Thursday, August 21, 2008

யாரோ தனிமையாய்...!



குன்றின் முகட்டில் முட்டி விட்டுப் போகின்றன சில முகில்கள். தொட்டவுடன் மெல்ல விலகிச் செல்லும் போது நீ சிந்திச் செல்லும் குரல் போல், சில குளிர்த் துளிகள் மேலே தெறிக்கின்றன. குளிர்கின்றது. உச்சி மரங்கள் தலையாட்டுகின்றன. இன்னும் கொஞ்சம் சிதறுகின்றன.

கீழே இறங்கத் தொடங்குகிறோம்.

பாதைகளில் மஞ்சள் நிறப் பூக்கள் கொட்டி இருக்கின்றன. ஈரக் காற்று குளிர் பாய்ச்சுகிறது. சரம் சரமாய் நீர்த் துளிகள் தூளி கட்டி இதம் தூவுகின்றன. ரசமான ஒரு ஓசை காட்டின் தீவிர மையத்தில் இருந்து எல்லாப் பக்கமும் பரவிக் களிப்பேற்படுத்துகின்றது.

நிஜம் போல் ஒரு தோற்ற நெருக்கத்தில் கைகள் கோர்த்துக் கொண்ட போது, கிளர்ந்தது ஒரு மின்னல் வானில்!

ரிதம் இசைக்கச் சென்ற சில குயில்கள் கூடுகள் அற்ற கிளைகளில் அமர்ந்து தங்கள் குரல்களில் செழுமையான இன்பம் அளிக்க முயல்கையில், முயக்கம் தரும் வகையில் உதடுகள் பின்னிப் பிணைய இடைவெளிகள் இன்மையாகின்றன.

காற்றும் நுழையப் பார்த்து, தோற்று, விரக்தியுற்று, விசையுடன் விலகி, விழைந்து பின் நகர்ந்து சென்ற பின், நம் காதல் இடையூறின்றி இதழூறுகின்றது.

சிலிர்ப்பூட்டும் கணங்கள் மெல்லென்று நழுவி, விழிகளின் இழைகள் தம் இடங்களில் இணைந்து, பிற பகல்களில் நிரந்தரத் துகள்களாய் நின்ற ப்ரதேசங்கள் உயிர்ப்பு பொழுதுக்கு வழுவி, வெம்மைக்குப் பழுதென்று இருள் மூடிக் கொள்ளத் தொடங்கும் கானகத்தின் புற்கூண்டுகளில், புதைகின்றோம் சில முத்த நேரங்களை உடன் கொண்டு, உடல் கொண்டு!

ரகஸ்ய சொற்கள் தடம் மாறுகின்றன. முழுதாக பொருள் புரியாவிடினும், ஏனென்று கேட்க முடிகின்ற நேரத்தில் இன்னும் சில துளிகளில் இடப் பெயர்ச்சி, இதழ்ப் பெயர்ச்சி மூலம்!

பாத விரல்கள் குனிதலும், நிமிர்தலும், சாய்தலும், ஓய்தலும், காய்தலுமாய் தத்தம் கணங்களில் திளைக்கின்றன.

இதயத் துடிப்புகள் முகம் வழியாக ஊடுறுவிக் கேட்கின்றன. விரல்களின் இடைவெளிகளில் ரேகைகள் ஒத்த தடங்களில் ஒன்றிப் போகும் கீத காலத்தில் மற்றும் ஒரு முறை மழை பிரவாகிக்கின்றன.

வானகம் எங்கும் வசந்தம் துளிகள் வழிகின்ற உயிர்க் காட்டின் இடைவெளிகளில், இடைஞ்சல் இன்றி நகர்கின்ற பொருத்தக் காலத்தின் கால்கள் கட்டிப் போட்ட பின், செவி வழி உள் நுழைகின்ற வியர்வை வெப்பம் துளிர்க்கின்றது,

பொட்டு போதை!

படம் நன்றி :: http://i137.photobucket.com/albums/q222/gerardperales/TheKiss-11Blacklightview.jpg

2 comments:

Wandering Dervish said...

ஒன்றுமே புரியாத நவீன ஓவியம் போல தான் இயற்கையும் சில நேரங்களில்
புரிய முற்பட்டால் வெளிப்படும் ரகசியங்களும் எண்ணங்களும் கணக்கில் அடங்காதவை

உரை நடை கவிதையில் நல்ல முயற்சி
ஆனால் சில இடங்களில் வார்த்தைகளின் வலிமை குறைந்து இருக்கிறது

இரா. வசந்த குமார். said...

அன்பு நாடோடி...

எனக்கே தெரியுது. இன்னும் கொஞ்சம் செழுமையாக எழுதி இருக்கலாம் என்று. ஆனால், என்ன செய்வது?

நேற்று பேசியது போல், எழுதுவது நம்ம கையிலா இருக்கிறது..?

அதுவா வர்றது...!