிலை இருந்தது. அருகில் மெழுகு கரைந்துக் கொண்டிருந்தது.

"ஆமா சார். பிரின்சிபால் தேவசகாயம் சார் தான் இங்க அனுப்பி வெச்சிருக்கார். கொஞ்ச நாள் ட்ரெய்னிங்.." பொய் தான். ஆனால் பிரின்சிபால் தான் இப்படியே சொல் என்றார்.

"எஸ்..! எஸ்..! தேவசகாயம் சார் சொன்னார்..! ரெண்டு மாசம் இங்க இருந்திட்டு அப்புறம் அங்க வரட்டும்னு சொன்னார்..! சோ.. வெல்கம் டு அவர் ஸ்கூல்.."

" நன்றி சார்..!"

கைகள் கொடுக்கப்பட்டன.

" உங்களுக்கு இந்தப் பள்ளி மாணவர்களைப் பத்தி தெரியும்னு நினைக்கிறேன்.."

"கொஞ்சம் தெரியும் சார். இருந்தாலும் நீங்களே சொல்லுங்க சார்..!"

"ஓ.கே. இங்க இருக்கிற மாணவர்களுக்கு வாய் பேச வராது. அதுக்காக அவங்களை ஊமைகள்னு சொல்லிடாதீங்க. அந்த வார்த்தையை யாரும் அந்தக் குழந்தைகள் முன்னாடி சொல்லக் கூடாதுனு உத்தரவிட்டுருக்கிறேன். அவங்களை இறைவனின் செல்லக் குழந்தைகள்னு தான் சொல்லணும்னு சொல்லியிருக்கிறேன். நீங்களும் அப்படியே நடக்கணும். அப்புறம், நீங்க வகுப்புல ரொம்ப கண்டிப்பானவங்கனு கேள்விப்பட்டு இருக்கேன். இங்க உங்க கண்டிப்பை கொஞ்சம் குறைச்சிக்கணும்னு உங்களைக் கேட்டுக்கிறேன். முக்கியமா..." பிரின்சிபால் குரல் தழுதழுத்தது.

"சொல்லுங்க சார்..!" கனமான மனத்துடன் கேட்டார் ஸ்டெல்லா டீச்சர்.

" உங்க ஸ்கூல்ல வகுப்புல குழந்தைகளை 'அமைதியாய் இருங்க, பேசக்கூடாது'னு மிரட்டுவீங்கனு கேள்விப்பட்டிருக்கேன். தயவு செஞ்சு, இங்க அது போல மிரட்டிடாதீங்க. இங்க இருக்கிற ஒவ்வொரு குழந்தையும் பேசணும், வாய் நிறைய வார்த்தைகளை வெச்சுப் பேசிக்கிட்டே இருக்கணும்னு நாங்க தினமும் ப்ரேயர் பண்றோம். தயவு செஞ்சு, வகுப்புல போய் 'யாரும் பேசக் கூடாதுனு' மிரட்டிடாதீங்க... ப்ளீஸ்..." பிரின்சிபால் கண்களில் கண்ணீரே வந்து விட்டது.

"சார்..!" பதறி விட்டார் ஸ்டெல்லா டீச்சர்.

"ஸாரி..! கொஞ்சம் எமோஷனாகிட்டேன். இந்தாங்க, இது தான் உங்க டைம் டேபிள். நீங்க உங்க வகுப்புக்குப் போங்க"

"ஓ.கே. சார்."

ரெண்டு மாதம் எப்படி கழிந்தது என்றே தெரியவில்லை.

பிரின்சிபால் தேவசகாயம் ஸ்டெல்லா டீச்சரைப் பார்க்க வந்திருந்தார். இரு பிரின்சிபால்களும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, ஸ்டெல்லா டீச்சரை வரச் சொல்லியிருந்தார்கள்.

"மே ஐ கம் இன் சார்..?" கேட்டுக் கொண்டே வந்தார் ஸ்டெல்லா டீச்சர்.

"வாங்க டீச்சர். உங்களைப் பார்க்க உங்க பிரின்சிபால் தேவசகாயம் சார் வந்திருக்கார்."

"குட்மார்னிங் சார். நல்லா இருக்கீங்களா சார்..?"

" நலம் டீச்சர். எப்படி போய்க்கிடு இருக்கு உங்க வேலை..? எப்போ நம்ம பள்ளிக்குத் திரும்பப் போறீங்க..?" தேவசகாயம் கேட்டார்.

"மன்னிக்கணும் சார். நான் இங்கயே இருக்கலாம்னுட்டு முடிவு எடுத்திருக்கேன் சார்..."

இருவரும் ஆச்சரியக் குறியிட்ட கண்களோடு பார்த்தார்கள்.

"உங்க இந்த முடிவுக்கு என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?"

"கண்டிப்பா சார். இங்க இருக்கிற குழந்தைகள் எல்லாம் தங்களுக்கு இருக்கிற குறைகளை நினைக்காம, ' நமக்கொரு வாழ்க்கை கிடைக்காதா.. நாமும் மத்தவங்களைப் போல நார்மலான வாழ்க்கை வாழ மாட்டோமா'னு தவிக்கிறாங்க. ரொம்பக் கடுமையாக உழைக்கிறாங்க. அவங்களுக்கு இருக்கிற பிரச்னையை நினைக்க நேரம் இல்லாத அளவுக்கு வேலைகளை இழுத்துப் போட்டுக்கிட்டு உழைக்கிறாங்க. மேல வரணும், வாழ்க்கையில முன்னேறணும் அப்படினு துடிக்கிறாங்க. ஆனா நாம எல்லா வசதிகளும் இருந்தும், எந்தக் குறை யில்லாம இருந்தும் சாதனை செய்ய யோசிக்கிறோம். முன்னேற எண்ணம் இல்லாம இருக்கோம். நம்ம பள்ளி மாணவர்களைச் சொல்லல, பொதுவாகச் சொல்றேன் சார். டீச்சர் அடிச்சிட்டாங்கனு புகார் சொல்லத்தெரியறதே தவிர, ஏன் அடிச்சாங்க, நாம என்ன தப்பு பண்ணினோம்னு யோசிக்கிறதேயில்ல. எனக்கு கூட 'என்னை வேற பள்ளிக்கு அனுப்பியிருக்கார்'னு உங்க மேல வெறுப்பு வந்ததே தவிர, என் பக்கத்து தவறை சிந்திக்கவே தோணல. ஆனா இங்க வந்ததுக்கு அப்புறம், இயல்பான வாழ்க்கை வாழவே போராடற இந்த குழந்தைகளைப் பார்க்கும் போது நாம எவ்வள்வு அதிர்ஷ்டசாலிங்கனு தோணுச்சு. அதனால நான் இங்கயே இருந்து இவங்க நல்ல வாழ்க்கை வாழ உதவுகின்ற டீச்சரா இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன் சார். பொதுவா நம்ம ஆசிரியர் வேலையை ஏணி மாதிரினு சொல்லுவாங்க. மாணவர்களை மேல ஏத்தி விட்டுட்டு, கீழேயே நிற்பாங்கனு சொல்லுவாங்க. ஆனா நான் இவங்களுக்கு லிப்ட் மாதிரி இருக்கணும்னு விரும்பறேன் சார். அவங்களையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திட்டு, நானும் மனதளவில் உயர்ந்த இடத்திற்குப் போகணும்னு விரும்பறேன் சார்...!"

"ரொம்ப சந்தோஷம் டீச்சர். உங்க குறிக்கோள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நம்ம பள்ளி மேலயோ, என் மேலயோ எந்தக் கோபமும் இல்லையே உங்களுக்கு..?"

"இல்லவே இல்ல சார். நானும் நம்ம பள்ளிக்கு அப்பப்போ வந்து, இங்க இருக்கிற குழந்தைகளைப் பற்றி சொல்லணும் சார். அப்போ தான் அவங்க அவ்வள்வு பாக்கியவான்கள்னு தெரியும். அவங்க குறைபாடுகளை நீக்கிட்டு, நல்ல நிலைமைக்கு வர பாடுபடுவாங்க. நீங்களும் அடிக்கடி இங்க வந்து போகணும் சார்.."

"கண்டிப்பா. சரி, அப்ப நான் கிளம்பறேன்.."

"போய்ட்டு வாங்க சார்.." ஸ்டெல்லா டீச்சர் கும்பிட்டார்.

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)

3 comments:

ஓசை செல்லா said...

முழுதும் படித்தேன். மிகவும் நன்று!

வசந்த் said...

ரொம்ப நன்றிங்க செல்லா... அப்பப்போ வாங்க..

முரட்டுக்காளை said...

நல்ல கதை வசந்த். ஒருவேளை வாத்தியார் ஆகியிருந்தா எவ்வளவு பாசமா நடந்துக்கனும்னு தெரிஞ்சுக்கலாம்.

உங்களோட எல்லா கதையையும் நான் படிச்சிட்டேன்...