Sunday, January 14, 2007

உன் முகம் தொட்டு...!


உன் முகம் தொட்டு வழித்துக் கொண்ட வெட்கம் நிறைந்த என் கைகளை என்ன செய்வது? முத்தமிட்டு ஒற்றிக் கொள்! உன் உதடுகள் இன்னும் கொஞ்சம் சிவக்கட்டும்!

உன் வழி பார்த்துக் கருத்த என் விழிகளை நான் என்ன செய்வது? எடுத்துப் பூசிக் கொள்! உன் கூந்தல் இன்னும் கொஞ்சம் கருக்கட்டும்!

காற்றோடு தேடிப் போய், என் காற்சட்டையில் நான் சேர்த்து வைத்திருக்கும் உன் கொலுசொலிகளை நான் என்ன செய்வது? உன் வார்த்தைகளுக்கு வர்ணமிட்டுக் கொள்! உன் குரல் இன்னும் கொஞ்சம் இனிக்கட்டும்!

என் கனவுகளில் வந்து கையசைத்துப் போன, உன் வளையொலிகளை நான் என்ன செய்வது? வந்து வாங்கிக் கொள்! என் கனவுப்பை காலியாகட்டும்!

உருத் தெரியா முன்னிரவில், உன் உள்ளங்கை ரேகைகளில், ஒளிந்து கொண்ட என் விரல்களை என்ன செய்வது? ஒடித்துக் கொள்! என் கைகளின் கொம்புகள் உடைந்துப் போகட்டும்!

உனக்காகப் பூத்திருக்கும் மலர்களைப் பூஜைக்கு அனுப்பாதே! தெய்வங்களும் துயர்படட்டும்!

வெயில் சாயுங்கால வேளையில், வானத்தின் சாயமாலையில், வர்ணங்களை எடுத்து, பூசிக் கொள்! மழையும் கொஞ்சம் நிறமிழக்கட்டும்!

உன் சிரிப்புகளால் நிறைந்திருக்கும் என் இதயத்தை வாங்கிக் கொள்! அது துடிப்பதிலிருந்து விடுதலை பெறட்டும்!

உனக்காகத் தள்ளி வைத்திருக்கும் என் இறப்பை, உடனடியாக உணர்ந்து கொள்! எது மறந்து போய் விடினும், என் நினைவாவது கொஞ்சம் இருக்கட்டும்...!

எழுதியது : 27.Sep.2004

No comments: