Monday, March 24, 2008

பவளத் துளசி.


சிலுசிலுவென நகர்ந்து கொண்டிருக்கின்றது வாய்க்கால் தண்ணீர்.

நுரை நுரையாய்ப் பொங்கு அருவியென ஓடி வரும் ஆற்றின் ஓரமாக வெட்டி, பாத்தி கட்டி, பிரித்து, வாய்க்காலில் நீர் ஓடி, வெகு தூரம் வயலிலும் வரப்புகளிலும் ஈரம் பூக்கச் செய்து செம்மண் கரைசலாக மீண்டும் நதியினோடு கலந்து விடுகின்றது.

ஆரஞ்சுப் பெருந் துளியாய் மெல்ல மெல்ல மலையின் பின்புறம் விழுந்து கொண்டிருக்கின்றது சூரியன்.

திருட்டுப் பயல் இவன்! காலை எடுத்து வைத்து வருபவன், பகலெல்லாம் தன் வெப்பம் ஏறின கரங்களால் பூமிப் பெண்ணைப் புரட்டிப் புரட்டி விளையாடி விட்டு, களைத்து ஓய்வெடுக்க கரையும் போது தான் அவளுக்கு மாலை அணிவிக்கிறான்.

ரீங்காரங்கள் சிறகடித்துப் பறக்கும் தோட்டத்தின் நுழைவாயிலைத் தடவி குளுகுளுவென ததும்பி ஓடிக் கொண்டே இருக்கின்றது பச்சை நீர். கால்களை விட்டபடி மாலை முழுதும் பேசிக் கொண்டே இருப்பதில் எத்தனை ஆனந்தம்.?

தோட்டம் முழுதும் குளிர் பெய்யத் தொடங்கி இருக்கும் நேரத்தின் சந்தோஷங்கள். சின்னச் சின்னப் பூச்சிகளும், மினுக் மினுக்கென சிரித்துக் கொண்டே இருக்கும் மின்மினிகளும், சுறுசுறுவென சிலிர்த்து போய்க் கொண்டே இருக்கும் சிற்றெரும்புகளும் கலகலவென கத்திக் கொண்டே இருக்கும் கருங்குருவிகளும்.... நம்மோடு பரவசத்தின் இறக்கைகளில் பறந்து கொண்டே இருக்கின்றன.

சாரலாய் எங்கோ பெய்யத் தொடங்கி இருப்பதை காற்றோடு இரகசியமாய் ஒரு மொழி பேசி, மண் வாசனையில் நமக்குச் சொல்லி அனுப்புகின்றது துளி மழை. 'வாடைக் காற்று வீசத் தொடங்கி இருக்கிறதா?' என நான் கேட்க, தோட்டத்தின் எல்லாச் செடிகளும் தலையசைத்து ஆமோதிக்கின்றன.

ஊருக்குள் அழைத்துச் செல்லும் ஒற்றையடிப் பாதையின் மேனியில் தடங்கள் எல்லாம் நாம் நடந்து வருகையில் பேசிய வார்த்தைகளின் வாசம் அடித்துக் கொண்டே இருப்பதை, வந்த தென்றல் சொல்லிக் காத்திருக்க, வெட்கத்தால் சிவந்த ஒரு முகத்தின் சிவப்பை அள்ளிக் கொண்டு நகர்ந்து சென்றது.

'பேசியது போதும், கிளம்பலாம்' என்று மாறி மாறி இடைவெளிகளில் சொல்லிக் கொள்ள, 'எத்தனை முறை சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்?' என்று கிண்டலிட்டு கிளம்பியது, உன்னைப் போல் பேச முயன்று தோற்றுப் போன வெறுப்பில் குயில் ஒன்று!

கரைகளில் வரிசையாக வீற்றிருந்த அரச மரங்களின் மஞ்சள் சருகுகளைச் சுமந்து கொண்டே நம் கால்களை நனைத்து கொண்டே செல்கையில், 'மஞ்சள் பூக்கள எங்கே?' என்று நான் கேட்க, 'நீ அருகில் வைத்துப் பேசிக் கொண்டிருக்கிறாயே? எப்படி எடுத்துச் செல்ல நான்?' என்று சோகத்துடன் சொல்லி ஓடியது சிலு நீர்.

செந்தூரம் அள்ளிய கைகள் போல் சிவந்திருந்த உள்ளங்கைகளால் வானைத் தடவ, மென் பொன்னிறம் பூசலானது அடிவானம்.

'தன்னிறம் போல் இருட்டிப் போம்' என்று சபித்த கருங்குயில் வெற்றி பெறும் வகையில் மெல்ல இருட்டிக் கொண்டே வருகின்றது வான். புதையல் ஒன்று திறக்கக் காத்திருந்த வறியோர் போல் எங்கெங்கு காணினும் பூக்கத் தொடங்கினர், வான் மின்மினிகள். மூடியிருக்கும் முல்லை மொட்டு, தன் வெண் இதழ்களைத் திறக்கும் இலாவகத்துடன் தன் தேகம் ஜ்வலிக்கத் தோன்றியது வெண்ணிலா.

'செல்வோம்' என்ற கடைசி வார்த்தையைச் சொல்லி நம் பெரும் சொற்பொழிவை நீ முடித்துக் கொள்ள, 'வேண்டாம், வேண்டாம்' என்பது போல் கீச்சு கீச்சென்று குரல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன தோட்டத்தின் பறவைகளும், பூச்சிகளும்!

'நாளையும் மற்றொரு மாலை வரும்!' யாருக்குக் கூறினாயென குழம்பிப் போய் நின்றோம் நானும், தோட்டப் பிரஜைகளும்..!

கிளம்புகையில் ஒட்டியிருந்த ஈர மண் துகள்களை நீ உதற, கதறிக் கொண்டே என் மீது விழுகின்றன 'எங்களை உதறித் தள்ள வேண்டாம் என்று சொல்' என்று, நான் கூறிக் கொண்டே இருக்கும் அதே சொற்களைச் சொல்லி...!

'நாளை பார்ப்போமா..?' கூறிக் கொள்கிறேன் பனி பெய்து ஈரமான மண்ணிற்கும், காதல் பெய்து ஈரமான மனதிற்கும்....!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

No comments: