Monday, March 10, 2008

குறையொன்றுமில்லை.செந்தாமரை மலரின் இதழ்களைப் போல் விரிந்தும், குறுகியும் ஓரங்களில் பனித்துளிகளின் பாரத்தைச் சுமந்து கொண்டு மாலை பூக்கத் தொடங்கியது. இரவியின் பிரயாணத்தை நிறைவுற்று வைத்து, இரவின் இரகசியப் பயணம் மெல்லத் துவங்குகிறது. கீச்சு கீச்சென்ற இனிய குரல்களில் அதை வரவேற்கின்றன புள்ளினங்கள். நதிக்கரைகளில் சாய்ந்திருக்கும் நாணல் புற்கள் தம் மென்னுடலை வீசும் இளங்குளிர்க்காற்றோடு இணைத்து, தலையசைக்கின்றன.

முகில்வண்ணனின் நாத வேணு கானம் அழைக்கின்றது.

யமுனை நதித் தீரத்தின் கரையில் அமைந்துள்ள தோட்டம் அது. தேனீக்களும், வண்டுகளும், கானக் கருங்குயில்களும், வண்ண தோகை விரித்துச் சிலிர்க்கும் மயில்களும், துள்ளியோடும் புள்ளி மான்களும், வசிக்கின்ற சோலை அது. கைரேகைகளின் வழி நகர்கின்ற வாழ்வின் பாதை போல் அந்த மாயக் கண்ணனின் குழலோசை அவற்றை இழுத்து வருகின்றது.

ஆஹா, அவன் இருக்கும் நிலை தான் என்ன?

மழை தூறிய பின் சூழும் இளங்குளிரோடு குழைந்து நிற்கின்ற பின் மதியத்தின் வெயில் தடவுகினற காற்றில் ஓர் ஒளி பரவி நிற்குமே, அது போன்ற இளம் மஞ்சள் நிறம் பூத்திருக்கும் மென் பட்டாடையில் அமர்ந்திருக்கிறான்.

முதலில் அவன் திருப்பாதங்களைக் காண்கிறேன். தாயே யசோதா..! என்ன செய்தனை, எங்கள் கண்ணனின் பாதங்களில் பதிந்திருக்கும் சிவந்த நிறத்திற்கு? மருதாணி இலைகளை அரைத்துப் பூசினாயோ? மாலை வெயிலின் கதிர்களைத் தேனில் கரைத்து அவன் கால்களில் அப்பினாயோ? இல்லையில்லை நாளெல்லாம் ஆவினங்களை மேய்த்து விட்டு வரும் பாலகனின் களைப்பு தீர, அவன் உறங்குகையில் உன் சிவந்த அதரங்களால் ஒத்தடம் கொடுத்தனையோ?

அவன் பாதங்களைத் தடவித் தடவி இந்த அன்னமும் அன்பைப் பொழிகின்றதே! அதன் வாய்க் கொம்புகள் பட்டு இந்த பாலகனுக்கு வலிக்குமோ?

ஹே பரந்தாமா! உனக்குத் தான் வாயில்லாப் பிராணிகள் மீது எத்துணைப் பிரியம்?

'அம்மா.. அம்மா' என்று அழைக்கும் இளங்கன்றை அணைத்துக் கொள்கின்றாய். தாய்ப்பசு வரும் முன்னே, நீயல்லவா பாய்ந்து அதனைத் தழுவிக் கொள்கிறாய். பாலருந்துவதற்காகவா கன்று கரைகின்றது? ஏ கருணைச் சமுத்திரமே, உன் அணைப்பில் ஞானப் பாலை அது அருந்துவதில்லையா?

உன் மிருதுவான விரல்களைக் கொண்டு ஆதுரமாய்த் தடவிக் கொடுக்கையில், கன்றின் கண்களிலும் மென்மையாய்ப் பொழிகின்றதே ஆனந்தக் கண்ணீர்! ஆஹா, அந்தக் கன்றாய்ப் பிறக்காமல் போனேனே!

இந்தக் குட்டி மான் மட்டும் குறை கொண்டதா? பொன் முடிகள் மினு மினுத்து, காற்றில் சிலுசிலுத்து அது ஓடோடி வருவதே உன் நேசம் பொழிகின்ற விழிகளைக் காண்பதற்கு தானே! அதற்கு மட்டுமா? நீ அதனை அன்பாய் அணைந்து முகத்தை முத்தமிடுவாயே! அதற்கு ஈடாகுமா? இந்தக் குட்டி மான் பெற்ற பாக்கியம் தான் என்னே!

ஹே மஹாராஜ! உன் பொன் மேனியைத் தீண்டித் தீண்டி இன்னும் மணம் பெறும் இப்பூமாலையின் ஒரு மலராகத் தோன்றாமல் போனேனே! கார்மேக வண்ணா! இருளின் ஜொலிக்கும் ஒளித்துகள்களைக் கரைத்து நீ நிறம் கொண்டனையா, என்ன?

ராகநாதனே! உன் இனிய வேணு கானமதில் மயங்கி, கிறங்கி சுழன்றோடும் இந்த உலகும் சித்தம் தடுமாறுகையில், உன் சின்ன விரல்களில் அமர்ந்திருக்கும் வெண் புறாவும் சிந்தை நிறைந்து நிற்பதன் அதிசயம் தான் என்ன?

காலத்தின் ஓடுகின்ற பாதையில் நான் பிடித்துக் கொள்ள உனது இனிய குழலின் உயிரோசையைத் தர மாட்டாயா? தடுமாறும் காலங்களிலும், நினை மறக்காது நினைவில் இருத்திக் கொள்ள இசைப் பெரும்பொழிலை இரவலாகக் கொடுப்பாயா?

மோஹனராஜ! காதல் பொழிகின்ற உனது விழிகளால் என்னை ஒருமுறை பாரப்பா! பெரும் போதை கொண்டு கலங்கி நிற்கின்ற இப்பேதையின் கைகளைப் பிடித்து உன்னருகில் அமர்த்திக் கொள்ள மாட்டாயா? நினது இசையருவியில் கற்பக் காலமும் நான் சிந்தை குளிர்ந்து, நிந்தை தவிர்த்து, உனது மதுர கானத்தின் அமர அமுதைப் பருகி நிரந்தர பேரின்பம் பெற அருள மாட்டாயா?

இருளும் பகலும் சூழ்ந்து விளையாடும் மாய லோகத்தை விட்டு ஓடோடி வருகிறேன். எனது உயிரை உருக்கி உனது காலடியில் கரைக்கிறேன். பரந்தாமா! பெருங்கருணைப் பூவாறே! மது மோகன இசைப்பேரொளியில் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டாயா?


Get Your Own Hindi Songs Player at Music Plugin

2 comments:

malligai said...

indha krishnar padam rompa azhagu vasanth..enga irundhu thaan ithanzi azhagaana padangal kedaikudhO ungaluku...:)

இரா. வசந்த குமார். said...

கூகுள்ல கிருஷ்ணா நு தேடிப் பார்த்தேங்க.. அழகழகா கிருஷ்ணர் படங்கள் வருதுங்க. அதை எல்லாம் தான் நாம யூஸ் பண்ணிக்கிறோமுங்க...