Friday, October 19, 2007

மீண்டும், மீண்டும்...!



ருவரிடம் ஒரு முறை மட்டுமே வரும் என்று கவிஞர் சொன்ன காதல், மீண்டும் ஒருமுறை தனது பொன் சிறகுகளால் அவனைத் தழுவுகின்றது.

வறண்டிருந்த பாலையின் வழி நடந்து சென்று கொண்டிருக்கையில், அவ்வப்போது அவன் மேல் தூறிக் கொள்கின்றன சில்லென்ற சில துளிகள். முட்களையே கடித்து தின்று கொண்டிருக்கும் மெளன ஒட்டகத்தின் வாயின் ஓரங்களை முத்தமிட்டுச் செல்கின்றன சில ரோஜா இதழ்கள்.

போகின்றது என்று பார்த்தபடியே நகர்கின்ற காலத்தின் முட்களோடு போட்டியிட்டு புலம் பெயர்கின்ற கரிய மேகங்களினோடு அவனது பார்வையும் தூரே எங்கோ பதிகின்றது.

அலை அலையாய் அடிக்கின்ற கானல் நீரின் நிழல்களின் கீழே அசைவற்று இருக்கின்ற கருஞ்சாலைகளின் மேலாக அவனது பயணம் தொடங்குகின்றது.

பகலின் கொடிய விரல்களால் கிழிபட்டும் அவனது நடை நிற்கவில்லை. மதியத்தின் கொடூர கரங்களில் கரும் பூச்சுகள் பூசிக் கொண்ட முகத்தினோடு அவன் இன்னும் நடக்கிறான். மெல்ல கவிந்து வருகின்ற மாலையின் போர்வையில், போர்த்திக் கொண்ட பின்னும் முத்து முத்தாய் வேர்த்துக் கொண்டேயிருக்கின்றது உடல்.

இலேசாக இரவின் பெரும் இராஜ்ஜியத்தில் நுழைகின்றான்.

எவரையும், எதனையும் தெரிந்து கொள்ள வேண்டியிராத இருளின் முகாமிற்குள் அவன் நுழைந்து விட்ட பின் கரிய ஆழம் காண முடியாத அவனது மனத்தின் பேராழத்திற்குள் குப்புற விழுகின்றான்.

வெளிப்புற பயணங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ பேரதிசயங்களையும், பெரு மயக்கங்களையும் தன்னுள் கொன்டு அவனுக்காகக் காத்திருக்க... அவனோ தனக்குள் இன்னும் மூழ்கிக் கொண்டு காணாமல் போய் இருக்கிறான்.

No comments: